சனி, 24 செப்டம்பர், 2022

vandhaan velan.

சிறுவர்களுக்கான சிறுகதைகள். 

  1.                                வந்தான் வேலன் 


                   அது ஒரு சிற்றூர்.சுமார் நூறு குடும்பங்கள் இருந்தால் அதிகம் .அனைவரும் வயல் வெளிகளில் வேலை செய்பவர்கள்.அவரவர்கள் தங்கள் சொந்த நிலங்களில் பயிர் விளைவித்துக் கொண்டிருந்தனர். எனவே அனைவரும் வசதி படைத்தவர்களாகவே இருந்தனர்.அவர்களில் ஆறுமுகமும்  ஒருவன்.அவனுக்கு செந்தில் என்று ஒரு மகன் இருந்தான்.அப்பாவுக்கு உதவியாக ஆடு மேய்த்து வந்தான்.

                   அந்த ஊரில் ஒரே ஒரு முருகன் கோயில் இருந்தது.மிகப்பழமையான கோயில் இருந்தது.யார் கட்டினார்கள் என்று தெரியாது.ஊரின் எல்லையில் ஆற்றின் கரையோரமாக அமைந்திருந்தது.கையில் வேலுடன் முருகன் அழகாய் சிரிப்புடன் நின்றிருந்தான்.ஆனால் அவனைக் கவனிப்பார் யாருமில்லை.

             ஆனால் தினமும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு வரும் செந்தில் அந்த முருகன் கோயில் படிக்கட்டில் அமர்ந்துதான்ஆடுகளைக் கவனித்துக் கொள்வான். ஒருநாள் கையில்   ஒரு நாள் கையில் கொம்பை வைத்துத் தட்டிக் கொண்டே அமர்ந்திருந்தான்.அவன் முன் அவனையொத்த ஒரு சிறுவன் வந்து நின்றான்.அவனைப் பார்த்த செந்திலுக்கு ஆச்சரியமும் அதே சமயம் ஆனந்தமும் ஏற்பட்டது.

            இவன் எங்கிருந்து வந்தான்? என்பது ஆச்சரியம் .நல்லவேளையாக உடன் விளையாட தன்னைப்போல் ஒருவன் வந்தானே என்பது ஆனந்தம்.ஆனாலும் வந்தவனைப் பார்த்து செந்தில் "ஏய், யார் நீ ? எங்கிருந்து வந்தே?என்றான்.

புன்னகைத்த அந்தச் சிறுவன், "நான் இங்கேயேதான் இருக்கேன்.உன்னைத் தினமும் பார்க்கிறேன்.இன்னிக்கி உன்கூட விளையாடலாம்னு வந்தேன்."என்றான்.மிகுந்த மகிழ்ச்சி கொண்டான் செந்தில்.

"வா,வா எனக்கும் விளையாடணும்னு ஆசைதான் "என்றபடி வரவேற்றான்,

"ஆமா உன் பேரு என்ன?"

"என்னை வேலய்யா வேலா வேலு எப்படிவேணாலும்  கூப்பிடலாம் "

"நான் உன்னை வேலான்னு கூப்பிடறேன்.அதான் சத்தமா கூப்பிட சௌகரியமா இருக்கும்."

புன்னகையுடன் அதை ஏற்றான் வேலன் 

பொழுது போவது தெரியாமல் இருவரும் விளையாடினார்கள்.

சற்று நேரத்தில் சூரியன் மறையவே செந்தில் ஆடுகளை ஓட்டினான்.

வேலனைப் பார்த்து "சரி வேலா, நேரமாச்சு நான் வரேன் நாளைக்கு சீக்கிரம் வா. விளையாடலாம்."என்றான்.

வேலன்  சரியென்று தலையசைத்தவன் புன்னகையோடு விடை கொடுத்தான் 

                       மறுநாள் பொழுது விடிந்தவுடன் அவசர அவசரமாக குளித்து உடைமாற்றி ஆடுகளை அவிழ்க்க ஆரம்பித்தான் செந்தில்.

அவன் தந்தைக்கு ஒரே ஆச்சரியம்.என்றும் ஆடுகளை மேய்க்கப் போக மாட்டேன் என்று அடம் பிடிப்பவன் இன்று தானே ஆடுகளை மேய்க்கத் தயாராகி விட்டானே என்று சாறு ஆச்சரிய பட்டாலும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

வழக்கம்போல கோயில் வாசற்படியில் அமர்ந்தவன்" வேலா, ஏய் வேலா" என்று கூவினான்.செந்திலின் தோளில் கை  வைத்தபடி வேலன் வந்து அருகே அமர்ந்தான்.

"அட, நீ இங்கேயா இருக்கே நான் பார்க்கவே இல்லையே"

"நீ என்னைக் கவனிக்கவே இல்லை.கோயில்லதான் இருந்தேன்."

"சரி இந்தா  கடலைமிட்டாய் சாப்பிடு.எங்கப்பா வாங்கி குடுத்தாரு."

மகிழ்ச்சியோடு கடலைமிட்டாயை வாங்கிச் சுவைத்தான் வேலன்.

"நல்லாருக்கா"என்றவன் கையை உதறிக்கொண்டு எழுந்தான்.இருவரும் விளையாட ஆரம்பித்தார்கள்.

                      ஒருநாள் ஒரு பெரியவர் அந்த வழியே வந்தவர் முருகன் கோயிலைப் பார்த்து வணங்கி நின்றார்.பின்னர் நன்கு முருகனை உற்றுப் பார்த்து விட்டு ஆச்சரிய பட்டுப் போனார்.மேலும் தனக்குள் 'வேலாயுதம் இல்லாமல் வேலனா? ஆச்சரியமாயிருக்கு "என்று சொல்லிக் கொண்டார்.

இந்தச் செயதியை அவர் ஊருக்குள் சென்று சொல்ல ஊர்ப்பெரியவர்கள் தனவந்தர்கள் எல்லாரு மாக பத்துப்பேர் கோவிலுக்கு வந்து ஆச்சரிய பட்டுப் போனார்கள்.ஆளாளுக்கு வேல் இருந்ததே நான் பார்த்திருக்கேன்.என்று பேசிக்கொண்டார்கள்.மேலும் நாம கவனிக்காததால்தான் வேலை யாரோ திருடிச் சென்றுவிட்டார்கள்.அந்த வேலைத் தேடுவதே இனி நம் வேலை. 'என்று முடிவு செய்தனர்.

தினமும் அந்த இடத்தில் ஆடு மேய்க்கும் செந்திலிடம் விசாரித்தனர்.

"உன்கூட இன்னொரு பையன் வந்து விளையாடுவான் அவன் கிட்ட விசாரிக்கணுமே எங்கே அவன்?"என்றபோது அவன் இன்னும் வரவில்லை என்றவன் அதோ வந்து விட்டான் என்றான் உற்சாகக் குரலில்.செந்திலின் அருகே வந்து அவன் கையைப் பற்றிய வேலன்  "செந்தில் நான் இனிமே விளையாட வரமாட்டேன் "என்றான்.

"ஏன் வேலா?"என்றான் செந்தில் சோகமான குரலில்.

"சரி சரி நீ வருத்தப்படாத இப்போ விளையாடலாம் வா."என்று அவன் கையைப் பற்றினான் வேலன். ஜனங்களே அதிகம் வராத அந்தஇடத்துக்கு திடீரென்று பத்துப் பேர் கூட்டமாக வந்திருப்பதை அறிந்த செந்தில் அதிசயித்துப் போனான்.

"இது என்ன அதிசயம் இத்தினி நாளு  யாரும் வராத இந்தக் கோயிலுக்கு இத்தினி பேரு வந்திருக்காங்களே "என்று ஆச்சரியக் குரலில் கூவினான் செந்தில்.புன்னகையுடன் அவர்களைப்  பார்த்துக் கொண்டு நின்றான் வேலன். 

வந்திருந்தவர்களில் பெரியவர் ஒருவர் வேலனின் கையைப் பற்றினார்.

"டேய் தம்பி யார்வீட்டுப் பிள்ளை நீ?உங்கப்பா பேர் என்ன?" 'என்றார் வேகமாக.

"நானா நானு சொக்கநாதன் மகன் வேலன் .இதே ஊர்லதான் ரொம்ப வருஷமா இருக்கேன்.நீங்கதான் என்னைக் கவனிக்கவே இல்லையே."என்றான்.

"உங்கப்பாரு என்ன சய்யிறாரு?உங்க வீடு எங்க இருக்கு?எந்தத் தெருவில இருக்கு காட்டு அதை."என்று கேள்வியாக அடுக்கினர் .தன்னைப் பற்றியிருந்த கையை உதறிக்கொண்டு  "இதுதான் எங்க வீடு. இங்கதான் நான் இருக்கிறேன்."என்றவாறு கோயில் கர்ப்பக்கிரகத்தில் நுழைந்து மறைந்துபோனான் வேலன்.

அதேசமயம் முருகனின் காலியாக இருந்த கைக்குள் வேலும் பளபளத்தது.

அதைப்பார்த்த ஊர்மக்கள் "வேலா, வடிவேலா, நீயா சிறுவனாக வந்தாய்?என்று கூவினர்.

சிலர் செந்திலைத் தலைமேல் தூக்கிக் கொண்டாடினர்.மகிழ்ச்சியில் அந்த ஊர்மக்கள் திளைத்தனர்.

பலரும் தன்  நிலை மறந்து முருகா வேலா எனக் கூவிக் கண்ணீர் மல்க கோவிலை வலம் வந்து தொழுதனர்.

அன்றே  அந்தக் கோவிலுக்கு குடமுழுக்கு செய்யவும் திருவிழாநடத்தவும் ஊர்ப்பெரியவர்கள் ஏற்பாடு செய்யத் தொடங்கினர்.செந்திலுக்கு வடிவேலனுடன் விளையாடிய சிறுபிள்ளை என்ற நற்புகழும் கிடைத்தது.

வேலன்  கேட்பாரற்றுக் கிடந்த தன இல்லத்துக்கு பெரும் புகழை வலிய வந்து சேர்த்துவிட்டான் .

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

2 கருத்துகள்: