செவ்வாய், 31 மே, 2011

முக்திநாத் யாத்திரை

அன்பு நெஞ்சங்களே, கடந்த பதினைந்து நாட்களாகத் தங்களைச் சந்திக்கவில்லை.  நான் முக்திநாத் (நேபாளம்) என்ற வடதேச யாத்திரை சென்றிருந்ததுதான் காரணம். என் இனிய அனுபவங்களை இந்தக் கட்டுரையின் மூலம் தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நாங்கள் நாற்பது பேர் இரவு பதினொரு மணிக்கு ரயிலில் சென்னையிலிருந்து புறப்பட்டோம். ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தோம். மறுநாள் சுமார் நாற்பது மணி நேரத்திற்குப் பின் கோரக்பூர் என்ற நகரத்தை அடைந்தோம்.
அங்கிருந்து பேருந்தில் புறப்பட்டு சுமார் ஐந்து மணி நேரம் கழித்து நேபாளத்திலுள்ள பைரவா என்ற நகரை அடைந்தோம். நகருள் நுழையும் முன் இந்திய நேபாள எல்லையில் உள்ள  ஒரு வளைவுத் தூணைக் கடந்தோம்.
    



வழியெங்கும் மலைத் தொடர்கள் பசுமை போர்த்தவண்ணம் அழகுறக் காட்சியளித்தன.விரைவிலேயே இருட்டிவிட்டதால் தொடர்ந்து காட்சிகளைக் காண இயலவில்லை. இரவு பத்து மணிக்குமேல் ஆகிவிட்டது.அவ்வூரில் ஹோட்டல் அசோகாவில் தங்கினோம்.மறுநாள் காலை ஆறரை மணிக்குப் புறப்பட்டு சுமார் பதினொரு மணிக்கு திரிகூட மலைக்கு வந்தோம்.இங்கு மூன்று மலைகள் இணைந்திருப்பதால் இதற்குத் திரிகூடமலை என்று பெயர்.

இங்கு கண்டகி நதி ஓடுகிறது. இந்த நதியில் தான் கஜேந்திரன் என்ற யானையை முதலை பிடித்துக் கொண்டது. கஜேந்திரன் ஆதிமூலமே என்று அலற ஸ்ரீமன் நாராயணன் ஓடி வந்து முதலையை தன் சக்கரத்தால் வீழ்த்தி யானையைக் காப்பாற்றிய இடம் உள்ளது.இந்த நதிக்கரையில் ஒரு ஆலயம் உள்ளது.நாராயணர் கோயில்.இங்கு யானை, முதலை இவற்றின் சிலைகளும் உள்ளன.
                                                                      



இங்கு கண்டகியில் ஸ்நானம் செய்து கோயிலைப் பார்த்து வணங்கி இங்கேயே மதியச் சாப்பாட்டை முடித்துக் கொண்டோம். பிற்பகல் மூன்று மணிக்குப் பேருந்தில் புறப்பட்டு இரவு சுமார் பனிரெண்டு மணிக்கு மலைகளின் நடுவே இருக்கும் போக்ரா என்ற நகரை அடைந்தோம். ஒரு பெரிய பள்ளத்தாக்குக்குள் ஒரு பெரிய நகரமே உள்ளது.இந்த நகருக்கு வருமுன்னர் பல மலை வளைவுகளைக் கடந்தோம்.இங்கு ஹோட்டல் திபெத்தில் தங்கினோம்.




காலையில் புறப்பட்டு ஏரியின் நடுவே ஒரு சிறிய தீவில் குடிகொண்டுள்ள வாராஹி தேவியைப் படகில் சென்று தரிசித்தோம்.பின்னர் அங்கிருந்து விந்தியாவாகினி, ராதாக்ருஷ்ணா,ஐந்து லிங்க மூர்த்தி,சப்த சிரஞ்சீவி,தரிசனம் முடித்து, எதிரே உள்ள தேவி பால்ஸ் என்ற நீர்வீழ்ச்சியைப் பார்த்தோம்.இங்கு கண்டகி நதி வெண்மையாகப் பாய்வதால் இதற்கு ஸ்வேத கண்டகி என்று பெயர்.










பின்னர் சுமார் ஒரு மணிக்கு குப்தேஷ்வர் என்ற சிவன் கோயிலை அடைந்தோம். இங்கே சிவலிங்கம் பெரிய ஐந்து தலை நாகத்துடன் இருப்பதுபோல் உள்ளது சுமார் நூறு படிகளில் கீழே இறங்கிப் பாதாளத்துள் லிங்கத்தைத் தரிசித்தோம்.இதன் பின்னரும் இன்னும் சிவலிங்கம் படிகளின் கீழே இருப்பதாகச் சொன்னார்கள்.சிலர் இறங்கிப் பார்த்தனர். என்னால் முடியாததால் மேலே ஏறிவிட்டேன்.

குகைக்குள் நீர் சொட்டிக் கொண்டே இருந்ததால் எங்கும் ஈரமாக இருந்தது.இரண்டு மணிக்கு இருப்பிடம் திரும்பி சாப்பிட்டு ஓய்வு. மாலையில் சிலர் ஷாப்பிங் சென்றனர்.

மறுநாள் காலை எட்டுமணிக்கு போக்ரா விமான நிலையத்தை அடைந்தோம்.பத்து மணிக்கு விமானம் ஏறினோம். பனி மலைகளின் நடுவே பறந்து சென்ற விமானம் பத்தரை மணிக்கு ஜோம்சொம் என்ற ஊரை அடைந்தது.அங்கு ஒம்ஹோம் என்ற ஹோட்டலை  அடைந்தோம்.அங்கிருந்து பனிரெண்டு மணிக்குப் புறப்பட்டு பேருந்தில் ஏறி ஜீப் உள்ள இடத்திற்கு வந்தோம்.அங்கே ஜீப்பில் ஏறி சுமார் இரண்டு மணி நேரம் கடும் மலைப் பாதையில் பயணித்தோம்.சுமார் பதினான்காயிரம் அடி உயரத்தில் ஜீப்பில் பயணிக்கும் போது சற்றே அச்சமாகத்தான் இருந்தது.அந்த வழியிலேயே கண்டகி நதி கருப்புநிறமாக ஓடுகிறது.இங்கு இதற்கு காலாகண்டகி என்று பெயர்என்று சொன்னார்கள்.



ஒருவழியாக முகதிநாத்தின்  அடிவாரம் வந்து அடைந்தோம். அங்கிருந்து ஐந்து நிமிட நடைப் பயணம் மேற்கொண்டோம்.கடும் குளிர். பனிமழைவேறு. அந்த உயரத்தில் பிராணவாயு குறைவாக இருந்ததால் சற்றே மூச்சுத் திணறல் வேறு இருந்தது. வாய்விட்டு முக்திநாதா  என்று அழைத்துக் கொண்டே நடந்தோம்.அங்கிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மோட்டார் பைக்கில் பயணம் செய்து முக்தி நாத் கோவிலின் அடிவாரம்  வந்து சேர்ந்தோம்.
மோட்டார் பைக்கில் பயணம் செய்யும் போது நான்கடி அகலப் பாதையில் கற்களின் மேல் பயணிக்கும் போது முக்தி அடைந்து விடுவோம் என்றே தோன்றியது.அங்கே திபெத்தியர்கள் ஒவ்வொரு பைக்கிலும் ஒரு பயணியை ஏற்றிக்கொண்டு வெகு சுலபமாக ஓட்டுகிறார்கள்.நம்மிடம் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போதே நமக்கு அச்சமாக இருக்கிறது.










இறங்கிய இடத்திலிருந்து சுமார் நூறு மீட்டர் தூரம் படிகளாகச் சற்றுத் தொலைவு நடந்து கோவில் வளாகத்தில் நுழைந்தோம். கோவில்  சிறியதாக இருந்தது  பனிப்பொழிவு அதிகரித்துவிடவே குளிரிலும் ஈரத்தாலும் நடுங்கினோம்.அந்தக் கோவிலில் சற்றும் ஒதுங்க இடம் இல்லை. அனைவரும் அந்தப் பனிப் பொழிவிலேயே நின்றிருந்தனர்.கர்ப்பக்கிரகம் இருக்கும் இடம் மட்டுமே பத்துக்குப் பத்து என்ற அளவில் ஒரு அறையாக இருந்தது.பின்னால் ஹோமம் செய்யும் இடம் அதேபோல சிறிய இடமாக இருந்தது.கோவிலைச் சுற்றி கண்டகிநதி நூற்றிஎட்டு நீர் வீழ்ச்சியாக விழுகிறது.








ஆண்கள் அந்த  குளிரிலும்  எல்லாநீரிலும்  குளித்துவிட்டு  இறைவனை  தரிசனம்  செய்தனர். .பெண்கள்  நீரைத்தலையில்  தெளித்துக்  கொண்டோம். ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக நின்ற அந்த நாராயணரின் அழகில் நாங்கள் பட்ட துன்பம் அதிகமாகத்  தோன்றவில்லை.  

கொண்டுபோயிருந்த திராக்ஷை கல்கண்டு பிரசாதங்களையும் பட்டுத் துணியையும் இறைவனின் பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டோம்.அங்கு இரண்டு பெண்கள் மட்டுமே பூஜை செய்கிறார்கள். இது அவர்களுக்குப் பரம்பரை உரிமை என்று கூறினார்கள். .

தரிசனம் முடித்து நாங்கள் கீழே இறங்கினோம். இடது பக்கம் படிகள் போலப் பாதை சென்றது.அங்கிருந்து ஒரு கிலோமீட்டர்  தூரத்தில் ஜ்வாலா நரசிம்மர் குடிகொண்டுள்ளதாகக் கூறினார்கள்.அங்குதான் ஜடபரத ரிஷி தவம் செய்த இடம் என்று கூறினார்கள்.ஆனால் அங்குசெல்ல இயலாதபடி பனி கொட்ட ஆரம்பித்தது. 


விரைவில் கீழே இறங்குங்கள் இல்லையேல் உங்களால் இறங்க இயலாது என்றதால் விரைவாகக் கீழே இறங்கி பைக்கிலும் ஜீப்பிலும் பயணித்து பேருந்தை அடைந்தோம்.ஓம் ஹோமை அடைந்து சூடாகத் தேநீர் குடித்தபோதும் குளிர் விடவில்லை சுமார் இரண்டு மணிநேரத்திற்குப் பிறகே உடல் ஒரு நிலையை அடைந்தது.

மறுநாள் விமானம் செல்லுமோ செல்லாதோ என்று சந்தேகமாகவே இருந்தது.பனிப் பொழிவும் மேகக் கூட்டமும் அதிகமானால் விமான சேவை நிறுத்தப் படும். நல்லவேளையாக முதல் விமானத்திலேயே  புறப்பட்டு போக்ரா வந்து சேர்ந்தோம்.  விமானத்திலிருந்து   கீழே  பார்த்த பொழுது   போக்ரா  ஒரு  பெரிய  நகரம்  என்று  தெரிந்தது .


பத்து   மணிக்கு  போக்ராவில்  ஹோட்டல் திபெத் ஹோமில் ஓய்வு.மாலையில் கடைவீதிக்குச் சென்றோம்.மறுநாள் போக்ராவிலிருந்து காட்மண்டுவிற்குப் புறப்பட்டோம். சுமார் நாலேகால் மணிக்கு மனகாம்னா தேவி என்ற கோவிலைப் பார்க்க பேருந்து நின்றது.அங்கிருந்து நூறு படிகளில் இறங்கி விஞ்ச் புறப்படும் இடம் வந்தோம்.வரிசையில் நின்று ஆறு ஆறு பேராக விஞ்சில் ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்குப் பறந்தோம்.

போக்ரா நகரைச் சுற்றியுள்ள மலைகளில் ஒரு மலை மீதுதான் இந்தக் கோவில் உள்ளது.
மனகாமனாதேவி  கோவில் கொண்டுள்ள இடம் சுமார் நான்காயிரம் அடி உயரே உள்ள ஒரு மலைப் பகுதி. இந்த மலையைச் சுற்றிக் கொண்டு திரிசூலி என்ற நதி ஓடுகிறது.கோவிலிலும் நல்ல கூட்டம் வரிசையில் நின்று தரிசித்தோம்.அங்கே இன்னும் ஆடு கோழி பலி நடக்கிறது.எங்கள் கண் எதிரேயே பல ஆடுகள் பலியாயின.சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின் மீண்டும்வின்ச்சில்  ஏறிமலையைக் கடந்து வந்தோம்.பின்  எங்கள் பேருந்தில் பயணத்தைத் தொடர்ந்தோம். 






இரவு பனிரெண்டரை மணிக்குக் காத்மாண்டுவை அடைந்தோம். மகாராஜா ஹோட்டலில் இரவு ஓய்வெடுத்தோம். மறுநாள் காலை காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலுக்குச் சென்றோம்.இது பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று.இந்த இடத்தில்தான் அர்ஜுனன் தவம் செய்து பாசுபதாஸ்த்திரத்தை அடைந்ததாக வரலாறு.



ஒரு பசு லிங்கம் ஒன்றின் மீது பால சொரிய அந்த லிங்கத்தை எடுத்து எரிய அடிப்பாகம் கேதார்நாத்திலும் மேல்பகுதி பசுபதினாத்திலும் விழுந்ததாகக் கூறினார்கள். அகோரம் வாமதேவம் முதலான பஞ்ச முகங்களைக் கொண்ட சிவனைத் தரிசித்தோம்.கோவிலின் பின் பகுதியில் காலபைரவர் பெரிய உருவமாகக் காட்சியளித்ததைத் தரிசித்தோம்.நாகர், விநாயகர் என்ற பல சந்நிதிகள் உள்ளன கோவிலின் முன்னால் பாக்மதி என்ற நதி ஓடுகிறத

சற்றுத் தொலைவில் குப்தேச்வரிஎன்ற தேவியை பத்து படிகளுக்குக் கீழே நீருள் படுத்த நிலையில் உள்ள தேவியை தரிசித்தோம்.இது தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த இடம். இந்த வயிற்றுப்  பகுதியில் தீர்த்தம் வந்துகொண்டே இருக்கிறது.இது ஒரு சக்தி  பீடம் எனக் கூறினர்.
உணவு நேரத்திற்குப் பின் மாலை நான்கு மணிக்கு நீருள் படுத்திருக்கும் ஜல நாராயணர்  தரிசித்தோம்.இவருக்கு புடா நீலகண்டன் என்று பெயர். ஒரு விவசாயி நீலகண்டன் என்ற பெயருடையவன் தன் நிலத்திலிருந்து இச் சிலையை எடுத்ததால் அவன் பெயரால் இவர் பெரிய நீலகண்டன் என்று அழைக்கப் படுகிறார்.

மாலை ஐந்து மணிக்குப் புறப்பட்டு இரவு ஒரு மணிக்கு நாராயணா  காட்   
அடைந்தோம்.


இந்த இடம் சாளிக்ராமக்ஷேத்ரம் என்று அழைக்கப் படுகிறது.இங்கு கண்டகி,நாராயணி, அந்தர்வாகினி என்னும் மூன்று நதிகள் இணைந்து ஓடுகின்றன. இங்கு தீர்த்த ஸ்ரார்த்தம் செய்கிறார்கள்.காசியில் செய்வதுபோல் இங்கும் நடத்தப் படுகிறது.இங்கு உள்ள கண்டகி நதி ஸ்நானம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.ஏராளமான சாலிக்ராம கற்களைப் போலவே தோற்றம் கொண்ட கற்கள் நதிக் கரையில் பரவிக் கிடந்தன.சிலவற்றைப் பொறுக்கிக் கொண்டோம்.



அங்கிருந்து புறப்பட்டு ஜனகபுரியை இரவு ஒரு மணிக்கு வந்து சேர்ந்தோம்.இங்கு "மானக்கி"என்ற ஹோட்டலில் தங்கினோம்.அதிகாலையில் புறப்பட்டு ஜனகரின் அரண்மனை, கனகபவன் என்று அழைக்கப்படும் ஜானகியின் அந்தப்புரம்,சீதாகல்யாண மண்டபம், சீதை கிடைத்த இடம், வில் விழுந்த இடம் முதலிய இடங்களைப் பார்த்தோம்.ராமர் வில் ஒடித்த இடம்,இங்குதான் ஐயாயிரம் ரிஷிகள் ஒரு காலத்தில் யாகம் செய்தனர். அந்த ஊரில் எல்லாதைவங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரிய சிவன் கோவிலையும் பார்த்தோம்.



அந்த கோவில் வளாகத்திலேயே எங்கள் உணவை முடித்துக் கொண்டு புறப்பட்டோம்.இரவு பதினொரு மணிக்கு பைரவா என்ற நேப்பால எல்லையிலுள்ள ஊரில் அதே ஹோட்டலில் தங்கினோம்.அதிகாலை ஏழு மணிக்கு சோனாலி என்ற இந்திய எல்லைக்குள் நுழைந்தோம். ஏனோ மனம் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெற்றது.

இரவு ஏழு மணிக்கு உ.பி.டூரிஸ்ட் பங்களா வந்து சேர்ந்தோம்.காலையில் வாரணாசியில் படகில் ஏறி பஞ்சகாட் சென்றோம்.அங்கு கங்கையில் ஸ்நானம் தர்ப்பணம் முடிந்ததும் சுமார் நூறு படிகளில் ஏறி பிந்து மாதவனைத் தரிசித்தோம்.

பின்னர் காசி விஸ்வநாதர், அன்னபூரணி,  விசாலாக்ஷி தரிசனம் செய்தோம்.இரவு எட்டு மணிக்குப் புறப்பட்டு மொகல்சராய் என்ற இடத்தில் ரயிலில் ஏறினோம். பத்தாம் தேதி இரவு முதல் பனிரெண்டாம் தேதி பிற்பகல் இரண்டு மணிவரை ரயில் பயணம் முடித்து சென்னை வந்து சேர்ந்தோம்.

பதினான்கு நாட்கள் நாங்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தோம். இந்த நல்ல யாத்திரையை செய்யும் சக்தியையும் சந்தர்ப்பத்தையும் அளித்த முக்தி நாதனுக்கும் மற்றுமுள்ள புண்ணிய தலங்களில் கோவில் கொண்டிருக்கும்  எல்லா தெய்வங்களுக்கும்  ஆயிரம் நமஸ்காரங்களைக் கூறிக்கொள்கிறேன்.

















                                             ஸ்ரீதேவி பூதேவி சஹித ஸ்ரீ முக்தி நாதர்.




ருக்மணி சேஷசாயி 

திங்கள், 25 ஏப்ரல், 2011

66th story அடியார்க்கு எளியன்.

                                                    அடியார்க்கு எளியன்.

நமது பாரத நாடு தெய்வீகத் திருத் தலங்களைக் கொண்ட நாடு என்பது அனைவரும் அறிந்ததே.வடக்கே ஹரித்வாரும்,தெற்கே பண்டரீபுரமும், மேற்கே த்வாரகையும் கிழக்கே பூரிஜகன்னாதரும் அருள் பாலிக்கும் அற்புத நாடு என்று பெருமை படைத்தது நம் பாரதத் திருநாடு. க்ஷேத்திரங்களாக விளங்கும் இத்திருத் தலங்களுக்கு சிறப்பான  வரலாறு உண்டு.வடக்குப் பகுதியிலுள்ள ஹரித்வாரின் வரலாறு ஒரு கிருஷ்ண பக்தரோடு பின்னிப் பிணைந்தது. அந்த மாயக் கண்ணனின் அன்பையும் அவன் அடியவர்க்கு அருளும் பண்பாளன் என்பதையும் விளக்கும் அற்புதக் கதை நிகழ்ந்த இடமே ஹரித்வார் என்பதை அறியும்போது நமது உடல் சிலிர்க்கிறதல்லவா?

ஹரித்வார் என்று தற்போது வழங்கப்படும் ஊரில் கல்யாண கோஸ்வாமி என்பவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார். அவருக்கு வடமதுரை சென்று கண்ணபெருமானைக் கண்குளிர தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆசை மிக அதிகமாக இருந்தது. ஆனால் சம்சாரபந்தத்தில் உழலும் அவரால் இயலவில்லை. ஒருநாள் எப்படியோ மனைவியிடமும் தன் மக்களிடமும் அனுமதி பெற்று வடமதுரை செல்லப் புறப்பட்டு விட்டார் கோஸ்வாமி.

அவரைப் போலவே வடமதுரை செல்ல விரும்பியஸ்ரீவத்சன் என்ற  ஒரு இளைஞன் அவருடன் சேர்ந்து புறப்பட்டான். மகிழ்ச்சியுடன் இருவரும் பல தலங்களைத் தரிசித்துப பின்  வடமதுரை அடைந்தனர். அங்கே யமுனையில் நீராடி கண்ணனைத் தரிசித்து மகிழ்ந்தனர். இருவரும் சில நாட்கள் அந்தப் புனிதத் தலத்தில் தங்க வேண்டுமென விரும்பினர்.

திடீரென்று கல்யாண கோஸ்வாமி நோய்வாய்ப் பட்டார். குளிர் வெடவெடவென நடுக்க அப்படியே வீழ்ந்துவிட்டார்.அவருடன் வந்திருந்த ஸ்ரீவத்சன் அவரை படுக்கையில் படுக்கவைத்து வைத்தியரையும் அழைத்து வந்து காட்டினான்.அவருக்கு கடுமையான முறைக் காய்ச்சல் என்று அறிந்து முறைப்படி அவருக்கு மருந்தும் ஆகாரமும் தரவேண்டுமென்றும் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படியும் கூறிவிட்டுச் சென்றார் வைத்தியர்.

கையில் பணமில்லாதபோதும் ஸ்ரீவத்சன் எப்படியோ சமாளித்து இரவு பகல் கண்விழித்து அவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்தான்.இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே கோஸ்வாமியின் நோய் நீங்கியது.ஸ்ரீவத்சன் சிறிதும் முகம் கோணாது தனக்கு பணிவிடை செய்து தன்னை ஒரு மகனை விட மேலாகப் பாதுகாத்ததை எண்ணிக் கண்கலங்கி அவனுக்கு நன்றி சொன்னார் கோஸ்வாமி.

ஆயினும் அவருக்கு மனம் திருப்தியாகவில்லை.யாத்திரை வந்த இடத்தில் இத்தனை அன்போடு தன்னைக் கவனித்துக் கொள்ளவில்லையெனில் என் நிலை என்னவாகியிருக்கும்.எனவே என் நன்றியை வாயால் சொன்னால் போதாது என எண்ணியவர் ஸ்ரீவத்சனைப்  பார்த்து
 "அப்பா, நீ செய்த பேருதவிக்கு நான் வாய் வார்த்தையில் நன்றி சொன்னால் போதாது.என் மகளை உனக்கு மணம் செய்து கொடுப்பதன் மூலம் என் நன்றியைக காட்ட எண்ணுகிறேன்" என்றார்.
 ஸ்ரீவத்சன் தடுத்தும் அவர் கேட்கவில்லை. சத்தியம் செய்து" யார் தடுத்தாலும் கேளேன் என்மகளை உனக்கு மணமுடித்தே தீருவேன். இது இந்த வடமதுரையில் குடியிருக்கும் கண்ணபிரான் மீது ஆணை."
என்று கூறி அவனை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வ்ந்தார்.

அங்கே இறைவன் மந்தஹாசப் புன்னகையுடன் நின்றிருந்தான். அவன் முன் வணங்கி"ஏ கண்ணா, நீ சத்யஸ்வரூபி.உன்னை  சாட்சியாக வைத்துச் சொல்கிறேன். என்மனைவி மகன் யார் தடுத்தாலும் இந்த பரோபகாரிக்கே என் மகளை மணம் செய்து கொடுப்பேன்.உன் பாதசாட்சியாக இந்த வார்த்தையை மாற்றமாட்டேன். இதற்கேற்ற மன உறுதியைத்  தந்தருள்வாய் கண்ணா." என்று வேண்டிக் கொண்டார்.

பின் இறைவன் முன்னிலையில் ஸ்ரீவத்சனின் கரங்களில் "என்மகள் உனக்குத்தான்" என்று கூறி தாரை வார்த்துக் கொடுத்தார்.கண்ணன் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். பின் இருவரும் ஹரித்வார் நோக்கிப் புறப்பட்டனர்.

பல மாதங்கள் கழித்து ஊர் வந்து சேர்ந்த கோஸ்வாமியிடம் அவரது குடும்பத்திலுள்ளோர் அலட்சியமாக நடந்து கொண்டனர்.அவரது மனைவியும் மகனும் மிகுந்த கோபத்தைக் காட்டினர்.கோஸ்வாமியோ  மிகவும் வருந்தினார். தன்னை அலட்சியம் செய்ததை விடத் தன் உயிர் காத்த ஸ்ரீவத்சனை அவர்கள் அலட்சியம் செய்தது அவரால் பொறுக்க இயலவில்லை.

அவர்களிடம் ஸ்ரீவத்சன் செய்தபேருதவியையும்  தான் இருந்த நிலையையும் எடுத்துக் கூறி அதற்குப் பிரதியாகத் தன் மகளை அவனுக்கு மணமுடிப்பதாக வாக்குக் கொடுத்ததையும் கூறினார். அதைக்கேட்ட அவரது மனைவி வெகுண்டு எழுந்தாள்."முன்பின் தெரியாத தெருவோடு போகிற ஒருவனுக்கு என் மகளைத் தர நான் சம்மதிக்க மாட்டேன்."

கோஸ்வாமியோ "நான் வாக்களித்துவிட்டேன். அது தப்பாதபடி அனைவரும் சம்மதிக்கவேண்டும்" என்று வற்புறுத்திக் கூறினார்.ஆனால் அவர் மனைவி காளியானாள். "நீர் என்ன சொன்னாலும் சரி. இந்தப் பையனுக்கு என் மகளைத் தருவதைவிட அவளைக் கிணற்றில் தள்ளி விடுவேன்." எனக் கூச்சலிட்டாள்.

கோஸ்வாமி மிகுந்த மன வருத்தத்துடன் ஸ்ரீவத்சனை அழைத்துக் கொண்டு அரசனிடம் சென்றார்.நடந்தவை அனைத்தையும் மன்னர் பொறுமையுடன் கேட்டார்.பின் அவர்கள் குடும்பவிஷயத்தில் தான் எப்படித் தீர்ப்பளிப்பது என்று சிந்தித்தார .தனக்கு ஆலோசனை சொல்லும் உரிமை மட்டுமே உண்டு என நினைத்தார்.அவர் கோஸ்வாமியைப்  பார்த்து "நீர் தாரை வார்த்துக் கொடுத்ததைப் பார்த்த சாட்சிகள் யாரேனும் உண்டா?" எனக் கேட்டார்.

அப்போது ஸ்ரீவத்சன் "அந்தக் கண்ணபிரான் அன்றி வேறு யாரும் சாட்சியில்லை."என்றான்.

"அப்படியானால் அந்தக் கண்ணனையே சாட்சியாக அழைத்து வா."என்றவுடன் ஸ்ரீவத்சன் அப்படியே செய்வதாகக் கூறி வடமதுரை நோக்கிப் புறப்பட்டான்.

எம்பிரான் ஆலயத்தை அடைந்த ஸ்ரீவத்சன் கண்ணனிடம் மனமுருக வேண்டினான். "தன்னிடம் அன்பு கொண்ட ஒருவர் வாக்குத் தவறலாகாது. கண்ணா,உன்னையே சாட்சியாக வைத்து அவர் தாரை வார்த்துக் கொடுத்தது பொய்யாகிப் போகக் கூடாது.நீயே சாட்சியாகவந்து அவர் வாக்கை நிறைவேற்றித் தரவேண்டும்."என்று கண்களில் நீர் மல்க வேண்டிக்கொண்டான்.பின் அங்கேயே அமர்ந்து தியானம் செய்யலானான்.இரவு வந்தபின்னரும் அவன் இடத்தை விட்டு அசையவில்லை. அர்ச்சகர் கதவைப் பூட்டிக் கொண்டு சென்று விட்டார்.

நடுநிசியில்" ஸ்ரீவத்சா! "என்று அழைக்கும் குரல் அமுதமென காதில் விழ கண் விழித்தான் ஸ்ரீவத்சன். இறைவன் பாதங்களில் பணிந்தான்.கண்ணனின் கண்களில் பரிவும் அன்பும் ஒளி வீசின.

"பெருமானே, தங்கள் அருள் மட்டும் எனக்குப் போதாது. தங்களின் சாட்சியமும் இப்போது வேண்டும்.தாங்களே வந்திருந்து சாட்சி சொன்னால்தான் மன்னர் ஏற்றுக் கொள்வார்." என அழுது கெஞ்சினான்.

பகவான் இளமுறுவல் காட்டினார்."உன் விருப்பப்படியே வருகிறேன். நீ முன்னே செல். உன் பின்னே நான் வருவேன்.எக்காரணத்தைக் கொண்டும் நீ திரும்பிப் பார்க்கலாகாது. அப்படிப் பார்த்து விட்டால் நான் அதன் பின் ஒரு அடி கூட வைக்க மாட்டேன். அங்கேயே நின்று விடுவேன்" என்றார் பெருமான்..

அப்படியே சம்மதித்த ஸ்ரீவத்சன் முன்னே நடக்க கண்ணபிரான் பின்னே நடந்தார்.நடந்துகொண்டிருந்த ஸ்ரீவத்சனின் காதுகளில் பகவானின் வீரக்கழல் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது.இருவரும் நடந்து நடந்து ஹரித்வாரை நெருங்கினர். ஆயிற்று. இன்னும் மூன்று காத தூரம் இருக்கையில் கண்ணனின் கழல் ஒலி கேட்காததால் ஸ்ரீவத்சன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.

பீதாம்பரமும் மயிற்பீலியும் கழுத்தில் வைஜயந்தி மாலையும்  கையில் குழலையும் பிடித்து சர்வாலங்கார பூஷிதனாய் நின்ற கண்ணன் புன்னகை புரிந்தான்."
"வத்ச,உன் வாக்கைத் தவறவிட்டுத்  திரும்பிப் பார்த்துவிட்டாய்.இனி நான் நகர மாட்டேன் மன்னரிடம் சொல்லி அவரையே இங்கு அழைத்துவா" எனக் கூறவே ஸ்ரீவத்சன் தன் தவறை உணர்ந்து பலமுறை மன்னிப்புக் கேட்டான். பின்னர் கண்ணனின் ஆணைப்படி மன்னனை அழைத்து வந்தான்.

ஒரு நாழிகைப் பொழுதுக்குள் ஹரித்வார் நகரமே திரண்டு காட்டுக்குள் பிரவேசித்தது. அங்கே தன்னுடன் உரையாடிவந்த வடமதுரை நாயகனான கண்ணன் அர்ச்சாவதார மூர்த்தியாய் நிற்கக் கண்டான். மன்னரும் தாம் வடமதுரையில் பார்த்த அதே மூர்த்திதான் அது எனக் கண்டு கண்களில் நீர் மல்க இறைவனை வணங்கினார்..தன் அடியவருக்காக சாட்சி சொல்ல வந்த அந்த எளியவனான கண்ணனை உள்ளம் உருகி வேண்டினார்..அங்கேயே ஒரு கோவிலையும் கட்டுவித்தார்  மன்னர்.

இறைவனின் முன்னாலேயே ஸ்ரீவத்சனின் திருமணத்தையும் முடித்துவைத்தார் மன்னர்.கோஸ்வாமியின் பக்தியையும் ஸ்ரீவத்சனின் அன்புள்ளத்தையும் இறைவனின் அடியார்க்கு அருளும் பண்பையும் மக்கள் புகழ்ந்தவாறு இருந்தனர். கடவுளை நம்பினோர் ஒருபோதும் கைவிடப் படார் எனத் தெரிகிறதல்லவா?








ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

புதன், 13 ஏப்ரல், 2011

65th தன் கையே தனக்குதவி

தன் கையே தனக்குதவி.
ஒரு கிராமத்தில் கந்தசாமி  என்பவர் வசித்து வ்ந்தார்.அவருக்கு வடிவேலு என்ற ஒரு மகன் இருந்தான். அவ்வூரில் பத்தாம் வகுப்புப் படித்து வந்தான்.

அவர்களுக்கு அந்த ஊரில் கொஞ்சம் நிலம் இருந்தது. கந்தசாமி அந்த நிலத்தில் பயிரிட்டிருந்தார். நேரம் கிடைக்கும்போது வடிவேலுவும் பயிரைப் பாதுகாக்க வயலுக்குச் செல்வது வழக்கம்.அந்த வருடம் நல்ல மழை பெய்ததால் கந்தசாமியின் நிலத்தில் நல்ல விளைச்சல் கண்டிருந்தது. தினமும் காலைவேளையில் தன் மகன் வடிவேலுவை அழைத்துக் கொண்டு விளைந்து கதிர் முற்றிய பயிரைப் பார்த்துச் செல்வார். வடிவேலுவும் பயிர் பற்றிய கேள்விகளை அவரிடம் கேட்பான் கந்தசாமியும் மகிழ்ச்சியுடன் அவனது கேள்விகளுக்குப் பதிலுரைப்பார்.

      தினமும்வயல் வரப்பில் நின்று இவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள். அந்த வயலில் விளைந்த பயிர்களுக்கிடையே ஒரு குருவி கூடு கட்டித் தன் குஞ்சுகளை வளர்த்து வந்தது. தினமும் அப்பாவும் மகனும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அந்தக் குஞ்சுகள். மாலையில் வீடு திரும்பும் தங்களின் தாயிடம் வடிவேலுவும் கந்தசாமியும் பேசிக்கொண்டதைச் சொல்லும்.

      அன்று தாய்க் குருவி வழக்கம்போல இரை தேடப் புறப்பட்டது. புறப்படும் முன் தன் குஞ்சுகளிடம் அப்பாவும் மகனும் பேசிக் கொள்வதைக் கவனித்துத் தன்னிடம் கூறும்படிக் கூறிவிட்டுச் சென்றது. வழக்கம்போல கந்தசாமி தன் வயலுக்கு வந்து பார்வையிட்டார். 

      அந்த வயல் முழுவதும் கதிர் முற்றித் தலை சாய்ந்திருந்தது. கந்தசாமி தன் மகனைத் திரும்பிப் பார்த்தார்.
"வேலு, நம்ம வயலில் கதிர் முற்றித் தலை சாய்ஞ்சிடுச்சு. இனிமேல் அறுவடை செய்திடலாம். நீ நாளைக்கு நம்ம கதிரை அறுக்க ஆளுங்களைக் கூட்டி வந்துடு." என்று கூறியபோது வடிவேலுவும் "சரி அப்பா" என்று கூறினான். 

அன்று மாலையில் தங்களின் தாய்க் குருவி வந்தவுடன் குஞ்சுகள் கீச் கீச்சென்று கத்தித் தங்களின் அச்சத்தைத் தெரிவித்தன. செய்தி என்ன என்று கேட்டபோது குஞ்சுகள் அழுது கொண்டே அறுவடை நடக்கப் போவதைத் தெரிவித்தன.

அந்தத் தாய்க் குருவியோ சற்றும் அலட்டிக் கொள்ளாமல் தன் குஞ்சுகளுக்கு தைரியம் கூறிற்று."குழந்தைகளே, நிலத்துக்கு உரியவர் தன் மகனிடம் தானே சொல்லியிருக்கிறார். நீங்கள் பயப்படாமல் இருங்கள்."

சமாதானம் கூறிய தாய்க் குருவி மீண்டும் மறுநாள் இரைதேடப் புறப்பட்டது.அன்றும் கந்தசாமி வயலுக்கு வ்ந்தார்.
தன் மகனைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டார்."வேலு, நாளைக்கு நீயே போய் ஆட்களை அறுவடைக்குக் கூட்டிவா." என்று கடுமையாகக் கூறினார்.அவனும் "சரி அப்பா" என்று அச்சத்துடன் பதிலளித்தான்.

அன்று மாலை வழக்கம்போலத் தாய்க்குருவி தன் கூட்டிற்கு வந்தது. அன்றும் கந்தசாமியும் வடிவேலுவும் பேசிக் கொண்டதைக் கூறின குஞ்சுகள்.அவற்றைப் பார்த்துத் தாய்க் குருவி "பயப்படாதீர்கள். அவர் அறுவடை செய்ய மாட்டார். அவர் அறுவடை செய்வதாகத் தெரிந்தால் நான் வீடு மாற்றிவிடுவேன்." என்று கூறித் தைரியமாக இருக்கும்படிக் கூறியது தாய்க் குருவி.

மறுநாள் காலையும் இரைதேடப் புறப்பட்டது தாய்க் குருவி. வழக்கம்போல கந்தசாமி என்ன பேசுகிறான் என்பதைக் கேட்டுத் தன்னிடம் கூறும்படி கூறிச் சென்றது தாய் குருவி. அன்று கந்தசாமி வடிவேலுவுடன் வராமல் தனியே வ்ந்தார். கதிர்கள் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கோபம் கொண்டார்.

பின் தனக்குள் பேசிக் கொண்டார்."சே, என்ன பையன் இவன். ஒரு ஏற்பாடும் செய்யாமல் விட்டு விட்டானே. இனி அவனை நம்பிப் பயனில்லை.நாமே களத்தில் இறங்கவேண்டியதுதான்." என்று புலம்பியவாறே வீடு நோக்கி நடந்தார்.  

மாலையில் வீடு திரும்பிய தாய்க் குருவியிடம் குஞ்சுகள் முறையிட்டன. நாளைக்கு அவரே களத்தில் இறங்கப் போகிறார். இச் செய்தியைக் கேட்ட தாய்க் குருவி" நான் வேறு இடம் பார்த்து வரும் வரை பத்திரமாக இருங்கள். நாம் வேறு வீடு கட்டிக்கொண்டு போய்விடலாம்." என்று கூறிச் சென்றது.

இப்போது வேறு வீட்டுக்குக் குடிவந்து விட்டது அந்தக் குருவிக் குடும்பம். அப்போது அந்தக் குருவிக் குஞ்சுகளில் சற்று கெட்டிக்காரக் குஞ்சு கேட்டது."அம்மா, மூன்று நாட்களாக இடம் மாற்றாத நீ இப்போது மட்டும் ஏன் மாற்றினாய்." 

"அதுவா, மூன்று நாட்களாக அந்த முதலாளி மற்றவர் உதவியை நாடினார். அதனால் அவர் வேலை நடக்காது என்று தெரிந்து  கொண்டேன். ஆனால்  இப்போது தானே அந்த வேலையைச் செய்வதாகக் கூறியபோது இனி அந்தவேலை முடிந்துவிடும் எனப் புரிந்து கொண்டேன். இனியும் நாம் அங்கிருப்பது நமக்கு ஆபத்து அதனால் வேறு பாதுகாப்பான இடத்தைத் தேடி வந்துவிட்டேன்."

"அம்மா, தன் கையே தனக்குதவி என்பதை அந்தப் பெரியவர் இப்போது புரிந்து கொண்டிருப்பார் இல்லையா?" என்று கூறிச் சிரித்தது அந்தப் பொல்லாத புத்திசாலிக் குருவி.

தாய்க் குருவியும் சிரித்தபடியே "அவர் புரிந்து கொண்டாரோ இல்லையோ நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்"என்று கூறித் தன் குஞ்சுகளை அணைத்துக் கொண்டது.

















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

ஞாயிறு, 27 மார்ச், 2011

64th story இறைவனின் கருணை.

இறைவனின் கருணை.

மங்களபுரி மன்னன் மகேந்திரன் இறைவனைப் பற்றிய எண்ணமே இல்லாதவன். எல்லாக் காரியங்களும் தன்னைப் போன்ற மன்னர்களால்தான் நடக்கிறதே அன்றி இறைவனால் அல்ல என்று எண்ணம் கொண்டவன்.மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழிதானே.எனவே ஒரு சிலரைத் தவிர மற்றையோர் மன்னனின் வழியிலேயே நடந்து வந்தனர்.

ஒருநாள் மன்னன் சபையில் அமர்ந்திருக்கும் வேளையில் காட்டின் அருகே வசிக்கும் மக்கள் கூட்டமாக மன்னனைக் காண வந்தனர்.

"மன்னர் பெருமானே! எங்கள் வயலில் விளைந்த கரும்பு நெல் போன்ற தானியங்களைஎல்லாம் காட்டு மிருகங்கள் அழிக்கின்றன. அவற்றைத் தாங்கள்தான் தடுக்கவேண்டும்" என வேண்டினர்.

அருகே நின்றிருந்த மெய்க்காப்பாளன் மெதுவாக "எல்லாம் ஈசன் கருணை.." என்று முணு முணுத்தான்.

மன்னர் கோபமாக அவனைப் பார்த்தார்."என்ன சொன்னாய்? எல்லாம் ஈசன் கருணையா ?  வனவிலங்குகளை ஏவிவிட்டு மக்களைத்  துன்புறுத்துவதுதான் ஈசன் கருணையா?" 

மெய்க்காப்பாளன் தலையைக் குனிந்து கொண்டான்.

அன்று காலையிலேயே மன்னன் சில வீரர்களை அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடத் தொடங்கினான். அவனது உண்மையான மெய்க்காப்பாளனான சித்திரசேனன் மன்னனை நிழல் போலப் பின்தொடர்ந்து வந்தான்.

வெகுநேரம் வேட்டையாடிக் களைத்துப் போன மன்னன் ஒரு மரத்தின் நிழலில் கூடாரம் அடித்துத் தங்கினான். 
அவனுடன் வந்த வீரர்களும் இளைப்பாறினர். ஆனால் சித்திரசேனன் மட்டும் கண்ணும் கருத்துமாக மன்னனைப் பாதுகாத்தான்.

கூடாரத்தைச் சுற்றிவந்துகொண்டிருந்த சித்திரசேனன் ஏதோ சத்தம் கேட்டுத் தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டான். சற்றுத் தொலைவிலிருந்து யாரோ இருவர் மறைந்து கொண்டு தன்னைக் கண்காணிப்பதைக் கண்டான்.

அவர்களைக் கவனியாதவன்போல் நடித்தவன் தன் உடன் இருக்கும் படைவீரருக்கு ஜாடை காட்டினான்.அதைப் புரிந்து கொண்ட படைவீரர்களும் ஒளிந்திருந்த இருவரையும் பிடிக்க விரைந்தனர். ஆனால் அதற்குள் அவர்கள் எங்கோ மறைந்து விட்டனர்.

சத்தம் கேட்டு மன்னன் கூடாரத்தினின்றும் வெளியே வந்தான்.
செய்தியைக் கேட்டு மிகுந்த கோபமடைந்தான் மகேந்திரன்.

" எல்லாம் ஈசன் கருணை " என்று கூறியபடியே மன்னன் முன் கைகட்டி நின்றான் சித்திரசேனன்.

"பகைவன் நம்மை உளவு பார்த்துச் சென்றிருக்கிறான் இதையா  ஈசன் கருணை என்கிறாய்?"

"மன்னர்மன்னா, கோபம் வேண்டாம். எந்தச் செயலும் அவனது கருணையாலேயே நடக்கிறது. இதை நம்புங்கள். நல்லதே நடக்கும்"

ம்... என உறுமிய மன்னன் தன் படைவீரருக்குக் கட்டளை பிறப்பித்தான் "என்னுடன் வந்திருப்பவர் அனைவரும் இந்தக் காட்டிலிருக்கும் அந்த பகைவர்களைப்  பிடித்தபின்தான் நாடு திரும்ப வேண்டும்."

வீரர்கள் ஒற்றர்களாக மாறி காட்டில் அலைந்து தேடினர்.

மறுநாளே இரண்டு வீரர்கள் மன்னனை அணுகி காட்டின் நடுவே மறைந்துகொண்டிருக்கும் பகை மன்னனின் படைகளைப் பற்றிய செய்தியைச் சொன்னபோது மகேந்திரன் திடுக்கிட்டான். நமது நாட்டைப் பிடிக்க அண்டைநாட்டான் செய்துள்ள சூழ்ச்சி தெரிந்தது.

சற்றும் தாமதியாது காட்டில் மறைந்து படையெடுக்கக் காலம் பார்த்திருந்த பகைவனை வென்று பகை முடித்தான் மகேந்திரன்.

வெற்றிவிழாவின்போது சரியான சமயத்தில் மறைந்தவிரோதிகளைக் கண்டுபிடித்த சித்ரசெனனுக்குப் பரிசளித்தான் மன்னன். "இறைவனின் கருணையே" என்றபடியே வணங்கினான் சித்திரசேனன்.

"இதுகூடவா ஈசன் கருணை?"

"ஆம் மன்னா. விலங்குகள் பயிரை அழித்ததால் வேட்டைக்குச் சென்றீர்கள். அதனால்தான் பகைவரைக் காணமுடிந்தது. பகையும் முடிந்தது.ஈசனின் கருணையன்றி வேறு எதுவும் இல்லை மன்னா."

ஆனாலும் அவனை  இகழ்ச்சியாகப் பார்த்துச் சிரித்தான் மன்னன் மகேந்திரன்.

நாட்கள் கழிந்தன. வசந்த காலம் வந்தது. மன்னன் மன மகிழ்ச்சிக்காக காட்டில் வேட்டைக்குப் புறப்பட்டான்.  மெய்க் காப்பாளனான சித்திரசேனனும் உடன் சென்றான்.

மகேந்திரனும் சித்திரசெனனும் வேட்டையாடிக் களைத்தனர். வேட்டையாடும் மகிழ்ச்சியில் காட்டுக்குள் வெகு தொலைவு வந்ததையே இருவரும் அறியவில்லை.வெகு நேரம் வேட்டையாடியும் விலங்குகளும் ஒன்றும் கிட்டவில்லை.மாலைநேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.மன்னனுக்கோ நல்ல பசி.

"சித்ரசேனா, என்னால் பசிதாள முடியவில்லை."

"இறைவன் கருணையால் விரைவில் உங்கள் பசி நீங்கும் மன்னா.
, இந்த மரத்தடியில் ஓய்வெடுங்கள் உங்களுக்கு கனிகளைத் தேடிக்கொண்டு வருகிறேன்."

"இந்த பசி நேரத்திலும் இறைவனின் கருணை என்றுபேசுகிறாயே  . இங்கேயே அமர்ந்திருந்தால் உன் இறைவனின் கருணை உணவளிக்குமா?"

"ஈசனின் கருணை இருந்தால் எதுவும் நடக்கும்"

"அப்படியானால் நீ இங்கேயே இரு. நான் கனிகளைத் தேடிச் சென்று புசித்துவிட்டு வருகிறேன். உன் ஈசன் உனக்குக் கருணை புரிகிறானா பார்ப்போம்."

"இதுவும் ஈசன் கருணையே" என்றபடியே மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டான் சித்திரசேனன்.

மிகுந்த களைப்பால் அப்படியே தூங்கி விட்டான். யாரோ அவனைத் தட்டி எழுப்புவதை அறிந்து கண் விழித்தான் சித்திரசேனன்.

கையில் வில்லும் அம்புமாய் ஒரு வேடன் நின்றிருந்தான்.அவனது கையில் இருந்த மான் இருவருக்கும் உணவானது.

வெகு நேரம் கழித்து மன்னன் மிகுந்த களைப்போடு தள்ளாடியபடி அங்கு வந்தான். தான் இருந்த இடத்திலேயே மானைச் சமைத்துச் சாப்பிட்ட சித்திரசேனன் மன்னனின் பசியை  முதலில் தணித்தான்.

"சித்ரசேனா, இது வசந்த காலம் என்பதை நீயும் மறந்தாய். நானும் மறந்தேன்.எல்லா மரங்களும் பூக்களைச் சுமந்து கொண்டுள்ளன. எனவே எனக்கு கனிகளோ காய்களோ கிட்டவில்லை."

"இதைத்தான் ஈசனின் கருணை என்று சொன்னேன்  மன்னா. மனதில் நாம் கொள்ளும் நம்பிக்கையே இறைவனின் கருணையாக நமக்கு நல்ல பலனைத் தருகிறது. நம்பிக்கை இருக்கும் உள்ளத்துக்குள்ளேதான் ஈசன் குடியிருக்கிறான் ".  

"உண்மைதான் சித்ரசேனா. ஈசனின் கருணையை நானும் நம்புகிறேன்."

இருவரும் மிக்க மகிழ்ச்சியுடன் அரண்மனை நோக்கி குதிரையைச் செலுத்தினர். இறைவனின் கருணையைப் புரிந்துகொண்ட மன்னன் மகேந்திரன் புது மனிதனாகத் திரும்பினான். 

அந்த மன்னனைப் போலவே நாமும் இறைவனின் கருணையை எண்ணி நம் வாழ்வில் பல வெற்றிகளைப் பெறுவோம்.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

செவ்வாய், 22 மார்ச், 2011

63rd story அன்பால் வென்ற அரசன்.

அன்பால் வென்ற அரசன்.

ஒரு சிற்றரசன் தனக்குரிய சிறிய நாட்டை சிறப்பாக ஆண்டு வந்தான். அந்நாட்டு மக்களும் தங்களின் மன்னனின் அன்புள்ளத்தைப் புரிந்து கொண்டு அவனைத தங்களின் தந்தையாகவே எண்ணி வாழ்ந்து வந்தனர்.

சுதர்மன் என்ற அந்த மன்னன் பெயருக்கேற்ப தர்ம சிந்தையும் பிறருக்கு உதவும் நற்பண்பும் பெற்றிருந்தான். இவனது பெருமையைக் கேள்விப் பட்ட சோழநாட்டை ஆண்டு வந்த சோழச் சக்ரவர்த்தியானவர் தனக்கில்லாத பெருமையும் புகழும் ஒரு சிற்றரசனுக்கு இருப்பதா எனப் பொறாமை கொண்டார்.

மனதில் பொறாமை எழுந்த காரணத்தால் சுதர்மனின் நாட்டின் மேல் படைஎடுத்தான். அந்த நாட்டைத் தன் நாட்டுடன் இணைத்துக் கொள்ள விரும்பினான்.

வீரமும் விவேகமும் நிறைந்தவன் சுதர்மன். அவனால் சோழ மன்னனை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற இயலாது எனப் புரிந்து கொண்டவன்.சோழனின் பொறாமையே தன்மீது அவன் படையெடுக்கக் காரணம் என்பதையும் தெரிந்து கொண்டான்.

ஒரு பேரரசனின் சுயநலனுக்காகத் தன் நாட்டு மக்களைத் துன்புறுத்துவதா என சுதர்மன் எண்ணினான். ஆனாலும் மக்களும் மற்ற அரண்மனை அதிகாரிகளும் சோழ மன்னனை எதிர்த்துப் போராடியே தீரவேண்டும் என்று கூறவே சுதர்மனும் படை திரட்டிப் போருக்குப் புறப்பட்டான்.

அவன் நினைத்தது போலவே போரில் தோற்று விடும் நிலை வந்தது. சுதர்மனின் உண்மை ஊழியர்களான மெய்க்காப்பாளர்கள் சுதர்மன் தப்பிப் போக வழி வகுத்துக் கொடுக்க காட்டில் மறைந்து கொண்டான் சுதர்மன். அவனைத் தேடிக்கொண்டு சோழ வீரர்கள் காட்டில் அலைந்து திரிந்தனர்.

சோழ மன்னனால் சுதர்மனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. சுதர்மனைப் பற்றிய உண்மையை அவன் நாட்டு மக்கள் வெளியிடவே இல்லை.காட்டிலே அலையும் சுதர்மனைப் பிடிக்க ஒரு படையை அனுப்பினான் மன்னன்.சோழவீரர்கள் காடு மேடு எங்கும் தேடினர்.

ஒருநாள் சுதர்மன் ஒரு குகையினுள்ளே படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.அந்தக் குகை வாயிலுக்கு வந்த சோழவீரர்கள் உள்ளே எட்டிப்பார்த்தவாறு பேசிக் கொண்டனர்.

"இந்தக் குகைக்குள்ளே மன்னர் இருக்கமாட்டார்."

"எப்படிக் கூறுகிறாய்?"

"வாயிலை மூடிக் கொண்டு ஒரு சிலந்தி வலை பின்னியிருக்கிறதே. மன்னர் உள்ளே சென்றிருந்தால் அந்த வலை அறுந்திருக்குமே?" 

"உண்மைதான். நாம் வேறு இடங்களில் தேடலாம்" வீரர்கள் பேசியபடியே நடந்து சென்றனர்.

வீரர்கள் உரையாடலும் கடந்து செல்லும் ஒலியும் மன்னனின் காதுகளில் விழுந்தது. பெருமூச்சுடன் இறைவனுக்கு நன்றி சொன்னான் சுதர்மன். வெளிப் பக்கம் வந்து தான் மறைந்திருந்த குகை வாயிலில் வலை பின்னி அதில் உறங்கிக்  கொண்டிருந்த சிலந்திக்கும் கரம் குவித்து நன்றி கூறினான்.

சிறிய நாடாக இருந்தாலும் மன்னன் மீது மக்கள் மிகுந்த அன்பு வைத்திருந்த காரணத்தால் தங்கள் மன்னன் பகைவன் கைகளில் பிடிபடாமல் காத்து வருவதை சோழன் அறிந்து கொண்டான். இத்தனை அன்புள்ளம் கொண்டவனா இந்த சுதர்மன்?அவனை அழித்தால்தான் தன் புகழ் ஓங்கும் என எண்ணினான்.

ஒருபக்கம் சோழ வீரர்கள் சுதர்மனைத் தேடிக்கொண்டிருக்க மறுபக்கம் சுதர்மன் காட்டில் மறைந்து வாழ்ந்து வந்தான். ஒருநாள் மழை பெய்து ஓய்ந்த நேரம் மாலை மயங்கி இருட்டு படரும் வேளை. ஒரு குகையின் வாயிலில் அமர்ந்து மீண்டும் படை திரட்டுவது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று ஒரு சிங்கம் கர்ஜனை செய்யும் ஒலி மிக அருகில் கேட்டது. திடுக்கிட்டு எழுந்த சுதர்மன் தன் கையில் குறுவாளை ஓங்கிக் கொண்டு மெதுவாக ஒலி வந்த திசையில் நடந்தான்.சற்றுத் தொலைவு நடந்ததும் அங்கு ஒரு பெரிய சிங்கம் அமர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தான் சுதர்மன்.

மெதுவாக அதன் அருகே சென்று பார்த்தான். அதன் கண்களில் ஏதோ வேதனை தெரிந்தது.சற்று அருகே சென்றான். சிங்கம் வலியில் கர்ஜித்தது.
அதன் அருகே சென்று அமர்ந்து கொண்ட சுதர்மன் அதன் பிடரியைத் தடவிக் கொடுத்தான். தாயின் அரவணைப்பில் இருக்கும் சேயைப் போல் சிங்கம் அமைதியாக அமர்ந்திருந்தது.

அதன் உடல் முழுவதும் தடவிக் கொடுத்தபோது காலில்  பெரிய முள் ஒன்று ஆழமாகத் தைத்திருப்பதைப் பார்த்தான்.அக்காலைத் தன் மடிமீது வைத்துக் கொண்டான். பின்னர் பக்குவமாக அந்த முள்ளைக் காலிலிருந்து பிடுங்கி எடுத்தான். தன் கையிலிருந்த துணியைக் கிழித்து அதன் காலில் ரத்தம் வராமல் கட்டுப் போட்டான்.

இப்போது சிங்கத்தின் வலி நீங்கியது. நன்றியுடன் மன்னனைப் பார்த்துவிட்டுத் தன் வழியே நடந்து சென்று காட்டினுள் மறைந்தது அச் சிங்கம்.சில நாட்களில் மன்னன் சுதர்மன் இந்த நிகழ்ச்சியை மறந்து விட்டான்.அவன் எண்ணமெல்லாம் மீண்டும் படைதிரட்டுவதிலேயே இருந்தது.

ஒருநாள் அதிகாலை.குளிர் அதிகமாக இருக்கும் ஒரு பனி நாள்.ஒரு பாறைமீது நல்ல வெய்யிலில் படுத்திருந்தான் சுதர்மன். சற்றேகண் அயர்ந்தவன்  பெரும் கூச்சல் கேட்டுக் கண்களைத் திறந்து பார்த்தான். அவனைச் சுற்றி சோழவீரர்கள் நின்றிருந்தனர்.பல நாட்களாகக் கிடைக்காத பகை அரசர் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் வீரர்கள் ஆரவாரம் செய்தனர். அவர்கள் சுதர்மனைச் சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்றனர்.

சிறையில் அடைக்கப்பட்ட சுதர்மன் பல கொடுமைகளுக்கு ஆளானான். மாபெரும் மன்னனான சோழச் சக்கரவர்த்திகளை எதிர்த்துப் போரிட்டமைக்காக பல நாட்கள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தான்.

மன்னன் சபைகூட்டி மன்னிப்பு வேண்டுமாறு கூறியபோதும் மறுத்து விட்ட சுதர்மனுக்கு மரண தண்டனை விதித்தான் சோழன் .மறுநாள் சிங்கக் கூண்டினுள் தள்ளப் பட்டு சிங்கத்திற்கு இரையாகவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப் பட்டது.

பொழுது விடிந்தது.தங்களின் மன்னனின் நிலையைக் கேள்விப்பட்ட மக்கள் துயரத்துடன் கூடினர். சோழமன்னனும் மற்றயோரும் வந்து அமர்ந்தனர். சிங்கம் ஒன்று கூண்டினுள் பசியுடன் அலைந்துகொண்டு கர்ஜனை புரிந்தபடி இருந்தது.

அந்தப் பெரும் பள்ளத்தில் சுதர்மனைத் தள்ளிவிட்டு சிங்கத்தின் கூண்டையும் திறந்து விட்டார்கள் காவலர்கள்.
அனைவரும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.வீரசிங்கத்திற்கும்  காட்டு சிங்கத்திற்கும் பெரும் சண்டை தொடங்கப் போகிறது.

 பலநாட்களாகப் பட்டினியாக இருக்கும் சிங்கம் வெல்லுமா?பலநாட்களாகப் பட்டினியாக இருக்கும் சுதர்மன் வெல்வானா? அனைவரின் கண்களும் இமைப்பதை மறந்தன.

கூண்டைத் திறந்து விட்டவுடனேயே சிங்கம் பாய்ந்து வந்தது. சுதர்மனின் இரண்டு கரங்களிலும் தன் முன்னங்கால்களை வைத்து தன் பெரிய வாயைத் திறந்து பெரும் கர்ஜனை செய்தது. அதைக் கேட்ட மக்கள் அனைவரும் நடுநடுங்கினர்.

மன்னன் மாய்ந்தான் என சிலர் கண்களை மூடிக் கொண்டனர். சிலர் அவரவர் இறைவனை வேண்டிக்கொண்டனர்.வேறு சிலர் இந்தக் கொடூரக் காட்சியை ரசிக்கக் காத்திருக்கும் சோழனை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் நடந்தது என்ன.ஒரு ஆச்சரியம் நடந்தது அங்கே.ஆம்.சீறி வந்த சிங்கம் சிறு நாயக் குட்டிபோல சுதர்மனின் அருகே மண்டியிட்டு அமர்ந்தது. அவனது காலை நக்கிக் கொடுத்தது.அன்போடு அவன் மடியில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டது.

இக்காட்சியைக் கண்ட மக்கள் பெரும் ஆரவாரம் செய்தனர். சுதர்மர் வாழ்க. அன்புள்ளம் கொண்ட பண்பாளர் வாழ்க.
என்ற மக்களின் குரல் ஓங்கி ஒலித்தது. சோழன் தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து சுதர்மனை  அணைத்துக் கொண்டான்.

"சுதர்மரே! உமது அன்புள்ளத்திற்கு நான் அடிபணிகிறேன். அன்பால் யாரையும் வெல்லலாம் என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன். இந்த சிங்கத்திடம் நீர் என்ன கூறினீர் என்பதை  மக்கள் அறியக் கூறுங்கள் "என்றார்.

"அரசே! நான் காட்டில் அலையும் போது ஒரு  சிங்கத்தின் காலில் தைத்த முள்ளை நீக்கி அதன் வேதனையை நீக்கினேன். அது இந்தச் சிங்கம்தான். நன்றி மறவாத சிங்கம் என்னையும் நான் செய்த உதவியையும் நினைவில் வைத்துக் கொண்டு என்னிடம் அன்புடன் நடந்து கொண்டது."

"நண்பரே! அன்பால் மனிதரை மட்டுமின்றி விலங்குகளையும் வெல்லலாம் என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன். இனி நீர் சுதந்திரமாக உமது நாட்டுக்குச் செல்லலாம். நாம் இனி நண்பர்களாக இருப்போம்.
இந்தச் சிங்கம் உமக்கு நான் அளிக்கும் பரிசு." 

சுதர்மன் மகிழ்ச்சியுடன் தன் நாடு திரும்பினான். மக்கள் அவனை அன்பால் வென்ற அரசன் என்று போற்றினர். 
நாமும் அன்பை கைக் கொள்வோம் அன்பால் உலகை வெல்வோம்.
 



ருக்மணி சேஷசாயி 





Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

ஞாயிறு, 13 மார்ச், 2011

62nd story குருவும் சீடனும்.

குருவும் சீடனும்.

ஒரு காட்டில் ஒரு குரு இருந்தார். அவருக்கு பல சீடர்கள் இருந்தனர். அவர்களுள் ஒரு சீடனுக்கு அடிக்கடி சந்தேகங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.

தன் குருவிடம் அதனைக் கேட்டுக் கொண்டே இருப்பான். குருவும் அவனுக்குப் புரியும்படி கூறி அவன் சந்தேகங்களைப் போக்கிக் கொண்டே இருப்பார். 

பல சமயங்களில் அவரது விளக்கங்கள் அந்த சீடனுக்குத் திருப்தியைத் தருவதில்லை. இருப்பினும் குருவுக்கு மரியாதை தரும் நிமித்தமாக 

மெளனமாக இருப்பான். புரிந்தது போலவும் தலையை அசைப்பான்.

குருவும் இதைப் புரிந்துகொண்டு புன்னகை செய்வார்.

வழக்கம்போல அந்த சீடனுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அதைத் தன் குருவிடம் கேட்டான்.

"குருவே, இறைவன் பாதங்களைப் பற்றிக்கொண்டால் இந்த பவசாகரத்தைக் கடந்து விடலாம் என்கிறீர்களே அது எப்படி குருவே? எனக்குப் புரியும்படி 

கூறுங்கள்" என்றான் அந்த சீடன்.

குரு அந்த சீடனிடம் தன்னை இரவு தனிமையில் சந்திக்கும் படி கூறியனுப்பினார்.

இரவு வந்தது. குருவை நாடிச் சென்றான் அந்தசீடன். அவனைத் தன் முன்னே அமர்த்திக் கொண்டார் அந்த குரு.

" மகனே இப்போது நாம் இருவரும் வேறு ஒரு உயிராக மாறப் போகிறோம். அந்த உயிர் போகும் இடமெல்லாம் நீ உடன் வந்தால் உனக்கு உண்மை 

புரியும்" என்றார் அந்த குரு. சீடனும் அவர் சொல்லியபடியே தன் கண்களை மூடிக்கொண்டான்.

இப்போது குருவும் சீடனும் இரண்டு புழுவாக உருவெடுத்தனர். அவர்கள் இருந்ததோ ஒரு மலையின் உச்சி. அங்கே பல பயங்கர மிருகங்கள் உலவின.

இரண்டு புழுக்களின் அருகே ஒரு சிங்கம் கர்ஜித்துக் கொண்டு அமர்ந்திருந்தது. குருவான புழு சீடனிடம் அந்த சிங்கத்தின் காலில் ஏறி அமர்ந்துகொள்ளச் 

சொல்லியபடி தானும் ஏறிக் கொண்டார். சீடனும் அப்படியே செய்தான். 

"சீடனே நாம் இப்போது இந்த மலை உச்சியில் இருந்து அடுத்த மலை உச்சிக்குப் போகப் போகிறோம்."

"எப்படி குருவே?"

"பொறுத்திருந்து பார் "

சற்று நேரத்தில் சிங்கம் அடுத்த மலையிலுள்ள இரையைப் பார்த்தது. ஒரே பாய்ச்சலில் அடுத்த மலை உச்சியை அடைந்தது. 

குரு சீடனைப் பார்த்துக் கூறினார். "பார்த்தாயா. எவ்வளவு சுலபமாக மலையைக் கடந்தோம்!"

"குருவே, ஓரளவு புரிந்தது. இதுபோல  விண்ணைக் கடக்க இயலுமா?"

"கண்டிப்பாக முடியும்" என்ற குரு சற்று தூரம் நெளிந்தபடி சென்றார். சீடனும் அவரைப் பின்பற்றினான். அப்போது அங்கே ஒரு காட்சியைக் கண்டனர்.

ஒரு கருடன் இரையைக் கொத்திக் கொண்டிருந்தது.

"சீடனே! இந்த கருடனின் சிறகின் அடியில் மறைந்து கொள்." என்றபடியே குருவும் தன்னை சிறகில் மறைத்துக் கொண்டு அமர்ந்தார்.

சற்று நேரத்தில் கருடன் விண்ணில் பறக்கத் தொடங்கியது. 

சீடன் பயந்தான்."குருவே விண்ணில் பறந்தது போதும் கீழே இறக்குங்கள்."

"  பொறு சீடனே. அதோ அந்த ஆற்றின் அருகே எப்படியும் கருடன் இறங்கும். அப்போது இறங்கிவிடலாம்."

இப்போது கருடனிடமிருந்தும் இறங்கியாயிற்று. இப்போதும் மற்றொரு சந்தேகம் சீடனுக்கு. தன் எதிரே இருக்கும் நீண்ட ஆற்றைப் பார்த்தான்.

"குருவே, இந்தப் பெரிய ஆற்றை நாம் எப்படிக் கடப்பது?"

"அதோ அந்த ஓடக்காரனின் முண்டாசு இருக்கிறது பார். அதில் ஏறி மறைந்து கொள்." என்றபடியே குரு தானும் முண்டாசில் மறைந்து கொண்டார்.

சற்று நேரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு புறப்பட்டது.அக்கரையை அடைந்த படகோட்டி தரையில் இறங்கித் தன் முண்டாசை எடுத்து 

உதறிவிட்டு முகத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டான். அப்போது இரண்டு புழுக்களும் தரையில் வைக்கப்பட்டிருந்த ஒரு கயிற்றின் அருகே 

விழுந்தன.

அந்தக் காட்டுக்கு விறகுவெட்ட கோடாலியுடன் வந்த விறகுவெட்டியின் கையிலிருந்த அந்தக்  கயிற்றில் ஏறிக்கொண்ட குருவும் சீடனும் தாங்கள் 

வசிக்கும் காட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

அப்போது சூரியன் முளைத்துவிட்டதால் குரு கண்களைத் திறந்தார். சீடனைத் தட்டி எழுப்பிக் கேட்டார்..

"சீடனே, எத்தனை இடங்களுக்குப் போய் வந்தாய்?" 

"குருவே! நான் ஒரு சிறு புழுவாக இருந்தாலும் மலையையும் விண்ணையும் பெரும் நீர்ப்பரப்பையும் கடந்து என்னிடத்திற்கே வந்து சேர்ந்துவிட்டேன்.

இது எப்படியென்றுதான் புரியவில்லை."

"மகனே! ஒரு உயிர் இறைவனின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் எந்த இடரையும் கடக்கலாம் என்பதற்காகவே உனக்கு நான் இந்தக் காட்சியைக் 

காட்டினேன். ஒவ்வொரு இடத்திலும் உனக்குத் துணையாக வந்தது இறைவனின்  வேறு வேறு அவதாரங்களே. மலை உச்சியில் கண்ட சிங்கம் 

நரசிம்மமாகவும் கருடனின் உருவில் மகாவிஷ்ணுவும் ஓடக்காரன் உருவில் அந்த பராசக்தியும் விறகு வெட்டியாக  அந்த பரமேஸ்வரனும் நம்மைப் 

பாதுகாக்கக் காத்திருக்கிறார்கள். அவர்களின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் உலகத் துன்பங்களிலிருந்து கண்டிப்பாக மீளலாம்.

இப்போது புரிந்து கொண்டாயா மகனே!"

அனுபவத்தினால் ஏற்பட்ட அறிவினால் ஆண்டவனின் கருணையைப் புரிந்து கொண்ட சீடன் கண்ணீருடன் குருவின் பாதங்களைப் பணிந்தான்.

இறைவனின் மீது உண்மையான பக்தி செலுத்தி நம்பிக்கையுடன் அவனை நாமும் பணிந்து நற்கதி அடைய முயல்வோம்.

கடவுளை நம்பினோர் கைவிடப் படார் என்பதையும் தெய்வம் நமக்குத் துணை பாப்பா என்று சொன்னதையும் 

நாம் மறக்கலாகாது.





















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

ஞாயிறு, 6 மார்ச், 2011

61st story - மானம் காத்த மாவீரன்

                                                                        மானம் காத்த மாவீரன்.

தமிழக வரலாற்றில் தனிச் சிறப்புப் பெற்றவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை. மானம் காத்த மாவீரன் என்று வரலாறு இவனைப் போற்றுகிறது. இம்மன்னன் தொண்டி என்ற ஊரைத்  தலைநகராகக் கொண்டு ஆண்ட சேர மன்னரின் மரபிலே வந்தவன்.ஒருமுறை சோழ மன்னன் கோ செங்கனானுக்கும் இரும்பொறைக்கும் போர் நடந்தது. திருப்போர்ப்புறம் என்ற இடத்தில் நடந்த அந்தப் போரில் இரும்பொறை தோல்வியடைந்தான்.

தோல்வியடைந்த கணைக்கால் இரும்பொறையை குணவாயில் கோட்டம் என்னும் இடத்தில் சோழன் சிறை வைத்தான். நாட்கள் கடந்தன. தோல்வியால் மனம் வருந்தி அவமானத்தால் மிகவும் நொந்து போயிருந்தான் இரும்பொறை.

இரும்பொறையின் உயிர்நண்பர் பொய்கையார் என்ற புலவர். தன் நண்பனான இரும்பொறையின் விடுதலையை வேண்டி சோழனைக் காணச் சென்றார். அவனது அவையில் நின்று செங்கனானைப் பாட்டுடைத் தலைவனாக்கி களவழி நாற்பது என்ற நூலை இயற்றினார். மனம் மகிழ்ந்த சோழன் கோச் செங்கணான் பொய்கையாருக்குப் பரிசில் தர விழைந்தான்.

ஆனால் தான் விரும்பும் பரிசிலையே தரவேண்டுமெனக் கேட்டார் புலவர். அதற்கு இசைந்த சோழன் அவரது விருப்பத்தைக் கேட்டான். சேர மன்னனும் தன் உயிர்நண்பனுமான இரும்பொறையை விடுவிக்கக்  கேட்டார் பொய்கையார். அவரது நட்பின் ஆழத்தைப் புரிந்து கொண்ட சோழன் அவரது விருப்பப் படியே சேரனை விடுவிக்க சம்மதித்தான்.

மனமகிழ்ச்சியுடன் மன்னன் பின்தொடர சிறைச் சாலை நோக்கி வ்ந்தார் பொய்கையார். ஆனால் அந்தோ அங்கே உயிரற்றவனாகக் கிடந்தான் சேரமான் கணைக்கால் இரும்பொறை.
துயருற்றவராகப புலவர் அவனருகே சென்று பார்த்தார். அருகே ஒரு கலயம் உருண்டு கிடந்தது.உள்ளே இருந்த நீர் சிந்திக் கிடந்தது.

சேரமான்கணைக்கால் இரும்பொறை  தமிழ்ப் புலமை மிக்கவன். எனவே தன் அப்போதைய நிலையை ஒரு பாடலாக எழுதி வைத்துவிட்டு தன் இன்னுயிரை விட்டு விட்டான்.
தன் நண்பன் எழுதிய அப்பாடலை எடுத்துப் படித்தபோதுதான்  மானம் காத்துக் கொள்ள உயிரை விட்டு விட்டான் என்பது புரிந்தது சோழனுக்கும் புலவருக்கும்.

                                     " குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
                                     ஆளன்று என்று வாளின் தப்பார்
                                     தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய  
                                     கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் 
                                     மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத 
                                     தாம் இரந்து உண்ணும் அளவை 
                                     ஈன்மரோ இவ்வுலகத் தானே?" 
இப்பாடலைப் பார்த்துக் கண்ணீர் வடித்தார் புலவர்.
என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொண்டார் .நீர்வேட்கையால் நீர் வேண்டுமென்று கேட்ட மன்னன் அந்நீரைக் காவலர் காலம் தாழ்த்திக் கொடுத்ததால் அதனை உண்ண மனமின்றி அவமானத்தால் குன்றி அந்நீரைக் கொட்டிவிட்டு நீர்பருகாது உயிர் விட்டுள்ளான்.

அதற்குமுன் தன் உள்ளுணர்வுகளை ஒரு பாடலாக வடித்துவிட்டுப் போய்விட்டான். மன்னர்தம் மானம் காக்கும் திறம் இப்பாடலிலே கூறப்பட்டுள்ளது.

மன்னர் மரபில் ஒரு குழந்தை இறந்து பிறந்தாலும் ஒரு தசைப் பிண்டம் பிறந்தாலும் அவற்றையும் ஒரு ஆளாகக் கொண்டு வாளால் வெட்டிப் பின்னரே அடக்கம் செய்வர்.போரில் வாளால் வெட்டுப் பட்டு மடியாது இப்படி நாய் போல சங்கிலியால் கட்டப்பட்டு சிறையிலே இடப்பட்டு அந்தப் பகைவரின் கையால் தரப்படும் நீரை உண்டு வாழும் இந்த இழிநிலையை அடைந்தவனை இவ்வுலகத்தார் பெற்றேடுப்பாரோ?

இப்பாடலைக் கேட்ட செங்கனானும் மனம் வருந்தினான். இத்தகு மானம் காத்த மாவீரனது வரலாற்றைப்  புறநானூறு என்ற சங்க நூல் நமக்கு எடுத்து இயம்புகின்றது.

போர்க்களத்தில் வீர மரணம் அடைவதையே வீரர்கள் விரும்பினர் என்பதும் அப்போதுதான் அவர்கள் வீர சுவர்க்கம் அடைவர் என்பதும் அனைவரின் நம்பிக்கையாகவும் விருப்பமாகவும் இருந்தது. அந்தநிலையை எய்தாத மன்னன் நீர்வேட்கை மிகுந்த காலத்துப் பகைவரின் கையால் நீர் பருக மனமின்றி மானத்தோடு உயிர் விட்ட வரலாறு நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது அல்லவா?.
அத்துடன் அக்காலமக்களின் வீரமும் நமக்குத் தெரிகிறதல்லவா?














Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

புதன், 16 பிப்ரவரி, 2011

60th story நான்கு கோடி.

நான்கு கோடி.

தமிழகத்தை ஆண்டுவந்த அரசர்களில் மூவேந்தரான சேர சோழ பாண்டிய மன்னர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அதிலும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் மிகச் சிறப்பானவர்கள். பாண்டியமன்னர்களுக்கு அடிக்கடி சில சந்தேகங்கள் ஏற்படுவதுண்டு.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே  மணமுண்டா இல்லையா என்று ஒரு மன்னனுக்கு சந்தேகம் ஏற்படவில்லையா அதுபோல.
ஏதேனும் ஒரு அதிசயமான செயலைச் செய்யச் சொல்வது அவர்களுக்கு வழக்கமான ஒன்று.

பாண்டிய மன்னன் ஒருநாள் சபையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிரே சங்கப் புலவர்கள் அமர்ந்திருந்தனர்.நானூறு புலவர்கள் அம்மன்னனின் சபையில் இருந்தனர். அவர்கள் தங்களின் புலமை பற்றி மிகவும் பெருமைப் பட்டுக் கொண்டிருந்தனர்.

இவர்களின் தற்பெருமையைக் கண்டு மன்னன் கோபம் கொண்டிருந்தான். இவர்களின் இந்த பண்பு தவறு என அவர்கள் அறிய வேண்டுமென 
முடிவு செய்தான்.அதனால் அன்று சபையில் ஒரு கேள்வி எழுப்பினான்.

ஒரே நாளில் எத்தனை பாடல்கள் பாட முடியும்? என்று கேட்டான். ஒவ்வொரு புலவரும் ஒவ்வொரு எண்ணைச் சொன்னார்கள். 
"மன்னனோ நீங்கள் நானூறு புலவர்கள் உள்ளீர்கள். எனவே நான்கு கோடி பாடல்களைப் பாடி வாருங்கள். நாளைக் காலைக்குள் நான்கு கோடிப் பாடல்களைப் பாடவேண்டும். இல்லையேல் உங்கள் தலை மண்ணில் உருளும்" என்று ஆணையிட்டான்.

நானூறு புலவர்களும் கைகளைப் பிசைந்தார்கள். மன்னனுக்கு என்ன ஆயிற்று. இப்படி புத்தி போகிறதே. நடக்க இயலாத ஒரு காரியத்தை செய்யச் 
சொல்கிறாரே. ஒரே இரவில் ஒவ்வொருவரும் நூறு பாடலைப் பாடினாலே அது நாற்பதாயிரம் பாடல்தானே ஆகும் நான்கு கோடிக்கு எங்கே போவது எனத் திகைத்தனர்.

மன்னனோ அவர்களை உடனே "அவையை விட்டுச் செல்லுங்கள். உங்கள் பணியை உடனே தொடங்குங்கள்" எனக் கூறி அனுப்பிவைத்தான்.
புலவர்கள் வழியறியாமல் குனிந்த தலையுடன் வெளியேறினர்.

ஊரைவிட்டு வெகு தூரத்தில் இருந்த காட்டில் ஒன்று திரண்டனர். என்ன செய்வது எப்படி மன்னனை திருப்திப் படுத்துவது என ஒவ்வொருவரும் ஆலோசனை செய்தனர்.கடைசியில் வயதில் மூத்தவர் எழுந்தார். நாம் அனைவரும் சேர  நாட்டுக்குச் சென்று விடுவோம். இங்கிருந்தால் நம் தலை தப்பாது. என்று ஆலோசனை சொல்ல அனைவரும் அதுவே சரியென முடிவு செய்தனர்.

நானூறு புலவர்களும் இரவோடு இரவாக பாண்டிய நாட்டை விட்டு சேர நாடு நோக்கி நடக்கலானார்கள்.

சேர மன்னனிடமிருந்து பரிசில் பெற்றுக்கொண்டு அதே வழியாக பாண்டிய நாடு நோக்கி வந்துகொண்டிருந்தார் ஔவையார். ஏதோ பெருங்கூட்டம் ஒன்று தன முன்னே வருவதைப் பார்த்துத் திகைத்து நின்றார். எதிரே வந்த புலவர் கூட்டமும் ஔவையாரைப்  பார்த்துத திகைத்தனர்.

"புலவர்களே! பாண்டிய நாட்டுக்கு என்ன நேர்ந்தது? ஏன் அனைவரும் வெளியேறிச் செல்கிறீர்கள்?" வினாக்களை அடுக்கினார் ஔவையார்.

தங்களுக்கு பாண்டிய மன்னனால் வந்த சோதனையைக் கூறினர் புலவர்கள். "புலவர்களே இதில் ஏதோ சூது உள்ளது வாருங்கள். மன்னனை 
அதே சூதினால் வெல்வோம்." என்று அவர்களுக்கு ஆறுதல் கூறிய ஔவையார் அனைவருடன் பாண்டியன் அரண்மனை நோக்கி நடந்தார். புலவர்களும் உடன் நடந்தனர்.

பாண்டியமன்னன் அவையில் அமர்ந்திருந்தான். மந்திரி பிரதானியர் சூழ்ந்திருந்தனர். பொது மக்களும் நிரம்பியிருந்தனர்.
அவைக்குள் ஔவையார் நானூறு புலவர்கள் புடைசூழ நுழைந்தார். மன்னன் தன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து வந்து அவரை வரவேற்றான்.ஔவையார் சற்றே கோபத்துடன் பேசினார்.

"பாண்டிய மன்னா!  இது என்ன அநீதி? ஒரே நாள் இரவுக்குள் நான்கு கோடி பாடல் பாடவேண்டுமென்றாயே. தமிழ் படித்த புலவர்களை அவமதிக்க வேண்டும் என எண்ணினாயா?"

"தாயே மன்னிக்க வேண்டும். தங்களால் ஆகாதது எதுவும் இல்லை என்கிற எண்ணம் இவர்களுக்கு வந்ததாலேயே இந்தக் கட்டளையை விதித்தேன்.  உயிருக்குப் பயந்து ஓடுவார்கள் என நான் எண்ணவில்லை.  அதனால் இவர்களுக்கு இட்ட தண்டனையை நிறைவேற்றுவதே என் எண்ணம்.

"பாண்டியமன்னனே, பொறு. நீ கேட்ட நான்கு கோடிப் பாடல்களை நான் பாடினால் இந்தப் புலவர்களை விடுவித்து மீண்டும் அவையில் சேர்ப்பாயல்லவா?"

"என்ன! நான்கு கோடிப் பாடல்களை தாங்கள் பாடுகிறீர்களா?" என்று திகைத்தான் மன்னன். அவையினர் அனைவரும் ஆவலுடன் பார்த்தனர்.

"ஆம்" என்றார்  ஔவையார். பாண்டியனும் சம்மதித்தான்.

ஔவையார் பாடிய பாட்டுதான் இது. 

"மதியாதார் தலைவாசல் மதித்தொருகால் சென்று மிதியாமை கோடி பெரும்.

உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை கோடி பெரும்.

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடியிருப்பது கோடி பெரும்.

கோடானு கோடி கொடுப்பினும் தன் நா கோடாமை கோடி பெரும்"
  
"மன்னா! இந்த உண்மைகளை நீ ஒப்புக் கொள்கிறாயல்லவா?  நீ கேட்டபடி நான்கு கோடிகளைப  பாடிவிட்டேன். இனி புலவர்களை பழைய படி அவையில் அமர இடம் கொடு.
தமிழ் கற்றவர்களை தண்டித்தால் அவர் கற்ற தமிழ் உன்னைத் தண்டிக்கும்."

மன்னன் ஒளவையின் சொல்லுக்குத் தலைவணங்கினான். புலவர்களும் தங்களின் கர்வம் நீங்கி ஒளவையை வணங்கினர்.








--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

சனி, 5 பிப்ரவரி, 2011

59th story. வீர மகளிர்--2

வீர மகளிர்--2
காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்ற புலவர் ஒருவர் தமிழகத்தில் வாழ்ந்து வ்ந்தார். செள்ளை என்பது இவரது இயற்பெயர். நற்செள்ளை என்பது திரிந்து நச்செள்ளை என்றாயிற்று என்பர் ஆராய்ச்சியாளர்.

"விருந்து வருமாயின் கரைந்து காட்டுக. வாராதாயின் நடந்து காட்டுக"என்று காக்கையைப் பார்த்துக் கூறும் பழக்கம் தமிழகத்தில் இருந்தது. இக்கருத்தை வைத்துப் பாடல் இசைத்தமையால் இப்புலவர் காக்கைபாடினியார் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.

இப்புலவர் சேரலாதன் என்ற மன்னனைப் பாடிப் பரிசில் பெற்றவர்.அவ்வையாரும்  அதியமானும் போல சேரலாதனுடன்  நட்புக் கொண்டு வாழ்ந்தவர். இவரது பாடல் மூலம் அக்கால மங்கையரின் வீரம் அறியக் கிடைக்கின்றது.

"நரம்பெழுந்துலறிய நிரம்பா மென்றோள்....." எனத் தொடங்கும் பாடலில் மறக்குல மங்கையொருத்தியின் வீரத்தினைப் பாடுகிறார்.

ஒருமுறை ஒரு போரில் வீரன் ஒருவன் பகைவனின் வாளால் வெட்டுண்டு இறந்தான். மிகுந்த வீரத்துடன் போர் புரிந்த அவ்வீரன் பல பகைவர்களைக் கொன்றான். இறுதியில் பகைவரின் வாளால் அவன் உடல்  துணிபட்டுச் சிதைந்து வேறு வேறாய்க் கிடந்தது.கையில் பிடித்த வாளுடன் கிடந்தான் அம்மாவீரன்.

போர்வீரர் போர் முடிந்து வீடு திரும்பினர். இறந்து பட்ட அவ்வீரனின் தாய் முதியவள்.மெலிந்த தோள்களை உடையவள். தன் மகன் வருகிறானா என எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.அவன் வாராமையால் வீரர்களை விசாரித்தாள்.

அவள் மகனின் நிலையை அறியாத சிலர் "உன் மகன் பகைவர்க்குப் புறமுதுகு காட்டி ஓடினான். போர்க்களத்தில் இறந்து விட்டான்." எனக் கூறினர்.
இதைக் கேட்ட முதியவள் பதறித் துடித்தாள்.

முதுமை எய்திய நிலையில் இருந்தாலும் அச்சொல்லைத் தாங்காது துடித்தாள்.தன் மறக்குடியின் பெருமைக்கு இழுக்கு நேர்ந்ததே என எண்ணினாள்.கோபத்தில் அவள் கண்கள் தீப்பிழம்பென ஒளிர்ந்தன.அவ்வீரர்களை நோக்கிக் கூறினாள்.

"எனது மகன் நீங்கள் கூறியது போலப் போரில் புறமுதுகிட்டு மாண்டிருப்பான் எனில் அவன் வாய் வைத்துப் பாலுண்ட என் மார்பை  அறுத்தெறிவேன்.
இது என் மறக்குடியின் மீது ஆணை."

இவ்வாறு வஞ்சினம் கூறிய அம்மூதாட்டி தன் கையில் வாளொன்றை ஏந்திக்கொண்டு போர்க்களத்திற்குச் சென்றாள்.அங்கே போர்வீரர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன.
தன் மகனின் உடலை அவளால் காண இயலவில்லை. ஒவ்வொரு உடலாகப் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள். முடிவில் தன் மகனின் உடலைக் கண்டாள்.

வேறு வேறாகக் கிடந்த தன் மகனின் உடலை ஒன்றாகச்  சேர்த்தாள்.ஒழுங்கான தன் மகனின் உடல் கண்டு பூரித்தாள். ஆம். அவள் மகன் ஒரு வீரன். தன் கையில் பிடித்த
வாளைக் கீழே போடாமல் விழுப்புண் பட்டு இறந்து கிடந்தான்.

"என் மகன் வீரன்.அவன் புறமுதுகு காட்டி ஓடவில்லை.மார்பிலும் முகத்திலும் புண் பட்டு வீழ்ந்துள்ளான்." என அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி கொண்டாள்.
அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியினும் பெரு மகிழ்வு கொண்டாள். அவள் மனத்துயர் நீங்கிற்று.தன் மகன் தான் பிறந்த குடிக்கு இழுக்கு சேர்க்கவில்லை பெருமைதான் சேர்த்துள்ளான். என மகிழ்ச்சி கொண்டாள்.

இதைப் பார்த்த நச்செள்ளையாருக்குப் பெரு வியப்பு ஏற்பட்டது. "என்னே இந்த மறக்குலப் பெண்ணின் வீர உணர்வு!" என எண்ணிய போழ்து அவரது உள்ளத்தில் தோன்றிய
பாடலே புறநானூற்றில் உள்ள இப்பாடல்.

"நரம்பெழுந  துலறிய  நிரம்பா மென்றோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறினான் என்று  பலர்கூற
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே."

இப்பாடல் மூலம் தமிழ் மகளிரின் வீரம்  கண்டு நாம் பெருமிதம் அடையலாம்.  இதுபோன்ற பல செய்திகளை நமது சங்க இலக்கியங்கள் நமக்கு எடுத்து இயம்புகின்றன.
இவற்றின் மூலம் நமது பழநதமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி நாம் அறியலாம்.









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

வியாழன், 27 ஜனவரி, 2011

58th story. வீர மகளிர்--1

வீர மகளிர்--1

ஒக்கூர் என்னும் ஊரில் மாசாத்தியார் என்பவர் வாழ்ந்து வ்ந்தார். ஒக்கூரில் பிறந்தமையால் ஒக்கூர் மாசாத்தியார்  என அழைக்கப் பட்டார். சங்க காலத்து நல்லிசை மெல்லியலாருள் மாசாத்தியாரும் ஒருவர். பறந்து சென்று இரை தேடும் பறவைகள் போல நாடு விட்டு நாடு சென்று வள்ளல்களை நாடிப் பரிசில் பெற்று வாழும் இயல்புடையோர் புலவர் பெருமக்கள். தமக்கெனத் தமியர் உண்ணாது பிறர்க்கு அளித்து உண்டு பொருள் தேவைப் படும்போது மன்னர்களை நாடிச் செல்வது இவர்களின் பண்பு.

அதுபோன்ற ஒரு சமயத்தில் மாசாத்தியார் பொருள் வேண்டிப் புறப்பட்டார்.  வெகு தொலைவு நடந்து சென்று ஒரு நாட்டின் பெரு நகரம் ஒன்றில் நுழைந்தார். அது சமயம் அந்த நாடு அண்டை நாட்டுடன் போரில் ஈடுபட்டிருந்தது.  ஊரின் நிலையைப் பார்த்தபடியே ஒரு மறக்குடி மங்கையின் வீட்டினுள் நுழைந்தார் புலவர் பெருமாட்டி.

அங்கு இவர் கண்ட காட்சி இவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.  பெருமிதம் அடையச் செய்தது.  நம் நாட்டு மறக்குடி மகளிரின் வீரம் எத்தகையது என எண்ணி எண்ணி மகிழத் தக்கதாக இருந்தது.

அவர் கண்ட அக்காட்சியை வியந்து ஒரு பாடலாகப் பாடினார் புலவர் பெருமாட்டி.  இத்தகு பாடல்களே நமக்கு இலக்கியச் சான்றாக விளங்கி பண்டைய வரலாற்று நிகழ்ச்சிகளை நமக்கு அறிவிக்கின்றன.  அம்மங்கையின் வீரத்தைக் கூறும் இப் பாடல் புறநானூறு என்னும் நூலில் உள்ளது.

அப்பாடல் இதோ.
                "கெடுக சிந்தை கடிதிவள் துணிவே.
                  மூதின் மகளிர் ஆதல் தகுமே.
                 மேனாளுற்ற செருவிற்கிவள் தன்னை
                  யானை எரிந்து களத்தொழிந்தனனே
                  நெருநல் லுற்ற செருவிற் கிவள்கொழுனன்
                  பெருநிரை விலக்கி ஆண்டுப் பட்டனனே.
                  இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
                  வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப்
                  பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
                  ஒருமகன் அல்லது  இல்லோள்
                  செருமுக  நோக்கிச்  செல்கென  விடுமே."                        

இப்பாடல் மூலம் அந்த வீர மங்கையின் செயல் நமக்குக் கண்முன் காட்சியாகக் காணக் கிடைக்கின்றது. ஒரு  மறக்குடி மங்கையின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சியாகக கூறப்படுகிறது.

என்னே இவள் துணிவு.இவள் மறக்குடியில் பிறந்தவள் எனக் கூறல் தக்கதே. முன்னாளில் நிகழ்ந்த போரில் இவளது தந்தை யானையைக் கொன்று தானும் இறந்தான். இவள் கணவனோ ஆநிரைகளைப் பகைவர் கொள்ளாதவாறு  விலக்கி போர்க்களத்தே மாண்டான். இன்றும் போர்ப்பறை ஒலி கேட்டது.

இவளது முகத்தில் மறத்தீ கிளர்ந்து  எழுந்தது.  தனக்கு ஒரேமகன் இவன்எனவுமஎண்ணவில்லைஅம்மாதரசி.வினை முடித்தற்கு தன் மகனை அனுப்புவது என முடிவு செய்தாள்.  தன் மகனை அருகே அழைத்து
அவன் தலையில் எண்ணெய் பூசி இழுத்து முடித்தாள். அரையில் தூய வெண்ணிற ஆடையை எடுத்து உடுத்தினாள்.
அம்மகன் கையில் கூர்மையான வேலோன்றைத் தந்தாள்.

அவன் முகத்தை நோக்கினாள் "மகனே! உன் தந்தையும் தனையரும் போர்க்களத்தே பொருது மாண்டனர். நம் மறக்குலப் பெருமையை நிறுவினர்.  நீயும் அவர்போன்று போருக்குச் செல்க " என அனுப்பி வைத்தாள்.

இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மாசாத்தியார் மனத்துள் வியந்து பாராட்டினார். அக்காட்சியை  பாடலாக வடித்து அழியாப் புகழை அம்மங்கை அடையும்படி செய்தார்.  நம் நாட்டு மறக்குடி மகளிரின் வீரம் நாம் அறிந்து போற்றத் தக்கது அன்றோ!.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com