சனி, 23 ஜூன், 2012

90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.

.
ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு மகன் பிறந்தான்.தவமிருந்து பெற்ற பிள்ளை என்று சபாபதி மிகவும் செல்லமாக வளர்த்தார். அதனால் அந்தச் சிறுவன் மிகவும் கர்வமும் அடங்காப் பிடாரித் தனமும் கொண்டு வளர்ந்தான்.
ஒரு நாளைக்குப் பத்துத்தரமாவது "கதிர்வேலு  கதிவேலு" என்று தன் மகனை அழைக்காமல் இருக்கமாட்டார் சபாபதி.இதுமட்டுமல்லாமல் அவன் பள்ளியில் செய்து விட்டு வரும் விஷமங்களை எல்லாம் கண்ணன் செய்த திருவிளையாடல் போல் ரசித்தார்.அவன் செய்யும் தவறுகளையும் சுட்டிக் காட்டித் திருத்தாது  மன்னித்து மறந்து வந்தார். அதனால் கதிர்வேலு மிகவும் பொல்லாத்  தனத்துடன்  வளர்ந்தான்.
சில வருடங்கள் கழிந்தன.கதிர்வேலுவின் கெட்ட செயல்களும் வளர்ந்தன. நிறைந்த செல்வம் இருந்ததால் அவன் செய்யும் தீய செயல்களையெல்லாம் செல்வ பலத்தால் மறைத்துவந்தான்.
சாகும் தருவாயில் சபாபதி மகனிடம் இனியேனும் யார் வம்புக்கும் போகாமல் தான் சேர்த்து வைத்திருக்கும்  நிறைந்த செல்வத்துடன் சுகமாக இரு என்று அறிவுரை சொன்னார்.
ஆனால் சபாபதி இறந்த பிறகும் கதிர்வேலு தன் தீய குணங்களை விடவில்லை.தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் அல்லவா?
இவன் அடிக்கடி தவறு செய்து விட்டு நீதிமன்றம் வருவதும் செல்வ பலத்தால் தண்டனை பெறாமல் தப்புவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.அவ்வூர் நீதிமன்ற நீதிபதி இவனுக்கு எப்படியும் தண்டனை
வழங்கி அதை இவன் அனுபவிக்கும்படி செய்யவேண்டும் என நினைத்தார்.ஆனால் பொய் சாட்சிகளை வைத்து குற்றங்களிலிருந்து மீண்டு விடுவான்.
ஒரு முறை அவ்வூரில் இருந்த விவசாயிக்குக் கடன் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்டான்.அவன் நிலத்தை அபகரிக்கத் திட்டம் போட்டான்.வழக்கு நீதி மன்றத்திற்குச் சென்றது.
                நீதிபதி வழக்கை விசாரித்தார். இதை நேரில் பார்த்ததாகச் சொன்ன  விவசாயியை அழைத்து வந்து விசாரித்தார்.அவனும் கதிவேலுவிடம் பணம் வாங்கிக் கொண்டு பொய்சாட்சி சொல்வதற்காக நீதிபதிமுன் நின்றான்.
அப்போது கதிர்வேலுவின் பணியாள் கட்டுக் கட்டாகப் பணத்தைக் கதிர்வேலுவிடம் கொடுப்பதை நீதிபதி கவனித்தார். இவன் அபராதப் பணத்துடன் வந்துள்ளான்.எனவே இவன் குற்றம் செய்தவன் என்பது தெரிகிறது. இம்முறை இவனைத் தப்பவிடக்கூடாது என முடிவு செய்தார்.
கதிர்வேலு அழைத்து வந்திருந்த பொய் சாட்சியை  நீதிபதி விசாரணை செய்தார். அந்த விவசாயி பலநாட்களாக மனதுக்குள் கதிர்வேலுவுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான்.அதனால் நீதிபதியிடம் உண்மையைக் கூறியதோடு தனக்கு அவன் லஞ்சம் கொடுத்துக் கூட்டிவந்ததையும் கூறினான்.
"பொய் சாட்சி சொல்ல பணம் வாங்கிக் கொண்டாயா?"
"ஐயா, மன்னிக்கணுங்க.நான் பணம் வாங்கினது நிஜம் ஆனா,நான் வரலையின்னா வேறே ஆள் வந்து இவனுக்கு சாதகமா சாட்சி சொல்லிடுவானே. அதனால நானே வந்திட்டனுங்க.இதோ இருக்குதுங்க அவரு கொடுத்தபணம்."என்று ரூபாயை நீதிபதியிடம் கொடுத்தான்.
நீதிபதி கதிர்வேலுவிடம் "இப்போது உன் குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா இல்லையா?"என்று கேட்க கையும் களவுமாகப் பிடிபட்டதால் கதிர்வேலு அமைதியாக நின்றான்.
"நீ செய்த குற்றத்திற்கும் லஞ்சம் கொடுத்து பொய் சாட்சியை அழைத்து வந்ததற்கும் உனக்கு அபராதம் விதிக்கப் போகிறேன்."என்றார்.அதுவரை கவலையோடு நின்றிருந்தவன் நீதிபதியின் இந்தச் சொற்களைக் கேட்டு முகம் மலர்ந்தான்."ஐயா,இந்தக் குற்றத்துக்கு நீங்க எவ்வளவு வேணும்னாலும் அபராதம் விதிங்க ஐயா.நான் இப்பவே கட்டிடறேன். "என்றான் கர்வமாக.
அவன் மடியில் கட்டுக் கட்டாகப் பணம் இருந்ததே அதுதான் காரணம். நீதிபதி புன்னகையுடன்,
"நீ யாரிடமும் கேட்கக் கூடாது. உன்கையிலிருந்து பணத்தைக் கட்டவேண்டும் .பிறகு பின்வாங்கக் கூடாது."என்றார்.
சரியென்று தலையை அசைத்தான் கதிர்வேலு.
"அப்படியானால் ஒரே ஒரு பைசாவை அபராதமாகக் கட்டிவிட்டுப்போ.இல்லையென்றால் ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும்."
திடுக்கிட்ட கதிர்வேலு தன் பையைத் துழாவினான்.சட்டை மடியென எங்கு தேடியும் அவனுக்கு ஒரு பைசா கிடைக்கவில்லை. நோட்டுக் கட்டுக்களாக இருந்தனவே தவிர ஒரு பைசா காசு  அவனுக்குக் கிடைக்கவே இல்லை.
புன்னகை புரிந்த நீதிபதி,"இப்போது ஒரு பைசா உனக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது பார்த்தாயா.அதுபோலத்தான் மனிதர்களுக்குள் ஏழை என்றும் எளியவன் என்றும் துச்சமாக எண்ணி அவர்களைத் துன்புறுத்தக் கூடாது. இந்த உண்மையை சிறைவாசம் செய்தபிறகாவது புரிந்து நடந்துகொள். உன்னைத் திருத்தத்தான் இந்த சிறைத் தண்டனை."என்றார்.
அதுநாள் வரை தான் தவறாக நடந்து வந்ததற்காக வருந்தியபடியே சிறைச்சாலைக்குச் சென்றான் கதிர்வேலு.
இனி அவன் திருந்திவிடுவானல்லவா?
ஒரு பைசாதானே என எளிதாக எண்ணியதால் அதுவே அவன் சிறைசெல்லக் காரணமாக அமைந்தது. ஏழைகள் என்று பிறரை எண்ணி ஏளனமாக நடத்தியதால் குற்றவாளியென்று நிரூபிக்கப் பட்டான்.
அதனால் உருவத்தைப் பார்த்தும் செல்வ நிலையை வைத்தும் மனிதரை நாம் மதிப்பிடக் கூடாது.
இதையே வள்ளுவரும்,
       " உருவுகண்டு  எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு
          அச்சாணி அன்னார் உடைத்து"   
என்றார்.
ஒரு தேரின் அச்சாணி சிறிதாக இருந்தாலும் அதன் பயன்பாடு மிகப் பெரிதன்றோ.அதனால் உருவத்தைப் பார்த்து யாரையும் மதிப்பிடக் கூடாது.செல்வத்தின் பெருமையை ஒரு பைசாவின் மூலம் கதிர்வேலுவும் தெரிந்து கொண்டிருப்பான்.




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

செவ்வாய், 19 ஜூன், 2012

89- எவ்வுயிரும் நம் உயிரே. திருக்குறள் கதைகள்

.
ஒரு காட்டில் நல்ல பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. சற்று வயதான பாம்பு அது. ஒரு நாள் அது இரை தேடிக்கொண்டே காட்டுக்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தது.அப்போது ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டு அமர்ந்திருந்தார்.அவரிடம் சென்று பணிந்து நின்றது பாம்பு.
அதைக் கண்களைத் திறந்த முனிவர் பார்த்தார்.புன்னகை புரிந்தார்.
"உனக்கு என்ன வேண்டும்?"
"சுவாமி, நான் போன பிறவியில் பாவம் செய்து இந்தப் பிறவியில் பாம்பாகப் பிறந்துள்ளேன்.அதனால் மீண்டும் பிறவாதிருக்க நான் என்ன செய்யவேண்டும் தயவு செய்து எனக்கு உபதேசம் செய்ய வேண்டும்." என்று கேட்டுக் கொண்டது.அதைப் பார்த்துப் புன்னகை புரிந்த முனிவர்,
"நீ இந்தப் பிறவியில் யாரையும் கடித்துத் துன்புறுத்தாமல் இருந்தால் போதும்.உனக்கு அடுத்த பிறவியில் நல்ல உயர்ந்த பிறவி கிட்டும்" என்று உபதேசித்து ஆசிகூறினார்.
அதைக் கேட்டு மகிழ்ந்த பாம்பு அவரை வணங்கி விடைபெற்றது.
சில நாட்கள் கழிந்தன.காட்டில் திரிந்த பாம்பு தைரியமாக ஊருக்குள் வந்தது.நாம்தான் யாரையும் கடிப்பதில்லை யாருக்கும் தீங்கு செய்வதில்லை என முனிவரிடம் கூறிவிட்டோமே.அதனால் நமக்கும் யாரும் தொந்தரவு தரமாட்டார்கள் என எண்ணிக் கொண்டது.
அதனால் அந்தப் பாம்பு ஊரின் ஓரமாக உள்ள ஒரு மைதானத்தில் உலவியபடி இரை தேடிக்கொண்டு  இருந்தது. அப்போது அங்கு விளையாட வந்த சில சிறுவர்கள் அங்கு உலவும் பாம்பைப் பார்த்து அலறினார்கள்.அந்த நல்ல பாம்பு யாரையும் லட்சியம் செய்யாமல் தன் வழியே போய்க் கொண்டு இருந்தது.ஆனால் சிறுவர்கள் விடுவார்களா? பாம்பின் அருகே வந்து சூ., சூ எனக் குரல் கொடுத்து அந்தப் பாம்பை விரட்டினர்.
அப்போதும் அந்தப் பாம்பு தன் வழியிலேயே போய்க் கொண்டு இருந்ததைக் கண்டு சிறுவர்களின் பயம் சற்று விலகியது."டேய், பாம்புக்குக் கண் தெரியலை போல இருக்குடா.,நம்மளைப் பார்த்தும் அது ஓடாமல் மெல்லப் போகுதுடா!"என்றான் ஒருவன் அதைக் கேட்ட மற்ற சிறுவர்களுக்கு பயம் அறவே நீங்கியது. பாம்பின் அருகே இருந்த கற்களை எடுத்து வீசத் தொடங்கினர்.சில கற்கள் பாம்பின் மீது பட்டு ரத்தம் கசியத் தொடங்கியது.
அப்போதும் பாம்பு தன் தலையைத் தூக்காது மெல்ல மெல்ல ஊர்ந்து கிடைத்த பொந்தில் நுழைந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. சற்று நேரம் சிறுவர்கள் அந்தப் பொந்தின் முன் நின்று கூச்சல் போட்டுவிட்டுச் சென்று விட்டனர்.
பாம்பு இரவானதும் அந்த இடத்தை  விட்டு வெளியே வந்து தன் இருப்பிடமான காட்டை நோக்கிச் சென்றது.அதனால் ஊர்ந்து செல்ல முடியாதபடி உடல் முழுவதும் காயம்.ரத்தம் சிந்தும் உடலை வலியுடன் நகர்த்திக் கொண்டு சென்று முனிவர் முன் நின்றது.
அதிகாலையில் ரத்தம் சொட்டும் உடம்புடன் வந்து நின்ற பாம்பைப் பார்த்து திடுக்கிட்ட முனிவர்,"என்னவாயிற்று?ஏன் இப்படி காயப் பட்டு வந்திருக்கிறாய்?"என்று அன்போடு வினவினார்.
துக்கம் தொண்டையை அடைக்க கூறியது பாம்பு. "சுவாமி, நீங்கள் சொன்னபடியே யாரையும் கடிப்பதில்லை என முடிவு செய்து விட்டோமே என்று  ஊருக்கு வெளியே இருந்த மைதானத்துக்குச் சென்றிருந்தேன்.அங்கு யாரையும் தொந்தரவு செய்யாமல் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கு விளையாடவந்த சிறுவர்கள் என்னைப் பார்த்ததும் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள்."என்று கூறிக் கண்ணீர் விட்டது.
அதன் பரிதாப நிலைக்கு இறங்கிய முனிவர் அதன் காயத்துக்கு மருந்து போட்டபடி பேசினார்.
"உன்னைக் கடிக்காதே என்றுதானே சொன்னேன். நீ உன் பிறவிகுணத்தைக் காட்டவேண்டியதுதானே?"
பாம்புக்குப் புரியவில்லை.அது "என்ன சுவாமி சொல்கிறீர்கள்?"என்று கேட்டது.
"ஆமாம் உன் பாம்பு குணமான சீறும் குணத்தைக் காட்டியிருந்தால் ஓடியிருப்பார்கள் நீயும் அடிபடாமல் தப்பியிருக்கலாமே என்றுதான் சொன்னேன்."
"உண்மைதான் சுவாமி நீங்கள் கடித்துத் துன்புறுத்தாதே என்றுதான் கூறினீர்கள் சீறிப் பயமுறுத்தாதே என்று சொல்லவில்லையே"
புன்னகையோடு அந்தப் பதிலை ஏற்றுக் கொண்ட முனிவர் பாம்புக்கு விடை கொடுத்து அனுப்பினார்.
சில நாட்கள் கழித்து அந்தப் பாம்பு காட்டின் எல்லையில் ஒரு பாறை அருகே படுத்திருந்தது. அப்போது சில மாடு மேய்க்கும் சிறுவர்கள் அங்கு வந்தனர். பாம்பு படுத்திருப்பதைப் பார்த்தனர். ஒவெனக்  கூவியவாறு ஓடினர்.
மீண்டும் அருகே வந்தபோது பாம்பு புஸ் என  சீறவே தங்களின் மாடுகளை விரட்டிக் கொண்டு அவ்விடம் விட்டு விலகினர்.பாம்பு நலமுடன் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது.
அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமையவேண்டுமாயின் இப்பிறவியில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடித்தது அந்தப் பாம்பு.அதே போல் தனக்கு தீமை  ஏற்படுமாயின் தன் குணத்தைக் காட்டித் தப்பிப்பதும் தவறு அல்ல என்பதைப் புரிந்து கொண்டது அந்தப் பாம்பு.
இந்தக் கருத்தையே வள்ளுவரும் கூறுகிறார்.
"தீப்பால  தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை  அடல்வேண்டா  தான்."
எவனொருவன் தீமையின்றி வாழ நினைக்கிறானோ அவன் யாருக்கும் தீங்கு செய்யாதிருப்பானாக. என்கிறார்.இக்கருத்தை நாம் பாம்பின் வாழ்க்கையிலிருந்து தெரிந்து கொண்டோமல்லவா?
"எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணியிருக்கும்" உயர்ந்த வாழ்வைப் பெற்று இன்புற்றிருப்போம்.



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 10 ஜூன், 2012

88- பிறர் பொருளை விரும்பாதே. -திருக்குறள் கதைகள். --

சன்னாசிக்கிழவன் களைப்போடு வீட்டுக்குள் நுழைந்தான்.நடுவீட்டின் உச்சியை அண்ணாந்து பார்த்தான்.ஆகாயத்திலிருந்து நிலாவெளிச்சம் பளீரென்று வீட்டுக்குள் அடித்தது.பெருமூச்சு விட்டவாறே தன் முண்டாசை உதறித் தரைமீது போட்டுக் கீழே அமர்ந்தான்.
"என்னாப்பா, மோட்டுவளையைப் பாக்குறே?எதாச்சும் பணம் கொட்டுமான்னு பாக்குறியா?"
என்றவாறே அவன் மகன் சின்னச்சாமி உள்ளே நுழைந்தான்.
"பணம் கொட்டுதோ இல்லையோ மழை வந்தா தண்ணி கொட்டும்."
" ஆமாம்பா, இந்த மழைக் காலம் வாரதுக்குள்ளே நம்ம வீட்டை இடிச்சுக் கட்டிடணும் அப்பா.".
"எனக்கும் ஆசைதான். ஆனா அதுக்கு  நீ சொன்ன மாதிரி பணம் கூரையிலேந்து கொட்டினாத்தான் உண்டு."
"ஏம்பா அப்பிடிச் சொல்றே.வீட்டக் கட்டிடணும் அப்படீங்கற எண்ணத்தோட உழைச்சா கட்டாயம் நம்மாலே முடியும் அப்பா."
இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பச்சையம்மா "சரி சரி நேரத்தோட சோறு திங்க வாங்க. கெனா அல்லாம் அப்பால காங்களாம்" என்றாள் சலிப்போடு.
தந்தையும் மகனும் தங்கள் பேச்சை நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றார்கள்.
மறுநாள் பொழுதோடு எழுந்து வேலைக்குச் சென்றான் சன்னாசி.அந்த ஊர் பூங்காவில் பழுது பார்க்கும் வேலையில் அவன் ஒரு தோட்டக்காரனாக வேலை பார்த்து வந்தான்.
முதல்நாள் விடுமுறை தினமாதலால் நிறைய பேர் பூங்காவுக்கு வந்து சென்றிருந்தனர்.பூங்கா முழுவதும் குப்பையும் கூளமுமாக இருந்தது.அதைச் சுத்தப் படுத்திக் கொண்டிருந்தான் சன்னாசி.
செடியைக் கொத்தி சீர் படுத்தும் போது அதனுள்ளே பளபளவென்று தெரியவே என்னவென்று எடுத்துப் பார்த்தான்.இரண்டு சவரன் தேறும் ஒரு தங்கச் சங்கிலி.
சட்டென அதைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டான்.ஏதும் அறியாதவன்போல் வேலையில் ஈடுபட்டான்.
சற்று நேரத்தில் அழுது கொண்டிருக்கும்  ஒரு சிறுமியைக் கையைப் பிடித்து இழுத்து வ்ந்தார் அவள் தந்தை.அவளிடம் கடுமையாகக் கேட்டார். "எங்கே விளையாடினே?இங்கேயா, இங்கேயா, சொல்லித்தொலையேன்.தேடிப்பார்க்கலாம்."என்றவர் நான்கு தோட்டக்காரர்களையும் விசாரித்தார்.
"யாராவது ஏதேனும் நகை கிடப்பதைப் பார்த்தீர்களா?"
யாரும் பார்க்கவில்லை எனக் கூறிவிட்டனர். சன்னாசிக் கிழவனும் தன் தலையைப் பலமாக இல்லையென்று ஆட்டிவிட்டான்.கண்களில் நீர் நிறைய "அய்யோ  ஆசையாக வாங்கியது போச்சே.
இந்தக் கடனை அடைக்க நான் இன்னும் எத்தனை கஷ்டப் படணுமோ."என்று புலம்பியவாறே தன் பெண்ணை இழுத்துக் கொண்டு வெளியேறினார் அந்த அப்பாவி அப்பா.
சன்னாசிக்குப் பார்க்கப் பாவமாக இருந்தாலும் இதையெல்லாம் பார்த்தால் நாம் கல்லு வீட்டில் உக்கார முடியுமா என்ற எண்ணமும் கூடவே தோன்றியது.
வேகவேகமாக வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று அந்தச் சங்கிலியை பத்திரப் படுத்தி வைத்தான்.
ஒரு வாரத்தில் சன்னாசி நினைத்தவாறே கல்லு வீடு எழும்பத் தொடங்கிற்று. சின்னச்சாமிக்கும் அவன் அம்மாவுக்கும் ஆச்சரியம்.என்ன கேட்டும் சன்னாசி "ஆண்டவன் கொடுத்தாண்டி" என்று சொல்லி அவள் வாயை அடைத்து வந்தான்.
ஒரு மாதம்  ஓடிவிட்டது.வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது.ஈரமான தலையைத் துடைத்தவாறே உள்ளே நுழைந்தான் சின்னச்சாமி.
"ஏண்டா தம்பி இம்மா நேரம்? வேலை எதுவும் கெடைக்கலியா?"
 "அதில்லம்மா, ஒரு பெரியவரு பார்க்குல உக்காந்திருந்தாரு. எழுந்து போகையில பொட்டிய மறந்து வச்சுட்டுப் போயிட்டாரு.அதை எடுத்துக்கினு அவரு வீட்டத் தேடி கொண்டுபோய் கொடுத்திட்டு
வாரதுக்குஇம்மா நேரமாயிடுச்சம்மா."
சன்னாசி மெதுவாக,"அது என்னா பொட்டிடா?"என்று கேட்டான்.
"அது எனக்குத் தெரியாதுப்பா"
"பொழைக்கத் தெரியாத புள்ள"என்றபடியே வெளியே சென்றான் சன்னாசி.
வெளியே லேசாகத் தூறிக்கொண்டிருந்தது திடீரென்று பெரும் மழை பிடித்துக் கொண்டது.நடு இரவில் வெளியே ஒரே கூச்சலாயிருந்தது  கேட்டு சன்னாசி சின்னச்சாமி அவன் தாய் பச்சை  அனைவரும் கதவைத் திறந்து பார்த்தனர்.வெளியே இருந்த குடிசை வீடுகள் எல்லாம் மழையில் அடித்துச் செல்லவே மக்கள் அனைவரும் தங்கள் உடமைகளோடு அருகே இருந்த பள்ளியை நோக்கி ஓடித் தஞ்சம் புகுந்தனர்.
சன்னாசி தான் கல்லு வீட்டில் இருப்பதால் மிகவும் பெருமையோடு மீண்டும் வந்து பாயில் படுத்துக் கொண்டான்.
ஒரு மணி நேரம் போயிருக்கும். திடீரென்று பச்சையம்மா "அய்யோ! எந்திரிங்க வீட்டுக்குள்ளாற தண்ணி வந்திருச்சு" என்று அலறியவாறே சன்னாசியை உலுக்கி எழுப்பினாள். அதற்குள் வீட்டுக்குள் மளமளவென தண்ணீர் உயரத் தொடங்கவே செய்வதறியாமல் உயிருக்கு அஞ்சி ஊர் மக்கள் அனைவரும் தங்கியிருக்கும் பள்ளிக்கூடத்திலேயே மூவரும் தஞ்சம் புகுந்தனர்.
சிறிய பள்ளிக்கூடம் மக்கள் ஏற்கனவே நிறைந்திருந்ததால் சன்னாசி குடும்பத்திற்கு ஒண்டிக் கொள்ளத்தான்  இடமிருந்தது.மீதி இரவை நின்று கொண்டே கழித்தனர் சன்னாசியும் அவன் மகன் மனைவியும்.
மறுநாளும் மழை விடவில்லை. வானம் பொத்துக்கொண்டு ஊற்றியது.வாயிலில் வெள்ளமாகத் தண்ணீர் ஓடியது.பலரது வீடுகள் நீரில் மிதந்து செல்வதைக் கண்டும் செய்வதறியாது அனைவரும் புலம்பிக்கொண்டு நின்றிருந்தனர்.
திடீரென்று சன்னாசியும் கதறினான்.அவனுடைய கல்லுவீட்டின் கதவு மிதந்து சென்றதை கண்டுதான் அலறினான்.யாருக்கு யார் சமாதானம் செய்வது.
அரசு கொடுத்த உணவை உண்டு அன்று பொழுது கடந்தது.மாலை நேரம் சற்றே மழை விட்டதும் அணைத்து ஆண்களும் தங்கள் வீட்டில் உடமைகள் ஏதேனும் மிச்சம் இருக்கிறதா என்று பார்க்க வீட்டுக்குச் சென்றனர்.சன்னாசியும் ஓடினான்.அந்தோ, பரிதாபம்.அங்கே அவன் கட்டியிருந்த வீடு இடிந்து மண்மேடாகக் காட்சியளித்தது.
அப்படியே சரிந்து அமர்ந்தான்.அவன் பின்னால் வந்த சின்னச்சாமி அவனைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தான்.
அப்போது ஒரு பெரியவர் வண்டிநிறைய துணிமணிகள் போர்வை ஆகியவற்றுடன் உணவுப் பொட்டலங்களும் ஏற்றிக் கொண்டு அங்கு வந்து நின்றார்.இன்னும் தூறல் நின்றபாடில்லை. இருப்பினும் பள்ளியில் ஒதுங்கியிருந்த மக்கள் அனைவரும் உணவுப் பொட்டலத்துக்காக ஓடி வந்தனர்.
அவர்களை வரிசையில் வரும்படி பணியாளர்கள் கூறிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்தபடியே நின்றிருந்த பெரியவர் தன் முன்னே சின்னச்சாமியைப் பார்த்ததும் முகம் மலர்ந்தார்.
"ஏய் தம்பி, நீதானே அன்னிக்கி என் பொட்டியைக் கொண்டுவந்து கொடுத்தது."அவரைப் பார்த்து வணக்கம் கூறினான் சின்னச்சாமி.
"ஏம்பா, பொட்டியக் குடுத்துட்டு சொல்லாம போயிட்டியே. உன்னை எங்கெல்லாம் தேடினேன்."
"ஏனுங்க ஐயா?என்னை ஏன் தேடினீங்க?"
"உன் பேர் என்ன சொன்னே,  ஆங் சின்னச்சாமி.எவ்வளவு பெரிய உதவி செஞ்சுட்டு நீ பாட்டுக்குப் போயிட்டியே.உனக்கு ஏதானும் பரிசு குடுக்கணுமே அப்படின்னுதான் தேடினேன்."
"ஐயா, உங்க பொட்டியக் கொண்டாந்து குடுத்ததா பெரிய வேலைன்னு சொல்றீங்க.அது என்ன பெரிய காரியமா?"
"ஆமாம் சின்னச்சாமி அம்பது லட்ச ரூபா சொத்து அந்தப் பொட்டில இருந்துது.அதனாலே உனக்கு நான்கடமைப் பட்டிருக்கேன்."
சின்னச்சாமி திகைத்து நின்றிருந்தான்   "சின்னச்சாமி, இந்த இருபதாயிரத்தை  வாங்கிக் கொள். பாவம், மழையில் வீடிழந்து இருப்பாய்.இதை வைத்து கொள். உனக்கு உதவியாக இருக்கும். மழை நின்ற பிறகு என்னை வந்து பார்."என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போனார்.
தன் மகனின் கையில் ரூபாய் நோட்டுக்களைப் பார்த்த சன்னாசிக்குப் பேச நா எழவில்லை.
அவன் மனம் தான் செய்த செயலையும் தன் மகன் செய்த செயலையும் எண்ணிப் பார்த்தது.ஒரு 'ஏழைத் தந்தை அழ அவரது பொருளைத் தான் எடுத்துக்  கொண்டதால்தான் தான் அழ அந்தப் பொருள் தன்னை விட்டுச் சென்று விட்டது.என்ற உண்மையும் ஒரு நல்ல வழியில் வந்த பொருள் நாம் இழந்து விட்டாலும்  நம்மை வந்து அடைந்தே தீரும்' என்ற அறிவும் அவன் உள்ளத்தைச் சுட்டது. அவன் மனம் திருந்தியது போல் வானம் பளீரென ஒளிவிடத் தொடங்கியது.
வள்ளுவரின் வாக்கு எத்தனை சத்திய வாக்கு!
"அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
 பிற்பயக்கும் நற்பா லவை."
                                  
இந்த உண்மையை அனைவரும் அறிந்து கொண்டால் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி கண்ட ராமராஜ்யம் நம் கண் முன்னே தோன்றுமே.





                                                                        


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

திங்கள், 4 ஜூன், 2012

87-சிறந்த நீதிபதி

ஒரு காலத்தில் நம் நாட்டில் விக்ரமாதித்தன் என்னும் அரசன் உஜ்ஜயினி என்னும் நாட்டை ஆண்டு வந்தான். அவன் காலத்தில் அந்நாட்டில் கலைஞர்களும் கவிஞர்களும்  நிறைந்திருந்தனர். அரசன் குடிமக்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தான்.நீதிநெறி தவறாது ஆட்சி செய்தான்.
மன்னன் விக்ரமாதித்தன் குற்றவாளியைக் கண்ணால் பார்த்தே அவன் குற்றவாளியா நிரபராதியா என அறிந்து கொள்வான்.அத்தகு திறமை படைத்திருந்தான்.அத்தகைய அரசனின் காலம் முடிந்து நகரமும் அழிந்து போயிற்று.அந்த உஜ்ஜயினி நகரமே மண் மேடாகக் காட்சியளித்தது.அந்த நகரம் இருந்த இடத்தில் ஒரு காடும் சிறு கிராமமும் தோன்றியிருந்தது.அந்த கிராமத்தில் வாழும் சிறுவர்கள் மாடு மேய்க்கும் தொழிலைச் செய்து வந்தனர்.
ஒருநாள் அந்தச் சிறுவர்கள் மாடுகளை மேயவிட்டுவிட்டு விளையாடத் தொடங்கினார்கள்.ஒரு சிறுவன் தான்தான் அரசன் என்று கூறிக் கொண்டு அங்கு சற்று உயரமாக இருந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு மற்ற சிறுவர்களை மிகுந்த அதிகாரம் செய்யத் தொடங்கினான்.அவன் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசத் தோன்றாத சிறுவர்களும் அவன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர்.
மேடைமேல் அமர்ந்த சிறுவன் சிறந்த நீதிபதி போல் பேசத் தொடங்கினான்.மற்றவர்கள்  வழக்கைக் கூறுவதும் சிறுவன் தீர்ப்புக் கூறுவதுமாக விளையாட்டு தொடர்ந்தது.
தினமும் அவர்கள் அங்கே வந்து விளையாடத் தொடங்கினர்.நீதிபதி விளையாட்டு அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.இந்தச் செய்தி ஊருக்குள் பரவ உண்மையான வழக்குகளும் அந்தச் சிறுவனிடம் வரத் தொடங்கின..மேடை மீது அமர்ந்தவுடன் இந்தச் சிறுவனின் நடை பார்வை பேச்சு எல்லாம் மாறிவிடுவதை ஆச்சரியத்துடன் மக்கள் மன்னனிடம் தெரிவித்தனர்.
இதைக் கேள்விப்பட்ட மன்னன் அந்தச் சிறுவனைக் காணவும் அவன்
தீர்ப்பு சொல்வதைப் பார்க்கவும் மாறுவேடத்தில் நேரில் வந்து கவனித்தான்.அப்போது அந்தச் சிறுவன் முன் வந்த வழக்கை அவன் தீர்த்துவைத்த விதமும் அவனது பேச்சும் ஒரு சிறந்த அரசனுக்குரிய
சிறப்புடன் இருப்பதைக் கவனித்தான். அரண்மனைக்குச் சென்ற மன்னன் அந்த சிறுவனைப் பற்றியும் ஊரைப் பற்றியும் விசாரிக்குமாறு கூறினான்.அப்போதுதான் அந்தக் காடு இருந்த இடத்தில்தான் உஜ்ஜயினி  நகர மன்னர் விக்ரமாதித்தன் வசித்த அரண்மனை இருந்தது என்ற விவரம் தெரிந்தது. உடனே மன்னன் அந்த இடத்தில் ஏதேனும் சிறப்பு இருக்கக்கூடும் என்று எண்ணி அந்த காட்டுக்கு மந்திரி பிரதானிகளுடன் சென்றான்.அங்கு பூமியைத் தொண்டி சோதனை செய்யப் பணித்தான்.அங்கு ஆழத்தில் ஒரு நகரம் இருந்த  அடையாளங்களான கட்டடங்களின் இடிபாடுகள் தெரிந்தன.சிறுவன் அமர்ந்து தீர்ப்புக் கூறிய இடத்தைத் தோண்டியபோது அங்கே ஆழத்தில் ஒரு கல்லாலான பலகை தெரிந்தது.அதைக் கவனமாக வெளியே எடுத்தபோது அதை இருபத்தைந்து பதுமைகள் தாங்கியிருப்பது போல் இருந்ததைக் கண்டு வியந்தான்.
அந்த ஆசனத்தை தன் அரண்மனைக்கு கொண்டு சென்று நல்ல நாளில் சிறப்புப் பூஜைகள் செய்து அந்த ஆசனத்தில் அமரச் சென்றான்.
திடீரென்று அந்த ஆசனத்தில் இருந்த ஒரு பதுமை பேசத் தொடங்கிற்று.
"மன்னா, நீ எந்த ஆசையும் இல்லாமல் இருக்கிறாயா?ஆசையை விட்டவருக்குத்தான் இந்த ஆசனத்தில் அமரும் தகுதி இருக்கிறது."
இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் தயங்கி நின்றான்.
"எனக்குத்தான் இன்னும் பல நாடுகளைப் பிடிக்கவேண்டும் என்னும் ஆசை இருக்கிறதே "என்று நினைக்கும் போதே அந்தப் பதுமை மறைந்தது.மன்னன் மீண்டும் தன் மனத்தின் ஆசையை ஒழித்துவிட்டு
மீண்டும் பூஜைகள் செய்து அந்த ஆசனத்தில் அமரவந்தான்.அப்போதும் இரண்டாவது பதுமை பேசியது."
"மன்னா,நீ பொறாமையில்லாமல் இருக்கிறாயா?"
 இப்போதும் மன்னன் தயங்கினான்."மன்னனாகிய என்னைவிட அறிவிலும் மதிநுட்பத்திலும் சிறந்தவர்களைப் பார்க்கும்போது என் மனத்தே பொறாமை தோன்றுகிறதே."இவ்வாறு நினைத்த உடனே அடுத்த பதுமையும் மறைந்தது.சற்றும் சலிக்காத மன்னன் மீண்டும் தன் உள்ளத்தைப் பண்படுத்திக் கொண்டான்.ஒருமாதம் கழித்து மீண்டும் சிறப்புப் பூஜைகள் செய்து ஆசனத்தில் அமர வந்தான்.
இப்போது மூன்றாவது பதுமை பேசியது."மன்னா, நீ பொய் பேச எண்ணியதுண்டா?நீதிபதியாய் இருந்து நீ வழங்கிய தீர்ப்பு எல்லாம் சரியானது என்று நினைக்கிறாயா?"
மன்னன் தயங்கினான்.அரசாங்கத்துக்கு கேடு வருமானால் அதை சில பொய்கள் பேசித்தானே  விலக்க வேண்டியுள்ளது.என எண்ணியவன் தான் சொன்ன தீர்ப்பு எல்லாம் சரியாக இருக்குமா என்றும் எண்ணியஉடனே  அந்தப் பதுமையும் மறைந்தது.இப்படியே இருபத்துநான்கு பதுமைகளும் மறைந்தன.
கடைசி நாள் ஒரே ஒரு பதுமை அந்த ஆசனத்தைத் தாங்கி நின்றிருந்தது. இனியாவது இந்த ஆசனத்தில் அமர இயலுமா என்ற ஆசையுடன் மன்னன் அதில் அமரவந்தான்.அப்போது பதுமை பேசிற்று.
"மன்னா, இப்போதும் நீ பொறாமை ஆசை பொய், வஞ்சம் சூது போன்ற தீய குணங்களை விட்டு விட்டு அந்தச் சிறுவனைப் போல களங்கமில்லாமல் இருக்கிறாயா?"
ஆம் என்று துணிச்சலாகக் கூற மன்னனால் இயலவில்லை.ஒரு சிறுவனுக்குள்ள களங்கமற்ற மனம் தன்னிடம் உள்ளதா என எண்ணிப் பார்த்தான்.
அப்போது பதுமை,"மன்னா இந்த ஆசனத்தில் அமரவேண்டும்  என்னும் ஆசையை நீ என்னும் விடவில்லையே. நீ எப்படி களங்கமில்லா மனமுள்ளவன் என நினைக்க முடியும்?"என்று கேட்டவுடன் அந்தப் பதுமை தான் தாங்கியிருந்த ஆசனத்தொடு விண்ணில் பறந்து மறைந்தது.
விக்ரமாதித்தனைப்போல் அவன் அமர்ந்து நீதி சொன்ன ஆசனத்தில் அமர்வதற்கு ஒரு தகுதி வேண்டும்.
"சமன்செய்து சீர்தூக்கும் கொல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி." அன்றோ.
இவ்வாறு எண்ணிய மன்னன் அன்றே தன் தகுதியை உயர்த்திக் கொள்ளும் முயற்சியைத் தொடங்கினான்.
ஒரு நீதிபதி எத்தகு தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதை
நாமும்  தெரிந்து கொண்டோமல்லவா.






























ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

செவ்வாய், 22 மே, 2012

86- மானம் காத்த மாவீரன்.-- திருக்குறள் கதைகள்.

சிவந்த கண்களைப் பெற்றிருந்ததால் சோழ மன்னன் செங்கணான் எனப் பெயர் பெற்றிருந்தான்.இவனை வரலாறு கோச்செங்கணான் என்று கூறும்..பெரும் வீரனாக இருந்ததோடு சிறந்த சிவ பக்தனாகவும் இருந்தான்.
ஒரு முறை சேர மன்னன் கணைக்கால் இரும்பொறைக்கும் கோச்செங்கனானுக்கும் போர் மூண்டது.
இருவரும் பெரும்படை கொண்டு போரிட்டனர்.மலைகள் போல் யானைகள் இருதிறத்தில் இருந்தும்  மோதிக் கொண்டன. பல நாட்கள் போர் நீண்டது. சோழனின் பெரும்படையை சேரனின் படைகள் வீரத்துடன் எதிர்த்தன.ஆயினும் கடைசியில் சேரன் தோல்வியைத் தழுவினான்.
கோச் செங்கணான் அவனைக் கைது செய்து குணவாயில் கோட்டம் என்னும் இடத்தில் சிறையில் அடைத்தான். சிறைப்பட்ட கணைக்கால் இரும்பொறை சற்றும் அஞ்சாது நிமிர்ந்து நின்றான்.பகைவனுக்குத் தலை வணங்க மறுத்தான்.அஞ்சாது பேசினான்.நாட்கள் கழிந்தன.
சிறைப்பட்ட சிங்கம்போல் சிறையில் அடைபட்டிருந்தான் இரும்பொறை.
ஒருமுறை சேரனுக்கு சிறையில் தாகமெடுத்தது.நீர் வேண்டும் என்று சிறைக்காவலரைக் கேட்டான்.
கூப்பிட்ட குரலுக்கு உடனே ஆயிரம் பேர் வரக்கூடிய நாடாளும் மன்னனின் குரலுக்கு அந்த சிறைக் காவலர் செவி சாய்க்கவில்லை.காலம் நீட்டித்துப் பின் நீர் கொணர்ந்து கொடுத்தனர்.
அவர்களது அலட்சியத்தை  பார்த்து மிகுந்த அவமானப் பட்டான் கணைக்கால் இரும்பொறை.
அந்த நீரைப பருகாமல் தாகத்தால் வாடித் தன் உயிரை மாய்த்துக் கொண்டான்.
அவன் இறக்குமுன் ஒரு பாடலை எழுதி விட்டு இறந்தான்.
    "குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
       ஆள் அன்று என்று வாளில் தப்பார்"
என்று தொடங்கும் பாடல்தான் அது.தமிழனின் மானத்தின் பெருமையை காட்டக்கூடிய இப்பாடல் புறநானூறு என்னும் நூல் தொகுப்பில் உள்ளது.இதன் பொருள், குழந்தை இறந்து பிறந்தாலும்
வெறும் மாமிசப் பிண்டமாகப் பிறந்தாலும் அதனை வாளால் கீறி மார்பில் வீரத் தழும்பை உண்டாக்கித்தான் புதைப்பர்.அப்படிப்பட்ட வீர மரபில் உதித்த மன்னனான நான் சிறையில் காவலரின் அலட்சியமாகக் கொணர்ந்த இந்த நீரைப் பருகி உயிர் வாழ்வதோ" என்று ஒரு பாடலைப் பாடி உயிர் நீத்தான்.
இந்த வரலாறு பொதிந்த பாடல் இலக்கியச் சான்றாக இருந்து தமிழரின் மானத்தின் உயர்வையும் மானம் இழந்து உயிர் வாழாமை என்ற சிறப்பையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறதன்றோ.
வள்ளுவரின்
"மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
 உயிர்நீப்பர்  மானம் வரின்."
என்ற குறளின் பொருளையும் நமக்கு நன்கு உணர்த்துகிறதன்றோ?




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 11 மே, 2012

85- மரியாதைராமன் கதைகள்.

.   ஒரு ஊரில்மூன்றுசோம்பேறிகள் இருந்தனர்..அவர்கள் ஊரை ஏமாற்றிப பிழைப்புநடத்திவந்தனர்.
கிடைத்ததை உண்டு கோவில் குட்டிச் சுவரில்  படுத்து உறங்கி காலம் கழித்து வந்தனர். .ஒரு நாள் அவர்கள்யாராவது பெரிய பணக்காரரிடம் பெரும் பணத்தைத் திருடுவது
 என்று முடிவு செய்தனர்..        
அதன்படியே அருகே இருந்த பெரிய நகருக்குச் சென்று ஒரு நகை வியாபாரியின் வீட்டில் நகைகளைத் திருடி விட்டு மீண்டும் தங்கள் ஊருக்கே வந்தனர்.திருடிய நகைகளை ஒரு குடத்தில் போட்டு மூடி வைத்தனர்.அதை யாரிடமாவது கொடுத்து பத்திரப் படுத்த வேண்டும் என நினைத்தனர்.
அந்த ஊரில் ஒரு வயதான பாட்டி இருந்தார்.அவர் ஒரு உணவுக்கடை நடத்தி வ்ந்தார்.
அந்தப் பாட்டியிடம் தாங்கள் திருடிய குடத்தைக் கொடுத்து வைப்போம் என முடிவு செய்தனர் திருடர்கள்.
அனைவரும் பாட்டியின் வீட்டுக் கதவைத் தட்டினர்.தூக்கக் கலக்கத்துடன் வந்து கதவைத் திறந்த பாட்டி,"ஏனப்பா இந்த வெய்யில் நேரம் வந்து கதவைத் தட்டுறீங்க.சாப்பாடெல்லாம் காலியாயிடுச்சே"
என்றார்.
ஒரு திருடன் "ஏய் பாட்டி, எங்களுக்குப் பசிக்குது உடனே சாப்பாடு செஞ்சு போடு. உனக்குப் பணம் தரோம் "என்று ஆசை காட்டினான்."
பாட்டி சிரித்தார்."தம்பி பணத்துக்காக இல்லாட்டாலும் பசியால வாடுற உங்க முகத்துக்காக சமைச்சிப் போடுறேன்"
அனைவரும் மகிழ்ச்சியுடன் "பாட்டி நீ ரொம்ப நல்ல பாட்டி"என்றபடியே அமர்ந்தனர்.
அப்போது மூத்தவனாக இருந்த திருடன் பாட்டியிடம் நகைகள் வைக்கப்பட்டிருந்த அந்தக் குடத்தைக் கொடுத்து"பாட்டி நாங்க மூணு பேரும் வந்து கேட்டாதான் இந்தப் குடத்தைக்  கொடுக்கணும். தனியா யார் வந்து கேட்டாலும் குடுக்கக்கூடாது."என்றான்.அந்தக் குடத்தைப் பெற்றுக் கொண்ட பாட்டி
"சரிப்பா, நீங்கெல்லாம் குளிச்சுட்டு வாங்க .சமையல் முடிஞ்சுடும் "என்றார்.
மூன்று பெரும் மகிழ்ச்சியாகச் சிரித்தபடியே தொலைவில் இருந்த கிணற்றுக்குச் சென்றனர்.
கிணற்றுக்குள் குதித்துக் குளிக்கலாம் என எண்ணி எட்டிப் பார்த்தனர். தண்ணீர் மிக ஆழத்தில்
இருந்தது.நீரை இறைத்துத்தான் குளிக்கவேண்டும் என முடிவு செய்தனர்.
மூத்தவன் மற்றவனைப் பார்த்து "நீ போய் பாட்டியிடம் குடமும் கயிறும் வாங்கி வா.நீரை இறைத்துக் குளிப்போம்."என்றான்.
கிணறு சற்றுத் தொலைவில் இருந்தது.எனவே கட்டளையை ஏற்றுக் கொண்ட திருடன் வேகமாக ஓடினான்.வீட்டு வாயிலில் நின்று யோசித்தான்.அந்தக் குடத்தை நாமே எடுத்துச் சென்றால் நல்லதாயிற்றே.பொருள் முழுவதும் நமக்கே சொந்தமாகிவிடுமே"என சிந்தித்தான்.
பாட்டியை அழைத்து அவளிடம் அந்தக் குடத்தைக் கேட்டான்.
"மூணு பேரும் சேர்ந்து வந்தால்தானே குடுக்கச் சொன்னார். நீ மட்டும் வந்து கேட்கிறாயே?"
"நாங்கள் இங்கேயே பங்கு பிரித்துக் கொள்ளப் போகிறோம் அதனால்தான் கேட்டனுப்பினார்.
வேண்டுமானால் நீயே கேட்டுக் கொள்."
உடனே பாட்டி உரக்க "என்னப்பா குடுக்கட்டுமா?" என்றார்.
கிணற்றடியில் அமர்ந்திருந்த பெரிய திருடன் அங்கிருந்தபடியே, "குடு பாட்டி, குடு."என்று கத்தினான்.பிறகு மற்றவனுடன் சுவாரசியமாகப் பேசத் தொடங்கினான்.
குடத்தைப் பெற்றுக் கொண்டவன் அங்கிருந்து பின்வாசல் வழியாக வேகமாக  ஓடி மறைந்தான்.
வெகு நேரமாகியும் குடத்தை வாங்கி வரச் சென்றவன் வரவில்லையே என்று காத்திருந்த இருவரும்
பாட்டியிடம் வந்தனர்."என்ன பாட்டி எங்க தோஸ்து வந்தானே குடத்தைக் கொடுக்க இத்தனை நேரமா?"
"நான் அப்போதே குடுத்திட்டேனே.அவன் வரலையா?"
"என்ன! அப்போதே குடுததிட்டயா?நீ எந்தக் குடத்தைச் சொல்றே?நாங்க குடுத்த குடத்தையா?"
"ஆமாம். நீதானே கேட்டு அனுப்பினே?நானும் உன்னைக் கேட்டேனே?நீதானே குடுன்னு சொன்னே?"
அந்தத் திருடன் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான். இரண்டு பேரும் தங்களிடம் நண்பனாக இருந்தவன் தங்களை ஏமாற்றி விட்டான் எனப் புரிந்து கொண்டனர்.
"ஐயோ ஏமாற்றி விட்டானே! கூட இருந்தே குழி பறித்துவிட்டான்."எனப் புலம்பினர்.அவர்களின் துயரமெல்லாம் பாட்டியின் மீது கோபமாகத் திரும்பியது.
"ஏய் கிழவி, உன்னிடம்தான் குடத்தைக் கொடுத்தேன். நாங்கள் மூணு பேரும் வராமே ஒருத்தன் மட்டும் வந்து கேட்டா நீ ஏன் குடத்தைக் குடுத்தே. இப்போ நீதான் எங்களுக்கு அந்தக் குடத்தைக் குடுக்கணும்.இல்லாட்டா வா எங்களுடன் நியாய சபைக்கு."
பாட்டி எவ்வளவு சமாதானம் செய்தும் அந்தத் திருடர்கள் இருவரும் பாட்டியை மரியாதை ராமனின் நியாய சபைக்கு இழுத்துச் சென்றனர்.
நீதிபதி ஆசனத்தில் ஒரு இளம் பாலகன் அமர்ந்திருந்தான்.அவன்தான் மரியாதை ராமன்
இவர்களின் வழக்கைக் கேட்டான் ராமன்.பாட்டியிடம் அன்புடன் பேசினான். பாட்டியின் வாக்கு உண்மை என்பதைப் புரிந்து கொண்டான்.அந்தத் திருடர்களைப் பார்த்து விசாரித்தான்.
"அந்தக் குடத்தில் என்ன இருக்கிறது.?"
"அத்தனையும் நகைகள் ஐயா, எங்கள் பூர்வீக சொத்துங்க"
"அதை மூன்று பேரும் பங்கிடவேண்டுமானால் நீங்கள் மூவரும் சகோதரர்களா?"
இதைக் கேட்ட இருவரும் திரு திருவென விழித்தனர்.
அதே சமயம் , ஒரு நகை வியாபாரி தன் கடையிலிருந்த நகைகள் திருட்டுப் போய் விட்டன. தயவு செய்து அதை மீட்டுத் தரவேண்டும் என்று ஓவென்று அழுதார்.
ராமனுக்கு இப்போது புரிந்து விட்டது.இந்தத் திருடர் மூவரும் இந்த நகைகளைத்தான் திருடி குடத்தில் போட்டு பாட்டியிடம் கொடுத்திருக்கிறார்கள்.அதை ஒருவன் ஏமாற்றி விட்டான்.
இவர்கள் பாட்டியின் மேல் பழி சுமத்துகிறார்கள்  என்பதைப் புரிந்து கொண்டான்.
"ஐயா நீங்கள் கவலைப் படாதீர்கள் உங்கள் பொருள் என்னும் ஒரு வாரத்தில் உங்களுக்குக் கிடைக்கும் போய்வாருங்கள்" என நகைக் கடைக்காரரை அனுப்பினான்.
பின்னர் அழுது கொண்டிருக்கும் பாட்டியைப் பார்த்து,"பாட்டி அழாதீங்க.உங்கள்மேல் எந்தக் குற்றமும் இல்லை.இப்போது அந்தக் குடம் உங்களிடமே இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள் .இவர்கள் மூவருமாக வந்து கேட்டால் கொடுப்பேன் எனச் சொல்லுங்கள் மூன்றாமவனை இவர்களே தேடிக் கொண்டுவரட்டும்.நீங்கள் அமைதியாகச் செல்லுங்கள் இதுவே நான் வழங்கும் நீதி.."என்று பாட்டியை அனுப்பிவிட்டு
திருடர்களைப் பார்த்து"நீங்கள்தானே நகை வியாபாரி வீட்டில் திருடியது? அந்த நகையைத் தானே குடத்தில் மறைத்து வைத்தது?உண்மையைச் சொல்லுங்கள் இல்லையேல்..."
திருடர்கள் இருவரும் மரியாதை ராமனின் முன் மண்டியிட்டு குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
அவர்களைச் சிறையில் அடைக்கச் சொன்னான் ராமன்.திருட்டு நகையுடன் ஓடிவிட்ட மூன்றாமவனை ஒரு வாரத்தில் பிடிக்கவேண்டும் என சேவகர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான்.
தங்களது விதியை நொந்துகொண்டே சிறைக்குச் சென்றனர் இரண்டு திருடர்களும்.ராமனை மனமார வாழ்த்தினார் பாட்டி.
நல்ல நீதி வழங்கிய ராமனை மக்களெல்லாரும் பாராட்டினர்.
இப்படிப்பட்ட சிந்திக்குக் ஆற்றல் நீதி வழங்கும் நீதிபதிகளுக்கு வேண்டும் என்பதை இந்த வரலாறு நமக்குச் சொல்கிறது.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

திங்கள், 30 ஏப்ரல், 2012

அமெரிக்காவிலிருந்து

அன்பு வாசக நண்பர்களுக்கு வணக்கம்.தற்போது அமெரிக்காவிலிருந்து உங்களுடன் பேசுகிறேன்.தொடர்ந்து கதைகளை இங்கிருந்தே எழுதி வெளி இடுகிறேன்.உங்களின் மேலான விமரிசனங்களையும் எதிர் பார்க்கிறேன்.அன்புடன் ருக்மணி சேஷசாயி.

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

84- இன்னா செய்தாரை ...... திருக்குள் கதைகள்.

 ஓர் ஊரில் சாம்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். எப்போதும் தீயவற்றையே  நினைத்து வாழ்ந்தான்.
தீயவருடனேயே சேர்ந்து தீய காரியங்கள் செய்து பணம் சம்பாதித்து வாழ்ந்தான்.ஒரு முறை வேறு ஊருக்குச் சென்று அங்கிருப்பவர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்க எண்ணம் கொண்டான்.
அதனால் அடுத்திருந்த ஓர் ஊருக்குப் புறப்பட்டான்.வழியில் ஒரு பெரும் காடு இருந்தது. அதைத் தாண்டுவது மிகவும் கஷ்டமாக இருந்தது.நடந்து நடந்து மிகவும் களைத்து விட்டான் சாம்பன்.
ஒரு பெரிய மரத்தடியில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான்.பறவைகள் எல்லாம் கூட்டை நோக்கிப் பறக்கும்நேரம் ஆகிவிடவே எழுந்து அமர்ந்தான்.பசி வேறு வயிற்றைப் பிசைந்தது.
அப்போது அந்த மரத்தை நோக்கி புறா ஒன்று பறந்து வந்தது.ராஜகீர்த்தி என்பது அதன் பெயர்.
அது தன் இருப்பிடத்திற்கு யாரோ வந்திருப்பது கண்டு மகிழ்ந்தது.விருந்தினரை வரவேற்கும்
எண்ணத்தோடு சாம்பனிடம் வந்து கூறியது.
"ஐயா, எனஇல்லம் தேடி நீங்கள் வந்தது கண்டு மிக்க  மகிழ்ச்சி.மிகவும் களைப்பாக இருக்கிறீர்களே. இருங்கள் நீங்கள் உண்ணக் கனி கொண்டு வருகிறேன் "என்று கூறிப் பறந்தது.                          
சற்று நேரத்தில் சுவை மிக்க கனிகளைக் கொண்டு வந்து அவர் முன் வைத்து "உண்ணுங்கள் ஐயா, இரவு இங்கேயே தங்கி காலையில் புறப்படுங்கள்" என்று கூறி அவர் படுப்பதற்காக 
புற்களையும் மலர்களையும் பரப்பி படுக்கை தயாரித்துக் கொடுத்தது.சாம்பன் மகிழ்ச்சியுடன் படுத்து உறங்கினான்.ராஜகீர்த்தியும்  சாம்பனுக்குப் பாதுகாப்பாக அவன் அருகிலேயே படுத்து உறங்கியது.
மறுநாள் காலை சாம்பன் புறப்படும்போது ராஜகீர்த்தி என்ற அந்தப் புறா ,"நண்பா, அடுத்த மலையில் என் நண்பன் விரூபாக்கன் என்ற அரக்கன் இருக்கிறான். என் நண்பன் நீ என்று தெரிந்தால் உனக்கு வேண்டிய உதவி செய்வான் நீ அங்கு செல்."என்று கூறியது.
ராஜகீர்த்திப் புறாவின் சொற்படியே சாம்பன் அடுத்த மலையை நோக்கிச் சென்றான்.சற்றுத் தொலைவு சென்றபோது வேறு ஒரு மலை தெரிந்தது. அதன் மேல் ஏறிச் சென்றான் சாம்பன்.அங்கு அரக்கர் கூட்டத்தின் நடு நாயகமாக வீற்றிருந்தான் விரூபாக்கன் என்ற அரக்க அரசன்.
அவனைப் பார்த்து அஞ்சினான் சாம்பன். "நீ யார்?"எனக்கேட்ட விரூபாக்கனுக்கு நடுங்கியபடியே பதில் கூறினான் சாம்பன்.
"நான் ராஜகீர்த்தியின் நண்பன்."இதைக் கேட்ட உடனே எழுந்து அருகே வந்த விரூபாக்கன் சாம்பனை அணைத்துக் கொண்டான்.
"நீ என் நண்பனின் நண்பன்.இனி எனக்கும் நண்பன்."
சாம்பானுக்கு  பெரும் விருந்தும் பல பரிசுகளையும் கொடுத்து நிறைய பொற்காசுகளையும் மூட்டையில் கட்டிக்கொடுத்தான் விரூபாக்கன்.
அந்த அரக்க அரசனிடம் விடைபெற்றுக் கொண்ட சாம்பன் தன் சொந்த ஊர் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.வரும் வழியில் தன் நண்பன் ராஜகீர்த்தியின் மரத்தடிக்கு வந்தான்.அங்கு வழக்கம்போல் இருட்டும் நேரம் ராஜகீர்த்தி இல்லம் திரும்பியது.
"நண்பா, உன் நண்பன் விரூபாக்கன் எனக்கு நிறைந்த பொன் கொடுத்துள்ளான். இன்று இரவு இங்கேயே கழித்து விட்டு காலையில் நான் புறப்படுகிறேன்."
இதைக் கேட்ட ராஜகீர்த்தி மகிழ்ந்தது. தன் நண்பனுக்கு உண்ண உணவளித்து படுக்கை தயார் செய்தது.
நடு இரவில் கண் விழித்த சாம்பன் அருகே தூங்கும் ராஜ்கீர்த்தியைப் பார்த்தான்.
'நான் இன்னும் வெகு தூரம் போகவேண்டுமே.உச்சி வேளையில்  பசித்தால் என்ன செய்வது'
என்று சிந்தித்தவன் தன் அருகே படுத்திருந்த புறாவைக் கொன்றான்.அதன் அழகிய இறகுகளைப் பிய்த்துப் போட்டான் அந்த உடலை நெருப்பில் வாட்டி எடுத்துக் கொண்டு தன் பொன் மூட்டையையும் தூக்கிக் கொண்டு வேகமாக அந்த இடம் விட்டுப் புறப்பட்டான்.
பொழுதும் விடிந்தது. நேரம் கடந்துகொண்டிருந்தது.தினமும்தன்னை வந்து பார்த்துச் செல்லும் நண்பன் ராஜகீர்த்தி வராததால் அரக்க அரசனான விரூபாக்கன் அவனைத் தேடி வரும்படி தன் காவலருக்கு கட்டளையிட்டான்.அவர்களும் ராஜகீர்த்தியின் இல்லம் வந்து அங்கே புறாவின் இறகுகள் கிடப்பதைக் கூறினர்.
என்ன நடந்திருக்கும்  என்பதைப் புரிந்துகொண்ட விரூபாக்கன் சாம்பனைத் தேடி இழுத்து வரும்படி கட்டளையிட்டான்.
அவனது வீரர்களும் சிறிது நேரத்தில் சாம்பனைக் கட்டி இழுத்து வந்தனர்.அவனிடம் நெருப்பிலிடப்பட்ட தன் நண்பனின் உடலைப் பார்த்து கதறி அழுதான் விரூபாக்கன்.
தனக்கு நன்மை செய்தவன் என்று கூட நினைத்துப் பார்க்காத நன்றி கெட்ட சாம்பனைக் கொன்று தின்னுமாறு பணித்தான்.
ஆனால் அரக்கர் அனைவரும் நன்றி கெட்டவனின் உடலைத் தின்னமாட்டோம் என்று கூறிவிட்டனர்.அதன் பின் சண்டாளர்களிடம் கொடுத்தால் அவர்களும் நாங்கள் ஏற்கெனவே பாவம் செய்து  சண்டாளர்களாக உள்ளோம்.. இந்தப் பாவியின் உடலைத் தின்றால் இந்த நரகத்திலேயே  உழலவேண்டும். எங்களுக்கு வேண்டாம் என்று கூறவே சாம்பனை வெட்டி குழியில் போட்டு மூடுமாறு கட்டளையிட்டான்.
பின்னர் ராஜகீர்த்தியின் உடலுக்கு மிகுந்த மரியாதையுடன் அந்திம காரியங்களைத் தானே செய்தான்.மிகுந்த துயரத்தோடு சிதையிலிடும்போது திடீரென்று ராஜகீர்த்தியின் உடலில் சிறகுகள் மிகவும் அழகுடன் வளரத் தொடங்கியது.அதைப் பார்த்த விரூபாக்கன் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தான்.விண்ணிலே காமதேனுவுடன் இந்திரன் செல்வது தெரிந்தது.அதன் நிழல் ராஜகீர்த்தியின் மேல் பட்டதால் ராஜகீர்த்தி உயிர் பெறத் தொடங்கியது.விரூபாக்கணும் ராஜகீர்த்தியும் இணைந்து இந்திரனைத் துதித்தனர்.இந்திரன் மகிழ்ந்து என்ன வரம் வேண்டும் எனக் கேட்க,ராஜகீர்த்தி ,
"தேவதேவா, அறியாமல் பிழை செய்த எங்கள் நண்பன் சாம்பனை மன்னிக்கவேண்டும். அவனையும் உயிர்ப்பிக்க வேண்டும்." என்று கேட்டுக் கொண்டது.
"உன் பெருந்தன்மையும், தீமை செய்தவனுக்கும் நன்மைசெய்ய எண்ணும் உன் நல்ல பண்புக்கும் உன்னைப் பாராட்டுகிறேன்.உன் விருப்பப்படியே சாம்பனை உயிர்ப்பிக்கிறேன்.நலமோடு வாழ்வீர்களாக"
என்று ஆசிவழங்கிவிட்டு மறைந்தார் தேவேந்திரன்.
உயிருடன் எழுந்து வந்த சாம்பன் ராஜகீர்த்தியிடம் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டான்.அவனை அணைத்து மகிழ்ந்தது ராஜகீர்த்தி.
இத்தகைய உயர்ந்த பண்பு தனக்கில்லாமல் போயிற்றே என விரூபாக்கன் வெட்கப்பட்டான். தான் செய்த நன்றி மறந்த செயலுக்காக வெட்கப் பட்டான் சாம்பன்.இருவரையும் அணைத்துக் கொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தது ராஜகீர்த்தி என்னும் புறா.
இந்தக் கதையின் கருத்தைத்தான் வள்ளுவரும்
'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்'
என்று கூறியுள்ளார்.ஒருவன் செய்த தவறுக்கு சிறந்த தண்டனை எது  என்றால் அவன் நாணும்படியாக அவனுக்கு நன்மை செய்தலே ஆகும். இந்த உண்மையை நாம்  அனைவரும் புரிந்து கொண்டால் சமுதாயம் சிறந்து விளங்கும்.
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

83.மொழிப்பற்று.

    ஐம்பெரும் காப்பியங்களுள் மணிமேகலை என்னும் காப்பியமும் ஒன்று.சிலப்பதிகாரத்தின் தொடர் காப்பியமானதால்  சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று வழங்கப்படுகின்றன. மணிமேகலையில்தான் இந்தக் கதை கூறப்பட்டுள்ளது.

செல்வம்  மிக்க  வணிக  குலத்தைச் சார்ந்தவன் சாதுவன்.இவன் மனைவி ஆதிரை என்ற கற்புக்கரசி.இவர்கள் இருவரும் இனிதே இல்லறம் நடத்தி வந்தனர்.சாதுவன் தன் வாணிபம் காரணமாக கடல் கடந்து செல்ல நேர்ந்தது.தன் மனைவியிடம் கூறிய சாதுவன் நிறைந்த நவரத்தினங்களுடன் கப்பலில் புறப்பட்டான். கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தது.திடீரென்று பெரும் காற்று வீசியது.அது புயலாக உருவெடுத்தது. கப்பல் நிலை தடுமாறி கடலுள் மூழ்கியது.அந்தக் கப்பலில் பயணம் செய்த வணிகர்களும்  பயணிகளும் நீருள் மூழ்கினர்.சாதுவனும் மூழ்கினான்.

அந்தக் காலத்தில்ஆங்காங்கே இருந்த தீவுக் கூட்டங்களில்  மனிதர்களை உண்ணும் நாகர் என்ற இனத்தவர் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒரு கூட்டத்தினர்  நடுக்கடலில் ஒரு தீவில் வாழ்ந்து வந்தனர்.அவர்கள் கடலில் மூழ்கி கரை ஒதுங்கும் மனிதர்களைக் கொன்று தின்று வந்தனர்..
மயக்கமடைந்த சாதுவன் அந்த பயங்கரமான மனிதர் வாழும் தீவின் கரையில் ஒதுங்கினான். கரையில் நின்றிருந்த நாகர்கள் ஒரு மனித உடல் கிடப்பது கண்டு பெரும் ஆரவாரத்துடன் அவனைச் சுற்றி குதித்து ஆடினர்.அவர்கள் ஆரவாரத்துடன் பேசிக் கொண்டதைக் கேட்டுக் கண் விழித்தான் சாதுவன்.

 சாதுவன் கண் விழித்ததைப் பார்த்து அந்தக் கூட்டம் அவனைப் பிடித்து இழுத்துச் சென்றது. தளர்ந்த  நடையுடன்  சென்று  தலைவன்  முன் நின்றான் சாதுவன். அந்தத் தலைவன் எனப்பட்டவன் மனித எலும்புகளால் ஆன ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்தான். பயங்கரமான தோற்றத்துடன் காணப் பட்டவனைப் பார்க்கவே அச்சமாக இருந்தது சாதுவனுக்கு.
அவனைப் பார்த்த நாகர்தலைவன் மிக்க மகிழ்ச்சியடைந்தான். இவன் நன்கு கொழுத்த உடம்புடன் உள்ளான். நமக்கு நல்ல இரை.
என்று மகிந்தான்.

அவனது பேச்சைக் கேட்ட சாதுவன் பணிவுடன் பேசினான்."ஐயா, நான் சோழநாட்டுக் காவிரிப்பூம் பட்டினத்தைச் சேர்ந்தவன்.கப்பல் கவிழ்ந்துபோனதால் இங்கு கரை ஒதுங்கியுள்ளேன்.எனக்கு நீங்கள்தான்  உதவி செய்ய வேண்டும் "
சாதுவன் நாகர் மொழியில் பேசியதைக் கேட்ட தலைவன் ஆச்சரியத்துடன் சாதுவனைப் பார்த்தான்."எங்கள் மொழி பேசும் நீயும் எங்களில் ஒருவன்."என்று கூறியவன் தன் பணியாட்களை அழைத்தான்."இவன் நம் இனம்.இவனுக்கு ஒரு ஆசனம் கொண்டுவா.
கள்ளையும்  ஊனையும் உண்ணக் கொடுங்கள்."
"ஐயா, கள்ளையும் ஊனையும் நாங்கள் உண்ண மாட்டோம். அவற்றை உண்பது மகா பாவம் என்று எண்ணுபவர் நாங்கள்."
"என்ன! கள்ளையும்ஊனையும்   உண்ணமாட்டீர்களா! ஆச்சரியமாக உள்ளதே,"
"ஐயா, மனிதனாகப் பிறந்திருந்தும் இந்த ஈனமான வாழ்க்கையை வாழ்வது ஏன்?உயர்ந்த மானிடப் பிறவி பெற்றிருந்தும் விலங்குகள் போல் வாழ்வது ஏன்?தயவு செய்து நான் சொல்வதைக் கேட்டு அதன்படி நடந்து வாழ்வில் முக்தி அடைய வழி பாருங்கள்."
"ஐயா, நீங்கள் சொல்வது உண்மைதான். இதுவரை விலங்குகளாக வாழ்ந்துவிட்டோம்.நீங்கள் சிறிது காலம் எங்களோடு இருந்து வீடுபேறு அடைய வழி கூறுங்கள்." தலைவனின் விருப்பப்படி சாதுவன் அங்கேயே தங்கி தினமும் அருள்மழை பொழிந்தான்.அதைக் கேட்டு அந்நாட்டு மன்னனும் மக்களும் மிக விரைவிலேயே மனம் திருந்தினர்.
சில காலம் அங்கேயே கழித்த சாதுவன் தன் தாய்நாட்டுக்குச் செல்ல விரும்பினான்.
தினமும் கடற்கரையில் நின்று ஏதேனும் கப்பல் வருகிறதா என்று கவனித்து வந்தான்.ஒரு நாள் அவன் விரும்பிய படியே சோழநாட்டு வணிகக்  கப்பல் ஒன்று வழிதவறி அந்த நாட்டுக்கு வந்து நின்றது..நாகர் வாழும் நாடு என்று அஞ்சி நடுங்கிய பயணிகள் அவர்கள் மத்தியில் சாதுவனைக் கண்டு மிகுந்த ஆச்சரியப் பட்டனர்.அச்சத்தையும் விடுத்தனர்.
நாகர்நாட்டு மக்கள் சாதுவனுக்கு பிரியா விடை கொடுத்தனர்.அவனுக்குத் திரண்ட செல்வத்தையும் கொடுத்து அந்தக் கப்பலில் அனு ப்பி வைத்தனர்.  
 தான் எப்போதோ விளையாட்டாகக் கற்றமொழிதன் உயிரைக் காத்தது மட்டுமல்லாமல்  ஒரு இனத்தையே நாகரிகமாக மாற்றி          
அமைக்கவும் காரணமாக அமைந்ததை உணர்ந்து வியந்தான்.நாகரிகமற்ற மக்களாயினும் தங்கள் மொழி . மீது அவர்கள் கொண்டிருந்த பற்றும் அன்பும் மதிப்பும் கண்டு மகிழ்ந்தான்.நாகரிகத்தின் உச்சியில் இருக்கும் நாம் எந்த அளவுக்கு நம் மொழியின் மீது பற்றுக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை இந்தக் கதை மணிமேகலை என்ற நூல் மூலம் நமக்கு அறிவிக்கிறது .நம் தாய்மொழியை நம் உயிரினும் மேலாக மதிக்கவேண்டும் என்ற எண்ணத்தை நம் உள்ளத்தில் தோற்றுவிக்கிறது.

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 4 ஏப்ரல், 2012

82. நல்ல நூல்களைப் படி


ஓர்  ஊரில் அண்ணன் தம்பி இருவர் வாழ்ந்து வந்தனர்.இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அண்ணன் பெயர் துந்துகாரி.தம்பியின் பெயர் கோகர்ணன்.பெற்றோர் இல்லாத இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக அந்த இல்லத்தில் வாழ்ந்து வந்தனர்.அண்ணன் துந்துகாரி பல தீய காரியங்கள் செய்து பணம் சம்பாதித்து வந்தான்.தம்பி கோகர்ணன் மிகவும் நல்லவன். இறைவனிடம்  பக்தி உள்ளவன்.நல்ல வழியில் பணம் சம்பாதித்து தான தர்மங்கள் செய்து திருப்தியாக வாழ்ந்து வந்தான்.

ஒருநாள் தீயவனான துந்துகாரி தீயவர்களால் கொல்லப்பட்டான்.அண்ணன் இறந்ததற்காக மிகவும் வருந்தினான் கோகர்ணன்.அண்ணனது ஈமக்கிரியைகளை காசியில் உள்ள கயா என்னும் புனித க்ஷேத்திரத்தில் செய்து முடித்தான். இதனால் அண்ணனின் ஆத்மா நற்கதி அடையும் என நம்பினான். மீண்டும் தன் இல்லம் திரும்பி தன் தினசரி வாழ்க்கையைத் தொடங்கினான்.
                             ஒருநாள் இரவு தன் கடமைகளை முடித்துவிட்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான் கோகர்ணன்.நள்ளிரவில் ஏதோ ஒலி கேட்கவேதிடுக்கிட்டுக் கண் விழித்தான்.அவன்எதிரே  முற்றத்தில் பயங்கரமான எருமை ஒன்று நின்றிருந்தது.மிகவும் அஞ்சிய கோகர்ணன் இறைவன் நாமாவை உச்சரிக்கத் தொடங்கினான்.மனதில் இறைவனை நினைத்துக் கொண்டு எதிரே நின்ற உருவத்தைப் பார்த்துக் கேட்டான்.
"ஏய், யார் நீ? இங்கு ஏன் வந்தாய்?" உடனே அந்த கருத்த எருமை பேசிற்று.
"கோகர்ணா, நாந்தானடா உன் அண்ணன் துந்துகாரி.பாபாத்மாவான நான் இந்த பேய் உருவத்தில் அலைகிறேன். நான் செய்த பாபங்களை நினைத்து இப்போது வருந்துகிறேன்.நான் விமோசனமடைய நீதான் உதவ வேண்டும்."
"உனக்காகத் தானே நான் கயா சென்று கிரியைகள் செய்தேன்."
"அதெல்லாம் நான் செய்த பாவத்திற்குப் போதாது.நான் மகா பாவி.வேறு ஏதேனும்வழி செய்து என் பிறவி மோட்சமடைய 
செய்வாய்."
"சரி.ஏதேனும் வழி கிடைக்குமா என்று விசாரிக்கிறேன்.நீ நாளை வா. இப்போது இங்கிருந்து செல்."
தம்பியின் ஆறுதலான சொற்களைக் கேட்டு அங்கிருந்து அந்த எருமை உருவம் மறைந்தது.  
           மறுநாள் காலை கோகர்ணன் மனதில் பக்தியுடன் சூரிய பகவானை வேண்டிக் கொண்டான்.அவனது பக்தியை மெச்சிய சூரிய பகவானும் அவன் முன் தோன்றினார்.அவரை வணங்கிய கோகர்ணன் தன் அண்ணனின் நிலையைக் கூறி அவனது விமோசனத்திற்கு வழி கேட்டான்.சூரிய பகவானும் "கோகர்ணா, உன் அண்ணன் மீது நீ கொண்டுள்ள அன்புக்கு மெச்சினேன்.
உன் சகோதரனின் இந்தப் பேயுருவம் நீங்க வேண்டுமெனில் நீ பாகவத ப்ரவசனம் செய்.அதை உன் அண்ணன் கேட்கட்டும்.
அவனது பிறவி முடிந்து அவன் மோட்சம் செல்வான்."என்று கூறி மறைந்தார்.   
            அவர் கூறியபடியே கோகர்ணன் சப்தாஹா என்று சொல்லப்படும் ஏழு நாள் படிப்பைத் தொடங்கினான்.பாகவதக் கதையை எழுநாட்களுக்குள் படித்து முடிப்பதே சப்தாஹா என்று சொல்லப்படும்.அந்தக் கதையைக் கேட்க பலரும் அந்த இல்லத்தில் கூடினர்.
அந்த இடத்திற்கு பேயுருவில் துந்துகாரியும் வந்தான்.அந்தச் சிறு வீட்டில் அவனுக்கு அமர்ந்து கதை கேட்க இடம் கிடைக்கவில்லை. காற்று உருவில் அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தான்.இதைக் கவனித்தான் கோகர்ணன்.ஒரு மூங்கில் கழியைக் கொண்டு வந்து ஒரு மூலையில் சாய்த்து வைத்தான் அந்தக் கழியில் ஏழு கணுக்கள் இருந்தன.அதனுள் புகுந்து கொண்டு கதை கேட்குமாறு கூறினான் கோகர்ணா.துந்துகாரியும் அதேபோல் அந்த மூங்கில் உள்ளே அமர்ந்து கொண்டான்.
            கதை தொடங்கியது.துந்துகாரி பக்தியுடன் அதைக் கேட்டான்.முதல்நாள் கதை முடிந்தவுடன் முதல் கணுவாக இருந்த முடிச்சு உடைந்தது.இதே போல் ஏழு நாட்களும் துந்துகாரி கதை கேட்டு முடிந்ததும் அந்த மூங்கிலில் இருந்த ஏழு முடிச்சுகளும் முரிந்து துந்துகாரி வெளியே வந்து நின்றான்.அவன் கழுத்தில் துளசி மாலையுடன் கரம் கூப்பி நின்ற காட்சியைக் கண்டு கோகர்ணா இறைவனுக்கு நன்றி தெரிவித்தான்.அதே சமயம் அங்கு வந்த விஷ்ணு தூதர்கள் தங்களின் புஷ்பக விமானத்தில் அவனை அமருமாறு கேட்டுக் கொண்டனர்.துந்துகாரி தன் தம்பியை நோக்கி, "தம்பி, கோகர்ணா, நீ சப்தாஹம் என்ற எழுநாள் பாகவதப்ரவசனம் செய்ததால் அதைக் கேட்டு நான் என் பாபத்திலிருந்து விடுபட்டேன்.இதோ விஷ்ணு தூதர்களுடன் நான் வைகுண்டம் செல்கிறேன்.ஸ்ரீமத் பாகவதத்தின் மகிமையே மகிமை." என்றவன் புஷ்பகவிமானத்தில் அமர்ந்து விஷ்ணு தூதர்களுடன் விண்ணில் பறந்து மறைந்தான்.
       ஸ்ரீமத் பாகவதம் என்ற நூலைப் படித்ததாலும் படிப்பதைக் கேட்டதாலும் மனிதருக்கு பாபங்கள் விலகும். நல்ல கதி கிடைக்கும் என்ற உண்மையை இந்தக் கதைமூலம் புரிந்து கொண்டோம். 
       நாம் புரிந்து கொள்ளவேண்டிய செய்தியும் இதிலிருந்து கிடைக்கிறது.நல்ல நூல்களைப் படிப்பதனால் நமக்கு அறிவுடன் நல்ல பண்பும் வளர்கிறது.அதனால் எப்போதும் வள்ளுவர் கூறியபடி,"கற்க கசடறக் கற்க என்பதைப் புரிந்து கொண்டு அதன்படி கற்று அதன்பின் "அதற்குத் தக நிற்க "என்றபடி கற்றதனபடி நடப்போமானால் நாமும் வாழ்வாங்கு வாழ்வோம் என்பதையே இந்தக் கதை மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம் அல்லவா?






 







  

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com