சனி, 1 நவம்பர், 2014

தியாகச்சுடர்---------வரலாற்றுத் தொடர்.

                                        ஏழு 


    வேதனை மிகுந்த உடலைச் சற்றே அசைத்தாள்  அனார். அவள் சரியாகப் படுக்க உதவிய நூர்ஜஹான் இன்னும் சற்று அருகே வந்து அமர்ந்து கொண்டாள்.
"சொல் அனார்.உன் விருப்பத்தைக் கட்டாயம் நிறைவேற்றுவேன்.தயங்காமல் சொல்வறண்ட தன உதடுகளை நாவால் தடவிக் கொண்ட அனார் தன அருகே வருமாறு செய்கை செய்தாள் 

அவளுக்கு இன்னுமருகே நெருங்கி அமர்ந்தாள்  நூர்ஜஹான்.

"நூர்ஜஹான் இனி எக்காலத்திலும் என் சலீமுக்கு துரோகம் நினைக்கக் கூடாது.இரண்டாவது நான் தான் அனார்க்கலி என்பது அவருக்குத் தெரியக்கூடாது.இந்த ரகசியம் நம்முடனேயே மறைந்து விட வேண்டும்."

நூர்  அனாரின் கரங்களை இன்னும   அழுத்தமாகப் பற்றினாள்.


"அப்படியானால்......அவருக்கு நீதான் அனார் என்பது தெரியாதா...?"

"தெரியாது   நூர். தெரிந்திருந்தால் என்னை சகோதரி என்று அழைப்பாரா? நான் அவ்வளவு உருமாறி விட்டேன்."  விரக்திப்  புன்னகையுடன் கண்ணீரும் வெளிவந்தது.

"அனார்க்கலி, சகோதரி,! சரித்திரத்தில் தீராப் பழிகாரியாக நான் ஆகிவிடாமல் என்னைக் காப்பாற்றி விட்டாய்.உனக்கு என்ன கைம்மாறு செய்வேன்?"

"எனக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்று அது போதும் எனக்கு."

"இனி ஜஹாங்கீர் எனக்கு தெய்வத்துக்கும்  மேலானவர்.அவர் இன்பமாக வாழ்வதையே என் லட்சியமாகக் கொள்வேன் அனார்."

"மிக்க மகிழ்ச்சி நூர்.மிக்க நன்றி. அந்தப் பழரசம் கொடு. என் நா வரள்கிறது."

"அது வேண்டாம் சகோதரி. புதிதாகக் கொண்டு வரச் சொல்கிறேன்."என்றவள் பணிப்பெண்ணை கண்ணால் ஜாடை காட்டி பழரசம் கொண்டுவரப் பணித்தாள்.

"ஏன்? அது அவ்வளவு உயர்ந்ததா? நான் சாப்பிடத் தகுதியில்லாதவளா?"

"ஐயோ அப்படியில்லை அனார்.உன் உடமைகளைத்தான் நான் அனுபவித்து வருகிறேன்....அது...நஞ்சு கலந்தது."

"என்ன?"

"ஆமாம்"  வெறுப்பு நூர்ஜஹானின் அழகிய முகத்தைக் கூட கோரமாக்கியது.
"அது... என்னை வஞ்சிக்க எண்ணியவருக்காகத்   தயாராக உள்ளது.அனார், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகத் திட்டமிட்டுக் காரியங்கள் செய்கின்றனர்.ஆனால் அது சில சமயங்களில் வேறு விதமாக முடிந்து விடுவதும் உண்டு.போரில் ஷேர்கான் வெற்றிபெற்று விட்டால் சாம்ராஜ்ய ஆசையில் எதுவும் செய்வார்.அதைத் தடுக்க அவரை இவ்வுலகினின்றும் விடுதலை செய்துவிட எண்ணியே பழரசத்தில் நஞ்சு கலந்துவைத்துள்ளேன்.ஆனால் உன் தியாகத்தால் அதற்கு இடமில்லாமல் செய்துவிட்டாய்.வெற்றி நிச்சயமாக ஜஹாங் கீருடையதுதான். 

"சொல்... நூர் வெற்றி என் சலீமுடையதுதான்."

"பேகம் சாஹிபா,! ஜகாம்பனாஹ் வெற்றி பெற்றுவிட்டார். இங்குதான் வந்துகொண்டிருக்கிறார்."
பணிப்பெண் தன கடமையை முடித்துச் சென்றாள்.
.
நூர்ஜஹான், நான் இருந்தாலும் இறந்தாலும் நான் தான் அனர்க்கலி  என்று ஜஹாங்கீருக்குத் தெரிவிக்கவே கூடாது."

"கவலைப்படாதே அனார்."என்றபடியே ஜஹாங்கீரை வரவேற்கச் 
சித்தமானாள்  நூர்ஜஹான்.

                                           (அடுத்த பகுதி  தொடரும் )













--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 31 அக்டோபர், 2014

தியாகச்சுடர்-------வரலாற்றுத் தொடர்.

                                            ஆறு.


                "நூர்ஜஹான் இவ்வளவு பெரியதுரோகத்தைச் செய்வாய் என நான் நினைக்கவில்லை." 

"என்ன ஆணவம் உனக்கு? ஒரு பணிப்பெண் என்னைப் பெயரிட்டு அழைப்பதா?ஜஹாம்பனா ஜஹாங்கீரின் ஆணை என்பதால் உன்னை அரண்மனை அந்தப்புரத்திற்குள்  அனுமதித்தேன்.இல்லையேல்..." ஆத்திரத்துடன் பற்களைக் கடித்தாள்  நூர்.

சற்றே பெருமூச்சு விட்ட அனார் மிகுந்த சிரமப்பட்டு மெதுவாகப் பேசினாள். 

"பதறாதே சகோதரி, நீ என்னை விரட்டுமுன் என் உயிர் இந்த உடலைவிட்டுப் பிரிந்து விடும்.அல்லா என்னை அழைத்துவிட்டார். ஆனால் கடைசியாக என் சலீமை இந்தக் கண்களால் மீண்டும் ஒருமுறை காணவேண்டும். அவர் வெற்றி பெற்ற செய்தியைக் கேட்க வேண்டுமென்றே  இந்த உடலில் இன்னும் இந்த உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது நூர்ஜஹான்!"

"அவருக்கு மிகவும் வேண்டியவளாகத் தோன்றுகிறது உன்னைப் பார்த்தால்....நீ...யார் ?"

"ஆம்... ஒரு காலத்தில் அவருக்கு வேண்டியவளாகத்தான் இருந்தேன். ஏன்...நானின்றி இந்த உலகே இல்லையென இருந்தவர்தான் என் சலீம். எங்கள் காதல்கதை உலகறிந்ததாக உள்ளது. காதலுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த எங்கள் வாழ்க்கை சோகமுடிவை எய்தி ஒரு கல்லறைக்குள் அடங்கி விட்டது."அதிகம் பேசிய ஆயாசம் தாங்காமல் மூர்ச்சையானாள் அனார்.

நூர்ஜஹான் ஓடிச்சென்று அவள் மூர்ச்சை தெளிவித்து சிறிது பாலை அவள் வாயில் புகட்டினாள்.

"கல்லறைக்குள் அடங்கியது என்றால்....."  என்று எண்ணமிட்ட நூர்ஜஹானின் கரங்கள் நடுங்கின. 

"அனார்க்கலியா இவள்..?" சிந்தனைச் சிற்பமாக ஊமையாக அமர்ந்துவிட்டாள்  நூர்ஜஹான்.

"என் நூர் ...பேசாமல் அமர்ந்துவிட்டாய்!...ம்...நீ என்ன நினைக்கிறாய் என்பது தெரியும். உன் சந்தேகம் சரிதான்.நான் தான் 'நாதிரா'.
அக்பர் பாதுஷாவினால் 'அனார்க்கலி' என்று பட்டம் சூட்டப் பட்டவள் "

"நீ,....நீங்கள் கொல்லப்பட்டதாகச் சொல்வது...!"

 வறண்ட அனாரின் உதடுகள் புன்னகையை உதிர்த்தன.குரல் கரகரக்க "நான் உன் சகோதரி நூர் என்னை நீ என்றே அழைக்கலாம்.நான் கல்லறைக்குள் அடக்கப்பட்டது உண்மை.அது உலகத்தின் கண்களுக்கு.ஆனால் கருணையே வடிவான அக்பர் பாதுஷா இப்படிப்பட்ட கொடுமையான காரியத்தைச் செய்வாரா?சுரங்கப் பாதை வழியே தப்பிச் செல்ல வழிகாட்டினார்.சலீமைப் பார்க்கவோ அவருடன் பேசவோ மாட்டேன்  என்று  வாக்குறுதி கொடுத்துவிட்டு இந்த சாம்ராஜ்யத்துக்கு வெளியே ஒரு காட்டில் என் தாயுடன் வாழ்ந்து  வந்தேன்."
என்றாள் ஆயாசத்துடன்.

"அனார்க்கலி, உங்கள் கதை பெரும் காவியமாகவே புனையப்பட்டுள்ளது. உன்னைக்காணவேண்டுமென்று நான் விரும்பியதுண்டு. ஆனால் இறந்துவிட்ட உன்னை எப்படிக் காண இயலும் என்று எண்ணியிருந்தேன்.என் விருப்பம் கைகூடுமென்று கனவிலும் நான் கருதவில்லை.ஆனால்...இந்த நிலைக்கு ....உன் உயிரைப் பணயம் வைக்கும் நிலைக்கு.... இப்படி நீ ஏன் முடிவு செய்தாய் அனார்..?"

"நூர்...அவரின்றி...என் விரகவேதனையை உள்ளடக்கிக் கொண்டு ஒவ்வொரு கணமும் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு வாழ என்னால் இயலவில்லை.இந்த உயிர் அவருக்கே சொந்தமானது.அவருக்காகவே இதை அர்ப்பணித்தால் அதைவிட வேறு பாக்கியம் என்ன இருக்கிறது எனக்கு?"

"அனார்க்கலி மாதர்களுக்குள்  மாணிக்கம்  நீ. உன்னருகே நிற்கவும் தகுதியற்றவள் நான்.ஒரு பெண்ணிடம் காதல் கொண்டவர் என்னை விரும்புவது எனக்குப் பிடிக்காத காரணத்தால் நான் ஜஹாங்கீரை வெறுத்தேன். ஆனால் காதலின் தன்மையையும் அதன் தெய்வீக சக்தியையும் பெருமையையும் நன்கு உணர்ந்தவர் உன் சலீம்.ஷேர்கானை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்.அதுவும் உன்னைப்போன்ற ஒரு பெண் அவருக்காகக் காதலையும் உயிரையும் தியாகம் செய்ய வேண்டுமென்றால் அவர் எத்தனை உயர்ந்த புருஷராக இருக்கவேண்டும்?
இந்த உண்மை எனக்கு இப்போதுதான் புலப்படுகிறது.அதன் உயர்வை நான் இப்போதுதான் உணர்கிறேன்."

"நூர்ஜஹான், சகோதரி,..!  உயிரை இழக்கப்போகும் எனக்கு நீ இரண்டு வாக்குக் கொடுக்க வேண்டும்.அதை நீ உன் உயிருள்ளவரை காப்பாற்ற வேண்டும். செய்வாயா?" நூர்ஜஹான் தன இரு கரங்களுக்குள் நடுங்கும் அனாரின் கரங்களைச் சிறை வைத்துக் கொண்டாள் உரிமையோடு.

"சொல் சகோதரி.உன் அன்புக்காகவும் தியாகத்துக்காகவும் நான் எது வேண்டுமாயினும் செய்யக் கடமைப் பட்டுள்ளேன்."குரல் கரகரக்க கண்களில் கண்ணீர் திரையிடக் கூறினாள்  நூர்ஜஹான்.

                                                                                (அடுத்தபகுதி தொடரும்)







--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 29 அக்டோபர், 2014

தியாகச்சுடர்---வரலாற்றுத்தொடர்

                                                         ஐந்து       
     
.              
"உன்னிசா! உன் உதவி பயனற்றுப் போய் விட்டதம்மா. ஷேர்கான் இதுவரையில் செய்துவந்த ஏற்பாடுகள் எல்லாம் 
 உன்னை மீட்டு வரத்தான் என்று எண்ணி ஏமாந்து போனேன்.
அவன் எண்ணம் இப்போது சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றுவதில்தான் தீவிரமாகச் சென்று கொண்டிருக்கிறது."

"மஹமத், அவர் இப்படி மாறுவார் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை."
துயரத்துடன் கூறிய நூர்ஜஹான் சூன்யத்தில் பார்வையைச் செலுத்தியவாறு அமர்ந்திருந்தாள்.
'இனி எனக்கு யார் துணை?ஜஹாங்கீரின் அன்பை உதறிவிட்டு ஷேர்கானின் அன்புக்கு ஏங்கி நின்றேன்.ஆனால் என்னை வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு அவர் இப்போது உயர்ந்து விட்டார் போலும். மொகலாய சாம்ராஜ்யம் அவர் கைக்கு மாறுமானால்....அப்போது....நான் அனாதை ஆகவேண்டியதுதானா?'  மனத்தின் ஓட்டத்தில் மௌனமானாள் நூர்ஜஹான்.

"மேஹர், ஜஹாங்கீரைப் பழிவாங்கவேண்டுமென்றுதான் நான் எண்ணினேனே தவிர சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றும் எண்ணமே எனக்கில்லை.அத்துடன் உன்னை  ஷேர்கானிடம் சேர்க்க வேண்டுமென்றுதான் விரும்பினேன்.ஆனால் ஷேர்கானின் எண்ணம் வேறு விதமாக உள்ளதம்மா."
பெருமூச்சுடன் அங்குமிங்கும் நடை பயின்றான் மஹமத்.

"மஹமத், நேரமாகிவிட்டது நீ புறப்படு. ஜஹாங்கீர் மேற்கு வாயில் வழியே புறப்பட்டிருப்பார்.நம் படைகளும் உள்ளே நுழைந்திருக்கும்.ஷேர்கான் இங்கு வந்தால் அவரை நான் கவனித்துக் கொள்கிறேன்.காலம் என் கைக்குள் அடங்கியது மஹமத்"
ஏதோ திட்டத்துடன் தலையசைத்து அவனுக்கு விடையளித்தாள் மேஹர் உன்னிசா என்ற நூர்ஜஹான்.

மஹமத் வெளியேறுமுன் ஒரு பெண்ணுருவம் அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறியதை இருவரும் கவனிக்கவில்லை.
                       
காட்டுப்பாதை வழியே கல்லும் முள்ளும் நிறைந்திருந்த இடத்திலும் தன உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினாள் அனார்க்கலி. குறுக்குபாதை வழியாக வந்தும் மேற்குவாயில் வழியே செல்லும் படைகளைத் தடுத்து நிறுத்த இயலவில்லை.

"பாதுஷா!    ஜகாம்பனாஹ்!..." என்ற குரல் தன்  தொண்டைக்குள்ளிருந்து உரக்க வெளிவந்ததாகத்தான் எண்ணினாள்.ஆனால் பசியினாலும் களைப்பினாலும் சோர்ந்து போன அவள் உடல் இயந்திரமாக இயங்கிக் கொண்டிருந்ததே தவிர அதில் உணர்ச்சிகள் ஒடுங்கி வெகு நேரமாகிவிட்டிருந்தது.
                      தன்  இயலாமையை எண்ணி மனம் நொந்த அனார் மலை உச்சியை நோக்கி ஓடினாள்  கல் இடறி காலில் ரத்தம் கசிந்தது. முட்களால் ஆடைகள் கிழிந்து தொங்கின.எப்படியும் சலீமின் படையை நிறுத்திவிடவேண்டும் என்னும் எண்ணம் ஒன்றே அவள் குறிக்கோளாக இருந்தது. மலைஉச்சியை அடையுமுன்பே அவள் சலீம், சலீம் என்று உரத்துக் கத்தினாள்.உச்சியில் இருந்து சலீம் என்று கூவிய அவள் குரல் குதிரைகளின் குளம்பின் ஒலியில் காற்றோடு கலந்து  மறைந்தே போயிற்று. குதிரைப்படை தன்போக்கில் போய்க் கொண்டிருந்தது.மலை உச்சியில் சலீம் எனக் கத்தியவாறே படையுடன் ஓடிக் கொண்டிருந்தாள்  அனார்க்கலி.
                          படைவீரர்களுக்கு முன்பாக வெள்ளைப்புரவி ஒன்றின்  மேல் போர்க்கவசமணிந்து கம்பீரமாகச் சென்று கொண்டிருந்தான் சலீம்.வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டு படைநடத்திசெல்லும் சலீமைத் தடுக்க தன குரல் பயன்படாது என உணர்ந்து  கொண்டாள்  அந்தப் பேதை. இனி என்செய்வது? உயிரைப் பணயம் வைக்கவேண்டியதுதான்.அப்போதுதான் என் எண்ணம் நிறைவேறும். என முடிவு செய்தாள்.
மறுகணம் மலை உச்சியிலிருந்து ஒரு உருவம் உருண்டு புரவிப் படைக்குக் குறுக்கே வந்து விழுந்தது.வேகமாகச் சென்று கொண்டிருந்த சலீம் தன் குதிரையின் கடிவாளத்தை எவ்வளவு இழுத்துப் பிடித்தும் அனார்க்கலியின் உடலைத் துவைத்துவிட்டுத்தான் நின்றது அந்தப் புரவி.துள்ளிக் குதித்து ஓடிவந்த ஜஹாங்கீர் ரத்தம் தோய்ந்த அந்த உடலைத் தன மடியில் கிடத்திக் கொண்டான்.
 
"சகோதரி!  யார் நீ? ஏனிந்த தற்கொலை முயற்சி?"
சலீமின் குரல் காதில் விழுந்ததும் கண்களைத் திறந்தாள் அனார்.சிறிது நேரம் மூச்சுவிடத் திணறி விட்டு,
.
"பிரபு, நான் உங்கள் அடிமை.கிழக்குவாசல் வழியே பகைவர் படை நுழைந்து விட்டது.மேற்கு வாசல் என்ற செய்தி தவறானது.மொகல் சாம்ராஜ்யம் கைமாறும் நிலைக்கு வந்து விட்டது. உடனே புறப்படுங்கள் "என்றவள் .ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டாள்.
ஜஹாங்கீர் அதிர்ச்சியும் கோபமும் கொண்டான்.  "இந்தச் செய்தி ஆதாரமுள்ளதுதானா?உனக்கு நன்றாகத் தெரியுமா?"
.
"என் உயிரின்மேல் ஆணை பிரபு."
.
"இதோ புறப்படுகிறேன்.சிப்பாய் இரண்டுபேர் இந்தப் பெண்ணை அரண்மனை அந்தப்புரத்திற்கு எடுத்துச் செல்லுங்கள் வைத்தியரிடம் நன்கு சிகிச்சையளிக்கச் சொல்லுங்கள்.நமது படை இரு பகுதியாகப் பிரியட்டும் ஒரு பகுதி இங்கேயே நிற்கட்டும் மற்றோடு பகுதி என்னுடன் கிழக்கு வாசலுக்கு வரட்டும்." என்று கூறியவாறு குதிரையின் மேல் தாவி ஏறினான் ஜஹாங்கீர். .
 பாதிப் படை புழுதியைக் கிளப்பியவாறே  அவனைத் தொடர்ந்து சென்று மறைந்தது.

                                                                                            (அடுத்த பகுதி தொடரும்)







               









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

திங்கள், 27 அக்டோபர், 2014

தியாகச்சுடர் ------வரலாற்றுத் தொடர்.

                                         நான்கு 


                        அன்புள்ளம் அலை மோதியது.ஆத்திரம் ஆட்சி புரிந்தது.இன்பத்தை எதிர்பார்த்த நெஞ்சம் ஏமாற்றத்தைச் சுமந்து சென்றது. காதலில் கனிந்திருந்த இதயம் கல்லாகிக் கனன்றுகொண்டிருந்தது. நடையிலே வேகம்.கண்களிலே கண்ணீர்.சோகச் சித்திரம் ஒன்று உலகையே மறந்து ஏன் தன்னையே வெறுத்து சென்று கொண்டிருந்தது.எங்கே போகிறோம்? ஏன் போகிறோம்? என்ற கேள்விக்கு அங்கு விடையில்லை. அனார்க்கலியின் இதய சாம்ராஜ்யம் சூறாவளியில் சிக்கித் தவித்தது.இன்னும் சற்று நேரத்தில் அங்கு சூன்யமே குடிகொள்ளப் போகிறது.நடையின் வேகம் மறைந்துஅங்கே வெறி பிறந்தது.அந்த வெறிக்குத் தடை போட்டன அங்கே கேட்ட குதிரையின் குளம்பின் ஒலிகள்.

                       அனார்க்கலி திகைத்து நின்றாள். வனத்தின் அடர்ந்த புதர்கள் அவள் மறைந்து கொள்ளப் பெரும் உதவியாக இருந்தன.அகன்று பரந்த மார்புடனும் மெல்லிய தாடியுடனும் உயர்ந்து வளர்ந்த உருவத்துடனும் அந்த இளைஞன் அழகனாகவும் வீரனாகவும் தோற்றமளித்தான்.அவன் கண்கள் ரத்தச் சிவப்பாக இருந்தன. அத்துடன் கொலை செய்யப்போகிரவனின் வெறி அவன் கண்களில் தெரிந்தது.குதிரையை விட்டுக் கீழே இறங்கியவன் யாரையோ பார்த்துப் பேசியவண்ணம் நடந்து வந்தபோதுதான் மற்றொருவன் அங்கே நிற்பதைப் பார்த்தாள்  அனார்க்கலி.


"மகமத்! விசேஷம் ஏதேனும் உண்டா? நாம் நினைத்தபடியே படையெடுப்பை நடத்தலாம்  அல்லவா?"

"வெற்றி நமதே ஷேர்கான்!கவலையே  வேண்டாம்.எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்துள்ளேன்.  நமக்கு அவமானம் இழைத்த அந்த ஜஹாங்கீரை சித்ரவதை செய்ய வேண்டும். மெஹருன்னிசாவை  மீட்டு மீண்டும் உன் மனைவி என்ற அவளின் அந்தஸ்தை பெற்றுத் தரவேண்டும்."

இடைமறித்தான் ஷேர்கான்."அதைப் பற்றிக் கவலைப் படாதே. நமக்கு வெற்றி கிட்டவேண்டும் முதலில்."

"கவலையே வேண்டாம் ஷேர்கான். வெற்றி கிட்டுவதற்குப் படைவலிமையை விட மனவலிமைதான் அவசியம். தற்போது ஜஹாங்கீர் மெஹர் உன்னிசாவின் அழகில் மயங்கி அவள் காலடியே கதியாகக் கிடக்கிறான்.மேலும் அவளுக்கு உலகத்தின்ஜோதி நூர்ஜஹான் என்று பெயர் சூட்டிஇருக்கிறான்.  ஆகவே...."

"என்ன மஹமத்?"

".மெஹரிடம்  நாம் படையெடுக்கும் விவரங்களைச் சொல்லி மேற்குக் கோட்டை வழியாகப் படைசெல்வதாக தவறான செய்தியை ஜஹாங்கீர் 
நம்பும்படி அறிவிக்கச் சொல்லியிருக்கிறேன்.அவன் மேற்குவாயில் வழியே படையெடுத்துச் செல்லும்போது நாம் கிழக்குவாயில்  வழியாகக் கோட்டைக்குள் நுழைவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மெஹரஉன்னிசாவே செய்து முடித்திருக்கிறாள்.அதனால் வெற்றி  நமதே ஷேர்கான்."


"மஹமத்! பெண்களை நம்பி ஒரு காரியத்தில் இறங்கக் கூடாது.மேலும் மெஹர் நமக்கு உதவுவாள் என்பது என்ன நிச்சயம்?"

"ஏன் செய்யாமல்? அவள் உன் மனைவி ஷேர்கான் !"

"அது கடந்த காலம் மஹமத். இன்று அவள் ஜஹாங்கீரின் காதலி."

"அவளை மீட்டு உன்னுடன் சேர்த்துக் கொள்வது உன் கடமையல்லவா ஷேர்கான் ?"

"ம்.....பார்க்கலாம்.."

"ஷேர்கான் !, பெண்கள் ஏமாற்றத்திற்கு உள்ளானால் பெரும் புலிகளாக மாறுவர். பழிக்குப்பழி வாங்க எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள மெஹர் தனக்காகவே இந்தப் படையெடுப்பு என்று எண்ணிக் கொண்டிருக்கிறாள்."

"மஹமத்! காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளவேண்டும் என்பது தெரியாதா?சூழ்நிலை சந்தர்ப்பம் என்ற காற்று நம்பக்கம் வீசிக்கொண்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி மொகலாய சாம்ராஜ்யத்தை நம் கைக்கு மாற்றிக் கொள்ளவேண்டும். நான் விரும்புவது மங்கையை அல்ல மஹமத். மாபெரும் மொகலாய சாம்ராஜ்யத்தை."

"ஷேர்கான்!"  அதிர்ச்சியில் திகைத்து  நின்றான் மஹமத்.

சிரிப்பு வெடித்தது ஷேர்கானின் கண்டத்திலிருந்து. குரல் கேட்ட அதிர்ச்சியில் வனத்திலிருந்த  பட்சிகள் எல்லாம் படபடவென சிறகடித்துப்  பறந்தன.

"மஹமத்" என்றவாறே அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தான் தைரியம் கூறும் வகையில்.

"வா, போகலாம். நாளை மாலை சூரியன் அஸ்தமிக்கும் முன் நமது வெற்றிக்கொடியை மொகலாய சாம்ராஜ்யக்  கோட்டையின் மேல் 
பறக்கவிட வேண்டும்."

சிந்தனை வயப்பட்டவனாக அவனைப் பின் தொடர்ந்தான் மஹமத்கான்.

குதிரையின் மீது தாவி ஏறினர் இரு வீரர்களும்.  குதிரையின் குளம்பொலி வெகு தூரம் சென்று தேய்ந்து மறைந்தது.கொந்தளித்துக் கொண்டிருந்த அனார்க்கலியின் உள்ளம் இப்போது குழம்பித் தவித்தது.
'என்னை மறந்து என் வாழ்வைக் கல்லறைக்குககாணிக்கையாக்கிவிட்டு  மாற்றான் மனைவியுடன் மகிழ்ந்து கொண்டிருக்கிறார் சலீம்.
காதலின் போதையிலே கடும் சூழ்ச்சி தம்மைச் சூழ்ந்து வருவதைக் கூட அறியாமல் இருக்கிறார்.என்னை ஏமாற்றியவருக்கு இந்த தண்டனை வேண்டியதுதான்.'

'சே! என்ன எண்ணம் இது! என் சலீமுக்குத் தீங்கு வருவதை நான் பார்த்துக் கொண்டிருப்பதா?இறந்துபோனவள் எழுந்து வருவாள் என்பதை அவர் எப்படி அறிவார்?அதுவும் அவர் அன்பு செலுத்தும் ஒரு பெண்ணே அவரின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருப்பதா?அதற்கு மறைமுகமாக 
நானும் துணை போவதா?வருங்கால வரலாற்றில் அக்பரின் மகாசாம்ராஜயம் ஜஹாங்கீரின் காலத்தில் பெண்பித்து காரணமாக அழிந்தது எனஅவப்பெயர் உண்டாகிவிடுமே.அதற்கு நான் இடம் கொடுப்பதா?கூடாது.என் சலீமின் சாம்ராஜ்யம் அழிவதை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்.எங்கள் காதல் சாம்ராஜ்யம் அழிந்துவிட்டாலும் கருணையுள்ளம் கொண்ட அக்பரின் மகனான ஜஹாங்கீரின் மொகலாய சாம்ராஜ்யம் அழியக் கூடாது.அதற்கு நான் காரணமாகக் கூடாது.இதைத் தடுத்தே ஆகவேண்டும்.  சலீம் ...சலீம்... இதோவந்துவிட்டேன் உங்களைக் காப்பாற்ற '  

அவள் காலடிகளின் அருகே நெருங்கி வந்து கொண்டிருந்தது மொகல் சாம்ராஜ்யக் கோட்டை.

                                                                         (அடுத்த பகுதி தொடரும்)




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com