திங்கள், 8 பிப்ரவரி, 2016

மந்த்ராலய மகான் --12

                 வெங்கண்ணா கூறக்கேட்ட சுவாமிகள் ஒரு கணம் கண்களை மூடி ஸ்ரீ மூலராமரை மனதுக்குள் தியானித்தார்.
"ஹே மூலராமா, இதுவும் உன் விளையாட்டா? நான் பிருந்தாவனப் பிரவேசம் செய்யும் நாள் நெருங்கிக் கொண்டிருப்பதால் இப்படியெல்லாம் நிகழ்த்துகிறாயா?"

அருகே பணிவுடன் நின்றிருக்கும் திவானை சிந்தனையுடன்  பார்த்தார்.

"எனக்கு என்ன தானமாகக் கொடுப்பதாக எண்ணியுள்ளார் உங்கள் நவாப்?"

"சுவாமி, செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாக ஒருசில கிராமங்களைத் தரச் சித்தமாக உள்ளார். . அதைத் தாங்கள் ஏற்கவேண்டும்" 
"சரி எந்த கிராமத்தைத் தருவதாக இருக்கிறார் ?"
"சுவாமி, வளம் கொழிக்கும் எந்த கிராமமாக இருந்தாலும் தர  ஆணையிட்டிருக்கிறார்."
"நான் கேட்கும் கிராமத்தைத் தருவாயா?""
"அது என் பாக்கியம் சுவாமி."
"நல்லது. துங்கபத்திரா  நதிக் கரையிலுள்ள மாஞ்சால கிராமத்தையே நான் பெற
விரும்புகிறேன்."
"சுவாமி, அது பீடபூமிப் பிரதேசம்.வளமற்ற பூமி."
"எனக்கு அந்த மாஞ்சால கிராமம்தான் வேண்டும். சமயம் வரும்போது அதைப் பற்றிக் கூறுகிறேன்."
"சுவாமி, மாஞ்சால கிராமத்தையே  உங்களுக்கு  தானமாக வழங்குகிறேன்."
                            செய்தியைக் கேள்வியுற்ற நவாபும் மனம் மகிழ்ந்தார்.நவாப் உரிமைச் சாசனத்தை எடுத்துக் கொண்டு சுவாமிகளைப் பார்த்து வணங்கி நின்றார்.
"சுவாமி, என் மனம் இன்றுதான் சந்தோஷத்தையும் நிம்மதியையும் அடைந்தது." என்றுகூறி  கண்ணீருடன் உணர்ச்சி வயப்பட்டு நின்றார்.
"மிக்க நன்றி நவாப். தாங்களும் தங்கள் ராஜ்யமும் வளத்துடன் வாழ என் மூலராமன் அருள்புரிவான்."என்று கூறி மந்திராக்ஷதை கொடுத்து ஆசி வழங்கினார்.
இனி மந்த்ராலயத்தில் பிருந்தாவனப் பிரவேசத்திற்குத தயாராகவேண்டும் என்ற நினைவுடன் மாஞ்சால கிராமத்தில் அடியெடுத்து வைத்தார் ஸ்ரீராகவேந்திரர்.
                              அந்த கிராமத்தில் நுழைந்தவுடன் தன்  குலதெய்வமான வெங்கடாசலபதிக்கு ஒரு கோவில் 
அமைத்து பூஜைக்கு ஏற்பாடுகள் செய்தார்.பின்னர் அந்த கிராம தேவதையான மாஞ்சாலம்மனின் அனுமதி 
 பெற .எண்ணினார்.எனவே மாஞ்சாலம்மனை வேண்டினார். அம்பிகையின் அருள் பெற்று அவள் சன்னிதானத்திற்கு அருகிலேயே தன்  பிருந்தாவனம் அமையவேண்டும் என வேண்டிக் கொண்டார்.அத்துடன்  மாஞ்சாலம்மனை தரிசித்த பின்னரே தன்னை தரிசிக்கவேண்டும் என்னும் வழக்கத்தையும் ஏற்படுத்தினார்.
                       தான் பிருந்தாவனஸ்தராவதற்கு முன்னால்  தனது  பூர்வாசிரம அண்ணனான குருராஜாச்சார் என்பவரின் பேரனான வெங்கண்ணாச்சார் என்பவருக்கு அடுத்த பீடாதிபதியாக பட்டாபிஷேகம் செய்வித்து மடத்தின் அதிகாரத்தையும் அளித்தார். அவருக்கு 'யோகீந்திரர்' என்ற சந்நியாச நாமகரணம் செய்தார்.பின்னர் வெங்கண்ணா விடம் தாம் பிருந்தாவனப் பிரவேசம் செய்ய பிருந்தாவனம் ஸ்தாபிக்க  
ஒரு இடத்தைக் காட்டி அங்கு தோண்டச் சொன்னார் சுவாமிகள்.
அங்கு இருந்தது என்ன? அந்த இடத்தை ஏன் சுவாமிகள் தோண்டச் சொன்னார் என்ற விவரத்தை அடுத்த தொடரில் பார்ப்போம்.
             
                                                                 (தொடரும்)






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

1 கருத்து:

  1. தொடர் மிகவும் அருமையாகச் செல்கிறது. கடைசியில் ஏதோ ஓர் சின்ன சஸ்பென்ஸ். அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு