நான்கு
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
அன்புள்ளம் அலை மோதியது.ஆத்திரம் ஆட்சி புரிந்தது.இன்பத்தை எதிர்பார்த்த நெஞ்சம் ஏமாற்றத்தைச் சுமந்து சென்றது. காதலில் கனிந்திருந்த இதயம் கல்லாகிக் கனன்றுகொண்டிருந்தது. நடையிலே வேகம்.கண்களிலே கண்ணீர்.சோகச் சித்திரம் ஒன்று உலகையே மறந்து ஏன் தன்னையே வெறுத்து சென்று கொண்டிருந்தது.எங்கே போகிறோம்? ஏன் போகிறோம்? என்ற கேள்விக்கு அங்கு விடையில்லை. அனார்க்கலியின் இதய சாம்ராஜ்யம் சூறாவளியில் சிக்கித் தவித்தது.இன்னும் சற்று நேரத்தில் அங்கு சூன்யமே குடிகொள்ளப் போகிறது.நடையின் வேகம் மறைந்துஅங்கே வெறி பிறந்தது.அந்த வெறிக்குத் தடை போட்டன அங்கே கேட்ட குதிரையின் குளம்பின் ஒலிகள்.
அனார்க்கலி திகைத்து நின்றாள். வனத்தின் அடர்ந்த புதர்கள் அவள் மறைந்து கொள்ளப் பெரும் உதவியாக இருந்தன.அகன்று பரந்த மார்புடனும் மெல்லிய தாடியுடனும் உயர்ந்து வளர்ந்த உருவத்துடனும் அந்த இளைஞன் அழகனாகவும் வீரனாகவும் தோற்றமளித்தான்.அவன் கண்கள் ரத்தச் சிவப்பாக இருந்தன. அத்துடன் கொலை செய்யப்போகிரவனின் வெறி அவன் கண்களில் தெரிந்தது.குதிரையை விட்டுக் கீழே இறங்கியவன் யாரையோ பார்த்துப் பேசியவண்ணம் நடந்து வந்தபோதுதான் மற்றொருவன் அங்கே நிற்பதைப் பார்த்தாள் அனார்க்கலி.
"மகமத்! விசேஷம் ஏதேனும் உண்டா? நாம் நினைத்தபடியே படையெடுப்பை நடத்தலாம் அல்லவா?"
"வெற்றி நமதே ஷேர்கான்!கவலையே வேண்டாம்.எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்துள்ளேன். நமக்கு அவமானம் இழைத்த அந்த ஜஹாங்கீரை சித்ரவதை செய்ய வேண்டும். மெஹருன்னிசாவை மீட்டு மீண்டும் உன் மனைவி என்ற அவளின் அந்தஸ்தை பெற்றுத் தரவேண்டும்."
இடைமறித்தான் ஷேர்கான்."அதைப் பற்றிக் கவலைப் படாதே. நமக்கு வெற்றி கிட்டவேண்டும் முதலில்."
"கவலையே வேண்டாம் ஷேர்கான். வெற்றி கிட்டுவதற்குப் படைவலிமையை விட மனவலிமைதான் அவசியம். தற்போது ஜஹாங்கீர் மெஹர் உன்னிசாவின் அழகில் மயங்கி அவள் காலடியே கதியாகக் கிடக்கிறான்.மேலும் அவளுக்கு உலகத்தின்ஜோதி நூர்ஜஹான் என்று பெயர் சூட்டிஇருக்கிறான். ஆகவே...."
"என்ன மஹமத்?"
".மெஹரிடம் நாம் படையெடுக்கும் விவரங்களைச் சொல்லி மேற்குக் கோட்டை வழியாகப் படைசெல்வதாக தவறான செய்தியை ஜஹாங்கீர்
நம்பும்படி அறிவிக்கச் சொல்லியிருக்கிறேன்.அவன் மேற்குவாயில் வழியே படையெடுத்துச் செல்லும்போது நாம் கிழக்குவாயில் வழியாகக் கோட்டைக்குள் நுழைவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மெஹரஉன்னிசாவே செய்து முடித்திருக்கிறாள்.அதனால் வெற்றி நமதே ஷேர்கான்."
"மஹமத்! பெண்களை நம்பி ஒரு காரியத்தில் இறங்கக் கூடாது.மேலும் மெஹர் நமக்கு உதவுவாள் என்பது என்ன நிச்சயம்?"
"ஏன் செய்யாமல்? அவள் உன் மனைவி ஷேர்கான் !"
"அது கடந்த காலம் மஹமத். இன்று அவள் ஜஹாங்கீரின் காதலி."
"அவளை மீட்டு உன்னுடன் சேர்த்துக் கொள்வது உன் கடமையல்லவா ஷேர்கான் ?"
"ம்.....பார்க்கலாம்.."
"ஷேர்கான் !, பெண்கள் ஏமாற்றத்திற்கு உள்ளானால் பெரும் புலிகளாக மாறுவர். பழிக்குப்பழி வாங்க எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள மெஹர் தனக்காகவே இந்தப் படையெடுப்பு என்று எண்ணிக் கொண்டிருக்கிறாள்."
"மஹமத்! காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளவேண்டும் என்பது தெரியாதா?சூழ்நிலை சந்தர்ப்பம் என்ற காற்று நம்பக்கம் வீசிக்கொண்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி மொகலாய சாம்ராஜ்யத்தை நம் கைக்கு மாற்றிக் கொள்ளவேண்டும். நான் விரும்புவது மங்கையை அல்ல மஹமத். மாபெரும் மொகலாய சாம்ராஜ்யத்தை."
"ஷேர்கான்!" அதிர்ச்சியில் திகைத்து நின்றான் மஹமத்.
சிரிப்பு வெடித்தது ஷேர்கானின் கண்டத்திலிருந்து. குரல் கேட்ட அதிர்ச்சியில் வனத்திலிருந்த பட்சிகள் எல்லாம் படபடவென சிறகடித்துப் பறந்தன.
"மஹமத்" என்றவாறே அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தான் தைரியம் கூறும் வகையில்.
"வா, போகலாம். நாளை மாலை சூரியன் அஸ்தமிக்கும் முன் நமது வெற்றிக்கொடியை மொகலாய சாம்ராஜ்யக் கோட்டையின் மேல்
பறக்கவிட வேண்டும்."
சிந்தனை வயப்பட்டவனாக அவனைப் பின் தொடர்ந்தான் மஹமத்கான்.
குதிரையின் மீது தாவி ஏறினர் இரு வீரர்களும். குதிரையின் குளம்பொலி வெகு தூரம் சென்று தேய்ந்து மறைந்தது.கொந்தளித்துக் கொண்டிருந்த அனார்க்கலியின் உள்ளம் இப்போது குழம்பித் தவித்தது.
'என்னை மறந்து என் வாழ்வைக் கல்லறைக்குககாணிக்கையாக்கிவிட்டு மாற்றான் மனைவியுடன் மகிழ்ந்து கொண்டிருக்கிறார் சலீம்.
காதலின் போதையிலே கடும் சூழ்ச்சி தம்மைச் சூழ்ந்து வருவதைக் கூட அறியாமல் இருக்கிறார்.என்னை ஏமாற்றியவருக்கு இந்த தண்டனை வேண்டியதுதான்.'
'சே! என்ன எண்ணம் இது! என் சலீமுக்குத் தீங்கு வருவதை நான் பார்த்துக் கொண்டிருப்பதா?இறந்துபோனவள் எழுந்து வருவாள் என்பதை அவர் எப்படி அறிவார்?அதுவும் அவர் அன்பு செலுத்தும் ஒரு பெண்ணே அவரின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருப்பதா?அதற்கு மறைமுகமாக
நானும் துணை போவதா?வருங்கால வரலாற்றில் அக்பரின் மகாசாம்ராஜயம் ஜஹாங்கீரின் காலத்தில் பெண்பித்து காரணமாக அழிந்தது எனஅவப்பெயர் உண்டாகிவிடுமே.அதற்கு நான் இடம் கொடுப்பதா?கூடாது.என் சலீமின் சாம்ராஜ்யம் அழிவதை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்.எங்கள் காதல் சாம்ராஜ்யம் அழிந்துவிட்டாலும் கருணையுள்ளம் கொண்ட அக்பரின் மகனான ஜஹாங்கீரின் மொகலாய சாம்ராஜ்யம் அழியக் கூடாது.அதற்கு நான் காரணமாகக் கூடாது.இதைத் தடுத்தே ஆகவேண்டும். சலீம் ...சலீம்... இதோவந்துவிட்டேன் உங்களைக் காப்பாற்ற '
அவள் காலடிகளின் அருகே நெருங்கி வந்து கொண்டிருந்தது மொகல் சாம்ராஜ்யக் கோட்டை.
(அடுத்த பகுதி தொடரும்)
-
ருக்மணி சேஷசாயி Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக