வியாழன், 8 நவம்பர், 2018

பாட்டி சொன்ன கதை.

அருமைக் குழந்தைகளுக்கு பாட்டியின் தீபாவளி நாள் வாழ்த்துகள்.
இதுவரை பெரிய குழந்தைகளுக்குக்  கதை சொல்லி வந்த பாட்டி இனி சின்னப்  பாப்பாவான  உங்களுக்கு தாத்தா பாட்டி சொன்ன கதைகளை  நான் சொல்லப் போகிறேன்.பழைய கதை என்றாலும் புதிதாய்க் கேட்கும் உங்களுக்குப்  பிடிக்கும் என நம்புகிறேன்.

                               துஷ்டரைக் கண்டால் தூரவிலகு 

     ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வாழ்ந்து வந்தன.ஒரு சமயம் சில வேட்டைக்காரர்கள் அந்தக் காட்டுக்கு வந்தனர்.அவர்கள் ஒரு புலியைப் பிடித்து கூண்டுக்குள் அடைத்து விட்டனர்.இன்னும் சில விலங்குகளைப்  பிடிக்கக் காட்டுக்குள் சென்று விட்டனர்.புலி உறுமியபடியே கூண்டுக்குள் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தது.அப்போது அந்த வழியாக ஒரு அந்தணர் வந்தார். அவர் தன ஊரிலிருந்து பக்கத்து ஊருக்குப் பூஜை செய்யப் போய்க்கொண்டிருந்தார்.
         அவர் புலியைப் பார்த்ததும் பயந்து ஒதுங்கி நின்றார்.அவரைப் புலி பார்த்தது.தன அருகே வருமாறு அழைத்தது.அந்தணர்"நீ என்னைத்   தின்று விடுவாய்.நான் வரமாட்டேன்."என்றார் பயத்துடனேயே.
ஆனால் புலியோ சாதுவாகத் தன முகத்தை வைத்துக் கொண்டு "
"என்னைப்  பார். எனக்கோ வயதாகிவிட்டது பல்  இல்லை நான் எப்படி உன்னைக் கடிப்பேன்?நான்  இப்போது சைவம்.அதனால் யாரையும் கொல்லமாட்டேன்  . தயவு செய்து என்னைத் திறந்து விடு. உனக்குப் புண்ணியமாய்ப் போகும்."என்று கெஞ்சியது.
அதைக்கேட்ட அந்தணர் மெதுவாக அருகே வந்தார்.புலி அவரைக் கெஞ்சியது " சத்தியமாக உன்னைக் கொல்ல மாட்டேன் கூண்டைத் திறந்து விடு."என்று சத்தியம் செய்தது.
அந்தணரோ புலியைப் பார்த்துப் பரிதாபப் பட்டார்.அதை நம்பினார் அதனால் கூண்டைத் திறந்து புலி யை வெளியே விட்டார்
உடனே புலி பாய்ந்து வெளியே  வந்தது. அந்த அந்தணர் மேல் தன முன்னங்கால்கள் இரண்டையும் வைத்துக் கடிக்க முயன்றது.அப்போது அந்தணர் பயந்து அலறினார்.
"ஏ, புலியே ,கொல்ல மாட்டேன் என்றாயே.சத்தியம் செய்தாயே இப்போது கொல்ல  வருகிறாயே"என்று நடுங்கியபடியே கூறினார்.
அதற்குப் புலி "நாந்தான் மனிதனைத் தின்பவனாயிற்றே.உன்னை விடுவேனா. எனக்கும் நல்ல பசி."என்றபடியே அவரைப் பிடித்துக் கடிக்கப் போயிற்று.
அப்போது அந்தணர் "இரு, யாரிடமாவது நியாயம் கேட்போம்.அவர்கள் சொல்வதைக் கேட்போம் என்றார். அப்போது ஒரு நரி அங்கு வந்தது.உடனே அந்தணர் "ஏ, புலியே இந்த நரியிடம் நியாயம் கேட்போம் "என்றார்.
புலியும் நரிதனக்கு ஏற்றாற்போலத்தான் நியாயம் சொல்லும் என்று நினைத்தது. அதனால் சரியென்றது. அந்தணர் ",ஏ, நரியாரே  எங்களுக்கு நியாயம் சொல்லு."என்றார்.
நரியும் சம்மதித்தது.நரியாரிடம் அந்தணர் விஷயத்தைச் சொல்லி 
"புலி கூண்டில் இருந்தது."என்றார்.புரிந்துகொண்ட ந ரி ஒன்றும் புரியாதது போல் பாசாங்கு செய்து,"என்ன என்ன அந்தணரே  நீர் சும்மா இரும். புலியாரே  நீங்கள் சொல்லுங்கள் நீங்கள் எங்கு இருந்தீர்கள்?"என்று கேட்டது.
புலி பெருமையுடன் சொல்லத்  தொடங்கியது.
"நான் கூண்டுக்குள் இருந்தேனா," என்று சொன்னதை இடைமறித்த நரி,"என்ன என்ன எங்கு இருந்தீர்கள்?ஒன்றும் புரியவில்லையே" என்று பாசாங்கு செய்தது.உடனே புலி கூண்டுக்குள் சென்று நின்றுகொண்டு "இப்படித்தான் நின்று கொண்டிருந்தேன்"என்று 
கூறியது.
உடனே நரி அந்தணரைப்  பார்த்து "சீக்கிரம் போய்க்கதவைச் 
சாத்துமய்யா"என்று சொல்லவே அந்தணரும் ஒரே ஓட்டமாய் ஓடிக் கூண்டின் கதவைச் சாத்தினார்.
புலி திகைத்து நின்றது. நரி "ஓய் அந்தணரே , துஷ்டரைக் கண்டால் தூர விலகாமல் அதற்கு உதவுகிறீரே. வழியைப் பார்த்துக் கொண்டு போமய்யா",என்றது. 
அப்போது வேட்டைக்காரர்கள் வரும் சத்தம் கேட்கவே நரி ஓட்டமாக ஓடிவிட்டது அந்தணரும் துஷ்டரைக் கண்டால் தூர விலகுன்னு பெரியவங்க சொன்னதைப் புரிஞ்சிக்கிட்டேன் என்று சொல்லியவாறு தன வழியே நடந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

1 கருத்து: