செவ்வாய், 28 ஜூலை, 2009

இன்சொல் தந்த பரிசு

பள்ளிக்கூட மணி அடித்ததும் ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறினார். மாணவர்களும் வரிசையாக எழுந்து வெளியே சென்றனர்.பாஸ்கரனும் தன புத்தகப் பையை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்று வெளியே வந்தான்.அவனைத் தள்ளிக்கொண்டும் மற்ற மாணவர்களைத் திட்டிக்கொண்டும் ஓடினான் முருகன்.அவனுக்குப் பயந்து கொண்டு அனைவரும் வழி விட்டு ஒதுங்கி நின்றனர்.

அவ்வளவு வேகமாக ஓடி வந்தவன் வெளியே மரத் தடியில் நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டு நின்று கொண்டான்.இரண்டு நிமிடங்கள் பேசுவதற்குள் சண்டை வந்து விட்டது."டேய் முருகா! நீ எப்பவும் நீ சொன்னபடியேதான் செய்யணும்னு சொல்றே " "ஆமாண்டா அப்படித்தான் சொல்வேன். நீங்கள்ளாம் என்கிட்டே வாங்கித்தின்கிற பயலுகதானே அப்புறம் என்னடா? ""டேய் நீ குடுத்தே நாங்க வாங்கிக்கிட்டோம். இனிமே அப்படிப் பேசாதே.""பேசுவேன் அப்படித்தான் பேசுவேன்.வெட்கங்கெட்ட பயலுக நீங்க. உங்களுக்கு ரோஷம் வேற வருதா?""டேய் வாங்கடா போகலாம்.இவன்கூட பழகறதே தப்புடா.""அட போங்கடா" என்றபடியே அவர்களைத் தள்ளி விட்டுவிட்டு அங்கேயே அமர்ந்து கொண்டு எதையோ வாயில் போட்டு மென்று கொண்டு இருந்தான்.

இதைப்பர்த்துக்கொண்டே மெதுவாக நடந்து வந்தான் பாஸ்கரன். முருகனின் அருகே வந்து அவன் தோளில் தன கையை வைத்தான்.முருகனின் அருகே அமர்ந்து கொண்டான்.அவனை அல்க்ஷியமாகப் பார்த்த முருகன் தன வேலையிலேயே கவனமாக இருந்தான்."முருகா! ஏன் எப்பவும் சிடு சிடுன்னே இருக்கே? ஏன் கடும் சொல்லே பேசறே?""என் இஷ்டம்""என் வகுப்புத் தோழன் நீ.எப்பவும் நல்ல சொற்களும் இனிய வார்த்தைகளும் பேசணும்னு ஆசைப்படறேன்.""நீதான் இனிமையான சொல் பேசுகிறாயே எனக்கு நான் பேசறதுதான் இனிமையான சொல். இதுக்குமேலே இனிமையாகப் பேச எனக்குத் தெரியாது.நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ."

பையைத் தூக்கிக் கொண்டு விறுவிறுவென்று நடந்து மறைந்தான் முருகன். பாஸ்கரன் பெருமூச்சு விட்டவாறே தன இல்லம் நோக்கி நடந்தான். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. சாப்பிட்டானபின் பிற்பகல் நேரம்.வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. வெய்யில் இல்லாததால் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தனர். பாஸ்கரனும் தன நண்பர்கள் சிலருடன் பந்து விளையாடிக்கொண்டிருந்தான். அங்கே வந்த முருகனும் அவர்களுடன் விளையாட சேர்ந்து கொண்டான்.

இவனைப் பார்த்த ராமுவும் கமாலும் "நாங்க வரலேடா " என்றபடியே நகர்ந்தனர். "டேய் முருகன் வரதுனாலே உங்களுக்கேன்னடா கஷ்டம்?" "கொஞ்ச நேரத்துலே சண்டை போடுவான். எப்பவும் திட்டுவான். அவன் கூட நாங்க விளையாட மாட்டோம்.""டேய் ராமு! முருகன் எப்பவாச்சும்தான் கோபப்படுவான். விளையட்டிலேஎல்லாம் கோபப்பட மாட்டான் . வாங்கடா" என்று அவர்களை நிற்க வைத்தான் பாஸ்கரன்.விளையாட்டை விட மனமில்லாததால் இருவரும் மீண்டும் வந்து இணைந்து கொண்டனர்.சற்றே முறுவலுடன் தன நன்றியைத் தெரிவித்துக்கொண்ட முருகன் மகிழ்ச்சியுடன் விளையாடத் தொடங்கினான்.பத்து நிமிட நேரம் மகிழ்ச்சியாக விளையாடினர். சற்றைக்கெல்லாம் தனக்குப்பந்து போடவில்லை என ராமுவைக் கடுஞ்சொல்லால் திட்டினான் முருகன்."டேய் அழுகுணி! ஏண்டா எனக்குப் போடாமே பாஸ்கருக்கே போடறே?"" இதோ நான் உனக்குப் போடறேன் நீ அடி""ஒண்ணும் வேண்டாம். இந்தத் தடிப்பயல் ராமுவுக்கும் கமாலுக்குமே பந்து வீசறான். இந்தக் குரங்கு மூஞ்சியும் இளிச்சுக்கிட்டே அடிக்கிறான். நான் நிற்கிறது இவனுகளுக்குக் கண் தெரியலை.

குருட்டுப்பசங்க..." கமாலுக்குக் கோபம் வந்தது. கையை ஓங்கினான். "டேய்..!" பாஸ்கரன் குறுக்கிடாவிட்டால் குத்து முருகன் முகத்தில் விழுந்திருக்கும். பெரிய சண்டையே நடந்திருக்கும். நல்லவேளையாக பாஸ்கரன் இடையிட்டு விளையாட்டை முடித்து வைத்தான். அனைவரையும் சமாதானமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தான். பின்னர் தன வீட்டுத்திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டான் பாஸ்கரன்.முனகியவாறே மெதுவாக நடந்து சென்றான் முருகன்.அவன் எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது."டேய் தம்பி! இங்கே வா."" நான் ஒண்ணும் டேய் தம்பி இல்லே. எல் முருகன்." அவன் கோபத்தை ரசித்தார் வந்தவர்."அட..ரொம்ப கோபமா இருக்காப்பல இருக்கு. சரி.. எல். முருகா! இங்கே சன்னதி தெரு எங்கே இருக்கு?"புன்னகையுடன் கேட்டார் வந்தவர்." அதெல்லாம் எனக்குத்தெரியாது.

வேற யார் கிட்டவாவது கேட்டுக்குங்க. நீங்க வச்ச ஆளா நான்?""என் தம்பி! ஒரு சின்ன உதவி. அதைச்செய்யா விட்டாலும் பரவாயில்லை. பேச்சிலேயாவது மரியாதை இருக்கலாமே ...படிக்கிற பையன் தானே நீ?""அதப்பத்தி உங்களுக்கென்ன? சன்னதித்தெருவைத் தேடுங்க ..." என்றபடியே ஓடிவிட்டான்.சற்றுத் தொலைவில் திண்ணையில் அமர்ந்தவாறே முருகனுடன் யாரோ ஒரு பெரியவர் பேசுவதைக் கண்ட பாஸ்கரன் வேகமாக அவர் அருகே வந்தான்."அய்யா! வணக்கம்...வாங்க உங்களுக்கு என்ன வேணும்?"முருகனால் மனதில் மூண்ட கோபம் பாஸ்கரனால் தணிந்தது. " தம்பி! சன்னதித் தெரு எதுப்பா?""இந்தத் தெருவோட போயி வலது புறம் திரும்பினால் சன்னதித் தெரு....நீங்க யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க?""அங்கே நாலாம் நம்பர் வீட்டிலே பள்ளித் தலைமை ஆசிரியர் இருக்காரில்லையா...அவரைத் தான் பார்க்கணும்.""அப்படியா? வாங்க...நான் கூட்டிக்கிட்டுப் போறேன்." என்றவன் அவருடன் பேசிய படியே நடந்தான்.அவனது பண்பான நடத்தையைக்கண்டு மகிழ்ந்தவர் அவனைப்பற்றியும் விசாரித்தார்."தம்பி, உன் பேரென்ன? "" என் பெயர் பாஸ்கரன்.

இந்த ஊர் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கிறேன்.""பாஸ்கரா! நீ வருவதற்கு முன்பாக ஒரு பையன் பேசிக்கொண்டு இருந்தானே, அவன் பெயர் கூட....ஆ.,எல்.முருகன்...அவனும் உங்கள் பள்ளியில் தான் படிக்கிறானா?ரொம்ப கோபக்காரனோ ?""அவன் பெயர் முருகன்தான்.என் வகுப்பில் தான் படிக்கிறான். கொஞ்சம் முன்கோபி.ஆனால் நல்லவன். விளையாட்டிலே தோத்திட்டதால் அவன் உங்ககிட்டே கொஞ்சம் கோபமாகப் பேசியிருப்பான். அவனுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன்.""பரவயில்லையே! நண்பனை விட்டுக்கொடுக்காமல் பேசறியே....வெரிகுட்! "என்றவாறே தலைமை ஆசிரியர் வீட்டின் முன் வந்து நின்றார்.வெளியே வந்து பார்த்த தலைமை ஆசிரியர் அவரைப்பார்த்த உடன் மிகவும் பணிவுடன் வரவேற்றார்.அப்போதுதான் தெரிந்தது வந்திருப்பவர் பள்ளியைத் தணிக்கை செய்ய வந்துள்ள மேலதிகாரி என்பது.

மறுநாள் காலையில்தான் வருவதாக இருந்தது, முதல்நாளே வந்து விட்டார். தனது உதவியாளர் இருவரும் மறுநாள் காலையில் வருவார்கள் என்று சொன்னார். அந்த ஊர் கோவிலைப் பார்ப்பதற்காகவும் தான் விரைவிலேயே ஊர் திரும்பவேண்டியிருப்பதாலும் முதல் நாளே வந்ததாகக் கூறினார். அவருடன் அவரது தனியறைக்குச் சென்று அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய பாஸ்கரனுக்குக் கட்டளையிட்டார். தானும் அவர்களுடன் சென்றார்.

மறுநாளும் அதற்கு மறுநாளும் பள்ளி கல்யாணவீடு போல அமர்க்களப்பட்டது. மேலதிகாரிகள் திடீரென வந்து விட்டதால் எல்லா ஆசிரியர்களும் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டனர்.அதிகாரி இருக்கும் இடத்திற்கு பாஸ்கரன் அடிக்கடி சென்று ஏதாவது தேவையா? என்று விசாரித்தான் .அவனைப்பார்க்கும் போதெல்லாம் அதிகாரி புன்னகைத்தார்.அந்தப் புன்னகையே தலைமை ஆசிரியருக்குப் புத்துணர்ச்சி ஊட்டியது. அதிகாரி அன்றுடன் தன தணிக்கை முடித்து ஊர் திரும்பப் போகிறார். மாலையில் ஒரு கூட்டம் கூட்டி மாணவர்களிடையே ஒரு சில சொற்கள் பேச ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் கூடியிருந்தது. அனைத்து மாணவரும் ஆசிரியர்களும் கூடியிருந்தனர். தலைமையாசிரியர் பேசியபின் அதிகாரி எழுந்து பேசத் தொடங்கினார்.

" மாணவ மணிகளே! வணக்கம். உங்கள் அனைவரையும் ஒன்றாகப் பார்ப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோல் இந்தப்பள்ளி மாணவன் பாஸ்கரனைப் பார்த்த பிறகு இந்தப் பள்ளியைப்பற்றி உயர்ந்த எண்ணம்தான் தோன்றுகிறது. பணிவு, இன்சொல், அன்பு கொண்ட பாஸ்கரன் இந்தப் பள்ளிக்கே பெருமை சேர்த்து விட்டான். அவனைப் போலவே இங்கு பயிலும் ஒவ்வொரு மாணவனும் இருப்பான் என நம்புகிறேன். கடந்த இரண்டு நாட்களாக என்னுடனேயே இருந்து எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்த பாக்கறான் என்ற மாணவன் தன நல்ல பண்பால் எங்களின் உள்ளங்களை மகிழச் செய்து விட்டான்.அவனுக்கு அடுத்த ஆண்டிற்கான புத்தகச் செலவு சீருடைக்கான செலவு இவற்றை நானே ஏற்கிறேன்.இந்தத் திருவள்ளுவரின் திருக்குறள் நூலை அவனுக்குப் பரிசாக அளிக்கிறேன். " என்றபோது அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.பாஸ்கரன் நாணத்துடன் மேடையேறி நின்றான். அதிகாரி அவனைத் தட்டிக்கொடுத்தவாறு பேசினார். " இந்தப் பரிசை என் கையால் கொடுப்பதை விட அவன் வகுப்பு மாணவன் கையால் கொடுப்பதே சிறந்தது என நான் நினைக்கிறேன். ..."என்றபடியே சுற்றிலும் பார்த்தார். அவர் கண்ணில் படாமல் ராமுவின் முதுகுக்குப்பின்னால் மறைந்து அமர்ந்திருந்த முருகன் அவர் கண்ணில் படவே புன்னகையுடன் அழைத்தார்.

" எல். முருகன் இப்படி மேடைக்கு வா!." அனைவரும் திகைத்தனர். இவன் பெயர் அதிகாரிக்கு எப்படித்தெரியும்? என்று ஆச்சரியப்பட்டனர். அந்த ரகசியம் முருகனுக்கும் அதிகாரிக்கும் மட்டும்தானே தெரியும்!மெதுவாக நடந்து வந்த முருகன் தலை குனிந்து நின்றான். அவன் கையில் நூலைக்கொடுத்தவர்," எல். முருகா! உன் கையால் இந்தப்பரிசைக் கொடு . அடுத்த ஆண்டு இதேபோல நீ பரிசு வாங்க வேண்டும்..." என்றபடியே அவன் முதுகைத்தட்டினார். அழகான அந்த நூலைத் தடவியவாறே அதைப் பாஸ்கரனின் கையில் கொடுத்தான் முருகன். தனக்கு வரவேண்டிய பரிசு தன துடுக்குத் தனத்தால் பாச்கரனுக்குச் சென்ன்று விட்டதே....தான் மட்டும் அதிகாரியிடம் மரியாதையுடன் இன்சொல் பேசியிருந்தால் இந்தப்பரிசு தனக்கு வந்திருக்குமே. எத்தனை பெருமையாக இருந்திருக்கும்! "அவன் மனம் அன்றே முடிவு செய்து கொண்டது. ' இனி எந்த சமயத்திலும் இனிய சொல் தவிர கடுஞ்சொல் பேசுவதேயில்லை .'

விளையாட்டை விட மனமில்லாத இருவரும் மீண்டும் வந்து சேர்ந்து கொண்டனர்.

புதன், 22 ஜூலை, 2009

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - இரண்டாம் பகுதி

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் - முதல் பகுதி

தன் கலயத்தைக் குழாயடியில் கழுவிக்கொண்ட முருகன் நீரைப் பிடித்துக் குடித்தான். மீண்டும் பசிக்கும் போது குடிக்கலாமே என்று கலயத்தில் நீரை நிரப்பிக் கொண்டான். அதனைச் சுமந்து கொண்டு அடுத்த ஊர் நோக்கி நடந்தான். அந்த ஊரிலாவது வேலை கிடைக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டே நடந்தான். உச்சி வேளை நல்ல வெய்யில் நேரம். உச்சி வெய்யில் தலையைப் பிளந்தது. வயல் வெளியைத்தாண்டி நடந்தான். பசுமையான மரங்கள் தெரிந்தன. அதனிடையே பெரிய கட்டடம் ஒன்று தெரிந்தது. நிறைய மக்கள் அங்கும் இங்குமாகச் செல்வதை கேசவன் பார்த்தான். சற்று இளைப்பாறுவதற்காக அங்கே ஒரு மரத்தடியில் அமர்ந்தான். களைப்பால் கண்கள் மூடியிருந்தன.

"தம்பி!" யாரோ அழைக்கவே கண்களைத் திறந்து பார்த்தான்.
" தம்பி, ரொம்ப தாகமாயிருக்கு. கொண்டாந்த தண்ணி காலியாயிடுச்சு . இந்தத் தண்ணி நல்ல தண்ணிதானே! கொஞ்சம் தரியா?"
வயதான கிழவர் பரிதாபமாகக் கேட்டார். கொஞ்ச நேரம் யோசித்தவன், சரியென்று அவரிடம் கலயத்தை நீட்டினான்.அதை வாங்கி மடமடவெனக் குடித்தவர் " அப்பாடா! அமிர்தமா ஜில்லுனு இருக்கு" என்றவாறு கேசவனைப் பார்த்துப் புன்னகைத்தார். கேசவன் கலயத்தைப் பார்த்தான். நீர் முழுவதும் காலியாகி இருந்தது. அவன் முகம் ஏமாற்றத்தால் வாடியதைக் கண்டார் பெரியவர்.

"தம்பி! இந்தச் சுற்று வட்டாரத்திலே கொஞ்சம் தண்ணி கஷ்டம். உப்புத் தண்ணிதான் கிடைக்கும். நல்ல தண்ணிக்கு கொஞ்ச தூரம் போகணும். இங்கே தாசில்தார் ஆபீசுக்கு வாரவங்க எல்லோரும் தாகத்திலே தவிக்கிறோம். நல்லவேளையா நீ தண்ணி கொண்டாந்தே. இந்தா இதை வாங்கிக்க ஏதாவது வாங்கிச் சாப்பிடு." என்றவாறே ஒரு இரண்டு ரூபாய்த் தாளை அவனிடம் கொடுத்தார். ஏதும் பதில் சொல்லத் தோன்றாமல் அந்த ரூபாயைப் பெற்றுக்கொண்டான் கேசவன். அவன் உள்ளம் ' குடிதண்ணீருக்கு இவ்வளவு கஷ்டமா இங்கு...' என்று எண்ணிப்பார்த்தது.

மறுநாள் காலை பத்து மணி. வெய்யில் தொடங்கி விட்டது. தலையில் பானையில் நல்ல நீரும் கையில் அலுமினிய தம்ளரும் வைத்துக் கொண்டு அதே இடத்துக்கு வந்தான். அவனைப் பார்த்தவர்கள் நாலைந்து பேர் அவனிடம் வந்து "என்ன அது?" என்றனர். " குடிதண்ணீர் " என்றபோது "எனக்கு, எனக்கு" எனக் கை நீட்டினர். ஒவ்வொருவருக்கும் நீர் கொடுத்தவன் "அய்யா! உங்களுக்கு விருப்பமானதைக் கொடுங்கள் " என்று கேட்டுப்பெற்றான். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை வெகு தொலைவு நடந்து சென்று நீர் கொண்டு வந்து பலரின் தாகத்தைத் தணித்தான். மாலையில் காசுகளை எண்ணிப்பார்த்த பொழுது அவனால் நம்பமுடியாத அளவுக்குக் காசு சேர்ந்திருந்தது. வயிறு நிறைய சாப்பிட்டான்.

கேசவனது இந்தத் தொழில் தொடர்ந்தது. சில நாட்கள் சென்ற பின்னர் ஒரு பானை இரண்டு பானை ஆனது. நீர் நீர்மோரானது. அத்துடன் கடலை பிஸ்கட் மிட்டாய் வெற்றிலை பாக்கு என்று வாங்கிச் சென்று விற்று வர நல்ல காசு கிடைத்தது.

ஓராண்டு கழிந்தது. நகரத்தார் பலரது பழக்கம் ஏற்பட சிறியதாக ஒரு பெட்டிக்கடை போட்டு அங்கேயே தங்கிக் கொண்டான். முதல் நாள் மாலையே ஊருக்குள் சென்று பால் தயிர் நீர் தின்பண்டங்கள் என்று வாங்கி வந்து விடுவான். மறுநாள் காலை முதல் வியாபாரம் நடக்கும்.

இப்படியே வருடங்கள் உருண்டோட அங்கேயே சிற்றுண்டிச் சாலை வைத்தான். பல ஆண்டுகளாக கேசவனை அறிந்தவர்கள் அவனுக்கு உதவி புரிந்தனர். கடையில் நல்ல வருமானம் வந்தது. கையில் கொஞ்சம் காசு சேர்ந்தவுடன் தன் தந்தையைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தம்பி தங்கையர் நினைவு வந்தது. ஒரு விடுமுறை நாளாகப் பார்த்துப புறப்பட்டான். அனைவருக்கும் புதுத் துணி மணிகள் இனிப்புகள் பலகாரங்கள் பழங்கள் என வாங்கிக் கொண்டு ஊருக்குச் சென்றான்.

வயதாகிவிட்ட தன் தந்தை இன்னமும் வயலில் வேலை செய்வதையும் தன் பெரிய தம்பி அவருடன் நடவு செய்து கொண்டிருப்பதையும் பார்த்தான். அவர் முன் சென்று வணங்கி நின்றான். அடையாளம் தெரிந்து கொள்ளாத முருகன் திகைத்தார். தன் மகன் கேசவன் என்பதைத் தெரிந்து கொண்டபின் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார். மகிழ்ச்சியில் அவர் கண்கள் நீரைச் சொரிந்தன.

"அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்" அன்றோ?

அனைவரும் அவனைத் தழுவி மகிழ்ந்தனர். அவர்களுக் கெல்லாம் கேசவன் வளமுடன் வந்ததில் மிக்க மகிழ்சசி.

" அப்பா! எல்லாரும் என்கூட வந்திடுங்க. உங்களை உக்கார வச்சு சோறு போடறேன். தம்பி தங்கச்சியைப் படிக்க வைக்கிறேன். இன்னும் ஏனப்பா கஷ்டப் படுறீங்க?" என்ற கேசவனைப் புன்னகையுடன் பார்த்தார் முருகன்.

" இந்த உடம்பு உழைச்சுச் சாப்பிடற உடம்புப்பா .உக்கார இன்னும் காலம் வரலே. அந்தக் காலம் வரும்போதும் நீ என்னைக் காப்பாத்து. நாங்க சேத்திலே காலை வச்சாத்தாம்பா பட்டணத்துக்காரங்க

சோத்திலே கையை வைக்க முடியும். நீ நல்லா இருக்கே அதுபோதும் எனக்கு. உன் பெரிய தம்பியைக் கூட்டிக் கிட்டுப்போ . நல்லா வளமா இருங்கப்பா." என்றபடியே பேச்சை முடித்துக்கொண்டார்.

இரண்டு நாட்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளிப் பண்டிகை கொண்டாடி விட்டுத் தன் தம்பியுடன் ஊர் திரும்பினான் கேசவன். மறக்காமல் அடுத்த தம்பி தங்கைகளைப் பள்ளியில் சேர்த்து விட்டுத்தான் வந்தான்.

வீட்டுக்குள் வந்தவுடன் சாமி படத்தின் முன் ஒரு கலயம் இருப்பதைப் பார்த்து "என்ன அண்ணே இது?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் தம்பி.

" இதுவா? வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை நினைவு படுத்தத்தான் இந்தக் கலயத்தை வைத்திருக்கிறேன். என் ஆரம்ப நாட்களின் நினைவுச் சின்னம் இது " என்று சொன்ன அண்ணனைப் புரியாத புன்னகையுடன் பார்த்தான் தம்பி.

செவ்வாய், 21 ஜூலை, 2009

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் - முதல் பகுதி

பொன்வயல் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் முருகன் வயலில் நாற்று நாடும் வேலை செய்து பிழைத்து வந்தான். அவனுக்கு கேசவன் என்ற ஒரு மகன் இருந்தான். அவன் ஒரு வயதாக இருக்கும்போதே அவனது தாயார் இறந்து விட்டார். குழந்தை கேசவனை வளர்க்க இயலாமல் முருகன் இரண்டாம் முறை மணந்து கொண்டார். கேசவன் ஐந்து வயது முதலே தந்தையுடன் வயலுக்குச் சென்று நாற்று நடும் வேலை செய்து வந்தான்.

அவனுக்குப் பின்னால் தம்பி தங்கை என்று நான்கு பேர் பிறந்தனர். அதனால் கேசவனுக்கு வீட்டில் வேலை அதிகமானது. சுதந்திரமாக சுவாசிக்க முடியாமல் அந்தச் சின்ன குடிசைக் குள்ளே அவன் வாழ்வு முடங்கிப் போனது. அத்துடன் அவன் சின்னம்மாவின் கடுஞ் சொற்கள் வேறு. சிறுவனான அவனுக்கு வாழ்வே வெறுத்து விட்டது.

ஒரு நாள் நல்ல வெய்யில் நேரம். கஞ்சி எடுத்துக் கொண்டு தந்தையைத் தேடி வயலுக்குச் சென்றான் கேசவன். அவன் தந்தைக்குக் கஞ்சியைக் கொடுத்து விட்டு அந்த கலயத்தைக் கழுவி கையில் எடுத்துக் கொண்டு நடந்தான். தன் தந்தையை ஒரு முறை திரும்பிப் பார்த்தான். பின்னர் வேகமாக நடந்தான். அருகே உள்ள நகரத்தை நோக்கி அவன் கால்கள் நடந்தன. அவன் கண்கள் பாதை நோக்கி இருந்தன. உள்ளமோ சுதந்திரத்தை நாடித் துடித்துக் கொண்டிருந்தது. எப்படியேனும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு அவன் முகத்தில் தெரிந்தது.

இருள் சேரும் நேரம். ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்கினான். விடியும் முன்னரே எழுந்து நடக்கத் தொடங்கினான். பட்டணம் சென்று விட வேண்டும். ஏதேனும் வேலை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு வந்து கஷ்டப்படும் தந்தைக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவன் உள்ளம் முழுவதும் நிறைந்திருந்தது. பன்னிரண்டு வயது பாலகன் அழுக்குப் பனியன் மட்டுமே அணிந்து கையில் சிறு கலயத்துடன் நகரை அடைந்தான்.

அவன் நகரத்துள் நுழைந்து ஏதோ ஒரு தெருவை அடைந்து பசியுடன் ஒரு வீட்டின் முன் நின்றான். பிச்சை எடுக்க மனமில்லை.பசியோ வயிற்றைப் புரட்டியது. அப்படியே சாய்ந்து அமர்ந்தான். அந்த வீட்டிலிருந்த ஒரு அம்மாள் கையில் பாத்திரத்துடன் வெளியே வந்தாள்.

"இந்தாப்பா தம்பி இந்த மோரைக் குடிக்கிறயா?" என்றபடியே மோரை அவன் கலயத்தில் இட்டாள். அந்த மோர் அவனின் சிறிய வயிற்றுக்குப் போதுமானதாக இருந்தது. மடமடவெனக் குடித்தான். புளித்த மோராக இருந்தாலும் வயிற்றின் பசி எரிச்சலுக்கு அந்தப் புளித்த மோர் உகந்த மருந்தாக இருந்தது. மோரைக் குடித்தவன் " அம்மா! ஏதாவது வேலை இருந்தாக் குடுங்கம்மா! " என்றான். அதற்கு அந்த அம்மாள், "வேலையெல்லாம் ஒன்றுமில்லையப்பா. ஏற்கெனவே வேலையில்லாமே ரெண்டு பசங்க உட்கர்ந்திருக்குங்க " என்று முணுமுணுத்து விட்டுச் சென்றாள்.

திங்கள், 20 ஜூலை, 2009

பொறுமையின் பரிசு

ஓர் ஊரில் அரசனுக்கு இணையான செல்வம் படைத்த செல்வந்தர் இருந்தார். அவருக்குக்குழந்தைகள் கிடையாது. ஆனால் குழந்தைகளைக் கண்டால் மிகவும் பிடிக்கும். அவர் தனக்குப்பிறகு தன சொத்துக்களுக்கு ஒரு வாரிசு வேண்டும் என விரும்பினார். பல இடங்களுக்குப்போய்ப் பார்த்தார்.ஒரு குழந்தையும் அவருக்குக் கிடைக்கவில்லை. யாரையும் அவருக்குப்பிடிக்கவில்லை. தான் வாரிசாக ஏற்றுக்கொள்ளும் சிறுவன் நல்ல பண்புள்ளவனாக இருக்கவேண்டும் என விரும்பினார். அதனால் அவர் பல ஊர்களுக்கும் போய் அங்கங்கே இருக்கும் குழந்தைகளைப் பார்த்துப் பழகி வந்தார்.

ஒரு நாள் ஒரு சிறு கிராமத்துக்கு வந்தார்.அந்த கிராமம் மிகவும் அழகாக இருந்தது.ஊருக்குள் நுழையும் போதே பச்சைபசேல் என்று வயல்களும் மாந்தோப்பும் தென்னந்தோப்பும் மனதுக்கு மகிழ்ச்சியையும் குளிர்ச்சியையும் தந்தன. ஊருக்கு எல்லையாக சிலு சிலுவென்று பளிங்கு போன்ற நீரை உடைய ஆறு ஓடிக்கொண்டிருந்தது. சிறிய அம்மன் கோயிலும் பிள்ளையார் கோயிலும் அவ்வூர் மக்களின் பக்தியைப் பறை சாற்றிக்கொண்டிருந்தன. செல்வந்தர் அவ்வூரில் தனது வீட்டை அடைந்தார்.அந்த ஊரிலுள்ள சில தனவந்தர்கள் அவரைத்தேடி வந்து மரியாதை செலுத்திவிட்டுச் சென்றனர். செல்வந்தர் அவர்களிடம் " இவ்வூரில் உள்ள குழந்தைகளுக்கு நான் இனிப்பும் பரிசும் வழங்கப்போகிறேன். மாலை நான்கு மணிக்கு குழந்தைகள் அனைவரையும் எங்கள் வீட்டுத்தோட்டத்தில் கூடச்சொல்லுங்கள்." என்றார்.
நிறைய விளையாட்டுச் சாமான்களும் இனிப்புகளும் வீடு நிறைய குவித்திருந்தார்.

அந்த ஊரில் அமிர்தம் என்ற ஒரு பெண்மணி வசித்து வந்தாள். அவள் கணவன் தோட்டவேலை செய்து வந்தான். அவர்களுக்கு ஒரே மகன். கண்ணன் என்று அவனைச் செல்லமாக அழைத்து வந்தனர். கண்ணன் நல்லவனாக இருந்தாலும் பொறுமை என்பதே அவனிடம் இல்லை இதனால் அவன் என்ன நல்லதைச்செய்தாலும் அது தவறாக முடியும் அல்லது கெட்ட பெயரை த்தரும்.அவன் அம்மா பொறுமையாக இருக்கும்படி பல முறை சொல்லியும் அவன் கேட்கவில்லை. பொறுமையாக இருந்த பலரது வரலாறுகளைச் சொல்லியும் அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை.

அத்துடன் "ஏம்மா நான் நல்லா படிக்கிறேன். ஒழுங்காக பள்ளிக்கூடம் போகிறேன். நீயும் அப்பாவும் சொன்னபடி கேட்கிறேன்.பொறுமை இல்லாததால் சில சமயம் தவறு நேர்ந்து விடும். அதனால் என்ன குறைந்து விடப்போகிறது." என்று வாதாடுவான்.
அமிர்தமும் " பொறுத்தார் பூமியாள்வார் போகாதவர் காடாள்வார் என்ற பழமொழி தெரியாதா உனக்கு? நீ பொறுமையைக் கடைப்பிடித்தால் இன்னும் சிறப்பாக ப்போற்றப்படுவாய்."என்று சொல்லிப்பார்த்தாள் ஆனால் கண்ணன் பொறுமையில்லாமல் எல்லாவற்றிலும் அவசரம் காட்டினான். அவனது அவசர புத்தியைப் பார்த்து மிகவும் வருத்தப் பட்டாள் அவனைத்திருத்த வழி தெரியவில்லையே என ஏங்கினாள்.

அன்று பள்ளிசெல்ல அவசரமாக ஓடி வந்து சாப்பிட அமர்ந்தான். தன்னுடைய தட்டை வைத்துக்கொண்டு " அம்மா! அம்மா!" என்று அழைத்தான். அம்மா வரத்தாமதமாகவே தானே சாதம் போட்டுக்கொண்டு குழம்பை எடுத்து வேகமாக ஊற்றிக்கொண்டான். பாத்திரம் கீழே விழுந்து அத்தனை குழம்பும் கொட்டிவிட்டது. அமிர்தத்துக்கு கோபத்தை விட அழுகையும் வருத்தமும்தான் ஏற்பட்டது.குற்றம் செய்த கண்ணன் தலை குனிந்து கொண்டான்.

அவன் அம்மா "கண்ணா எனக்காக என்று ஒரு நாள் மட்டும் இரவு வரை பொறுமையாக இருந்து பார்.அது உனக்கு எத்தனை நன்மைகளைச்செய்யும் என்பதை அனுபவ பூர்வமாக நீ அறிவாய்..அப்போதுதான் பொறுமையின் பெருமை உனக்குப்புரியும். என்று மட்டுமாவது நீ பொறுமையாக இருப்பதாக இருந்தால் என்னுடன் பேசு இல்லாவிட்டால் அம்மா என்று கூப்பிடாதே." என்று வருத்தத்துடன் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

கண்ணன் சிந்தித்தான்." அம்மா சொல்வதுபோல் இன்று ஒரு நாள் மட்டும் பொறுமையாக இருந்து பார்ப்போமே என்ன நன்மையெல்லாம் ஏற்படுகின்றன என்பதைத்தெரிந்து கொள்வோமே " என முடிவு செய்து கொண்டான்.

பாத்திரத்தில் மீதியிருந்த குழம்பைத் தட்டில் ஊற்றிக்கொண்டு கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு நிதானமாக எழுந்து கையைக் கழுவிக்கொண்டு செம்பைக்கீழே வைத்தான்.அம்மாவின் புடவைத்தலைப்பில் கையைத் துடைக்காமல் துண்டைத் தேடி எடுத்துத் தன கையைத் துடைத்துக்கொண்டு மெதுவாக அம்மாவிடம் வந்தான்.

"அம்மா! நான் பள்ளிக்குப்போய் வருகிறேன். நீ சொன்னது போல் இன்று முழுவதும் பொறுமையாக இருப்பேன்." என்று சொன்னபோது அமிர்தம் மகிழ்ச்சியுடன் தலை அசைத்து விடை கொடுத்தாள். அவன் செல்வதைப்பார்த்துக்கொண்டே நின்றுகொண்டு இருந்தாள். அவசரமாக ஓடும் தன மகன் இன்று நிதானமாக நடந்து செல்வதைப் பார்க்க அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. திருப்தியாகவும் இருந்தது.

தெருமுனையில் கன்னக் நிதானமாக வந்து கொண்டிருந்த போது ஒரு லாரி வேகமாக வந்தது.நிதானமாக நடந்து சென்றவன் சட்டென ஒதுங்கி நின்றான். அந்த லாரி வேகமாக கண்ணனைக்கடந்து சென்று மறைந்தது. அங்கு நின்ற ஒரு பெரியவர் கண்ணனைப் பார்த்து ' தம்பி! நல்லவேளை நீ தப்பினாய். நீ நிதானமாக பொறுமையாக வந்ததால் பிழைத்தாய் இல்லாவிட்டால் அந்த வண்டியில் அடிபட்டு உயிரை இழந்திருப்பாய்." என்றபோது அச்சத்தால் ஒரு கணம் அவன் உடல் நடுங்கியது. பள்ளியில் அவன் மிகவும் பொறுமையாக நடந்து கொண்டான்.

பொறுமையைக் கடைப் பிடித்த சிறிது நேரத்திலேயே தனக்கு எப்பேர்ப்பட்ட அனுபவம் ஏற்ப்பட்டு விட்டது. என நினைத்துக்கொண்டான்.
தான் உயிர் பிழைத்த நிகழ்ச்சி அவன் உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்டது.

அன்று மாலை நான்கு மணிக்கு ஒரு செல்வந்தர் பரிசுகளும் இனிப்பும் வழங்கப் போகிறார். எல்லாச்சிறுவர்களையும் வரச் சொல்லியிருக்கிறார். என்று அவன் நண்பர்கள் சொன்னபோது வழக்கம்போல் அவசரம் அவன் மனதில் துளிர் விட்டது. ஆனால் அவன் தாயாரிடம் சொன்னசொல்லைத் தவறக்கூடாது என்று எண்ணிப பொறுமையாக இருக்கலானான்.

பள்ளி விட்டவுடன் எல்லா சிறுவர்களும் அந்த செல்வந்தர் வீட்டை நோக்கி ஓடினார்கள். இப்போதும் கண்ணன் பொறுமையாக நடந்தபடியே செல்வந்தர் வீட்டுத்தோட்டத்தில் போய் நின்றான். அங்கே நிறைய விளையாட்டுப் பொருள்களும் பொம்மைகளும் வைக்கப்பட்டிருந்தன. பெரிய கூடையில் இனிப்புப் பொட்டலங்கள் இருந்தன. செல்வந்தர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். சிறுவர்கள் அத்தனை பேரையும் கூர்ந்து கவனித்தபடி இருந்தார். எல்லாச் சிறுவர்களும் முண்டியடித்துக்கொண்டு நின்றிருந்தனர்.
சற்று நேரத்தில் செல்வந்தர் எழுந்து நின்றார். " சிறுவர்களே இந்த விளையாட்டுப் பொருள்களும் இனிப்புகளும் உங்களுக்காகவே வைக்கப் பட்டுள்ளன.ஒவ்வொருவராக வந்து ஒரு விளையாட்டுப் பொருளையும் இனிப்புப்பொட்டலத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். " என்று சொன்னவுடன் அத்தனை சிறுவர்களும் அவரவருக்குப் பிடித்த பொருளை பொறுக்கிக் கொள்ள ஆரம்பித்தனர்.கொஞ்ச நேரம் ஒரே அமர்க்களமாக இருந்தது அந்த இடம். கண்ணனுக்குக் கையும் காலும் பரபரத்தன. ஆனாலும் பல்லைக்கடித்துக்கொண்டு பொறுமையாக நின்றிருந்தான். அனைவரும் எல்லாப் பொருள்களையும் எடுத்துச் சென்ற பிறகு நிதானமாக மீதி இருந்த இனிப்பையும் இருந்த பொருள்களில் உடையாததாகப் பார்த்து ஒன்றைப் பொறுக்கி எடுத்துக்கொண்டான். இவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த ஏல்வந்தருக்கு நன்றி சொல்லிவிட்டுச் சென்றான்.

அவனை அருகே அழைத்த செல்வந்தர் அவனைப்பற்றி விசாரித்தார். அவனுடைய பொறுமையான பண்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அவனுடன் அவன் வீட்டுக்கு வந்த செல்வந்தர் அமிர்தத்திடம் கண்ணனை தனக்கு வாரிசாகக்கொள்ள நினைத்திருப்பதாகச் சொன்னபோது அவனால் நம்பவே முடியவில்லை. ஒரே ஒரு நாள் பொறுமையாக இருந்ததற்கு எப்பேர்ப்பட்ட பரிசு!.

மெதுவாகத் தாயாரிடம்" அம்மா! இனி என் வாழ்நாள் முழுவதும் நான் பொறுமையுடன் இருப்பேனம்மா. பொறுமையின் பெருமையை உணர்ந்து கொண்டேன்." என்று சொன்னபோது அமிர்தம் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.

என்ன! நீங்களும் இனி பொறுமையாக இருப்பீர்கள் அல்லவா?

புதன், 15 ஜூலை, 2009

விடுதலை பெற்ற கதை - தெனாலி ராமன் கதைகள்

தெனாலிராமன் இராயரின் சபையில் பல வேடிக்கைகளைச் செய்தபடி இன்பமாக வாழ்ந்து வந்தான். ஒரு சமயம் இராயரிடம் பகை கொண்ட ஒருவன் அவரைக் கொல்ல ஒரு சதிகாரனை அனுப்பினான். சதிகாரனும் தெனாலிராமனின் உறவினன் என்று சொல்லிக் கொண்டு அவனது வீட்டில் தங்கியிருந்தான். ஒரு நாள் தெனாலிராமன் இல்லாத சமயம் பார்த்து அந்த சதிகாரன் இராயருக்குக் கடிதம் ஒன்று எழுதினான். அதில் அரசர் உடனே தன் வீட்டுக்கு வந்தால் அதிசயம் ஒன்றைக் காட்டுவதாக எழுதி தெனாலிராமன் என்று கையொப்பமிட்டு அனுப்பினான்.

கடிதத்தைக் கண்ட இராயரும் நம் தெனாலிராமன் ஏதோ அதிசயத்தைக் காட்டப் போகிறான் என்ற ஆவலில் உடனே குதிரை மீது ஏறிப் புறப்பட்டார். அவசரமாகப் புறப்பட்டதால் ஆயுதம் எதையும் கொண்டு வரவில்லை. மூடியிருந்த கதவை லேசாகத்தள்ளி "இராமா!" என அழைத்தவாறே உள்ளே நுழைந்தார். அங்கு மறைவாக நின்றிருந்த சதிகாரன் கட்டாரியால் அரசரைக் குத்த முயன்றான். சட்டென்று அவன் கரத்தைப் பிடித்து வளைத்துப் பின்புறமாகப பிணைத்து விட்டார் அரசர். தம் மன்னர் தனியாக இராமனின் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்த மக்கள் பின்னாலேயே வந்து அந்தச் சதிகாரனை அங்கேயே அடித்துக் கொன்றனர்.

மறுநாள் சபை கூடியது. தெனாலிராமன் குற்றம் சாட்டப் பட்டு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டான். அரசரைக் கொலை செய்ய முயற்சிப்பது பெரும் குற்றம். அதற்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே. சதிகாரனுக்கு ஆதரவளித்ததால் தெனாலிராமனும் குற்றவாளியென்று கூறி அவனுக்கு மரண தண்டனை அளித்தார் கிருஷ்ணதேவராயர. . .

தெனாலிராமன் "அந்த சதிகாரன் என் உறவினன் என்று சொல்லிக்கொண்டு வந்ததால் இடமளித்தேன். அவன் இப்படி சதி செய்வான் என்று தெரியாது." என வாதாடிப் பார்த்தான். அறியாமல் நேர்ந்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினான். அரசர் சற்று நேரம் சிந்தித்தார். பிறகு சொன்னார்." இராமா! சட்டப்படி குற்றம் சாட்டப் பட்ட உன்னை மன்னிக்க முடியாது. வேண்டுமானால் உன் விருப்பப்படி சாக அனுமதி அளிக்கிறேன். நீ எப்படி சாக விரும்புகிறாய் என்பதைச் சொல். அதை நிறைவேற்றுகிறேன்." என்றார்.

ஒரு நிமிடம் தெனாலிராமன் சிந்தித்தான். பிறகு சட்டென்று " அரசே! நான் வயதாகி முதுமை அடைந்த பிறகு இயற்கையாக சாக விரும்புகிறேன்." என்றான். அரசர் அவன் புத்தி கூர்மையை மெச்சி அப்படியே வாக்களித்து அவனை விடுதலை செய்தார். தெனாலிராமன் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான்.

நம்பினோர் கெடுவதில்லை

ஓர் ஊரில் ஓர் ஏழைச்சிறுவன் தன தாயுடன் வசித்து வந்தான். அவன் பெயர் கோபால். தந்தை இறந்து விட்டதால் இருவரும் மாடுகளை மேய்த்து வாழ்ந்து வந்தனர். மிகவும் ஏழையானாலும் தன மகனைக்கல்வி அறிவுள்ளவனாக்க அவன் தாய் விரும்பினாள். எனவே அடுத்த ஊரில் உள்ள ஒரு குருவிடம் கல்வி கற்க அனுப்ப எண்ணினாள்.

ஒரு நாள் தன மகனை அழைத்தாள். " கோபால்! நீ ஒரு குருவிடம் சென்று கல்வி பயின்றால் தான் உன் வாழ்வு வளமாக இருக்கும். எனவே நீ அடுத்த ஊரில் உள்ள குருவிடம் கல்வி கற்க சென்று வா." என்று கூறினாள் கோபாலுக்கு வெகு தொலைவு சென்று படிக்க தயக்கமாக இருந்தது. அத்துடன்வழியில் ஒரு காடு இருந்தது. தனியே அந்தக்காட்டை கடந்து செல்ல வேண்டுமே என்ற அச்சமும் இருந்தது.எனவே தன தாயிடம் தயக்கத்துடன் கூறினான்."அம்மா! அடர்ந்த காட்டினூடே தனியாக நடந்து செல்ல பயமாக உள்ளதம்மா "

"கோபாலா! பயப்படாதே. நாம் வணங்கும் கிருஷ்ணர் உனக்குத்துணையாக இருப்பார்."

"எனக்குத்துணையாக அவர் வருவாரா அம்மா ?"

"கட்டாயம் வருவாரப்பா. உனக்குப்பயமாக இருந்தால் நீ கண்ணா கண்ணா என்று உரக்கக் கூப்பிடு. உனக்குத்துணையாக அந்தக்கண்ணன் கட்டாயம் வருவார்."

தாயின் வார்த்தைகளால் மன நிம்மதி யடைந்தான் கோபால் .மறுநாள் குருவின் வீட்டை நோக்கி நடந்தான். அவன்தாய் அவனை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தாள். விரைவாக நடந்த கோபால் நடுக்காட்டை அடைந்தான்.காட்டின் அமைதியும் காற்றின் ஒலியும் அவனுக்கு அச்சத்தை ஊட்டின அவனுக்குத் தன தாயின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. உடனே உரக்க " கண்ணா! கண்ணா! நீ எங்கிருக்கிறாய் ? எனக்குத்துணையாக வா கண்ணா!" எனக்கூவி அழைத்தான். உரக்கக்குரல் எழுப்பியவாறே காட்டில் நடந்து சென்றான் கோபால்.

திடீரென்று அவன் எதிரே ஒரு சிறுவன் கையில் கோலுடனும் குழலுடனும் வந்து நின்றான். கோபலனைப்பர்த்து ச சிரித்தான். அவனைப்பார்த்த
கோபால் " நீதான் கண்ணனா? நீதான் எனக்குத்துணையாக வருவாய் என என் அம்மா சொன்னார்களா?" என்றான் மெதுவாக.
புன்னகை புரிந்த கண்ணன் கோபாலின் கரங்களைப் பற்றிக்கொண்டான்.
"ஆமாம் நாந்தான் கண்ணன். இந்தக்காட்டிலே மாடு மேய்ப்பவன். என்னைப்பற்றி உன் அம்மா சொன்னார்களல்லவா? "
" ஆமாம் சொன்னார்கள். நீ தினமும் எனக்குத்துணையாக வருவாயா? "
" தினமும் நீ என்னை அழைத்தால் கண்டிப்பாகவருவேன்." என்று பேசியபடியே இருவரும் கை கோர்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் நடந்தனர்.

நாட்கள் கடந்தன. கோபால் தினமும் குருவிடம் சென்று கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் குருவிற்குப் பிறந்தநாள் வந்தது. அன்றைய தினம் மாணவர்கள் அனைவரும் குருவிற்கு ஏதேனும் பரிசளிக்க முடிவு செய்தனர். ஒவ்வொருவரும் தான் கொண்டுவரும் பரிசு பற்றிப்பெருமையோடு பேசினர். ஒருவன் " நான் வெள்ளித்தட்டு தருவேன்" என்றான். மற்றொருவன் நான் பட்டாடை பரிசளிப்பேன்" என்றான்.

பாவம் கோபால் என்ன செய்வான். ஏழையான அவன் தாய் எதைக் கொடுப்பாள்? தன்னால் குருவிற்கு ஒன்றும் கொடுக்க இயலவில்லையே என கோபால் மனம் வருந்தினான். இதைக்கண்ட அவன் தாய் மகனை அருகே அழைத்து "கோபாலா! உன் நண்பனை நீ தினமும் பார்க்கிறாயே அவனிடம் கேளேன்." என்றாள்.

கோபாலும் தன நண்பன் கண்ணனிடம் தன அசிரியருக்குத்தர பரிசொன்றைக் கேட்டான். கண்ணன் ஒரு தயிர் நிறைந்த பானையைக் கொடுத்தான். "இதையே உன் பரிசாகக்கொடு " என்றான். கோபாலும் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு ஆசிரியர் வீட்டை அடைந்தான். அங்கு மற்ற மாணவர்கள் அளித்த உயர்ந்த பரிசுப்பொருள்களைப் பார்த்து தன தயிர்ப்பானையை அவைகள் முன் தரத்தயங்கினான். யாருக்கும் தெரியாமல் அதை அனைவரும் சாப்பிடும் இடத்தில் வைத்துவிட்டான். விழா முடிந்தபின் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். பரிமாறுவதற்குத் தயிர் இல்லை என்பதை அப்போதுதான் பார்த்தனர். ஒரே ஒரு பானை தயிர் மட்டும் உள்ளது இதை வைத்து பரிமாறுவோம் என நினைத்தார் ஆசிரியர். எனவே அந்தத்தயிரை வேறு பாத்திரத்தில் ஊற்றினர். பானையில் மீண்டும் தயிர் நிறைந்தது. மீண்டும் ஊற்ற மீண்டும் தயிர் நிறைந்தது. செய்தி அறிந்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

" யார் இந்தத்தயிர்ப்பானையைக் கொண்டு வந்தது?" என விசாரித்தனர். அப்போது கோபால் தனக்குக்காட்டில் தன நண்பன் கொடுத்ததாகச்
சொன்னான்.

ஆசிரியர் நண்பனாக வந்தது இறைவனே எனப்புரிந்து கொண்டார். "கோபாலா! அந்த உன் நண்பனை எனக்குக்காட்டு " என்று அவனுடன் காட்டுக்கு விரைந்தார். அவருடன் மற்ற மாணவர்கள் அனைவரும் காட்டை நோக்கி நடந்தனர். காட்டுக்குள் நுழைந்த கோபாலன்," கண்ணா! கண்ணா! உன்னைக்காண என் ஆசிரியரும் நண்பர்களும் வந்துள்ளனர். வா கண்ணா!"
எனப்பலமுறை அழைத்தும் கண்ணன் வரவில்லை.

கோபாலனுக்கு அழுகை வந்தது. அழத்தொடங்கினான். அப்போது ஒரு குரல் கேட்டது. " கோபாலா! உண்மையான அன்புடனும் நான் வருவேன் என்ற நம்பிக்கையோடும் என்னை அழைத்தால் நான் வருவேன்.உன்னிடம் நான் வருவேன் எனக்கூறிய உன் தாயின் நம்பிக்கையை ப பொய்யாக்க விரும்பாமல்தான் நான் உன் முன் வந்தேன்.என் மீது உண்மையான பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர் முன்னால் மட்டுமே நான் வருவேன்.உன்னைப்பார்த்து மற்றவர்கள் நம்பிக்கையின் பெருமையைப் புரிந்துகொள்ளட்டும். வாழ்க! "என்று கூறிய கண்ணனின் குரல் மறைந்தது.
இத்தனை நாட்களாக கண்ணனுடன் பழகிவந்த கோபாலனை அனைவரும் பக்தியுடனும் அன்புடனும் வணங்கினர்.

பேரக்குழந்தைகளே! நாம் எந்த ஒரு சொல்லிலும் செயலிலும் நம்பிக்கை வைத்தால் அது கட்டாயம் நிறைவேறும் என்பதைப்புரிந்து கொண்டீர்களா?
நம்பினோர் கெடுவதில்லை என்ற மூத்தோர் சொல் எத்தனை உண்மையானது!

வியாழன், 9 ஜூலை, 2009

என்னைப்பற்றி

பெயர் ருக்மணி சேஷசாயீ. தமிழில் எம்.ஏ பட்டம் பெற்றுள்ளேன். ஐம்பது ஆண்டுகளாக எழுத்துப்பணி புரிந்து வருகிறேன். மேல் நிலைப்பள்ளியில் சுமார் முப்பது ஆண்டுகளாக தமிழாசிரியராகப பணி புரிந்துள்ளேன்.

வெளியிடுகள் மற்றும் ஊடகம்

கலைமகள், அமுதசுரபி, சுதேசமித்திரன், தினமணி, கண்ணன், முதலான பல வார மாத இதழ்களில் எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. நாவல் சிறுகதைத் தொகுதி சிறுவர்நூல்என இருபத்தைந்து நூல்களுக்குமேல் வெளிவந்துள்ளன. ஆகாசவாணி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.

பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கம் ஆகியவற்றில் பங்கேற்று வருகிறேன்அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் உரத்தசிந்தனை இலக்கியவட்டம் போன்ற சங்கங்களில் அங்கம் வகித்து வருகிறேன்.

விருதுகள்

எழுத்தாளர் சங்கம் 'பாரதி பணிச்செல்வர் ' என்ற விருதினையும் உரத்தசிந்தனை சிறந்த வாசக எழுத்தாளர் என்ற விருதினையும் அளித்து என்னை கௌரவித்துள்ளன.

சுட்டி கதையின் நோக்கம்

சிறுவர்களுக்கு எழுதுவதில் மிகவும் விருப்பம் உண்டு. பலரும் படிக்கவேண்டும் என்பதற்காகவே 'சுட்டிக்கதை' என்ற இணையதளத்தை உருவாக்கி யுள்ளேன்.வளரும் சமுதாயம் இதன் மூலம் நல்ல பண்பினைப்பெருமாயின் அதுவே என் வெற்றி எனக்கொள்வேன்.

அன்புடன் உங்கள் பாட்டி,

ருக்மணி சேஷசாயீ