சனி, 29 ஜூன், 2013

பழமொழிக் கதைகள். துஷ்டரைக் கண்டால் தூர விலகு.

ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன.அந்த விலங்குகளைப் பிடிக்க பலரும் அந்தக் காட்டுக்கு வேட்டைக்கு வருவது வழக்கம். ஒருமுறை வேட்டைக்காரன் ஒருவன் அந்தக் காட்டில் ஒரு கூண்டை வைத்துவிட்டுப் போய் விட்டான். அந்தக் கூண்டில் ஒரு புலி மாட்டிக் கொண்டது.

--                 அந்தக் கூண்டில் அகப்பட்ட புலி உறுமிக் கொண்டே நடை பயின்று கொண்டிருந்தது.அப்போது அந்தக் காட்டுவழியே ஒரு வழிப்போக்கன் சென்று கொண்டிருந்தான்.அவனைப் பார்த்து அந்தப் புலி 
"ஐயா, தயவு செய்து என் அருகே வாரும் "என்று அழைத்தது. புலியைக் கண்டு பயந்து தூர விலகிச் சென்றவன் அதன் அழைப்பைக் கேட்டு கூண்டின் அருகே வந்தான். அவனைப் பார்த்து,அந்தப் புலி பரிதாபமாகக் கூறியது.
"ஐயா, எனக்கு மிகவும் வயதாகிவிட்டது.கண்ணும் தெரியவில்லை. இந்த வேட்டைக்காரன்  என்னைப் பிடித்துப் போய் துன்புறுத்துவான். தயவு செய்து என்னை விடுவித்து விட்டுப் பிறகு உங்கள் வழியே போகலாம் ஐயா."
அதன் முகத்தையும் கூர்மையான  அதன் பற்களையும் பார்த்துப்  பயந்த அந்த வழிப்போக்கன்,"ஹூ...ஹூம் நான் மாட்டேன்.நீ துஷ்ட மிருகம். உன்னை வெளியே விட்டால் என்னைக் கொன்று தின்று விடுவாய்."என்று மறுத்தான். தன வழியே போகத் தொடங்கினான்.

அப்போது அந்தப் புலி," ஐயா, நான் சைவமாக மாறி ரொம்ப காலமாயிற்று. இப்போதெல்லாம் நான் மனிதர்களையே தின்பதில்லை. என்னை வெளியே விட்டுப் பாருங்கள் ஐயா.அப்போதுதான் தெரியும் நான் எவ்வளவு நல்லவன் என்று." எனக் கெஞ்சியது.
தயங்கி நன்ற வழிப்போக்கனிடம் அது கெஞ்சியது.மன்றாடியது. "உன்னைத் தின்னமாட்டேன்" என்று சத்தியம் செய்தது. அதன் தவிப்பைப் பார்த்த அந்த வழிப்போக்கன் பாவமாயிருக்கிறதே இந்தப் புலியைப் பார்க்க என எண்ணி அந்தக் கூண்டின் அருகே சென்று அதைத் திறந்து விட்டான்.

என்ன நடக்கும்?வெளியே வந்த புலி "என்ன நண்பரே, நலமா?" என்றா விசாரிக்கும்?

ஒரே பாய்ச்சலில் பாய்ந்து அந்த வழிப்போக்கனைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது. அந்த மனிதன் பயந்து அலறினான்.

"ஏ புலியே, என்னைத் தின்னமாட்டேன் என்று சத்தியம் செய்தாயே,இப்போது கொல்ல  வருகிறாயே,"

"அட அப்பாவி மனிதா,பட்டினியாய் இருப்பவர் முன் உணவு கிடைத்தால் உண்ணாமல் இருப்பது முட்டாள்தனம் அல்லவா? இது தெரியாதா உனக்கு?"

"இதோ பார், நீ செய்வது நியாயம் என்று யாராவது சொன்னால் நான் உனக்கு உணவாகிறேன்."
என்றான் நடுங்கியவாறே.
அந்த சமயம் பார்த்து ஒரு நரி அந்த இடத்துக்கு வந்தது.நரியைப் பார்த்த வழிப்போக்கன்
"இந்த நரியிடம் நியாயம் கேட்போம்" என்றான்.
 புலி "இதுவும் நம் இனத்தைச் சேர்ந்தது. எனக்கு சாதகமாகத்தான் சொல்லும் என எண்ணிக் கொண்டு      
நரியிடம் நியாயம் கேட்க சம்மதித்தது.

அருகே வந்த நரியைப் பார்த்து புலி அதிகாரத்துடன் பேசியது.
"நரியாரே, நீரே நியாயம் சொல்லும்.நான் கூண்டுக்குள் இருந்தேனா, இந்த மனிதன் வெளியே போய்க்கொண்டு இருந்தாரா,"என்று சொல்லும்போது நரி குறுக்கிட்டு, "என்ன என்ன, யார் உள்ளே இருந்தது, யார் வெளியே இருந்தது?" என்று ஒன்றுமே புரியாதது  போல் கேட்டது.

புலி பொறுமையாக மீண்டும் கூறத் தொடங்க, நரி "ஒ..ஹோ.. இந்த மனிதன் கூண்டுக்குள்ளும் நீங்கள் வெளியிலும் இருந்தீர்களா?" என்று வேண்டுமென்றே கூறியது.
புலி பொறுமையிழந்து,உறுமியது.அதைக்கண்டு அஞ்சியது போலப் பாசாங்கு செய்த நரி,
"புலியாரே, மன்னியுங்கள் எனக்கும் வயதாகிவிட்டதால் மறதி அதிகம். சரி தாங்கள் எங்கு இருந்தீர்களோ அங்கு சென்று நின்று சொல்லுங்கள் என்றதும் புலி கூண்டுக்குள் சென்று நின்றது." இதோ பார், நான் இங்குதான் இருந்தேன். இந்த மனிதன்..."என்று நரிக்கு விளக்கமாக சொல்வதில் கவனமாக இருக்கும்போது, நரி மெதுவாக அந்த வழிப்போக்கனிடம்,"ஓய், சீக்கிரம் கூண்டுக் கதவைச் சாத்துமஅய்யா, நிற்கிறீரே"என்று கூறவும் பாய்ந்து சென்று கூண்டுக் கதவைச் சாத்தி விட்டு அப்பாடா என்று பெருமூச்சு விட்டான் அந்த மனிதன்.

அந்தநரி, "துஷ்டரைக் கண்டால் தூர விலகு "என்ற பழமொழியை அறியமாட்டீரா,உங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போங்கள்  ஐயா"என்று சொல்லிவிட்டுக் காட்டுக்குள் ஓடிவிட்டது.

உண்மைதான் அனுபவபூர்வமாக அறிந்து கொண்டேன் என்று சொல்லியவாறே வேகமாக அங்கிருந்து நடந்தான் அந்த மனிதன்.
அறியாமையாலும் அவசரத்தாலும் ஆணவத்தாலும் மீண்டும் கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டதைஎண்ணி உறுமியவாறு நின்றிருந்தது அந்தப் புலி.

நம்  வாழ்க்கையிலும் நாம் இந்தப் பழமொழியை மறவாமல் இருந்தால் பல துன்பங்கள் நம்மை அணுகாது நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

செவ்வாய், 11 ஜூன், 2013

சிற்றுளியும் மலை பிளக்கும்.--- திருக்குறள் கதைகள்.


                    மகேந்திரன் மச்ச நாட்டு மன்னன். அவனது நாட்டுக்கு அருகாமையில் உள்ள நாடு மருத நாடு
மருதநாட்டு மன்னன் சுரோசனன். மருத நாடு படைபலம் கொண்டது. ஆனால் மச்சநாடு அந்த அளவுக்கு படை பலம் கொண்டதல்ல.இருப்பினும் மகேந்திரன் மிகவும் பேராசை கொண்டவனாக இருந்தபடியால் மருத நாட்டை வெல்லவேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தான். அதனால் அடிக்கடி சுரோசனன் மீது படையெடுத்து வந்தான்.. தோல்வியடைந்தபோதும் மீண்டும் மீண்டும் மருத நாட்டின் மீது படைஎடுத்தவண்ணம் இருந்தான்.
                     சுரோசனனின் நாடும் பெரிது படையும் பெரிது. அதனால் மகேந்திரன் தோல்வியடைந்த வண்ணமே இருந்தான்.
ஒருமுறை ஒற்றர் மூலம் மகேந்திரன் மீண்டும் படையெடுக்கப் போவதை அறிந்த சுரோசனனின் மதியூக மந்திரி மகிபாலர் மன்னனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
"மன்னா, மகேந்திரன் மீண்டும் படையெடுக்கப் போகிறானாம். நமது படைகளைச் சற்று சீரமைக்கவேண்டும். கட்டளையிடுங்கள்" என்றார். சுரோசனன் சிரித்தான்."மந்திரியாரே, எத்தனை முறை அவன் படையெடுத்தாலும் அவனால் நம்மை வெல்ல இயலாது.நமது படைக்குமுன் அவன் படை எம்மாத்திரம்?"
"அப்படி அலட்சியமாக இருக்கக் கூடாது மன்னா,நமது வீரர்கள் போரிட்டுக் களைத்திருப்பர் என்றுதான் மீண்டும் உடனே  படையெடுத்து வருகிறான். நமது குதிரைப் படைதான் நமது வெற்றிக்குக் காரணம்.குதிரைகளும்  நமது படையில் அதிகம்.அவை பலமுறை போரிட்டதால்  கால்களிலுள்ள குளம்புகளில் ஆணிகள் தேய்ந்து போய் விட்டன.அவற்றிற்கு லாடம் அடிக்கவேண்டும்.அப்போதுதான் நம்மால் படை நடத்த முடியும்."என்றார் பணிவோடு.

ஆனால் சுரோசனன்,"இப்போது அதற்கு அவசரமில்லை. மகேந்திரனின் படையை வெற்றிகொண்டு  துரத்திய பிறகு பார்த்துக் கொள்ளலாம்." என்று அலட்சியமாகக் கூறிவிட்டு அந்தப்புரம் சென்று விட்டான்.
சில நாட்களில் மகேந்திரன் மீண்டும் படையெடுத்தான் இரு மன்னர்களும் தங்கள் படைகளுடன் புறப்பட்டனர்.சுரோசனன் புன்னகையுடன் தன குதிரைப்படையை நடத்திச் சென்றான்.திடீரென்று படையிலிருந்த குதிரைகள் கீழே விழுந்தன சில சரியாக ஓட முடியாமல் தடுமாறின மகேந்திரனின் படை சிறிதானாலும் எல்லா வகையான பராமரிப்பும் செய்யப்பட்டிருந்தன குதிரைகள் லாடம் அடிக்கப்பட்டு நன்கு ஓய்வெடுத்து போருக்குத் தயாராக சிலிர்த்துக் கொண்டு நின்றிருந்தன.ஆனால் சுரோசனன் படையோபெரியதாக இருந்தாலும்  போதிய பராமரிப்பு இன்மையால் பாதிக்குமேல் படுத்து விட்டன. மன்னன் சுரோசணனும் அச்சமும் சோர்வும் அடைந்துவிட்டான். தக்கதருணம் பார்த்து மகேந்திரன் சுரோசனனையும் மந்திரி மகிபாலரையும் கைது செய்து சிறையில் அடைத்தான்.
இப்போது இருவரும் மச்சனாட்டுச் சிறையில் இருந்தனர் 

மந்திரியின் சொல்லைக் கேளாததால்தான் தனக்கு இந்த நிலை வந்ததென்று வருந்திப் பேசினான் சுரோசனன். அப்போது மகிபாலர்"மன்னா, சிறிய உளிஎன்று நினைப்பது தவறு, அதுதான் பெரிய மலையைப் பிளக்கிறது. மேலும் ஆணிதானே அடிக்கவேண்டும் பிறகு செய்யலாம் என்று நினைத்ததால்தான் போரில் தோற்கும் நிலை வந்தது.படை பெரிதாயிருந்தும் தக்க தருணத்தில் தேவையான பராமரிப்பைச் செய்யாததால்தான் தங்களுக்கு இந்த நிலை."என்றபோது மன்னனுக்குப் புத்தி வந்தது. வள்ளுவப் பெருந்தகையின குறளும்   நினைவுக்கு வந்தது.
                                          

                                          "வருமுன்னர்  காவாதான்   வாழ்க்கை எரிமுன்னர்
                                            வைத்தூறு    போலக்   கெடும்." 

துன்பம் வருவதற்கு முன்பாகவே அதைத் தடுப்பதற்கேற்ற  முன்னேற்பாடுகளை செய்யத் தவறி யவன்வாழ்க்கை நெருப்பின் முன் வைக்கப்பட்ட வைக்கோல் போரின் நிலையை அடையும்.

எந்த சிறு விஷயமாக இருந்தாலும்  தக்க தருணத்தில்  சரியானபடி கவனிக்கவேண்டும் என்ற உண்மையை சுரோசனன் மட்டுமல்ல் நாமும் புரிந்து கொண்டோம் அல்லவா?


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 24 மே, 2013

. தெய்வம்இகழேல்....

ஒரு ஊரில் ஏழை விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான்.அவனுக்கு ரவிச்சந்திரன் எனப் பெயரிட்டு மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார்.இப்போது அவனுக்கு பனிரெண்டு வயது..அவன் ஆறாம் வகுப்பில் படித்து வந்தான்.

அவன் அம்மாவும் வயல் வேலைக்குச் சென்று பாடுபட்டு சம்பாதித்தார்.அதனால் ரவிக்குக் கஷ்டம் தெரியாமவளர்த்தனர்.அவன் நன்றாகப் படித்து பெரிய வேலைக்குப்போய் உயர்ந்த நிலையில் வாழ வேண்டுமென தினமும் கடவுளை வேண்டிக் கொண்டனர்.

ஆனால் ரவி இவர்களது கஷ்டத்தைப புரிந்து கொள்ளாமல் தான் விரும்பியதையெல்லாம் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டான்.அவன் அம்மாவுக்கு மட்டும்  இவன் கஷ்டம் தெரியாமல் வளர்கிறானே என்று மனம் மிகவும் வேதனைப் பட்டது.அதனால் ரவி ஏதேனும் கேட்டால் போடா போய்க் கடவுளிடம் கேளு அவர் உனக்குத் தருவார்.என்று சொல்லிவிடுவார்.

ஒருநாள் ரவியின் அம்மா அவசரமாக வயலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்.அப்போது ரவி பள்ளிக்குப் புறப்பட பையைத் தூக்கிக் கொண்டவன் அம்மா என்றான். மெதுவாக அவரின் அருகே சென்றவன் "அம்மா, எங்க வகுப்பிலே நிறைய பேரு ஸ்கூலுக்கு சைக்கிளில்தான் வாராங்கம்மா.எனக்கும் சைக்கிள் வாங்கிக் குடும்மா.என்றான்.

"சரிதான், அதெல்லாம் பணக்காரங்களுக்குத்தான் முடியும் நீ படிச்சி பெரிய வேலைக்கு வந்து வாங்கிக்கோ. எங்களாலெல்லாம் முடியாது."
ரவி அப்படியே திண்ணையில் அமர்ந்து கொண்டான்.அவன் கோபத்தைப் பார்த்த அம்மா," ரவி, அந்த சாமிகிட்ட வேண்டிக்  கேளுப்பா, அவரு மனசு வச்சா, உனக்கு எல்லாம் தருவாரு.அழுவாமே ஸ்கூலுக்குப் போ"என்று சமாதானம் செய்துவிட்டுப் போய்விட்டார்.

ரவி மனதில் நினைத்தபடியே நடந்தான்.அம்மா சொல்வதுபோல் சாமி நினைச்சா எல்லாம் தருவாரா?நாந்தான் சாமியைக்  கும்பிடுறதே இல்லையே, இன்னிக்கி கேட்டுப் பார்ப்போம்.என்றபடியே நடந்தான்.

வழியில் ஒரு அம்மன்கோயில் இருந்தது.அந்தக் கொஇயிலுல்லெ நுழைந்து அம்மனின்முன் நின்றான் ரவி.தன கண்களை மூடி "சாமி அம்மா இன்னைக்கி மட்டும் எனக்கு புது சைக்கிளு  ஓட்டக் கெடச்சா, உன்னை நம்புறேன். தெனமும் உன்னைக் கும்பிடுறேன்.இனி என்ன வேணுமின்னாலும் உன்னையே கேட்பேன் என் அப்பா அம்மாவைத் தொந்தரவு செய்ய மாட்டேன்.என் ஆசையை நிறைவேத்தி வெச்சுடு."என்று வேண்டிக் கொண்டு பள்ளிக்கு விரைந்தான்.

வேகமாக நடையைப் போட்டவன் முன்னால்  ஒரு பெரியவர் தடாலென்று சரிந்து விழுந்தார்.சட்டென்று பயந்தபடி நின்று விட்டான் ரவி.அருகே நடந்து போய்க்கொண்டு இருந்தவர்கள் அவரைத் தாங்கிப் பிடித்து நீர் கொடுத்து எழுப்பினர் அவர் மயக்கமாக கிடந்தார். ரவியும் வேடிக்கை பார்த்தபடி அருகே நின்றான்.ஒருவர் மயக்கமாகக் கிடந்தவரின் சட்டைப்பையைப் பார்த்தார். அதில் அவரது வீட்டு விலாசம் இருக்கவே அருகே நின்றிருந்த ரவியை அழைத்து "தம்பி, இந்த விலாசம் தெரியுமா உனக்கு?"என்றதும் ரவி தெரியும் என்று தலையை அசைத்தான்.
"அப்படீன்னா, இந்தா இந்த சைக்கிளை எடுத்துட்டுப்போய் அவங்க வீட்டிலே தாத்தா மயக்கமா இருக்காரு.ஆசுபத்திரிக்குக் கூட்டிட்டுப்போயிருக்காங்கன்னு சொல்லிட்டு வாப்பா"
ரவி மிகுந்த ஆவலோடு அந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு நான்கு தெரு தாண்டிச் சென்றான்.போகும்போதே ஆஹா, புதுசைக்கில் ஓட்டற சொகமே தனிதான்.காலைலேதான் நம்ப அம்மன் கோயிலிலே சைக்கிள் ஓட்டக் கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டேன். இதையே சொந்தமா வேணும்னு கேட்டிருந்தா சாமி குடுத்திருக்குமே.
அம்மா சொன்னது நெசந்தான். இனி எதுவும் வேணுமின்னா நாம சாமியைத்தான் கேக்கோணும்
நம்ம அவ்வையார் தெய்வம் இகழேல்னு சொல்லியிருக்காரே.இனிமே தினமும் கோயிலுக்குப் போயி நல்லாப் படிக்கணும் பெரிய பணக்காரனா ஆகணும்னு வேண்டிக்கணும் என்று முடிவு செய்து கொண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டான் ரவி.










--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayeerukman
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 24 ஏப்ரல், 2013

திருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.

பரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள்  அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில்  

பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அவரின் செல்லப் பெண்.எனவே அவள்  கேட்டதையெல்லாம் 

வாங்கித் தருவார். 

அவளும் தேவையற்றதைக் கேட்காமல் தனக்கு எது தேவையோ அதை மட்டும் கேட்டுப் பெறும் 

குணமுடையவளாக இருந்தாள்.அதனால் இந்த அவளின் நல்ல குணத்தை அறிந்திருந்த அவளின் தந்தை அவள் 

எது கேட்டாலும் காரணம் கேட்காமல் வாங்கித் தருவார்.

ஒருமுறை பொங்கல் பண்டிகை வந்தது.பரிமளத்திற்கு அவள் அப்பா பட்டுப் பாவாடை வாங்கித் தருவதாகச் 

சொல்லி கடைக்கு அழைத்துச் சென்றார்.ஆனால் கடைக்குச் சென்றதும் பரிமளம் தனக்கு ஒரு பட்டுப் 

பாவாடைக்குப் பதில் மூன்று சாதாரணப் பாவாடை வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டு அதேபோல் 

வாங்கிவந்தாள்.

தன மகள் பட்டுப் பாவாடை கட்டிப் பார்க்க ஆசைப்பட்ட அவளின் அம்மா பரிமளத்தைக் கடிந்து கொண்டார். 
ஆனால் புன்னகையையே பதிலாகத் தந்து விட்டு அந்த உடைகளை வாங்கிச் சென்று விட்டாள் பரிமளம்.
மறுநாள் பொங்கல் பண்டிகையன்று பரிமளத்தின் பள்ளித் தோழிகள் அவள் வீட்டுக்கு வந்தனர்.அவர்களை உபசரித்து அமரச் சொல்லி பொங்கல் வடை கரும்பு பணம் முதலியன கொடுத்து மகிழ்ச்சியுடன் அனுப்பினாள்  பரிமளம்.அவளுடன் படிக்கும் வள்ளிக்கு தான் வாங்கிவந்த உடைகளில் ஒன்றைக் கொடுத்தாள் . வள்ளியின் முகத்தில் அப்போது தோன்றிய  மகிழ்ச்சியையும் நன்றிக் கண்ணீரையும் கண்டு பரிமளத்தின் பெற்றோரே மனம் நெகிழ்ந்தனர்.
அவளது இந்தப் பண்பைப் பார்த்து அவளின் பெற்றோர் மிகவும் பெருமைப் பட்டனர்.மகளின் இயற்கையான உயர்ந்த பண்பைக் கண்டு அவர்கள் மனம் மகிழ்ச்சியடைந்தது.பரிமளமும் தன பெற்றோர் தனக்குத் துணையாக இருப்பதை உணர்ந்து மிகவும் மகிழ்ந்தாள்.
இவளது இந்த உதவும் பண்பை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ள நினைத்தாள் ஜோதி என்ற பள்ளித் தோழி.
அவள் அடிக்கடி தன உறவுக்காரப் பெண் ஒருத்தி மிகவும் கஷ்டப் படுவதாகக் கூறி பரிமளத்திடம் உதவி பெற்று வந்தாள். எப்போதும் முகம் சுளிக்காமல் அவள் கேட்ட உதவிகளைச் செய்து வந்தாள்  பரிமளம்.
இவளின் தோழிகளில் ஒருத்தி ஜோதியின் கெட்ட எண்ணத்தை அவளிடம் கூற அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத பரிமளம் 'எப்படியோ யாருக்கோ உதவி செய்யணும் அப்பிடின்னு நினைக்கிறாள் இல்லையா?அந்த நல்ல குணம் இருக்கு இல்லையா? அதுபோதும் எனக்கு.' என்று சொல்லிவிட்டு தொடர்ந்து உதவிகள் செய்து வந்தாள் .ஏதேனும் தேவைப் பட்டால் இப்போதெல்லாம் சில சிறுமியர் பரிமளத்திடம் கேட்காமல் ஜோதியிடம் கேட்டுப் பெறத் தொடங்கினர்.
நல்ல உள்ளம் படைத்த பரிமளம் எப்படியோ பிறருக்கு உதவ முடிந்தால் போதும் என்று வழக்கம்போல ஜோதிக்கு உதவி செய்து வந்தாள்.
ஒருமுறை ஜோதி 'ஒரு ஏழைப் பெண்ணின் வீடு தீப்பற்றிக் கொண்டது நாம் ஏதேனும் உதவணும் பரிமளா' என்று கூறி நிறைய உடைகள் கொஞ்சம் கணிசமான பணம் வேண்டும் என்று கேட்டுப் பெற்றாள். பரிமளமும் தன தந்தையாரிடம் கேட்டு வாங்கிவந்து ஜோதியிடம் கொடுத்தாள்.
பல நாட்களாக சேமித்த பணம் ஜோதியிடம் இருந்தது.பணம் சேர சேர ஜோதியின் ஆசையும் அதிகமாயிற்று. ஏழைக்கு வேண்டும் என்று கேட்டுப் பெற்ற உடைகளைக் கூட ஜோதி கடையில் விற்றுப் பணமாக்கிக் கொண்டாள் 
அந்தப் பணத்தை மறைத்து வைத்துக் கொள்வதிலும் இன்னும் பணம் சேர்ப்பதிலும் கவனமாக இருந்ததால் ஜோதிக்கு  படிப்பில் கவனம்  குறைந்தது.
அரையாண்டுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.அன்று தேர்வு எழுத ஜோதி பள்ளிக்கு வரவில்லை.காரணம் கேட்டபோது அவள் தந்தையாரை காவலர் பிடித்துச் சென்றதாகக் கூறினார்கள்.அவர் ஒரு கடையில் கணக்கெழுதும் வேலையில் இருந்தார். அங்கு பணம் திருட்டுப் போய் விட்டதாகவும் ஜோதியின் வீட்டில் அந்தப் பணம் கண்டெடுக்கப் பட்டதாகவும் கூறினார்கள்.
அதனால் அவரைக் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விட்டார்கள் காவலர்கள் 
அது என்பணம் என்று ஜோதி எவ்வளவு சொல்லியும் அதை நம்பவில்லை காவல் அதிகாரி.
இந்த செய்தி காதில் விழுந்தவுடன் பரிமளம் தன தந்தையை அழைத்துக் கொண்டு காவல்நிலையம் சென்றாள்..
அங்கே அழுதுகொண்டு நின்றிருந்த ஜோதியையும் அவள் தாயாரையும் பார்த்து ஆறுதல் கூறினாள் 
தன்னுடன் இரண்டு தோழிகளையும் அழைத்து வந்திருந்தாள்  பரிமளம்.
நேரே காவல் அதிகாரியிடம் சென்றாள் 
அவரை வணங்கினாள் அவர் என்னம்மா?என்றதும் பேசத் தொடங்கினாள் 
"ஐயா, நாங்கள் ஜோதியுடன் படிக்கிறோம்.அவர்கள் வீட்டில் நீங்கள் கண்டெடுத்த பணம் நாங்கள் சேர்த்த பணம்.கொஞ்ச நாள் முன்னேதான் ஒரு விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு உதவ நாந்தான் ஆயிரம் ரூபாய் வரை என் தகப்பனாரிடம் கேட்டுக் கொடுத்தேன்.அதனால் அது திருட்டுப் பணம் இல்லை.நாங்கள் சேர்த்த பணம். அத்துடன் ஜோதிதான் பலருக்கும் உதவி செய்கிறாள் அதனால் அவளிடமே  இந்தப் பணத்தையும் கொடுத்து ஏழைக்கு உதவுமாறு சொன்னேன்.எங்கள் தந்தையாரையும் கேட்டுப் பாருங்கள்."
பரிமளத்தின் துணிவான பேச்சைக் கேட்டு காவலர் மனம் மாறினார்.ஜோதியின் தந்தையாரை விடுவித்து அனுப்பினார்.அத்துடன் ஏழைகளுக்கு உதவும் நற்பண்புடைய ஜோதியையும் பாராட்டினார்.
தவறு செய்து வந்த ஜோதியை புகழேணியில் ஏற்றிவிட்டாள்  பரிமளம்.
கண்களில் நீருடன் நன்றிப் பெருக்குடன் பரிமளத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள்  ஜோதி.
மறுநாள் பள்ளிக்கு வந்த பரிமளத்தை சூழ்ந்து கொண்ட பிற தோழிகள் "உன்னை ஏமாற்றிப் பணம் பறித்துவந்த ஜோதிக்கு நீ நல்ல பெயரைத் தேடித் தந்து விட்டாயே பரிமளா "என்ற போது பரிமளம் சிரித்தாள் 
"அவள் நல்ல குணம் உங்களுக்குத் தெரியவில்லை.எவ்வளவு கஷ்டப் பட்டு சேமித்திருக்கிறாள்.
இதேபோல எல்லோருக்கும் சேமிக்கும் குணம் வளரவேண்டும் என்கிற எண்ணத்தை  எல்லோரும் கற்றுக் கொள்ளுங்கள் யாரிடமும் உள்ள நல்லதைப் பார்க்கணுமே தவிர குறைகளைப் பார்க்கக் கூடாது.
அந்த வகையில் ஜோதி ஒரு நல்லபெண்" என்று கூறியதை அனைவரும் ஒப்புக் கொண்டாலும்
" நீ எல்லோரிடமும் உள்ள நல்லதையே பார்க்கிறாய் பரிமளா, உனது இந்த பண்பும் எங்களுக்கு வேண்டும்" என்று சொன்னதைப் புன்னகையோடு ஏற்றுக் கொண்டாள் பரிமளம்.
ஜோதி பள்ளிக்கு வந்ததும் நேரே பரிமளத்திடம் சென்றாள் அதுவரை அவளை ஏமாற்றிச் சேர்த்த பணத்தை பரிமளத்திடம் சேர்த்தாள் .
  "என் குற்றத்தையும் குறையையும் பாராமல் அதிலும் நிறைவைப் பார்த்த உன் நல்ல குணம் தெரியாமல் தவறு செய்துட்டேன்.என்னை மன்னிச்சுடு. இனிமேல் நாம் ரெண்டு பெரும் சேர்ந்து மற்றவருக்கு உதவி செய்வோம்.முதலில் இந்தப் பணத்தைத் தலைமையாசிரியரிடம் கொடுத்து ஏழைப் பிள்ளைகளுக்குத் தேவையானதை வாங்கித் தரச் சொல்வோம் வா"என்று பரிமளத்தின் கையைப் பற்றிக் கொண்டு ஓடினாள்  ஜோதி..
                     " குணமநாடி  குற்றமும்   நாடி  அவற்றுள் 
                       மிகைநாடி   மிக்க    கொளல் "

என்ற வள்ளுவரின் கருத்தமைந்த பண்பை  பரிமளத்திடமிருந்து நாமும் கற்றுக் கொள்வோம்.

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 3 ஏப்ரல், 2013

thirukkural kadhigal -- முக்திக்கு வித்து


முக்திக்கு வித்து 

பாண்டவருக்கும் துரியோதனாதியர்க்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீரன் படைக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்தனர். கௌரவர்  படைக்கு அன்று கர்ணன் படையை நடத்தத் தயாரானான்.இந்தச் செய்தியைக் கண்ணன் அறிந்தான்.பாண்டவர் தாயான குந்திதேவியைத் தேடிச் சென்றான்.
அவளின் நலம் விசாரித்துப் பின் பேசினான்.
"அத்தை, உங்களின் மூத்த புதல்வனைப் பற்றிய செய்தி ஏதேனும் தெரிந்ததா?"
"அதை இப்போது ஏன் நினைவு படுத்துகிறாய் கண்ணா?"
"காரணம் இருக்கிறது. உங்கள் மூத்த மகன்தான் அந்தக் கர்ணன்.இதைத் தெரிந்து கொண்டுதான் தங்களிடம் சொல்ல வந்தேன்.நீங்களே இதை நேரில் சென்று பரீட்சித்துப் பாருங்கள்" என்றான் கபடமாக.
உடனே தன மூத்த மகனைக் காணப் புறப்பட்டு விட்டாள் குந்திதேவி.
"சற்று இருங்கள் அத்தை.அவன்தான் தங்களின் மூத்த மகன் என்று தெரிந்தபின் அவனை பாண்டவர் பக்கம் வந்து சேர்ந்து விடச் சொல்லுங்கள். அவன் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றால் இரண்டு வரங்களையாவது வாங்கி வாருங்கள்."
"வரமா? நான் கேட்பதா?"என்று தயங்கினாள்  குந்தி.

"ஆம் அத்தை.கர்ணன் சுத்த வீரன் அவனுக்கு இணையானவன் அர்ஜுனன் ஒருவன்தான்.எனவே அர்ஜுனன் தவிர வேறு யாருடனும் போரிடக் கூடாது.அத்துடன் அவனிடமுள்ள நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது  ஒருமுறைக்கு மேல் மறுமுறை  ஏவக் கூடாது. என்ற இரு வரங்களை மட்டும் பெற்று வாருங்கள்."என்றான் 

குந்தியும் சம்மதித்தாள்.மகனைக் காண ஆவலுடன் சென்றாள் 

கர்ணன் அவளை வணங்கி வரவேற்றான்.அவள் தன்னை மகனே என அழைத்தது கேட்டு மகிழ்ந்தான். தன்னிடமிருந்த பட்டுச் சேலையைக் காட்டி குந்தி அதைத் தன மீது போர்த்துக் கொண்டு அழுததைக் கண்டு அவளே தன தாய் எனக் கண்டு கொண்டான்.மனம் மிக மகிழ்ந்தான்.வெகுநேரம் கடந்தபின் குந்தி,
"மகனே நீ பாண்டவருக்கு மூத்தவன்.குருட்சேத்திரப் போரில் பாண்டவர் வெற்றி பெற்றபின் நீயே இந்த நாட்டுக்கு மன்னனாக முடிசூடவேண்டியவன்.கௌரவரை விட்டு பாண்டவர் பக்கம் வந்து விடு.உன் தம்பிமாரான தருமன் முதலானோர் மிகவும் மகிழ்வார்கள்."என்று மெதுவாக கேட்டுக் கொண்டாள்.

அவள் மடியில் படுத்திருந்த கர்ணன் விருட்டென எழுந்தான்."தாயே, என்ன வார்த்தையம்மா கூறினீர்கள்., துரியோதனன் என் உயிரினும் மேலானவன்.மானம் காத்த மாமனிதன்.இன்னுயிரினும் மானம் மேலானதன்றோ மன்னனுக்கு?நானோ நேற்றுவரை அனாதையாக இருந்தவன்.தேரோட்டிமகன் நான்.மன்னர் சபையில் என் மானம் 
கா த்து என்னை அங்கதேசத்தின் மன்னன் என்று அனைவரிடமும் கூறி என்னைத் தலை நிமிர வைத்தவன் அல்லவா அம்மா அவன்?அவனை எப்படிப் பிரிவேன். என் உயிர் கூட அவனுக்குத் தானே சொந்தம்?"

"கர்ணா, உன் உடன் பிறந்தவருடன் சேர்ந்து இருக்க உனக்கு விருப்பமில்லையா?"

"அம்மா, இதைவிடுத்து வேறு என்ன வேண்டுமானாலும் தருகிறேன் கேளுங்கள் ஆனால் நன்றி மறக்கும் செயலை மட்டும் செய்யச் சொல்லாதீர்கள். என்னை மன்னித்து விடுங்கள் அம்மா.துரியோதனனின் அன்பை நான் மறந்தால் எனக்குப் பெரும் பாவம் மட்டுமல்ல பழியும் வந்து சேரும்."

"அப்படியானால் நீ அர்ஜுனனைத் தவிர வேறு யாரையும் கொல்லக்  கூடாது. நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருமுறைக்கு மேல் பிரயோகிக்கக் கூடாது.இந்த இரண்டு வரங்களைத் தருவாயா?"

"நிச்சயமாகத் தருகிறேன். தாங்களும் எனக்கொரு வரம் தரவேண்டும்."

"கேள் மகனே"

 "போர்க்களத்தில் நான் இறந்து விட்டால் தாங்கள் என்னை மடியில் வைத்து மகனே என்று கூவி அழவேண்டும் இந்த உலகுக்கெல்லாம் நான் தங்கள் மகன் என்ற உண்மையைப் பறைசாற்றவேண்டும் நான் இறக்கும் வரை இந்த  உண்மையை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. இந்த வரத்தை எனக்குத் தாங்கள் தரவேண்டும் அம்மா."

கண்களில் கண்ணீருடன் குந்தி"அப்படியே செய்கிறேன் கர்ணா,"என்றபடியே திரும்பி இருப்பிடம் வந்து சேர்ந்தாள் 

தம்பியரானாலும் தாயானாலும் கர்ணனுக்கு  துரியோதனனின் நன்றிக்கடனுக்கு முன் எதுவும் முக்கியமல்ல.

இவனது இரண்டு முக்கியமான செயல்களாலேயே இறைவனின் அன்புக்குப் பாத்திரமானான்.
இவனது நன்றி மறவாமை.மற்றொன்று அள்ளிக் கொடுக்கும் வள்ளல்தன்மை.

இந்தப் பண்புகளாலேயே இதிகாசத்தில் இவன் போற்றப் படுகிறான்.வள்ளுவரின் குறளுக்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறான்.

                                        "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
                                          
                                          செய்நன்றி கொன்ற மகற்கு."


 கர்ணனின் முக்திக்கு அவனது நன்றி மறவாத் தன்மையே வித்தாக இருந்தது என்பதை நாமும் ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்.




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 22 மார்ச், 2013

என் பேத்தியின் திருமணம்

 என் பேத்தியின் திருமணம் பற்றிய விமரிசனம்.
கடந்த பிப்ரவரி மாதம் 9--ஆம் தேதி அமெரிக்க மாப்பிள்ளையும் அவரது பெற்றோர் நண்பர்கள் என எட்டுபேர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினர். அவர்களை ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்துவிட்டு இல்லம் திரும்பினோம். 12---ஆம் தேதி காலை எட்டு மணிக்கு அனைவரும் திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.அவர்களை மாலை மரியாதையுடன் வரவேற்றனர் பெண்வீட்டார்.அவர்களை கவனித்துக் கொள்ள பெண்ணின் சித்தப்பா கூடவே இருந்தார்.அவரும் சிகாகோவில் வசிப்பவர். அமெரிக்க பழக்கங்கள் அறிந்தவர்.
                              எட்டு மணிக்கு எங்கள் குல முறைப்படி (மாத்வா )  ஆச்சாரியார் மந்திரங்கள் ஓதி நாந்தி தேவுரு சமாராதனை பாதபூஜை என்று அனைத்தையும் மிகவும் அக்கறையோடு மாப்பிள்ளை வீட்டார் கவனித்தனர்.பனிரெண்டு மணிக்கு சுமங்கலி பிரார்த்தனையின்போது மாப்பிள்ளையின் தாயார் திருமதி மார்த்தா ரே உடன் இருந்து எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
                              மாலையில் மூன்று மணிக்கு முன்பாகவே ஜானவாசம் தொடங்கியது. பெண்பார்க்கும் வைபவத்தில் வைக்கப் பட்டிருந்த பொருட்களை ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பொங்கப் பார்த்தனர்.அவர்கள் அனைவரும் நமது நாட்டுப் பட்டுப் புடவை உடுத்தி தலையில் மல்லிகை சூடியிருந்தது மிகவும் அழகாக உள்ளது என்று அனைவரும் பாராட்டியபோது மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு புன்னகைத்தனர்.
                              திருமதி மார்த்தாவும் திரு ரே அவர்களும் மிகவும் கஷ்டப்பட்டு கீழே அமர்ந்து மிகவும் அக்கறையுடன் ஆச்சாரியார் சொன்னபடி செய்து கொண்டு வந்தனர்.பெண்ணுக்குப் பொட்டு வைத்து பூமுடித்து புடவை கொடுத்து பின் அவர்கள் வாங்கி வந்த நகையை அணிவித்தனர்.
அதேபோல் மாப்பிள்ளையை அமரவைத்து அவருக்கும் பாண்ட்டு ஷர்ட் கொடுத்து செயின் மோதிரம் போட்டபின் விளையாடல் சாமான்கள் ஒவ்வொன்றாகக் கொடுக்க அவர்கள் வாங்கி வைத்தனர்.அதன்பின் அனைவரும் டிபன் சாப்பிட்டபின் அலங்காரம் செய்துகொண்டு வரவேற்புக்குத் தயாரானார்கள்.
                             திருமண வரவேற்புக்கு உறவினர்களும் நண்பர்களும் வந்திருநதனர்.இரவு விருந்து  கேண்டில் லைட் டின்னர் என்று சொன்னார்கள்.வட்ட மேஜையில் நடுவே அலங்கார மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் குடும்பமாக அமர்ந்து விருந்து உண்டார்கள். பார்க்க அழகாக இருந்தது.அனைவரும் விரைவாகவே தூங்கப் போய்விட்டார்கள். அதற்குமேல் ஐந்து சுமங்கலிகள் அமர்ந்து கருகமணியும் தாலிப் பொட்டும் கோர்த்து மங்கல நாண்  கொர்த்துவைத்தனர்.
                              மறுநாள் காலை நான்கு மணிக்கே பெண்ணை அமரவைத்து மங்கள ஸ்நானம் செய்வித்து கௌரி பூஜையில் அமரவைத்த்னர்  
சரியாக ஆறுமணிக்கு மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்திற்குள் நுழைந்தனர்.மாப்பிள்ளைக்கு காசியாத்திரை அலங்காரம் செய்தனர்.காசியாத்திரை செல்லவேண்டும் எனக் கூறியபோது நான் திருமணத்திற்கல்லவா வந்துள்ளேன் என்னை ஏன் காசியாத்திரை அனுப்புகிறீர்கள் எனக் கேட்டபோது அனைவரும் சிரித்தபின் ஆச்சாரியார் விளக்கினார்.
                               பெண்ணின் தாயார் மாப்பிள்ளைக்கு குங்குமம் வைத்து கண்மை இட்டு அலங்கரித்தபின் கையில் விசிறியும் தோளில் பையுமாக 
காசியாத்திரை சென்று வந்தார்.ஆரத்தி எடுத்தபின் நேராக மாப்பிள்ளை மணமேடைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.அந்தரபட்டா  என்று சொல்லப்பட்ட திரை விரிக்கப்பட்டது. கௌரி பூஜையில் இருந்த மணப்பெண்ணை மாலையிட்டு கைபிடித்து அவளின் தாய்மாமன் மணமேடைக்கு அழைத்து வந்தார். மங்களாஷ்டகம் சொல்லி முடித்தபின் சீரகமும் வெல்லமும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் தூவினார்கள்.பின்னர் கன்னிகாதானம், அரிசி போடுதல், மாலை மாற்றுதல் எல்லாம் முடிந்தது. முஹூர்த்தப் புடவை மேல் தேங்காய் மஞ்சள் குங்குமம் அதன்மீது திருமாங்கல்யம் வைத்து அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வந்தனர்.பின்னர் ஆச்சாரியார் மாங்கல்யம்......தந்துனானேனா   என்று மந்திரம் ஒத மாப்பிள்ளை ஜேசன் மணமகள் சினேகாவின் கழுத்தில் மங்கல நாண்  பூட்டினான். அனைவரும் மலரும் அட்சதையும் தூவி ஆசி வழங்கினர்.
இவ்வாறாக சினேகா ஜேசன் திருமணம் இனிதே நடந்தது.அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் இந்தியாவுக்கு வந்து இந்திய முறைப்படி தன மகனுக்கு திருமணம் செய்து கொண்ட ரே, மார்த்தா தம்பதிகளை அனைவரும் பாராட்டினர்.அவர்களும் நம் கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியதோடு அதை அந்த இரண்டு நாட்களும் கடைப் பிடித்த அந்த நாகரீகத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பின் வரும் புகைப் படங்கள் மூலம் திருமணம் எப்படி நடந்துள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.
என் பேத்திக்கு அனைவரும்  நல்லாசி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Photo
Like ·  ·  · Tuesday at 6:00pm · 
--






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வியாழன், 21 மார்ச், 2013

மகளிர் தினம்.

மகளிர் தினம்.

கடந்த 16-ம் தேதி அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரால் மகளிர் தின விழா சந்திரசேகர் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.அவ்வமயம சிறப்பான மகளிரைப்  (நீலாம்பிகை, ருக்மணி அருண்டேல், தில்லையாடி வள்ளியம்மை, வை.மு.கோதைநாயகி முதலியோர்) பற்றி திருமதிகள் சாரதா நம்பியாரூரான், பர்வீன் சுல்தானா ஹேமா சந்தானராமன் உள்ளிட்ட  ஆறு மகளிர் பேசினார்கள்.இந்த மேடையில்  அடியேனும்  75 அகவை கண்ட மூத்த எழுத்தாளர் என்று .மதுரை நகர நீதிபதியாக விளங்கும் திருமதி வாசுகி அம்மையாரின் பொற்கரங்களால் பொன்னாடை போர்த்தப் பட்டு கௌரவப் படுத்தப் பட்டேன். எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு விக்ரமன் அய்யா அவர்களுக்கும், செயலாளர் அன்புச் சகோதரி திருமதி வாசுகி கண்ணப்பன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 8 மார்ச், 2013

102--திருக்குறள் கதைகள்.-காலத்தினால் செய்த நன்றி.

செல்லப்பன் ஒரு தொழிற்சாலையில் பணி புரிந்து வந்தான்.அவனுக்கு ஒரு மகன் இருந்தான்.ரவி என்று பெயரிட்டு மிகவும் செல்லமாக வளர்த்து வந்தான்.அவனுக்கு பத்து வயதுதான் இருக்கும்.
செல்லப்பனுக்கு தன மகன் மீது கொள்ளை பிரியம்.தினமும் அருகில் இருக்கும் ரொட்டிக் கடையில் ரொட்டி வாங்கிக்கொடுத்து அவன் தின்ற பிறகே வேலைக்குச் செல்வான். ரவியும் அப்பாவின் மடியில் அமர்ந்து கொண்டு ரொட்டி தின்றுவிட்டுப் பள்ளிக்குச் செல்வான்.
ஒருநாள் தொழிற்சாலைக்குச் சென்ற செல்லப்பன் விபத்தில் அடிபட்டு இறந்துவிட்டார்.
அவன் அம்மாவோ ராணிமாதிரி வாழ்ந்தவள் இப்போது கணவன் செய்த கூலிவேலைக்குச் செல்லத் தொடங்கினாள். சிலநாட்கள் வரை தன கணவன் செய்தது போல் மகனுக்கு ரொட்டி வாங்கிக் கொடுத்தாள். அவளுக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை.அதனால் ரொட்டி வாங்கிக் கொடுக்க இயலவில்லை.ஆனால் சிறுவனான ரவிக்கு இதெல்லாம் புரியாது. அவன் தினமும் ரொட்டிக் கடைமுன் சென்று நின்று அழுதுகொண்டு இருப்பான்.
ஒருநாள் அந்த ரொட்டிக் கடை முதலாளி அவனிடம் ஒரு ரொட்டியைக் கொடுத்தார். மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டான்.மறுநாளும் அங்கு வந்து நின்றான்.அந்த முதலாளி அவன் கையைப் பிடித்து அருகே அமர்த்திக் கொண்டார்.
"தம்பி ரவி, நான் தினமும் உனக்கு ரொட்டி தாரேன்.தின்னுட்டு நீ பள்ளிக்கூடம் போகணும்.அங்கே உனக்கு மதியச் சாப்பாடு போடுறாங்க இல்லே 
அதைச் சாப்பிட்டுட்டு நல்லாப் படிக்கோணும்.உனக்குப் பதினெட்டு வயசானப்புறம் நீ ப்ளஸ் டூ முடிச்சப்புறம் என் கடையிலேயே வேலை செய்யணும்.செய்வியா?"என்றார். தினமும் ரொட்டி கிடைக்கும் என்ற மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினான் ரவி.ரொட்டியை வாங்கித் தின்றுவிட்டு பரபரப்புடன் வீட்டுக்குள் நுழைந்தான். தன் நீலக் கால்சட்டையையும் வெள்ளைச் சட்டையையும் தேடிப்  போட்டுக் கொண்டான். நெற்றியில் திருநீற்றை இட்டுக் கொண்டு கையால் தலையை ஒதுக்கிக் கொண்டான்.மூலையில் கிடந்த தன பையையும் புத்தகங்களையும்  தேடி எடுத்துக் கொண்டவன் 'அம்மா, நான் இஸ்கூலுக்குப் போய்வாறேன்"  என்றபடியே ஓடினான். அவன் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மாவுக்கு மனம் மகிழ்ச்சியடைந்தது.
வருடங்கள் செல்லச் செல்ல ரவிக்குக் கல்வி அறிவோடு நல்ல ஒழுக்கமும் வளர்ந்தது.இப்போது அவன் பத்தாவது படிக்கும் மாணவன்.
மாலைநேரத்தில் பள்ளிவிட்டபின் ரொட்டிக்கடை முதலாளிக்கு உதவியாக இருக்கத் தொடங்கினான்.ஏனென்றால் தினமு ஓசியில் ரொட்டி வாங்கித் தின்ன அவன் மனம் இடம் கொடுக்க வில்ல.அவன் தன்மானத்தைப் பார்த்த அந்த முதலாளிக்கு அவன்மீது மிகுந்த மதிப்பு  ஏற்பட்டது.
நல்ல முறையில் பத்தாம் வகுப்புத் தேறிய ரவிக்கு அந்த முதலாளி பாராட்டுத் தெரிவித்ததோடு மேலே படிக்க உதவுவதாகக் கூறினார்.ஆனால் தன அம்மாவை நல்ல முறையில் காப்பாற்றவேண்டுமானால் வேலை செய்துதான் ஆகவேண்டும் என்ற ரவி அந்தக் கடையிலேயே வேலை செய்வதாகக் கூறிவிட்டான்.
அதை ஏற்றுக் கொண்ட கடை முதலாளி அவனுக்கு ஒரு சிறிய ரொட்டிக் கடை வைத்துக் கொடுத்தார். ஐந்தாண்டுகளில் ரவி நல்ல நிலைக்கு உயர்ந்தான்.அவனது அயராத உழைப்பும் நாணயமும்தான் அவனை உயர்த்தின.
அன்று ரவியின் கடை திறந்த ஐந்தாம் ஆண்டு விழா.கடை அலங்கரிக்கப்பட்டு வந்தவர்களுக்கு அமர இருக்கைகள் போடப்பட்டிருந்தன தனக்கு உதவி செய்து தன்னை உயர்த்திய முதலாளியை வணங்கி அவருக்கு மாலையிட்டு மரியாதை செய்தான் ரவி.
மிகவும் கூச்சத்துடன் அந்த முதலாளி,"ரவி இதென்னப்பா, எனக்குப் போயி மாலையெல்லாம்..." என்று கூறினார். 
ரவியோ அவர் கால்களில் விழுந்து வணங்கினான்.
"ஐயா, நீங்க இல்லேன்னா இன்னைக்கி நான் இல்லே."
"என்னப்பா ரவி,உன்னோட உழைப்பாலே நீ முன்னுக்கு வந்தே.என்னை எதுக்கு இப்படி உயர்த்தி வைக்கிறே?"
"ஐயா, நான் சின்னப் பையனா இருந்தப்போ நீங்க ரொட்டித் துண்டைக் குடுத்து பள்ளிக்கூடம் போன்னு  சொன்னதாலே நான் படிச்சேன்.
நல்ல விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.உங்ககிட்டேருந்து உழைப்பையும் கத்துகிட்டேன்.நீங்க என்னை அன்னிக்கி விரட்டி விட்டிருந்தா,ஒரு ரொட்டித்துண்டாலே நான் திருடனா ஆகியிருப்பேன்.இன்னைக்கி நான் உயர்ந்து நிக்க நீங்கதான் ஐயா காரணம்."
"என்னப்பா இது, ஒரு சின்ன உதவி செய்ததையா நீ இவ்வளவு புகழ்கிறே?"
"ஐயா, 
                   "காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் 
                     ஞாலத்தின் மாணப் பெரிது."     அப்படீன்னு படிச்சிருகேனய்யா. என்னுடைய சின்ன வயசுல நீங்க செஞ்ச உதவி இந்த உலகத்தை விடப் பெருசுங்கய்யா."என்று கண்களில் நன்றிக் கண்ணீருடன் பேசினான் ரவி.
ரவியின் நன்றி பாராட்டும் பண்பையும் அவன் முதலாளியின் தகுந்த காலத்தில் உதவி செய்யும் குணத்தையும் மறவாமல் அவர்களைப் போல வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையுமல்லவா?





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

pongal vaazhththu.

பொங்கல் வாழ்த்து.


அன்பு நெஞ்சங்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
 இறையருளும் திருவருளும் கிடைக்கப் பெற்று அனைவரும் வாழ்வாங்கு வாழ்ந்திட 
இறைவனை வேண்டிக் கொள்கிறேன். பால் பொங்குவதுபோல் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கட்டும்.பொங்கலைப் போல 
வாழ்வில் இனிமை  பெருகட்டும்.
அன்புப் பாட்டி,
ருக்மணி சேஷசாயி.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 28 டிசம்பர், 2012