திங்கள், 1 ஏப்ரல், 2019

நன்மை செய்தால் நன்மை விளையும்

ஒரு பெரிய காடு .அந்தக் காட்டில் ஒரு பெரிய மரம் இருந்தது.அது ஆற்றின் கரையில் இருந்தது.அந்த ஆற்றில் ஒரு கட்டெறும்பு விழுந்து தத்தளித்தது.நீரின் வேகத்தில் அது கரையேற முடியாமல் தவித்தது.அந்தப் பெரிய மரத்தில் ஒரு புறா வந்து அமர்ந்தது.எறும்பு தவிப்பதைப் பார்த்தது.உடனே ஒரு இலையைப் பறித்துப் போட்டது.அந்த எறும்பு இலையில் ஏறித்  தப்பித்துக் கரையேறியது.
  அந்த  ஊரில் ஒரு வேடன் வசித்து வந்தான்.அவன் ஊரின் எல்லையில் இருந்த  அந்தக்    காட்டுக்குச் சென்று பறவைகளையும் சிறிய மிருகங்களையும் வேட்டையாடிப்  பிழைத்து வந்தான்.
       ஒரு நாள் வேட்டையாடிக் களைத்துப் போனவன் காட்டின் நடுவே ஓடும் ஆற்றில் நீர் அருந்தச் சென்றான்.அப்போது புறா மரக் கிளையில் வந்து அமர்ந்தது.அதைப் பார்த்த வேடன் கையில் இருந்த வில்லில் நாண்  ஏற்றினான். புறாவைக் குறி பார்த்தான்.
       புறா .பயத்துடன் அமர்ந்திருந்தது.சாகப் போகிறோம் என்று நினைத்தது.திடீரென்று வேடன்"ஆ  ஆஅ...அம்மா, "என்று அலறியபடியே குனிந்தான். அவன் கையிலிருந்த வில்லும் கீழே விழுந்தது.அம்பு மட்டும் பறந்து சென்று குறி தவறி மேலே பறந்து கொண்டிருந்த ஒரு கழுகைக் கொன்றது.
வேடன் காலைக்  கடித்த கட்டெறும்பு ஓடிச் சென்று புற்றுக்குள் மறைந்தது. எ றும்பால் கடிபட்ட வேடன் காலைத் தடவியபடி அமர்ந்து விட்டான்.
          தன்னை ஆற்று வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய புறாவைக் காப்பாற்றிவிட்டோம் என்று எறும்பு மகிழ்ந்தது.சரியான சமயத்தில் வேடன் காலைக்  கடித்து அவன் அம்பிலிருந்து காப்பாற்றிய எறும்புக்கு புறா மனதுக்குள் நன்றி சொன்னது. அத்துடன் தன்னைக் கொன்று தின்ன வட்டமிட்ட கழுகையும் வேடன் கொல்லக் காரணமாயிருந்த எறும்புக்கு நன்றி சொன்னபடி மகிழ்ச்சியுடன் பறந்தது புறா.நன்மை செய்தால் நன்மை  விளையும் என்று அது தெரிந்து கொண்டது.

--------------------------------------------------------------------------------------------------------------------
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

2 கருத்துகள்: