புதன், 29 அக்டோபர், 2014

தியாகச்சுடர்---வரலாற்றுத்தொடர்

                                                         ஐந்து       
     
.              
"உன்னிசா! உன் உதவி பயனற்றுப் போய் விட்டதம்மா. ஷேர்கான் இதுவரையில் செய்துவந்த ஏற்பாடுகள் எல்லாம் 
 உன்னை மீட்டு வரத்தான் என்று எண்ணி ஏமாந்து போனேன்.
அவன் எண்ணம் இப்போது சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றுவதில்தான் தீவிரமாகச் சென்று கொண்டிருக்கிறது."

"மஹமத், அவர் இப்படி மாறுவார் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை."
துயரத்துடன் கூறிய நூர்ஜஹான் சூன்யத்தில் பார்வையைச் செலுத்தியவாறு அமர்ந்திருந்தாள்.
'இனி எனக்கு யார் துணை?ஜஹாங்கீரின் அன்பை உதறிவிட்டு ஷேர்கானின் அன்புக்கு ஏங்கி நின்றேன்.ஆனால் என்னை வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு அவர் இப்போது உயர்ந்து விட்டார் போலும். மொகலாய சாம்ராஜ்யம் அவர் கைக்கு மாறுமானால்....அப்போது....நான் அனாதை ஆகவேண்டியதுதானா?'  மனத்தின் ஓட்டத்தில் மௌனமானாள் நூர்ஜஹான்.

"மேஹர், ஜஹாங்கீரைப் பழிவாங்கவேண்டுமென்றுதான் நான் எண்ணினேனே தவிர சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றும் எண்ணமே எனக்கில்லை.அத்துடன் உன்னை  ஷேர்கானிடம் சேர்க்க வேண்டுமென்றுதான் விரும்பினேன்.ஆனால் ஷேர்கானின் எண்ணம் வேறு விதமாக உள்ளதம்மா."
பெருமூச்சுடன் அங்குமிங்கும் நடை பயின்றான் மஹமத்.

"மஹமத், நேரமாகிவிட்டது நீ புறப்படு. ஜஹாங்கீர் மேற்கு வாயில் வழியே புறப்பட்டிருப்பார்.நம் படைகளும் உள்ளே நுழைந்திருக்கும்.ஷேர்கான் இங்கு வந்தால் அவரை நான் கவனித்துக் கொள்கிறேன்.காலம் என் கைக்குள் அடங்கியது மஹமத்"
ஏதோ திட்டத்துடன் தலையசைத்து அவனுக்கு விடையளித்தாள் மேஹர் உன்னிசா என்ற நூர்ஜஹான்.

மஹமத் வெளியேறுமுன் ஒரு பெண்ணுருவம் அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறியதை இருவரும் கவனிக்கவில்லை.
                       
காட்டுப்பாதை வழியே கல்லும் முள்ளும் நிறைந்திருந்த இடத்திலும் தன உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினாள் அனார்க்கலி. குறுக்குபாதை வழியாக வந்தும் மேற்குவாயில் வழியே செல்லும் படைகளைத் தடுத்து நிறுத்த இயலவில்லை.

"பாதுஷா!    ஜகாம்பனாஹ்!..." என்ற குரல் தன்  தொண்டைக்குள்ளிருந்து உரக்க வெளிவந்ததாகத்தான் எண்ணினாள்.ஆனால் பசியினாலும் களைப்பினாலும் சோர்ந்து போன அவள் உடல் இயந்திரமாக இயங்கிக் கொண்டிருந்ததே தவிர அதில் உணர்ச்சிகள் ஒடுங்கி வெகு நேரமாகிவிட்டிருந்தது.
                      தன்  இயலாமையை எண்ணி மனம் நொந்த அனார் மலை உச்சியை நோக்கி ஓடினாள்  கல் இடறி காலில் ரத்தம் கசிந்தது. முட்களால் ஆடைகள் கிழிந்து தொங்கின.எப்படியும் சலீமின் படையை நிறுத்திவிடவேண்டும் என்னும் எண்ணம் ஒன்றே அவள் குறிக்கோளாக இருந்தது. மலைஉச்சியை அடையுமுன்பே அவள் சலீம், சலீம் என்று உரத்துக் கத்தினாள்.உச்சியில் இருந்து சலீம் என்று கூவிய அவள் குரல் குதிரைகளின் குளம்பின் ஒலியில் காற்றோடு கலந்து  மறைந்தே போயிற்று. குதிரைப்படை தன்போக்கில் போய்க் கொண்டிருந்தது.மலை உச்சியில் சலீம் எனக் கத்தியவாறே படையுடன் ஓடிக் கொண்டிருந்தாள்  அனார்க்கலி.
                          படைவீரர்களுக்கு முன்பாக வெள்ளைப்புரவி ஒன்றின்  மேல் போர்க்கவசமணிந்து கம்பீரமாகச் சென்று கொண்டிருந்தான் சலீம்.வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டு படைநடத்திசெல்லும் சலீமைத் தடுக்க தன குரல் பயன்படாது என உணர்ந்து  கொண்டாள்  அந்தப் பேதை. இனி என்செய்வது? உயிரைப் பணயம் வைக்கவேண்டியதுதான்.அப்போதுதான் என் எண்ணம் நிறைவேறும். என முடிவு செய்தாள்.
மறுகணம் மலை உச்சியிலிருந்து ஒரு உருவம் உருண்டு புரவிப் படைக்குக் குறுக்கே வந்து விழுந்தது.வேகமாகச் சென்று கொண்டிருந்த சலீம் தன் குதிரையின் கடிவாளத்தை எவ்வளவு இழுத்துப் பிடித்தும் அனார்க்கலியின் உடலைத் துவைத்துவிட்டுத்தான் நின்றது அந்தப் புரவி.துள்ளிக் குதித்து ஓடிவந்த ஜஹாங்கீர் ரத்தம் தோய்ந்த அந்த உடலைத் தன மடியில் கிடத்திக் கொண்டான்.
 
"சகோதரி!  யார் நீ? ஏனிந்த தற்கொலை முயற்சி?"
சலீமின் குரல் காதில் விழுந்ததும் கண்களைத் திறந்தாள் அனார்.சிறிது நேரம் மூச்சுவிடத் திணறி விட்டு,
.
"பிரபு, நான் உங்கள் அடிமை.கிழக்குவாசல் வழியே பகைவர் படை நுழைந்து விட்டது.மேற்கு வாசல் என்ற செய்தி தவறானது.மொகல் சாம்ராஜ்யம் கைமாறும் நிலைக்கு வந்து விட்டது. உடனே புறப்படுங்கள் "என்றவள் .ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டாள்.
ஜஹாங்கீர் அதிர்ச்சியும் கோபமும் கொண்டான்.  "இந்தச் செய்தி ஆதாரமுள்ளதுதானா?உனக்கு நன்றாகத் தெரியுமா?"
.
"என் உயிரின்மேல் ஆணை பிரபு."
.
"இதோ புறப்படுகிறேன்.சிப்பாய் இரண்டுபேர் இந்தப் பெண்ணை அரண்மனை அந்தப்புரத்திற்கு எடுத்துச் செல்லுங்கள் வைத்தியரிடம் நன்கு சிகிச்சையளிக்கச் சொல்லுங்கள்.நமது படை இரு பகுதியாகப் பிரியட்டும் ஒரு பகுதி இங்கேயே நிற்கட்டும் மற்றோடு பகுதி என்னுடன் கிழக்கு வாசலுக்கு வரட்டும்." என்று கூறியவாறு குதிரையின் மேல் தாவி ஏறினான் ஜஹாங்கீர். .
 பாதிப் படை புழுதியைக் கிளப்பியவாறே  அவனைத் தொடர்ந்து சென்று மறைந்தது.

                                                                                            (அடுத்த பகுதி தொடரும்)







               









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

1 கருத்து:

  1. தன்மேல் கொண்ட காதலை மறந்தவனுக்கு உதவி செய்யும் பெண் உள்ளம். பெண்கள் மனதை யார் புரிந்துகொள்ள முடியும்?

    பதிலளிநீக்கு