வெள்ளி, 31 அக்டோபர், 2014

தியாகச்சுடர்-------வரலாற்றுத் தொடர்.

                                            ஆறு.


                "நூர்ஜஹான் இவ்வளவு பெரியதுரோகத்தைச் செய்வாய் என நான் நினைக்கவில்லை." 

"என்ன ஆணவம் உனக்கு? ஒரு பணிப்பெண் என்னைப் பெயரிட்டு அழைப்பதா?ஜஹாம்பனா ஜஹாங்கீரின் ஆணை என்பதால் உன்னை அரண்மனை அந்தப்புரத்திற்குள்  அனுமதித்தேன்.இல்லையேல்..." ஆத்திரத்துடன் பற்களைக் கடித்தாள்  நூர்.

சற்றே பெருமூச்சு விட்ட அனார் மிகுந்த சிரமப்பட்டு மெதுவாகப் பேசினாள். 

"பதறாதே சகோதரி, நீ என்னை விரட்டுமுன் என் உயிர் இந்த உடலைவிட்டுப் பிரிந்து விடும்.அல்லா என்னை அழைத்துவிட்டார். ஆனால் கடைசியாக என் சலீமை இந்தக் கண்களால் மீண்டும் ஒருமுறை காணவேண்டும். அவர் வெற்றி பெற்ற செய்தியைக் கேட்க வேண்டுமென்றே  இந்த உடலில் இன்னும் இந்த உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது நூர்ஜஹான்!"

"அவருக்கு மிகவும் வேண்டியவளாகத் தோன்றுகிறது உன்னைப் பார்த்தால்....நீ...யார் ?"

"ஆம்... ஒரு காலத்தில் அவருக்கு வேண்டியவளாகத்தான் இருந்தேன். ஏன்...நானின்றி இந்த உலகே இல்லையென இருந்தவர்தான் என் சலீம். எங்கள் காதல்கதை உலகறிந்ததாக உள்ளது. காதலுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த எங்கள் வாழ்க்கை சோகமுடிவை எய்தி ஒரு கல்லறைக்குள் அடங்கி விட்டது."அதிகம் பேசிய ஆயாசம் தாங்காமல் மூர்ச்சையானாள் அனார்.

நூர்ஜஹான் ஓடிச்சென்று அவள் மூர்ச்சை தெளிவித்து சிறிது பாலை அவள் வாயில் புகட்டினாள்.

"கல்லறைக்குள் அடங்கியது என்றால்....."  என்று எண்ணமிட்ட நூர்ஜஹானின் கரங்கள் நடுங்கின. 

"அனார்க்கலியா இவள்..?" சிந்தனைச் சிற்பமாக ஊமையாக அமர்ந்துவிட்டாள்  நூர்ஜஹான்.

"என் நூர் ...பேசாமல் அமர்ந்துவிட்டாய்!...ம்...நீ என்ன நினைக்கிறாய் என்பது தெரியும். உன் சந்தேகம் சரிதான்.நான் தான் 'நாதிரா'.
அக்பர் பாதுஷாவினால் 'அனார்க்கலி' என்று பட்டம் சூட்டப் பட்டவள் "

"நீ,....நீங்கள் கொல்லப்பட்டதாகச் சொல்வது...!"

 வறண்ட அனாரின் உதடுகள் புன்னகையை உதிர்த்தன.குரல் கரகரக்க "நான் உன் சகோதரி நூர் என்னை நீ என்றே அழைக்கலாம்.நான் கல்லறைக்குள் அடக்கப்பட்டது உண்மை.அது உலகத்தின் கண்களுக்கு.ஆனால் கருணையே வடிவான அக்பர் பாதுஷா இப்படிப்பட்ட கொடுமையான காரியத்தைச் செய்வாரா?சுரங்கப் பாதை வழியே தப்பிச் செல்ல வழிகாட்டினார்.சலீமைப் பார்க்கவோ அவருடன் பேசவோ மாட்டேன்  என்று  வாக்குறுதி கொடுத்துவிட்டு இந்த சாம்ராஜ்யத்துக்கு வெளியே ஒரு காட்டில் என் தாயுடன் வாழ்ந்து  வந்தேன்."
என்றாள் ஆயாசத்துடன்.

"அனார்க்கலி, உங்கள் கதை பெரும் காவியமாகவே புனையப்பட்டுள்ளது. உன்னைக்காணவேண்டுமென்று நான் விரும்பியதுண்டு. ஆனால் இறந்துவிட்ட உன்னை எப்படிக் காண இயலும் என்று எண்ணியிருந்தேன்.என் விருப்பம் கைகூடுமென்று கனவிலும் நான் கருதவில்லை.ஆனால்...இந்த நிலைக்கு ....உன் உயிரைப் பணயம் வைக்கும் நிலைக்கு.... இப்படி நீ ஏன் முடிவு செய்தாய் அனார்..?"

"நூர்...அவரின்றி...என் விரகவேதனையை உள்ளடக்கிக் கொண்டு ஒவ்வொரு கணமும் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு வாழ என்னால் இயலவில்லை.இந்த உயிர் அவருக்கே சொந்தமானது.அவருக்காகவே இதை அர்ப்பணித்தால் அதைவிட வேறு பாக்கியம் என்ன இருக்கிறது எனக்கு?"

"அனார்க்கலி மாதர்களுக்குள்  மாணிக்கம்  நீ. உன்னருகே நிற்கவும் தகுதியற்றவள் நான்.ஒரு பெண்ணிடம் காதல் கொண்டவர் என்னை விரும்புவது எனக்குப் பிடிக்காத காரணத்தால் நான் ஜஹாங்கீரை வெறுத்தேன். ஆனால் காதலின் தன்மையையும் அதன் தெய்வீக சக்தியையும் பெருமையையும் நன்கு உணர்ந்தவர் உன் சலீம்.ஷேர்கானை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்.அதுவும் உன்னைப்போன்ற ஒரு பெண் அவருக்காகக் காதலையும் உயிரையும் தியாகம் செய்ய வேண்டுமென்றால் அவர் எத்தனை உயர்ந்த புருஷராக இருக்கவேண்டும்?
இந்த உண்மை எனக்கு இப்போதுதான் புலப்படுகிறது.அதன் உயர்வை நான் இப்போதுதான் உணர்கிறேன்."

"நூர்ஜஹான், சகோதரி,..!  உயிரை இழக்கப்போகும் எனக்கு நீ இரண்டு வாக்குக் கொடுக்க வேண்டும்.அதை நீ உன் உயிருள்ளவரை காப்பாற்ற வேண்டும். செய்வாயா?" நூர்ஜஹான் தன இரு கரங்களுக்குள் நடுங்கும் அனாரின் கரங்களைச் சிறை வைத்துக் கொண்டாள் உரிமையோடு.

"சொல் சகோதரி.உன் அன்புக்காகவும் தியாகத்துக்காகவும் நான் எது வேண்டுமாயினும் செய்யக் கடமைப் பட்டுள்ளேன்."குரல் கரகரக்க கண்களில் கண்ணீர் திரையிடக் கூறினாள்  நூர்ஜஹான்.

                                                                                (அடுத்தபகுதி தொடரும்)







--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

2 கருத்துகள்:

  1. சிறப்பாகச் செல்கிறது தொடர்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. உள்ளங்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. காட்சிகள் எல்லாம் கண் முன்னே நடப்பவை போல இருக்கின்றன.
    பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு