வெள்ளி, 11 நவம்பர், 2011

76 -பாட்டி சொன்ன கதை.பகுதி -- 1

பாட்டி சொன்ன கதை. பகுதி -- 1
இந்த முறை சற்று வித்யாசமாக இருக்கட்டும் என்று எனக்கு என் பாட்டி சொன்ன கதையை உங்களுக்குச் சொல்கிறேன் இது ரசிப்பதற்கு மட்டும் என்று நினைக்காமல் இதிலும் ஏதேனும் நல்ல விஷயம் இருக்கும் என்று தோன்றினால் அதைப் புரிந்து  கொள்ளவும்.
          இரத்தினபுரி என்ற நாட்டை ரத்தினவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு ரத்னாங்கி என்ற பெயருள்ள மகள் ஒருத்தி இருந்தாள்.அவள் பிறந்த நாள் முதல் அழுது கொண்டே இருந்தாள். அவள் பெரியவளான பின்பும் அழுகையை நிறுத்தவில்லை.
அவள் அழும் காரணத்தை மன்னன் எவ்வளவு கேட்டும் கூறாமல் அழுதுகொண்டே இருந்தாள். யாராலும் அவள் அழுகையை நிறுத்தவே இயலவில்லை.அதனால் அவளைத் தனியே ஒரு அரண்மனையில் விட்டு சில சேடிப் பெண்களையும் துணைக்கு வைத்து விட்டான் மன்னன் ரத்தினவர்மன்.தனக்குப் பின் நாடாள வேண்டிய  தன் மகள் இவ்வாறு எப்போதும் அழுது கொண்டிருக்கிறாளே என்று மன்னன் மிகவும் கவலைப் பட்டான்.தன் மந்திரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தான்.
            அவனது மந்திரிகளுள் ஒருவர் ஒரு ஆலோசனை சொன்னார்.அதன்படி தன் மகளின் அழுகையை யார் நிறுத்துகிறார்களோ அவருக்கே அவளை திருமணம் முடித்து தன் நாட்டையும் தருவதாக பறை அறைவித்தான்.
இச்செய்தி அக்கம்பக்கத்து நாடுகளுக்கும் எட்டவே பல நாட்டு அரசகுமாரர்களும் ரத்னாங்கியின் அழுகையை நிறுத்த எண்ணம் கொண்டு இரத்தினபுரிக்கு வந்தனர்.ஆனால் எவ்வளவு முயற்சித்தும் ரத்னாங்கியின் அழுகையை யாராலும் நிறுத்த இயலவில்லை.
           ரத்தினபுரிக்குப் பக்கத்து நாடான சத்தியபுரியின் மன்னன் சத்தியசீலன். அவனுக்கு இரண்டு பிள்ளைகள்.மூத்தமகன் சஞ்சயன்.இரண்டாவது மகன் துர்ஜயன்.இவர்கள் இருவரும் இரத்தினபுரியின் இளவரசியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளது அழுகையைத் தாங்கள் நிறுத்துவதாகக் கூறிவிட்டு சத்தியசீலனிடம் ஆசிபெற்றுப் புறப்பட்டனர்.
இருவரும் காட்டுவழியேகுதிரையில்பயணம் செய்து  களைத்துப் போய் ஒரு மரத்தடியில் இளைப்பாற அமர்ந்தனர்.அப்போது அருகே யாரோ முனகும் சத்தம் கேட்கவே சஞ்சயன் திரும்பிப் பார்த்தான். ஒரு வயதான அம்மா அங்கே படுத்திருந்தாள். அவளிடம் சென்று விசாரிக்க சஞ்சயன் எழுந்தபோது துர்ஜயன் அவனைத் தடுத்தான்.ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் சஞ்சயன் அந்த அம்மாளிடம் என்னவாயிற்று என்று கேட்டான்.
"அப்பா, நான் என் குடிசைக்குப் போகவேண்டும். நடக்கமுடியவில்லை.தண்ணீர் தாகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து தருகிறாயா?"
அப்போது அங்கே வந்த துர்ஜயன்,"வேறு வேலையில்லை? சஞ்சயா, நமக்கு நேரமாகிறது போகலாம் வா," என்று அவனை அழைத்தான்.அவனைத் தடுத்து நிறுத்திய சஞ்சயன் தன்னிடம்  இருந்த குடுவையிலிருந்து கொஞ்சம் நீரை அந்த அம்மைக்குக் கொடுத்தான். தாகம் தீர்ந்த அந்த அம்மாவும் அவனை வாழ்த்தினாள்.அத்துடன் தன் இடுப்பில்  இருந்த ஒரு வாளை எடுத்துக் கொடுத்தாள். "இந்த வாள் உன் கையில் இருக்கும் வரை நீ எல்லோரையும் ஜெயித்துக் கொண்டே இருப்பாய்."என்று ஆசி கூறி அனுப்பினாள்.
அவளை வணங்கி அந்த வாளைப் பெற்றுக் கொண்ட சஞ்சயன் தம்பியுடன்  இரத்தினபுரி நோக்கிப் புறப்பட்டான்.

              வெகு தொலைவு வந்தும் காட்டைவிட்டு வெளியே வர வழி தெரியவில்லை. வழி தவறி விட்டோம் என சஞ்சயன் அறிந்து கொண்டான்.தம்பியிடம் இது பற்றி சொன்னபோது அவன் இங்கேயே படுத்துக் கொள்வோம் என்று படுத்து விட்டான்.நிலவு வெளிச்சத்தில் சஞ்சயன் தண்ணீர் தேடிப் புறப்பட்டான்.அருகே ஒரு சுனை தெரிந்தது. அதை நெருங்கிய போது அருகே ஒரு முதியவர் முள் செடி மீது படுத்திருந்தார்.
அவர்" தம்பி தயவு செய்து என்னைத் தூக்கி அந்தப் பக்கமாகப் படுக்கவை. உனக்குப் புண்ணியமாய்ப் போகும்" என்றபோது சஞ்சயன் ஐயோ பாவம் என்றபடி அவரைத்தூக்க அவர் திடீரென்று மறைந்தார். அங்கே ஒரு கந்தர்வன் தோன்றினார்.
"சஞ்சயா, சாபத்தால் பல ஆண்டுகளாக இந்தக் காட்டில் தவித்தபடி கிடந்தேன்.ஒரு பௌர்ணமி நாளில் நல்ல மனம் படைத்த அரசகுமாரன் உன்னைதொட்டால்  நீ உன் சாபம் நீங்கப் பெறுவாய் என்று முனிவர் கூறினார். இன்று பௌர்ணமி. யாரேனும் வரமாட்டார்களா எனக் காத்துக் கிடந்தேன்.நீ வந்தாய். உன்னால் என் சாபம் நீங்கப் பெற்றேன்.
இதோ இந்தக் கண்ணாடியைப் பெற்றுக்கொள். நீ பார்க்கவிரும்பும் செய்தியை இது உனக்குக் காட்டும்."என்று கூறி ஒரு சிறு கண்ணாடியைக் கொடுத்தார்.
நன்றி சொல்லிய சஞ்சயன் வணங்கி அதைப் பெற்றுக் கொண்டான். கந்தர்வன் மறைந்தபின் சஞ்சயன் நீரை குடுவையில் நிரப்பிக் கொண்டு தம்பி இருக்கும் இடத்துக்கு வந்து படுத்துக் கொண்டான்.
மறுநாள் சூரியன் உதிக்கும் முன் இருவரும் எழுந்து புறப்பட்டனர்.நேரம்  ஆக ஆக இருவருக்கும் நல்ல பசி எடுத்தது. எங்காவது மனிதரோ வீடோ தென்படாதா எனத் தேடினர்.வெகு தொலைவில் ஏதோ புகை மூட்டம் தெரியவே அந்த இடத்தை நோக்கி இருவரும் வேகமாகத் தங்கள் குதிரையைச் செலுத்தினர்.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

புதன், 26 அக்டோபர், 2011

நல்வாழ்த்து

பாட்டி சொல்லும் கதைகளைப் படித்து ரசிப்பவர்களுக்கும் படித்ததை விமர்சிக்கிறவர்களுக்கும் மற்றுமுள்ள இனிய சகோதர சகோதரியருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அன்புடன், 
ருக்மணி சேஷசாயி


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

சனி, 15 அக்டோபர், 2011

75- கணக்கு நேரான கதை


ஒரு முறை தெனாலிராமன் அரசவைக்குள் செல்ல முயன்றான்.அப்போது காவலர் அவனை வழி மறித்தனர்.
"ஏன் என்னை வழி மறிக்கிறீர்கள்?" என்று கேட்டபோது," எங்களைக் கவனித்துவிட்டுச் செல்" என்றனர்  காவலர்.அப்போது ராமன் புரிந்து கொண்டான்.அவர்கள் கையூட்டுக் கேட்கின்றனர் என்பதை.அவர்களுக்கு அவர்கள் வழியிலேயே சென்று அறிவுறுத்தவேண்டும் என முடிவு செய்து கொண்டான்.
"ஐயா, நான் ஒரு புலவன் அரசரிடம் பாடிக் காட்டிப் பரிசில் பெற்றுப் போகவே வந்தேன்.உங்கள் விருப்பப் படியே அரசர் கொடுக்கும் பரிசிலை நான் அப்படியே உங்களிடம் தந்து விடுகிறேன். நீங்கள் பார்த்துக் கொடுப்பதை நான்பெற்றுச் செல்கிறேன்." என குழைந்து பேசினான்.
காவலரும் அவனை எச்சரித்து உள்ளே அனுப்பினர். 
அவைக்குள் நுழைந்த ராமன் மக்களுடன் கலந்து அமர்ந்து கொண்டான்.அந்த அவைக்கு பல வழக்குகள் வந்தன. அவற்றுக்கெல்லாம் அப்பாஜி யின் ஆலோசனையின் படி மன்னர் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்.அப்போது மூன்று சகோதரர்கள் வந்து ராயரை வணங்கி நின்றனர்.
அவர்களின் வழக்கு என்ன என்று மன்னர் கேட்டார். வந்த மூவரில் மூத்தவன் கூறினான்.
"மகாராஜா, எங்கள் தந்தையார் ஒரு யானைப் பாகன். அவரிடம் இருந்த சொத்துக்கள் மொத்தம் பதினேழு யானைகள்தான்.அவற்றை எங்களுக்குப் பாகம் பிரித்து எழுதி வைத்துள்ளார்."
"அப்புறமென்ன? அவரது சொல்படி பாகத்தைப் பிரித்துக் கொள்ள வேண்டியதுதானே? அதிலென்ன சிக்கல்?"
"அதில்தான் சிக்கல் மகாராஜா,"
அமைதியாக நின்றிருந்த அப்பாஜி கேட்டார்."உங்கள் வழக்கை விவரமாகக் கூறுங்கள்.அப்போதுதான் மன்னர் சரியான தீர்ப்பு வழங்க முடியும்."
இப்போது இரண்டாவது மகன் கூறினான்."பிரபு, எங்கள் தந்தையார் மூத்தவனுக்கு சரிபாதி யானையைத் தரச் சொல்லியுள்ளார்.பதினேழில் பாதி எட்டரை அல்லவா?எப்படிக் கொடுப்பது? முதலாவதுதான் சிக்கல் என்றால் அடுத்தது அதற்குமேல் இருக்கிறது."
"அதையும் சொல்லிவிடப்பா."என்றார் அப்பாஜி.
இரண்டாவது மகனான எனக்கு மீதியில் மூன்றில் ஒரு பங்கு.எட்டரையில் மூன்றில் ஒரு பங்கு எப்படிக் கணக்கிடுவது?"
"மூன்றாமவனுக்கு?"என்று  கேட்ட ராயரிடம் "மீதியில் மூன்றில் ஒரு பங்கு என்று எழுதிவிட்டு இறந்துவிட்டார். இந்த உயிலின் படி தாங்கள்தான் எங்களின் பாகத்தைச் சரியாகப் பிரித்துத் தரவேண்டும்."என்று வேண்டுகோள் வைத்தான் மூன்றாவது மகன்.
அப்பாஜியும் கிருஷ்ண தேவராயரும் சிந்தனை வசப்பட்டனர்.எவ்வளவு யோசித்தும் கணக்கைத் தீர்க்கும் வழி தோன்றவில்லை.ஆனால் இதில் ஏதோ ரகசியம் இருக்கும் என்று மட்டும் மன்னருக்குத் தெரிந்தது. ஆனால் என்னவென்று புரியவில்லை.
வெகு நேரம் சபை அமைதியாக இருந்தது.மக்களின் கூட்டத்திலிருந்து தெனாலிராமன் எழுந்து நின்றான்.
"மாமன்னர் என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் சம்மதித்தால் இந்த வழக்கை நான் தீர்த்து வைக்கிறேன்" என்றான் வணங்கியபடியே.
ராமகிருஷ்ணனைக் கண்டு மன்னர் புன்னகைத்தார். "வா ராமகிருஷ்ணா, உன் தீர்ப்பை நீ சொல்."
ராமன் உடனே ஓடிச் சென்று சபை நடுவே நின்றான்.
"மகாராஜா, இப்போது பதினேழு யானை பொம்மைகளைக் கொண்டு வரச் சொல்லுங்கள்." என்றான்.அதன்படியே பொம்மைகள் ராமனுக்கு முன்னால் வைக்கப் பட்டன.
"எல்லோரும் பாருங்கள்.இப்போது நானும் ஒரு யானையில் வருகிறேன்.எங்கே இன்னொரு யானைபொம்மை கொண்டு வாருங்கள்."
இன்னொரு யானை பொம்மை கொண்டு வரப்பட்டது.
ராயர் கேள்விக்குறியுடன் ராமனைப் பார்த்தார்.ராமன் "மகாராஜா மன்னிக்க வேண்டும்.நீதி சொல்லும் நான் யானையின் மேல் வரக்கூடாதா?"என்று சொல்லவே சிரித்தபடி அனுமதியளித்தார் ராயர்.
இப்போது ராமன் கணக்கை சீராக்கத் தொடங்கினான்."ஐயா,இப்போது மொத்தம் பதினெட்டு யானைகள் உள்ளன அல்லவா? முதல் மகனான உங்களுக்கு எவ்வளவு யானைகள்?"
"இவற்றில் சரி பாதி."
"அப்படியானால் ஒன்பது.சரிதானே?"
"சரிதான் ஐயா."தன்னிடம் கொடுக்கப்பட்ட ஒன்பது யானைகளுடன் அவன் விலகி நின்றான்.."அடுத்த மகன் வாருங்கள்" அடுத்தவன் வந்து நின்றான்.
"உங்களுக்கு எவ்வளவு யானைகள்?"
"மீதியில் மூன்றில் இரண்டு  பங்கு."
"மீதி எவ்வளவு?" 
"ஐயா,மீதி ஒன்பது அதில் மூன்றில் இரண்டு பங்கு ஆறு."
"இதோ உமக்கு ஆறு யானைகள்."கடைசியாக மீதி மூன்று யானை பொம்மைகள் இருந்தன.மூன்றாமவனை அழைத்த ராமன் "உமக்கு எவ்வளவு யானைகள் ?" என்று கேட்டான்.
அவனும் "எனக்கு மீதியில் மூன்றில் இரண்டு பங்கு" எனக கூற அவனுக்கு மீதியிருந்த மூன்று யானைகளில் இரண்டு யானையைக் கொடுத்தான் ராமன். 
"இப்போது மீதி இருப்பது ஒரு யானை. நான் ஏறி வந்த அந்த  யானையின் மீதே நான் ஏறிச் செல்லலாமா மகாராஜா"?என்று கேட்டுவிட்டு பணிவுடன் நின்றான் ராமன்.
உயிலின்படி முதல் மகனுக்கு ஒன்பது யானைகளும் இரண்டாவது மகனுக்கு ஆறு யானைகளும் மூன்றாவது மகனுக்கு  இரண்டு யானைகளும் உரியன   என தீர்ப்புக்கூறினார் மன்னர்.சிறப்பாக பாகப்பிரிவினை செய்த தெனாலிராமனைப் பாராட்டிய ராயர் அவனுக்கு என்ன பரிசு வேண்டும் எனக் கேட்டார்.
தெனாலி ராமனுக்கு உடனே வாயில்காப்போனின் நினைவு வந்தது.
 "மகாராஜா, நான் கேட்கும் பரிசைத் தாங்கள் தட்டாமல் தரவேண்டும்.மறுக்கக்கூடாது."
"மறுக்கமாட்டேன். கேள் ராமகிருஷ்ணா"
"எனக்குப் பரிசாக நூறு கசையடிகள் வேண்டும்.அதையும் இந்தச் சபையிலேயே தரவேண்டும்."
அனைவரும் திகைத்தனர்.ராமனுக்கு என்ன பைத்தியமா?
ஆனால் ராமன் மீண்டும் அதையே கூறவே வேறு வழியில்லாமல் மன்னரும் காவலனிடம் ராமனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கும்படி ஆணையிட்டார்.அவனும் கசையைத் தடவியபடி வந்து நின்றான்.அப்போது ராமன் "மகாராஜா, எனக்குக் கிடைக்கும் பரிசில் பாதியை ஒருவருக்கும் மீதியை மற்றொருவருக்கும் தருவதாக வாக்களித்துள்ளேன் அவர்களுக்கு இந்தப் பரிசுகளைத் தரவேண்டும்."என்றான்.
 ராயர் புரிந்து கொண்டார். அவர்  கண்கள் சிவந்தன.உடனே அவர்களை அழைத்து வருமாறு கட்டளையிட்டார்.இரண்டு வாயில் காப்போரும் நடுங்கியபடியே வந்து நின்றனர்.
மன்னர் "என் நாட்டிலே லஞ்சமா கேட்டாய்?அரண்மனையில் பணிபுரியும் நீ லஞ்சம் கேட்டதற்காக உன் தலையைக் கொய்தால் என்ன?"
எனக் கேட்டு அவர்களுக்கு ஐம்பது கசையடிகள் கொடுத்துச சிறையிலும் அடைக்கச் சொல்லி ஆணை பிறப்பித்தார்.
பின்னர் ராமகிருஷ்ணனுக்குப்  பெரும்பொருள் பரிசாகக் கொடுத்துப் பாராட்டினார்.
 சரியானபடி தீர்ப்புக் கூறியதுமல்லாமல் லஞ்சம் கேட்டவனுக்கும் அறிவு வரும்படி செய்த தெனாலிராமனைப் பாராட்டியபடி மக்கள்  கலைந்து சென்றனர்.








ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

திங்கள், 3 அக்டோபர், 2011

74- பேராசை பெருநஷ்டம்

பெருமாள் என்பவரும் நாகப்பன் என்பவரும் மிகவும் நண்பர்களாக இருந்தனர். எப்போதும் இருவரும் ஒன்றாகவே எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். ஒன்றாகவே அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள்.அவ்வூரில் அனைவருக்கும் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது தெரியும்.
இருவருக்கும் திருமணம் முடிந்து பலகாலம் ஆகியும் குழந்தைச் செல்வம் இல்லை.நாகப்பன் எல்லாத தெய்வங்களையும்  வேண்டிக்கொண்டார். சில ஆண்டுகளில் நாகப்பனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
மகன் பிறந்த மகிழ்ச்சியைத தன் சக்திக்கும் மீறி ஒரு விழாவாகக் கொண்டாடினார் நாகப்பன்.பின்னர் தன் மகனுக்காக மிகவும் பாடுபட்டு உழைத்து பணம் சேர்த்தார் நாகப்பன்.அவரது கடும் உழைப்போடு சரியாக சாப்பிடாமலும் தூங்காமலும் எப்போதும் செல்வம் சேர்ப்பதிலேயே கவனமாக இருந்ததால் விரைவிலேயே நோய்வாய்ப்பட்டார் நாகப்பன்.
நாகப்பனின் மகன் பிறந்த சில ஆண்டுகளிலேயே அவரது மனைவியும் இறந்து விட்டதால் தன் மகனை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டி வந்தது. இப்படி எல்லாப் பொறுப்புகளும் சேர்ந்ததால் நாகப்பன் விரைவிலேயே கடும் நோய்க்கு ஆளானார்.தன் மகனுக்கு  இப்போதுதான் பத்து வயதாகிறது. தனக்குப் பின் தன் மகனைப பார்த்துக் கொள்ள சரியான ஆள் தன் உயிர்நண்பன் பெருமாள்தான் என முடிவு செய்தார்.
நண்பனை அழைத்தார்.
"பெருமாள், நான் இனி வெகு நாட்கள் வாழ மாட்டேன். எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் நீதான் என் மகனைப பார்த்துக் கொள்ள வேண்டும்."
"என் உயிர் நண்பன் நீ. உன்னைப் பிரிந்து நான் எப்படி உயிர் வாழ்வேன்."
"அப்படிச் சொல்லாதே. நான் விட்டுச் செல்லும் கடமைகளை நிறைவேற்றுவதுதான் இந்த உன் உயிர் நண்பனுக்கு நீ செய்யும் கடமையும் கைம்மாறும் ஆகும். எனவே என் மகனை உன் மகனாகப் பார்த்துக் கொள்."எனக் கண்ணீருடன் கேட்டுக் கொண்டு பத்து வயதான தன் மகனின் கரங்களைப் பிடித்துத் தன் நண்பன் பெருமாளின் கரங்களில் வைத்தார் நாகப்பன்.
"மகனே, குமரா, இனி இவர்தான் உனக்கு தாயும் தந்தையும்.இவரது சொல் கேட்டு நடந்து பெரியவனாகி என்னைப் போல் நல்லவன் என்று பெயர் பெறவேண்டும்."
தந்தையின் சொல்லைக் கேட்ட குமரன் "அப்படியே செய்கிறேன் அப்பா."என்றான் அழுதுகொண்டே.
நாகப்பன் தன் நண்பனைப் பார்த்து "பெருமாள், என்னுடைய இத்தனை நாள் சேமிப்பாக பத்து லட்சம் ரூபாய்களை உன்னிடம் தருகிறேன் என் மகனுக்குத் தக்கவயது வந்ததும் நீவிரும்பும் பணத்தை அவனுக்குக் கொடுத்து அவனையும் வாழ வைக்கவேண்டுமென்று உன்னை வேண்டிக் கொள்கிறேன்."என்று தன் கரங்களைக் கூப்பிக் கேட்டுக் கொண்டார் நாகப்பன்.
"இது என் கடமை நாகப்பா.நீ கவலையே படாதே.உன் மகன் நல்லபடியாக வாழ்வான்."என்ற பெருமாளின் சொல்லைக் கேட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் நாகப்பன்.
சிலநாட்களில் நாகப்பன் இறந்துவிட குமாரனைத் தன்னுடன் அழைத்துச் சென்று வளர்த்து வ்ந்தார் பெருமாள். ஆண்டுகள் கடந்தன.
இப்போது குமரனுக்கு இருபது வயதாகிவிட்டது. அவனுக்குத் தன் தந்தையார் கூறியது நினைவுக்கு வந்தது. தந்தை விட்டுச் சென்ற பணியத் தான் தொடர்ந்து செய்ய விரும்பினான்.அத்துடன் இனியும் பெருமாளுக்குச் சுமையாக இருக்க விரும்பவில்லை.எனவே தனியே வாழ்வது என்று முடிவு செய்தான். 
ஒருநாள் பெருமாளிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.பெருமாளும் மகிழ்ச்சியுடன் "அதற்கென்ன, அப்படியே செய்.உன் விருப்பமே என் விருப்பம்."என்று மகிழ்ச்சியுடன் விடை கொடுத்தார்.அத்துடன் நாகப்பன் தன்னிடம் கொடுத்த பணத்தில் ஒரு லட்சம் ரூபாயையும் அவனிடம் கொடுத்தார்.அதைக் கண்டு திகைத்தான் குமரன்.
"ஐயா, என் தந்தையார் தங்களிடம் பத்துலட்சம் கொடுத்துள்ளார். தாங்கள் ஒரு லட்சம் திருப்பித் தருகிறீர்களே?இத்தனை ஆண்டுகள் நான் உழைத்ததற்கும் தாங்கள் எந்தப் பணமும் தரவில்லை. இன்றோ என் பணத்தையே தராமல் இப்படிச் செய்கிறீர்களே! தங்கள் நண்பருக்கு நீங்கள் தரும் மரியாதை இதுதானா?"
பெருமாள் கோபத்துடன் பேசினார்."இதோ பார் உன் தந்தையார் என்னிடம் கூறும்போது நான் விரும்பும் பணத்தை உனக்குத் தரச் சொன்னாரல்லவா?அதன்படிதான் செய்துள்ளேன்.போய்வா.இதை வைத்துப் பிழைத்துக் கொள்."
வாலிபனான குமரன் மனம் அழுதது.பெருமாளின் பேராசையைக் கண்டு மனம் வருந்தினான்.ஆனால் தன் தந்தை தனக்காகக் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தை விட்டுவிடவும் மனம் இல்லை.என்ன செய்வது என்று சிந்தித்தான்.
அந்த ஊரில் மரியாதை ராமன் என்று ஒரு திறமைசாலி அறிவாளி இருந்தார். அவர் பல வழக்குகளை நல்ல விதமாகத் தீர்த்துவைப்பதாகக்  கேள்விப்பட்டான்.அவரது துணையை நாடுவது என்று முடிவு செய்தான்.
நேராக மரியாதைராமன் இருந்த இல்லத்தை நோக்கிச் சென்றான்.அவரிடம் தன் வழக்கை எடுத்துச் சொன்னான்.மரியாதைராமன் வழக்கைக் கூர்ந்து கேட்டுக் கொண்டார்.மறுநாள் பெருமாளையும் தன் இல்லத்திற்கு வரச் சொன்னார்.இப்போது பெருமாளும் குமரனும் மரியாதைராமன் முன் நின்றனர்.
மரியாதைராமன் பெருமாளிடம் விசாரித்தார்.பெருமாள்"ஐயா, நாகப்பன் இறக்கும்போது என்னிடம் பத்து லட்சம் ரூபாய்கள் கொடுத்தது உண்மைதான்.குமரனைப் பாதுகாக்கும் பொறுப்பையும் என்னிடம் கொடுத்ததும் உண்மைதான்.நாகப்பன்  சாகும்போது நான் விரும்பும் பணத்தைத் தன் மகனுக்குக் கொடுக்கும்படி கூறிவிட்டுச் சென்றான்.அதனால் நான் ஒரு லட்சம் ரூபாயை குமரனுக்குக் கொடுத்தேன்.இது எப்படித் தவறாகும் ஐயா?" என்றார்.
மரியாதைராமன் சிரித்தார்."சரிதான்.நாகப்பன் கூறியது போல்தான் செய்திருக்கிறீர்கள்.ஆனால் நீ விரும்பும் பணத்தைத் தருமாறு கூறினாரல்லவா?அதில்தான் ஒரு சந்தேகம்.நீர் விரும்பும் பணத்தைத்தான் கொடுத்தீரா?"
பெருமாள் இடைமறித்துக் கூறினார்."அதிலென்ன சந்தேகம்?நான் விரும்பிய பணத்தைத்தான் கொடுத்திருக்கிறேன்."
"இல்லையே நீர் விரும்பிய பணத்தைத் தரவில்லையே. உமது நண்பர் என்ன சொல்லிச் சென்றார்?நீர் தர விரும்பிய பணம் என்று சொல்லவில்லையே. நீர் விரும்பும் பணம் என்றுதானே சொன்னார். அப்படியானால் நீர் தர விரும்பியது ஒரு லட்சம். நீர் விரும்பியது ஒன்பது லட்சம் அல்லவா?"
பெருமாள் திடுக்கிட்டார்."ஐயா, "தடுமாறினார்.
"உமது நண்பரின் வார்த்தையின்படி நீர் விரும்பும் பணம் ஒன்பது லட்சம் அல்லவா?அந்த ஒன்பது லட்சத்தை குமரனிடம் கொடுத்து விடவேண்டும்.அத்துடன் பத்து ஆண்டுகளாக அவனிடம் வேலை வாங்கிக் கொண்டு ஊதியம் ஏதும் தராததால் அவனுக்கு பத்தாண்டு ஊதியமாக ஒரு லட்சத்தையும் தந்து விட வேண்டும்.இதுவே என் தீர்ப்பு."
தனது பேராசையின் காரணமாக தனக்குக் கிடைக்கவேண்டிய ஒரு லட்சமும் கையை விட்டுப் போனதற்காக மனம் வருந்திய படியே சென்றார் பெருமாள்..
ஊர் மக்களும் பேராசை பெருநஷ்டமாகியது.பேராசைப்பட்ட பெருமாளுக்கு இது நல்ல தண்டனைதான் என்று பேசிக்கொண்டே கலைந்து சென்றனர்.








ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

73- திலகாஷ்ட மகிஷ பந்தனம்.

விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவ ராயருக்கு ஒரு சந்தேகம் வந்தது. நமது மந்திரிகள் மிகுந்த சாமர்த்திய சாலியாக உள்ளனரா என்று சோதித்து அறிந்துகொள்ள வேண்டுமென்று நினைத்தார்.அதனால் அன்று சபை கூடியதும் ஒரு வினா எழுப்பினார்.
"சபையோரே, நேற்று இரவு என் அறைக்குள் ஒரு திருடன் நுழைந்தான். அவன் என் மார்பின்மீது எட்டி உதைத்தான்.அத்துடன் அவனது இரண்டு கைகளாலும் என்னைக் கன்னத்தில் அடித்தான். அவனுக்கு என்ன தண்டனை தரலாம் என்று நீங்களே கூறுங்கள்."
"அவன் எங்கே இருக்கிறான் பிரபு?"
"அவனைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறேன்."
"அவனைக் கை கால்களை வெட்டி வீசவேண்டும்.  இல்லையில்லை.அவனுக்கு  மரண தண்டனைதான் தரவேண்டும்.அவனை நகரத்து வீதியில் நிற்கவைத்து கசையால் அடிக்கவேண்டும்."
ஒவ்வொருவரும் ஆத்திரத்துடன் பேச மன்னர் புன்னகை புரிந்தார்.
அமைதியாக இருந்த அப்பாஜியைப் பார்த்து "அப்பாஜி உங்களுக்கு ஒன்றும் தோன்ற வில்லையா?"என்று கேட்டார் மன்னர்.
புன்னகையுடன் எழுந்த அப்பாஜி"மன்னா,உங்களை உதைத்த கால்களுக்கு மாணிக்கப் பரல் வைத்த தங்கக் காப்புப் போடவேண்டும்.தங்களை அடித்த கைகளுக்கு வைர வளையல் செய்து போடவேண்டும்.தங்களின் அன்புப் பிடிக்குள் நீங்கள் கட்டி வைத்திருக்கும் இளவரசன் அல்லாது இந்தக் காரியத்தைச் செய்ய வல்லவர்கள் யார் பிரபு?" என்று கூறியபோது மன்னர் " பலே அப்பாஜி பலே!",என்று மகிழ்ச்சியுடன் பாராட்டினார்.
"நேற்றிரவு என் மகன்தான் என்னைக் காலால் உதைத்துத் தன் பிஞ்சுக் கரங்களால் என் கன்னத்தில் அடித்து விளையாடினான்.அவனைத்தான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டேன்.அப்பாஜி சரியான பதில் அளித்துவிட்டார்."
இந்த சொல்லைக் கேட்ட சபையோர் பலத்த ஆரவாரம் செய்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
அப்போது மன்னரின் சபைக்கு ஒரு புலவர் வந்திருப்பதாகக் காவல்காரன் வந்து அறிவிக்கவே,அவரை வரவேற்குமாறு அப்பாஜி கூறினார்.மிகுந்த ஆரவாரத்துடன் உள்ளே நுழைந்த அந்த புலவர்  தன்னை மிகவும் கற்றவர் எனவும் தன்னை வெல்ல யாராலும் முடியாது எனவும் அப்படி யாரேனும் தன்னை வென்று விட்டால் தான் பெற்ற பட்டங்களையும் தன் பரிசுப் பொருள்களையும் கொடுப்பதாகவும்  கூறினார்.
அவரது ஆரவாரத்தைப் பார்த்த அங்கிருந்த புலவர்கள் சற்றுப் பயந்தனர்.தாங்கள் தோற்று விட்டால் தங்களால் விஜயநகர அரசுக்குக் கெட்டபெயர் வந்து விடுமே எனத் தயங்கினர்.ராயரோ அவையில் உள்ள புலவர்களை நோக்கி 
" நம் நாட்டில் இந்தப் புலவரை வெல்ல யாரும் இல்லையா?" எனக் கேட்டார்.
 அப்போது தெனாலிராமன் எழுந்து நின்றான்."அரசே, தாங்கள் அனுமதித்தால் நான் இந்தப் புலவருடன் வாதிடுகிறேன்."
"செய் ராமகிருஷ்ணா, நம் நாட்டில் தோல்வியென்பதே வரக்கூடாது."
ராமன் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்."ஐயா புலவரே. இப்படி வாரும்.என்னிடம் இருக்கும் இந்த நூலில் இருந்துதான் தங்களிடம் வினாக்கள் கேட்கப் போகிறேன்.எல்லா வினாக்களுக்கும் தவறாமல் தாங்கள் பதில் கூறவேண்டும் அப்படிக்கூறிவிட்டால் நீர் வென்றவர் ஆவீர்".                                                
வந்த புலவர் "அது என்ன நூல் எனத் தெரிந்தால்தானே நான் பதில் கூறமுடியும்?"என்றார் தயங்கியபடியே.
ராமன் அலட்சியமாக"திலகாஷ்ட மகிஷ பந்தனம்தானய்யா"என்று கூறியதும் அந்தப் புலவர் திகைத்தார்.
"என்னது? திலகாஷ்ட மகிஷ பந்தனமா? அப்படி ஒரு நூலை நான் படித்ததே இல்லையே."
"என்ன, இந்த நூலை நீர் படிக்கவில்லையா?என்ன புலவரைய்யா நீர்? இந்த நூலைப் படிக்காமல் உம்மை நீர் புலவர் என்று வேறு கூறிக் கொள்கிறீர்! தெரியவில்லைஎன்றால் தோல்வியை ஒப்புக் கொண்டு ஊர் போய்ச் சேரும் முதலில் இந்த நூலைத் தேடிப் படியுங்கள்."
"பிரபு, நான் இந்த நூலைப் பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை. என் தோல்வியை நான் ஒப்புக் கொள்கிறேன் இன்றுடன் என் பட்டங்கள் அனைத்தையும் துறந்தேன் என் பரிசுப் பொருளை இந்தத் தெனாலி ராமனுக்கே கொடுத்துவிடுகிறேன்."
என்றார் தலை குனிந்தபடியே.
"உமது பரிசுப் பொருள் எதுவும் வேண்டாம் அதை நீரே எடுத்துக் கொண்டு போய்ச் சேரும்" என்று அவரைப் போக விட்டான் தெனாலி ராமன்.
அவர் செல்வதைப்  புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த ராமனிடம் ராயர் மதுவாகக் கேட்டார்."ராமகிருஷ்ணா, அது என்ன நூல்? நான் கூட கேள்விப்படாததாக உள்ளதே?"
ராமன் புன்னகையுடன் "இதுதான் அரசே,"என்றபடி தன்னிடம் இருந்த ஒரு மூட்டையை அவிழ்த்துக் காட்டினான்.அதில் ஒரு எள்ளுச் செடியும் அதைக் கட்டிய கயிறும் இருந்தது.மன்னர் ஒன்றும் புரியாமல் என்ன இது? என்றபோது ராமன் விளக்கினான்.
"அரசே, திலம் என்றால் எள். காஷ்டம் என்றால் காய்ந்த செடி.திலகாஷ்டம் என்றால் காய்ந்த எள்ளுச் செடி.மகிஷ பந்தனம் என்றால் எருமையைக் கட்டும் கயிறு. இதோ இந்த எள்ளுச் செடிகளை கயிற்றால் கட்டியிருக்கிறேன்.
இதைச் சேர்த்துச் சொன்னால் திலகாஷ்ட மகிஷ பந்தனம்.இதைத்தான் கூறினேன். அவர் இது ஏதோ புதிய நூல் என்று பயந்து ஓடிவிட்டார்."
"கர்வத்தோடு வந்தவரை அவரது கர்வம் அடங்கும்படி செய்து விட்டாய் பலே, ராமகிருஷ்ணா,உன் சமயோசித புத்தியால் நம் சாம்ராஜ்யத்தின் பெருமையைக் காப்பாற்றினாய்.அது சரி அவர் இந்தநூலைக் காட்டும்படி கூறியிருந்தால் என்ன செய்திருப்பாய்?" என்றுகேட்டபோது ராமன் சிரித்தான்.
"அவ்வப்போது தோன்றும் யோசனைகளுக்கேற்றபடி அப்போது என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லி சமாளிப்பேன் மகாராஜா.முதலில் அருகே வரும் பிரச்னையை சமாளிக்க வேண்டும்.அதுதான் என் குறிக்கோள்."
"பலே ராமகிருஷ்ணா, உன் துணிச்சலைப் பாராட்டுகிறேன்."என்று கூறிய மன்னர் ராமனுக்குப் பரிசளித்து மகிழ்ந்தார்.
ராமன் சமயோசிதம் நிறைந்தவன் என்றுமட்டுமே  நினைத்துக் கொண்டிருந்தனர்.இந்த செய்கையால் அவன் துணிச்சல் மிகுந்தவன் என்பதையும் அனைவரும்  புரிந்துகொண்டு அவனைப் பாராட்டினர்.










--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

72- தெய்வத்தின் குரல்.

ஒரு காட்டில் மரப் பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது.அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை.அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருக்கும்.ஒருநாள் திடீரென்று 
இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?என்று சந்தேகம் வந்தது.பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும்.என்று சமாதானம் செய்து கொண்டது.
ஒருநாள் அந்தக் கழுகுக்கு இன்று எனக்கு உணவு கிடைக்குமா? இறைவன்தான் எல்லாருக்கும் படியளப்பவன் ஆயிற்றே.
இன்று எனக்கு உணவு கிடைக்குமா?என்ற  சந்தேகம்  வந்ததும் அந்த கழுகு தான் அமர்ந்து தியானம் செய்யும் பாறைமீது நின்று
" இறைவா, இன்று எனக்கு உணவு கிடைக்குமா?"என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.
உடனே விண்ணிலிருந்து ஒரு குரல் "உனக்கு இன்று உணவு உண்டு."என்ற பதில் கிடைத்தது.
மிக்க மகிழ்ச்சியுடன் இன்று இரை தேடும் வேலை இல்லை எப்படியும் உணவு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறைமீது அமர்ந்து இருந்தது.
நேரம் செல்லச் செல்ல கழுகுக்குப் பசி வரத்தொடங்கியது.ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறைதியானத்திலேயே அமர்ந்திருந்தது.
மதியம் ஆயிற்று மாலையும் போயிற்று.இரவு வந்துவிட்டது."இனி நம்  இருப்பிடம் செல்ல வேண்டியதுதான்.நம்மை இறைவனே ஏமாற்றி விட்டாரே" என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.
அப்போது ஒரு குரல் கேட்டது
 "என்ன குழந்தாய், சாப்பிட்டாயா?"என்றதைக் கேட்டதும் கழுகுக்கு அழுகை வந்துவிட்டது.

"இறைவா, நீ எனக்கு  இன்றுஉணவு உண்டு என்று கூறிய பிறகுதானே நம்பிக்கையோடு நான் தியானத்தில் அமர்ந்தேன்.
ஆனால் இன்று என்னைப் பட்டினி போட்டு விட்டாயே! உன் கணக்கு தப்பா, என் நம்பிக்கை தப்பா?"
 என்று அழுது கொண்டே கேட்டது.
இறைவன் சிரித்தார். 
"குழந்தாய், சற்று திரும்பிப் பார். உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது."
கழுகு பின்னால் சென்று பார்த்தது.அங்கே ஒரு பெரிய எலி இறந்து கிடந்தது. கழுகு புன்னகை புரிந்தது. 
இறைவனிடம் "இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?"என்றபோது இறைவன் பதிலளித்தார். 
"குழந்தாய், உனக்குரிய நேரத்தில் உணவு வந்து விட்டது நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய்.திரும்பிப் பார்க்கும் முயற்சி கூடச் செய்யாமல் உணவு எப்படிக்கிட்டும்?.
அவரவர் உணவுக்குத் தகக உழைப்பை அவரவரே செய்ய வேண்டும் அப்போதுதான் உணவு இருப்பதும் தெரியும் கிடைப்பதும் நடக்கும். கடுகளவேனும் முயற்சி வேண்டும்.ஒருவேளை உணவு கூட உழைக்காமல் உண்ணக் கூடாது.
இதை நீமட்டுமல்ல அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்.
இனியாவது புரிந்து கொள்." என்று கூறிய இறைவன் கழுகுக்கு ஆசி வழங்கி மறைந்தார்.
அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கிற்று.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

திங்கள், 5 செப்டம்பர், 2011

71..யானையின் எடை.

வெகு நாட்களாக வெளியூர் சென்றிருந்த தெனாலிராமன் தலைநகர் ஹம்பிக்குத் திரும்பினான்.அவன் ஊருக்குள் நுழையும்போதே மக்கள் ஆங்காங்கே கூடிக் கூடிப் பேசுவதைக் கண்டான்.காரணம் அறியாமல் திகைத்தபடியே தன் இல்லத்துக்குள் நுழைந்தான்.தெனாலிராமன் வீட்டு வேலைக்காரர்கள் இருவரும் அடிக்கடிக் கூடி நின்று எதைப் பற்றியோ ஆலோசனை செய்தபடி இருந்தனர்.
தெனாலி ராமனுக்கு பெரும் ஆச்சரியம். ஊருக்குள் வரும்பொழுதுதான் மக்கள் கூடிநின்று பேசினார்கள் என்றால் நம் வீட்டு வேலைக்காரர்களும் அதேபோல் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களே என்று யோசித்தான்.அவனால் காரணம் கண்டு பிடிக்க முடியாததால் தன் வேலைக்காரர்களுள் ஒருவனை அழைத்தான்.
"டேய், உண்மையைச்சொல். என்னகாரணமாகக் கூடிக் கூடிப் பேசுகின்றீர்கள். ஏதேனும்  திட்டம் தீட்டுகிறீர்களா?"
வேலைக்காரன் பயந்தான்."ஐயா, சாமி நாங்க நம்ம ஊருக்கு வந்திருக்குற வடநாட்டு வியாபாரியைப் பற்றிப்  பேசுறோமுங்க"
"அவரைப் பற்றி அப்படி என்ன பேச்சு?"
"அதுங்களா? அவரு ஒரு பொருள் வச்சிருக்கிறாராம் அதன் எடை என்னன்னு கண்டு பிடிச்சிட்டா எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்லியிருக்கிறாராம்.அப்படி கண்டு பிடிக்க முடியலைனா காலம் பூராவும் அவருக்கு அடிமையா அவருக்குப் பணிவிடை செய்து வாழணுமாம்."
தெனாலிராமன் சிந்தித்தான்.அரசபைக்குச் சென்று அந்த வியாபாரியைச் சந்தித்தான்.
மன்னர் கிருஷ்ணதேவ ராயரும் வியாபாரியின் இந்த சவாலை ஏற்கவும் முடியாமல் 
விடவும் முடியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தார்.
தெனாலிராமன் சபைக்கு வந்ததும் மன்னர் அவரிடம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு கூறினார்.
ராமகிருஷ்ணனும் அதை ஏற்றுக் கொண்டு வியாபாரியிடம் கேட்டான்.
"ஐயா, தாங்கள் எடை காணவேண்டும் என்று கூறும் பொருள் என்னவோ?"
வியாபாரி மிகுந்த கர்வத்துடன் பேசினான்."அதற்கு முன் என் நிபந்தனை தெரியுமா உமக்கு? நான் ஜெயித்தால் நீர் எமக்கு அடிமை.ஆனால் நீர் ஜெயித்தால் எடைக்கு எடை பொன் தருவேன்."
"உங்கள் நிபந்தனையை நான் ஒப்புக் கொள்கிறேன்.நான் ஜெயித்தால் எடைக்கு எடை பொன் தருவது என்பது உண்மைதானே?"
"ஒப்புக் கொள்கிறேன்."
"அப்படியானால் நானும் ஒப்புக் கொள்கிறேன்.எந்தப் பொருளுக்கு எடை சொல்ல வேண்டும்?சொல்லுங்கள்."
வியாபாரி புன்னகைத்தான்.கள்ளச் சிரிப்புடன் தெனாலிராமனைப் பார்த்துச் சொன்னான்.
"வீதியில் நிற்கும் என் யானையின் எடை என்ன என்று சொல்லவேண்டும்"
சபையே அதிர்ந்தது.யானையை எப்படி எடை போடுவது?எந்தத் தராசில் நிற்க வைப்பது என்று அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர்.மன்னரும் சிந்தனை வயப்பட்டார்.
தெனாலிராமன் இதற்கு மறுநாள் பதில் கூறுவதாகச் சொல்லி இல்லம் திரும்பினான்.
இரவு தன் மனைவியிடம் இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுக்குத் திடீரென்று யோசனை தோன்றியது.
மறுநாள் பொழுது விடிந்ததும் வியாபாரியிடம் அவனது யானையின் எடையைக் கூறுவதாகக் கூறி அழைத்தான். மக்களும் ராமன் எப்படி யானையை எடை போடுகிறான் என்பதைப் பார்க்கக் கூடிவிட்டனர்.
மன்னரும் மக்களுடன் சேர்ந்து ஆவலுடன் பார்த்து நின்றார்.
ராமன் வடநாட்டு வியாபாரியை நதிக்கரைக்கு அழைத்துச் சென்றான்.அவனும் தன் யானையை நடத்திக்கொண்டு ராமனுடன் சென்றான்.நதிக்கரையை அடைந்தவுடன் அங்கிருந்த ஒரு பெரிய படகில் யானையை ஏற்றச் சொன்னான் ராமன்.அந்தப்படகில் யானையை ஏற்றியவுடன் அதைத் தண்ணீரில் மிதக்கவிடச் சொன்னான்.படகு மிதந்தது.படகு நீருக்குள் அமிழ  நீர்படகில்  எந்த அளவு உயர்ந்துள்ளது என்பதைக் குறித்துக் கொண்டான்.பின்னர் மரக்கட்டைகளை அந்தப் படகில் வைத்து நீருக்குள் விட்டான். படகு அமிழ வெளிப்புறம் நீர் உயர்ந்தது. 
யானையை வைத்து எடை பார்த்தபோது உயர்ந்த அதே அளவு நீர் உயர்ந்ததும் கட்டைகளை நிறுத்திவிட்டான்.இப்போது படகில் வைக்கப்பட்ட கட்டைகளின்  எடைதான் யானையின் எடை. இந்தக் கட்டைகளைத் தனித் தனியே எடை போட்டுப் பார்த்தால் யானையின் எடை தெரிந்துவிடும். 
"அரசே, கட்டைகளைத் தனித் தனியே எடை போட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்."

மன்னர் கிருஷ்ண தேவராயர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.வியாபாரியைப் பார்த்து "அய்யா, நீங்கள் கேட்ட கேள்விக்கு எங்கள் ராமன் சரியான விடை தந்து விட்டான்.அவனிடம் சொன்னது போல் பரிசைத் தருவதுதான் நியாயம்."என்று கூறியவுடன் வியாபாரி தலை குனிந்து ஒப்புக் கொண்டான்.
ஆனால் இடைமறித்த ராமன் "மகாராஜா, பொறுங்கள்."என்றவன் வியாபாரியைப் பார்த்துக் கூறினான்.
"ஐயா வியாபாரியே! நான் வெற்றி பெற்றால் தாங்கள் என்ன தருவதாகக் கூறினீர்கள்?"
"எடைக்கு எடை பொன் தருவதாகக் கூறினேன்."
"அது சரி யாருடைய எடைக்கு எடை என்று நீங்கள் சரியாகச் சொல்லவில்லையே.எடையைப் பார்த்துச் சொன்னவரின் எடைக்கா அல்லது யானையின் எடைக்கா?என்பதைத் தெளிவாகச் சொல்லாததால் நான் யானையின் எடைக்கு எடை பொன் கேட்கிறேன்."
ராமனின் வார்த்தைகளைக் கேட்ட வியாபாரி மயங்கிச் சரிந்தான்.யானையின் எடைக்கு எடை பொன்னுக்கு அவன் எங்கே போவான்.எனவே அவனைச் சிறையில் அடைக்குமாறு மன்னர் கட்டளையிட்டார்.
பல நாடுகளில் மக்களை அடிமைப் படுத்திச் சிறுமைப் படுத்திய வியாபாரிக்குச் சரியான தண்டனைதான் அது.என்று மன்னர் தீர்ப்பளித்தார். 
ராமனுக்குப் பெரும் பொன்னைப் பரிசாகக் கொடுத்து அவனை வாழ்த்தினார். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில்  உண்டு என்பதை நிரூபித்த  தெனாலிராமனை மக்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
எனவே யாரையும் துன்புறுத்தி மகிழ்தல் தவறு என்பதையும் வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு என்பதையும் நாம் புரிந்து கொண்டால் நலமடைவோம்.







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

70-சோதிடம் தந்த பரிசு

முற்காலச் சேரர்களில் புகழ் பெற்றவன் சேரலாதன். முதலாம்  நூற்றாண்டின் கடைசியில் சேர நாட்டை ஆண்டவன். நாட்டை விரிவாக்கி வளமிக்கதாகஆக்குவதற்கு அரும்பாடு பட்டவன்.அது  தமிழகத்தில் சேர சோழ பாண்டியர்களின் ஆட்சி நடைபெற்று வந்த காலம்.
அப்போது திருமணப் பருவத்தில் இருந்த சேரலாதன் சோழ மன்னன் மகள் நற்சோணை என்பவளை மணந்து இல்லறத்தையும் இனிதே நடத்தி வந்தான். இவனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.மன்னர் பரம்பரைக்கே உரிய கல்வி கேள்வி கலைகளில் சிறந்து வீரமும் பண்பும் உடையவராய்த் திகழ்ந்தனர்.மன்னன் சேரலாதன் தன் மக்கள் இருவரையும் கண்ணின் மணிகள் எனப்  போற்றி வந்தான். ஆண்டுகள் உருண்டன.

ஒரு நாள் அரியணையில் மன்னன் சேரலாதன் அமர்ந்திருந்தான்.அவனருகே இளவல்கள் மூத்தவன் செங்குட்டுவன் இளையவன் இளங்கோ இருவரும் அமர்ந்திருந்தனர். வீரமும் வலிமையையும் கொண்டவனாக முதல் மகனும் அறிவு ஒளிரும் கண்களுடன் இரண்டாவது மகனும் அமர்ந்திருந்ததைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான் சேரலாதன். நாட்டு மக்களும் தங்களின் இளவரசர்களைப் பார்த்துப் பூரித்திருந்தனர்.
அப்போது காவலன் ஒருவன் வந்து மன்னனை வணங்கி நின்றான்.என்ன என்பது போலப் பார்த்தான் மன்னன்.
"அரசே! சோதிடர் ஒருவர் தங்களைக் காண வந்துள்ளார்."
"வரச்சொல்"
உள்ளே நுழைந்த சோதிடர் மன்னனை மிகவும் பணிவோடு வணங்கினார்.
"வாருங்கள் சோதிடரே. அமருங்கள்" மந்திரியார் அவரை அவரது ஊர் பெயர் சோதிடத்தில் அவருக்குள்ள அனுபவம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சேரர் அரண்மனையை அவர்  நாடிவரக் காரணம் யாது எனவும் வினவினார்.
"மன்னர் பெருமானே. தங்கள் பிள்ளைகள் பிறந்த நேரத்தை அறிய நேர்ந்தது.அது பற்றி இளவரசர்களின் எதிரகாலம் பற்றிக் கூறிச் செல்லவே நான் வந்தேன்."
மன்னன் மகிழ்ச்சியுடன் அவரை "கூறுங்கள்" என்று  சொன்னான்.
"அரசே தங்களின் மக்களில் மிகவும் புகழ் பெறப் போகிறவர் தங்களின் இளைய மகனே. அவரே இந்த மண்ணை ஆளப் போகிறார்."
மன்னன் திகைத்தான். மக்கள் பதறினர். மூத்தவன்  செங்குட்டுவன் நிலைகுலைந்தான். இளங்கோ சோதிடரை வெறுப்புடன் பார்த்தான். 
மந்திரியாரோ மூத்தவன் இருக்க இளையவன் மன்னனாவதா அது எப்படி நடக்கும்? என்ற வினாவைக் கண்களில் ஏற்றிமன்னனைப் பார்த்தார்.
சேரலாதன் செங்குட்டுவனின் முகத்தைப் பார்த்தான்..அதில் தோன்றிய ஏமாற்ற உணர்ச்சியையும் அவன் தன் தம்பியை வெறுப்புடன் பார்த்த பார்வையையும் கவனித்தான்..
அந்த இடத்தின் அமைதியைக் குலைத்தபடி எழுந்தான் இளங்கோ.
"சோதிடரே, உமது சோதிடம் பொய்யாகும்படி இப்போதே நான் என் முடிவைக் கூறுகிறேன். இந்த அரியணை மீது எனக்கு சற்றும் உரிமையில்லை என்பதை இந்தச் சபை அறியக் கூறுகிறேன்."
சேரலாதன் முகத்தில் சற்றே நிம்மதி தோன்றியது.ஆனால் அதைக் குலைக்கும் வண்ணமாக  செங்குட்டுவன் பேசினான்.
"நீ வேண்டாமென்றாலும் நாளை உன் மக்கள் உரிமை கோரலாமல்லவா?"
சபையோர் பேச்சு மூச்சற்று அமர்ந்திருந்தனர். அப்போது யாரும் எதிர் பாரா வண்ணம் 
இளங்கோ ஆசனத்தை விட்டு எழுந்தான்."அண்ணா! என்மீது சந்தேகமா? இருங்கள் இதோ வருகிறேன்" என்றவன் உள்ளே சென்றான். சற்று நேரத்தில் அங்கு ஒரு துறவி தோன்றினார். ஆம்.இளங்கோதான் தலையை மழித்து காவி உடுத்தி துறவியாக சபையின் முன் தோன்றினான்.
அனைவரும் திடுக்கிட்டனர். ஆனால் அமைதியாகப்  பேசினான் இளங்கோ.
"தந்தையே, என்னை மன்னியுங்கள். இவ்வுலக வாழ்வில் எனக்குப் பற்றில்லை. இந்த சோதிடர் மீதும் சினம் கொள்ள வேண்டாம்.நான் துறவறம் ஏற்க இவர் ஒரு கருவி அவ்வளவே. என்னை வாழ்த்தி எனக்கு விடை கொடுங்கள்." 
இப்போதுதான் செங்குட்டுவனின் சகோதரபாசம் தலை தூக்கியது.
"தம்பி, என்னை விட்டு எங்கே போகிறாய்? என்னை மன்னித்து விடடா"
"கலங்கவேண்டாம் அண்ணா, நீங்கள் நினைக்கும்போது நான் அரண்மனைக்கு வருவேன்"
மகிழ்ச்சியுடன் தொடங்கிய சபை துயரத்துடன் முடிந்தது.
இப்போது செங்குட்டுவன் மன்னனாக பட்டமேற்றுள்ளான். மதுரை சென்று திரும்பியுள்ள புலவர் பெருமான் சீத்தலைச் சாத்தனாருடனும் பட்டமகிஷியுடனும் சில மெய்க்காப்பாளர் சூழ மலைவளம் காணப் புறப்பட்டான் செங்குட்டுவன். புலவருக்கு ஒரு துணை இருந்தால்தான் அங்கு பேச்சும் சுவையாக இருக்கும் என எண்ணிய செங்குட்டுவன் மறவாமல் தம்பி இளங்கோவையும் உடன் அழைத்துச் சென்றிருந்தான்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையும் செழிப்பும் கண்களைக் கவர்ந்தன.இளைப்பாற ஓரிடத்தில் அமர்ந்தான் மன்னன்.மூலிகைகளின் வாசமும் வாசனைப் பொருள்களின் மணமும் மனதை மயக்கக் கூடியவையாக இருந்தன.
அந்த ரம்யமான சூழலில் சில  காட்டுவாசிகள் மன்னனைப் பணிந்தனர்.தேன், மான், புலித்தோல், வாசனைத் திரவியங்கள் எனப் பலவகைப் பொருள்களைக் காணிக்கையாக மன்னன் முன் இட்டு வணங்கி எழுந்தனர்.
அவர்கள் முகங்களில் ஏதோ கலவ ரம் தெரிந்தது.காரணம் கேட்ட மன்னனுக்கு அவர்களின்  தலைவன் பதிலளித்தான்.
"சாமி, மகாராசா, நேத்து ஒரு பொண்ணு மலப்பக்கமா நின்னுச்சுங்க. அப்ப ஒரு பெரிய தேரு ஆகாயத்திலேருந்து அதும் பக்கத்தில நின்னுச்சுங்க. தேருல இருந்து ஒரு அழகான பையன் வந்து அந்தம்மாளைக் கைபிடிச்சு உக்காத்தி வச்சுகிட்டு ஆகாயத்தில பறந்து போயிட்டான்."
செங்குட்டுவன் ஆச்சரியத்துடன் பார்த்தான்.அருகே இருந்த சீத்தலைச் சாத்தனார் புன்னகை புரிந்தார்.
"மன்னா, இவர்கள் கண்டது உண்மையே. கற்புக்கரசி கண்ணகியை இவர்கள் பார்த்திருக்கிறார்கள். அவளை அவள் கணவன் கோவலன் கையைப் பற்றி விண்ணுலகுக்கு அழைத்துச் சென்ற காட்சி தான் இவர்கள் கண்முன் நிகழ்ந்துள்ளது."
இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னனும் மற்றையோரும் ஆவலுடன் கண்ணகியின் கதையைக் கூறுங்கள் என்றனர். 
கூத்தனாரும் கண்ணகி கதையைச் சுருக்கமாகக்  கூறினார்.
 கதையைக் கேட்ட மன்னன் செங்குட்டுவன் "சாத்தனாரே, அருமையான இந்தக் கற்பரசியின் கதையை வருங்காலம் அறியும்படி ஒரு காப்பியமாகப் படைத்துவிடுங்கள். " என்று வேண்டிக்கொண்டான்.
கூத்தனாரோ அதை மறுத்து"மன்னா, என்னினும் தமிழறிவும் புலமையும் மிக்கவரான இளங்கோ அடிகளே அதைச் செய்ய ஏற்றவர். அவரே இந்த காப்பியத்தை இயற்றட்டும்." என்று காப்பியம் எழுதும் பணியை இளங்கோவிடம் ஒப்படைத்தார்.  
தம்பியைத் திரும்பிப் பார்த்தான்  மன்னன் .
"மன்னவன் பணியென்றால் மறுப்பேதுமில்லை" என்று கூறி அப்பணியைத் தானே ஏற்றுக் கொள்வதாக இசைந்தார் அடிகள். 
அப்போது மாடலன் என்ற மறையோன் தென்னாட்டு மன்னர்களின் வீரத்தைப் பற்றி வடநாட்டு மன்னர்களான கனகரும் விஜயரும் இகழ்ந்து பேசியதைக்  கேட்டதாகக் கூறினார். 
இதைக் கேட்ட செங்குட்டுவன் கண்கள் சிவந்தன உதடுகள் துடித்தன.
"அடிகளாரே, நமது வீரத்தை இகழ்ந்த அந்த வீணர்களின் தலையில் இமயத்தின் கல்லேற்றி கங்கையில் நீராட்டி அக்கல்லில் கண்ணகிக்குச் சிலை வடித்துக் கோவில் எழுப்புவோம்.இப்போதே படை வடக்கு நோக்கிப் புறப்படும் 
நான் வீரப் போரைக் கவனிக்கிறேன் அடிகளே, நீர் சொற்போரைக் கவனியுங்கள். "
இரண்டு நிகழ்ச்சிகளும் விரைவிலேயே நடந்து முடிந்தன.
ஆனால் காலப் போக்கில் கண்ணகியின் கற்கோவில் மறைந்து விட்டது.இளங்கோ இயற்றிய சொற்கோவில் ஆன சிலப்பதிகாரம் என்ற நூல் தமிழன்னையின் கால் சிலம்பு எனும் அணிகலனாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அது ஒலிக்கும் குரல் தமிழின் பெருமை மட்டுமல்ல இளங்கோவின் பெருமையையும்தான். ஒரு சோதிடம் நமக்கு சிலப்பதிகாரம் என்னும் அழியாச் செல்வத்தைப் பரிசாகக் கொடுத்துள்ளது என்று நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம் அல்லவா?




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

வியாழன், 14 ஜூலை, 2011

69- சோதிடம் பலித்தது


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பரத கண்டத்தில் ஆட்சி புரிந்த மன்னர்களுள் விக்கிரமாதித்யன் என்ற மன்னன் மிகவும் பெருமை வாய்ந்தவன்.இவனது  சபையில்  மிகவும்  திறமை  வாய்ந்தஅறிஞர்கள்  இருந்தனர். வானசாஸ்திரம் கணிதம் மருத்துவம் சோதிடம் போன்ற பலதுறைகளில் இவர்கள் திறமை வாய்ந்தவர்களாக விளங்கினர்.
 மன்னன் விக்கிரமாதித்யனும் இவர்களை மிகவும் பெருமையுடன் போற்றி வந்தான்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னனுக்கும் மக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. நாடே கோலாகலமாகக் கொண்டாடியது.குழந்தையின்  பெயர்  சூட்டு  விழாவன்று குழந்தையின் ஜாதகத்தையும் கணித்துத் தருமாறு மன்னன் சோதிட திலகமான மிஹிரர் என்பவரிடம் வேண்டுகோள் விடுத்தான்.மிஹிரர் அந்தக் குழந்தையின் பிறந்த நேரம் சரியில்லை என்பதை அறிந்துகொண்டதால் ஜாதகம் கணிப்பதில் தாமதம் காட்டினார்.

மன்னன் அவரிடம் பலமுறை  வற்புறுத்திக் கேட்டபின்னர் மிஹிரர் மன்னனிடம் கூறினார்."மன்னா, உன் மகனுக்கு ஆயுள் பலம் கிடையாது.ஏழாவது வயதில் இவனுக்கு மரணம் ஏற்படும்."

மன்னன் திகைத்தான். "இதை மாற்ற வழியே இல்லையா? ஏதேனும் பரிஹாரம் அல்லது பிராயச்சித்தம் செய்தால் என் மகனது உயிர் நிலைக்குமா? சொல்லுங்கள்" என்று தவித்தான்.

எந்த பரிஹாரத்தாலும் இவனது உயிரைக் காப்பாற்ற இயலாது" என்றபோது விக்ரமாதித்யன் உள்ளத்தில் ஒரு பிடிவாதம் தோன்றியது. எப்படியும் தன் மகனைக் காப்பாற்றியே தீருவது என்று தீர்மானம் செய்தான்.

மிஹிரரோ அவன் விதியை மாற்ற இயலாது. அவன் ஒரு மிருகத்தால் உயிர் இழப்பது உறுதி என்றார்.

விக்கிரமாதித்யன் என் மகனை எந்த மிருகமும் நெருங்காது பாதுகாப்பேன் என்று முடிவு செய்தான்.

அதற்காக எழுநிலை மாடம் ஒன்று கட்டினான். ஏழாவது மாடத்தில் சகல வசதிகளுடன் தன் மகனைத் தங்க வைத்தான்.கீழ்ப் பகுதியில் மன்னன் தன் இருப்பிடத்தை வைத்துக் கொண்டு கண்ணும் கருத்துமாகத் தன் மகனைப் பாது காத்தான். 

கடைசியில் இளவரசனின் ஏழாவது வயதும் பிறந்தது. ஒவ்வொரு நாளும் மன்னன் தன் மகனை மேல் மாடியில் சென்று பார்த்து வந்தான். ஒரு நாள் மன்னன் தன் மகனைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியோடு வந்தான். அப்போது மிஹிரரும் மன்னனுடன் இருந்தார்.
"என்ன மிஹிரரே! என் மகன் உயிருக்கு இனி ஒன்றும் பயமில்லையே? அவன் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறானல்லவா? "
"ஆம் மன்னா. இன்னும் ஒரு நாழிகைப் பொழுதில் அவன் உயிர் பிரிந்து விடும்."
"என்ன! எந்த மிருகமும் இங்கு வராதபோது எப்படி அவனுக்கு மரணம் சம்பவிக்கும்.?"
"மன்னா, என் சோதிடம் பொய்க்காது.ஒரு மிருகத்தால் அவன் உயிர் பிரிவது என்னும் அரைநாழிகை பொழுதில் நடக்கும்."
மன்னன் ஒரு சேவகனை அழைத்தான்." நீ உடனே மேல் மாடிக்குச் சென்று இளவரசனைப் பார்த்து விட்டு வா."
எனக் கூறி அனுப்பினான்.
அந்த சேவகனும் சென்று பார்த்துவிட்டு "மகாராஜா, நமது இளவரசர் பந்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்."என்று பணிவுடன் கூறினான்.
மன்னன் மிஹிரரைப் பார்த்துப் புன்னகைத்தான்.
"மன்னா,இந்த சேவகன் பாதிவழியில் இறங்கிக் கொண்டிருக்கும் போதே இளவரசர் உயிர் பிரிந்து விட்டது."
அமைதியாக மிஹிரர் கூற மன்னன் மேல் மாடத்திற்கு ஓடினான். அங்கே ரத்த வெள்ளத்தில் மகன் இறந்து கிடப்பதைக் கண்டு அலறினான்.அள்ளி எடுத்து  அணைத்துக் கொண்டான்.

"இத்தனை பாதுகாப்பிருந்தும் இது எப்படி நடந்தது?"

"மன்னா, கலங்காதே.நீ கட்டிய இந்த ஏழாவது மாடியில் அழகான தூண்களில் யாளியின் உருவம் செதுக்கப் பட்டுள்ளது. அந்த யாளிகள் வாயைத் திறந்து கொண்டு இருப்பதைப் பார். அதன்  வாய்க்குள் உன் மகன் போட்ட பந்து விழ அதனை எடுக்கச் சென்றபோது யாளியின் கூர்மையான பற்கள் இளவரசனின் பிடரியில் குத்தி அவன் உயிர் பிரிந்துள்ளது." 

"மிஹிரரே உமது சோதிடத்தை நான்எளிதாக  நினைத்துவிட்டேன். தாங்கள் சாதாரண மிஹிரர் அல்ல. வராகமிஹிரர். வராகத்தினால் என் மகன் உயிர் பிரியும் என்று சோதிடம் சொன்ன தங்களின் அறிவை நான் பாராட்டுகிறேன். இனி வருங்கால சரித்திரம் தங்களை வராஹமிஹிரர் என்று பாராட்டும்."

விக்கிரமாதித்யன் சபையிலிருந்த நவரத்தினங்கள் எனப்பட்ட ஒன்பது அறிஞர்களுள் வராஹமிஹிரரும் ஒருவராக இடம்  பெற்றார்.






-- ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

வியாழன், 23 ஜூன், 2011

68-பக்தி கொடுத்த பரிசு


.        அக்பர் பாதுஷா டில்லியில் அரசாண்டிருந்த காலம்.அவரது சபையிலே சூர்தாஸ் என்ற மகான் ஒருவர் இருந்தார்.மிகச் சிறந்த அறிவாளியான இவர் கல்வி கேள்வியிலும் அரசியல் அறிவிலும் சிறந்து விளங்கினார்.  அக்பர் பாதுஷா இவர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.இவருடன் அடிக்கடி வேதாந்த விசாரணையும் செய்து வ்ந்தார்.
ஒரு முறை கோகுலம் பிருந்தாவனம் அடங்கிய பகுதிக்கு ஒரு அதிகாரியை நியமிக்க  வேண்டி வந்தது. பக்திமானாகிய சூர்தாசரே அதற்குத் தகுதியானவர் என்றுமுடிவு செய்த அக்பர்பாதுஷா  அவரையே  அதிகாரியாக நியமித்தார். கண்ணன் பிறந்து வளர்ந்த பகுதிக்குத் தாம் அதிகாரியாக நியமிக்கப் பட்டதற்காக  மிகவும் மகிழ்ந்தார் சூர்தாசர்.

மிக்க மகிழ்வுடன் தமது பதவியை ஏற்கப் புறப்பட்டார். வழியெங்கும் கண்ணன் லீலைகள் புரிந்ததை நினைவு கூர்ந்தவாறு சென்றார்.அந்த எண்ணத்துடனே வந்து பதவி ஏற்றுக்கொண்டார்.ஒரு மெய்யன்பர் தமக்கு அதிகாரியாக வந்துள்ளதை அறிந்து மக்களும் பேருவகை எய்தினர்.

 இப்படியே சில ஆண்டுகள் கழிந்தன.சூர்தாசர் அரசாங்கப் பணி தவிரஆண்டவன் பணியும்  செய்து வரலானார்.தமக்கென உள்ள செல்வம் அனைத்தையும் அடியார்களுக்காகச் செலவழித்தார்.தமது செல்வத்தைப் பயனுள்ள வழியில் செலவிட முடிந்ததே என்று மக்களுக்கு வாரி வாரி வழங்கினார்.
காலப் போக்கில் செல்வம் செல்வோம் எனச் சென்றுவிட சூர்தாசர் வறியவரானார். இறைவன் பணி செய்ய இவரிடம் இப்போது செல்வம் இல்லை.

இந்த சமயத்தில் திருவிழாவும் வந்தது. அடியார்களின் திருக் கூட்டமும் வந்தது. செலவு செய்யக் கையிலே பணமில்லாத போது பாதுஷாவுக்குச் சேரவேண்டிய வரிப்பணமும் வந்து சேர்ந்தது.அந்தப் பொருளை எடுத்து கைங்கர்யம் செய்தால் என்ன என்று எண்ணிய சூர்தாசர் மன்னனின் வரிப் பணத்தை எடுத்துச் செலவு செய்து விட்டார்."இது பகவத் கைங்கர்யம். மன்னனே செய்ய வேண்டியது. நான் செய்ததால் மன்னனுக்கும் இறைவன் அருள் கிட்டும்" என தன்னைச் சமாதானம் செய்து கொண்டார்.

இப்படியே சில நாட்கள் சென்றன.ஊரிலுள்ள பொறாமைக்காரன் ஒருவன் நேரில் டில்லி மாநகருக்கே சென்று பாதுஷாவிடம் கோள் மூட்டினான்.
சூர்தாசர் சிறந்த மனிதராயினும் மன்னனின் ஆணை  இன்றி வரிப்பணத்தைச் செலவு செய்தது பெருங்குற்றம்  மதுரா, பிருந்தாவனம், துவாரகா, ஆகிய மாவட்டங்களிலிருந்து வரவேண்டிய  வரிப்பணம் நிலுவையில் உள்ளது. அதை உடனடியாக வசூலித்து வரவேண்டும்.என உத்தரவிட்டான்.

இந்தப் பணத்தைக் கட்டத் தவறினால் சூர்தாசரைக் கைது செய்யவும் அதிகாரம் அளித்துத் தன் முத்திரையையும் 
கொடுத்தனுப்பினான்.
வீரர்கள்  மதுராவை அடைந்து அரசரின் மடலைக் காட்டுமுன்பாகவே சூர்தாசர் செய்தியை யூகித்துத்  தெரிந்து கொண்டார்.வந்த வீரர்களை வரவேற்று உபசரித்து மிகுந்த மரியாதையுடன் அவர்களுடன் பேசினார்.
"அன்பர்களே, நான் அரசரின் வரிப் பணத்தை வீணாகச் செலவு செய்து விட்டேன் என்று தானே உங்களை மன்னர் இங்கு அனுப்பியுள்ளார்.அது வீண் புரளி. நான் மன்னரின் பணத்தை வராகனாக வைக்காமல் சிறந்த நவரத்தினங்களாக வாங்கி வைத்துள்ளேன். அவற்றைக் கொண்டு போக உங்களுக்கு சிரமம் ஏதும் இருக்காதல்லவா? "
சூர்தாஸின் இந்த மொழிகளைக் கேட்ட வீரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.சூர்தாசர் உள்ளே சென்று ஒரு பெட்டி நிறைய கூழாங்கற்களைப் போட்டு மூடி அதன் மேல் ஒரு கடிதமும் வைத்து அனுப்பினார். 

அந்தக் கடிதத்தின் செய்தி இதுதான்.
"மன்னர் பெருமானே! அரசாங்கப் பணத்தை எடுத்துச் செலவு செய்தது உண்மையே.அது அடியார்களுக்காக செலவிடப் பட்டது.புனித நகரங்களுக்கு வரும் அடியார்களின் நலனுக்காக தங்களின் செல்வம்  செலவிடப் பட்டது.
இந்த மிகச் சிறந்த பணியால் இறைவனின் திருவுள்ளம் குளிரும். அதனால் தங்களின் நாட்டுக்கும் ஆட்சிக்கும் இது பெருமையையும் புண்ணியத்தையும் தரும்.இதனால் நாடும் செழிக்கும் நாமும் தூயராவோம் என்றே இப்படிச் செய்தேன். இது தவறு எனில் என்னை மன்னித்து விடுங்கள்."
.பெட்டியையும் கடிதத்தையும் அனுப்பிவிட்டு சூர்தாசர் அருகே இருந்த காட்டுக்குள் சென்று தியானத்தில் அமர்ந்தார்.
அவரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட எண்ணித் தேடிய வீரர்கள் சூர்தாசரைப் பாராமலேயே கடிதத்தையும் பெட்டியையும் எடுத்துக் கொண்டு அரண்மனை அடைந்தனர்.

கொண்டு வந்த பெட்டியை அக்பர் பாதுஷாவின் முன் வைத்து வணங்கி நின்றனர் வீரர்கள்.ஒருவன் சூர்தாஸ் அளித்த கடிதத்தை மன்னனிடம் கொடுத்தான்.கடிதத்தைப் படித்த அக்பர் திகைத்தார்.வீரர்களைப் பார்த்துக் கேட்டார்.
"இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது?"
"மகாராஜ், இதில் நவரத்தினங்கள் இருப்பதாக சூர்தாஸ் மகாராஜ் கூறினார்."
அந்தப் பெட்டியைத் திறக்கச் சொல்லிப் பார்த்தார் பாதுஷா. உள்ளே கண்களைப் பறிக்கும் பிரகாசத்துடன் நவரத்தினங்கள் ஒளி வீசின.
பாதுஷா குழப்பத்தில் ஆழ்ந்தார்.கடிதத்தில் வரிப்பணத்தை செலவு செய்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்தப் பணத்தின் மதிப்புக்கு மேலேயே மதிப்புள்ள நவ ரத்தினங்கள் பெட்டியிலுள்ளன.இதில் எது உண்மை? எது பொய்? ஒன்றும் புரியவில்லை பாதுஷாவுக்கு.
உடனே சூர்தாசரை அழைத்து வர ஆணையிட்டார்.
மதுராவுக்கு விரைந்த வீரர்கள் அவரைக் காட்டில் தியானத்தில் இருக்கும் போது கண்டு வணங்கினர். மன்னரின் 
ஆணையை அறிந்து உடனே புறப்பட்டார். சூர்தாசரின் பெருமையையும் மகிமையையும் அறிந்து கொண்ட அக்பர் அவரை வாயிலிலேயே நின்று வரவேற்று அழைத்துச்  சென்றார்.உண்மையை அனைவரும் அறிந்தனர்.

சூர்தாசரின் பஜனைக்கும் பக்திப் பாடல்களுக்கும் மயங்கிய கண்ணன் அவரது விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறான். தன் பக்தனின் வாக்குப்பொய்க்கக் கூடாது என்று பெட்டியில்  நவரத்தினங்களை நிரப்பிக் கொடுத்துள்ளான். ஆண்டவனே கட்டுப் படும் அளவு பக்தியுடைய சூர்தாசரிடம் மேலும் அன்பு பெருகியது அக்பருக்கு.
தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அக்பர் மீண்டும் அதே பகுதிக்கு அதிகாரியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ஆனால் இறைபக்தி செய்வதை விட்டு அரசாங்க சேவகம் செய்வதை விரும்பவில்லை என்பதை சூர்தாசர்  விளக்கியும் மன்னர் ஒப்புக் கொள்ளவில்லை.
"தாங்கள் பதவியில்  இருந்துகொண்டே இறைவன் பணியும் செய்யலாமே."
"அரசே, ஒருமுறை சிக்கல் தோன்றிவிட்டால் தொடர்ந்து உமது கட்டளையை நான் கேட்டே எந்தப் பணியும் செய்ய நேரும். அதனால் எனக்கு இந்தப் பதவி வேண்டாம் என்னைச் சுதந்திரமாக இருக்கவிடுங்கள்."
அரசர் சிந்தித்தார்.
"தாசரே! நீர் எனக்கு திறை செலுத்த வேண்டாம்.எனக்கு உட்படவும் வேண்டாம் இந்த மூன்று மாவட்டங்களையும் உமக்கே உரிமையாகக் கொடுத்தேன். இனி நீர் சுதந்திரமாக தொண்டு  செய்யலாம்"

இதக் கேட்ட சூர்தாசர் சற்றே அமைதியாக நின்றார். அக்பர் அவரின் கரங்களைப் பற்றிக் கொண்டு "தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என வேண்டினார்.

அரசரின் மனம் பக்தியில் நிரைந்துள்ளது இதனால் மக்கள் நல்வாழ்வு பெறவும் வழி ஏற்படும் என எண்ணிய சூர்தாசர் 
"அரசே, தாங்கள் இவ்வளவு கூறியபின் மறுக்க இயலவில்லை.தாங்கள் இன்று முதல் சாதுக்களின் சேவையும் ஹரிபக்தியும் செய்து வாருங்கள் என ஆசி கூறிவிட்டு மதுராவிற்குப் புறப்பட்டார்.

பெட்டியிலிருந்த நவரத்தினங்களையும் திருப்பணிக்கே கொடுத்து அவரை மிகுந்த மரியாதையுடன் அனுப்பிவைத்தார் அக்பர்பாதுஷா.
சூர்தாசர் எம்பெருமான் கண்ணனின் திருவருளையும் அவனது திருவிளையாடல்களையும் எண்ணிப் பாடல் இசைத்தவாறே மதுரா வந்து சேர்ந்தார்.ஒரு பக்தனின் வேண்டுகோளுக்காக அவன் சொல்லைக் காக்க கல்லை நவரத்தினமாக்கிய கண்ணனின் பேரன்பை எண்ணி எண்ணி உருகினார். அவரதுஉள்ளத்தில்  பக்திக்காக ஆண்டவன் அளித்த பரிசை எண்ணும்போதெல்லாம் கண்ணன் மீது அன்பு மேலும் பெருகியது. அவனைப் பாடுவதே தன் கடன் என எண்ணி பாடல்களைப் பாடிப் பரவசத்துடன் வாழ்ந்தார். அவரது பாடல்கள் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருப்பதையும் அவரது வாழ்க்கை அவரது பக்திச் சிறப்பையும் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com