ராமன் ஒரு ஏழை விவசாயி.அவன் கிராமத்தில் ஒரு சிறு அளவு நிலத்தில் காய்கறி கீரை விளைவித்து விற்று பிழைத்துக் கொண்டிருந்தான்.அவனும் அவன் மனைவி ரத்தினமும் தினமும் அதிகாலை முதல்மாலை வரை தங்கள் நிலத்தில் பாடு பட்டுப் பயிரைப் பராமரித்து வந்தனர்
விளைந்த காய்கறிகளில் நல்லனவாகத் தேர்ந்தெடுத்து ஒரு பெரிய கூடையில் வைத்துக் கொண்டு ரத்தினம் தெருக்களில் சுற்றிவருவாள்.இவர்களது காய்கறிகளின் செழுமையைக் கண்ட பெண்கள் இவள் வருகைக்காகவே காத்திருந்து வாங்கிச் செல்வர்.விரைவாகவே வியாபாரத்தை முடித்துக் கொண்டு ரத்தினம் கணவருக்குத் துணையாக தோட்டத்திற்கு வந்து விடுவாள்.இருவரும் மகிழ்ச்சியக வாழ்ந்து வந்தனர்.
ஒரு நாள் ரத்தினம் வியாபாரத்திற்குச் சென்றிருந்தபோது ராமன் தனியாக தோட்டத்தைக் கொத்திக் கொண்டிருந்தான்.அப்போது அவன் எதிரே ஒரு இளைஞன் வந்து நின்றான்.நின்றவன் வாயெல்லாம் பல்லாக இளித்துக் கொண்டு நின்றான்.அவனைப பார்த்த ராமன்
"யாருப்பா நீ?எங்கே வந்தே?"
என்று கேட்டவாறு கரையில் ஏறி பானையில் இருந்த நீரைக் குடித்து முகத்தையும் துண்டால் துடைத்துக் கொண்டான்.
"மாமா, என்னயத் தெரியலையா மாமா.நாந்தேன் உங்க அக்கா ராசாத்தியோட மவன் வேலு.ரொம்...ப நாளாச்சில்ல அதால மறந்திட்டிய போல ...."
என்று நீட்டி முழக்கியவாறு நெளிந்தான்.
"அப்பிடியா? நீதான் மூத்தவனாலே?"சற்றுக் கண்டிப்புடன் பேசினான் ராமன்.
"இல்ல மாமோவ் நானு ரெண்டாமத்தவன்.மூத்தவன் அய்யா கூட பற்றையில வேல செய்யிறானுங்க மாமோவ்."
அதற்குமேல் அவனுடன் பேசி நேரம் கடத்த ராமனுக்கு விருப்பமில்லை.கையில் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு பாத்திக்குள் இறங்கினான்.
பாய்ந்து அவன் கையிலிருந்த மண்வெட்டியைப் பறித்துக் கொண்டான் வேலு..
"என்ன மாமோவ், நானு இருக்கையிலே நீ இந்த வேலயச் செய்யலாமா, செய்யத்தே நானு விடுவனா?நீயி ஒக்காரு மாமோவ், எங்கே கொத்தணும்னு
சொல்லு இப்பிடிங்கறதுக்குளாற கொத்தி முடிக்கிறேனா இல்லையா பாரு.ஒக்காரு மாமோவ்."
அவன் அன்பிலும் பேச்சிலும் ராமன் மயங்கித்தான் போனான்.அத்துடன் அக்காள் மகன் என்னும் பாசம் அவன் கண்களை மறைத்தது.எனவே புன்னகையுடன் அவன் சொற்களை ஏற்றுக் கொண்டு வரப்பின் மேல் அமர்ந்து கொண்டான்.
ஆனால் ரத்தினத்திற்கு இவன் வெகுநாட்கள் கழித்து வந்து ஒட்டிக் கொண்டது சற்றும் பிடிக்கவில்லை.ராமனிடம் சொல்லவும் தவறவில்லை. ஆனால் அதை ராமன் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.நாட்கள் கடந்தன.தை பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தபோது ராமனின் காய்கறி வியாபாரமும் சூடு பிடித்தது. அப்போதெல்லாம் வேலுவின் துணை மிகவும் உபயோகமாக இருந்தது. ஆனால் ரத்தினம் என்னவோ இவனை நம்பவேண்டாம் என்றே சொல்லிவந்தாள் ஆனால் அதை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை ராமன்.
அன்று மெதுவாகராமனிடம் வந்து நின்றான் வேலு.என்னாலே என்பது போல அவனைப்பபார்த்தான் ராமன்.
"மாமோவ்,.. மாமோவ்,"
என்னாலே?
"மாமோவ், பொங்க வருது மாமோவ், நானு ஊருக்குப் போயி அம்மாவைப் பார்த்திட்டு வாறன் மாமோவ்."
"சரி,சரி...இந்தா, இந்த ஐநூறு ரூபாவை உங்க அம்மாகிட்டக் குடு. தம்பியோட பொங்கல் சீர்ன்னு சொல்லு.போயிட்டு வா".
தன பங்குக்கு ரத்தினமும் பலகாரங்கள் மஞ்சள் இஞ்சிக் கொத்து என்றும் தோட்டத்துக் காய்கறிகள் என்றும் மூட்டை கட்டிக் கொடுத்தாள்
மகிழ்ச்சியோடு புறப்பட்டுப் போனான் வேலு.
நன்கு நாட்கள் கடந்தன.
அன்று ராமனும் ரத்தினமும்தோட்ட வேலை செய்து கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.அவர்கள் பேச்சு வேலுவைப் பற்றியதாகவே இருந்தது.
ரத்தினம் "அவன் இனிமே வருவான்னு நெனைக்கிறீயளா?"
"என் வரமாட்டான்?"
அவனும் அவன் முழியும் எனக்கென்னவோ அவன் ஒண்ணும் நல்லவனாப் படல."
ராமன் புன்னகைத்தான். "உனக்கேன் அவன் மேல இத்தனை வெறுப்பு?"
ம்..ம்..என்று நொடித்தவளைப் பார்த்துச் சிரித்தான் ராமன்.
"என்னப்பா, ராமா, இந்த வருசம் நல்ல யாவாரம் போல" என்றபடியே வந்தான் பக்கத்துத் தோட்டத்துக்குச் சொந்தக்காரனான செல்வம்.
வாங்க அண்ணாத்தே என்று வரவேற்றாள் ரத்தினம்.
ராமன் புன்னகையுடன் வரவேற்றான்."ஆமாம்பா.பொங்கலுக்காக வளர்த்த இஞ்சி மஞ்சள் பூசணி பரங்கின்னு நல்ல வியாபாரம்தான்.
"ரொம்ப சந்தோஷம்பா.ஆமா உங்க தோட்டத்துல வேலை செஞ்சுகிட்டிருந்த பயலை எங்கே காணோம்?"
"அவனா, அவன் எங்க அக்கா மவன்தானே. அம்மாவைப் பாத்துட்டு வாரேன்னு சொல்லி ஊருக்குப் போயிருக்கான். இன்னும்வரல."
"அட, நீ என்னப்பா, இம்புட்டு ஏமாளியாயிருக்க, அவனை பொங்க அன்னிக்கி சினிமாக் கொட்டாயில பாத்தேன். வெள்ளையுஞ்சொள்ளையுமா ."
"ஏம்பா, அவன்தானா, நல்லாப் பாத்தியா?"
"அந்தப் பயல எனக்குத் தெரியாதா?"நேத்து கூட டவுன்ல அந்தப் பய பெரிய சோத்துக் கடையில பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிக்கிட்டிருந்ததைப் பாத்தேன்."
ராமனின் முகம் இருண்டது.அதைப் பார்த்த ரத்தினம் "சரிதா. விடுங்க. ஏதோ தருமம் பண்ணினதா நெனச்சிக் கிடுங்க.இனி அந்தப் பயல
சேக்காதீங்க." என்றாள் சமாதானமாக.
'அந்தப் பய இனிமேல் வரமாட்டாம்ல.நானு அவனைப் பாத்ததை அவனும் பாத்திட்டான்ல"
"ரொம்ப நல்லதாச்சு அண்ணாத்தே, இதுக்குத்தான் ஆத்துல கொட்டினாலும் அளந்து கொட்டணும்னு சொல்லுவாங்க.சொந்தம்னு நெனச்சு பண்டபவிசோட ரூவாயும் கொடுத்து அனுப்பிச்சாருல்ல.அவனைப் பத்தி நல்லாத தெரியாம சொந்தமின்னு சொன்னதை வச்சு அள்ளிக் குடுத்தாரு..நல்லவேளை பீடை இதோடு விட்டது."
என்று சொன்னவளை ஆமோதித்து மௌனமானான் ராமன்.
--