மருதூர் ஒரு சிற்றூர். அவ்வூரின் முக்கிய தொழிலே விவசாயம்தான்.ஊரிலிருக்கும் சுமார் முந்நூறு வீட்டு மக்களும் சொந்த விவசாயம் செய்பவர்கள்.விவசாயத் தொழிலையே தெய்வமாக எண்ணி வாழ்ந்து வந்தனர்.அந்த ஊரில் ஒரே ஒரு பள்ளிக்கூடம் இருந்தது.அதுவும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி. அந்தப் பள்ளியில் முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை இணைந்து படித்தவர்கள் நடராஜனும் காசிராஜனும்.இருவரும் உயிர்நண்பர்களாகவும் இருந்தனர்.
அவ்வூரின் அனைத்துச் சிறுவர் சிறுமியரும் அங்குதான் படித்து வந்தனர். மேலே படிக்க வெகுசிலரே அருகே உள்ள நகரத்துக்குச் சென்றனர்.அப்படி சென்றவர்களில் நடராஜனும் ஒருவன்.அவன் தந்தை சற்று வசதியானவரானதால் தன் மகனை மேலே படிக்க அனுப்பினார்.
படிப்பை அந்த ஊர்ப் பள்ளியோடு நிறுத்தியவர்களில் காசியும் ஒருவன்.காசி மேலே படிக்க வராததால் நடராஜன் மிகுந்த வருத்தமடைந்தான். தன் உயிர்நண்பன் தன்னுடனேயே படிக்கவேண்டும் என்று விரும்பினான்.ஆனால் குடும்பத்தில் காசிதான் அவன் அப்பாவுக்குத் துணையாக இருக்க வேண்டியிருந்தது.அதனால் நடராஜன் மட்டுமே மேல்படிப்புக்குப் பட்டணம் போய்வந்தான். ஆனால் ஒவ்வொருநாள் இரவு எந்நேரமானாலும் தன் நண்பனைப் பார்க்க காசியோ அல்லது காசியைத் தேடி நடராஜனோ சென்றுவிடுவர்.
இருவருமே சிறந்த குணங்கள் உடையவராக இருந்ததால் இவர்களின் சந்திப்பை யாரும் எதிர்க்கவில்லை. அத்துடன் நண்பர்கள் இருவரும் வெட்டிப்பேச்சு பேசாமல் உபயோகமானவற்றையே பேசிவந்தனர். நேரத்தை நல்லவிதமாக பயன்படும் விதத்தில் கழித்தனர்.நடராஜனுடன் பேசுவதாலேயே பல நல்ல விஷயங்களையும் பட்டணத்து நாகரீக வாழ்வையும் பற்றி அறிந்து கொண்டான் காசிராஜன்.அத்துடன் அன்று அவன் கற்ற பல பாடங்களை பற்றியும் அறிந்துகொண்டான்.
அதனால் அவன் அறிவும் நடராஜனின் அறிவுக்கு இணையாக வளர்ந்தது.
இப்போது நடராஜன் பத்தாம் வகுப்புக்கு வந்து விட்டான்.அவனுக்கு இணையாகவே காசியும் அறிவு வளர்ச்சியும் உடல்வளர்ச்சியும் பெற்றிருந்தான்.அவர்களின் நட்பும் நாளுக்குநாள் வளர்ந்தது.அவன் படிப்பதையும் அவன் கூறும் செய்திகளையும் காசி கவனமாகக் கேட்டு வந்தான்.
ஒரு பண்டிகைநாள்.அவ்வூருக்கு கோவிலில் உபன்யாசம் செய்ய ஒரு பெரியவர் வந்திருந்தார்.அவரது கதையைக் கேட்க ஊர்மக்கள் கூடினர்.அறிவு தாகம் மிகுந்த காசியும் அங்கு செல்ல விரும்பினான்.நடராஜனை உடன் அழைத்துக் கொண்டு முன் பகுதியில் அமர்ந்து கொண்டான்.கதையைச் சொல்லிக் கொண்டே வந்த அந்தப் பெரியவர் இடையிடையே சில கேள்விகளையும் கேட்டுக் கொண்டே வந்தார்.
அவர் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொன்னான் காசி. கதையின் இடையிடையே காசியின் அறிவைப் புகழ்ந்து பேசினார் அந்தப் பெரியவர்.
முடிவில் நன்றி கூறும் போதும் காசியை அருகே அழைத்து அவன் படிக்கும் பள்ளியையும் வகுப்பையும் கேட்டார். ஆனால் அவனோ "ஐயா நான் வயலில் விவசாயம் பார்க்கிறேன். ஆனால் என் உயிர்நண்பன் நடராஜன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான் அவன் கூறும் செய்திகளை நான் நினைவில் வைத்துத்தான் உங்கள் கேள்விகளுக்கு விடை சொன்னேன்.'' என்றபோது அவனைத் தட்டிக் கொடுத்த அந்தப் பெரியவர் மக்களை பார்த்துக் கூறினார்.
"அன்புடையோரே, இந்தச் சிறுவன் தான் படிக்காமலேயே கேள்விஞானத்தால் தன் அறிவை
வளர்த்துக் கொண்டு சிறந்த கல்விமானுக்குரிய அறிவாளியாகத் திகழ்கிறான்.காரணம் என்ன என யோசித்தீர்களா? இவனது கேள்வி அறிவே. கற்றலிற் கேட்டல் நன்று என்பதை மெய்யாக்கியுள்ளான்.இப்படிப்பட்ட பிள்ளைகளை பெற்றுள்ள இந்தக் கிராமம் மிகச் சிறந்து விளங்கும்.
"செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை"
இது நமது திருவள்ளுவர் வாக்கு.இதன் பொருள் என்ன தெரியுமா?எல்லாச் செல்வங்களுக்கும் தலையான செல்வம் கேள்விச் செல்வமே அதாவது கேட்டு அறியும் அறிவே செல்வம். என்பதுதான்.இதன்படி நடந்து காசிராஜன் மிகுந்த அறிவுடன் திகழ்கிறான்.
இவனைப்போல் மற்ற சிறுவர்களும் வள்ளுவர் வாய் மொழியின்படி நடந்து கொள்ள வேண்டும்."
என்றபோது அவ்வூர் தலைவர் எழுந்தார். "ஐயா நீங்கள் சொன்னபிறகுதான் இந்த சிறுவன் எத்தனை சிறந்தவன் என்பது புரிகிறது.இனி இவனைப் படிக்கவைத்து கல்விமானாக்கி பெருமையடைய விரும்புகிறேன்.இந்த ஊரும் பெருமைப் படும்"
என்றபோது காசிராஜனை விட அதிகமாக மகிழ்ந்தவன் நடராஜனே.
கற்பதைவிட கேள்வி ஞானம் எத்தனை சிறந்தது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.இனி நல்லவற்றைக் கேட்போம் என நினைப்போம்.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
"செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
பதிலளிநீக்குசெல்வத்துள் எல்லாம் தலை"
அருமையான குறள் .... அதற்கேற்றபடி ஓர் சிறிய கதை. பகிர்வுக்கு நன்றிகள்.
சிறப்பானதோர் கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு