இரண்டு
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
"நாதிரா, மகளே,"என்றவாறு அவள் அருகே ஓடிச்சென்றாள் அவள் தாய்.
"உன் விருப்பம்போல் செய். ஆனால் நீ யாரென்பதை சலீம் புரிந்து கொண்டதாகத் தெரிந்த அக்கணமே என் உயிர் பிரிந்து விடும்.அதை நினைவில் வைத்துக் கொள்.பத்திரமாகப் போய்வா மகளே"
"அம்மா" ஆனந்த மேலீட்டால் தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டு முத்தமழை பொழிந்தாள் நாதிரா.அவளது மகிழ்ச்சியைக் கண்ட அந்தத் தாயின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
* * * * * * * * * * * * * * * * * * * *
வழி நீண்டது. புறப்பட்ட வேகத்தில் நாதிராவின் உள்ளம் எப்பொழுதோ ஜஹாங்கீரிடம் சென்று சேர்ந்து விட்டது.காதலனைக் காணப் போகிறோம் என்ற களிப்பில் காரிகை கடுகி நடந்தாள் .மகிழ்ச்சி நெஞ்சை நனைத்திருந்தது.பசி, தாகம் களைப்பு சோர்வு எதுவுமே அந்த நங்கையை அண்டவில்லை.எல்லாவற்றையும் கடந்த நிலையில் இருந்தாள் நாதிரா.
வழியெங்கும் நிறைந்து மலர்ந்திருந்தன அனார் மலர்கள்.அவள் மகிழ்ச்சியைக்.கண்டு .காற்றில்அசைநது தங்கள் ஆசியைத்
தெரிவித்தன அனார் மலர்கள். நாதிராவின் இதழோரத்தில் புன்னகை அரும்பியது.அனார் மலர்களினூடே சலீமின் உருவம் தோன்றித் தோன்றி மறைந்தது.வா வா என்று அழைப்பது போல் இருந்ததோ என்னவோ கைகளை விரித்துக் கொண்டு வேகமாக ஓடினாள் நாதிரா.
அக்பர் பாதுஷாவிடம் அனார்மலரைப் பரிசாகப் பெற்றதும் அனார்க்கலி என்ற பெயரையும் ராஜநர்த்தகி என்ற பதவியை ஏற்றதும் அவள் நினைவில் சுழன்றன.மொகலாய சாம்ராஜ்ய எல்லைக்குள் நுழைந்ததும் புதிய பலமும் உற்சாகமும் தோன்றிவிட்டன அனாருக்கு.வெகு நாட்கள் பிரிந்திருந்த தாயைக் கண்டதுபோல் மகிழ்ச்சியில் திளைத்தது அவள் மனம்.உள்ளம் கட்டுக்கு அடங்காமல் துள்ளியது.நாட்கள் ஓடின.
அரண்மனை வாயிலை அடைந்தபோதுதான் என்ன செய்வது என்று தோன்றாமல் நின்றாள் அந்தப்பேதை. அவள் நிற்பதை யாரும் கவனிக்கவேயில்லை.தன்னை யாரும் தெரிந்துகொள்ளவில்லை என்பதை அறிந்து அவள் உள்ளம் நிம்மதியடைந்தது. அதேசமயம் 'சலீமுக்கும் தன்னை யாரென்று தெரியாமல் போய்விட்டால் ....ஒருவேளை சலீம் என்னை மறந்திருந்தால்......' தலையைக் குலுக்கிவிட்டுக் கொண்டாள் ஒருமுறை.
"அப்படியெல்லாம் இருக்காது.அரும்பாடுபட்டு அகதிபோல் வந்திருக்கும் என்னை அல்லாஹ் ஒருபோதும் ஏமாற்ற மாட்டார்."என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டாள் பேதை அனார்க்கலி.
நேரம் கடந்தது.அன்று அரண்மனையில் ஏதோ விழா போலத் தோன்றியது. உள்ளே நுழையத் தயங்கியவாறு நின்றிருந்தாள் அவள். 'சலீம் என்னையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.என் நினைவிலேயே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.சுகமும் இன்பமும் அவர் விரும்பாதவையாக இருக்கவேண்டும்.அவர் இருக்கும் இடமே ஒரு சோகத்திரை போர்த்தது போல இருக்கவேண்டும்.'
என்று அனார்க்கலி யின் உள்மனம் விரும்பியது.
மற்றொரு மனமோ 'சேச்சே, நான் தான் வாழ்விழந்து தவிக்கிறேன். அவராவது சுகமாக வாழட்டும் ' என்று வேண்டியது.ஆனால் உண்மையில் அவள் மனம் அங்கு நடக்கும் கோலாகலத்தைக் கண்டு பொருமியது என்றுதான் சொல்லவேண்டும்.
.
பணிப்பெண் ஒருத்தி அலங்காரப் பொருட்களைச் சுமந்துகொண்டு செல்வதைக் கண்ட அவளின் சிந்தனை தடைப் பட்டது.பணிப்பெண்ணின் கையிலிருந்த தட்டுகளில் ஒன்று நழுவிக் கீழே விழுவது போலத் தோன்றவே மறைவாக நின்றிருந்த அனார்க்கலி தாவிச்சென்று அதைப் பற்றிக் கொண்டாள்."நன்றி"என்று கூறிய பணிப்பெண் அவளையும் உடன் வரும்படி ஜாடை காட்டிவிட்டு முன்னே நடந்தாள்.
புஷ்பத்தட்டை ஏந்தியவண்ணம் எல்லாவற்றையும் திகைப்புடன் பார்த்தவாறே உடன் நடந்தாள் அனார்க்கலி.
. (அடுத்த பகுதி நாளை)
--
ருக்மணி சேஷசாயி Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநான் சென்ற பதிவில் கேட்ட கேள்விக்கு இங்கு பதில் கிடைத்துவிட்டது. வரலாற்றுத் தொடர் என்றாலும் ஒருவித சஸ்பென்ஸ் உடன் எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்!
பதிலளிநீக்கு