ஞாயிறு, 31 மே, 2015

குறள் வழி கதைகள்.(தொடர்ச்சி) nanbanin panbu.

       
                                1.நண்பனின் பண்பு (தொடர்ச்சி)

 சற்றுநேரம் வேடிக்கை பார்த்தபடி நின்றவன் ரயில் ஊதும் சத்தம் கேட்கவே திடுக்கிட்டுத் திரும்பித் திரும்பிப் பார்த்தான்.
விளையாட்டுப் பிள்ளையல்லவா. அந்த சத்தத்தைக் கேட்க வேடிக்கையாக இருந்தது போலும்.தன்வலது காதை தண்டவாளத்தின் மீது வைத்துக் கேட்டான். அந்த அதிர்ச்சி அவனுக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது.இடது காதை வைத்துக் கேட்டான். இப்போது அதிர்ச்சி அதிகமாகத் தெரிந்தது.இப்போது ரயில் வரும் நேரம் இல்லையே.வேறு ஏதேனும் சத்தமாக இருக்குமோ என யோசித்தபடி நின்றான்.
அவன் அங்கேயே நிற்பதையும் அப்போது சரக்கு ரயில் ஒன்று வருவதையும் அறிந்த சங்கரன் அய்யாவு டன் பேசிக்கொண்டே இருந்தவர் ஓடி வந்தார். தம்பி கீழே இறங்கிடு என்று கத்தவே அப்போதுதான் நிலைமையைப் புரிந்து கொண்டார் அய்யாவு.
"டேய், அங்க ஏண்டா போனே, கீழ இறங்கு "என்று கத்தினார்.அதற்குள் ஒரு சரக்கு  ரயில் ஜிகு என்ற சத்தத்துடன் வருவது கண்ணுக்குத் தெரிந்தது.  

அதே சமயம் தண்டவாளத்தில் உட்கார்ந்த கந்தசாமி 
"அப்பா, கால் மாட்டிகிச்சு அப்பா...." என்று கத்திக் கொண்டே அழ ஆரம்பித்தான்.
ஐயோ, ரயில் வருதே என்று கத்தியவாறே மகனை நோக்கி ஓடி வந்தார்.
அதற்குள் நிலைமையைப் புரிந்துகொண்ட சங்கரன் வேகவேகமாக கந்தசாமி போட்டிருந்த சட்டையைக் கழற்றினார். அந்தச் சட்டையை வீசிக்காட்டியவாறே தண்டவாளத்தில் ரயிலுக்கு எதிரே ஓடத் தொடங்கினார். கந்தசாமியிடம் வந்த அய்யாவு அவனை சமாதானப் படுத்தி விட்டு   அவன் காலை விடுவிப்பதில் கவனம் செலுத்தினார்.

          அதற்குள் வேகமாக வந்த ரயில் சற்றே வேகம் குறைத்து சங்கரன் அருகில் வந்து நின்றது.
                                                                                                                                                                                                                                                                                                                                                                  
ரயில் ஓட்டுனர் கீழே இறங்கி என்ன என்று கேட்டு அறிந்து கொண்டார்.
சற்றுநேரத்தில் கந்தசாமியின்கால் தண்டவாளத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.
நல்ல வேளை . பண்டிகை நாளும் அதுவுமா ஏதும் தப்பா நடக்காம காப்பாத்திட்டீங்க அய்யா.ரொம்ப நன்றிங்க."என்று ஓட்டுனர் சங்கருக்கு நன்றி சொன்னார்
கந்தசாமியிடமும் "தம்பி ஆபத்தான இடத்துல எல்லாம் விளையாடக்கூடாது.ஏன்  இங்கெல்லாம் வரவே கூடாது.தெரியுமா?"என்று சொல்லிவிட்டு பத்திரமாகப் போங்க என்றபடியே வண்டியை ஓட்டிச் சென்றார்.

கந்தசாமி, அய்யாவு, சங்கரன் மூவரும்   ரயில்    தங்களைக் கடந்து செல்லும் வரை பார்த்துக்  கொண்டே நின்றிருந்தனர்.
சட்டென அய்யாவு சங்கரின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.கண்கள் கலங்கியிருந்தன.
"அண்ணே, உங்களால என்குடும்பம் இன்னிக்கி பிழைச்சிருக்கு. நீங்கமட்டும் எதையும் யோசிக்காம சமயோசிதமா காரியம் செய்யாட்டி என்னாகியிருக்கும். ஐயோ நினைக்கவே நெஞ்சு நடுங்குது  அண்ணே.உங்களுக்குக்  காலம் பூரா கடமைப்பட்டிருக்கேன் அண்ணே "   

"நண்பனுக்கு ஒரு துன்பம் வந்தா அதப் பார்த்துகிட்டு இருக்கலாமாப்பா.ஓடிப்போயி உதவுறதுதான்  உண்மையான நட்புன்னு சின்ன வயசில சொல்லிக் கொடுத்திருக்காங்கப்பா."

அப்போது கந்தசாமி "ஆமா தாத்தா  எங்க தமிழ் வாத்தியாரு கூட சொல்லிக் குடுத்திருக்காரு.திருக்குறள்  அப்படீன்னு பாட்டு 
அதுல " உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
                  இடுக்கண் களைவதாம் நட்பு"  அப்படீன்னு சொல்லியிருக்காரு.
"அப்படீன்னா"
"அப்படீன்னா ...கட்டியிருக்கும் துணி அவிழ்ந்து விழும்போல இருந்தா, உடனே யோசிக்காம கை அதைப் பிடிச்சுக்குது இல்லையா அப்படி நண்பனுக்குத் துன்பம் வரும்போது ஓடிப்போயி உதவுரதுதான் உண்மையான நட்பு அப்படீன்னு சொல்றாரு.
புரிஞ்சுதா தாத்தா?"
"

இவ்வளவு கெட்டிக்காரனாயிருக்கே , நீ போயி தண்டவாளத்துல நிக்கலாமா.?"

"தப்புதான்"
அதற்குள் வீடு வந்துவிடவே அய்யாவும் கந்தசாமியும்  நன்றியுடன் விடைபெற்றுக் கொண்டனர் .

சங்கரும் "பொங்கப் பண்டிகையை நல்லவிதமாகக் கொண்டாடுங்கள் "என்று ஆசி கூறிவிட்டுப் புறப்பட்டார். அவர் ஓர்  உண்மையான நண்பர் என்று நாமும் ஒப்புக்கொள்வோம்.
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

2 கருத்துகள்: