குமாரபுரி மன்னனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தனர்.மூத்தவன்குமாரசிம்மன்.இளையவன் அமரசிம்மன்.
இருவருமே வீரத்திலும் கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கினர்.அத்துடன் இருவருமே மிகவும் ஒற்றுமையுடனும் பாசத்துடனும் ஒருவருக்கொருவர் அன்புடனும் வாழ்ந்து வந்தனர்.
இளவரசர்கள் இருவரும் காளையர்களாக வளர்ந்து நின்றனர்.மன்னனும் வயது முதிர்ச்சியால் தளர்ச்சியடைந்தான்.சீக்கிரமே தன மூத்த மகனுக்கு முடிசூட்டிவிட முடிவு செய்தான்.
இளவரசர்கள் இருவரும் காளையர்களாக வளர்ந்து நின்றனர்.மன்னனும் வயது முதிர்ச்சியால் தளர்ச்சியடைந்தான்.சீக்கிரமே தன மூத்த மகனுக்கு முடிசூட்டிவிட முடிவு செய்தான்.
அந்த நாட்டுமந்திரியின் மகன் மகேந்திரன் சகோதரர்கள் ஒற்றுமையாக இருப்பதை விரும்பாமல் எப்படியாவது இவர்களுக்குள் பகையை மூட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்தான்.
சொல்வார் பேச்சைக் கேட்கும் எண்ணம் அமரசிம்மனுக்கு இருக்கிறது எனத் தெரிந்து கொண்டு அவனிடம் பேச்சுக் கொடுத்தான்.
மூத்தவனுக்கு முடிசூட்டிவிட்டால் இளையவன் அடிமைதான் என்பது போன்ற அச்சத்தையும்உண்டாக்கி அவனை ஒழிக்க குமாரசிம்மன் திட்டமிடுவதாகவும் பலப்பல சொல்லி மனத்தைக் கலைத்தான்.எடுப்பார் கைப் பிள்ளையாக இருந்தஅமரசிம்மன் இதை நம்பி தன் அண்ணனை சந்தேகத்துடனேயே பார்க்க ஆரம்பித்தான்.
மகேந்திரனின் இந்த சூழ்ச்சியை அறியாத குமாரசிம்மனும் தம்பியிடம் பாசத்துடனேயே பழகி வந்தான். நாட்கள் செல்லச் செல்ல மகேந்திரனின் சூழ்ச்சிக்கு முற்றிலுமாக அடிமையாகிவிட்டான் அமரசிம்மன்.தன் அண்ணன் தன்னை எப்போது கொல்ல முயற்சிப்பானோ என்று அச்சப்பட ஆரம்பித்தான். ஆனால் உள்ளத்தில் கள்ளமில்லாத குமாரசிம்மனோ அவனிடம் அன்போடு பழகிவந்தான்.
மன்னரின் குலவழக்கப்படி சகோதரர் இருவரையும் காட்டில் வாழும் கொடிய விலங்குகளை வேட்டையாடி வரும்படி மன்னன் ஆணை பிறப்பித்தான்.
அந்த ஆணையை ஏற்ற குமாரசிம்மனும் அமரசிம்மனும் காட்டுக்கு வேட்டையாட புறப்பட்டனர்.
அமரசிம்மன் மகேந்திரனின் வஞ்சகச் சொற்களை எண்ணிக் கொண்டே வந்தான். அண்ணன் தன்னை எப்போது கொல்வானோ என்று சற்று கவனத்துடனேயே நடந்தான்.
மகேந்திரன் அந்த அளவுக்கு அவன் மனதில்வஞ்சகத்தை ஆழமாக விதைத்திருந்தான்.
இருவரும் மாலைவரை வேட்டையாடிக் களைத்தனர். பசியுடனும் களைப்புடனும் தங்கள் கூடாரத்தை நோக்கித் திரும்பினர்.
லேசாக இருள் கவியும் நேரமும் வந்தது அமரசிம்மன் எதுவும் பேசாமலேயே நடந்தான்.தம்பியை அன்புடன் திரும்பிப் பார்த்தவண்ணம் நடந்த குமாரசிம்மன் அருகே இருந்த நீரிருக்கும் புதைகுழியில் விழுந்தான்.சற்றே அதிர்ந்த அமரசிம்மன் அவனது அபயக் குரலைக் கவனியாதவன் போல தனது இருப்பிடத்தை நாடி வேகமாக நடந்தான் அமரசிம்மன்.அண்ணன் இறந்திருப்பான் என முடிவு செய்தான்.அதே சமயம் காற்று பலமாக அடித்தது
வலுவற்ற மரங்கள் முறிந்துவிழுந்தன.அதிர்ஷ்டவசமாக ஒரு மரம் முறிந்து புதைகுழியில் அகப்பட்டிருந்த குமாரசிம்மனின் அருகில் விழுந்தது. அதைப் பிடித்துக் கொண்டு கரையேறினான்.
அண்ணன் மூழ்கியிருப்பான் இனி வரமாட்டான் என முடிவு செய்துகொண்டு நடந்து கொண்டிருந்தான் அமரசிம்மன்.சட்டென அவன் உணர்வு பெற்று நின்று கவனித்தபோது தன முன் பசியோடு உறுமியபடி ஒரு புலி இவன் வருகையை எதிர்பார்த்து நிற்பதுபோல் நின்றிருந்தது. வேட்டையாடிக் களைத்திருந்த அமரசிம்மன் புலியுடன் சண்டை போட சக்தியற்றிருந்தான்.பயத்தால் நடுங்கியபடி நின்றிருந்தவன் தான் புலிக்கு இரையாவது உறுதி என முடிவு செய்தான்.அப்போதுதான் செய்துவிட்டு வந்த தவறு புரிந்தது. தான் செய்த பாவத்திற்கு இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.
பசியோடு உறுமியபடி பாய்ந்த புலியைப் பார்த்துக் கண்களை மூடிக்கொண்டான்.ஆனால் என்ன ஆச்சரியம்! புலி தன மீது இன்னும் பாயவில்லையே ஏன்?தன கண்களைத் திறந்து பார்த்த அமரசிம்மன் தன முன் நடந்த காட்சியைக் கண்டு வாயடைத்து நின்றான். உடல்முழுதும் சேறாகியிருந்த உடலோடு குமாரசிம்மன் புலியின் வாயைப் பிடித்துக் கொண்டு நின்றான். அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பின் புலியைத் தன குத்துவாளுக்கு இரையாக்கி விட்டு அருகே சோர்ந்து விழுந்தான்.
ஆனாலும் தம்பியைக் காப்பாற்றி விட்டோம் என்ற திருப்தி அவன் முகத்தில் புன்னகையாகத் தெரிந்தது.
அவன் கரங்களைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதான் அமரசிம்மன்.
"அண்ணா என்னை மன்னித்து விடுங்கள்.மகேந்திரனின் மதி கெட்ட சொற்களால் என் மதியை நான் இழந்து விட்டேன்.தங்களைத் தவறாக நினைத்துவிட்டேன்.என்னை மன்னித்துவிடுங்கள்."கதறி அழுத தம்பியை அணைத்துக் கொண்ட குமாரசிம்மன்
"தம்பி, நீ எனஉயிரினும்மேலானவன்.உன்னைஒருகாலும் தவறாக எண்ண மாட்டேன்." என்று சமாதானம் செய்தபோதும் அமரசிம்மன் ,"ஐயோ, அண்ணா, உன்னை இழந்திருந்தால் நான் எத்தகைய பாவியாகியிருப்பேன்.என் உயிரைக் காப்பாற்றவே இறைவன் உங்களை அனுப்பியிருக்கிறார். அண்ணா, இந்த உயிர் இனி உங்களுக்குச் சொந்தம் இனி என்னை உங்கள் அன்புப் பிடியிலிருந்து யாராலும் பிரிக்க இயலாது."கதறியபடியே கூறினான்.
இன்னா செய்த தம்பிக்கு இனியதே செய்துவிட்ட அண்ணனின் அடியொற்றி அவனைத் தாங்கிப் பிடித்தவாறே நடந்தான் அமரசிம்மன். உயிர் போகும் நிலைவரை சென்று திரும்பிய அந்த இரண்டு சகோதரர்களையும் இனி எந்த தீய சக்தியாலும் பிரிக்க இயலாதல்லவா?
குமாரசிம்மனின் தீமை செய்தவனுக்கும் நன்மை செய்த பண்பு நமக்கு வள்ளுவரின்
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்" என்ற குறட்பாவை நினைவு படுத்துகிறதல்லவா?
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
கண்டிப்பாக எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது... அருமையான குறளுக்கு சிறப்பான கதை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அம்மா...
கண்களை கவனித்துக் கொள்ளுங்கள்...
குறளுக்கு தகுந்த கதை.....
பதிலளிநீக்குசிறப்பான கதையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.