அதிகாலை நேரம். அன்று விடுமுறையானதால் கோபுவும் அவன் அப்பா நடராஜனும் வாயிலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். கோபு படிப்பது போல புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
"டே கோபு, படிக்காமல் என்ன வேடிக்கை?புத்தகத்தைப் பாத்துப் படிடா."
கோபு திடுக்கிட்டான். அவன் திடுக்கிட்டது அப்பாவின் மிரட்டலால் இல்லை.அப்போது அங்கே கத்திரிக்காய் என்று கூச்சலிட்டபடி வந்த காய் காரி கோமதியின் குரலுக்குத்தான்.
நடராஜனும் "ஏம்மா, அதான் வாசலுக்கே வந்திட்டியே, அப்புறம் என் இந்தக் கூப்பாடு?"என்றார் சற்றே எரிச்சலுடன்.
"ம்,... அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் கேக்கணுமில்லே.."என்றாள்
அலட்சியமாக.
நடராசன் ஏதோ சொல்ல வாயைத்திறந்தவர் அவர் மனைவி பார்வதி வருவதைப் பார்த்து வாயை மூடிக் கொண்டார்.
வசதியாக கோமதியின் முன் அமர்ந்து கொண்டவள் காய்களை பொறுக்கிக் கொண்டே "அரைக்கிலோ என்ன விலை?"
என்றவள் கோமதி சொன்ன விலையைக் கேட்டு முகவாயில் கையை வைத்தாள்.
"அம்மாடி, அரைக்கிலோ கத்தரிக்காய் விலையில் அரண்மனையே காட்டிடுவாய் போல இருக்கே.."புன்னகை புரிந்த கோமதி "அப்போ நீயும் காக்கா குருவியாய்த் தான் இருப்பே"என்றாள் கிண்டலாக.
"ஆனாலும் உனக்கு வாய் நீளம்தான் "என்றவள் சற்று நேரம் பேரம் பேசிவிட்டு அரைகிலோ காயை அள்ளிக்கொண்டவள் இன்னுமிரண்டு காய்களை எடுத்துக் போட்டுக் கொண்டாள்
இந்த பேரம் பேசும் காட்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் அப்பாவும் பிள்ளையும்.
இரண்டு நாட்கள் கழிந்தன.அன்று பள்ளிவிட்டு வந்த கோபுவின் கையில் ஒரு சிறிய செடி இருந்தது.அதைப் பார்த்த பார்வதி"இது என்ன செடி கோபு?யார் கொடுத்தாங்க?"என்றாள்
.ஆவலாக
"அம்மா, எங்க ஸ்கூல்லே ஒவ்வொருத்தரையும் செடி வளக்கணும்னு சொல்லிக கொடுத்திருக்காங்க.நல்லா வளர்த்தா பரிசு குடுப்பாங்களாம்."
அப்படியா என்றவள் உற்சாகமானாள் தேடிப்பிடித்து ஒரு பழைய உடைந்த பிளாஸ்டிக் வாளியைக் கொண்டு வந்தாள் காற்றுப் புக அதில் ஓட்டை போடப் படாத பாடு பட்டாள்
"தெருவில் எங்காவது வீடு கட்ட மண் தோண்டியிருப்பாங்க அதை இந்த வாளியில் எடுத்துட்டு வா."
கோபு வாளியுடன் ஓடினான்.எதிரே அப்பா வருவதைக் கூட அவன் கவனிக்கவில்லை. அவ்வளவு உற்சாகம்.
"அப்பாடா, ஒரு வழியாக செடி நடும் விழா சிறப்பாக நடந்து முடிந்தது அம்மாவும் கோபுவும் தினமும் நீர் ஊற்றி அதை ஒரு பிள்ளைபோல் நினைத்து கவனித்து வந்தனர்.
செடி நனறாக வேர் பிடித்து விட்டது என்று கோபுவும் பார்வதியும் மகிழ்ச்சியடைய இவர்களின் உற்சாகம் நடராஜனையும் பற்றிக் கொண்டது.தினமும் மாலையில் வந்தவுடன் .
"இன்னைக்கி செடிக்குத் தண்ணீர் விட்டாயா ?என்றபடி அதை ஒருமுறை பார்த்து விட்டு காபி குடிப்பார்.
பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன.அன்று காலையில் வழக்கம்போல செடியின் அருகே வந்தவள் பெரிதாகக் கத்தினாள்."கோபு.., ஓடிவா, இங்கே வந்து பார்."
அவள் போட்ட சத்தத்தில் கோபுவும் நடராஜனும் வாரி சுருட்டிக் கொண்டு ஓடிவந்தனர்.
"இங்கே பார் புதுசா இலை விட்டிருக்கு பக்கத்திலே இன்னொரு இலையும் நீட்டிக்கொண்டிருக்கு"இரண்டு கைகளையும் தட்டிக் கொண்டு குழந்தையாகக் குதூகலித்தாள் அன்றைக்கு பாயசம் வைத்து கொண்டாடினாள் பார்வதி.இப்போதுதன் அது கத்திரிக்காய் செடி என்று தெரிந்தது.செடி வளர்ப்பதில்
இப்போது கோமதி அவளுக்கு ஆசிரியராகிவிட்டிருந்தாள் அவள் சொல்லிப் புரியாத விஷயங்களை கணினியில் தேடிப்பிடித்துப் படித்தாள் பார்வதி.
இரண்டு மாதங்கள் முடிந்தன.அதே உற்சாகம். ஆம் இப்போது கத்திரி பூத்துவிட்டது.
இரண்டு நாட்களில் பிஞ்சாகும் என்றவள் ஏமாந்தாள் காய்க்கவில்லை.
இலையும் நிறம் மாறத்தொடங்க கோமதி சொன்னதுபோல மருந்திட்டாள் உரமிட்டாள் பகீரதப் பிரயத்தனம் என்று சொல்வார்களே அதுபோல பாடுபட்டால்.இரண்டு கத்திரிக்காய் செடியில் எட்டிப் பார்த்தது.
அன்று கோமதியிடம் இல்லை பழுக்கக் காரணம் கேட்டவள் .
திகைத்துப் போனாள்
ஏம்மா தினமும் தண்ணி விட்டா செடி அழுகிடாதா பயிர் வளக்கிறது சுலபமில்லே என்றவளிடம் மெளனமாக ஆமோதித்தாள் பார்வதி.
அன்றும் ஒரு விடுமுறை தினம் கோபு அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தான்.கோமதி "அம்மா, கத்திரிக்காயம்மா.."
என்று வழக்கம்பொலக் கூச்சலிட்டாள்
வெளியே வந்த பார்வதி அவளிடம் காயை வாங்கி கொண்டு அவள் சொன்ன விலையைக் கொடுத்து விட்டு உள்ளே போனாள்
இதைப் பார்த்துக் கொண்டிருந்த நடராசன் 'கோபு உங்கம்மா பேரம் பேசாமல் காய் வாங்கிட்டு போறதைப் பார்த்தியா "
என்றார்.
ஒரு விவசாயி பயிர் விளைவிக்க என்ன பாடு படுறான்னு இப்போ அம்மாவுக்குத் தெரிஞ்சிடுச்சு.அதனாலதான் பேசாமே வாங்கிட்டுப் போறாங்கப்பா.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி வெளியே வந்தாள்
"நெசந்தான் கோபு.ஒரு செடிக்கே நாம் இத்தனை கஷ்டப்படுறோமே, ஒரு தோட்டத்தைப்பாதுகாக்க எத்தனை கஷ்டப் படுவாங்க."
"ஆமாம் பார்வதி இயற்கை மட்டுமில்லாமே எலி பெருச்சாளி கால்நடைங்க இதிலிருந்தெல்லாமும் பாதுகாக்கணும்.அதனால இன்னிக்கிப் போலவே எப்போது பேரம் பேசாமே காய் வாங்கறதுதான் நாம அவங்களுக்குச் செய்யிற பெரிய உதவி."
கோபு சிரித்தபடியே"அப்பா, கத்திரிக்காய் செய்த மாயத்தைப் பாருங்க அம்மாவை மாத்திடுச்சு."என்றவனைப் பார்த்து சிரித்தனர் நடராஜனும் பார்வதியும்.
----------------------------------------------------------------------------------------------------------
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக