புதன், 9 ஜனவரி, 2019

பாட்டி சொன்ன கதை -9.வண்ணம் மாறிய குள்ள நரி

                ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்தன.அங்கு ஒரு குள்ளநரியும் வசித்து வந்தது. அதற்கு அந்தக் காட்டிலிருக்கும் சிங்கத்தைப் பார்த்து மிகவும் பொறாமையாக இருந்தது.அது அந்தக் காட்டுக்கு அரசனாக இருப்பதைப் பார்த்துத் தானும் அரசனாக ஆகவேண்டும் என்று ஆசைப் பட்டது.
            ஒருநாள் குள்ளநரி ஒரு புலியின் கண்களில் படவே அதற்குப் பயந்து வேகமாக ஓட ஆரம்பித்தது.ஓடும் அந்த நரியைப்பின்தொடர்ந்து வேறு சில மிருகங்களும் புலிக்குப் பயந்து ஓடத தொடங்கின. அதைப் பார்த்த நரி எல்லா மிருகங்களும் தன்னைத் துரத்துவதாக எண்ணி இன்னும் வேகமாக ஓடிற்று.எப்படித் தப்பிப்பது என்று எண்ணிக் கொண்டே ஊரின் எல்லைக்கு வந்து விட்டது.
            அங்கே ஒரு வீட்டின் மதில் சுவர் சற்றுக் குட்டையாய் இருக்கவே அதன் மீது ஏறி உள்ளே குதித்தது.அங்கே இருந்த பெரிய தொட்டி நீருக்குள் விழுந்தது.சிறிது நேரம் தத்தளித்த நரி மெதுவாக மேலே வந்தது.அதற்குள் இருள் விலகி வெளிச்சம் பரவத் தொடங்கியது.தன உடல் முழுவதும் நீல நிறமாக இருப்பது கண்டு ஆச்சரிய பட்டது. தான்விழுந்தது ஒரு சாயம் தோய்க்கும் இடம் என்பதும் நீலநிறச் சாயத தொட்டிக்குள் தான் விழுந்து எழுந்ததும் புரிந்தது.நரிக்கு ஒரு உபாயம் தோன்றியது. 
              வேகமாக அந்த மதில் சுவரைத் தாண்டி காட்டுக்குள் நுழைந்தது.இரவு வரும் வரை மறைந்திருந்தது. திடீரென்று நரிக்கூட்டத்தின் முன் வந்து கம்பீரமாக நின்றது.அதைப் பார்த்த மற்ற விலங்குகள் பயந்து நடுங்கின. புதுமையான விலங்காக இருக்கிறதே என்று அடங்கிப்  பணிவாக நின்றன.
"எல்லாரும் கவனமாகக் கேளுங்கள்.நான் உங்களுக்கெல்லாம் அரசனாக கடவுளால் அனுப்பப் பட்டவன்.நீங்கள் எல்லோரும் எனக்கு கீழ்ப் படிந்து நடக்க வேண்டும்.இல்லையென்றால் உங்களை நான் சபித்து விடுவேன்"
அதிகாரத்துடன்  கூறிய நீல நரியைப் பார்த்துப் பயந்த மற்ற விலங்குகள் பணிந்து அகன்றன.சற்று நேரத்தில் சிங்கம் நீலநரி யிடம் வந்து நின்றது.
"ராஜாவே, இந்த நாட்டுக்குப் பழைய ராஜாவாகிய சிங்கராஜா, வணங்குகிறேன்.நீங்கள் எங்களுக்குக கடவுளால் அனுப்பப்பட்டவர். நாங்கள் எல்லாம் தங்களின் அடிமைகள் கட்டளையிடுங்கள்."என்று பணிவுடன் கூறி வணங்கி நின்றது.
"ஏ சிங்கமே, நீ இந்தக் காட்டில் யார் கண்ணிலும் படாமல் உன் குகைக்குள்ளேயே மறைந்து இருக்க வேண்டும்.நான் கட்டளையிட்டால்தான் வெளியே வரவேண்டும்."என்றது அதிகாரமாக.சிங்கமும் பணிந்து சென்றது.நீலநரிக்குப் படு குஷியாகிவிட்டது.லாலா என்று பாடியபடியே அது சிலநாட்கள் 
காட்டைச் சுற்றி வந்தது.
        ஒருசில நாட்களிலேயே மழைக்காலம் வந்தது.ஒருநாள் மாலைநேரம் நீலநரி கர்வத்துடன் ஒரு வெட்ட வெளியில் நின்று கொண்டிருந்தது. அப்போது சில நரிகள் கூட்டமாக நின்று ஊளையிடத தொடங்கின.அப்போது மழையும் பலமாகப் பெய்யத தொடங்கிற்று நீலநரிக்கு ஓதுங்கக்  கூட இடமில்லை.
        மழையில் நனைந்ததால் நரியின் நீல நிறம் கரைந்து ஓடியது.
இப்போது தன பழைய நிறத்தை அடைந்த நரியும் எல்லாநரிகளுடனும்கூடி ஊளையிடத் தொடங்கிற்று.பலநாட்களாக அடைத்து வைத்திருந்த தன ஆசையெல்லாம் கொட்டி அழகாக ஆனந்தமாக ஊளையிட்டது. 
          இதைப் பார்த்த மற்ற நரிகளுக்கும் பிற விலங்குகளுக்கும் அப்போதுதான் இது ஒரு நரி நம்மையெல்லாம் ஏமாற்றிவிட்டது எனபது தெரிந்தது. எல்லா விலங்குகளும் சீரிக் கொண்டு ஓடிவந்தன 
 சிங்கராஜா கோபமாக கர்ஜித்தது. தன நிலையறிந்து அந்தக் குள்ள நரி  ஒரே ஓட்டமாக ஓடத தொடங்கியது. 
           அந்த நீல மாயிருந்த நரி இப்போது அந்தக் காட்டைவிட்டு வேறு காட்டை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது சரியாயிற்று என்று சொல்லிக் கொண்டே ஓடிற்று.வெகுதூரம் சென்று திரும்பிப் பார்த்தது.
          இப்போது எந்த விலங்கும் தன்னைப் பின்தொடரவில்லை என்பதைத் தெரிந்து கொண்டது  அந்த நரி. சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டே சிந்தித்தது.என் ஆசை நிறைவேறிற்று. 
காட்டுராஜாவாகச் சிலநாட்கள் அந்தக் காட்டில் உலாவந்தேன் 
அதுபோதும் . என்று தனக்குள் புன்னகைத்துக்  கொண்டது.      
------------------------------------------------------------------------------------------------------------------------
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

5 கருத்துகள்: