செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

குறள் நெறிக் கதைகள்.--ஆறாத வடு.

           கந்தசாமி ஒரு விவசாயி. சற்று வசதியான விவசாயி.பொன்வயல் என்ற அந்த கிராமத்தில் அனைவரும் விவசாயம் செய்பவர்களே.கந்தசாமிக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். மூத்தவன் பாலு இளையவன் சீனு.பொன்வயல் கிராமத்தில் விவசாயம் தவிர வேறு தொழில் கிடையாது.கந்தசாமியின்  வீட்டின் அருகிலேயே பொன்னன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தார்.அவ்வூரில் சற்று ஏற்றத தாழ்வுடன் வாழ்பவர்கள் பலர்.. அப்படிப்பட்ட சற்றே வசதி குறைந்த விவசாயி பொன்னன்.பொன்னனுக்கு ஒரே மகன் இருந்தான். அவன் பெயர் வேலன் படிப்பிலும் விளையாட்டிலும் முதன்மையானவன்.அவனிடம் எப்போதும் தோற்றுப் போகும் சீனுவுக்கு வேலனைக் கண்டால் சற்றும் பிடிப்பதில்லை.
          படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி வேலனை எப்படியாவது முந்தவேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருந்தான்.அவன் நண்பர்களுடன் சேர்ந்து ஆலோசனை செய்தான்.
           அவர்கள் ஊரிலிருந்து பள்ளிக்கூடம் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் இருந்தது.அவ்வூரிலிருந்து பள்ளி செல்லும்  அனைவருமே மிதிவண்டியில்தான் சென்றனர்.வண்டி இல்லாதவர்கள் தங்கள் நண்பர்களுடன் அவர்கள் பின்னே அமர்ந்து  செல்வார்கள்.

    ஒருநாள் பாலுவும் சீனுவும் பள்ளிக்கு தங்கள் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பின்னால் ஒரு கட்டைவண்டி வந்துகொண்டிருந்தது. அது வேலன்  வீட்டு வண்டி அதை அவன் தந்தை பொன்னன் ஒட்டி வந்தார்.வண்டியில் நின்று கொண்டு பயணம் செயது கொண்டிருந்தான் வேலன்.  பள்ளியின் வாசல்  வரை வந்து வேலனை இறக்கிவிட்டு பொன்னன் புறப்பட்டார்.இதைப் பார்த்துக் கொண்டிருந்த சீனு வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தான் அவன் நண்பர்களிடம்  எதையோ சொல்லிச் சிரித்தவண்ணம் வகுப்புக்குள் நுழைந்தான்.அவன் நண்பர்களில் சில துஷ்டப் பிள்ளைகளும் இருந்தனர்.அவர்களுடன் சேர்ந்து சீனுவும் வேலனைப் பார்க்கும்போதெல்லாம்  "டேய் கட்டைவண்டிடா" என்று கிண்டலடித்தபடி சென்றனர்.

      இந்த விஷயம் தெரிந்துகொண்ட வேலன் மிகவும் அவமானமும் கோபமும் கொண்டான்.தன மிதிவண்டியின் சக்கரம் பழுதாகிப் போனதால்சந்தைக்குப் போகும்  அப்பாவுடன்அவர் பொருட்களை ஏற்றிவரும் கட்டைவண்டியில்  ஏறி  போனதை இப்படிக்  கிண்டல் அடிப்பதை அவனால் பொறுத்துக்க கொள்ள முடியவில்லை 

      சிலநாட்களில் அவனைக் கட்டைவண்டி என்றே மாணவர் முன்னே அழைக்க ஆரம்பித்தான்.சிலமாணவர்களும் அப்படியே அழைக்க மிகவும் மனம் வருந்தினான் வேலன் .இரண்டு நாட்களில் அவனது மிதிவண்டியைப் புதிதுபோலச் செய்து கொடுத்தார் பொன்னன்.மிகவும் மகிழ்ந்து போன வேலன் எல்லோரும் பார்க்க மிதிவண்டியில் பள்ளியின் முன் போய் இறங்கினான்.

      அப்போது யாரோ ஒரு மாணவன் "டேய், கட்டைவண்டி சைக்கிளில் வருதுடா "என்று தொலைவிலிருந்து கத்தினான்.
அதைக்  கேட்ட வேலன் கோபமும  துக்கமுமாக மீண்டும் வேகமாக வீடு நோக்கிப் பறந்தான் 

வீட்டில் தன தந்தையிடம் அழுது கொண்டே  இனி இந்தப் பள்ளியில் படிக்கமாட்டேன் என்றபோதுஅனைத்தையும் அறிந்து கொண்ட  பொன்னன் சிரித்தார்.அவனிடம் நீ எதையும் காதில் போட்டுக் கொள்ளாதே.அவர்கள் உன்னைப் பெருமையுடன் பார்க்கும்படி உயர்ந்து காட்டு. அவர்கள் கிண்டலை உனக்கு இறைவன் கொடுத்த படியாக எண்ணிக் கொள்.
அப்பாவின் இந்த சொற்களைக் கேட்ட வேலன் கண்களைத் துடைத்துக் கொண்டு அப்பாவைப் பார்த்துப் புன்னகைத்தான்.அவனைத் தடவிக் கொடுத்த  அப்பா பொன்னன் போய்வா என தலையசைக்க வேகமாக சைக்கிளில்பறந்தான் வேலன். 

பள்ளியில் சீனு அவனைக் கிண்டல் செய்யும்போதெல்லாம் யாரையோ  சொல்வதுபோலவேலன்  நடந்து கொண்டான்.சிலநாட்களிலேயே கிண்டல் செய்தவர்களுக்கெல்லாம் சலித்துவிட்டது.அத்துடன் ஒவ்வொரு தேர்விலும் முதலாவதாக வந்து அனைத்து ஆசிரியர்களிடமும் தலைமையாசிரியரிடமும் கூட நல்ல பெயர் எடுத்தான்வேலன். ..எல்லாருக்கும் எடுத்துக் காட்டாக  இருந்தான்.இப்போது பல மாணவர்கள் அவனிடம் நட்புக்கரம் நீட்டினர்.அதைப் பார்த்த சீனு தன தவறைப் புரிந்து கொண்டான் ஆனால் வேலனிடம் நெருங்கவே தயக்கம் காட்டினான்..

           நாட்கள் கடந்தன. தீபாவளித்த திருநாள் வந்தது.இப்போது சீனு பட்டாசு விட்டுக் கொண்டிருந்தான் பாலுவும் அவனுடன் சேர்ந்து பட்டாசு விட்டுக் கொண்டிருந்தான்.திடீரென்று சீனு ஆ.., ஐயோ அம்மா எனக் கத்தினான் அவன் கை முழுவதும் கருப்பாக இருக்கவே பாலு ஓடிப்போய் அப்பாவிடம் சொல்ல அவரும் அம்மாவும் பதறி  ஓடிவர அதற்குள்  தெருவே கூடிவிட்டது. ஆளுக்கொரு வைத்தியம் சொல்ல அப்பா அவனைக் கூட்டிக் கொண்டு டவுன் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனார்.கையில் பெரிய கட்டுடனும் கண்ணில் நீருமாகவந்தபோது  அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
          தீபாவளி முடிந்து பள்ளி தொடங்கியது. ஆனால் சீனு பத்துநாட்கள் கழித்துத்தான் பள்ளி செல்லவேண்டுமென்று டாக்டர் சொல்லிவிட்டதால் அவன் வீட்டிலேயே இருந்தான்.
ஒருநாள் இரவு சீனு படித்துக் கொண்டிருந்தான்.அவன் அண்ணன் பாலு அருகே வந்தான்."டேய்,சீனு என்ன படிக்கறே?"

"திருக்குறள் அண்ணா."
"என்ன குறள் ?"

"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே 
 நாவினால் சுட்ட வடு."
"இந்தக் குறளின் பொருள் தெரியுமா உனக்கு?"
தெரியாது என்பது போல் தலையை அசைத்தான் சீனு.
புன்னகை செய்த பாலு அவன் அருகே அமர்ந்து கொண்டான்."உன் கையில் நெருப்புக்கு காயம் பட்டிருக்கே இது இன்னும் பத்து நாளில் மாறிவிடுமா இல்லையா?"
"ஆமாம்"
"ஆனால் ஆறிவிட்ட காயத்தின் வடு உன் கையிலே இருக்குமே அது மறைய எத்தனை நாளாகும்?". பதில் சொல்லத தோன்றாமல் அண்ணனைப் பார்த்து விழித்தான் சீனு.
"இப்போது புரிந்து கொள். ஒருவரை நாம் இழிவாகவோ அல்லது அவமானமோ  படுத்தினோமேயானால் அந்த மனிதரின் மனம் எவ்வளவு பாடுபடும்.அதை அவர் தன காலம் முழுவதும் மறக்கவே மாட்டார்.வெளியே மன்னித்தாலும் உள்ளே அவர் மனம் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தான் நினைக்கும்.உன் காயம் மாறினாலும் வடு மாறாது அல்லவாஅதுபோலத்தான்" 
"அண்ணா..."
"இப்போ வேலனை  அவமானப் படுத்தினது தப்புன்னு புரியுது இல்லையா?" 
ஆமாம் என்பதுபோல் தலையசைத்தான் சீனு".நீ செய்தது  தப்புன்னு இப்போ  தெரியுது  இல்லையா?அதற்குத் தண்டனையா வேலன்  கிட்ட மன்னிப்புக் கேள். அவன் என்ன சொன்னாலும் அமைதியாக கேட்டுக்கோ.ஏன்னா கடந்த ஒரு வருஷமா அவன் மனம் கஷ்டப் பட்டிருக்கு. அதன் காரணம் நீயும் உன் நண்பர்களும்தான்."என்று பாலு சொன்னபோது அதன் உண்மையைப் புரிந்து கொண்டு அமைதியாக இருந்தான் சீனு.
அவன் மனம் அப்போதே வேலனிடம் சென்று மன்னிப்புக் கேட்கத் தயாராகி விட்டது.
















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

3 கருத்துகள்:

  1. Patti unkaloda kadhaikal miga armayaka ullathu. Unkalai paththi Dinamalar la paduchen aprm Tha unkaloda kadhaikal patri therinjurukkum.super Patti.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையான நீதிக் கதை
    ... பாராட்டுகள்... தொடர்ந்து எழுதுங்கள்...👌👌👌👏👏👏💐💐💐🌹🌹


    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி.தொடர்ந்து படித்து கருத்தைக்
    கூறவும்.

    பதிலளிநீக்கு