செவ்வாய், 24 ஏப்ரல், 2012

84- இன்னா செய்தாரை ...... திருக்குள் கதைகள்.

 ஓர் ஊரில் சாம்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். எப்போதும் தீயவற்றையே  நினைத்து வாழ்ந்தான்.
தீயவருடனேயே சேர்ந்து தீய காரியங்கள் செய்து பணம் சம்பாதித்து வாழ்ந்தான்.ஒரு முறை வேறு ஊருக்குச் சென்று அங்கிருப்பவர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்க எண்ணம் கொண்டான்.
அதனால் அடுத்திருந்த ஓர் ஊருக்குப் புறப்பட்டான்.வழியில் ஒரு பெரும் காடு இருந்தது. அதைத் தாண்டுவது மிகவும் கஷ்டமாக இருந்தது.நடந்து நடந்து மிகவும் களைத்து விட்டான் சாம்பன்.
ஒரு பெரிய மரத்தடியில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான்.பறவைகள் எல்லாம் கூட்டை நோக்கிப் பறக்கும்நேரம் ஆகிவிடவே எழுந்து அமர்ந்தான்.பசி வேறு வயிற்றைப் பிசைந்தது.
அப்போது அந்த மரத்தை நோக்கி புறா ஒன்று பறந்து வந்தது.ராஜகீர்த்தி என்பது அதன் பெயர்.
அது தன் இருப்பிடத்திற்கு யாரோ வந்திருப்பது கண்டு மகிழ்ந்தது.விருந்தினரை வரவேற்கும்
எண்ணத்தோடு சாம்பனிடம் வந்து கூறியது.
"ஐயா, எனஇல்லம் தேடி நீங்கள் வந்தது கண்டு மிக்க  மகிழ்ச்சி.மிகவும் களைப்பாக இருக்கிறீர்களே. இருங்கள் நீங்கள் உண்ணக் கனி கொண்டு வருகிறேன் "என்று கூறிப் பறந்தது.                          
சற்று நேரத்தில் சுவை மிக்க கனிகளைக் கொண்டு வந்து அவர் முன் வைத்து "உண்ணுங்கள் ஐயா, இரவு இங்கேயே தங்கி காலையில் புறப்படுங்கள்" என்று கூறி அவர் படுப்பதற்காக 
புற்களையும் மலர்களையும் பரப்பி படுக்கை தயாரித்துக் கொடுத்தது.சாம்பன் மகிழ்ச்சியுடன் படுத்து உறங்கினான்.ராஜகீர்த்தியும்  சாம்பனுக்குப் பாதுகாப்பாக அவன் அருகிலேயே படுத்து உறங்கியது.
மறுநாள் காலை சாம்பன் புறப்படும்போது ராஜகீர்த்தி என்ற அந்தப் புறா ,"நண்பா, அடுத்த மலையில் என் நண்பன் விரூபாக்கன் என்ற அரக்கன் இருக்கிறான். என் நண்பன் நீ என்று தெரிந்தால் உனக்கு வேண்டிய உதவி செய்வான் நீ அங்கு செல்."என்று கூறியது.
ராஜகீர்த்திப் புறாவின் சொற்படியே சாம்பன் அடுத்த மலையை நோக்கிச் சென்றான்.சற்றுத் தொலைவு சென்றபோது வேறு ஒரு மலை தெரிந்தது. அதன் மேல் ஏறிச் சென்றான் சாம்பன்.அங்கு அரக்கர் கூட்டத்தின் நடு நாயகமாக வீற்றிருந்தான் விரூபாக்கன் என்ற அரக்க அரசன்.
அவனைப் பார்த்து அஞ்சினான் சாம்பன். "நீ யார்?"எனக்கேட்ட விரூபாக்கனுக்கு நடுங்கியபடியே பதில் கூறினான் சாம்பன்.
"நான் ராஜகீர்த்தியின் நண்பன்."இதைக் கேட்ட உடனே எழுந்து அருகே வந்த விரூபாக்கன் சாம்பனை அணைத்துக் கொண்டான்.
"நீ என் நண்பனின் நண்பன்.இனி எனக்கும் நண்பன்."
சாம்பானுக்கு  பெரும் விருந்தும் பல பரிசுகளையும் கொடுத்து நிறைய பொற்காசுகளையும் மூட்டையில் கட்டிக்கொடுத்தான் விரூபாக்கன்.
அந்த அரக்க அரசனிடம் விடைபெற்றுக் கொண்ட சாம்பன் தன் சொந்த ஊர் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.வரும் வழியில் தன் நண்பன் ராஜகீர்த்தியின் மரத்தடிக்கு வந்தான்.அங்கு வழக்கம்போல் இருட்டும் நேரம் ராஜகீர்த்தி இல்லம் திரும்பியது.
"நண்பா, உன் நண்பன் விரூபாக்கன் எனக்கு நிறைந்த பொன் கொடுத்துள்ளான். இன்று இரவு இங்கேயே கழித்து விட்டு காலையில் நான் புறப்படுகிறேன்."
இதைக் கேட்ட ராஜகீர்த்தி மகிழ்ந்தது. தன் நண்பனுக்கு உண்ண உணவளித்து படுக்கை தயார் செய்தது.
நடு இரவில் கண் விழித்த சாம்பன் அருகே தூங்கும் ராஜ்கீர்த்தியைப் பார்த்தான்.
'நான் இன்னும் வெகு தூரம் போகவேண்டுமே.உச்சி வேளையில்  பசித்தால் என்ன செய்வது'
என்று சிந்தித்தவன் தன் அருகே படுத்திருந்த புறாவைக் கொன்றான்.அதன் அழகிய இறகுகளைப் பிய்த்துப் போட்டான் அந்த உடலை நெருப்பில் வாட்டி எடுத்துக் கொண்டு தன் பொன் மூட்டையையும் தூக்கிக் கொண்டு வேகமாக அந்த இடம் விட்டுப் புறப்பட்டான்.
பொழுதும் விடிந்தது. நேரம் கடந்துகொண்டிருந்தது.தினமும்தன்னை வந்து பார்த்துச் செல்லும் நண்பன் ராஜகீர்த்தி வராததால் அரக்க அரசனான விரூபாக்கன் அவனைத் தேடி வரும்படி தன் காவலருக்கு கட்டளையிட்டான்.அவர்களும் ராஜகீர்த்தியின் இல்லம் வந்து அங்கே புறாவின் இறகுகள் கிடப்பதைக் கூறினர்.
என்ன நடந்திருக்கும்  என்பதைப் புரிந்துகொண்ட விரூபாக்கன் சாம்பனைத் தேடி இழுத்து வரும்படி கட்டளையிட்டான்.
அவனது வீரர்களும் சிறிது நேரத்தில் சாம்பனைக் கட்டி இழுத்து வந்தனர்.அவனிடம் நெருப்பிலிடப்பட்ட தன் நண்பனின் உடலைப் பார்த்து கதறி அழுதான் விரூபாக்கன்.
தனக்கு நன்மை செய்தவன் என்று கூட நினைத்துப் பார்க்காத நன்றி கெட்ட சாம்பனைக் கொன்று தின்னுமாறு பணித்தான்.
ஆனால் அரக்கர் அனைவரும் நன்றி கெட்டவனின் உடலைத் தின்னமாட்டோம் என்று கூறிவிட்டனர்.அதன் பின் சண்டாளர்களிடம் கொடுத்தால் அவர்களும் நாங்கள் ஏற்கெனவே பாவம் செய்து  சண்டாளர்களாக உள்ளோம்.. இந்தப் பாவியின் உடலைத் தின்றால் இந்த நரகத்திலேயே  உழலவேண்டும். எங்களுக்கு வேண்டாம் என்று கூறவே சாம்பனை வெட்டி குழியில் போட்டு மூடுமாறு கட்டளையிட்டான்.
பின்னர் ராஜகீர்த்தியின் உடலுக்கு மிகுந்த மரியாதையுடன் அந்திம காரியங்களைத் தானே செய்தான்.மிகுந்த துயரத்தோடு சிதையிலிடும்போது திடீரென்று ராஜகீர்த்தியின் உடலில் சிறகுகள் மிகவும் அழகுடன் வளரத் தொடங்கியது.அதைப் பார்த்த விரூபாக்கன் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தான்.விண்ணிலே காமதேனுவுடன் இந்திரன் செல்வது தெரிந்தது.அதன் நிழல் ராஜகீர்த்தியின் மேல் பட்டதால் ராஜகீர்த்தி உயிர் பெறத் தொடங்கியது.விரூபாக்கணும் ராஜகீர்த்தியும் இணைந்து இந்திரனைத் துதித்தனர்.இந்திரன் மகிழ்ந்து என்ன வரம் வேண்டும் எனக் கேட்க,ராஜகீர்த்தி ,
"தேவதேவா, அறியாமல் பிழை செய்த எங்கள் நண்பன் சாம்பனை மன்னிக்கவேண்டும். அவனையும் உயிர்ப்பிக்க வேண்டும்." என்று கேட்டுக் கொண்டது.
"உன் பெருந்தன்மையும், தீமை செய்தவனுக்கும் நன்மைசெய்ய எண்ணும் உன் நல்ல பண்புக்கும் உன்னைப் பாராட்டுகிறேன்.உன் விருப்பப்படியே சாம்பனை உயிர்ப்பிக்கிறேன்.நலமோடு வாழ்வீர்களாக"
என்று ஆசிவழங்கிவிட்டு மறைந்தார் தேவேந்திரன்.
உயிருடன் எழுந்து வந்த சாம்பன் ராஜகீர்த்தியிடம் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டான்.அவனை அணைத்து மகிழ்ந்தது ராஜகீர்த்தி.
இத்தகைய உயர்ந்த பண்பு தனக்கில்லாமல் போயிற்றே என விரூபாக்கன் வெட்கப்பட்டான். தான் செய்த நன்றி மறந்த செயலுக்காக வெட்கப் பட்டான் சாம்பன்.இருவரையும் அணைத்துக் கொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தது ராஜகீர்த்தி என்னும் புறா.
இந்தக் கதையின் கருத்தைத்தான் வள்ளுவரும்
'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்'
என்று கூறியுள்ளார்.ஒருவன் செய்த தவறுக்கு சிறந்த தண்டனை எது  என்றால் அவன் நாணும்படியாக அவனுக்கு நன்மை செய்தலே ஆகும். இந்த உண்மையை நாம்  அனைவரும் புரிந்து கொண்டால் சமுதாயம் சிறந்து விளங்கும்.
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

83.மொழிப்பற்று.

    ஐம்பெரும் காப்பியங்களுள் மணிமேகலை என்னும் காப்பியமும் ஒன்று.சிலப்பதிகாரத்தின் தொடர் காப்பியமானதால்  சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று வழங்கப்படுகின்றன. மணிமேகலையில்தான் இந்தக் கதை கூறப்பட்டுள்ளது.

செல்வம்  மிக்க  வணிக  குலத்தைச் சார்ந்தவன் சாதுவன்.இவன் மனைவி ஆதிரை என்ற கற்புக்கரசி.இவர்கள் இருவரும் இனிதே இல்லறம் நடத்தி வந்தனர்.சாதுவன் தன் வாணிபம் காரணமாக கடல் கடந்து செல்ல நேர்ந்தது.தன் மனைவியிடம் கூறிய சாதுவன் நிறைந்த நவரத்தினங்களுடன் கப்பலில் புறப்பட்டான். கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தது.திடீரென்று பெரும் காற்று வீசியது.அது புயலாக உருவெடுத்தது. கப்பல் நிலை தடுமாறி கடலுள் மூழ்கியது.அந்தக் கப்பலில் பயணம் செய்த வணிகர்களும்  பயணிகளும் நீருள் மூழ்கினர்.சாதுவனும் மூழ்கினான்.

அந்தக் காலத்தில்ஆங்காங்கே இருந்த தீவுக் கூட்டங்களில்  மனிதர்களை உண்ணும் நாகர் என்ற இனத்தவர் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒரு கூட்டத்தினர்  நடுக்கடலில் ஒரு தீவில் வாழ்ந்து வந்தனர்.அவர்கள் கடலில் மூழ்கி கரை ஒதுங்கும் மனிதர்களைக் கொன்று தின்று வந்தனர்..
மயக்கமடைந்த சாதுவன் அந்த பயங்கரமான மனிதர் வாழும் தீவின் கரையில் ஒதுங்கினான். கரையில் நின்றிருந்த நாகர்கள் ஒரு மனித உடல் கிடப்பது கண்டு பெரும் ஆரவாரத்துடன் அவனைச் சுற்றி குதித்து ஆடினர்.அவர்கள் ஆரவாரத்துடன் பேசிக் கொண்டதைக் கேட்டுக் கண் விழித்தான் சாதுவன்.

 சாதுவன் கண் விழித்ததைப் பார்த்து அந்தக் கூட்டம் அவனைப் பிடித்து இழுத்துச் சென்றது. தளர்ந்த  நடையுடன்  சென்று  தலைவன்  முன் நின்றான் சாதுவன். அந்தத் தலைவன் எனப்பட்டவன் மனித எலும்புகளால் ஆன ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்தான். பயங்கரமான தோற்றத்துடன் காணப் பட்டவனைப் பார்க்கவே அச்சமாக இருந்தது சாதுவனுக்கு.
அவனைப் பார்த்த நாகர்தலைவன் மிக்க மகிழ்ச்சியடைந்தான். இவன் நன்கு கொழுத்த உடம்புடன் உள்ளான். நமக்கு நல்ல இரை.
என்று மகிந்தான்.

அவனது பேச்சைக் கேட்ட சாதுவன் பணிவுடன் பேசினான்."ஐயா, நான் சோழநாட்டுக் காவிரிப்பூம் பட்டினத்தைச் சேர்ந்தவன்.கப்பல் கவிழ்ந்துபோனதால் இங்கு கரை ஒதுங்கியுள்ளேன்.எனக்கு நீங்கள்தான்  உதவி செய்ய வேண்டும் "
சாதுவன் நாகர் மொழியில் பேசியதைக் கேட்ட தலைவன் ஆச்சரியத்துடன் சாதுவனைப் பார்த்தான்."எங்கள் மொழி பேசும் நீயும் எங்களில் ஒருவன்."என்று கூறியவன் தன் பணியாட்களை அழைத்தான்."இவன் நம் இனம்.இவனுக்கு ஒரு ஆசனம் கொண்டுவா.
கள்ளையும்  ஊனையும் உண்ணக் கொடுங்கள்."
"ஐயா, கள்ளையும் ஊனையும் நாங்கள் உண்ண மாட்டோம். அவற்றை உண்பது மகா பாவம் என்று எண்ணுபவர் நாங்கள்."
"என்ன! கள்ளையும்ஊனையும்   உண்ணமாட்டீர்களா! ஆச்சரியமாக உள்ளதே,"
"ஐயா, மனிதனாகப் பிறந்திருந்தும் இந்த ஈனமான வாழ்க்கையை வாழ்வது ஏன்?உயர்ந்த மானிடப் பிறவி பெற்றிருந்தும் விலங்குகள் போல் வாழ்வது ஏன்?தயவு செய்து நான் சொல்வதைக் கேட்டு அதன்படி நடந்து வாழ்வில் முக்தி அடைய வழி பாருங்கள்."
"ஐயா, நீங்கள் சொல்வது உண்மைதான். இதுவரை விலங்குகளாக வாழ்ந்துவிட்டோம்.நீங்கள் சிறிது காலம் எங்களோடு இருந்து வீடுபேறு அடைய வழி கூறுங்கள்." தலைவனின் விருப்பப்படி சாதுவன் அங்கேயே தங்கி தினமும் அருள்மழை பொழிந்தான்.அதைக் கேட்டு அந்நாட்டு மன்னனும் மக்களும் மிக விரைவிலேயே மனம் திருந்தினர்.
சில காலம் அங்கேயே கழித்த சாதுவன் தன் தாய்நாட்டுக்குச் செல்ல விரும்பினான்.
தினமும் கடற்கரையில் நின்று ஏதேனும் கப்பல் வருகிறதா என்று கவனித்து வந்தான்.ஒரு நாள் அவன் விரும்பிய படியே சோழநாட்டு வணிகக்  கப்பல் ஒன்று வழிதவறி அந்த நாட்டுக்கு வந்து நின்றது..நாகர் வாழும் நாடு என்று அஞ்சி நடுங்கிய பயணிகள் அவர்கள் மத்தியில் சாதுவனைக் கண்டு மிகுந்த ஆச்சரியப் பட்டனர்.அச்சத்தையும் விடுத்தனர்.
நாகர்நாட்டு மக்கள் சாதுவனுக்கு பிரியா விடை கொடுத்தனர்.அவனுக்குத் திரண்ட செல்வத்தையும் கொடுத்து அந்தக் கப்பலில் அனு ப்பி வைத்தனர்.  
 தான் எப்போதோ விளையாட்டாகக் கற்றமொழிதன் உயிரைக் காத்தது மட்டுமல்லாமல்  ஒரு இனத்தையே நாகரிகமாக மாற்றி          
அமைக்கவும் காரணமாக அமைந்ததை உணர்ந்து வியந்தான்.நாகரிகமற்ற மக்களாயினும் தங்கள் மொழி . மீது அவர்கள் கொண்டிருந்த பற்றும் அன்பும் மதிப்பும் கண்டு மகிழ்ந்தான்.நாகரிகத்தின் உச்சியில் இருக்கும் நாம் எந்த அளவுக்கு நம் மொழியின் மீது பற்றுக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை இந்தக் கதை மணிமேகலை என்ற நூல் மூலம் நமக்கு அறிவிக்கிறது .நம் தாய்மொழியை நம் உயிரினும் மேலாக மதிக்கவேண்டும் என்ற எண்ணத்தை நம் உள்ளத்தில் தோற்றுவிக்கிறது.

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 4 ஏப்ரல், 2012

82. நல்ல நூல்களைப் படி


ஓர்  ஊரில் அண்ணன் தம்பி இருவர் வாழ்ந்து வந்தனர்.இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அண்ணன் பெயர் துந்துகாரி.தம்பியின் பெயர் கோகர்ணன்.பெற்றோர் இல்லாத இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக அந்த இல்லத்தில் வாழ்ந்து வந்தனர்.அண்ணன் துந்துகாரி பல தீய காரியங்கள் செய்து பணம் சம்பாதித்து வந்தான்.தம்பி கோகர்ணன் மிகவும் நல்லவன். இறைவனிடம்  பக்தி உள்ளவன்.நல்ல வழியில் பணம் சம்பாதித்து தான தர்மங்கள் செய்து திருப்தியாக வாழ்ந்து வந்தான்.

ஒருநாள் தீயவனான துந்துகாரி தீயவர்களால் கொல்லப்பட்டான்.அண்ணன் இறந்ததற்காக மிகவும் வருந்தினான் கோகர்ணன்.அண்ணனது ஈமக்கிரியைகளை காசியில் உள்ள கயா என்னும் புனித க்ஷேத்திரத்தில் செய்து முடித்தான். இதனால் அண்ணனின் ஆத்மா நற்கதி அடையும் என நம்பினான். மீண்டும் தன் இல்லம் திரும்பி தன் தினசரி வாழ்க்கையைத் தொடங்கினான்.
                             ஒருநாள் இரவு தன் கடமைகளை முடித்துவிட்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான் கோகர்ணன்.நள்ளிரவில் ஏதோ ஒலி கேட்கவேதிடுக்கிட்டுக் கண் விழித்தான்.அவன்எதிரே  முற்றத்தில் பயங்கரமான எருமை ஒன்று நின்றிருந்தது.மிகவும் அஞ்சிய கோகர்ணன் இறைவன் நாமாவை உச்சரிக்கத் தொடங்கினான்.மனதில் இறைவனை நினைத்துக் கொண்டு எதிரே நின்ற உருவத்தைப் பார்த்துக் கேட்டான்.
"ஏய், யார் நீ? இங்கு ஏன் வந்தாய்?" உடனே அந்த கருத்த எருமை பேசிற்று.
"கோகர்ணா, நாந்தானடா உன் அண்ணன் துந்துகாரி.பாபாத்மாவான நான் இந்த பேய் உருவத்தில் அலைகிறேன். நான் செய்த பாபங்களை நினைத்து இப்போது வருந்துகிறேன்.நான் விமோசனமடைய நீதான் உதவ வேண்டும்."
"உனக்காகத் தானே நான் கயா சென்று கிரியைகள் செய்தேன்."
"அதெல்லாம் நான் செய்த பாவத்திற்குப் போதாது.நான் மகா பாவி.வேறு ஏதேனும்வழி செய்து என் பிறவி மோட்சமடைய 
செய்வாய்."
"சரி.ஏதேனும் வழி கிடைக்குமா என்று விசாரிக்கிறேன்.நீ நாளை வா. இப்போது இங்கிருந்து செல்."
தம்பியின் ஆறுதலான சொற்களைக் கேட்டு அங்கிருந்து அந்த எருமை உருவம் மறைந்தது.  
           மறுநாள் காலை கோகர்ணன் மனதில் பக்தியுடன் சூரிய பகவானை வேண்டிக் கொண்டான்.அவனது பக்தியை மெச்சிய சூரிய பகவானும் அவன் முன் தோன்றினார்.அவரை வணங்கிய கோகர்ணன் தன் அண்ணனின் நிலையைக் கூறி அவனது விமோசனத்திற்கு வழி கேட்டான்.சூரிய பகவானும் "கோகர்ணா, உன் அண்ணன் மீது நீ கொண்டுள்ள அன்புக்கு மெச்சினேன்.
உன் சகோதரனின் இந்தப் பேயுருவம் நீங்க வேண்டுமெனில் நீ பாகவத ப்ரவசனம் செய்.அதை உன் அண்ணன் கேட்கட்டும்.
அவனது பிறவி முடிந்து அவன் மோட்சம் செல்வான்."என்று கூறி மறைந்தார்.   
            அவர் கூறியபடியே கோகர்ணன் சப்தாஹா என்று சொல்லப்படும் ஏழு நாள் படிப்பைத் தொடங்கினான்.பாகவதக் கதையை எழுநாட்களுக்குள் படித்து முடிப்பதே சப்தாஹா என்று சொல்லப்படும்.அந்தக் கதையைக் கேட்க பலரும் அந்த இல்லத்தில் கூடினர்.
அந்த இடத்திற்கு பேயுருவில் துந்துகாரியும் வந்தான்.அந்தச் சிறு வீட்டில் அவனுக்கு அமர்ந்து கதை கேட்க இடம் கிடைக்கவில்லை. காற்று உருவில் அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தான்.இதைக் கவனித்தான் கோகர்ணன்.ஒரு மூங்கில் கழியைக் கொண்டு வந்து ஒரு மூலையில் சாய்த்து வைத்தான் அந்தக் கழியில் ஏழு கணுக்கள் இருந்தன.அதனுள் புகுந்து கொண்டு கதை கேட்குமாறு கூறினான் கோகர்ணா.துந்துகாரியும் அதேபோல் அந்த மூங்கில் உள்ளே அமர்ந்து கொண்டான்.
            கதை தொடங்கியது.துந்துகாரி பக்தியுடன் அதைக் கேட்டான்.முதல்நாள் கதை முடிந்தவுடன் முதல் கணுவாக இருந்த முடிச்சு உடைந்தது.இதே போல் ஏழு நாட்களும் துந்துகாரி கதை கேட்டு முடிந்ததும் அந்த மூங்கிலில் இருந்த ஏழு முடிச்சுகளும் முரிந்து துந்துகாரி வெளியே வந்து நின்றான்.அவன் கழுத்தில் துளசி மாலையுடன் கரம் கூப்பி நின்ற காட்சியைக் கண்டு கோகர்ணா இறைவனுக்கு நன்றி தெரிவித்தான்.அதே சமயம் அங்கு வந்த விஷ்ணு தூதர்கள் தங்களின் புஷ்பக விமானத்தில் அவனை அமருமாறு கேட்டுக் கொண்டனர்.துந்துகாரி தன் தம்பியை நோக்கி, "தம்பி, கோகர்ணா, நீ சப்தாஹம் என்ற எழுநாள் பாகவதப்ரவசனம் செய்ததால் அதைக் கேட்டு நான் என் பாபத்திலிருந்து விடுபட்டேன்.இதோ விஷ்ணு தூதர்களுடன் நான் வைகுண்டம் செல்கிறேன்.ஸ்ரீமத் பாகவதத்தின் மகிமையே மகிமை." என்றவன் புஷ்பகவிமானத்தில் அமர்ந்து விஷ்ணு தூதர்களுடன் விண்ணில் பறந்து மறைந்தான்.
       ஸ்ரீமத் பாகவதம் என்ற நூலைப் படித்ததாலும் படிப்பதைக் கேட்டதாலும் மனிதருக்கு பாபங்கள் விலகும். நல்ல கதி கிடைக்கும் என்ற உண்மையை இந்தக் கதைமூலம் புரிந்து கொண்டோம். 
       நாம் புரிந்து கொள்ளவேண்டிய செய்தியும் இதிலிருந்து கிடைக்கிறது.நல்ல நூல்களைப் படிப்பதனால் நமக்கு அறிவுடன் நல்ல பண்பும் வளர்கிறது.அதனால் எப்போதும் வள்ளுவர் கூறியபடி,"கற்க கசடறக் கற்க என்பதைப் புரிந்து கொண்டு அதன்படி கற்று அதன்பின் "அதற்குத் தக நிற்க "என்றபடி கற்றதனபடி நடப்போமானால் நாமும் வாழ்வாங்கு வாழ்வோம் என்பதையே இந்தக் கதை மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம் அல்லவா?






 







  

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 18 மார்ச், 2012

நன்றி

கோவை 2 தில்லி என்ற வலைச்சரத்தின் உரிமையாளர் திரு ஆதி வெங்கட் அவர்கள் அளித்த "Liebster Blog" விருதுக்கு நன்றி.
Leibster Blog Award--
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee


ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

சனி, 17 மார்ச், 2012

81- வைரக்கிளி

மரகத நாட்டு மன்னன் மகிபாலன். இவனது மனைவி மாதவி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர்.மூத்தவன் அரசகுமாரன்.அவன் பெயர் ராஜசிம்மன். அரசகுமாரியின் பெயர் ராஜீவி.மரகதநாட்டு சேனாதிபதி மணிவண்ணன் அந்த நாட்டைத் தான் ஆள வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருப்பவன்.அவன்  மகன் மாறவர்மன் இந்த எண்ணத்தைத் தூபம் போட்டு வளர்த்தான்.இருவரும் எப்போதும் இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தனர்.அதற்கும் நேரம் வந்தது.
போர் புரியும் பயிற்சிக்காக சில சிற்றரசர்களுடன் ராஜசிம்மனை போருக்கு அனுப்பினான் மன்னன் மகிபாலன்.அவனுக்குத்   துணையாகத் தன் சேனாதிபதி மணிவண்ணனையும் அனுப்பினான்.சில மாதங்கள் போர்நிகழ்த்திவிட்டு சிலரிடம் தோற்றும் சிலரை வென்றும் நாடு திரும்பிக் கொண்டிருந்தனர் ராஜசிம்மனும் மணிவண்ணனும்.
களைத்துப்போன படைகளுடன் காட்டுவழியே வந்து கொண்டிருந்த ராஜசிம்மனும் அவனது படைகளும் ஒரு இடத்தில் ஓய்வெடுக்கத் தங்கினர்.நடு இரவில் ஒரு அழு குரல் கேட்டு விழித்துக் கொண்ட ராஜசிம்மன் வெளியே வந்து பார்த்தான். சற்றுத் தொலைவில் அந்தக் குரல் கேட்க அதைத் தேடிச் சென்று பார்த்தான். அங்கு வயதான முதியவர் ஒருவர் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அவரிடம் சென்ற அரசகுமாரன் "ஐயா  எதற்காக அழுகிறீர்கள்? உங்களுக்கு ஏற்பட்ட துன்பம் என்ன? எதுவானாலும் தீர்த்து வைக்கிறேன்." என்றான் ஆறுதலாக. அந்தக் கிழவன் அவனிடம் "உன்னால் என் துயரத்தைத் தீர்க்க இயலாதப்பா." என்றான் சலிப்போடு.
"ஐயா, நான் இந்த நாட்டு அரசகுமாரன் என்னால் இயலாதது வேறு யாரால் இயலும்?உங்கள் துயரைக் கண்டிப்பாகத் தீர்ப்பேன்.சொல்லுங்கள்."
"பின்னர் பேச்சு மாறமாட்டாயே? சத்தியம் செய்தால் கூறுகிறேன்."
"சத்தியமாக உங்களின் துயரத்தைத் தீர்த்து வைப்பேன்."என்று அந்தக் கிழவனின் கையில் அடித்துச் சத்தியம் செய்து கொடுத்தான் ராஜசிம்மன்.
கிழவன் மெதுவாகக் கனைத்துக் கொண்டான்."சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாய். மறவாதே."
"சொல்லுங்கள் பெரியவரே"ஆவலுடன் கேட்டான் ராஜசிம்மன்.
"என் முதுமையை மனமுவந்து ஏற்றுக் கொண்டு தங்களின் இளமையை யார் தருவார்களோ அப்போதுதான் எனக்கு இந்தத் துயர் தீரும்.அப்போதுதான் எனக்கு சாப விமோசனம் கிட்டும்.உன்னால் அது முடியாதல்லவா?"
"இல்லை பெரியவரே,நான் கொடுத்த வாக்கை மீறமாட்டேன்.இதோ இப்போதே என் இளமையைத் தங்களுக்குத் தருகிறேன்."
அருகே இருந்த குளத்தில் இருந்து நீரை கைகளால் முகந்து பெரியவர் கைகளில் ஊற்றினான் அரசகுமாரன்.
உடனே அந்த இடத்தில் ஒரு கந்தர்வன் தோன்றினான்.புன்னகையுடன் நின்றவன் "ராஜசிம்மா, எனக்கு சாபவிமோசனம் அளித்தாய்.மிக்க மகிழ்ச்சி.உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் " என்றான் .
"சுவாமி, எனக்குச் சில கடமைகள் இருக்கின்றன. எனவே இப்போது இந்த முதுமை எனக்கு வேண்டாம்.நான் விரும்பும்போது முதுமையை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அருள்புரியுங்கள்."
"அப்படியே ஆகட்டும். இதோ இந்த வைரக்கிளியையும் உனக்குப் பரிசாகத் தருகிறேன்."கிளியைப் பெற்றுக்கொண்ட ராஜசிம்மன் "சுவாமி, இந்தக் கிளியின் ரகசியம் என்ன எனக்குத் தெரிவிக்கமுடியுமா?" என்றான்.
"காலம் வரும்போது தானாகத் தெரியும்.உன் முதுமையும் அப்போது விலகும்.உனக்கு மங்களம் உண்டாகட்டும்."என்று ஆசி கூறி மறைந்தான் அந்த கந்தர்வன்.
கிளியைத் தன் ஆடைக்குள் மறைத்துக் கொண்ட ராஜசிம்மன் தன் கூடாரத்தை நோக்கி வந்துகொண்டிருந்தான்.
அப்போது திடீரென ஒரு கூட்டம் அவன் எதிர்பாராசமயம் அவனை கட்டி ஒரு மலைக் குகையில் அடைத்துவைத்தது. அந்த காரியத்தைச் செய்தவன் மாறவர்மனே.
தன் தந்தைக்கும் தெரியாமல் அவன் இந்த சூழ்ச்சியைச் செய்து விட்டு ஒன்றும் அறியாதவன் போல் அமர்ந்திருந்தான்.மகனைக் காணோம் என்ற செய்தி கேட்டு அரசன் மகிபாலன் துடித்தான்.தன் மகனைக் காணாமல் தவித்தான்.
ஊர் முழுவதும் பறையறிவித்தான்.இளவரசனைப் பற்றி அறிவிப்போருக்கு கேட்பதைக் கொடுப்பதாகக் கூறிய அறிவிப்பைக் கேட்டு மாறவர்மன் மிகவும் மகிழ்ந்தான்.இளவரசனைப் பற்றி அவனுக்குத்தானே தெரியும்.சில நாட்கள் கழித்துத் தானே கண்டு பிடித்ததாக இளவரசனை நேரில் கொண்டுவந்து நிறுத்த முடிவு செய்தான்.அதற்குப் பரிசாக அரசகுமாரி ராஜீவியைதிருமணம் முடித்துத் தரக் கேட்க வேண்டும் என நினைத்திருந்தான்.
குகைக்குள் கட்டப் பட்டிருந்த ராஜசிம்மன் மயக்கம் தெளிந்து கண்விழித்தான். தன் நிலையை உணர்ந்தான்.
எப்படியாவது தப்பிப் போக வழியுண்டா எனத் தேடினான்.ஆனால் கட்டப்பட்ட நிலையில் என்ன செய்வது? சற்று சிந்தித்தான்.அவன் அறிவு வேலை செய்தது.அதன்படி செய்தான்.
 சில நாட்கள் கழிந்தன. நான் எப்படியும் இளவரசனை மீட்டு வருவேன் என்று மன்னன் மகிபாலனிடம் வீர முழக்கம் செய்து புறப்பட்டான் மாறவர்மன். தன் தந்தை மணிவண்ணனிடம் கவலைப் படாமல் இருங்கள். இளவரசனுடன் வருகிறேன். என்று ரகசியமாகச் சொல்லிப் புறப்பட்டான். தான் ராஜசிம்மனைக்  கட்டிப் போட்டிருந்த இடத்திற்கு வேகமாக வந்து சேர்ந்தான் மாறவர்மன்.
குகைக்குள் சென்று  பார்த்தவன் திடுக்கிட்டான்.அங்கே ராஜசிம்மனைக் காணோம்.அவனுக்குப் பதிலாக ஒரு கிழவன் அங்கே கட்டப்பட்டிருந்தான்.அவனை நெருங்கிய மாறவர்மன் கோபமாகப் பேசினான்."டேய், இங்கே இருந்த அரசகுமாரன் எங்கேயடா? நீ எப்படி கட்டுண்டாய்?உண்மையைச் சொல். இல்லையேல் கொன்று விடுவேன்."
கிழவன் நடுங்கியபடியே பேசினான்.
"ஐயா, இங்கே ஒரு வாலிபன் கட்டுண்டிருந்தான். நான் மாடு மேய்த்து வரும்போது"யாராவது வாருங்கள்"என்ற குரல் கேட்டு இந்த குகைக்குள் நுழைந்து பார்த்தேன்.அந்த வாலிபன்"இந்தக் கல்லில் ஒரு நாள் கட்டுண்டிருந்தால் இளமையைப் பெறலாம்" என்றதனால் நானும் இளமைக்கு ஆசைப் பட்டு இப்படி அவனால் கட்டப்பட்டேன். ஆனால் அவன் என்னை ஏமாற்றி விட்டான் என்று இப்போது நான் தெரிந்து கொண்டேன்." 
அவன் மட்டும் ஏமாறவில்லை தானும் ஏமாந்து விட்டோம் என்று புரிந்து கொண்ட மாறவர்மன் கோபத்தோடு ராஜசிம்மனைத் தேடி அங்கிருந்து வேகமாகக் குதிரையை ஓட்டிச் சென்றான்.
கட்டவிழ்த்து விடப்பட்ட கிழவன் நேரே அரண்மனையை நாடிச் சென்றான்.மன்னன் மகிபாலனைச் சந்திக்க என்ன வழி என்று சிந்தித்தான்..தனக்கு சோதிடம் தெரியும் என்று கூறி மன்னன் முன் சென்று நின்றான்.
ஒரு சோதிடம் வல்லானைப் போல் முன்னால் நடந்தவற்றைக் கூறவே மன்னன் அவனை அரண்மனையிலேயே தங்க வைத்துக் கொண்டான்.கிழவனும் தன்னிடமுள்ள வைரக் கிளியை இளவரசிக்குப் பரிசாகக் கொடுத்தான். அந்த வைரக் கிளியைப் பாது காப்பாக வைக்கத் தகுந்த இடம் அரண்மனைதான் எனஎண்ணி ராஜீவிக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டான்.
மன்னனுக்குத் தெரியாமல் தன் தந்தையைச் சந்தித்த மாறவர்மன் நடந்ததை கூறி  அடுத்த நாட்டு மன்னனுடைய உதவியுடன் மகிபாலனுடன் போருக்கு வருவதாக திட்டமிட்டுள்ளதை கூறி படை திரட்ட ரகசியமாகப் புறப்பட்டான்..
இந்த சதியை அறிந்த கிழவன் சோதிடம் சொல்வதுபோல் சேனாதிபதியின் சூழ்ச்சியை மன்னனிடம்  எடுத்துக் கூறினான்.மாறவர்மன் அடுத்த நாட்டுக்கு சென்ற சமயம் மணிவண்ணன் சிறையில் அடைக்கப்பட்டான்.
படை உதவி கேட்ட மாறவர்மன் சூழ்ச்சிக்கு எந்த நாட்டு மன்னனும் இணங்கவில்லை.தோல்வியுடன் நாடு திரும்பியவனுக்குத் தன் தந்தை சிறைப்பட்டதை அறிந்து பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
எல்லாவற்றுக்கும் இங்கிருக்கும் கிழவன்தான் காரணம் இவனை ஒழிக்கவேண்டும் என்று முடிவு செய்தான்.ஒரு சேவகனிடம் ராஜசிம்மன் எழுதியது போல் கடிதம் ஒன்றை எழுதி அதை அரசர் அறியும் வண்ணம் கிழவனிடம் கொடுக்கச் சொன்னான்.அந்தக் கடிதம் என்னவென அறிந்த மன்னர் மகிபாலன் தன் மகனை இந்தக் கிழவன் எங்கோ மறைத்து வைத்துள்ளான் என நினைத்தான்.அதே சமயம் மாறவர்மனும் மன்னனுக்குத் தூபம் போட்டான்.பின்னர் தானே அந்தக் கிழவனை விசாரித்து உண்மையை அறிவதாகக் கூறி கிழவனை சபை நடுவே நிற்க வைத்து உண்மையைக் கூறும்படி கேட்டு கசையால் அடிக்கத் தயாரானான்.
அதே நேரம் வைரக்கிளியுடன் விளையாடிக் கொண்டிருந்த அரசகுமாரி ராஜீவி அதற்குப் பழம் கொடுப்பதற்காக பழத்தை நறுக்க கத்தி அவள்  கையை வெட்டி விட்டது.அதிலிருந்து தெறித்து விழுந்த ரத்தம் வைரக்கிளியின் மீது பட்டவுடன் அங்கே அழகிய ராஜகுமாரன் தோன்றினான்.ராஜீவி திகைப்புடன் நிற்க அவளை அழைத்துக் கொண்டு அரசபை நோக்கி வந்தான் வைரக்கிளியான அரசகுமாரன்.
அதே சமயம் மாறவர்மன் வீசிய கசையைப் பற்றிக் கொண்ட கிழவன் ராஜசிம்மனாக மாறினான்.மகிபாலன் திகைத்தாலும் மகிழ்ச்சியுடன் மகனை அணைத்துக் கொண்டான்.அதே சமயம் அங்கு வந்த வைரக்கிளி வாலிபனும் ராஜீவியும் மன்னனை வணங்கி நின்றனர்.அவர்களைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.வைரக்கிளி யாக இருந்த அந்த இளைஞன் இப்போது பேசினான்.
"மகாராஜா, நான் மச்ச நாட்டு மன்னன். வேட்டையாடும்போது ஒரு கந்தர்வனைக் கண்டேன். அவன் கந்தர்வன் என அறியாது சற்று அவமரியாதையாக நடந்து கொண்டேன்.அதனால் என்னை ஐந்தறிவுள்ள ஜீவன்போல் நடந்து கொண்ட நீ கிளியாகப் போ. என சாபம் கொடுத்தான்.அவனும் பிரம்மாவின் சாபத்தால் பூலோகம் வந்திருந்தான். ஒரு கன்னியின் ரத்தம் என்று என்மேல் படுகிறதோ  அன்றே என் சாபமும் விலகும் எனக் கூறினான். இன்று இளவரசியின் ரத்தம் என்மேல் பட்டதால் என் சாபம் நீங்கியது.அத்துடன் நம் இராஜசிம்மனால் ஏற்றுக் கொள்ளப் பட்ட அந்த கந்தர்வன் பெற்ற  சாபமும் விலகியது." என்று கூறியதைக் கேட்டபோது 
மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.மகிபாலனும் தன் மகளுக்கு ஏற்ற மணாளன் தேடாமலேயே கிடைத்துவிட்டான் என மகிழ்ந்தான்.சூதும் சூழ்ச்சியும் புரிந்த மாறவர்மனையும் அவன் தந்தை மணிவண்ணனையும் நாடு கடத்தும்படி உத்தரவிட்டான்.
நல்லதொரு நாளில் ராஜசிம்மனின் முடிசூட்டு விழாவும் ராஜீவிக்கும் மச்சநாட்டு மன்னனுக்கும் திருமண விழாவும் இனிதே நடந்தேறியது.
யாருக்கும் எந்த சமயத்திலும் பலன் எதிர்பாராது உதவி செய்தால் எத்தகைய பகையையும் வெல்லலாம் என்ற உண்மை ராஜசிம்மனின் வரலாற்றிலிருந்து விளங்கும்.
இதைக் கதையென்று கொள்ளாமல் வாழ்க்கைக்கு தகுந்த ஒரு பாடமாகக் கொள்ளவேண்டும்.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
 
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com

திங்கள், 23 ஜனவரி, 2012

80- பணிவே வெற்றி.

மகாபாரத யுத்தம் தொடங்குவதற்கு பாண்டவரும் கவுரவரும் ஆயத்தமானார்கள்.கவுரவர்களின் அரசனான துரியோதனன் தனது நட்பு நாட்டு மன்னர்களுக்கெல்லாம் தூதனுப்பித் தன் படை வலிமையைப் பெருக்கிக் கொண்டிருந்தான்.பாண்டவரும் தங்களின் படையைப் பெருக்கிக் கொண்டிருந்தனர்.இரண்டு சாராருமே கிருஷ்ணனின் துணையை நாடவேண்டும் எனத் தீர்மானித்தார்கள்.
த்வாரகை மன்னனான கிருஷ்ணனிடம் இருக்கும் பெரும் படை தனக்குத் துணையாக வந்தால் நமக்கே வெற்றி நிச்சயம் எனக் கூறினான் துரியோதனன்.சகுனி மாமாவும்  இதை ஆமோதித்தார..ஆனால் பாண்டவரின் நண்பனாக இருக்கும் கிருஷ்ணன் அவர்களுக்கு உதவாமல் கவுரவர்களான தங்களுக்கு உதவுவானா, என சந்தேகத்தைக் கிளப்பிவிட்டார். ஆனாலும் துரியோதனன் தானே சென்று கிருஷ்ணனின் படையைக் கேட்பதாகக் கூறிப் புறப்பட்டான்.
இதே நோக்கத்தோடு துவாரகையை  நோக்கி வந்து சேர்ந்தான் அர்ச்சுனன். ஆனால் முதலில் அரண்மனையை அணுகியவன் துரியோதனனே. வாயிலில் நின்ற காவலர் துரியோதனனை எந்தத் தடையும் சொல்லாது உள்ளே அனுமதித்தனர். மன்னர் எவர் வந்தாலும் அவரை உடனே உள்ளே அனுமதிக்கவேண்டும் என கண்ணன் கட்டளை இட்டிருந்ததே காரணம்.
மன்னன் என்ற அகந்தையோடு  உள்ளே கம்பீரமாக நுழைந்தான் துரியன்.
உள்ளே மஞ்சத்தில் சயனத்தில் இருந்தான் கண்ணன்.கண்களை மூடிப் படுத்திருந்தவனின் காலருகே ஒரு ஆசனமும் அவனது தலையருகே ஒரு ஆசனமும் இருந்தன. முதலில் காலருகே இருந்த ஆசனத்தில் அமரச் சென்ற துரியோதனன் சற்றே சிந்தித்தான்.இவனோ மாடு மேய்த்தவன். இன்று அரசனாக உள்ளான் இவனது காலடியில் மன்னனான நான் அமர்வதா என நினைத்தான். உடனே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தலைமாட்டில் இருந்த ஆசனத்தில் சென்று அமர்ந்து கொண்டான். கண்ணன் கண்களைத் திறப்பதற்காகக் காத்திருந்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம் அர்ச்சுனன் அங்கு வந்து சேர்ந்தான்.துரியோதனன் தனக்கு முன்பாகவே அங்கு அமர்ந்திருப்பதைப் பார்த்து திகைத்தான். முதலில் வந்த துரியன் கண்ணனிடம் தான்  கேட்க நினைத்ததைக் கேட்டு விட்டால் என்ன செய்வது என்றே திகைத்தான்.

ஆனாலும் நம்பிக்கையோடு இரு கரம் கூப்பி கண்ணனின் காலடியில் நின்று கொண்டு இருந்தான்.சட்டென அப்போதுதான் விழிப்பவன் போல் கண்ணன் கண்களைத் திறந்து மகிழ்ச்சிக் குரலில் வா,வா, அர்ச்சுனா, நலமா உன் அன்னையார் குந்தி தேவியார் நலமா என்று கேட்டபடியே எழுந்து அமர்ந்தான்.படுத்தவரின் கண்களுக்கு அவர் எழுந்ததும் முன்னே இருப்பவர் தானே கண்களில் படுவர்.அந்த வகையில் தன் காலடியில் நின்றிருந்த அர்ச்சுனனைப் பார்த்துக் கேட்டான் கண்ணன்.
அதே சமயம் குரலைக் கனைத்துத் தான் அங்கிருப்பதை  அறிவித்தான் துரியோதனன். உடனே துரியன் பக்கம் திரும்பிய கண்ணன் அடேடே துரியோதன மகாராஜாவா? ஏது இவ்வளவு தூரம். வரவேண்டும் வரவேண்டும்.தாங்கள் என்னைத் தேடி வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.என்று அப்போதுதான் பார்ப்பதுபோல் பேசினான்.
"கிருஷ்ணா, உன்னை சந்திக்க முதலில் வந்தவன் நான்தான். என் விருப்பத்தைத்தான் நீ கேட்கவேண்டும்."
"அப்படியா, ஆனால் நான் முதலில் பார்த்தது அர்ச்சுனனைத்தானே.சரி. உன் விருப்பப்படியே ஆகட்டும்.நீயே சொல். என்னைத்தேடி வந்த காரணம் என்ன?"
"கண்ணா, பாரதப் போரில் உன் உதவி எனக்குத் தேவை.
"அவ்வளவுதானே. சரி அர்ச்சுனா, இப்போது நீ வந்த காரணத்தைக் கூறு.
"பரந்தாமா, நானும் உன் உதவியை நாடியே வந்துள்ளேன்."
"கிருஷ்ணா, அர்ச்சுனனைப் போல் நானும் உனக்கு உறவு முறைதான். எனக்குத்தான் முதல் உரிமை தரவேண்டும் உன்னை முதலில் சந்திக்க வந்தவனும் நான்தான்."
"நீங்கள் இருவருமே எனக்கு வேண்டியவர்கள்தான். துரியோதனா,என்படைவீரர் அனைவரையும் தரட்டுமா? நான் ஒருவனே துணையாக வரட்டுமா?நான் போரில் ஆயுதத்தைக்  கையால் தொடமாட்டேன். இந்த இரண்டு துணையில் ஏது உனக்கு வேண்டும் கேள்."
"கண்ணா, உன் படைவீரர் அனைவரையும் தந்தால் போதுமானது.நீயும் போரில் ஆயுதம் தாங்குவதில்லை என்று கூறியிருப்பதை மறக்காதே."
"உன் விருப்பப்படியே செய்கிறேன். மகிழ்ச்சிதானே."என்ற கண்ணன் துரியோதனனுக்கு உபசாரம் செய்து அனுப்பினான். துரியனும் மகிழ்ச்சியுடன் அஸ்தினாபுரம் வந்து சேர்ந்தான்.
அதன்பின் தன் நண்பனும் மைத்துனனுமான அர்ச்சுனனிடம் "அர்ச்சுனா, போரில் ஆயுதம் எடுக்காத நான் உனக்குத் துணையாக வருவது உனக்கு மகிழ்ச்சியா?இதை நீ விரும்புகிறாயா?"என்றான் கண்ணன்.
"பரந்தாமா, நீ எங்களுக்குத் துணையாக இருந்தாலே போதும்.உன்துணை ஒன்றிருந்தால் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.எங்கே துரியோதனன் உன்னைத் தனக்குத் துணையாகக் கேட்டு விடுவானோ என நான் அஞ்சினேன்.நல்லவேளையாக அவன் உன்னைக் கேட்காமல் படையை மட்டும் கேட்டான்."
பின்னர் மகாபாரதப் போரில் கண்ணன் சாரதியாக இருந்து   ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்    அர்ச்சுனனைக் காத்து வந்தான். போர் பதினெட்டு நாட்கள் நடந்தன.
எல்லாப் பகைவரையும் முறியடித்து பாண்டவர் வெற்றி பெற்று தருமன் மீண்டும் அஸ்தினாபுரத்திற்கு அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.
மூல முதல்வனான கண்ணனின் துணையும், அர்ச்சுனனின் பணிவுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று தெரிகிறதல்லவா.வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் நமது பணிவே நமக்குப் பெரும் துணையாக இருக்கும் என்பதை நாம் இதிகாசக் கதைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

சனி, 14 ஜனவரி, 2012

vaazhththu

அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

79- ஏகாதசி மகிமை.

ஏகாதசி என்பது  பதினொன்று என்பதைக் குறிக்கும். பவுர்ணமியிலிருந்தும்அமாவாசையிலிருந்தும்  வரும் பதினோராம் நாளையே ஏகாதசி என்று குறிப்பிடுவர். இந்த நாள் மாதத்தில் இருமுறை வருவது.இந்த நாள் மகாவிஷ்ணுவிற்கு உகந்தநாளாகக் கூறுவர்.இந்தநாள் முழுவதும் உபவாசமிருந்தும் இறைவனைப் பாடியும் பஜனை செய்தும்  இறைவனின் நினைவில் கழிப்பார்கள்.இறைவனுக்கு அருகாமையில் என்பதுதான் இதன் பொருள்.
மறுநாள் துவாதசி. அதிகாலையில் எழுந்து பூஜை நிவேதனம் முதலியன முடித்து அதிதிகளுக்கு அன்னமிட்டுப் பின் உண்பார்கள்.இந்த விரதம் சைவ வைணவர்களிடையே கடைப்பிடிக்கப் பட்டு வந்தது.பலருக்கும் ஏகாதசி விரதம் பற்றித் தெரியாதிருந்தது.
ஆனால் மன்னனான அம்பரீஷன் முனிவர் மூலமாக ஏகாதசி விரதத்தைப பற்றித் தெரிந்து கொண்டான்.இந்த விரதத்தை  விவரம் தெரிந்த நாளிலிருந்து கடைப்பிடித்து வந்தான்.
பல ஆண்டுகளாக ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று இரவு உண்ணாமல் மறுநாள் ஏகாதசி முழுநாளும் உபவாசமிருந்து அதற்கு மறுநாள் துவாதசி அன்று பூஜை முடித்து அதிதிகளுக்கு அன்னமிட்டுப் பின் உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
உபவாசம் என்றசொல்லுக்கே இறைவனின் அருகிருத்தல் என்றே பொருள். அதன்படி எப்போதும் இறை தியானத்தில் இருந்து ஹரியை வழிபட்டு வந்தான் அம்பரீஷன். 
இதனால் ஹரியின் அன்புக்குப் பாத்திரமானவனானான்.
ஒருமுறை ஏகாதசி விரதமிருந்த அம்பரீஷன் துவாதசி பாரணைக்குத் தயாராக இருந்தான்.ஏகாதசி உபவாசத்திற்குப் பின் உணவு உண்பதற்குப் பாரணை என்று பெயர்.அச்சமயம் துர்வாச முனிவர் தன் சீடர்களுடன் அரண்மனைக்குள் நுழைந்தார்.முனிவரைப் பார்த்த அம்பரீஷன் மனம் மிக மகிழ்ந்தான்.அன்புடன் அவரை வரவேற்று உபசாரங்கள் செய்தான்.
"வரவேண்டும் சுவாமி, தாங்கள் என் குடிசைக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி"
கம்பீரமாக ஆசனத்தில் அமர்ந்த முனிவர்,"அம்பரீஷா, இன்று என்ன திதி தெரியுமல்லவா?" என்றார்.
"ஆம் சுவாமி, இன்று துவாதசி திதி. அடியேனுடன் தாங்கள் பாரணைக்கு எழுந்தருள வேண்டும்."என்று மிகுந்த வினயத்துடன் கேட்டுக் கொண்டான் அம்பரீஷன்.
"அதற்காகத்தான் வந்துள்ளேன்.சற்றுப்பொறு யமுனையில் நீராடிவிட்டு வருகிறேன்."
"தங்கள் சித்தம் சுவாமி அடியேன் காத்திருக்கிறேன்."துர்வாசர் சீடர்கள் புடைசூழ யமுனைக்குச் சென்றார்.
வெகுநேரம் வரை அம்பரீஷன் காத்திருந்தான்.அவனுடன் சேர்ந்து அந்தணர்களும் காத்திருந்தனர்.நீராடச் சென்ற முனிவர் வரவில்லை.
இன்னும் சற்று நேரத்தில் துவாதசி திதி கழிந்து விடும்.அதற்குள் பாரணை முடிக்கவேண்டும் இல்லையேல் ஏகாதசி விரதம் தவறிவிடும்.
என்ன செய்வது என்று புரியாமல் அனைவரும் திகைத்துக் கொண்டு இருந்தனர்.
துர்வாசர் வராமல் பாரணை செய்வதும் தவறு.அந்தணர்களிடம் ஆலோசனை கேட்டான் அம்பரீஷன்.துவாதசி கழிய இன்னும் சிறிது நேரமே உள்ளதால் அந்த நேரத்திற்குள் சிறிது துளசி தீர்த்தம் உட்கொண்டால் பாரணை செய்த மாதிரியாகிவிடும். முனிவர் வந்தபின் அவருடன் உணவு உட்கொள்ளலாம்.என்றதால் வேறு வழியின்றி துளசி தீர்த்தம் பருகி விரதத்தை முடித்தனர்.
இவ்வாறு உட்கொண்டதால் உணவு உண்டதாகவும் கொள்ளலாம் பட்டினியாக இருப்பதாகவும் கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு முனிவருக்காகக் காத்திருந்தான் அம்பரீஷன்.
இச்செய்தியை அறிந்தார் துர்வாசர்.மிகுந்த கோபமடைந்தார்.
"அம்பரீஷா, என்னை பாரணை செய்ய அழைத்து விட்டு என்னை விடுத்து நீ பாரணை செய்தது மிகுந்த தவறு. இதற்கான தண்டனையை நீ அனுபவித்தே ஆகவேண்டும்." என்றார் சினத்துடன்.அம்பரீஷன் அஞ்சி நடுங்கினான். மிகுந்த பணிவுடன் பேசினான்."சுவாமி, துவாதசி திதி போய்விடுமே என்று சிறிது நீர் மட்டுமே பருகினேன்.தயவு செய்து உணவு உண்ண வாருங்கள். அனைவரும் காத்திருக்கிறோம்."என்றவனைக் கடுமையாகப் பார்த்தார் முனிவர்.
"நீ நீர் பருகியது கூடத் தவறுதான். அதுவே பாரணை செய்ததற்கு ஒப்பாகும்.மகரிஷியான என்னை அவமதித்து விட்டாய்." 
"முனி சிரேஷ்டரே . மன்னியுங்கள்.தயவு செய்து கோபம் தணியுங்கள்." என்று கால்களில் பணிந்த அம்பரீஷனை உதறித் தள்ளினார்.
"இதோ நான் விடுக்கும் இந்த அக்கினிப் பிழம்பு உன்னைச் சுட்டெரிக்கட்டும்." என்றவாறு மந்திரம் ஜபிக்க அதிலிருந்து உண்டான ஒரு தீப் பிழம்பு அம்பரீஷனை நோக்கி வந்தது.
ஹரியிடம் மாறாத பக்தி கொண்டவனும் ஏகாதசி விரதத்தை மிகவும் கடுமையாக கடைப்பிடித்துவந்தவனுமான அம்பரீஷன் தன் இரு கரங்களைக் கூப்பி நாராயணனைத் துதிக்க, அவரது ஸ்ரீசக்கரம் அம்பரீஷனைக் காத்தது.அத்துடன் தீப்பிழம்பையும் அழித்துவிட்டு 
அதனை ஏவிய துர்வாசரைத் துரத்தவே முனிவர் ஓடினார்.தன்னைத் துரத்திய ஸ்ரீசக்ரத்தின் கோபத்திலிருந்து தப்பிக்க நேரே பிரம்மாவின் சத்யலோகம் சென்றார்.அவரோ" ஸ்ரீ சக்ரத்தைத் தடுக்க என்னால் ஆகாது.நேரே கைலாயம் செல்" எனக் கூறி அனுப்ப முனிவர் சிவனை நாடிச் சென்றார்.கைலாசபதியும் தன்னால் ஆகாது" நீ ஹரியிடமே செல்" எனக் கூற முனிவர் வைகுண்டம் வந்து ஹரியின் காலில் பணிந்தார்.
"பிரபோ, அபயம்,"என்று அபயக் குரல் கொடுத்துக் கதறினார்.நாராயணன் புன்னகைத்தான்.
"துர்வாசரே, ஏனிந்த பதற்றம்? என்ன நடந்தது?" மாயக் கண்ணனல்லவா, ஒன்றும் அறியாதவர் போலக் கேட்டார்.
"பிரபோ, என்னைக்  காப்பாற்றுங்கள். தங்களின் ஸ்ரீ சக்ரம் என்னைத் துரத்துகிறது. தாங்கள்தான் அதைத் தடுத்து நிறுத்தவேண்டும்"
"துர்வாசரே, இது என் பக்தன் மீது நீர் கொண்ட கோபத்தின் மொத்த உரு.இதைத் தடுக்க என் பக்தன் ஒருவனால் மட்டுமே முடியும். அவனிடமே சரணடைவீர்."என்றவர் கபடமாகச் சிரித்தார்.
துர்வாசர் மீண்டும் அம்பரீஷனிடமே ஓடிவந்தார்.
"அம்பரீஷா, ஏகாதசி விரதத்தின் மகிமையும் பெருமையும்  அறியாமல் உன்னைச் சபித்து விட்டேன்.உன் பக்தியையும் பரமாத்மா உன் மீது கொண்டுள்ள அன்பையும் புரிந்து கொண்டேன்.இந்தஸ்ரீசக்ரத்தின் வெப்பத்திலிருந்து என்னைக் காப்பாற்று என வேண்டிக்கொண்டார். 
தன் முன்னே நின்ற துர்வாசரை அன்புடன் பார்த்த அம்பரீஷன்,"சுவாமி, நான் செய்ததும் தவறுதான்.என்னையும் தாங்கள் மன்னிக்க வேண்டும்." என்றவன் தன் கரங்களைக் கூப்பி நாராயணனை த்யானம் செய்தான். .
"பரந்தாமா, பக்தவத்சலா, இந்த அடியவனைக் காக்கும் பொருட்டு என் இல்லம் வந்தது நான் செய்த பெரும் பாக்கியம்.தயவு செய்து அதிதியாக வந்த முனிவரைக் காத்து ரட்சிக்க வேண்டும்."என்று மனமுருக வேண்டினான்.
முனிவரின் எதிரே தீப்பிழம்பாய் நின்ற சக்ரம் மறைந்தது.இதற்குள் ஓராண்டு முடிந்திருந்தது.அதிதியான முனிவருக்கு அன்னமிடாமல் உண்ணக் கூடாது என்று அதுவரை விரதமிருந்து வந்தான் அம்பரீஷன்.இதையறிந்த முனிவரும் மனம் வருந்தி பின் உணவு உண்டு விரதத்தை முடித்துவைத்தார்.

அம்பரீஷன் முனிவருக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவரை அனுப்பி வைத்தான்.
நேரே வைகுண்டம் சென்று நாராயணன் முன் நின்றார் மகரிஷி."நாராயணா, ஏனிந்த விளையாட்டு?தங்களின் சக்கரத்தைத் தங்களால்  தடுத்து நிறுத்த இயலாதா?என்னை இப்படி சோதிக்கலாமா?"
"துர்வாசரே, நீர் அம்பரீஷனை சோதிக்கலாமா?துவாதசி முடிந்து விடும் என்று தெரிந்தும் நீர் சரியான நேரத்திற்குச் செல்லாமல் காலம் கடத்தியது தவறல்லவா?"
"இது ஏன் நடந்தது என்று எனக்கே தெரியவில்லை சுவாமி."
"கலங்காதீர். அம்பரீஷன் மூலமாக ஏகாதசி மகிமையை உலகுக்கு உணர்த்தவே இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தினேன்.உம்மால்  அம்பரீஷன் பெருமையும் உயர்ந்தது.
"தங்களின் இந்த விளையாட்டுக்கு நான் ஒரு கருவியாக இருக்க நேர்ந்ததை அறிந்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன் பிரபோ"
என்று நாராயணனை வணங்கி விடை பெற்று வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டார் துர்வாசர்.
ஏகாதசி விரதம் இருந்து இறைவனை வணங்குவது என்பது ஆன்மீக வழியைக்  காட்டும் என்றாலும் அது ஆரோக்யத்திற்கான வழி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.உபவாசம் உடலை  மட்டுமல்ல உள்ளத்தையும் பண்படுத்தும் என்பதையே நம் முன்னோர் சொன்ன வாழ்க்கை முறை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.










ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

சனி, 31 டிசம்பர், 2011

புத்தாண்டு வாழ்த்து.

பாட்டி சொல்லும் கதைகளின் வாசகர்களுக்கும் விமரிசித்தவர்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.எல்லா நலன்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்தும் உங்களின் அன்புச் சகோதரி
ருக்மணி சேஷசாயி.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

வியாழன், 15 டிசம்பர், 2011

78- புண்ணியத்தின் பலன்-

ஒரு கிராமத்தில் சாம்பசிவம் என்ற ஒரு அந்தணர் வசித்து வ்ந்தார். சிறு வயது முதலே வேதம் புராணம் முதலிய சாஸ்திரங்கள் பலவும் கற்று சிறந்த மனிதராய் திகழ்ந்தார்.அவர் எவ்வளவுதான் கற்றவராகவும் மற்றவருக்கு உபதேசிப்பவராகவும் இருந்தாலும் அந்த ஊரில் அவருக்கு மரியாதை இருந்ததே ஒழிய செல்வத்தைக் கொடுப்பவர் யாருமில்லை.
அவர் செய்யும் தொழிலுக்கு ஏற்றபடி செல்வத்தைக் கிள்ளிக் கொடுத்தார்களே அன்றி அள்ளிக் கொடுக்கவில்லை.அதனால் நிறைந்த செல்வத்தை அவரால் சேர்க்க இயலவில்லை.
அவரது மனைவியும் இவரை கையாலாகாதவர் என ஏளனமாகப் பேசி வந்தாள்.
அதே ஊரில் தனபாலன் என்ற ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் பெயருக்கு ஏற்றசெல்வ வளம் மிக்கவராகத் திகழ்ந்தார்.அவரது நிலையைச் சொல்லிக் காட்டி சாம்பசிவத்தின் மனைவி செல்வத்தைச் சேர்க்கும் வழியைப் பின்பற்றும்படி கூறிவந்தாள்.
அதனால் சாம்பசிவம் அடுத்த ஊருக்குச் சென்று பணம் சம்பாதித்து வருவதாகக் கூறிப்  புறப்பட்டார்.
அதேநாளில் தனபாலனும் தன் வியாபாரத்தின் நிமித்தமாகத் தன் வண்டியில் ஏறிக்கொண்டு அடுத்த ஊருக்குப் புறப்பட்டார்.இருவரும் ஒரே பாதையில் போய்க்கொண்டு இருந்தனர்.

தனபாலனின் வில் வண்டி ஜல்ஜல் என்று ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் சாம்பசிவமோ வேர்க்கவிறு விறுக்க நடந்து போய்க்கொண்டு இருந்தார்.
இந்த இருவரின் நிலையையும் வைகுண்டத்திலிருந்த மகாலட்சுமி  தாயார் பார்த்தாள். பின்அருகே சயனத்திலிருந்த வைகுண்ட நாயகனான நாராயணனைப் பார்த்தாள்.
கண்களை மூடிப் படுத்திருந்த அந்த மாயக் கண்ணன் புன்னகை புரிந்தார்.
அவரது புன்னகையைக் கண்டு பொறுக்காத லக்ஷ்மி "சுவாமி, இது என்ன அநீதி. சதா வேதம் ஓதிக்கொண்டு உங்களையே ஸ்மரித்துக் கொண்டு இருக்கும் இந்த அந்தணருக்கு ஏன் இந்த நிலை?அவருக்கு செல்வ வளத்தைத் தரக்கூடாதா?"என்றாள் சற்றே கோபத்துடன்.
அதே புன்னகையுடன் நாராயணர்"என்ன லக்ஷ்மி நீதானே தனத்துக்கு அதிபதி?செல்வத்தை அள்ளிக் கொடுக்கவேண்டியதுதானே?" என்றார் கள்ளச் சிரிப்போடு.
"நானே கொடுக்கிறேன் சுவாமி" என்றவளைத் தடுத்தார் நாராயணர்.
"லக்ஷ்மி, அவனுக்கு இந்த ஜன்மாவில் செல்வத்தை அனுபவிக்கும் பேறு இல்லை.நீ கொடுத்தாலும் அதை அவன் அனுபவிக்க மாட்டான்."
"கொடுப்பவள் தனலட்சுமி சுவாமி.அவனுக்கு செல்வம் எப்படி சேருகிறது என்று பாருங்கள்."என்றவளைப் பார்த்துப் புன்னகைத்த நாராயணர்,
"சரி. உன் விருப்பப் படியே அவனுக்கு செல்வம் கொடு. ஆனால்  இரண்டு முறைதான் கொடுக்கவேண்டும்." என்று அனுமதியளித்தார்.
மகாலக்ஷ்மியும் மிகவும் மகிழ்ச்சியுடன் தன் கையிலிருந்து ஒரு பொன் மூட்டையை அந்த அந்தணர் சாம்பசிவம் நடக்கும் வழியில் போட்டாள். எப்படிப்பணம் சம்பாதிப்பது என்ற எண்ணத்துடன் போய்க் கொண்டிருந்த சாம்பசிவத்துக்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.நமது ஐம்புலன்களும் நன்றாக இருக்கும் போதே நம்மால் விரைவாக நடக்க இயலவில்லையே கண்ணில்லாதவர்கள் எப்படி நடப்பார்கள்? நாமும் கண்ணில்லாமல் நடந்து பார்ப்போம் என்ற எண்ணத்துடன் தன் இரு கண்களையும் மூடிக்கொண்டு நடந்தான் சாம்பசிவம்.
 
அதே சமயம் தன் கையிலிருந்த பொன் மூட்டையை அவன் முன் போட்டாள் மகாலட்சுமி.கண்களை மூடிக்கொண்டு நடந்த சாம்பசிவம் அந்த மூட்டையைத் தாண்டிச் சென்று தன் கண்களைத் திறந்தான். "அப்பாடா, கண்ணில்லாமல்நடப்பது  ரொம்ப கஷ்டம்தான். ஆண்டவா எனக்கு நல்லபடியாகக் கண் கொடுத்திருக்கும் உனக்கு கோடானு கோடி நன்றிப்பா" என்று இரு கை கூப்பி வணங்கிவிட்டு நடந்தான்.
வைகுண்ட நாராயணன் சிரித்தார்."என்ன தேவி, உன் பக்தன் நீ கொடுத்த தனத்தை ஏற்கவில்லை போலிருக்கிறதே."
"சுவாமி, இன்னொருமுறை முயற்சித்துப் பார்க்கிறேன்."
"சரி.உன் விருப்பம்."என்று அனுமதி அளித்தார் இறைவன்.
இம்முறை அவன் கண்களில் படும்படி அந்த திரவிய மூட்டையை அவன் நடக்கும் பாதையில் போட்டாள் தேவி.
தன் முன் கிடக்கும் அந்த மூட்டையைக் கையில் எடுத்தான் அந்த ஏழை பிராம்மணன்.மகாலட்சுமி மனம் மகிழ்ந்தாள்.
நாராயணனை சற்றே கர்வத்துடன் பார்த்தாள்.இப்போதும் இறைவன் புன்னகைத்தார்.
"லக்ஷ்மி என்ன நடக்கிறது என்று பார்.உன் விருப்பம் நிறைவேறினால் எனக்கும் மகிழ்ச்சியே.என்ன செய்வது.அவன் கர்மபலனை அவன்தான் அனுபவிக்க வேண்டும்."என்றார் பெருமூச்சுடன்.அதேசமயம் கையில் எடுத்த செல்வத்தைப் 
பிரித்துப் பார்த்த சாம்பசிவம் அச்சமும் ஆச்சரியமும் கொண்டான். மக்கள் அதிகம் நடமாடாதஅந்தப்  பாதையில் யார் இந்த மூட்டையைப் போட்டிருப்பார்?யாரேனும் தேடிவருவார்களா என்று அங்கேயே காத்திருந்தான்.

அப்போது சாம்பசிவத்துக்கு முன்னாலேயே அடுத்த ஊர் சென்று  அடைந்த தனபாலன்  தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டு இருந்தான்.அங்கே அமர்ந்திருந்த சாம்பசிவனைப் பார்த்துஏன் இங்கேயே தங்கிவிட்டாய்? என்று  விசாரிப்பதற்காக வண்டியை மெதுவாக விடச் சொன்னான்.தான் தவறவிட்ட திரவியத்தைப் பற்றிக் கேட்கத்தான் வந்துள்ளான் என நினைத்த சாம்பசிவம் தன்னிடமிருந்த மூட்டையைக் கொடுத்து ஐயா, தாங்கள் தவறவிட்ட மூட்டை இதுதானா?நீங்கள் வருவீர்கள் என்றுதான் காத்திருந்தேன். இந்தாருங்கள் உங்கள் செல்வம்" என்று அந்த மூட்டையை தனபாலனிடம் கொடுத்தான். தனபாலனும் அதைப்  பெற்றுக் கொண்டு விரைந்து ஊர் வந்து சேர்ந்தான்.மிகுந்த நல்ல காரியம் செய்து விட்டது  போல் சாம்பசிவனும் மகிழ்ச்சியுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
நாராயணன் "பார்த்தாயா தேவி தனலக்ஷ்மியே கொடுத்தாலும் அந்தசெல்வம் அவனைச் சேரவில்லை பார்.இது அவனது பூர்வ ஜன்மவினை."என்றார் அதே புன்னகையோடு.
இப்போது மகாலட்சுமி நாராயணனைப் பார்த்து "நானே நினைத்தாலும் ஒருவனைச் செல்வந்தனாக ஆக்க முடியாது அவரவர் செய்த புண்ணியங்களும் பாவங்களுமே  அவர்களின் சுக துக்கங்களை முடிவு செய்கின்றன என்பதைப் புரிந்து கொண்டேன் சுவாமி."என்று கூறித  தலைவணங்கி நின்றாள்.
நாமும் எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனை பிறவிகளிலும் நன்மையே நினைப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு வாழவேண்டும்.






--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com