புதன், 2 டிசம்பர், 2015

மந்த்ராலய மகான் -5

பட்டாபிஷேகம்;  
                                    சில நாட்கள் கழிந்தன.ஒருநாள் தனிமையில் இருக்கும்போது சுதீந்திரர் வேங்கடநாதனை

அழைத்தார்.பணிவோடு வந்து நின்ற வேங்கடநாதனுக்கு உபதேசம் செய்தார்.

"வத்ஸ ! இந்த ஸ்ரீமடத்தையும் வைஷ்ணவ சம்பிரதாயத்தையும் கட்டிக்காக்கவே உன்னை அனுப்பியுள்ளாரஜகத்குருவான ஸ்ரீமன் நாராயணன்.  அவன் இச்சைப்படியே நீயே இந்த பொறுப்புகளை ஏற்று ஸ்ரீமூலராமனுக்குப் பூஜை செய்யும்  பேற்றையும் பெற்று இந்த ஜெகத்தினை உத்தாரணம் செய்ய வேண்டும் இது உன் விதி. இதுவே என் ஆசையும் கூட.'' என்றபோது வேங்கட நாதன் திடுக்கிட்டார்.

                   "சுவாமி நான் சந்நியாசி ஆகிவிட்டால் என்மனைவி மக்களின் கதி என்னவாகும்? அவர்களைத் தவிக்கவிட்டுவிட்டு இந்த பட்டம் எனக்கு வேண்டாம் ஸ்வாமி  என்னை மன்னியுங்கள்." என்று கூறியவர் சிந்தனையுடன் இல்லம் வந்து சேர்ந்தார்.தனிமையில் சிந்தனை வயப்பட்டவராய    இருந்தார். காரணம் தெரியாமல் தவித்தாள் சரஸ்வதி .              
                     
                 இரவு படுக்கையில் படுத்தபோதும் சிந்தனை வயப்பட்டவராகவே இருந்தார். திடீரென ஒரு வெளிச்சம் 
தூக்க நிலையா விழிப்பு நிலையா   எனத் தெரியாத ஒருவித மயக்க நிலையில் இருந்தார் வேங்கடநாதன்.அவர் முன்  தெரிந்த வெளிச்சத்தில் வெண்தாமரை மீது வீற்றிருந்தபடி கையில் வீணையை ஏந்தியபடி சரஸ்வதி பிரசன்னமானாள். கைகளைக்  குவித்தபடி  அவள் முன் நின்றிருந்தார் வேங்கட நாதன். அந்த தேவி  ஆசி கூறிப பின்வாய்   திறந்து பேசலுற்றாள் 

"வத்ஸ! நானே சரஸ்வதி வித்யாலட்சுமி.. மத்வர் வியாசராயர் விஜயேந்திரர் சுதீந்திரர்முதலான   யதிகள் தங்கள் கிரந்தங்களால் என்னை  அலங்கரித்தனர். இன்னும் இரண்டு வருடங்களே சுதீந்திரரின் வாசம் இருக்கும்.அதன்பின் உன்னையே நான் எதிர்பார்த்திருக்கிறேன். ஸ்ரீமூலராமருக்குப் பூஜை செய்யும் 
தகுதி உன்னிடமே உள்ளது.நீ சந்நியாசி ஆகி வைஷ்ணவ சம்பிரதாயத்தைக் காக்க வேண்டும்.நீ யதியாகியே தீர வேண்டும் நானும் உன்னிடமே வாசம் செய்யவேண்டும். இது உனக்கேற்பட்டுள்ள விதி.இதிலிருந்து நீ தப்ப முடியாது. போ.யதியாகி இந்தப் பூவுலகை  உத்தாரம் செய்." என்று கூறி அவர் தலையில் தன அபயஹஸ்தத்தை  வைத்து ஆசி கூறினாள்.பின்னர் அவர் நாவில் பீஜாக்ஷரம் எழுதி மறைந்தாள். 
 
                  விடிந்தது மூலராமரின் சுப்ரபாதம் கேட்டது.திடுக்கிட்டுக் கண்விழித்த வேங்கடநாதன் ஏதோ புதிய உலகிலிருந்து எழுந்து வந்தது போல் உணர்ந்தார்.மறுநாள் சுதீந்திரர் முன் சென்று பணிந்து  நின்றார்.யதியாக சம்மதம்  என்ற வேங்கடநாதனின் சொல் கேட்டு மிகவும் மகிழ்ந்தார் சுதீந்திரர். நிறைய திரவியம் கொடுத்து மகன் லக்ஷ்மி நாராயணனுக்கு  உபநயனம் செய்வித்து வரும்படி கூறி அனுப்பினார்..
குமாரன் லக்ஷ்மிநாராயண னுக்கு உபநயனம் செய்வித்து மனைவி மகன் இருவரையும் அண்ணன் குருராஜரின் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.
                    பின்னர் மடத்தையடைந்து குரு சுதீந்திரர் முன் யதியாக சம்மதம் என்று கூறி நின்றார். அவருக்கு சந்நியாசம் வழங்க சம்மதம் என்று கூறி அக்ஷதை கொடுத்து ஆசி வழங்கினார் சுதீந்திரர்.தனக்குப் பின்னால் யதியாக வரப் போகும் வேங்கடநாதனுக்குப் பட்டாபிஷேகம்  என்ற செய்தியை எல்லா இடங்களுக்கும் அனுப்பினார் தஞ்சை மன்னன் ராஜா ரகுநாத பூபதியின் முன் இந்த வைபவம் நடைபெற ஏற்பாடாகியது.
அரண்மனையில் நடக்கும் வைபவம் .கேட்கவேண்டுமா?ஊர்முழுவதும் தோரணங்கள் மலர் அலங்காரங்கள் வாசனை வீசிக் கொண்டிருந்தது.வாசனைத் திரவியங்களான  சந்தனம் ஜவ்வாது புனுகு போன்றவற்றால் மெழுகப்பட்டு ஊரெங்கும் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் யாகசாலையை மொய்த்தனர் 
                     அதோ அதோ பிரகாசமாய் ஸ்ரீ சுதீந்திரர் அவருக்குப் பின்னால் ஞானப் பிரகாசமாய் ஸ்ரீ வேங்கட நாதன்.
மக்கள் சொல்லிச் சொல்லிப் பரவசப்பட்டனர். ஒவ்வொரு சடங்காக நடந்து முடிந்தது.
சாலிவாகன சகம் 1623 ருத்ரோத்காரி வருடம் பால்குன சுத்த த்விதீயை  சுபயோக சுபதினம்.வேதகோஷங்கள் மங்கலவாத்யங்கள் முழங்க ஸ்ரீ சுதீந்திரர் வேங்கட நாதருக்கு காஷாய வஸ்திரத்தைக் கொடுத்தார்.மக்கள் கண்களில் கண்ணீர் வெள்ளம்.
                     காஷாய வஸ்திரம் தரித்துசந்நியாச கோலத்தில்  வேங்கடநாதன்  அக்னிஎன ஜொலித்தார்.
மக்கள் மெய் சிலிர்த்தார்.பல புண்ணிய தீர்த்தங்களால் அவருக்கு அபிஷேகம் செய்து அவருக்கு 
"ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் " என்ற நாமத்தை ஆசிரமப் பெயராக சூட்டினார் ஆயகலைகள் அனைத்தையும் போதித்த ஸ்ரீ சுதீந்திரர். சகலவித சாஸ்த்திர சுவடிகளையும் கொடுத்து ஸ்ரீ மூலராமர் ஸ்ரீ திக்விஜயராமர் ஸ்ரீ ஜெயராமர் ஸ்ரீ வ்யாஸ முஷ்டி போன்ற புராதனபுண்ய விக்ரகங்களையும்  சாளிக்ராமங்களையும் கொடுத்து ஸ்ரீமடத்தின் பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைத்து  நிம்மதியடைந்தார் சுதீந்திரர்.          
மக்கள் "ராஜாதி ராஜ குருசார்வ பௌம ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தருக்கு " ஜய்" என ஜெயகோஷமிட்டனர்.
மன்னரும் மக்களும் அவருக்குப் பாதகாணிக்கை செலுத்தி அவரது ஆசியைப் பெற்று மகிழ்ந்தனர்.
ஸ்ரீ ராகவேந்திரரின் பெருமையை கோபாலதாசர் தனது பாடல் வாயிலாகத் தெரிவிக்கிறார்.
              "ரா"என்று சொன்னால் ரட்சிப்பார். "கா" என்று சொன்னால் சர்வ பயமும் ஓடிவிடும். "வே" என்று சொன்னால் வியாதிகள் பறந்துவிடும். "இந்திரா" என்று சொன்னால் சகல செல்வங்களும் வந்து சேரும் என்று பெருமைபடக் கூறுகிறார்."

                                                                             (தொடரும்)





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

1 கருத்து: