புதன், 16 டிசம்பர், 2015

மந்த்ராலய மகான் -7

               ஸ்ரீ ராகவேந்திரரின் புகழின் மீது அசூயை கொண்ட சிலர் இவரது புகழுக்குக் களங்கம் கற்பிக்க முடிவு செய்தனர்.அதன்படி ஒரு திட்டம் தீட்டினர்.ராகவேந்திரர் வரும் வழியில் ஒரு சிறுவனை இறந்தவன் போல் படுக்கச் சொல்லி போலியாக அழுது கொண்டே அவனைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.அவ்வழியே வந்த ராகவேந்திரர் அருகே வந்து "என்னப்பா, ஏன் அழுகிறீர்கள்?என்ன நடந்தது?" என்று கேட்க அவர்களில் ஒருவன்,
"ஐயா ,  சாமி எங்க புள்ள திடீர்னு செத்துப் போனானுங்க. நீங்கதான் அவனை எப்படியாச்சும் காப்பாத்திக் கொடுக்கணுமுங்க." என்று குறும்பாகப் பார்த்துக் கொண்டே கேட்டான்.மற்றவர்களும் ஆமாம்சாமி என்றபடியே நின்றனர்.

               உண்மையான சோகத்துடன் "அப்பா, இந்தச் சிறுவன் இறந்துவிட்டானே. இறந்தவனை நான் எப்படியப்பா  உயிர்ப்பிக்க முடியும்? மனதைத் தேற்றிக்கொள்."என்றார்.அந்த மூடர்கள் "நாங்க எழுப்பறோம். பாக்கறீங்களா?" என்றபடியே, "டேய் எழுந்திரிடா.எழுந்து வாடா."என்றனர். 
           "இத்தனை நாளா செத்தவனை உயிர்ப்பிக்கறதா இவரு நாடகமாடிக்கிட்டிருந்தாரு.இன்னிக்கி முடியாதுன்னு ஒத்துகிட்டாரு."என்று எள்ளி நகையாடினர்.ராகவேந்திரர் புன்னகையுடன் அங்கிருந்து நடக்கத் தொடங்கினார்.இறந்தவனை எழுந்திரு என்று சொல்லி வெகு நேரமாகியும் எழுந்திருக்காததைப் பார்த்தவர்கள் அச்சத்துடன் அவனை நெருங்கித் தொட்டுப் பார்த்தபோதுதான் அவன் உண்மையாகவே இறந்து விட்டதைக் கண்டார்கள்.ராகவேந்திரரைத் தொடர்ந்து ஓடினார்கள். அவர் காலில் விழுந்தார்கள்.
"சாமி, உங்களை சோதிக்க நினச்சது தப்புதாங்க. எங்கள மன்னிச்சுடுங்க சாமி. எங்க புள்ளைய காப்பாத்துங்க சாமி"
காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு மன்றாடினார்.
"அப்பா, அவன் விதி முடிந்து விட்டது.உண்மையிலேயே இறந்துவிட்டான்.மனதை சமாதானப் படுத்திக் கொள்ளுங்கள்."ஆறுதல் கூறியபடியே அங்கிருந்து அகன்றார் ராகவேந்திரர்.இவரது தெய்வாம்சத்தை
நம்பாதவர்களையும் நம்பும்படி செய்து  அவர்களுக்கும் அனுக்ரஹம் செய்தார்.
                  ஒருமுறை தஞ்சை நகரம் பஞ்சத்தால் பீடிக்கப் பட்டிருந்தது.அந்நாட்டில் மழை பொழியாது பயிர்களும் விளையாது மக்கள் அவதிப் பட்டனர். மன்னர் ரகுநாதபூபதி ராகவேந்திரரிடம் நாட்டில் மழை பொழியவேண்டும் என வேண்டிக் கொண்டார்.தாமே நேரில் சென்று ராகவேந்திரரைத் தன நாட்டிற்கு அழைத்து வந்தார்.
                      ராகவேந்திரர் தாம் பட்டமேற்ற அந்த நகரின் வீதிகளில் நடந்து சென்றார் அந்நாட்டில் நிலவியிருந்த பஞ்சத்தைக் கண்டு மனம் கனிந்தார். மன்னரின் தானியக் கிடங்கில் பீஜாக்ஷரத்தை எழுதிவைத்து  யாகங்கள் ஹோமங்கள் நடத்தி அந்நாட்டில் நிலவி வந்த பல ஆண்டுகால பஞ்சத்தைப் போக்கினார். மன்னன் ரகுநாத பூபதி மனம் மகிழ்ந்து நன்றியறிதலோடு ஒரு உயர்ந்த வைரமாலையை அளித்தான்.அதைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீ ராகவேந்திரர் அதை யாகத் தீயில் இட்டார்.அதைப் பார்த்த மன்னன் திடுக்கிட்டான்.
"எவ்வளவு விலையுயர்ந்த மாலை. இதைத் தீயில் இட்டுவிட்டாரே என்று கலங்கினான்.அவன் அகத்தின் அழகு முகத்தில் தெரிவதைக்  கண்டு புன்னகை புரிந்த ராகவேந்திரர் ,மன்னனை அருகே அழைத்தார்.
"ஹே  ராஜன்! கலங்காதே உன் மாலையை உனக்கு மீண்டும் வரவழைத்துக் கொடுக்கிறேன்"என்றவர் அக்னி பகவானிடம் வேண்ட அந்த ஹோமகுண்டத்திலிருந்து வைரமாலை பிரகாசத்துடன் வெளியே வந்தது.
அதை எடுத்து மன்னனிடம் கொடுத்தார். மன்னனோ அவரது கால்களில் விழுந்தான்."சுவாமி, நான் தானமாகக் கொடுத்ததைத் தாங்கள் என்ன செய்தாலும் அதைப் பற்றி நான் கவலைப் படக் கூடாது.மறந்துவிட வேண்டும்.ஆனால் நான் தவறாக எண்ணிவிட்டேன் என்னை மன்னியுங்கள் என்று அடிபணிந்து வேண்டி நின்றான். அத்துடன் இந்த வைர மாலையைத்  தாங்கள் ஸ்வீகரிக்கவேண்டும் எனவும் வேண்டிக் கொண்டான்.
புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்ட ராகவேந்திரர் இதை என் மூலராமனுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறியவாறு பெற்றுக் கொண்டார்.

                    இத்தகைய அதிசயங்களை நிகழ்த்தியவர் கல்வி அறிவே சிறிதும் இல்லாதவனுக்கு பெரும் பதவி 
கிட்டும்படி செய்த அதிசயமும் உண்டு.அதை அடுத்து காண்போம்.
                                                                              
                                                                                   (தொடரும்)










 






















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee

1 கருத்து: