புதன், 22 ஜூன், 2016

குறள் நெறிக்க கதைகள்.--நல்லதே பேசு

            நல்லசாமிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.கேசவன் மாதவன் என்ற தன் இரண்டு பையன்களிடமும் மிகுந்த பிரியமுடன் இருந்தார்.அவரிடம் இரண்டு பிள்ளைகளும்  மிகுந்த பாசத்துடன் இருந்தனர்.இரண்டு பேரும் ஒரே வகுப்பில் படித்து வந்தனர்.அண்ணன் தம்பியாக இருந்தாலும் அவர்களின் குணங்களில் மிகுந்த வேறுபாடு இருந்தது.அண்ணன் கேசவன் வகுப்பில் மிகவும் கெட்டிக்காரனாக இருந்தான்.அத்துடன் அனைவரிடமும் அன்பாகப் பழகுபவனாகவும் இருந்தான்.
          ஆனால் மாதவன் மிகுந்த துடுக்குக்காரனாகவும் கோபக்காரனாகவும் இருந்தான்.இதற்காகத் தன் தம்பியை  அடிக்கடி கண்டித்து வந்தான் கேசவன்.அவன் கோபத்தையும் துடுக்கையும் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் அவன்  வாயில் வரும் சொற்களைப் பொறுக்கமுடியவில்லை கேசவனால். தான் அப்பாவிடமும் சொல்லிப் பார்த்தான்.அவரும் கண்டித்தார்.  "கேசவனைப் பார் எவ்வளவு  நல்ல பெயர் எடுத்திருக்கிறான்   அவன்  தம்பிதானே  நீ? உனக்கேன் அந்த நல்ல புத்தியில்லை "அவரது பேச்சையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை மாது.எப்போதும் நீ சாவுடா, நாசமாய் போ என்பது போன்ற 
அச்சானியமான சொற்களை அடிக்கடி உபயோகிப்பான்.      
          ஒருநாள் ஒரு சிறுவனிடம் சுடுசொற்களை சொல்வதை ஆசிரியர் கேட்டுவிட்டு அவனை அழைத்தார்."டேய் மாதவா, உன் வயசுக்குத் தகுந்த மாதிரியா பேசறே?ஏண்டா அப்படி ஒரு சாபம் விடுகிறாய்?சின்ன தப்புக்கு  இப்படி பேசுவாயா?நீ தவறே செய்யாதவனா?இனிமேல் உன் வாயிலிருந்து இந்தமாதிரி வார்த்தை வந்ததென்றால் கடுமையான தண்டனை கொடுப்பேன்."என்று மிரட்டியபோதுசில நாட்கள் அமைதியாக இருந்தான்மாது.
        அன்று ஒரு சனிக்கிழமை.பிற்பகலில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் கேசுவும் மாதுவும்.வழியில் ஒரு மாந்தோப்பில் அவன் வகுப்பு மாணவன் ஒருவன் மரத்தின் 
மேலேறி மாங்காய் பறிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.அவனைப் பார்த்த மாது "டேய் எனக்கு ரெண்டு மாங்காய் பறிச்சுக் கொடுடா." என்றான் கீழே  நின்றவாறே.
ஏற்கெனவே அவன் மீது வெறுப்பில் இருந்தவன் " போடா உனக்கேன் தரணும்?"என்றவாறே மாங்காய்கள் அதிகமாக உள்ள கிளையை நோக்கி ஏறினான்.உடனிருந்த கேசவன் "வா மாது  போயிடலாம்.காவல்காரர் வந்தால் கோவிப்பார்."என்றான் கனிவோடு.
              ஆனால் கோபம் கொண்ட மாதவன் அவனை வழக்கம்போல திட்டத் தொடங்கினான்.
அதிலும் கீழே கிடந்த கல்லை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு "இந்தக் கல்லாலேயே நீ அடிபட்டு சாகப் போறே பாரு."என்றபோது பயந்துபோன கேசவன் வீட்டை நோக்கி ஓடிவிட்டான்.தம்பியின் முரட்டுத் தனமான பேச்சு அவனை மிகவும் பயமுறுத்திவிட்டது.
             சற்று நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்தான் மாது. அவன் கோபத்தில் அந்தப் பையனை அடித்திருப்பானோ என்று சந்தேகத்துடன் தம்பியைப் பார்த்தான் கேசு.எதையும்  கவனிக்காத மாது சாப்பிட உட்கார்ந்தான். அவன் குணம் அறிந்த அம்மாவும் எதுவும் பேசாமல் சாப்பாடு போட வேக வேக மாக சாப்பிட்டான் மாது.
            அரைமணி நேரம் ஆகியிருக்காது. வாசலில் இரண்டு போலீஸ்காரர்கள் வந்து நின்றனர்.
 அவர்களைப் பார்த்து அம்மா பயந்து விடவே கேசு பேசினான்."ஐயா எங்க வீட்டுக்கு என்ன விஷயமா வந்திருக்கீங்க?'
"தம்பி இங்கே மாதவன்ற பையன் யாரு?"
"என் தம்பிதான் ஐயா.இதோ சாப்பிடுறதுதான் மாதவன் என் தம்பி."
"டேய், ஸ்டேஷனுக்கு வா. உன்னை விசாரிக்கணும்னு இன்ஸ்பெக்டர் கூட்டிவரச் சொன்னார்."
அதே சமயம் மாதவனின் அப்பா நல்லசாமியும் உள்ளே நுழைந்தார்.
செயதி அறிந்தவர் தானும் மாதவனுடன் காவல் நிலையம் நோக்கிச் சென்றார்.
அங்கு சென்றபின்புதான் மாது  ஒரு சிறுவனைக் கல்லால் அடித்துவிட்ட செய்தியும் அந்தச் சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் இருப்பதாகவும் தெரிந்தது.
இந்தக் குற்றச்  சாட்டைக் கேட்ட மாது நடுங்கியபடியே "நான் அடிக்கல்லேப்பா.எப்படி அவனுக்கு அடிபட்டுதுன்னு எனக்குத் தெரியாதுப்பா"என்றான் அழுதபடியே.
             





















--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

1 கருத்து:

  1. சிறு வயதிலேயே இப்படிக் கோவப்பட்டால் எப்படி? இதுபோல சிறுவர்கள் இருப்பது பெற்றவர்களுக்கும் தீராத தலைவலிதான். எப்படி மாதவன் திருந்தினான் என்று அடுத்த பகுதியை படித்துத் தெரிந்து கொள்ளுகிறேன்.

    பதிலளிநீக்கு