துளசிதாசர்.
பாரதத்தின் வடக்கில் வால்மீகி ராமாயணமும் தெற்கில் கம்ப ராமாயணமும் மிகவும் பிரசித்தம்.அதேபோல் ஹிந்திமொழியில் ராமாயணத்தை எழுதி பிரபலப்படுத்தியவர் துளசிதாஸ் என்ற பக்தர். இவரது இந்த நூல் ஹிந்தி இலக்கியப் படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது
இவரது வினயபத்ரிகா என்ற நூலும் தோஹா என்ற ஈரடிப்பாடல்களும் தெய்வீகத் தன்மை வாய்ந்தவை. பாடல்கள் மக்களின் மனதில் நல்லொழுக்கங்களையும் பக்தி பண்பாடு முதலியவற்றை வளர்ப்பதாகவும் அமைந்துள்ளன.இறைவனுக்கும் நாட்டுக்கும் பணி செய்த இப்பெரியாரின் வாழ்க்கைச் சரிதத்தினைக் காண்போம்.
துளசிதாசர் மொகலாயமன்னர்களில் சிறந்த சக்ரவர்த்தியாக விளங்கிய அக்பரின் காலத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தையார்
ஆத்மாராம் என்பவர் அக்பரின் மந்திரிகளுள் ஒருவராக நன்மதிப்புடன் வாழ்ந்து வந்தார்.அவரது புதல்வனாகப் பிறந்தார் துளசிதாசர்.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர் அரசியல் அறிவும் மிகுந்திருப்பதற்கு தந்தையாரே காரணமாக விளங்கினார்.அரசியலில் நிபுணரான ஆத்மாராம் தன் மகனைத் தம்முடன் அரசவைக்கு அழைத்துச் சென்று அரசியல் அறிவையும் புகட்டினார். இவ்வாறு சிறந்து விளங்கிய துளசிதாஸ் தக்க வயதில் மமதா பாய் என்னும் மங்கை நல்லாளை மணந்தார். மகனை இல்லறத்தில் இருத்தி ஆத்மாராம் தீர்த்த யாத்திரை சென்று விட்டார்.
இல்லறத்தில் ஈடுபட்ட துளசிதாஸ் மனைவிமீது மிகுந்த பற்றும் பாசமும் ஆசையும் கொண்டவராக விளங்கினார். அக்பரின் அரசவையில் அங்கம் பெற்றிருந்தும் கடமைகளைச் சரிவர கவனியாது எப்போதும் மனைவியின் அருகிலேயே கழித்தார்.இதையறிந்த அக்பர் துளசிதாசரை கட்டாயப்படுத்தி அவைக்கு வரவழைத்தார். இதேசமயம் அவரது தாயார் தன மருமகளை சிறிது காலம் அவள் தாய் வீட்டில் சென்று இருக்குமாறு அனுப்பிவைத்தார். மனைவியின் பிரிவைத் தாளாத துளசிதாசர் நடுஇரவு என்றும் கொட்டும் மழை என்றும் பாராது உடனே மனைவி இருக்கும் ஊரை நாடிச் சென்றார்.
-
-
இறைவன் சுந்தரரை தடுத்தாட்கொண்டதுபோல் இவரையும் தடுத்தாட்கொள்ள முடிவு செய்து விட்டான் போலும்.ஊரின் அருகே செல்லும் போது குறுக்கே ஓடும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடச்செய்தான்.- ஆற்றின் அருகே திகைத்து நின்ற துளசிதாஸ் அங்கே மிதந்துவந்த ஒரு சடலத்தைப் பற்றி அதில் ஏறி அமர்ந்து கொண்டு கரை சேர்ந்தார்.வீட்டின் அருகே நின்று குரல் கொடுத்தார். மழையின் இரைச்சலும் காற்றின் சத்தமும் அதிகமானதால் அவர் குரல் யாருக்கும் கேட்கவில்லை. எனவே அருகே இருந்த ஒரு மரத்தின்மீது ஏறி அங்கே தொங்கிக் கொண்டிருந்த ஒரு கயிற்றைப் பிடித்துக் கொண்டு தன மனைவி இருந்த அறைக்குள் குதித்தார். திடுக்கிட்ட மமதாபாய் இவரைக்கண்டு மகிழ்ந்தாலும் சற்றே நாணத்துடன் வரவேற்றாள்.
அன்புடன் அவரை அமரவைத்து "சுவாமி, எப்படி இந்த மழையிலும் ஆற்றைக் கடந்து வந்தீர்கள்?"என்று கேட்டாள் .
தான் வந்தவிதத்தைக் கூறியவரை வியப்புடன் பார்த்தாள் மமதா."என்ன, மரத்தின்மீது கயிறா? வாருங்கள் பார்ப்போம்"என்றபடி விளக்குடன் சென்று பார்த்தபோது அங்கே ஒரு நாகப் பாம்பு மரத்தில் சுற்றிக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தது அதைத்தான் கயிறு என்று எண்ணி அதைப் பிடித்து மேலேறி வந்துள்ளார் என்பதை இருவரும் புரிந்து கொண்டனர்.
மமதா கண்ணீருடன் அவரைப் பார்த்தாள்." அழியும் இந்த அற்பப் பிறவியின் மீது நீங்கள் கொண்டுள்ள இந்த ஆசையில் ஆயிரத்தில் ஒரு பங்கை அந்த ராமபிரான் மீது வைத்தால் உங்கள் வாழ்க்கை பயனுடையதாக இருக்குமே. உங்கள் பிறவிப்பயனை அடைவீர்களே. அதைவிட்டு என்னை நாடிவர எத்தனை முயற்சி செய்தீர்கள் இந்த முயற்சியை இறைவன் பால் செலுத்தினால் அவன் உம்மை ஆட்கொள்வானே. உங்கள் குறிக்கோள் இறைவனின் திருவடியாக அல்லவா இருக்க வேண்டும் " துயரத்துடன் அவள் சொன்ன சொற்கள் துளசிதாசரின் ஞானக் கண்களைத் திறந்து விட்டன. இறைவன் எண்ணியதுபோலவே அவரைத் தடுத்தாட்கொண்டான்.
சித்தம் தெளிந்த துளசிதாசர் தன்மைனைவியைப் பார்த்து நீயே என் ஞானகுரு என்று கூறி வீட்டை விட்டு வெளியேறி நேரே
காசிமாநகர் சென்றடைந்தார்.பல மகான்களைச் சந்தித்தார் .மகனைத் தேடிக் காசிக்கு வந்த அவரது தாயார் எவ்வளவு வேண்டியும் வீடு திரும்ப மறுத்துவிட்டார்.பக்தி பருக்கெடுத்தோட காசி வீதிகளில் இறைவன் நாமத்தைப் பாடியவாறே சுற்றித் திரிந்தார். மகனின் பக்திநிலையை அறிந்த ஆத்மாராம் மன நிறைவுடன் இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.அவருடன் மனைவியும் உயிரை நீத்தாள்.
இவர்களின் ஈமக்கடன் முடித்தபின் துளசிதாசர் பனிரெண்டு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார்.
அவர் தவத்தில் ஆழ்ந்திருந்த சமயம் ஒரு பூதம் அவர் முன் தோன்றி அவரது பாத தூளியால் தான் சாப விமோசனம் பெற்றதாகக் கூறி வணங்கிச் சென்றது. ராமநாமத்தை எப்போதும் சொல்லிவந்தவருக்கு அவரைக் காண வேண்டுமென்னும் பேரவா உண்டாகவே அனுமனைக் குறித்துத் தவம் மேற்கொண்டார். அப்போது பூதம் வந்து அருகே ஒரு வீட்டில் இராமாயண காலட்சேபம் நடக்கிறது. அங்கு கிழ வேதியர் உருவில் அனுமன் வருகிறார். அவரைப் பற்றிக் கொள்ளுங்கள். ஸ்ரீராம தரிசனம் விரைவில் கிட்டும் எனக் கூறிப் போயிற்று.உடனே அந்த வீட்டிற்குப் புறப்பட்டுப் போனார் துளசிதாசர். ராமாயணக் கதையை அனுபவித்துக் கேட்கும் மாருதியைக் கண்டார். உடனே அவர் பாதத்தில் விழுந்து பற்றிக் கொண்டார். ஆனால் மாருதி மறைந்து விட்டார். மறுநாள், மறுநாள் என இப்படிப் பலநாட்கள் தொடர்ந்து நடந்தது.
ஒருநாள் மாருதியின் காலை இறுகப் பற்றிக் கொண்டார். மாருதி கல்லிலும் முள்ளிலும் அவரை இழுத்துக் கொண்டு ஓடினார்
அப்போதும் காலைவிடாது பற்றிக் கொண்ட துளசிதாசருக்குக் காட்சி கொடுத்த அனுமன் உன் தெருவிலேயே ராமபிரானை தரிசிக்கும்படி செய்கிறேன்..என்று கூறி மறைந்தார். ராமபிரான் துளசிதாசரை சோதிக்கும் எண்ணத்துடன் ஒரு கிழவனாராக வந்து நின்றிருந்தார்.அவர் இருப்பது தெரியாமல் அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தார் துளசிதாசர்.
ராமன் அங்கிருந்து மறைந்தபின் தியானத்தில் அமர்ந்திருந்த துளசிதாசர் கண்விழித்தார். அங்கே ஆஞ்சநேயர் நிற்பதைக் கண்டு அவரிடம் ஓடிநின்று கண்கலங்க இறைவன் என்னை ஏமாற்றிவிட்டாரே.என்றார்.அனுமன் புன்னகையுடன் அவர் வந்ததை நீ அறியவில்லை. என்றபோது தன்னையே நொந்து கொண்டவராய் மீண்டும் தியானத்தில் அமர்ந்தார்.
இதோ மூன்று முறை ஏமாற்றிய ஸ்ரீராமர் இப்போது துளசிதாசரின் முன் தம்பியுடன் தம்பதி சமேதராக நின்று அருள் பாலித்தார்.துளசிதாசரின் உள்ளம் பூரித்தது புளகாங்கிதம் அடைந்தார்.பாதத்தில் பணிந்து 'அய்யனே தயை புரியுங்கள்.எனக்கு முக்தி அளியுங்கள்.' என்று மன்றாடினார்.
இறைவன் புன்னகைத்தான். "துளசி, நீ இப்பூவுலகில் சய்ய வேண்டிய செயல்கள் இன்னும் இருக்கின்றன.என் சரிதத்தை எழுதும் கடமை உனக்கு இருக்கிறது.மக்கள் மனதில் ஒழுக்கமும், பண்பும் வளரும்படியாகவும் பக்தி பெருகும்படியாகவும் பாடல்களைப் பாடவேண்டும்.
மக்கள் ஏற்பார்களா என்ற கவலை உனக்கு வேண்டாம்.அனுமனிடம் ஞானோபதேசம் பெற்று ராமசரிதமானசத்தை எழுது."என்று கூறி ஆசிவழங்கிச் சென்றான்.அன்றுமுதல் அவர் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுத்தது.
பாதுஷா அக்பர் தெய்வபக்தி மிக்கவர்.துளசிதாசரின் சிறப்பையும் ,அவருக்கு ராமதரிசனம் கிடைத்ததையும் அறிந்து மிகவும் மகிழ்ந்தார்.துளசிதாசரின் அருமையான பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தார்.அவரிடம் தத்வ விளக்கங்களைக் கற்றார்.துளசிதாசர் ராமாயணத் ததுவங்களைத் தம் பாடல்களின் மூலம் சாமானியர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாகப் பாடினார்.
ராமசரிதமானஸ் என்ற ராமகாதையே ஹிந்தி மொழியில் விளங்கும் துளசிராமாயணம் எனப் போற்றப் படுகிறது.பஜனைப் பாடல்களாகவும் ஹரிகதை செய்யும் இடங்களிலும் இவரது இனிய கவிதையைக் கேட்கலாம்.ராமநாமமே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்.பாதுஷா அக்பரின் அன்பினாலும் மக்களின் ஆதரவாலும் மடத்தை ஸ்தாபித்து தானங்கள் அன்னதானம் ஆகியன செய்து பலகாலம் வாழ்ந்து பின் ராமனின் திருவடி நிழலை அடைந்தார்.இன்றும் இவரது பாடல்கள் நாடு முழுவதும் பாடப்பட்டு வருகின்றன.
சூர்தாசர், மீராபாய்,போன்ற பக்த சிரோன்மணிகளின் வரிசையில் வைத்துப் போற்றத் தகுந்தவர் துளசிதாசர் என்பதில் சற்றும் ஐயமில்லை.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
கதை அருமை...புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்.நன்றி
பதிலளிநீக்கு