புதன், 16 பிப்ரவரி, 2011

60th story நான்கு கோடி.

நான்கு கோடி.

தமிழகத்தை ஆண்டுவந்த அரசர்களில் மூவேந்தரான சேர சோழ பாண்டிய மன்னர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அதிலும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் மிகச் சிறப்பானவர்கள். பாண்டியமன்னர்களுக்கு அடிக்கடி சில சந்தேகங்கள் ஏற்படுவதுண்டு.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே  மணமுண்டா இல்லையா என்று ஒரு மன்னனுக்கு சந்தேகம் ஏற்படவில்லையா அதுபோல.
ஏதேனும் ஒரு அதிசயமான செயலைச் செய்யச் சொல்வது அவர்களுக்கு வழக்கமான ஒன்று.

பாண்டிய மன்னன் ஒருநாள் சபையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிரே சங்கப் புலவர்கள் அமர்ந்திருந்தனர்.நானூறு புலவர்கள் அம்மன்னனின் சபையில் இருந்தனர். அவர்கள் தங்களின் புலமை பற்றி மிகவும் பெருமைப் பட்டுக் கொண்டிருந்தனர்.

இவர்களின் தற்பெருமையைக் கண்டு மன்னன் கோபம் கொண்டிருந்தான். இவர்களின் இந்த பண்பு தவறு என அவர்கள் அறிய வேண்டுமென 
முடிவு செய்தான்.அதனால் அன்று சபையில் ஒரு கேள்வி எழுப்பினான்.

ஒரே நாளில் எத்தனை பாடல்கள் பாட முடியும்? என்று கேட்டான். ஒவ்வொரு புலவரும் ஒவ்வொரு எண்ணைச் சொன்னார்கள். 
"மன்னனோ நீங்கள் நானூறு புலவர்கள் உள்ளீர்கள். எனவே நான்கு கோடி பாடல்களைப் பாடி வாருங்கள். நாளைக் காலைக்குள் நான்கு கோடிப் பாடல்களைப் பாடவேண்டும். இல்லையேல் உங்கள் தலை மண்ணில் உருளும்" என்று ஆணையிட்டான்.

நானூறு புலவர்களும் கைகளைப் பிசைந்தார்கள். மன்னனுக்கு என்ன ஆயிற்று. இப்படி புத்தி போகிறதே. நடக்க இயலாத ஒரு காரியத்தை செய்யச் 
சொல்கிறாரே. ஒரே இரவில் ஒவ்வொருவரும் நூறு பாடலைப் பாடினாலே அது நாற்பதாயிரம் பாடல்தானே ஆகும் நான்கு கோடிக்கு எங்கே போவது எனத் திகைத்தனர்.

மன்னனோ அவர்களை உடனே "அவையை விட்டுச் செல்லுங்கள். உங்கள் பணியை உடனே தொடங்குங்கள்" எனக் கூறி அனுப்பிவைத்தான்.
புலவர்கள் வழியறியாமல் குனிந்த தலையுடன் வெளியேறினர்.

ஊரைவிட்டு வெகு தூரத்தில் இருந்த காட்டில் ஒன்று திரண்டனர். என்ன செய்வது எப்படி மன்னனை திருப்திப் படுத்துவது என ஒவ்வொருவரும் ஆலோசனை செய்தனர்.கடைசியில் வயதில் மூத்தவர் எழுந்தார். நாம் அனைவரும் சேர  நாட்டுக்குச் சென்று விடுவோம். இங்கிருந்தால் நம் தலை தப்பாது. என்று ஆலோசனை சொல்ல அனைவரும் அதுவே சரியென முடிவு செய்தனர்.

நானூறு புலவர்களும் இரவோடு இரவாக பாண்டிய நாட்டை விட்டு சேர நாடு நோக்கி நடக்கலானார்கள்.

சேர மன்னனிடமிருந்து பரிசில் பெற்றுக்கொண்டு அதே வழியாக பாண்டிய நாடு நோக்கி வந்துகொண்டிருந்தார் ஔவையார். ஏதோ பெருங்கூட்டம் ஒன்று தன முன்னே வருவதைப் பார்த்துத் திகைத்து நின்றார். எதிரே வந்த புலவர் கூட்டமும் ஔவையாரைப்  பார்த்துத திகைத்தனர்.

"புலவர்களே! பாண்டிய நாட்டுக்கு என்ன நேர்ந்தது? ஏன் அனைவரும் வெளியேறிச் செல்கிறீர்கள்?" வினாக்களை அடுக்கினார் ஔவையார்.

தங்களுக்கு பாண்டிய மன்னனால் வந்த சோதனையைக் கூறினர் புலவர்கள். "புலவர்களே இதில் ஏதோ சூது உள்ளது வாருங்கள். மன்னனை 
அதே சூதினால் வெல்வோம்." என்று அவர்களுக்கு ஆறுதல் கூறிய ஔவையார் அனைவருடன் பாண்டியன் அரண்மனை நோக்கி நடந்தார். புலவர்களும் உடன் நடந்தனர்.

பாண்டியமன்னன் அவையில் அமர்ந்திருந்தான். மந்திரி பிரதானியர் சூழ்ந்திருந்தனர். பொது மக்களும் நிரம்பியிருந்தனர்.
அவைக்குள் ஔவையார் நானூறு புலவர்கள் புடைசூழ நுழைந்தார். மன்னன் தன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து வந்து அவரை வரவேற்றான்.ஔவையார் சற்றே கோபத்துடன் பேசினார்.

"பாண்டிய மன்னா!  இது என்ன அநீதி? ஒரே நாள் இரவுக்குள் நான்கு கோடி பாடல் பாடவேண்டுமென்றாயே. தமிழ் படித்த புலவர்களை அவமதிக்க வேண்டும் என எண்ணினாயா?"

"தாயே மன்னிக்க வேண்டும். தங்களால் ஆகாதது எதுவும் இல்லை என்கிற எண்ணம் இவர்களுக்கு வந்ததாலேயே இந்தக் கட்டளையை விதித்தேன்.  உயிருக்குப் பயந்து ஓடுவார்கள் என நான் எண்ணவில்லை.  அதனால் இவர்களுக்கு இட்ட தண்டனையை நிறைவேற்றுவதே என் எண்ணம்.

"பாண்டியமன்னனே, பொறு. நீ கேட்ட நான்கு கோடிப் பாடல்களை நான் பாடினால் இந்தப் புலவர்களை விடுவித்து மீண்டும் அவையில் சேர்ப்பாயல்லவா?"

"என்ன! நான்கு கோடிப் பாடல்களை தாங்கள் பாடுகிறீர்களா?" என்று திகைத்தான் மன்னன். அவையினர் அனைவரும் ஆவலுடன் பார்த்தனர்.

"ஆம்" என்றார்  ஔவையார். பாண்டியனும் சம்மதித்தான்.

ஔவையார் பாடிய பாட்டுதான் இது. 

"மதியாதார் தலைவாசல் மதித்தொருகால் சென்று மிதியாமை கோடி பெரும்.

உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை கோடி பெரும்.

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடியிருப்பது கோடி பெரும்.

கோடானு கோடி கொடுப்பினும் தன் நா கோடாமை கோடி பெரும்"
  
"மன்னா! இந்த உண்மைகளை நீ ஒப்புக் கொள்கிறாயல்லவா?  நீ கேட்டபடி நான்கு கோடிகளைப  பாடிவிட்டேன். இனி புலவர்களை பழைய படி அவையில் அமர இடம் கொடு.
தமிழ் கற்றவர்களை தண்டித்தால் அவர் கற்ற தமிழ் உன்னைத் தண்டிக்கும்."

மன்னன் ஒளவையின் சொல்லுக்குத் தலைவணங்கினான். புலவர்களும் தங்களின் கர்வம் நீங்கி ஒளவையை வணங்கினர்.








--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

சனி, 5 பிப்ரவரி, 2011

59th story. வீர மகளிர்--2

வீர மகளிர்--2
காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்ற புலவர் ஒருவர் தமிழகத்தில் வாழ்ந்து வ்ந்தார். செள்ளை என்பது இவரது இயற்பெயர். நற்செள்ளை என்பது திரிந்து நச்செள்ளை என்றாயிற்று என்பர் ஆராய்ச்சியாளர்.

"விருந்து வருமாயின் கரைந்து காட்டுக. வாராதாயின் நடந்து காட்டுக"என்று காக்கையைப் பார்த்துக் கூறும் பழக்கம் தமிழகத்தில் இருந்தது. இக்கருத்தை வைத்துப் பாடல் இசைத்தமையால் இப்புலவர் காக்கைபாடினியார் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.

இப்புலவர் சேரலாதன் என்ற மன்னனைப் பாடிப் பரிசில் பெற்றவர்.அவ்வையாரும்  அதியமானும் போல சேரலாதனுடன்  நட்புக் கொண்டு வாழ்ந்தவர். இவரது பாடல் மூலம் அக்கால மங்கையரின் வீரம் அறியக் கிடைக்கின்றது.

"நரம்பெழுந்துலறிய நிரம்பா மென்றோள்....." எனத் தொடங்கும் பாடலில் மறக்குல மங்கையொருத்தியின் வீரத்தினைப் பாடுகிறார்.

ஒருமுறை ஒரு போரில் வீரன் ஒருவன் பகைவனின் வாளால் வெட்டுண்டு இறந்தான். மிகுந்த வீரத்துடன் போர் புரிந்த அவ்வீரன் பல பகைவர்களைக் கொன்றான். இறுதியில் பகைவரின் வாளால் அவன் உடல்  துணிபட்டுச் சிதைந்து வேறு வேறாய்க் கிடந்தது.கையில் பிடித்த வாளுடன் கிடந்தான் அம்மாவீரன்.

போர்வீரர் போர் முடிந்து வீடு திரும்பினர். இறந்து பட்ட அவ்வீரனின் தாய் முதியவள்.மெலிந்த தோள்களை உடையவள். தன் மகன் வருகிறானா என எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.அவன் வாராமையால் வீரர்களை விசாரித்தாள்.

அவள் மகனின் நிலையை அறியாத சிலர் "உன் மகன் பகைவர்க்குப் புறமுதுகு காட்டி ஓடினான். போர்க்களத்தில் இறந்து விட்டான்." எனக் கூறினர்.
இதைக் கேட்ட முதியவள் பதறித் துடித்தாள்.

முதுமை எய்திய நிலையில் இருந்தாலும் அச்சொல்லைத் தாங்காது துடித்தாள்.தன் மறக்குடியின் பெருமைக்கு இழுக்கு நேர்ந்ததே என எண்ணினாள்.கோபத்தில் அவள் கண்கள் தீப்பிழம்பென ஒளிர்ந்தன.அவ்வீரர்களை நோக்கிக் கூறினாள்.

"எனது மகன் நீங்கள் கூறியது போலப் போரில் புறமுதுகிட்டு மாண்டிருப்பான் எனில் அவன் வாய் வைத்துப் பாலுண்ட என் மார்பை  அறுத்தெறிவேன்.
இது என் மறக்குடியின் மீது ஆணை."

இவ்வாறு வஞ்சினம் கூறிய அம்மூதாட்டி தன் கையில் வாளொன்றை ஏந்திக்கொண்டு போர்க்களத்திற்குச் சென்றாள்.அங்கே போர்வீரர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன.
தன் மகனின் உடலை அவளால் காண இயலவில்லை. ஒவ்வொரு உடலாகப் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள். முடிவில் தன் மகனின் உடலைக் கண்டாள்.

வேறு வேறாகக் கிடந்த தன் மகனின் உடலை ஒன்றாகச்  சேர்த்தாள்.ஒழுங்கான தன் மகனின் உடல் கண்டு பூரித்தாள். ஆம். அவள் மகன் ஒரு வீரன். தன் கையில் பிடித்த
வாளைக் கீழே போடாமல் விழுப்புண் பட்டு இறந்து கிடந்தான்.

"என் மகன் வீரன்.அவன் புறமுதுகு காட்டி ஓடவில்லை.மார்பிலும் முகத்திலும் புண் பட்டு வீழ்ந்துள்ளான்." என அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி கொண்டாள்.
அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியினும் பெரு மகிழ்வு கொண்டாள். அவள் மனத்துயர் நீங்கிற்று.தன் மகன் தான் பிறந்த குடிக்கு இழுக்கு சேர்க்கவில்லை பெருமைதான் சேர்த்துள்ளான். என மகிழ்ச்சி கொண்டாள்.

இதைப் பார்த்த நச்செள்ளையாருக்குப் பெரு வியப்பு ஏற்பட்டது. "என்னே இந்த மறக்குலப் பெண்ணின் வீர உணர்வு!" என எண்ணிய போழ்து அவரது உள்ளத்தில் தோன்றிய
பாடலே புறநானூற்றில் உள்ள இப்பாடல்.

"நரம்பெழுந  துலறிய  நிரம்பா மென்றோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறினான் என்று  பலர்கூற
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே."

இப்பாடல் மூலம் தமிழ் மகளிரின் வீரம்  கண்டு நாம் பெருமிதம் அடையலாம்.  இதுபோன்ற பல செய்திகளை நமது சங்க இலக்கியங்கள் நமக்கு எடுத்து இயம்புகின்றன.
இவற்றின் மூலம் நமது பழநதமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி நாம் அறியலாம்.









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

வியாழன், 27 ஜனவரி, 2011

58th story. வீர மகளிர்--1

வீர மகளிர்--1

ஒக்கூர் என்னும் ஊரில் மாசாத்தியார் என்பவர் வாழ்ந்து வ்ந்தார். ஒக்கூரில் பிறந்தமையால் ஒக்கூர் மாசாத்தியார்  என அழைக்கப் பட்டார். சங்க காலத்து நல்லிசை மெல்லியலாருள் மாசாத்தியாரும் ஒருவர். பறந்து சென்று இரை தேடும் பறவைகள் போல நாடு விட்டு நாடு சென்று வள்ளல்களை நாடிப் பரிசில் பெற்று வாழும் இயல்புடையோர் புலவர் பெருமக்கள். தமக்கெனத் தமியர் உண்ணாது பிறர்க்கு அளித்து உண்டு பொருள் தேவைப் படும்போது மன்னர்களை நாடிச் செல்வது இவர்களின் பண்பு.

அதுபோன்ற ஒரு சமயத்தில் மாசாத்தியார் பொருள் வேண்டிப் புறப்பட்டார்.  வெகு தொலைவு நடந்து சென்று ஒரு நாட்டின் பெரு நகரம் ஒன்றில் நுழைந்தார். அது சமயம் அந்த நாடு அண்டை நாட்டுடன் போரில் ஈடுபட்டிருந்தது.  ஊரின் நிலையைப் பார்த்தபடியே ஒரு மறக்குடி மங்கையின் வீட்டினுள் நுழைந்தார் புலவர் பெருமாட்டி.

அங்கு இவர் கண்ட காட்சி இவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.  பெருமிதம் அடையச் செய்தது.  நம் நாட்டு மறக்குடி மகளிரின் வீரம் எத்தகையது என எண்ணி எண்ணி மகிழத் தக்கதாக இருந்தது.

அவர் கண்ட அக்காட்சியை வியந்து ஒரு பாடலாகப் பாடினார் புலவர் பெருமாட்டி.  இத்தகு பாடல்களே நமக்கு இலக்கியச் சான்றாக விளங்கி பண்டைய வரலாற்று நிகழ்ச்சிகளை நமக்கு அறிவிக்கின்றன.  அம்மங்கையின் வீரத்தைக் கூறும் இப் பாடல் புறநானூறு என்னும் நூலில் உள்ளது.

அப்பாடல் இதோ.
                "கெடுக சிந்தை கடிதிவள் துணிவே.
                  மூதின் மகளிர் ஆதல் தகுமே.
                 மேனாளுற்ற செருவிற்கிவள் தன்னை
                  யானை எரிந்து களத்தொழிந்தனனே
                  நெருநல் லுற்ற செருவிற் கிவள்கொழுனன்
                  பெருநிரை விலக்கி ஆண்டுப் பட்டனனே.
                  இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
                  வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப்
                  பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
                  ஒருமகன் அல்லது  இல்லோள்
                  செருமுக  நோக்கிச்  செல்கென  விடுமே."                        

இப்பாடல் மூலம் அந்த வீர மங்கையின் செயல் நமக்குக் கண்முன் காட்சியாகக் காணக் கிடைக்கின்றது. ஒரு  மறக்குடி மங்கையின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சியாகக கூறப்படுகிறது.

என்னே இவள் துணிவு.இவள் மறக்குடியில் பிறந்தவள் எனக் கூறல் தக்கதே. முன்னாளில் நிகழ்ந்த போரில் இவளது தந்தை யானையைக் கொன்று தானும் இறந்தான். இவள் கணவனோ ஆநிரைகளைப் பகைவர் கொள்ளாதவாறு  விலக்கி போர்க்களத்தே மாண்டான். இன்றும் போர்ப்பறை ஒலி கேட்டது.

இவளது முகத்தில் மறத்தீ கிளர்ந்து  எழுந்தது.  தனக்கு ஒரேமகன் இவன்எனவுமஎண்ணவில்லைஅம்மாதரசி.வினை முடித்தற்கு தன் மகனை அனுப்புவது என முடிவு செய்தாள்.  தன் மகனை அருகே அழைத்து
அவன் தலையில் எண்ணெய் பூசி இழுத்து முடித்தாள். அரையில் தூய வெண்ணிற ஆடையை எடுத்து உடுத்தினாள்.
அம்மகன் கையில் கூர்மையான வேலோன்றைத் தந்தாள்.

அவன் முகத்தை நோக்கினாள் "மகனே! உன் தந்தையும் தனையரும் போர்க்களத்தே பொருது மாண்டனர். நம் மறக்குலப் பெருமையை நிறுவினர்.  நீயும் அவர்போன்று போருக்குச் செல்க " என அனுப்பி வைத்தாள்.

இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மாசாத்தியார் மனத்துள் வியந்து பாராட்டினார். அக்காட்சியை  பாடலாக வடித்து அழியாப் புகழை அம்மங்கை அடையும்படி செய்தார்.  நம் நாட்டு மறக்குடி மகளிரின் வீரம் நாம் அறிந்து போற்றத் தக்கது அன்றோ!.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

வியாழன், 13 ஜனவரி, 2011

57th story .உயர்ந்த வாழ்வு.

" பாட்டி சொல்லும் கதைகளைப் படிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்.பொங்கட்டும் பொங்கல் இல்லம்தோறும்.பூக்கட்டும் மகிழ்ச்சி உள்ளம் தோறும்".

                                                     உயர்ந்த வாழ்வு..

சுவர்க்கத்தின் வாயிலில் ஜெயா விஜயர்கள் காவலிருந்தனர். அவர்களின் அருகே பரமாத்மாவான நாராயணரின் பாதரட்சைகள் இரண்டும் சாதுவாகக் கிடந்தன.

உள்ளே அனந்த சயனத்தில் இருந்தார் பெருமான். அவரது இரண்டு கைகளில் சங்கமும் சக்கரமும் பெருமையுடன் வீற்றிருந்தன.பெருமானான நாராயணன் யோக நித்திரையில் இருந்தார்.

அப்போது இறைவனின் இடது கையிலிருந்த சங்கு வாயிலில் இருந்த பாதுகையைப் பார்த்து நகைத்தது. வலது கையிலிருந்த சக்கரம் "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டது.

"வாசலில் கிடக்கும் பாதுகைகளைப் பார்த்தேன் பாவமாக இருந்தது.
அதுதான்  சிரித்தேன்." என்றது சங்கு கர்வத்துடன்.

சக்கரமும் அதைக்கேட்டபின் பாதுகையைப்  பார்த்து நகைத்தது. "ஏ பாதரட்சையே! உன் நிலையைப் பார்த்தாயா? வாசலிலேயே கிடந்து காவல் காத்துக் கொண்டிருக்கிறாய். நாங்கள் உன்னை விட உயர்ந்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்."

"நாங்கள் பகவானின் கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறோம். நீயோ வாசலிலேயே கிடக்கிறாய். உன் மதிப்பு அவ்வளவுதான்." என்றது சங்கு.

பாதரட்சை நிமிர்ந்து அவர்களைப் பார்த்தது. சற்றே துணிவை வரவழைத்துக் கொண்டது."நீங்கள் பகவானின் கையில் இருந்தாலும் நான்தான் பகவானைத் தாங்கிக் கொள்கிறேன். என்மீது நின்று கொண்டுதான் பகவான் திரிலோகமும் சஞ்சாரம் செய்கிறார்."

"உன்மீது நின்று கொண்டிருப்பதால்தான் நீ வேலைக்காரன். ஏனெனில் உன்னை வாசலிலேயே கழற்றி வைக்கிறாரே. நாங்கள் அவரது பிள்ளைகளைப் போன்றவர்கள். எங்களைக் கையிலேயே வைத்துப் பாதுகாக்கிறாரே."

இதைக்கேட்ட பாதரட்சை மனவருத்தத்துடன் தலைகுனிந்து நின்றிருந்தது. இந்த உரையாடலை பகவானும் ஆதிசேஷனும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஆதிசேஷன் சிரித்தார். நாராயணரோ "ஏ பாதுகையே! வருந்தாதே. உனக்கும் ஒரு காலம் வரும்.உன்னையும் இவர்கள் வணங்கும் காலம் வரும்." என்றார் ஆறுதலளிக்கும்படியாக.

பகவானின் சொற்களைக் கேட்டு பாதரட்சை சமாதானமடைந்தது. இதன் நிலை கண்டு இரக்கப் பட்ட ஜெய விஜயர்கள் ஆறுதலாகப் பேசினார்கள்.

"ஏ, பாதரட்சையே பகவானின் பாதகமலங்களைப் பற்றி எத்தனை அடியார்கள் பாடல் பாடியுள்ளனர்!.
அதையெல்லாம் சொன்னால் இந்த ஜன்மம் போதாது. இப்படிப்பட்ட திருவடி நிழலுக்காகத்தான் பூமியில் பிறவியெடுத்த அடியார்கள் எல்லாம் பக்திமூலமாக அதனை அடைய முயன்றனர். அத்தகைய பாதங்களைத்தான் நீ தாங்கிக் கொண்டு உலவுகிறாய். எனவே நீயும் பெருமைப் படத்தக்கவன்தான்."

"அத்துடன் இந்த அகிலங்களை எல்லாம் தாங்கியுள்ளவன் பரமாத்மா. அவனையே நீ தாங்கி நிற்கிறாய்.. உன் புகழ் அகிலம் முழுவதும் பரவும்." என்றான் ஜெயன்.

இச்சொற்களைக் கேட்ட பாதுகை ஒருவாறு சமாதானமடைந்தது.

கிருதயுகம் முடிந்து த்ரேதாயுகம் தொடங்கியது. ஸ்ரீ நாராயணன் ஸ்ரீராமனாக அவதரித்தான். தசரதனின் மகனாகத் தோன்றி வளர்ந்தான். விசுவாமித்திரருடன் வனம் சென்று அரக்கரை அழித்து அகலிகைக்கு சாப விமோசனம் அளித்தான். மிதிலை சென்று வில்லை முறித்து சீதையை மணந்தான். பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்தான் தசரதன். ஆனால் கைகேயி கேட்ட இரு வரத்தினால் ராமன் வனம் செல்ல நேர்ந்தது.

கைகேயியின் மகன் பரதனைப் பட்டமேற்கச் சொன்னபோது அவன் மறுத்து அண்ணனுடன் தானும் வனவாசம் செய்வதாகச் சொல்லி சத்ருக்னன் பின்தொடர வனம் வந்தான்.ராமனைத் தொழுது மீண்டும் அயோத்தி வந்து முடிசூட்டிக் கொள்ளும்படி வேண்டினான்.

ஆனால் அன்னையின் ஆசையையும் தந்தையின் ஆணையையும் நிறைவேற்றுவதே தன் கடமை என்று மறுத்தான் ராமன்.

 பரதனோ அயோத்தி நகருக்குள்  மீண்டும்  அண்ணன் ஸ்ரீ ராமனுடன்தான் நுழைவேன் என்று கூறிவிட்டான்.
அயோத்தியின் எல்லையிலுள்ள நந்திகிராமத்திலேயே ஆசிரமம் அமைத்து அங்கேயே துறவிபோல வாழப் போவதாகச் சொன்னான் பரதன்.

அயோத்தி மக்களின் கதியைப் பற்றிக் கேட்டபோது ராமனின் பிரதிநிதியாக அவன் பாதுகைகளைப் பெற்று  நந்திகிராமத்தில் இருந்தபடியே நாட்டை ஆள்வதாகக் கூறினான்.அதற்காக ராமனின் பாதுகைகளைப் பெற்றுக் கொண்ட பரதன்  அதைத் தன் தலைமீது தூக்கிக் கொள்ள சத்ருக்கனன் தொழுதபடி பின்தொடர்ந்தான்.
.
இப்போது  ராமனின் பாதுகைகள் மனமகிழ்வுடன் ராமனை வணங்கின. என்னை இகழ்ந்த சங்கு சக்கரம் இரண்டும் பரத சத்ருக்கனராக அவதரித்து என்னைத் தன் தலைமேல் தூக்கிச் செல்லும் நிலையை ஏற்படுத்திக் கொடுத்த அவதார புருஷன் ராமனை நன்றியுடன் வணங்கிச் சென்றன.

நந்திகிராமத்தை அடைந்த பரதன் பாதுகைகளை பொன் சிம்மாசனத்தில் வைத்து ஒரு அரசனுக்குரிய மரியாதையுடன் தினமும் வணங்கி அயோத்தியை ஆண்டு வந்தான்.

ஒருநாள் தன்னை ஏளனமாக இகழ்ந்ததற்காக பதினான்கு ஆண்டுகள் தன்முன் சிரம் தாழ்த்தி வணங்கும்படி இந்த சங்கு சக்கரத்திற்கு நாராயணர் தண்டனை அளித்ததை எண்ணி மனம் ஆறுதல் அடைந்தது.. அத்துடன் எளியாரை இகழ்தல் எப்போதும் இறைவனுக்குப் பிடிக்காத செயல் என்பதையும் புரிந்து கொண்டது  அப்பாதுகை.

தன்னினும் எளியாரை இகழ்தல் தகாது என்ற உண்மையையும் "எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்" என்ற உண்மையையும்  நாம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
.
இத்தகு உயர்ந்த உண்மைகளையும் நன்நெறிகளையும் புதைத்து வைத்துள்ள நமது இதிகாசங்களை ஆழ்ந்து படித்து அறிந்துகொண்டு அதனைப் பின்பற்றி வாழ்வது உயர்ந்த வாழ்வாகும் அன்றோ?  



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

செவ்வாய், 4 ஜனவரி, 2011

56th story. கண் திறந்த கன்னி.

                                                               
       " பாட்டி சொல்லும் கதைகளைப் படிப்பவருக்கும் அவர்களின் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வளமும் நலமும்பெற்று பல்லாண்டு வாழ்க."
அன்புடன் பாட்டி,
ருக்மணி சேஷசாயி.

                                                                 கண் திறந்த கன்னி.

 மலைநாடு என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாடு வளம் மிகுந்து காணப் பட்டது. காலம் தவறாது மழை பொழிந்தது. விளைச்சலும் நன்றாக இருந்தது. 
ஆனால் அந்த நாட்டு மன்னனுக்குப் பெண்கள் அறிவாளியாக இருப்பதும்  கல்வி கற்பதும் பிடிப்பதில்லை. 
 அதனால் பெண்கள் பள்ளி சென்று படிப்பதைத் தடை செய்திருந்தான்.
அந்தநாட்டு ஆண்களும் இதை ஏற்றுக் கொண்டு தங்களின் மகன்களை மட்டும் பள்ளிக்கு அனுப்பி விட்டு சிறுமியரை வீட்டு வேலைசெய்யவும் கழனி வேலை செய்யவும் ஏவினர்.

ஆனாலும் நல்லசெழிப்பினால் செல்வ வளத்துடன் எல்லா செல்வங்களும் பெற்றிருந்தனர். அதனால் 
அந்தநாட்டு மக்கள் யாவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.அந்த மலைநாட்டின் பின்னால் பெரிய மலைகள் இருந்தன.

அந்த மலைக்குகையில் ஒரு அரக்கன் வாழ்ந்து வந்தான்.அவனுக்கு அந்தநாட்டு மக்கள் மகிழ்ச்சியாய் வாழ்வது பிடிக்கவில்லை.அதனால் மழை தரும் மேகங்களை ஒரு பையினுள் அடைத்து அதைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டான். 

அதுமுதல் அந்த நாட்டுக்கு மழை பொழிவது நின்றது. மலைநாடும் தன் வளமிழந்தது. அந்தநாட்டு மன்னன் செய்வதறியாது திகைத்தான்.

ஒரு நாள் அவனது நாட்டுக்கு ஒரு அடியவர் வ்ந்தார்.அவர் பெரும் ஞானி. அவர் மன்னனின் முக வாட்டத்தைப் பார்த்துக் காரணம் கேட்டார்.
மன்னன் நாட்டு வளம் குன்றிய காரணம் யாதெனத் தெரியவில்லை எனக் கவலையுடன் கூறினான்.
அதைக் கேட்ட முனிவர் புன்னகை புரிந்தார். தன் ஞானத்தினால் காரணத்தைக் கண்டார்.அவர் 

மன்னனிடம் "அரசே! கவலை வேண்டாம். மழையைப் பிடித்து மடியில் மறைத்து வைத்துள்ளான் ஒரு அரக்கன். அந்த அரக்கனை வென்றால் மட்டுமே மேகத்தை விடுவிக்க முடியும்.மேகம் மீண்டால்தான் உன் நாட்டில் மழை பொழிந்து நாடு சுபிக்ஷமடையும்." என்றார்.


மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். "இப்போதே பறையறைவித்து அந்த அரக்கனைக் கொல்லத் தக்க வீரனைக் கண்டு பிடித்து அனுப்புகிறேன் "என்றான்.

முனிவர் தடுத்தார்" நில் மன்னா! அந்த அரக்கனைக் கொல்ல பெரியவர்கள் யாரும் செல்லக் கூடாது.
பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன்தான் செல்ல வேண்டும்."

"அப்படியே பறையறைவிக்கிறேன். குழந்தையில்லாத நான் வெற்றிபெறும் அந்தச் சிறுவனை என் மகனாக ஏற்றுக்கொள்கிறேன்."

மன்னனின் கட்டளை  கேட்ட மக்கள் உடனே தங்கள் தங்கள் மகன்களுக்குப்  பல பயிற்சிகளைக் கொடுத்துஅரக்கனை வெல்ல  தயாரானார்கள்  
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறுவன் செல்லத் தொடங்கினான். ஒரு வாரம் காத்திருந்து அவன் 
திரும்பவில்லையானால் அடுத்த சிறுவன் சென்றான். இப்படியே ஆறு மாதங்களாயிற்று.

அந்த ஊரில் சாத்தன் என்று ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான்.அவனுக்கு இரண்டு மனைவிகள். முதல் 
மனைவிக்கு ஒரு மகனும் இரண்டாவது மனைவிக்கு ஒரு மகளும் இருந்தனர். மகன் பெயர் முருகு.இரண்டாவது மனைவியின் மகளுக்கு காந்தாமணி  என்று பெயர்.

காந்தாவின் தாயார் காந்தா குழந்தையாக இருக்கும் போதே இறந்து விட்டாள். எனவே சிறுமி காந்தாவை ஒரு வேலைக்காரியைப் போல  பல வேலைகள் செய்யச் சொல்லிக் கடுமையாகப் பேசுவாள் அவள் பெரியம்மா.

காந்தா பிறவியிலேயே மிகவும் பொறுமைசாலி. நல்ல அறிவாளியும் கூட. அந்த ஊரில் சிறுவர்கள் மட்டும் பள்ளி செல்வதும் சிறுமியர் வீட்டு வேலை செய்வதும்  கழனி வேலைக்குப் போவதுமாக இருப்பதைப் பார்த்து மனம் வருந்தி இருந்தாள்.

சாத்தனுக்கும்  தன் மகன் மன்னனாகி அந்த நாட்டை ஆளவேண்டும் என்னும் ஆசை இருந்ததால் அரக்கனைக் கொல்ல தன் மகன் முறை எப்பொழுது வரும் எனக் காத்திருந்தான்.

ஒருநாள் காந்தா  வீட்டு வேலை முடித்து தன் தந்தைக்குச் சோறு கொண்டுபோய்க் கொண்டு இருந்தாள்.
வழியில் ஒரு வயதான கிழவர் களைப்புடன் அமர்ந்திருந்தார்.அவரருகே சென்ற காந்தா,"தாத்தா, பசிக்குதா?" என்றாள் அன்புடன்.
'
ஆம்' என்பதுபோல் தலையசைத்தார் அந்த முதியவர்.காந்தா அங்கேயே அமர்ந்து தான் கொண்டு வந்த சோற்றில் கொஞ்சம் எடுத்து ஒரு இலையில் வைத்துக் கொடுத்தாள். வாய்க்காலில் இருந்து நீர் மொண்டு வந்து கொடுத்துச் சாப்பிடச் சொன்னாள்.
தாத்தா புன்னகையுடன் தலையசைத்தார். 

"நான் வரேன் தாத்தா" என்றபடியே நடந்தாள் காந்தா.
மாலையானதும் அதே வழியில் திரும்பி வந்து கொண்டிருந்தாள் காந்தா. அப்போதும் அந்தமுதியவர் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார்.

அவரை நெருங்கிய காந்தா புன்னகையுடன்"சாப்பிட்டீர்களா தாத்தா?"என்றாள் அன்புடன்.

"இங்கே வா அம்மா. நீ கொடுத்த உணவு அமிர்தம் போல இருந்தது. இப்போ நான் உனக்கு ஒரு பரிசு தரப் 
போகிறேன்."என்றார். அதைக்கேட்டு காந்தா மிகவும் மகிழ்ந்தாள்.ஆவலுடன் "என்ன பரிசு தாத்தா?" 
என்றாள்.
முதியவர் தனது பையிலிருந்து ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்தார்.அதை காந்தாமணியிடம் 
கொடுத்தார்.அதைப் பெற்றுக் கொண்ட  காந்தா" மிக்க நன்றி தாத்தா" என்றாள் பணிவுடன். 

"இது சாதாரணக் கண்ணாடி இல்லை. உன் கேள்விக்கு விடை காட்டும் கண்ணாடி.இதை உன் கையில் எப்போதும் வைத்துக் கொள்.வெற்றியே கிட்டும்" என்று ஆசி கூறிச் சென்றார்.


மறுநாள் முருகு அரக்கனை வெல்லச் செல்லவேண்டிய தினம். அவனுக்கோ ஒரே பயம். துணைக்கு மலை அடிவாரம் வரை வருவதாகக் கூறி காந்தாமணியும் உடன் சென்றாள்.குறிப்பிட்ட இடம் வந்ததும் 
காந்தாமணி தன் அண்ணனிடம் தானே அரக்கனிடம் செல்வதாகக் கூறினாள். அண்ணன் சம்மதிக்கவே அவனது உடைகளைத் தான் அணிந்து கொண்டு அரக்கனைச் சந்திக்கப் புறப்பட்டாள் காந்தா. 

குகைக்குள் சற்றே துணிவை வரவழைத்துக் கொண்டு நுழைந்தாள். பெரும் சிரிப்போடு அவளை வரவேற்றான் அரக்கன்."என்னை வெல்ல ஒரு சிறுமியா வந்துள்ளாய்?" என வினவியபடியே அவள் முன் வந்து நின்றான்.அவனை நிமிர்ந்து பார்த்து நின்றாள் காந்தா.
"
"என் கேள்விக்கு விடை சொன்னால் நீ வென்றதாக ஒப்புக் கொள்கிறேன்" என்றான் அரக்கன் . 

தைரியத்துடன்" உன் கேள்வியைக் கேள்" என்றாள் காந்தா.

" அக்காள் ஒருத்தி அழுது கொண்டே தம்பி சட்டையைக் கழற்றினாள். கழற்றக் கழற்ற சட்டை வந்தது.கழற்றி முடித்த பின் தம்பியைக் காணோம்.அவன் யார்?" 

ஒரு நிமிடம் திரும்பி நின்றவள் இடுப்பில் இருந்த கண்ணாடியை எடுத்துப் பார்த்தாள்.  உடனே அரக்கன் முன் திரும்பி "வெங்காயம்" என்றாள்.

"சரி அடுத்த கேள்வியைக் கேட்கிறேன். அப்பன் சொறியன் ஆத்தாள் சடைச்சி பிள்ளசக்கரைக்கட்டி.இவன் யார்?"
அப்போதும் பின்னால் திரும்பி கண்ணாடியில் விடை பார்த்தாள். "பலாப்பழம்" என்று விடை சொன்னாள். அடுத்த கேள்வி என்ன?என்பதைப்போல நிமிர்ந்து நின்று அரக்கனைப் பார்த்தாள் காந்தா.

சற்றே தயக்கத்துடன் "ஒருமுகம் கொடுக்கும் திருமுகம். ஓங்கி அடித்தால் ஓராயிரம் தரும் முகம் .அது என்ன?" என்று கேட்டு விட்டு கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான் அரக்கன்.

 சற்றே திரும்பிய காந்தா கண்ணாடியைப் பார்த்தாள்.அதில் எந்த உருவமும் தெரியவில்லை.சற்று திகைத்தாள். அந்தப் பெரியவரை மனதில் வணங்கினாள். திடீரென கண்ணாடி பல துண்டுகளாகத் தெரிந்தது ஒவ்வொரு துண்டிலும் அவளது முகம் தெரிந்தது.மகிழ்ச்சியுடன் "முகம்பார்க்கும்  கண்ணாடி" என்று விடைகூறினாள். 

அரக்கன் மனம் மகிழ்ந்தான்."குழந்தாய் உன்னால் என் சாபம் நீங்கியது.இதோ உனது நாட்டு மேகங்களை விடுவிக்கிறேன் இனி உன் நாடு மழை பொழிந்து செழிப்பாகும்."

காந்தா மகிழ்ச்சிய்டன்  " ஐயா, எங்கள் நாட்டுச் சிறுவர்கள் எல்லோரையும் விடுவியுங்கள்."என்று கேட்டுக் கொண்டாள். அதுவரை அரக்கனின் சிறையில் அடைபட்டுக் கிடந்த சிறுவர்கள் அத்தனைபேரும் ஆரவாரத்துடன்  ஓடிவந்து காந்தாவைச் சூழ்ந்து நின்றனர். 

அரக்கன் காந்தாவுக்கு நிறைய பரிசுப் பொருட்களைக் கொடுத்து அனுப்பிவைத்தான். பின் தனது இருப்பிடம் சென்றான்.வெற்றியுடன் அனைவரும்வருவதைக் கண்ட முருகு தங்கையை மகிழ்ச்சியுடன் வரவேற்றான் அனைவரும் நாடு திரும்பினர்.

 மழை மேகங்கள் உருவாகி மழைபொழியத்  தொடங்கியதை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மன்னரும் மக்களும் வெளியில் நின்று வெற்றியுடன் வரும் சிறுவர்களை வரவேற்றனர்.

ஆணுடையில் இருந்த காந்தாவைப் பெருமை பொங்கப் பார்த்தார் மன்னர்."குழந்தாய், இன்று முதல் நீயே என் மகள் உனக்கு இந்த நாடு மிகவும் கடன் பட்டுள்ளது." என்று காந்தாவின் தலையை தடவிக் கொடுத்தார்.

அவளது பெரியம்மா காந்தாவை வாரி அணைத்துக் கொண்டாள்.காந்தா மன்னரிடம் "அரசே, தயவு செய்து என் அண்ணனைத் தங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள். நான் என் பெற்றோருக்கு உதவி செய்து கொண்டு இருக்கவே விரும்புகின்றேன். அத்துடன் எனது ஆசை ஒன்று உண்டு அதைத் தாங்கள் நிறைவேற்றித் தர வேண்டும் "எனக் கேட்டுக் கொண்டாள். 

மன்னர் மகிழ்வுடன் "எதுவேண்டுமானாலும் கேள்"என்றார்.

"எனது நாட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் கல்வி கற்க தாங்கள் அனுமதி தரவேண்டும் சிறுவர்களுடன் சேர்ந்து சிறுமிகளும் பள்ளி செல்ல வேண்டும்." 

மன்னர் மகிழ்ச்சியுடன் "உன் விருப்பப் படியே இனி அனைவரும் படிக்கலாம். பெண்கள் அறிவில் சிறந்தவர்கள் என்பதை உன் மூலமாக நான் அறிந்து கொண்டேன். இனி நீயும் பள்ளி சென்று படிக்கலாம்" என்றபோது அனைவரும் "கல்விக்கண் திறந்த காந்தாமணி வாழ்க" எனக் கோஷமிட்டதை விண்ணில் இருந்த மேகங்களும் ஆமோதிப்பதுபோல இடி இடித்து  அவளை வாழ்த்தியது.அறிவுக்கு ஆண் பெண் என்ற பேதம் இல்லை என்ற உண்மையை நாம்  அனைவரும் உணர்ந்து கொள்வோம்.
.
  .
.




















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

வியாழன், 23 டிசம்பர், 2010

55th story சூடிக் கொடுத்த சுடர்க்கொடி.

                          சூடிக் கொடுத்த சுடர்க்கொடி.
ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்னும் ஊரில் பெரியாழ்வார் என்று பெயர் பெற்ற பெரியார் ஒருவர்  வாழ்ந்து வந்தார். இளமையில் இவர் பெற்றோர் இவருக்கு விஷ்ணுசித்தர் என்று பெயரிட்டு தக்க வயதில் கல்வி கற்பித்தனர்.

இளம் வயதிலேயே திருமாலிடம் பேரன்பு கொண்ட விஷ்ணு சித்தர் தமக்கென ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் நல்ல மலர்களையும் துளசியையும் பயிரிட்டு தினமும் மாலை கட்டி அவ்வூரில்  உள்ள திருமாலுக்குச் சார்த்தி வந்தார்.


தினமும் தோட்டத்திற்கு நீர்பாய்ச்சுவதும் அதைப் பராமரிப்பதும் பின் புத்தம் புது மலர்களால் பெருமானுக்கு மாலை
கட்டிக் கொடுப்பதுமாகத் தெய்வத்திற்குப் பெரும் தொண்டாற்றிவந்தார்.

பூமாலைதொடுத்துவந்த விஷ்ணுசித்தர் இறைவனுக்குப் பாமாலையும் பாடிவந்தார். இவர் திருமாலைப் பல்லாண்டு பாடி வாழ்த்தியமையால் 'பெரியாழ்வார்' என்று வைணவர்கள் இவரைக் கூறலானார்கள்.

ஒருநாள் மலர்பறிக்கும்போது துளசிச் செடியருகே ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டார்.ஓடிச் சென்று பார்த்தபோது அங்கே அழகே உருவான ஒரு பெண்குழந்தையைக் கண்டார்.களிப்பு மிகக் கொண்டார். அன்று ஆடிமாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி பூரம் நட்சத்திரம்.

அக்குழந்தையைத் தனது மகளாகப் பாவித்து  கோதை எனப் பெயரிட்டு சீரோடும் சிறப்போடும் வளர்த்து வரலானார். கோதைக்கு உணவூட்டும் போதே அந்த ரங்கமன்னாரிடத்தில் பக்தியையும் சேர்த்தே ஊட்டினார் பெரியாழ்வார். அதனால் கோதையும் அந்தக் கண்ணனே தனக்கு மணாளன் என்று எண்ணி அவனையே சதா சர்வ காலமும் எண்ணியும் பாடியும் வந்தாள்..

அரங்கன் மீது கொண்ட பேரன்பினால் சதாசர்வமும் அவனையே  நினைந்து பக்திப் பரவசத்துடன் தொண்டு செய்து வாழ்ந்து வந்தாள் கோதை. பக்தி மேலீட்டினால் நாள்தோறும் விஷ்ணுசித்தர் அரங்கனுக்காகக் கட்டிவைத்திருக்கும் மலர்மாலையை  அவர் அறியாவண்ணம் எடுத்துத் தன் கழுத்தில் அணிந்து அழகு பார்த்து என் இறைவனுக்கு நான் இணையாக உள்ளேனா எனத் தனக்குள் சிந்திப்பாள்.

அந்த கண்ணனுக்கு இணையாகத் தானும் அணிகலன் அணிந்து தன்னை அழகு படுத்திப் பார்ப்பாள்.பின்னர் தந்தையார் அறியாவண்ணம் மாலையைக் களைந்து முன்போலவே வைத்து விடுவாள்.

இதனை அறியாத பெரியாழ்வாரும் அம்மாலையை இறைவனுக்கு சமர்ப்பித்து வ்ந்தார். மனமகிழ்வுடன் இறைவனும் அம்மாலையை ஏற்றுக்கொண்டார்.

இவ்வாறு பலநாட்கள் கழிந்தன. ஒருநாள்  மாலைகட்டி வைத்துவிட்டு வெளியே சென்றார் பெரியாழ்வார். வழக்கம்போல அம்மாலையை எடுத்துத் தன் கழுத்தில் அணிந்துகொண்ட கோதை கண்ணாடியின்முன் நின்று தன் அழகினைக் கண்டு பெருமானுக்கு  இந்த அழகு ஈடாமோ என்று தனக்குள் நினைத்துக் கொண்டிருந்தாள்.

அன்று விரைவிலேயே இல்லம் திரும்பிய பெரியாழ்வார் கழுத்தில் மாலையுடன் ஆடியின்முன் நின்று அழகு பார்த்துக் கொண்டிருக்கும் தன் மகள் கோதையைப் பார்த்துத் திடுக்கிட்டார்.

பாசம் மிகுந்த மகளாயினும் பரமனுக்கு உரியதைப் பாழ்படுத்தி விட்டாளே என்று பதைபதைத்தார். மகளைக் கடிந்துகொண்ட
வர் இறைவனுக்குச் செய்யும் பணிக்கு ஊறு நேர்ந்ததே என வருந்தியிருந்தார்.

அன்றிரவு இறைவன் ஆழ்வாரின் கனவில் தோன்றினார்."அன்பினால் நம்மை ஆண்டவளான- கோதை சூடிக்கொடுத்த பூமாலையே நமக்குப் பெருவிருப்பமானது. அத்தகைய  மாலையையே கொணர்க" எனக் கூறி மறைந்தார்.

துயில் நீங்கிய விஷ்ணுசித்தர் தமது மகள் கோதை ஒரு அவதார மங்கை என உணர்ந்து கொண்டார்.அன்பால் ஆண்டவனையே ஆண்டவளானதால்  அவளை ஆண்டாள் எனவும் மலரைச் சூடிப் பின் இறைவனுக்கு அளித்ததால் சூடிக்கொடுத்த நாச்சியார் எனவும் அழைக்கலானார்.

பருவ வயதை அடைந்த கோதை அந்தக் கண்ணனின் பிரிவைத் தாங்க மாட்டாதவளாய் அவனை அடையும் வழியைச் சிந்தித்தாள். ஆயர் குல மங்கையர் போல இறைவனை அடைய பாவைநோன்பு நோற்றாள். இறைவனுக்கு உகந்த மாதமாகிய மார்கழிமாதத்தில்  அதிகாலை  எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி தன் அன்பை திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் பாடல் மூலமாக வெளிப்படுத்தி மகிழ்ந்திருந்தாள்.

தன் மகளுக்கு மணமுடிக்கும் விதமாக விஷ்ணுசித்தர் ஆண்டாளுக்கேற்ற மணமகனைத் தேடலானார்.ஆனால் ஆண்டாளோ நான் அந்த திருமாலுக்கே உரியவள்.மானிடர் யாரையும் மணந்து வாழமாட்டேன் என்று உரைத்துவிட்டாள்.

பின்னர் அந்தத் திருமாலின் பெருமைகளைப் பற்றிக் கூறும்படி கேட்க தந்தையாராகிய பெரியாழ்வாரும் இறையனாரின் பெருமைகளை விவரித்துக் கூறினார்.தந்தையார் கூறுவதைக் கேட்கக் கேட்க ஆண்டாள் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள்.அவற்றில் அரங்கநாதனின் பெருமையைக் கேட்டு அவருக்கே தான் மனையாளாக ஆகவேண்டும் என்னும் பெரு விருப்புக் கொண்டாள்.


நாளாக நாளாக திருவரங்கன் இவளை மணமுடிக்கக் கூடுமோ?இது நடக்கும் செயலோ? என மிகவும் கவலை கொண்டார் பெரியாழ்வார்.

அன்றிரவு  அரங்கன் அவரது கனவில் தோன்றி " ஆண்டாளை கோவிலுக்கு அழைத்து வாரும் யாம் அவளை ஏற்போம்" எனக்கூறி மறைந்தார்.

அதேபோல் அந்நாட்டு மன்னனான பாண்டியனின் கனவிலும் தோன்றி "நீ பரிவாரங்களுடன் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று பெரியாழ்வார் மகளான கோதையை திருவரங்கத்திற்கு அழைத்து வருவாயாக.அவளை முத்துப் பல்லக்கில் ஏற்றி பரிவாரங்களுடன் அழைத்து  வருவாயாக." எனவும் கூறினார்.

அதே சமயம் கோதை நாச்சியாரும் "மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்"எனத் தான் கண்ட கனவினை பத்துப் பாடல்களில் பாடி அந்த அரங்கனின் அழைப்புக்காகக் காத்திருந்தாள்.

இறைவன் கட்டளைப் படி மன்னனும் மற்றையோரும் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் திருவரங்கத்துக்கும் இடையிலுள்ள பாதையை முத்துப் பந்தர் அமைத்து அழகு படுத்தி  பெரியாழ்வாரின் இல்லம் சென்று வணங்கி ஆண்டவனின் கட்டளையை எடுத்து இயம்பினர்.

ஆண்டாளை ஏற்றிக்கொண்டு முத்துப் பல்லக்கு புறப்பட்டது வழிநெடுகிலும் மக்கள் "ஆண்டாள் வந்தாள். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்" என முழங்கினர்.

திருவரங்கம் கோயிலுக்குள் நுழைந்த கோதை இறைவனை கண்ணாரக் கண்டு மெய் சிலிர்த்தாள்.அந்த  அழகும் அன்பும்  ஈர்க்க கோதை சிலம்பு ஒலிக்க பாம்பணைமேல் பள்ளி கொண்ட பெருமானிடம் ஓடினாள். அப்படியே மறைந்தாள். ஆண்டாள் இறைவனால் ஆட்கொள்ளப் பட்டாள்.

அரங்கன் அர்ச்சகர் மூலமாக "பெரியாழ்வாரே நீர் எனக்கு மாமனாராகிவிட்டீர். ஸ்ரீவில்லிப்புத்தூருக்கே சென்று அங்கே உமது தொண்டினைச் செய்து கொண்டிரும்" எனக் கூறி வழியனுப்பி வைத்தார்.

மார்கழியில் பாவைநோன்பிருந்தால் இறைவனை அடையலாம் என்பதற்கு ஆண்டாளின் வரலாறு இன்றும் சான்றாக நிற்கிறது.இன்றும்  மார்கழி மாதத்தின் சிறப்பை அவளது   முப்பது திருப்பாவைப் பாடல்கள் இயம்பி
நிற்கின்றன.
















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

திங்கள், 13 டிசம்பர், 2010

54th story. சாணக்கிய சபதம்

                                                சாணக்கிய சபதம்.
நமது நாட்டு வரலாற்றில் பல வம்சத்தவரின் ஆட்சிமுறையைப் பார்க்கலாம். அவற்றுள் மௌரியர்வம்சம்  மிகச் சிறப்புடன் பாரத நாட்டை ஆண்டது. இந்த மௌரிய வம்சம் தொடங்கிய கதை மிகவும் சுவாரசியமானது.  

நந்த வம்சத்தின்  கடைசி அரசன் தனனந்தன். இவனது சபைக்கு கௌடில்யர் என்ற அந்தணர் வ்ந்தார். அவரை ஏளனம் செய்து அவையிலிருந்து  வெளியேற்றினான் மன்னன்.

விருந்தினருடன் உணவு அருந்த அமர்ந்த கௌடில்யரை யாசகம் கேட்க வந்தவன் என்று கூறி மண் சட்டியில் உணவு உண்ணக் கொடுத்தான்.அவமானமும் கோபமும் அடைந்த கௌடில்யர் "இதேபோல் நந்த அரசனை மண் சட்டியில் உணவு உண்ண வைப்பேன் அதுவரை என் குடுமியை முடிய மாட்டேன்." என்று சபதம் செய்தார்.

கோபமாக வெளியேறிய கௌடில்யரைப் பார்த்து நவநந்தர்களும் கைகொட்டி நகைத்தனர்.

கௌடில்யர் மிகவும் திறமைசாலி. அத்துடன் சிறந்த ராஜதந்திரம் அறிந்தவர். அதனால் அவருக்கு சாணக்யர் என்ற பெயர் நிலைத்தது. மிகவும் சிந்தனையுடன் நடந்தவர் ஒரு காட்டுப் பகுதிக்குள் நுழைந்தார்..நல்ல வெய்யில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.

திடீரென அவரது காலை ஒரு புல் கற்றை தடுக்கிவிட்டது. அதைப் பார்த்தவர் அந்தப் புல்லைப் பிடுங்கித் தூரப் போட்டார். சற்று தூரம் நடந்ததும் மீண்டும் அந்தப் புல்லைப் பார்த்தார். அருகே வந்தவர் அந்தப் புல்லைப் பறித்தார். அதைத் தீயிட்டுக் கொளுத்தினார். அந்த சாம்பலைத் தன் வாயில் போட்டு நீரைக் குடித்தார். பின் புன்னகையுடன் நடந்தார்.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். ஓடி வந்து அவர் காலில் பணிந்தான். இளம் பாலகனின் முகத்தைப் பார்த்த சாணக்யர் அவனது அறிவாற்றலைப் புரிந்து கொண்டார். அந்தச் சிறுவன் தனக்கு அடைக்கலம் அளிக்கவேண்டுமென்று கேட்டுக் கொண்டான்.

"உன் பெயர் என்ன?"

"சந்திரகுப்தன். நான் நந்த அரசனின் குமாரன்.  என் தாயார் மூரா அரண்மனை பணிப்பெண்ணாக இருந்ததால்  நந்தர்கள் என்னை அரசகுமாரனாக ஏற்காமல் கொல்லத் திட்டமிட்டனர். நான் தப்பிவந்து இங்கு மறைந்து கொண்டுள்ளேன். எனக்கு இனி தாங்கள்தான் துணை."

சாணக்யர் தனக்குள் புன்னகைத்துக் கொண்டார். பொருத்தமானவன்தான் தன்னிடம் வந்து சேர்ந்துள்ளான் எனத் தெரிந்து கொண்டார்.

அன்று முதல் சந்திரகுப்தனுக்கு ஆசிரியராகவும் ஆலோசகராகவும் விளங்கிய சாணக்யர் அவனுக்குத் தாயாகவும் இருந்து பேணிக் காத்தார்.
அரசருக்குரிய போர்ப்பயிற்சியையும்  அரசாட்சி முறையையும் கற்பித்தார்.

அவற்றையெல்லாம் கவனத்துடன் கற்றுக்கொண்டான் சந்திரகுப்தன். நந்தர்களின் மீது படையெடுக்கக் காலம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
போதிய படைவீரர்கள் சேர்ப்பதற்காக ரகசியமாக பணியாற்றினார் சாணக்யர்.

ஒருநாள் இருவரும் ஆலோசனை செய்தவாறே காட்டின் நடுவே நடந்து கொண்டிருந்தனர். ஒரு இடத்திற்கு வந்தவுடன் சாணக்யர் திடீரென நின்றார்.
அந்த இடத்தில் ஏதோ வித்தியாசமாக சத்தம் வருவதைக் கவனித்தார்.

உடனே அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தார். என்ன ஆச்சரியம். பூமிக்குக் கீழே ஒரு சுரங்கப் பாதை போவது தெரிந்தது.அதன் வழியே கவனமாக அடி வைத்துச் சென்றார் சாணக்யர்.

ஒரு பெரும் அறைபோலிருந்த இடத்தில் பெரும் புதையல் இருப்பதைப்  பார்த்துப் பெரிதும் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினார் சாணக்யர்.
செல்வத்தைக் காட்டி இனி படையை எளிதாகத திரட்டலாம் என மகிழ்ந்தார்.

அவரது எண்ணம் போலவே விரைவில் பெரும் படை திரண்டது. பெரும் கேளிக்கைகளில் மூழ்கியிருந்த நந்தர்களை சந்திரகுப்தன் எளிதாக வென்று நாட்டைக் கைப் பற்றினான். விரைவில் மன்னனாக முடிசூடிக் கொண்டான். சாணக்யர் அவனது ராஜகுருவாகவும் மந்திரியாகவும் ஆலோசகராகவும் இருந்து பணியாற்றினார்.

சிறையில் அடைபட்டிருந்த நவ நந்தர்கள் கையில் ஒவ்வொரு மண் சட்டியைக் கொடுத்து உணவு அருந்தக் கொடுத்தார். பசியுடன் இருந்த அவர்களும் அந்த உணவை ஆவலுடன் உண்ணும் போது சாணக்யர் உள்ளே நுழைந்தார்.

"தனனந்தா ! உணவு போதுமா? இன்னும் வேண்டுமா? சட்டியில் உண்ணும் உணவு தங்கப் பாத்திரத்தில் உண்பதற்கு ஒப்பாக உள்ளதா? அறிவாளிகளை அறிந்துகொள்ளாத மூடனே, நீ அரசனாக இருக்கவே தகுதியற்றவன். அடிமையாக இருக்கவே தகுதியானவன். இதோ என் சபதப்படி உன்னைப் பழைய சட்டியில் உணவருந்த வைத்துவிட்டேன் என் குடுமியை இப்போது முடிந்துகொள்கிறேன்."

குடுமியை முடிந்து கொண்ட கௌடில்யர் அரண்மனை வந்தடைந்தார். சந்திரகுப்தனின் பேரரசின் புகழுக்கு முக்கிய காரணமானவர் இந்த கௌடில்யர் என்னும் சாணக்யரே. விஷ்ணுவர்த்தனர் என்றும் இவருக்கு வேறு பெயர் உண்டு. இவரே அர்த்தசாஸ்திரம் என்னும் நூலை எழுதியவர்.
சந்த்ரகுப்தமௌரியர்தான் நந்த வம்சத்தை அழித்து மௌரிய வம்சத்தைத தொடங்கியவர். தமிழகம் தவிர பாரதநாடு முழுவதையும் ஆட்சிசெய்தவர். 

நம் இந்திய வரலாற்றில் சாணக்யர் முக்கிய இடம் பெற்றுள்ளார்.

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

வியாழன், 2 டிசம்பர், 2010

53rd story. முள்ளங்கித் திருடன்

                                                     முள்ளங்கித் திருடன்.
                 ஓர் ஊரில் ஒரு முதியவரும் அவர் மனைவியும் வசித்து வந்தனர். கிழவி எப்போதும் சிடுசிடுப்புடன் தன் கணவரைத் திட்டிக் கொண்டே இருப்பாள்.அந்தக் கிழவரோ மிகவும் அமைதியுடனும் பொறுமையுடனும் எல்லாத் திட்டுகளையும் வாங்கிக் கொண்டே அவளுக்கும் பணிவிடை செய்து வந்தார்.
        

காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போவது வரை கிழவி அவரை ஏதேனும் வேலைகள் ஏவிக்கொண்டே இருப்பாள். கயிற்ருக் கட்டிலில் சாய்ந்துகொண்டு தண்ணீர் கொண்டுவா பாத்திரம் கழுவி வை கடைக்குப் போ என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பாள்.


எல்லா வேலைகளையும் கிழவர் முகம் சுளிக்காமல் செய்து முடிப்பார்.சில நாட்கள் அவர்களுக்குத் தேவையான உணவைக் கூட கிழவரே செய்து முடிப்பார். 

கிழவிக்கு ஆசை அதிகம்.

அவளது ஆசைக்குத் தக்கபடி தன் கணவர் சம்பாதிக்கவில்லை என்று கிழவிக்குக் கோபம். எனவே வேலையாவது செய்யட்டும் என்று கிழவரை உட்காரவிடாது விரட்டிக் கொண்டே இருப்பாள்.


கிழவர் தன் மனைவியைப் போல் சோம்பேறி இல்லை. மிகவும் உழைப்பாளி. மிகவும் அன்பும் பண்பும் உடையவர். தன் மனைவிக்கு அவர் உதவி செய்வதை மகிழ்ச்சியுடன் செய்தார்.

சற்று ஓய்வு நேரம் கிடைத்தாலும் அதைப் பயனுள்ள வகையில் கழிப்பார். தன் வீட்டருகே கிழவர் ஒரு சிறிய தோட்டம் போட்டிருந்தார். அதில் 
நிறைய காய்கறிகளைப் பயிரிட்டிருந்தார்.


அந்தத் தோட்டத்தில் வளரும் காய்கறி கீரைகளைக்  கொண்டுபோய் விற்று வந்த பணத்தில் அரிசி பருப்பு முதலியவற்றை வாங்கிவருவார்.கிழவிக்கோ தனக்கு நல்ல புடவை இல்லையே கழுத்துக்கு நகை இல்லையே என்ற குறை நிரம்ப இருந்தது. அதனால் நிறைய சம்பாதிக்காத தன் கணவரையும் அவர் வாங்கிவரும் பொருட்களையும் அலட்சியப் படுத்தி வந்தாள்.
 .
கிழவர் ஒருமுறை தோட்டத்தில் முள்ளங்கியைப் பயிரிட்டிருந்தார். அவை நன்கு செழித்து வளர்ந்து பறிப்பதற்குத் தயாராக இருந்தன. மறுநாள் அவற்றைப் பறித்து வியாபாரத்துக்குக் கொண்டு செல்ல கிழவர் நினைத்திருந்தார். 

அன்று அதிகாலையிலேயே எழுந்து தன் காலைக் கடன் முடித்து விட்டு முள்ளங்கிபறிக்கத் தோட்டத்திற்கு வ்ந்தார். பாத்தியைப் பார்த்தவருக்குத் திக்கென்றது. அங்கே பாதிக்குமேல் முள்ளங்கியைக் காணோம். கவலையுடன் கிழவர் வேறு வேலை பார்க்கக் கிளம்பிப் போய் விட்டார்.


அன்று இரவு கிழவருக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. தன்னுடைய சிறிய தோட்டத்திற்கு வரும் திருடன் யாராக இருக்கும்?என சிந்தித்தவாறு படுத்திருந்தார். ஏதோ சத்தம் தோட்டத்திலிருந்து கேட்கவே திடுக்கிட்டு எழுந்தார்.

விளக்கைக் கையிலே பிடித்துக் கொண்டு தோட்டத்துக்குச் சென்றார். சத்தம் முள்ளங்கிப் பாத்தியிலிருந்துதான் வருகிறது எனத் தெரிந்துகொண்டு மெதுவாக அருகே சென்று பார்த்தார். எதுவும் அவர் கண்ணுக்குப் படவில்லை. கீச்சு மூச்சென்று சத்தம் மட்டும் வந்துகொண்டு இருந்தது.

கிழவர் கூர்ந்து பார்த்தவர் ஆச்சரியப் பட்டுப் போனார். ஒரு முள்ளங்கி படுத்தவாக்கில் நகர்ந்து கொண்டிருந்தது. அது எங்கே நகர்கிறது எனக் கவனித்தபோது அருகே இருந்த ஒரு மரப் பொந்துக்குள் போவதைக் கவனித்தார். சட்டென்று அந்தப் பொந்தைத் தன் கையால் மூடிக் கொண்டார்.

நகர்ந்து கொண்டிருந்த முள்ளங்கியும் நின்று விட்டது. அதன் அடியிலிருந்து சுண்டைக்காய் அளவுக்குத் தலைகள் தெரிந்தன.கீசுகீசென்று கத்தியவாறு முள்ளங்கியைக் கீழே போட்டு விட்டு நின்றன அந்த விரலளவு உருவங்கள்.

அந்த சுண்டுவிரல் அளவு உருவங்களைப் பார்த்து கிழவர் ஆச்சரியப்பட்டாலும் தன் முள்ளங்கியைத் திருடியதால் கோபத்துடன் "ஏய்! யார் நீங்கள்?" என்று அதட்டலாகக் கேட்டார்.

சுண்டுவிரல் மனிதர்கள் கிழவரின் காலடியில் வந்து நின்று கொண்டு கை கூப்பினர. கீச்சு கீச்சென்று அவர்கள் கத்தியது முதலில் புரியாவிட்டாலும் பழகிய பிறகு புரிந்தது.

"நாங்கள் முள்ளங்கிப் பிரியர்கள். எங்களுக்கு முள்ளங்கிதான் ஆகாரம். உங்கள் தோட்டத்து முள்ளங்கியைக் கேளாது எடுத்தது தப்புதான். எங்களை மன்னித்து விடுங்கள். தாத்தா, எங்களை மன்னித்துவிட்டால் உங்களுக்கு ஒரு பரிசு கொடுப்போம்." என்று கூறியது ஒரு குள்ள உருவம்.


"ஏய்! முள்ளங்கித் திருடா! எனக்கு என்ன பரிசு நீ தரப் போகிறாய்?" என்றபடியே கையை விலக்கி வழிவிட்டார் கிழவர். பொந்துக்குள் ஓடிய குள்ள
மனிதன் ஒரு அலுமினிய கிண்ணத்தை இழுத்துக் கொண்டு வந்து கிழவர் முன் வைத்தான். கிழவர் அதைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினார்.

"பூ, இதுதானா! இதில் வைக்க என்ன சாமான் என்னிடம் இருக்கிறது? இதைக் கடையில் போட்டால் கூட என்ன காசு வரப் போகிறது?"

"தாத்தா!இது மந்திரக்கிண்ணம். இது எங்களுக்குப் பயன்படாது. இதில் நீசாப்பிட விரும்பும் உணவுப் பண்டங்கள் எல்லாம் வரும்.  உனக்கு என்ன வேண்டுமோ அதைச் சொல்லிக் கையை விடு." என்றான் முள்ளங்கித் திருடன்.

"அப்படியா!" என ஆச்சரியப் பட்டகிழவர் "எனக்கு லட்டு வேண்டும்" என்று சொன்னபடியே கிண்ணத்துக்குள் கையை விட்டார். பழைய காலத்துத் திருப்பதி லட்டு போன்ற பெரிய லட்டு அவர் கையில் வந்தது. கிழவர் சந்தோஷத்துடன் அதைச் சாப்பிட்டார்.

முள்ளங்கித் திருடர்களுக்கும் லட்டு தின்னக் கொடுத்தார். ஆனால் அதை மறுத்த குள்ளர்கள் "தாத்தா! இந்தக் கிண்ணம் எங்களுக்குப் பயன்படாது. இதை நீங்களே கொண்டுபோய் பயனடையுங்கள்." என்றுசொன்னபோது கிழவர் மகிழ்ச்சியில் மிதந்தார்.

"குள்ளர்களே! உங்களை நான் என்றும் மறவேன். உங்களுக்காக என் தோட்டம் முழுவதும் இனி முள்ளங்கிதான் பயிரிடப் போகிறேன். தாராளமாக இனி வேண்டும்போதெல்லாம் முள்ளங்கியைப் பறித்துச் செல்லுங்கள். நன்றி. நான் வருகிறேன்" என்றபடியே வீட்டுக்குள் சென்றார் கிழவர்.

வீட்டுக்குள் நுழைந்த கிழவர் அந்தக் கிண்ணத்தைத் தன் முன் வைத்துக் கொண்டு அமர்ந்தார். அப்போது அங்கே வந்த அவர் மனைவி கடுகடுத்த முகத்துடன் அவரைப் பார்த்தாள்.

"இப்படி உட்கார்ந்து விட்டால் வேளைக்கு சாப்பாடு போடுவது யார்?"என்றாள் கோபமாக.

"உனக்கு இப்போது என்ன டிபன் வேண்டும்?" என்றார் கர்வமாக.

"ம்... இட்லியும் வடையும் பாயாசமும் வேண்டும். தர முடியுமா உன்னால்?" கேட்டுவிட்டு நொடித்தாள் கிழவி.

"இதோ பார்." என்றபடியே அவள் கேட்ட பலகாரங்கள் ஒவ்வொன்றாக கிண்ணத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார் கிழவர்.
கிழவிக்கு ஒரே மகிழ்ச்சி. வயிறார உண்டாள். அந்தக்கிண்ணத்தை ஆச்சரியமாகப் பார்த்தாள். அவள் கண்களில் பேராசை தெரிந்தது.

நாட்கள் கடந்தன. ஒருநாள் காலை கிழவர் தன் கிண்ணத்தைத் தேடினார். அதைக் காணவில்லை. கிழவியும் சேர்ந்து தேடினாள். 
கிடைக்கவில்லை.

சற்று நேரம் கவலையோடு இருந்தவருக்கு முள்ளங்கித் திருடர்களின் நினைவு வந்தது. அவர்களைப் பார்க்க தோட்டத்திற்குச் சென்றார்.
கவலையோடு வந்து அமர்ந்த கிழவரைப் பார்த்த குள்ளர்கள் என்னவென்று விசாரித்தனர்.

"நீங்கள் அன்போடு கொடுத்த கிண்ணம் காணாமல் போய்விட்டது. யாரோ எடுத்துச் சென்று விட்டனர்." என்றார் கவலையோடு.

குள்ளர்கள் தங்களுக்குள் கூடிப் பேசினர். பின்னர் "கவலைப் படாதீர்கள் தாத்தா" என்றபடியே பொந்துக்குள் சென்று ஒரு தோல்பையைக் கொண்டுவந்து போட்டனர்.

"தாத்தா, இந்தப் பையில் கைவைத்தால் உங்களுக்கு வேண்டிய பணம் கிடைக்கும். எடுத்துக் கொள்ளுங்கள். 
வேண்டியதை வாங்கிக் கொள்ளுங்கள்."

கிழவர் மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்பி வ்ந்தார். ரகசியமாகவே அந்தப் பையை வைத்துக் கொண்டு வேண்டிய
பணத்தை மட்டும் எடுத்துச் செலவு செய்தார்.

சிலநாட்கள் கழிந்தன.கிழவர் வேலை ஏதும் செய்யாமலேயே எப்படிப் பணம் சம்பாதிக்கிறார் என்பதை அறிய விரும்பினாள் கிழவி.
கணவரிடம் கேட்டுப்பார்த்தாள். அவர் சொல்வதாக இல்லை. ஒருநாள் கிழவர்  அந்தப் பையிலிருந்து பணம் எடுப்பதைப் பார்த்து விட்டாள்
மீண்டும் அவள் கண்களில் பேராசை தெரிந்தது.

சில நாட்கள் கழித்து அந்தப் பையும் காணாமல் போயிற்று. கிழவர் வருத்தத்துடன் நண்பர்களான குள்ளர்களைத் தேடிச் சென்று அழுதார்.
குள்ளர்களும் அவரைச் சமாதானம் செய்து ஒரு பிரம்பைக் கொடுத்தனர். "இதைப் பேசாமல் ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.
உபயோகிக்கவேண்டாம்." என்று கூறினர்.

கிழவரும் சரிஎனச் சொல்லிவிட்டு வீடு திரும்பினார். அந்தப் பிரம்பைப் பார்த்த கிழவி "அது என்ன கொடுக்கும் சொல்லுங்கள்."என 
நச்சரித்தாள்.

அதுவரை பொறுமையாக இருந்த கிழவர்,"ம்.. இதைத் தொட்டால் அடி கிடைக்கும்." என்றார் எரிச்சலோடு. அதே சமயம் அதைக் கையில் எடுத்த 
கிழவி அலறினாள். அந்தப் பிரம்பு கிழவியை அடிக்கத் தொடங்கியது.

"ஐயோ, நிறுத்துங்கள். வலி உயிர் போகிறது. நான் எடுத்ததையெல்லாம் கொடுத்துவிடுகிறேன்."என்று அவள் கத்தியவுடன் பிரம்பு நின்றது.
அழுதுகொண்டே கிழவி தான் மறைத்து வைத்திருந்த கிண்ணத்தையும் தோல்பையையும் கொண்டுவந்து வைத்தாள்.

அதைப் பார்த்த கிழவர் "அடி பைத்தியமே இந்தப் பொருள்கள் நம் இருவருக்கும் தானே. இதை மறைத்து வைத்து நீ என்ன செய்யப் போகிறாய்.
உனக்கு என்ன வேண்டுமோ அதை நீ தைரியமாக இதிலிருந்து  எடுத்துக் கொள்ளலாமே. " என்றபோது கிழவி கண் கலங்கினாள்.

"உங்கள் நல்ல உள்ளத்தை நான் புரிந்துகொள்ளாமல் பேராசைப் பட்டுவிட்டேன். எனக்குப் புத்தி வந்தது. என்னை மன்னித்து விடுங்கள்"
என்று சொன்னவள் கண்ணீரைத் துடைத்தார் கிழவர். கிழவி மனநிறைவோடு சிரித்தாள்.

'நல்லஉள்ளம் நன்மை செய்யும் என்பதும் பேராசை துன்பத்தையே தரும்' என்பதையும் கிழவி  புரிந்து கொண்டாள்.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

திங்கள், 22 நவம்பர், 2010

52nd story. கப்பலோட்டிய தமிழன்.

                                          கப்பலோட்டிய தமிழன்.

                                        இந்திய  நாட்டு விடுதலைப்  போராட்டத்தின் தனிப்பெரும் தாரகையாக ஒளிவீசும் தலைவராக

வ.உ.சிதம்பரம் பிள்ளை விளங்கினார்.திருநெல்வேலி மாவட்டம் ஒட்டப்பிடாரம்என்ற ஊரில் உலகநாதம் பிள்ளை

பரமாயி அம்மையார்  என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். இந்தத் தம்பதி செய்த தவப்பயனாய் 1872-ம் ஆண்டு செப்டம்பர்

திங்கள் 5-ம் நாள் இவர்களுக்கு சிதம்பரம் பிள்ளை மகனாக அவதரித்தார். இதே ஓட்டப்பிடாரத்தில் தான் "மன்னவன்

காணிக்கு ஏது கிஸ்தி" என்று கேட்டு வெள்ளையரை நடுநடுங்க வைத்த வீரபாண்டிய கட்டபொம்மனும் பிறந்தான்.

இந்திய மண்ணுக்குப் பரணி பாடிய பாரதியார் பிறந்த ஊரும் இந்த ஊருக்கு  அருகே இருக்கும் எட்டயபுரத்தில்தான்.

 ஒட்டப்பிடாரம் வாழையடி வாழையாக வீரர்களைப் பெற்றெடுத்த திருநாடு.


சிதம்பரத்தின் உடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள்  இரண்டு சகோதரியர். இளம் வயதிலேயே தமிழ் மீது ஆழ்ந்த

பற்றுக் கொண்டிருந்தார். பல நன்னெறி நூல்களைப் பழுதறக் கற்றார். இவர் பள்ளிப் படிப்பும் பின் கல்லூரியில்

மெட்டி ரிகுலேஷனும் படித்து   முடித்தார்.

இளமையில் மற்போர் சிலம்பு கத்திவீசுதல்  போன்ற வீர விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார்.சட்டக் கல்வி

பெற விரும்பியவர் தந்தையின் ஆதரவுடன் 1895-ம் ஆண்டு வழக்கறிஞரானார். இத்துறையில் புகழ் பெற்றவர்

வருவாய் மட்டுமே பெரிது என என்ணாது ஒழுக்கம் நேர்மை பிறர் நலம் பேணல் இவற்றையே குறிக்கோளாகக்

கொண்டிருந்தார்.

ஏழைகளுக்கு இறங்கும் ஏழை பங்காளராக இருந்தார். ஆயிரக்கணக்கில் பணம் வருவதாக இருந்தாலும் அநீதியின்

பக்கம் இவர் நா அசையாது. ஆங்கிலேயர்களே இவரது தொழில் திறமை கண்டு அஞ்சினர்.

இளம் வயதில் மணம் முடித்த இவர் விரைவிலேயே  மனைவியை இழந்தார். பெற்றோர் இவருக்கு மீனாட்சி என்ற மங்கையை

மறுமணம் செய்து வைத்தனர். அம்மாதரசி இவர் காரியம் யாவினும் கை கொடுத்து வாழ்ந்தார்.

                  வெள்ளையர் ஆதிக்கம் கண்டு மிகுந்த  துயர் கொண்டார். நாட்டுரிமை வேண்டி வீரர்கள்  தாக்குதல் 

தொடங்கியபோது  வடக்கே  திலகரும்  தெற்கே சிதம்பரனாரும்  தளபதிகளாக இருந்து  போராட்டங்களைத்

தலைமை தாங்கி நடத்தினர். சிதம்பரம்  வியாபாரத்தால் ஆங்கிலேயரை அடக்க எண்ணினார். அதற்குப்

பொருத்தமாகக் கப்பல் விடுவது என்று முடிவு செய்தார்.  பலசெல்வந்தர்களின் உதவியுடனும் திலகர் பெருமானின்

பேருதவியுடனும் சுதேசிக்கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். கப்பல் புறப்பட்டபோது சுதந்திரமே

கிடைத்துவிட்டது போல் மக்கள் மகிழ்ந்தனர்.  வெள்ளையர்கள் பேரிடி தாக்கியதுபோல் திகைத்தனர்.

                         ஏழைகளுக்காகப் பாடுபட்டவர் மில் முதலாளிகளின் ஆதிக்கத்தை எதிர்க்க வீரக்கனல்  தெறிக்கும்

சொற்பொழிவாற்றினார். சுப்பிரமானியா சிவா என்ற துறவியாரும் இவருடன் இணைந்து சொற்பொழிவாற்றி

உறங்கிக்கிடந்த நெஞ்சங்களைத் தட்டி எழுப்பினார்.  இரண்டு ஆண்டுகளில் சிதம்பரம்  நடத்திய கூட்டங்களும் போராட்டங்களும் ஏராளம்.

 பாரதத்தின் பெருமையெல்லாம் அழிந்து கொடுமையும் அவமதிப்பும் தலைதூக்கி நின்றதைக் கண்டு பிள்ளையவர்களின் 

மனம் பதை பதைத்தது. அடிமைப்பட்ட தாய் நாட்டைக் காப்பதே இனி தனது கடமை என எண்ணினார். காங்கிரசிலிருந்த தீவிரவாதம் என்னும் 

பகுதியில் இணைந்தார். திலகர் பெருமானின் தலைமையில் முற்போக்குக் கொள்கை கொண்டவர்கள் ஒன்று திரண்டனர். தென்னாட்டில் ஆதரவு 

தேடும் பொறுப்பினை திலகர் சிதம்பரத்திடம் ஒப்படைத்தார். சுதேசிப்பற்று அந்நியப்பொருள் புறக்கணிப்பு தேசியக் கல்வி  ஆகியவற்றை மக்களுக்கு 

விளக்கினார் பிள்ளையவர்கள். 

இவரது ஆவேசப்பேச்சுக்களினால் எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சாயிற்று. நெல்லை மாவட்டம் மற்றொரு வங்காளமாயிற்று. ஆங்கிலேயருக்குத் 

துணைபுரிபவர்களுக்கு எந்த வேலையும் செய்வதில்லை என மக்கள் கூறிவிட்டனர். மாவட்டம் முழுவதும் சிதம்பரம்பிள்ளை இட்டதே 

சட்டமாயிற்று. அவரது ஆணைக்காக மக்கள் காத்திருந்தனர். இந்நிலையை அடக்க ஆங்கில அரசு முடிவு செய்தது. 

                                 தூத்துக்குடி மில் தொழிலாளருக்காக வேலை நிறுத்தம் செய்து கொண்டிருந்த வ.உ.சி யை கலெக்டர் "விஞ்ச்" துரை 

திருநெல்வேலிக்கு வந்து தன்னைக் காணுமாறு உத்தரவு பிறப்பித்தார். கைதாவோம் என அறிந்திருந்தும் அஞ்சாநெஞ்சம் படைத்த பிள்ளையவர்கள் 

தன் நண்பர் சுப்பிரமணிய  சிவாவுடன் சென்று கலெக்டரைச் சந்தித்தார். அங்கே அடுக்கடுக்காகக் குற்றங்களை அள்ளி வீசினார் விஞ்ச். அதில் 

முக்கியமான பெருங்குற்றம் வந்தேமாதரம் எனக் கூறியது. 

                    "தாய் நாடு வாழ்க எனக்கூறியது பெருங்குற்றமானால் அக்குற்றத்தை உயிர் உள்ளவரை செய்து கொண்டே இருப்போம் உங்கள் 

அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டோம் எங்கள் உயிர் பிரிந்தாலும் உள்ளத்தின் சுதந்திரப் பற்று மாயாது." என்று வீர முழக்கமிட்டார் சிதம்பரனார்.

 ஆத்திரமடைந்த விஞ்ச் துரை இவர்களை மாவட்டத்தை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட அதை ஏற்காத பிள்ளையவர்களும் சிவாவும் 

சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கினார் நீதிபதி. இதை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து நாற்பது 

ஆண்டுகள் அனுபவிக்கவேண்டும் என்று கூறினார். சிவாவுக்குப் பத்தாண்டுகள் சிறைவாசம் என்றும் தீர்ப்பாயிற்று.


                         முப்பத்தைந்தே வயதான சிதம்பரம் தன் வயதான பெற்றோரையும் பச்சிளம் குழந்தைகளையும் அன்பு மனைவியையும் பிரிந்து 

சிறையில் வாடும் நிலையை எண்ணி நாட்டு மக்கள் துயருற்றனர்.  நாட்டுக்கு உழைத்த நல்லவருக்கு ஏற்பட்ட நிலை கண்டு தமிழ்நாடு மட்டுமின்றி 

இந்தியா  முழுவதும் அதிர்ச்சி வெளியிட்டது. நண்பர்கள் பெருமுயற்சியால் இரண்டு ஆயுள்தண்டனை ஆறு ஆண்டு சிறைவாசமாக மாற்றப்பட்டது.

"கப்பலோட்டிய தமிழன்" எனப் பாராட்டப் பட்ட வ.உ.சி.யை கோவைச் சிறையிலும் கண்ணனூர் சிறையிலும் செக்கிழுக்க வைத்தனர். கல்லுடைக்கச் 

செய்தனர். அறுசுவை உண்டு  அரசர்போல் வாழ்ந்த செல்வச்  சிதம்பரனாரை கூழ் குடிக்க வைத்து கொடுமைப் படுத்தினர்.


                          ஆறு ஆண்டுகளுக்குப் பின் விடுதலையானார் வ.உ.சி.அவர்கள். அரசு அவரைப் பழிவாங்கியது. அரசநிந்தனைக் குற்றத்திற்காக 

தண்டனை பெற்றதால் வ.உ.சி.யின் வழக்கறிஞர் சான்றிதழ் பறிமுதலாயிற்று. வருவாய் இன்றி வறுமையில் வாடினார் வ.உ.சி. அப்போதும் 

பொதுநலப் பணிகளை அவர் விட்டுவிடவில்லை. புகைவண்டித் தொழிலாளர் சங்கத் தலைவராக இருந்து பல நன்மைகளைச் செய்தார். நல்லமனம் 

படைத்த நீதிபதி "வாலஸ் " என்பவரின் உதவியால் பறிக்கப்பட்ட சான்றிதழ் மீண்டும் கிடைத்தது. அப்போது காந்தியடிகள் ஒத்துழையாமை 

இயக்கத்திற்கு ஆதரவு தரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். வ.உ.சி. இதற்கு உடன்படவில்லை. திலகர் பெருமானின் தேசியப் பாதையை 

விட்டு இவர் விலகவில்லை. 

                                 வீரர் சிதம்பரனார் சிறந்த இலக்கியவாதியுமாவார். சிறையில் கல்லுடைத்தபோது இவர் கவிதையும் வடித்தார். இவர் எழுதிய 

கடிதங்கள் அனைத்தும் கவிதை வடிவில் கற்போர் நெஞ்சை உருக்கும் தன்மை வாய்ந்தன.சமயப் பாடல்கள், தனிப்பாடல்கள் இயற்றினார்.

"மெய்யறிவு" மெய்யறம்" போன்ற அறநூல்களை இயற்றினார். "மனம்போல் வாழ்வு", வலிமைக்கு மார்க்கம், அகமே புறம்" என்ற மொழிபெயர்ப்பு 

நூல்களையும் திருக்குறள், தொல்காப்பியம் போன்ற சிறந்த நூல்களுக்கு உரைகளையும் எழுதினார். தமிழ் மீது பற்று காரணமாக 

தமிழ்மருத்துவமான சித்த மருத்துவத்தை வலியுறுத்திவந்தார்.

 
சிதம்பரம்பிள்ளை ஒழுக்கசீலர். தன்னலம் பாராது பிறர் நலம் பேணும் பெருந்தகையாளர். பாரதியாரின் உயிர் நண்பராய்த் திகழ்ந்தார். உயர் பண்புகள் 

அனைத்தும் பெற்றவர். நாட்டுவிடுதலை ஒன்றே மூச்சாகக் கொண்டு வாழ்ந்திருந்தவர். தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்டதால் இவர் பெற்ற பையன் 

வறுமையும் பிணியுமே. நோய்வாய்ப்பட்ட போதும் தன் பிணிக்கு வருந்தாது அடிமைப் பிணிக்காகவே வருந்தினார். உயிர் நண்பர்  மஹாகவி 

பாரதியாரின் தேசியப் பாடல்களைக் கேட்டவண்ணம் 1936-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் நாள் சுதந்திரம் வாங்காமல் சாகிறேனே என்ற ஏக்கச் 

சொற்களோடு அவர் ஆவி பிரிந்தது.

"கப்பலோட்டிய தமிழன்" என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற வ.உ.சிதம்பரனார் தமிழக வீரப் பெருமக்கள் வரிசையில் தனி இடம் பெற்றவர். நாட்டு 

மக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பி விடுதலைப் புரட்சியை உண்டாக்கிய சிறந்த தேசபக்தர். சிதம்பரனாரின் வரலாறு இம்மண்ணில் ஒரு மங்காத 

காவியமாகும்.

கப்பலோட்டிய தமிழரின் நினைவாக இந்த வாரம் அவரது தியாகத்தை நாமும் நினைவு கூறுவோம். அவரைப் போல நாட்டுப் பற்று மிக்கவராய்த் திகழ்வோம்.

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

ஞாயிறு, 14 நவம்பர், 2010

51st story. தீபாவளி பிறந்த கதை

                       தீபாவளி பிறந்த கதை.
நரகன் என்னும் அசுரன் பூவுலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தான். மண்ணுலகும் வானுலகும் அவனிடம் துன்பப் பட்டுக் 

கொண்டிருந்தது. இது போதாது என்று அவன் சாகாவரம் பெற எண்ணினான். எனவே நரகன் சிருஷ்டி கடவுளான பிரும்மாவைக் குறித்துத் தவம் 

மேற்கொள்ள முடிவு செய்தான்.. 

அவனது தாயான பூமிதேவியும் "மகனே! நீ சாகாவரம் பெற்று விட்டால் என் மனம் மிகவும் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெறும். உன் எண்ணப்படியே 

பிரும்மதேவரிடம் சாகாவரம் பெற்று வருவாயாக" என்று ஆசி கூறி அனுப்பினாள். தாயின் அனுமதி பெற்று நரகன் பிரும்மாவைக் குறித்துத் தவம் 

மேற்கொண்டான். காலம் கடந்தது. நரகன் கடுமையான தவத்தை மேற்கொண்டிருந்தான். அவனது தவத்திற்கு மெச்சிய பிரும்மாவும் அவன் முன் 

தோன்றினார்.

"நரகா! உனது கடுந்தவம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். எதற்காக இந்தத் தவம்? என்ன வரம் வேண்டும் உனக்கு?"

கனிவுடன் கேட்டார் பிரும்மா.

"சுவாமி! எனக்கு தாங்கள் சாகாவரம் அளிக்க வேண்டும். புவனங்கள் அனைத்தையும் நான் ஒருவனே ஆளவேண்டும். எனக்கு அழிவென்பதே 

இருக்கக் கூடாது. இந்த வரத்தைத் தாங்கள் அளிக்கவேண்டும்."

"நரகா! உலகங்கள் யாவையும் நீ அடிமைப் படுத்தி வாழ்வாய் என்ற வரம் தருகிறேன். ஆனால் சாகாவரம் தருவது என்பது இயலாதது. ஆனால் 

நீ எப்படி சாகவிரும்புகிறாயோ அப்படியே சாக வரம் தருகிறேன். கேள்."

நரகன் அருகே நின்ற தன் தாயின் முகத்தைப் பார்த்தான். சற்றே சிந்தித்தவன் புன்னகை செய்து கொண்டான்.

"அம்மா!, தங்களின் அன்புக்குரிய மகன் நான். தங்களின் கையினாலேதான் நான் மரணமடைய வேண்டும் எனக் கேட்கிறேன். தாங்கள் எப்படி அம்மா 

என்னைக் கொல்வீர்கள்? அதனால்   எனக்கு யாராலும் ஏன் தேவராலும் மூவராலும் கூட  மரணம் நேராது .எப்படி அம்மா என் வரம்?"

பூமிதேவி மனமகிழ்வுடன் புன்னகைத்தாள்.

"மிகவும் சரி மகனே. அப்படியே வரத்தைப் பெற்றுக்கொள்."

நரகாசுரன் பிரும்மாவைப் பணிந்தான். 

"தேவாதி தேவா! என் தாயின் கையினாலேதான் நான் மரணமடைய வேண்டும். வேறு யாராலும் எனக்கு சாவு வரக் கூடாது."

புன்னகை புரிந்த பிரம்மா "அப்படியே தந்தேன்" என வரம் தந்து மறைந்தார்.

நரகன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து தாயை வணங்கினான்.

காலம் உருண்டது. நரகனின் அட்டஹாசம் அளவிடற்கரியதாக இருந்தது. தேவரும் மூவரும் நாராயணனிடம் முறையிட்டனர்.


நாராயணன் கிருஷ்ணனாக அவதரித்து மாமனான கம்சனை சம்ஹாரம் செய்தான்.ருக்மணி சத்யபாமாவை மணந்து துவாரகையில் மன்னனாக 

ஆட்சி செய்து வந்தான். அப்போது மக்கள் நரகனிடம் படும் துன்பத்தைப் பற்றி அவனிடம் முறையிட நரகனுடன் போர் தொடுக்கப் புறப்பட்டான் 

கண்ணன். போர்க்கோலம் பூண்ட கிருஷ்ணன் தன் மனைவி சத்யபாமாவை தன் தேரினை ஒட்டிவரக் கூறினார். தேரோட்டுவதிலும் போர்க்களப் 

பயிற்சியிலும் தேர்ந்தவளான சத்யபாமாவும் மிக்க மகிழ்ச்சியுடன் புறப்பட்டாள்.  

நரகாசுரனுக்கும் கிருஷ்ணனுக்கும் கடும் போர் நடந்தது. தேவர்கள் அச்சத்துடன் வானிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நரகனின் வரம் பற்றி 

அறிந்தவர்களாதலால் என்ன நடக்குமோ என்று கவலையுடன் கவனித்தனர். நரகன் விடுத்த ஆயுதத்தால் கிருஷ்ணன் மயங்கி வீழ்ந்தான். 

இதைக் கண்ட சத்யபாமா தேரில் நின்றவண்ணம் கிருஷ்ணனின் கையில் இருந்த வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டாள். அப்போது 

அவளைக் கவனித்த நரகன் திகைத்து நின்றான். சற்றும் தாமதியாது கோபத்துடன் பாமா விடுத்த அம்பு நரகனின் மார்பைத் துளைத்தது. 

நரகன் கீழே  விழுந்தான். அதே சமயம் மயங்கியவர் போல் விழுந்திருந்த கிருஷ்ணன் எழுந்து பாமாவின் அருகே வந்தான். தேவர்கள் மலர்மாரி 

பொழிந்தனர். உயிர் பிரியும் நிலையில் நரகன் பாமாவைப் பார்த்து " அம்மா" என அழைத்தான். அந்தக் குரல் கேட்ட பாமாவிற்கு தன் முற்பிறவி 

நினைவிற்கு வந்தது. பூமாதேவியின் வடிவமும் கொண்டாள். தன் மகனைத் தன் மடியில் தாங்கிக் கொண்டு அழுதாள். 

"மகனே! நானே உன் இறப்புக்குக் காரணமாகிவிட்டேனே. நீ கேட்ட வரம் பலித்துவிட்டதே மகனே! இந்த அம்மாவை மன்னித்து விடடா மகனே."

"அம்மா! கலங்காதீர்கள். தங்கள் கையினால் நான் மடிவதில் எனக்கு மகிழ்ச்சியே."

கிருஷ்ணன் நாராயணனாக வடிவம் தாங்கி அருகே வந்து நின்றார்

." நரகா! உன் வரத்தின் படியே நீ முடியவேண்டும் என்பதற்காகவே சத்தியபாமாவை உடன் அழைத்து வந்தேன். அவள் கையினாலேயே 

நீமடியவேண்டும் என்ற உன் விருப்பம் நிறைவேறியதல்லவா" 

"தந்தையே, உலகில் தோன்றிய எந்த உயிரும் மறைந்தே தீரும் என்ற உண்மை என்னால் நிரூபிக்கப் பட்டுவிட்டது."

 "உண்மை. நரகா, உனக்கு என்ன வேண்டும் கேள். "

 "எனக்கு தாங்கள் ஒரு வரம் தரவேண்டும்" 

"மீண்டும் எழவேண்டும் என்பதைத்தவிர  வேறு என்ன வேண்டுமானாலும் கேள்."  மிகவும் கவனமாகப் பேசினான் நாராயணன்.

"இல்லை தந்தையே. நான் மறைந்த இந்த நாளை மக்கள் விழாவாகக் கொண்டாட வேண்டும். இருளிலிருந்து ஒளிக்குத் திரும்பும் மக்கள் மனங்களில் 

மகிழ்ச்சியைப் போலவே ஊரெங்கும் ஒளிபெற்றுத் திகழ வேண்டும். இந்த வரத்தைத் தாங்கள் அருளவேண்டும்."

நாராயணன்  மகிழ்ச்சியுடன் "ததாஸ்து"  என அருள் செய்தான்.

போர்க்களம் விட்டு அரண்மனை திரும்பிய கிருஷ்ணனும் நரகனின் மறைவைக் கொண்டாடும் படிப் பணித்தான். உலக மக்களும் வானுலக 

தேவர்களும் நரகாசுரனின் இறப்பைப் பெரும் விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நாமும் இந்தநாளை ஒளித் திருநாளாகக் கொண்டாடி மகிழ்கிறோமல்லவா. தீபஒளித் திருநாள் என்ற பெயரில் நாம் கொண்டாடும் பண்டிகையே 

தீபாவளித் திருநாள் எனப் படுகிறது.

"அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்."
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com