வெள்ளி, 9 ஜூலை, 2010

38th story.kural koorum kadhai.

               ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் 
                செத்தாருள் வைக்கப் படும்.

வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. பள்ளிக்கூடம் விட்டவுடன் வீடு வந்து சேர்ந்துவிடும் குமரன் அன்று வெகு நேரமாகியும் வந்து சேரவில்லை.அவன் தாயார் கோமதிக்குக் கவலையாக இருந்தது. இந்த மழையில் எங்கே சென்று மாட்டிக்கொண்டானோ என்று தவித்தவாறு காத்துக் கொண்டிருந்தாள். நல்லவேளையாக காலையில் பள்ளிக்குச் செல்லும்போதே குடை எடுத்துப் போகச் சொன்னது நல்லதாப் போச்சு என்று சற்று ஆறுதல் அடைந்தாள்.
லேசாக இருட்டத் தொடங்கிய நேரம் உடம்பு முழுதும் நனைந்தவனாக உள்ளே நுழைந்தான் குமரன். அவனைப் பார்த்தவுடன் "அப்பாடா வந்துவிட்டாயா" என்று ஆறுதல் அடைந்த கோமதி "மொதல்ல உன் சட்டையை மாத்து.உடம்பை நல்லா தொடைச்சிக்கோ.தலையை நல்லா ஈரம் போகத் போகத் துவட்டு" என்றவள் அவனுக்காக டீ போட உள்ளே போனாள் கோமதி.
உடையை மாற்றிக் கொண்டு  அமர்ந்த குமரன் அம்மா கொடுத்த டீயை ருசித்துக் குடித்தான். கோமதியும் அவனைப் பார்த்தவாறே அவன் அருகே அமர்ந்திருந்தாள் .டீயைக் குடித்து முடித்த குமரன் கோப்பையைக் கீழே வைத்தான்."அம்மா, நான் லேட்டா வந்ததுக்காக என்னை மன்னிச்சுடு அம்மா.என்ன நடந்ததுன்னு சொல்றேன்."
"சொல்லுப்பா.என்ன நடந்தது?"
"பள்ளிக்கூடம் விட்டவுடன் வழக்கம்போல்தான் நான் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தேன். வரும் வழியில் ஒரு சின்னப்பொண்ணு இரண்டாம் வகுப்பில் படிக்கிறாளாம் பள்ளிச் சுவர் ஓரமா நின்னு அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன்.ரொம்பப் பாவமா இருந்துதும்மா. அந்தப் பெண்ணைக் கொண்டுபோய் அவங்க வீட்டிலே விட்டுட்டு வந்தேன். போன பிறகுதான் அது என் பிரண்டு சோமுவின் வீடுன்னு தெரிஞ்சுது.அந்தப் பெண் அவன் தங்கச்சிதான்னும்  அப்புறம்தான் தெரிஞ்சுதும்மா."
"அப்படியா"என்று தன் மகனைப் பெருமையுடன் பார்த்தாள் கோமதி.
குமரன் தொடர்ந்து பேசினான்."அங்கே போனா, சோமுவின் வீட்டுச் சுவர் மழைக்கு இடிஞ்சு விழுந்துடிச்சு. சோமுவும் அவங்கம்மாவும் இருந்த சாமானையெல்லாம் எடுத்து பத்திரப் படுத்தி வெச்சாங்க. நானும் அவங்க கூட இருந்து உதவி பண்ணிட்டு வந்தேம்மா. அதுதான் லேட்டாயிடுச்சு."
என்று சொன்ன குமரனை அன்புடன் தலையைக் கோதிவிட்டாள் அம்மா.
"நீ நல்லதுதான் செய்திருக்கே.நேத்து நீ ஒரு குறள் படிச்சியே நினைவிருக்கா?"
"ஆமாம்மா. இன்னைக்கி எங்க தமிழ் வாத்தியார் கூட அந்தக் குறளைத்தான் ஒப்பிக்கச் சொன்னார். அர்த்தமும் சொல்லச் சொன்னார். நான் நல்லாச் சொன்னேன்னு அத்தனை பெரும் கை தட்டினாங்கம்மா."
"அப்படியா. அந்தக்குறளை இப்பச் சொல்லு."
  " ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் 
    செத்தாருள் வைக்கப் படும்."
"பலனை எதிர் பார்க்காமல் உதவி செய்து வாழ்பவனே உயிர் வாழ்பவனாவன். அவ்வாறு செய்யாதவன் உயிரற்றவனாகவே கருதப் படுவான்.அப்படின்னும் பொருள் சொன்னேம்மா."
"அதுதான் நீ உயிருள்ளவன்னு நிரூபிச்சுட்டு வந்திருக்கே. அந்த உன் நல்ல செயலுக்காக நானும் உனக்குக் கை தட்டுகிறேன் குமரா" என்றபடியே கோமதி பலமாகக் கைதட்டினாள்.
அம்மாவின் பாராட்டைக் கேட்டு மனமகிழ்ந்து அவளைக் கட்டிக் கொண்டான் குமரன். இனி எப்போதும் எந்தப் பலனும் எதிபாராமல் மற்றவர்க்கு உதவி செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டான்.
குமரனின் முடிவை நாமும் பின்பற்றலாமல்லவா!




38th story. kural kadhai.

    ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் 

--
Blog: http://chuttikadhai.blogspot.com

திங்கள், 5 ஜூலை, 2010

37th story. pagaivarkku aruliya panbaalan.

                                                                 பகைவற்கு அருளிய பண்பாளன்.
திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழைக்கப் பட்டது. அந்நாட்டை மலாடர் குடியிற் பிறந்த மலையமான் காரி என்பவன் ஆண்டுவந்தான். இவன் மலாடர் கோமான் என மக்களால் அழைக்கப்பட்டான்.  மக்களிடம் பாசமும் இறைவனிடம்  பக்தியும் கொண்டு நன்முறையில் அரசாட்சி புரிந்து வந்தான். சிவனிடத்தில் பேரன்பும் சிவனடியார்களிடம் பெருமதிப்பும் கொண்டிருந்தான். சிவனடியார்கள் எவராயினும் அவர் நன்முறையில் உபசரிக்கப்பட்டார். சிவாலயங்கள் அனைத்தும் நன்முறையில் பரிபாலனம் செய்யப்பட்டன.
மன்னன் வீரத்திலும் குறைந்தவனல்லன். இவனை வெல்ல எண்ணிப் போரிட்ட அரசர்களைஎல்லாம் வெற்றி கொண்டு பெரு வீரனாகத் திகழ்ந்தான்.
அண்டை நாட்டு மன்னனான முத்தநாதன் மலையமானிடம் பெரும் பொறாமை கொண்டிருந்தான். எப்படியும் அவனை வீழ்த்தி அவன் நாட்டைக் கைப்பற்ற எண்ணம் கொண்டு செயல் பட்டான் .பெரும் படை கொண்டு தாக்கினான். ஆனால் படு தோல்வி அடைந்து ஓடினான்.மலையமானைவஞ்சனை செய்து வீழ்த்த எண்ணம் கொண்டான்.சிவனடியார்கள் மீது பேரன்பு கொண்ட இவனை வீழ்த்த சிவனடியார் வேடமே சிறந்தது என முடிவு செய்தான்.
அதன்படி ஒரு சிவனடியார்போல் மேனியெங்கும் திருநீறு பூசி உத்திராக்ஷ மாலையணிந்து தலையை முடிந்து கொண்டு அரண்மனைக்குள்  நுழைந்தான். அவன் கையில் ஒரு புத்தகக் கட்டும் அதனுள் ஒரு கத்தியும் மறைத்து வைத்துக் கொண்டு வந்தான்.மலாடர் அரண்மனைக்குள் சிவ்னடியார் எங்கும் எப்போதும் செல்லலாம் என்று ஆணை பிறப்பித்திருந்ததால் முத்தநாதன் தயக்கமின்றி உள்ளே நுழைந்தான். அந்தப்புரம் வரை சென்ற முத்தநாதனை வாயிலில் நின்ற தத்தன் என்ற மெய்க்காப்பாளன் தடுத்தான்.
"அடிகளே, வணக்கம். எமது மன்னர் ஓய்வு எடுத்துக்கொண்டுள்ளார். இது அனைவரும் உறங்கும் நேரமல்லவா?தயவு செய்து தாங்களும் ஓய்வு எடுத்துக் கொண்டு அதிகாலைவரலாமே?"அடக்கத்துடன் கூறிய தத்தனை கோபத்துடன் பார்த்தான் சிவனடியார் வேடதாரி முத்தநாதன்.
"யாருக்கும் கிட்டாத ஆகம நூல் ஒன்றைக் கொண்டு வந்துள்ளேன்.சிவபக்தனான மன்னனுக்கு  உபதேசமசெய்யவந்துள்ளேன்.காலதாமதம் செய்யாமல் மன்னனை எழுப்பு.அல்லது என்னை உள்ளே போகவிடு" என்றபடியே உள்ளே நுழைந்தான் முத்தநாதன்.
அவனைத் தடுக்க இயலாதபடி மன்னனின் கட்டளை தடுத்ததால் தத்தன் செய்வதறியாமல் நின்றான்.
உறக்கம் கலைந்த மன்னன் வேகமாக எழுந்தான். மஞ்சத்தினருகே சிவனடியார் நின்றிருப்பதைக் கண்டு அவரை வணங்கினான். 
"வரவேண்டும் சுவாமி, ஆசனத்தில் அமருங்கள். " என்று உபசரித்தான்.
"சுவாமி இந்த இரவு நேரத்தில் வந்துள்ளீர்களே, ஏதேனும் அவசரகாரியமா சுவாமி. தயங்காமல் கூறுங்கள் எதுவாயினும் செய்யக் காத்திருக்கிறேன்" முத்தநாதன் கபடமாகச் சிரித்தான். 
"மலாடர் கோமானே! எவருக்கும் கிட்டாத ஆகமநூல் ஒன்று எமக்குக் கிட்டியது.அந்தச் சிவத்தின் வாயாலேயே உரைக்கப்பட்டது.அதை உனக்கு உபதேசிக்கவே வந்தேன். இதற்கு நேரம் தேவையா மன்னா?"
"இல்லை சுவாமி. இல்லை. நான் பெரும் பேறு பெற்றேன். தங்கள் வாயாலேயே எனக்கு உபதேசம் செய்யுங்கள் சுவாமி."என்றபடியே முத்தனாதனின் காலடியில் கை கட்டி வாய் புதைத்து அமர்ந்து கொண்டான் மன்னன்.
முத்தநாதன் "இங்கு உன்னையும் என்னையும் தவிர வேறு யாரும் இருத்தல் ஆகாது. உன் மனைவியை அனுப்பிவிடு."என்றான் கபடமாக.
மன்னனின் அருகே நின்ற மகாராணி குறிப்பறிந்து அவ்விடம் விட்டு அகன்றாள். ஆனால் வாயிலில் நின்றிருந்த தத்தன் மட்டும் தன் கவனம் முழுவதையும் முத்தனாதனிடமே வைத்திருந்தான்.
தனிமையில் விடப்பட்ட முத்தநாதன் தன் முன் மன்னனை மண்டியிட்டு அமரச் சொன்னான். இமைக்கும் நேரத்தில் தன் புத்தகக் கட்டினுள் வைத்திருந்த குறுவாளை எடுத்து மன்னனின் உடலில்  பாய்ச்சி விட்டான்.
அதே நேரம் உள்ளே பாய்ந்துவந்த தத்தன் தன் உடைவாளை ஓங்கி முத்தநாதனை வெட்டத் துணிந்தான்.உயிர் நீங்கத் துடித்துக் கொண்டிருந்த மன்னன் அவனைத் தடுத்து "தத்தா அவர் நம்மவர்.அவரைக் கொல்லாதே."என்றார்.
கண்ணீருடன் அவரைத் தாங்கிக் கொண்ட தத்தன் "அரசே! நான் என்ன செய்ய வேண்டும்?"என்று கேட்டான்.
"சிவனடியார் வேடம் தாங்கி வந்தாலும் அவர் நமக்கு அந்தச் சிவமே. எனவே அவரை பத்திரமாக எந்த ஊறும் இன்றி நம் நாட்டு எல்லை வரை சென்று விட்டு வா. நீ வரும் வரை என் உயிர் பிரியாது." என்று கட்டளையிட்டார்.
அவரின் கட்டளையை சிரமேல் தாங்கிய தத்தன் முத்தநாதனை அழைத்துச் சென்றான். வழியில் தமது அரசருக்கு முத்தநாதன் இழைத்த தீங்கை அறிந்த மக்கள் பொங்கி எழுந்தனர்.ஆனால் தத்தன் அவர்களிடம் தமது அரசரின் கட்டளையை எடுத்துக் கூறித  தடுத்தான்.அதனால் முத்தநாதன் எந்த த துன்பமும் இன்றி த தன் நாடு அடைந்தான்.
தத்தன் வேகமாக அரண்மனை சென்று மன்னன் முன் நின்றான்."அரசே! முத்தநாதனை பத்திரமாக விட்டு வந்தேன்." இச்சொற்களைக் கேட்ட மன்னன் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
"தத்தா! எனக்குப் பேருதவி செய்துள்ளாய்.உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்"என்றவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அவன் உயிர் இறைவன் திருவடிநிழலை அடைந்தது.
இத்தகு அன்புள்ளமும் சிவனிடத்திலும் அவன் அடியார்களிடத்திலும் மலாடர் கோமான் கொண்ட பக்தியினால் அவன் அறுபத்து மூன்று நாயன்மார் வரிசையில் வைத்து போற்றப் படுவது நியாயம்தானே.மெய்யடியார்மீது இவன் காட்டிய பரிவின் காரணமாக இம்மன்னன் மெய்ப்பொருள் நாயனார் என்ற திருநாமம் கொண்டு சிறப்பிக்கப் பெற்றார்.
பகைவனுக்கும் அருளும் பேரன்பு கொண்டதால் நாயன்மார்களின் வரிசையில் நின்று நிலைபெற்ற புகழைப் பெற்றார்.பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய் என்று மகாகவியும் பாடினார். 
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண  
நன்னயம் செய்து விடல்."  என்று வள்ளுவரும் கூறியுள்ளார். நம் உள்ளத்திலும் இத்தகு கருணையை நாம்  வளர்த்துக் கொள்ளவேண்டும்.அதுவே நாம் நல்ல மனிதர்கள் என்பதன் அடையாளமாகும்..


















திங்கள், 28 ஜூன், 2010

36th story.needhi kaaththa mannan.

                                                                      நீதி காத்த மன்னன்.
சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.நீதி வழுவாது ஆட்சி செய்து வந்த மன்னனை மக்கள் தங்கள் உயிரினும் மேலாக மதித்து வாழ்ந்தனர். மனுநீதிச் சோழன் வெகு நாட்களாக மக்கட்பேறு இல்லாமல் வாடினான். இறைவனது அருளால் அழகே உருவான ஒரு மகன் பிறந்தான்.மன்னனும் மக்களும் மனம் மிக மகிழ்ந்தனர். வீதி விடங்கன் என்னும் பெயரிட்டு அருமையுடன் வளர்த்து வந்தான் மன்னன். வீதிவிடங்கன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான்.  அறிவிலும் நற் பண்புகளிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.குறித்த வயதில் மன்னர் அவனுக்கு யானை ஏற்றம் குதிரைஎற்றம் தேர் ஓட்டுதல் வாட்பயிற்சி ஆகிய கலைகளைக் கற்பித்தார். எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தான் வீதிவிடங்கன்.
நீதி தவறாத மன்னன் மனுநீதிச் சோழன். நாட்டு மக்கள் மன்னனான தன்னை எந்தவிதத் தடையும் இன்றி நேரில் காணவேண்டும் என்று சிந்தித்தான்.
அதற்காக சபை கூட்டி ஆலோசனை செய்தான். மக்கள் அனைவரும் மகிழும்படி ஒரு காரியம் செய்தான். தன் அரண்மனை வாயிலில் ஒரு பெரிய மணியைக் கட்டி வைத்தான். மன்னனைக் காண  விரும்பி வருபவர் யாராயினும் அந்த மணியை அடித்து ஒலி எழுப்பினால் மன்னன் நேரிலே வந்து குறைகளைக் கேட்பார். நேரில் கேட்டுக் குறைகளைக் களைவார்.என்று பறையறைவித்தார். மக்கள் தங்கள் மன்னனின் எளிமை கண்டு மகிழ்ந்ததோடு அவனைப் போற்றிப் புகழ்ந்தனர். காட்சிக்கு எளியனாக உள்ள மன்னனை யார்தான் விரும்பமாட்டார்கள்.
ஆண்டுகள் கடந்தன. மனுநீதிச் சோழனால் கட்டப் பட்ட அந்த ஆராய்ச்சி மணியை யாரும் அடிக்கவேயில்லை. மக்கள் எந்தக் குறையும் இன்றி நாட்டில் வாழ்ந்து வந்தனர். காலம் ஒரே மாதிரி செல்லுமா. சோதனை மன்னன் மகன் வீதிவிடங்கன் உருவில் வந்தது. 
ஒருநாள் மாலைவேளை வீதிவிடங்கன் உல்லாசமாக தேரில் ஏறி நகரைச் சுற்றி வந்தான். அதே வேளையில் ஒரு கன்றுக்குட்டியும் தெருவில் துள்ளிக் கொண்டு வந்தது. உல்லாசத்தின் உச்சியில் இருந்த இளவரசன் அதைக் கவனிக்காமல் அக்கன்றின்மேல் தேரை ஏற்றிவிட்டான். கன்றும் அங்கேயே விழுந்து தன் உயிரை விட்டு விட்டது. மகிழ்ச்சியோடு இருந்த கன்றின் மரணத்திற்குக் காரணமாகிவிட்டோமே என்று மதிமயங்கி அங்கேயே அக்கன்றின்  அருகிலேயே அமர்ந்து விட்டான் இளவரசன். மன்னன் மீதிருந்த அன்பாலும் அவன் மகன் இந்நாட்டின்  ஒரே வாரிசு என்ற எண்ணத்தாலும் யாரும் இச்செய்தியை மன்னனுக்குச் சொல்ல விரும்பவில்லை. 
மக்கள் சொல்லாவிட்டாலும் அக்கன்றின் தாயான பசு கண்களில் நீர்சோர அங்குவந்து தன் கன்றைத் தன் நாவால் நக்கிக் கொடுத்தது. பின் வேகமாக அங்கிருந்து அகன்றது. மக்களும் அப்பசுவின் பின் சென்றனர்.அது எங்கு செல்கின்றது என யாருக்கும் தெரியவில்லை. அதை அறிந்துகொள்ளும் பொருட்டே அதன் பின்னே கூட்டமாகச்சென்றனர். அப்பசு மன்னன் கட்டியிருந்த ஆராய்ச்சிமணியின் கயிற்றைப் பிடித்துபெரும்  ஒலி எழுமாறு அடித்தது.
அந்தப்புரத்திலிருந்த மன்னன் திடுக்கிட்டான். மந்திரி பிரதானியர் புடைசூழ ஓடிவந்தான் வாயிலுக்கு. ஒரு மனிதனை எதிர்பார்த்து வந்த அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் நாட்டில் யாருக்கும் எந்தக் குறையும் இல்லை என்று இறுமாந்திருந்த மன்னனுக்கு இது பேரிடியாக இருந்தது. என்ன நடந்தது எனக் கேட்டபோது யாரும் எதுவும் பேசாது நின்றனர். மன்னன் அந்தப் பசுவின் பின்னே நடந்து சென்றான். அப்பசு மன்னனைத் தன் கன்று இறந்து கிடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று தன் நாவால் தான் ஈன்ற கன்றினை நக்கிக் காட்டியது. மன்னன் அக்காட்சியைக்  கண்டு கண்கள் கலங்க நின்றான்.பின் கண்கள் சிவக்க மந்திரியாரைப் பார்த்து "இப்பாவ்த்தைச் செய்தவன் யாவன்? உடனே அவனை என்முன் கொணர்ந்து நிறுத்துங்கள் " எனக் கட்டளையிட்டான். அனைவரும் அமைதியாயிருந்தனர்.
"நீங்கள் கூறாவிட்டால் நீதி தவறிய மன்னனாக நான் ஆவேன். அவ்வாறு நான் உயிர் வாழ விரும்பவில்லை.என் உயிரை நான் மாய்த்துக் கொள்வேன்." என்ற மன்னனைத் தடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூறித் தானே குற்றவாளியென மன்னன் முன் தலைகுனிந்து நின்றான் வீதிவிடங்கன். ஒருநிமிடம் நிலைகுலைந்துபோன சோழன் சற்றே சிந்தித்தான்.இறந்துபோன கன்றை உயிர்ப்பிக்க இயலாது.ஆனால் உயிருக்கு உயிரைத் தரலாம். அத்துடன் அந்த தாய் படும் வேதனையை இந்தக்குற்றம் செய்தவனின் தாயும் அனுபவித்தலே சரியான தண்டனையாகும்.
என்று முடிவு செய்தான்.  
உடனே ஒரு மன்னனாக நின்று சேவகருக்குக் கட்டளையிட்டான். "உடனே தேரைப் பூட்டுங்கள். அந்தக் கன்று நின்ற இடத்தில் வீதிவிடங்கனை நிறுத்துங்கள்.அவன் மீது தேரை ஏற்றிக் கொல்லுங்கள். தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்." என்று கூறினான்.ஆனால் அவன் கட்டளையை யாரும் ஏற்க முன்வரவில்லை. வருங்கால மன்னனை நாட்டின் இளவலைக் கொலை செய்ய யாரும் விரும்பவில் லை .
.மனுநீதி தவறாத மாமன்னன் மனுநீதிச் சோழன் தானே தேரின் மீது ஏறி அமர்ந்தான்.வீதிவிடங்கனைத் தேர்க்காலில் இட்டு த தேரைச் செலுத்தத் தொடங்கினான்.தேரும் வேகமாக ஓடத் தொடங்கியது. மந்திரி முதலியோர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.மக்களோ தங்கள் நிலைமறந்து அலறிக் கூக்குரலிட்டனர். எதையும் கவனத்தில் கொள்ளாத சோழமன்னன் தேரை விரைவாகச் செலுத்தினான்.
என்ன அதிசயம்?  தேர் வீதிவிடங்கனின் அருகே வந்து நின்று விட்டது. அங்கே கண்ணீர் சோர நின்றிருந்த பசுவும்  ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கன்றும் மாயமாய் மறைந்தன. அனைவரும் திகைத்து நின்றனர்.
விண்ணிலிருந்து ஒரு அசரீரியின்  குரல் கேட்டது. "சோழ மன்னா!  தேவேந்திரன் சபையில் உனது நீதியின் சிறப்பைப் பற்றிய சர்ச்சை எழுந்தது. உன் நீதியின் சிறப்பை அறியவே தேவேந்திரனாகிய நானும் எமதர்மனும்  பசுவாகவும் கன்றாகவும் வந்தோம். உன் நேர்மையும் நீதிவழுவாத் தன்மையும் கண்டு மகிழ்ந்தோம். பல்லாண்டு புகழோடு வாழ்வாயாக." என்று வாழ்த்தி மறைந்தது.மன்னன் மனம் மகிழ்ந்து தன் மகனை அணைத்துக் கொண்டு உச்சி மோந்தான்.
நீதி என்று வரும்போது துலாக் கோல்போல் இருந்து நீதிவழங்கிய சோழ மன்னனை நம் வாழ்நாளில் என்றும் மறக்க இயலாதல்லவா!.





ஞாயிறு, 27 ஜூன், 2010

35th story. uyir katha thamizh.

                                                  உயிர் காத்த தமிழ்.

சேர நாட்டை பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னன் ஆண்டுவந்தான். இவன் அதியமானின் தகடூரை வென்றதால் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்று அழைக்கப்பட்டான். இவன் தன் தாய்நாட்டையும் தாய்மொழியான தமிழையும் தன் உயிரினும் மேலாக மதித்து வாழ்ந்து வந்தான். அதனால் ஊரின் நடுவே ஒரு முரசு கட்டில் அமைத்து அதன்மீது தன் வெற்றி முரசை வைத்து மரியாதை செலுத்திவந்தான். அந்த முரசுக்கு யாரேனும் அவமதிப்பு செய்தால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என அறிவிப்புச் செய்திருந்ததால் அந்தவேற்றி முரசுக்கு மக்கள் அனைவரும் மரியாதை செய்து வந்தனர்.
 அந்தநகருக்கு மோசிகீரனார் என்ற புலவர் வந்து சேர்ந்தார். பல நாட்களாக நடந்து வந்ததால் மிகவும் களைத்துக் காணப்பட்டார். பெருஞ்சேரல் இரும்பொறையின் தமிழ்ப் பற்றைப் பற்றிக் கேள்விப்பட்டு மன்னனிடம் பரிசில் பெற்றுச் செல்லவே அவ்வூருக்கு வந்தார் புலவர் மோசிகீரனார். அவர் வந்த சமயம் முரசு கட்டிலின் மேல் இருந்த முரசத்தை நீராட்டுவதற்காக காவலர் எடுத்துச் சென்றிருந்தனர். கட்டில் மட்டுமே அங்கு வீற்றிருந்தது. அதன் பெருமையை அறியாத புலவர் அக்கட்டிலின் மீது ஏறிப் படுத்துவிட்டார். களைப்பின் மிகுதியால் உறங்கிவிட்டார்
இதைக் கண்ட மக்கள் அஞ்சி நடுங்கினர்.இப்புலவரின்  நிலை என்னவாகுமோ எனத் திகைத்தனர்.
நீராட்டுக்குச் சென்றிருந்த காவலர் முரசத்தை ஏந்தி வந்தனர். முரசு கட்டிலின் மீது ஒரு மனிதன் படுத்து உறங்குவதப் பார்த்துத் திகைத்தனர். இச்சய்தியை மன்னரிடம் சொல்ல ஓடினான் ஒரு காவலன். முரசு கட்டிலின் மீது ஒரு மனிதன் படுத்து உறங்குகிறான் எனக் கேள்விப்பட்ட மன்னன் இரும்பொறை கொண்ட கோபத்திற்கு அளவே இல்லை. கையில் தன் வாளைப் பிடித்தபடி கோபத்துடன் அவ்விடத்திற்கு வந்தான். அம்மனிதனை இரு கூராக்க விழைந்து வாளை ஓங்கினான். சட்டென உறங்கும் மனிதனின் கையில் இருந்த ஓலைச் சுவடிகளைக் கண்டான். இவர் ஒரு புலவர் போலும் எனத் தெளிந்தான். தன் கையிலிருந்த வாளை வீசிவிட்டுத் தன் சேவகரிடம் கவரி கொணருமாறு பணித்தான். சேவகர் கவரி கொண்டுவர அதனால் புலவருக்குக் களைப்பு நீங்குமாறு  விசிறியபடியே அருகே  நின்றான் மன்னன்.
சற்று நேரம்கழித்துக் கண்விழித்த புலவர் மோசிகீரனார் மன்னன் தனக்குக் கவரி வீசி நிற்பதைக் கண்டார். பதறித் துடித்து கட்டிலினின்றும் இறங்கி மன்னன் முன் நின்றார். முரசுடன் சேவகர் நிற்பதைக் கண்டார். தான்செய்த தவறு அவருக்குப் புரிந்தது. முரசு கட்டிலில் படுத்து அதன் பெருமையைக் குலைத்த தன்னைத் தண்டிக்காமல் தனக்குக் கவரி வீசி நின்ற அவனது அன்புள்ளத்தை எண்ணி எண்ணி மகிழ்ந்தார். அவனையும் அவனது தமிழ்ப் பற்றையும் போற்றிப் பாடல் இசைத்தார் புலவர்.
அப்பாடல் புறநானூறு என்னும் நூலில் உள்ளது. அக்கால மன்னர்கள் தாய்நாட்டின் மீதும் தாய்மொழியாம் தமிழ் மொழியின் மீதும் கொண்டிருந்த பற்றின் காரணமாகவே இன்றும் தமிழ்வாழ்கிறது. உலகில்  ஒரு சிறந்த
 இடத்தைப் பெற்றுள்ளது. தவறு செய்தவர் புலவர் எனத் தெரிந்து அவர் கற்ற தமிழின் காரணமாகவே அவருக்குப் பணிவிடை செய்ய முற்ப்பட்ட மன்னனின் பெருமையை தமிழ் உலகம் என்றும் மறவாது.
 



ஞாயிறு, 13 ஜூன், 2010

34th story vidhiyai vendra magan.

                                  விதியை வென்ற மகன்.
மிருகண்டு என்ற முனிவர் மருத்துவதி என்ற பெண்ணை மணந்து இல்லறம் நடத்தி வந்தார். நல்லறம் நன்மக்கட்பேறு அன்றோ. ஆனால் மிருகண்டுவிற்கு பல ஆண்டுகளாக மக்கட்பேறு வாய்க்கவில்லை.கணவனும் மனைவியுமாக காசி மாநகர் சென்று ஓராண்டு கடும் தவம் செய்தனர். இவர்களின் தவத்திற்கு மெச்சிய பரமேஸ்வரன் அவர்களின் முன் தோன்றியருளினார்.
"அன்பனே! உனக்கு என்ன வேண்டும்?"என்றார்.
"சுவாமி! எனக்குச் சந்தான பாக்யத்தைத் தந்தருள வேண்டும்." என்றார் மிருகண்டு.
"அப்படியா! கல்வி ,ஞானம், அன்பு பக்தி அடக்கம் முதலிய குணங்களுடன் பிறக்கும் பதினாறு ஆண்டுகளே ஆயுள் உள்ள மகன் வேண்டுமா? கோபம், சூது,கொலை அடங்காமை வஞ்சனை என்ற துர்குணங்கள் கொண்ட நூறு ஆண்டுகள் ஆயுள் உள்ள மகன் வேண்டுமா?கேள்."
மிருகண்டு சிந்தித்தார்."சுவாமி! பதினாறு ஆண்டுகளே வாழ்ந்தாலும் சத்புத்திரனாகவே இருக்கவேண்டும். அருள் புரியுங்கள்" என்றார்.
"நன்று. விரைவிலேயே உங்களுக்கு சத்புத்திரன் பிறப்பான்." என்று வரமளித்து மறைந்தார் பரமேஸ்வரன்.
ஆண்டவன் வரத்தின்படியே அடுத்த ஆண்டே மருத்துவதி ஒரு ஆண்மகவைப் பெற்றெடுத்தாள்.குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டுச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர் பெற்றோர்.
குழந்தை மார்க்கண்டேயனுக்கு ஐந்து வயதாகியது. ஒளிவிடும் கண்களும் செந்தாமரை போன்ற முகமுமாக அழகின்  சிகரமாகத் திகழ்ந்தான் மார்க்கண்டேயன். அத்துடன் வேதங்கள் புராணங்கள் சாஸ்த்திரங்கள் என்று அனைத்திலும் சிறந்து விளங்கினான்.இறை பக்தியிலும் சிறந்தவனாக பூஜை ஜபம் முதலியன செய்து வந்தான். பெற்றோரை தெய்வமாக மதித்துப் போற்றிவந்தான். இவனது அறிவையும் அழகையும் கண்டு பெற்றோர் பூரிப்புடன் மனவேதனையும் கொண்டனர்.மார்க்கண்டேயன் வளர வளர அவர்களின் துயரமும் வளர்ந்துகொண்டே போனது. காலம் நிற்குமா? 
அது ஓடிக்கொண்டே இருந்தது. மார்கண்டேயனுக்குப் பதினைந்து வயது முடிந்து பதினாறாவது வயது தொடங்கியது.
தாய் மருத்துவதி எப்போதும் அழுது கொண்டே இருக்கத் தொடங்கினாள்.தந்தையும் துயரத்தில் மூழ்கினார்.அடுத்த பிறந்தநாளில் தங்கள் மகன் தங்களை விட்டுப் பிரிந்து விடுவானே.நாம் இருக்கையில் தங்கள் மகன் தங்களை விட்டுப் பிரிவதா என எண்ணி எண்ணி அழுதனர்.
இவர்களின் துயரம்கண்டு மார்க்கண்டேயன் காரணம் கேட்டான். காரணம் சொல்லாமல் மறைக்க முயன்ற மிருகண்டு கடைசியில் துயரத்துடன் கூறினார்.
"மகனே! இன்னும் ஓராண்டுதான் நீ எங்களுடன் இருப்பாய். பிறகு...பிறகு.." துக்கம் தொண்டையை அடைக்கப பேச முடியாமல் கண்ணீர் சிந்தினார் மிருகண்டு முனிவர்.
தந்தையின் துயர் கண்டு துடித்தான் மார்க்கண்டேயன்.அவன் தாய் மருத்துவதி அழுது கொண்டே கூறினாள்.
"என் கண்ணே, உனக்கு ஆயுள் இன்னும் ஓராண்டுதானப்பா.பதினாறு வயதானபின் நீ எமனுலகு சென்று விடுவாய் 
என்பது சிவபெருமான் எங்களுக்குத் தந்த வரம்"
மார்க்கண்டேயன் புன்னகை புரிந்தான்."தாயே, இதை இத்தனை நாட்களாகக் கூறாமல் மறைத்து வைத்ததோடு நீங்களும் துயரப்பட்டீர்களே.என் விதியை நான் மாற்றிக் காட்டுகிறேன்.கவலையை விடுங்கள். வெற்றியுடன் வருகிறேன். எனக்கு ஆசிகூறி அனுப்புங்கள்." என்றபடி பெற்றோரைப் பணிந்து நின்றான்.
பெற்றோரின் ஆசியோடு புறப்பட்டான். சிவபெருமான் கோயில் கொண்டுள்ள சிவாலயங்கள் பலவற்றையும் தரிசித்து அங்கெல்லாம் பூஜை செய்து வழிபட்டான்.ஓராண்டு முடியும் சமயம் திருக்கடவூர் என்னும் சிவத்தலம் வந்து சேர்ந்தான்.அங்கு தன்னை மறந்த நிலையில் இறைவனைப் பூஜித்து வந்தான். உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகி இறைவனை வேண்டினான்."இறைவா, நான் வாழ ஆசைப்படவில்லை. ஆனால் என் பிரிவினால்     என்னைப் பெற்ற தெய்வங்களான என் பெற்றோர் பெரும் துயரத்துக்கு ஆளாவார்கள் என்பதைத்தான் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு மகன் இருந்தும் அவன் காரணமாக பெற்றோர் துயரப்படுவதா?அதனால்தான் என் ஆயுளை மாற்றி என் பெற்றவரை மனம் மகிழச் செய்." மனம் கசிந்து உருகி வேண்டினான்.
 நாளாக நாளாக அவனது பக்தி தீவிரமடைந்தது.அன்ன ஆகாரமின்றி இறைவனின் நாமத்தைக் கூறிக்கொண்டு வேறு எந்த கவனமும் இன்றி ஒரே குறிக்கோளோடு வேண்டிக்கொண்டிருந்தான். அந்தநாளும் வந்தது.
அன்றோடு மார்க்கண்டேயனுக்குப் பதினாறு வயது முடிந்தது. எமதருமன் சபையில் மார்க்கண்டேயனின் ஆயுள் முடிந்த செய்தி அறிவிக்கப்பட்டது. எமனும் தன் தூதர்களை அனுப்பினான்.
அவர்களும் திருக்கடவூர் கோயிலுக்கு வந்து மார்க்கண்டேயன் அருகே வந்து நின்றனர். ஆனால் அவர்களால் மார்க்கண்டேயனை நெருங்க முடியவில்லை. மீண்டும் எமலோகம் சென்று எமன் முன் தலை குனிந்து நின்றனர்.இவர்கள் கூறியதைக் கெட்ட எமன் கோபத்துடன் கர்ஜித்தான். "ஒரு சிறுவனின் உயிரைக் கொண்டுவர உங்களால் முடியவில்லையா?அப்படி என்ன சிறப்பு அவனிடம் நானே சென்று அவன் உயிரைக் கவர்ந்து வருகிறேன்."என்று கூறிய எமன் தன் வாகனமான எருமைக்கடாவின் மீது ஏறி திருக்கடவூர் வந்து சேர்ந்தான். 
இறைவன் முன் அமர்ந்து வேண்டிக் கொண்டிருக்கும் மார்க்கண்டேயனைக் கண்டான்.
"சிறுவனே, உன் ஆயுள் முடிந்து விட்டது.என்னுடன் புறப்பட்டு வா."
கண் திறந்து பார்த்த மார்க்கண்டேயன் எமனைப் பார்த்துப் புரிந்து கொண்டான்.உடனே "இறைவா, அபயம், அபயம்,
உன்னையே நம்பியுள்ளேன் என்னைக் கை  விடாதே." என்று அலறியபடியே இறைவனின் திருமேனியை இறுகக் கட்டிக் கொண்டான். அவனது இச்செயலால் கோபமடைந்த எமன் தன் கையிலிருந்த பாசக்கயிற்றை அவன் மீது வீசினான்.அக்கயிறு சிவலிங்கத்தின் மேலும் பட்டது. கோபாவேசமாக லிங்கத்தினின்றும் சிவன் வெளிவந்தார்.
"எமதர்மா, என்னகாரியம் செய்தாய். என் பக்தன் மீது பாசக்கயிற்றை வீச உனக்கு என்ன தைரியம் " என்றபடியே 
இடது காலால் காலனை எட்டி உதைத்தார்.எமன் அவர் பாதத்தைப் பற்றிக்கொண்டு மன்னிப்புக் கேட்டான்.
அவனுக்குக் கருணை புரிந்த பெருமான் பரிவுடன் மார்க்கண்டேயனை நோக்கினார். 
"மைந்தனே, உனது தீவிரமான பக்தியினால் என்  மனம் மகிழ்ந்தது. நீவிரும்பியபடியே முடிவில்லாத ஆயுளைப் பெறுவாய்.  என்றும் பதினாறாகவே இருப்பாயாக.".
இறைவனின் கருணையைப் பூரணமாகப் பெற்ற மார்க்கண்டேயன் விரைந்து தாய் தந்தையரைக் கண்டு அவர்களின் பாதங்களில் மலர்களைச் சொரிந்து வணங்கி நின்றான். நடந்த நிகழ்ச்சிகளைக் கேட்டறிந்த பெற்றோர் இழந்த கண்களை மீண்டும் பெற்றவர் போல் மகிழ்ந்தனர். மார்க்கண்டேயன் தன் பெற்றோருக்குப் பலகாலம் தொண்டு செய்து என்றும் பதினாறாகவே வாழ்ந்திருந்தான்.
விதியே என்று வீணாய் இருக்காமல் தன் மதியாலும் முயற்சியாலும்  விதியை மாற்றிக்கொண்ட
மார்க்கண்டேயனின் வாழ்க்கைநமக்கெல்லாம்  ஒரு பாடமாகும்.

























சனி, 5 ஜூன், 2010

33rd story. kannappanaana thinnappan.

கண்ணப்பனான திண்ணப்பன்.
குடுமியாமலை என்று ஒரு மலை இருந்தது. அந்த மலையில் அடர்ந்த காடுகளும் அந்தக் காட்டில் மிகுந்த மிருகங்களும் இருந்தன. அந்த மிருகங்களை வேட்டையாடியபடி வாழ்ந்து வந்த வேடுவர் கூட்டமும் இருந்தது. அந்த வேடுவர் கூட்டத்துக்கு ஒரு தலைவனும் இருந்தான்.அந்த வேடுவர் தலைவனுக்கு பல ஆண்டுகள் குழந்தை இல்லாதிருந்தது. அவன் இறைவனை வேண்டி ஒரு மகனைப்பெற்றான்
அந்தக் குழந்தை பிறந்தபோது மிகுந்த பலசாலியாக திண்ணென்று இருந்ததால் குழந்தைக்கு திண்ணன் என்று பெயர் சூட்டினான் வேடர் தலைவன். திண்ணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான்.வாலிப வயதை அடைந்தான். வேட்டையாடும் திறமையை வளர்த்துக் கொண்டிருந்தான். வில் வித்தை வாள்வித்தை ஆகியவற்றை நன்கு கற்றுத் தேர்ந்தான். தன் நண்பர்களுடன் தனியே சென்று வேட்டையாடும் திறமை பெற்றான்.
அவன் தந்தை தன் மகனை நண்பர்களுடன் தனியே வேட்டையாட அனுப்பத் தொடங்கினான்.
திண்ணனும் மகிழ்ச்சியுடன் தன் நண்பர்கள் புடைசூழ் வேட்டைக்குச் செல்லத் தொடங்கினான்.
                  வழக்கம்போல் அன்றும் திண்ணன் வேட்டைக்குப் புறப்பட்டான்.அன்று எந்த விலங்கும் அவன் கண்ணில் படவில்லை. காட்டுக்குள் வெகு தூரம் சென்று விட்டான். அவன் நண்பர்களும் வேறு வேறு திசையில் சென்று விட்டதால் திண்ணன் தனிமையில் விடப்பட்டான். ஆனாலும் ஒரு விலங்கையாவது வேட்டையாடியே தீருவது என்ற எண்ணத்தில் அலைந்தபடியே மலையின் உச்சிவரை சென்று விட்டான் திண்ணன்.
அந்த உச்சியில் ஒரு இடத்தில் சிவ லிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டான்.அவனது உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அந்த சிவலிங்கத்தின் மீது மாறாத அன்பு மேலிட்டது.அதைக் கட்டித்தழுவினான். ஆடினான் பாடினான். 
 "ஐய்யா,, இங்கு தனியாக இருக்கிறாயா? உனக்கு உணவு கொடுப்பவர் யார்,உனக்குத் துணையாக இருப்பவர் யார், இனி அஞ்சாதே நான் இருக்கிறேன்.உன்னை விட்டுப் பிரியேன்." எனப் பலவாறு பேசியவன் இறைவனுக்குப் பசிக்குமே உணவு வேண்டுமே என எண்ணிக் காட்டினுள் ஓடினான்.
 திண்ணன் காட்டினுள் ஓடி வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது குடுமியாமலையின் மறுபுறத்திலிருந்து ஒரு அந்தணர் வந்து இறைவனைப் பூஜித்துவிட்டுச் சென்றார்.சற்று நேரம் கழித்து நமது திண்ணன் அவ்விடம் வந்தான்.
அவன் வரும்போதே இறைவனின் அபிஷேகத்திற்காக நீரை வாயில் நிரப்பிக் கொண்டு வந்து அதை சிவ லிங்கத்தின் தலையில் உமிழ்ந்தான்.தலையில் அந்தணர் வைத்துச் சென்ற மலர்களைத் தன் செருப்புக் கால்களால் தள்ளிவிட்டான்.தன் கையில் வைத்திருந்த மாமிசத்தை இறைவன் முன் வைத்தான்.தன் தலையில் சூட்டிவந்த மலர்களை இறைவனுக்கு வைத்தான்.அவன் முன் அமர்ந்து உண்ணுமாறு வேண்டினான்.
"அய்யா, இது இளம் பன்றியின் மாமிசம் மிகவும் சுவையாக இருக்கும். நானே சாப்பிட்டுப் பார்த்துக் கொண்டுவந்தேன். சாப்பிடு சாமி."என்று கெஞ்சிக்கொண்டே இருந்தான். 
மறுநாள் விடிந்தது. மீண்டும் திண்ணன் வேட்டைக்குக் கிளம்பினான்.அதே நேரம் அந்தணர் அங்கு வந்தார்.அந்த இடத்தில் இறைச்சி இறைந்து கிடப்பதைப் பார்த்து மிகுந்த அருவருப்பும் வருத்தமும் அடைந்தார். இறைவா, இது என்ன சோதனை. யார் இப்படிச் செய்வது. என்று புலம்பியவாறு அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டுப் பின் பூஜையை முடித்து விட்டுப் போய்விட்டார். அவர் போனபின்னர் திண்ணன் வாயில் நீருடனும் கையில் ருசிபார்த்து எடுத்துவைத்த எச்சில் மாமிசத்துடனும் தலையில் காட்டுப் புஷ்பங்களுடனும் அங்கு வந்து சேர்ந்தான்.
வழக்கம்போல் செருப்பணிந்த காலால்  லிங்கத்தின் மேலிருந்த புஷ்பங்களைத் தள்ளிவிட்டுத் தன் வாயிலிருந்த நீரை உமிழ்ந்தான். தன் தலையிலிருந்த காட்டுப் புஷ்பங்களைச சூட்டி மாமிசத்தையும் படைத்தான்.
"குடுமிச் சாமி ரெண்டு நாளா பட்டினியாக இருக்கிறாயே உனக்குப் பசிக்கலையா, உனக்கு என்ன மாமிசம் வேண்டுமோ கேள் கொண்டுவந்து தருகிறேன். பட்டினியாக இராதே" என்று வேண்டினான். இப்படியே திண்ணன் பூஜிப்பதும் பிறகு அந்தணர் வருவதுமாக நான்கு நாட்கள் ஓடிவிட்டன. அன்று அந்தணர் மனம் வருந்தி இறைவனிடம் வேண்டிக்கொண்டார். இந்த பொல்லாச் செயலைச் செய்பவரைத் தண்டித்தல் ஆகாதா.என்று.
அன்று இரவு கனவில் அந்தணரிடம் "நீ பூஜையை முடித்து விட்டு அங்கேயே இரு. என்ன நடக்கிறது என்று பார்."என்று கூறி மறைந்தார்.
அதே போல் திண்ணன் வேட்டைக்குச் சென்ற பின் அந்தணர் வந்து அந்த இடத்தைச் சுத்தம்  செய்து தன் பூஜையை முடித்தார்.பின்னர் இறைவன் கூறியது போல மறைந்திருந்தார். 
வழக்கம்போல திண்ணன் வந்தான் அவன் செய்யும் பூஜையைச் செய்தான்.அவனைச் சோதிக்கும் பொருட்டு சிவ லிங்கத்தின் ஒரு கண்ணிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. திண்ணன் தவித்தான் பச்சிலைகளைப் பறித்துவந்து கண்ணில் தடவினான்.என்ன செய்தும் உதிரம் வடிவது நிற்கவில்லை.திண்ணன் சிந்தித்தான்.என்ன
செய்து இந்த உதிரத்தை நிறுத்துவது. ஊனுக்கு ஊனே சரி என முடிவு செய்தான்.தன் கண்ணைத் தோண்டி சிவனுக்கு  வைத்தான்.உதிரம் நின்றது. மகிழ்ச்சியில் ஆடினான் திண்ணன்..
திடீரென அடுத்த கண்ணில் இருந்தும் உதிரம் வரவே திண்ணன் சற்றும் கலங்கவில்லை.அடையாளமாகத் தன் காலை இறைவன் கண்ணில் வைத்துக் கொண்டு மற்றொரு கண்ணையும் பிடுங்கப் போனான்.அப்போது இறைவனின் கை கண்ணப்பனின் கையைப் பிடித்து நிறுத்தியது. சிவலிங்கத்தின்  உள்ளிருந்து ஒரு கை வெளிவந்து கண்ணப்பனைப் பற்றி நிறுத்தியது."கண்ணப்ப,நில். உனது பக்தியை உலகுக்குத் தெரிவிக்கவே இந்த நாடகம் ஆடினோம்" எனக் கூறி மறைவிலிருந்த அந்தணருக்கும் காட்சி கொடுத்தார் சிவபெருமான்.."கண் கொடுத்த நீ இன்று முதல் கண்ணப்பன் எனப் படுவாய். அத்துடன் எனது அடியார்கள் வரிசையில் நீயும் வைத்து வணங்கப்பெருவாய் " என ஆசி கூறி மறைந்தார் இறைவன்.அன்று முதல் அறுபத்துமுன்று நாயன்மார்களுள் ஒருவராக கண்ணப்ப நாயனாரும் வைத்து வணங்கப் பெறுகிறார்.
கண் தானம் கொடுப்பதை எந்தக் காலத்திலோ நம் முன்னோர் எடுத்துக் காட்டியுள்ளனர் என்பதைக் கண்ணப்ப நாயனார் வாழ்க்கை வரலாற்றின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா.






வியாழன், 6 மே, 2010

எல்லா உயிரும் நம் உயிரே.


 சிபிச்சக்ரவர்த்தி  என்று ஒரு சோழ அரசன் இருந்தான். மக்களிடத்தில்  மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் மிக்க அன்பு பாராட்டி வாழ்ந்து வந்தான். அவனது ஆட்சியில் மனிதர்கள்  விலங்குகள் பறவைகள் என எல்லா உயிரினங்களும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தன. மன்னன் தனது நாட்டில் யாருக்கும் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான்.
     
       சோழ மன்னனின் புகழ் நாடெல்லாம் பரவியிருந்தது. இந்தச் செய்தி  தேவருலகிற்கும் எட்டியது. இந்திரன் சும்மா  இருப்பானா?  சிபிச்சக்ரவர்த்தியை  பரீட்சை செய்து பார்க்க முடிவு செய்தான். அக்னி என்ற தேவனுடன் பூவுலகிற்கு வந்து சேர்ந்தான்.

              ஒருநாள் மாலை நேரம். சிபி அரண்மனை மேல்மாடத்தில் உலவிக்கொண்டு இருந்தார். அப்போது பறவை ஒன்று உயிருக்குப் பயந்து கிரீச்சிடுவது போல் சத்தம் வந்தது. திடுக்கிட்டுத் தலையை உயர்த்தி ஆகாயத்தைப் பார்த்தார். அங்கே ஒரு வல்லூறு ஒரு புறாவைத் துரத்திக் கொண்டு செல்வதையும் உயிருக்குப் பயந்து புறா கத்தியபடி பறப்பதையும்
கண்டார்.
       
      இன்னது செய்வது என அறியாது திகைத்தபடி நின்றிருந்த சிபியின் முன் அவர் காலடியில் வந்து விழுந்தது அந்தப் புறா.. அதைக்கையில் எடுத்து அன்புடனும் ஆதரவுடனும் தடவிக்  கொடுத்தார் சிபிச்சக்ரவர்த்தி.  மிகுந்த நடுக்கத்துடன் அவர் கையில் தஞ்சம் புகுந்தது  அந்தப் புறா.
       
       சற்று நேரத்தில் அதைத் துரத்திவந்த வல்லூறும் அங்கு வந்து அரசர் முன் அமர்ந்தது.அதைக் கண்டு திகைத்த சிபி தன் கையில் இருந்த புறாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். வல்லூறு வாய் திறந்து பேசியது.
  
     "அரசே! இந்தப் புறா எனக்குச் சொந்தம்.  இதை என்னிடம் கொடுத்துவிடுங்கள்."          

மன்னன் ஆச்சரியத்துடன் பார்த்தான்.மீண்டும் வல்லூறு அரசனிடம் பேசியது."இந்தப் புறா இன்று எனக்கு உணவாகும். நான் பசியால் தவிக்கிறேன்."
அதை சிபி அன்புடன் பார்த்தான்."ஏ! பறவையே உன் பசிக்காக இந்த சாதுவான பறவையை உனக்கு உணவாகத் தரமாட்டேன். "

"அப்படியானால் என் பசிக்கு என்ன வழி அரசே?"


சக்ரவர்த்தி சற்று நேரம் சிந்தித்தான்.ஊனுக்கு ஊனைத்தான் தரவேண்டும். வேறு உயிர்களையும் துன்புறுத்தக் கூடாது. என்ன வழி என் சிந்தித்தான். சற்று நேரத்தில் முகம் மலர்ந்தான்.


"உனக்கு உணவாக என் மாமிசத்தையே தருவேன் உண்டு பசியாறுவாய்."என்று சொன்னவன் காவலரை அழைத்தான். ஒரு தராசு கொண்டு வரச் சொன்னான்.ஒரு தட்டில் புறாவை வைத்தான்.அடுத்த தட்டில் தன் உடலிலிருந்து மாமிசத்தை அரிந்து வைத்தான்.என்ன ஆச்சரியம்! எவ்வளவு தசையை அரிந்து வைத்தாலும் புறாவின் எடைக்கு சமமாகவில்லை. எனவே சிபிச்சக்ரவர்த்தி தானே அந்தத் தராசில் ஏறி அமர்ந்தான். தட்டு சமமாகியதும் மன்னன் மகிழ்ந்தான்.



"ஏ  பறவையே இப்போது நீ என் தசையை உனக்கு உணவாக்கிக் கொள்."என்றவுடன் அங்கிருந்த வல்லூறும் புறாவும் மறைந்தன.



அங்கே தேவ அரசனான இந்திரனும் அக்னியும் நின்றனர்.
"சிபிச் சக்ரவர்த்தியே! உமது நேர்மையையும் கருணை உள்ளத்தையும் பரிசோதிக்கவே நாங்கள் பறவையாக வந்தோம்.உமது உள்ளம் புரிந்தது.உலகம் உள்ளளவும் உமது புகழ் நிலைப்பதாக. நீர் பல்லாண்டு வாழ்க" என வாழ்த்தி மறைந்தனர்.அழகிய உடலை மீண்டும் பெற்ற மன்னன் பல்லாண்டு புகழுடன் வாழ்ந்தான்.

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

முற்பகல் செய்யின்

முற்பகல் செய்யின்

பல ஆண்டுகளுக்கு முன் பத்ராசலம் என்ற ஊரில் கோபன்னா என்ற ஒரு அதிகாரி இருந்தார். அவர் சிறந்த ராமபக்தராக இருந்தார். அவர் ஹைதராபாத் நவாபான தானேஷா விடம் பணிபுரிந்து வந்தார். நவாப் தானேஷா இவருக்கு பத்ராஜலத்தின் தாசில்தார் பதவி கொடுத்து அனுப்பியிருந்தார். இவரும் வரி வசூலிக்கும் பணியைச் செய்து வந்தார். ஒரு முறை ஆறு லக்ஷம் பொன் வரியாகச் சேர்ந்திருந்தது. மிகவும் சிதிலமடைந்திருந்த அந்த ஊரிலுள்ள ராமர் கோயிலை செப்பனிட்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று விரும்பினார் கோபன்னா. ராமரின் மீது பக்தி அதிகமான காரணத்தால் எல்லாச் செலவையும் நவாபின் வரிப்பணத்தை வைத்தே செய்து முடித்தார். சீதா லக்ஷ்மண ஹனுமத் சமேதரான ஸ்ரீ ராமபிரான் கோவில் அழகுடன் கம்பீரமாகத் திகழ்ந்தது. அத்துடன் அழகிய வைர வைடூர்ய ஆபரணங்கள் கொண்டு சீதா ராமரை அழகு படுத்திமகிழ்ச்சி கொண்டார். அடியார்கள் வருவதும் வழிபடுவதுமாக இருப்பதைக் கண்டு கோபன்னாவின் மனம் அளவற்ற ஆனந்தம் கொண்டது.

கடந்த ஒரு வருடமாக கோபன்னா வரிப்பணம் தராது கோவிலைச் சீரமைத்த செய்தியைக் கேள்விப்பட்டநவாப் தானேஷா மிகுந்த கோபம் கொண்டார். உடனே ராமதாசரை அழைத்து விசாரித்தார். அவர் வரிப்பணத்தை எடுத்துச் செலவு செய்தது உண்மை என்று அறிந்து கொண்டார். அந்தப்பணம் முழுவதையும் கஜானாவில் கட்டும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ராமதாசர் சிறையில் அடைக்கப்பட்டுச் சித்ரவதை செய்யப்பட்டார்.

இந்தத் தண்டனை ஒருமாதம் ஒரு வருடம் அல்ல. பன்னிரண்டு ஆண்டுகள் இப்படிச் சிறையில் துன்பப்பட்டார். முச்சந்தியில் நிறுத்திக் கசையடி கொடுப்பதும் தலையில் பாறாங்கல்லை வைத்துச் சுமக்கவைப்பதும் சுடுமணலில் கை கால்களைக் கட்டி உருட்டுவதுமாக சித்ரவதை தொடர்ந்தது.
மக்கள் ராமனின் பக்தனுக்கா இந்தக் கதி என்று வருந்தினர். கோபன்னாவும் ராமனைப் பலவாறு துதித்து சோர்ந்து போனார்.ராமரை நிந்திக்கத் தொடங்கினார்.
"ஹே ராமா! உன்னை என் தெய்வமாக நினைத்தேனே.எல்லாவற்றையும் உனக்குத் தானே செலவிட்டேன்.கோவிலைக் கட்டினேன். நகைகளும் பொன்னாடைகளும் எவ்வளவு வாங்கினேன்.உன் மாமனா வாங்கினான்?எல்லாம் தானேஷாவின் பணமஅன்றோ? எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு வேடிக்கை பார்க்கிறாயே?இன்னும் இந்த கோபன்னா எத்தனை சித்ரவதைப் படுவான்? இனி தாங்க முடியாதய்யா."

என்று கதறினார் கோபன்னா. ராமரின் மனம் இளகுவதாக இல்லை.சீதையின் கனிந்த முகத்தை எண்ணிப் பார்த்தார். தாயின் கருணை தன்னைக் காக்கும் என்று நம்பினார்.
"அம்மா!சீதம்மா! என் துயரம் போக்க நீயாவது ராமனிடம் சொல்லக்கூடாதா? தாயே, நீ கருணையின் வடிவம். உன் மகனின் துயர் தீர்க்க வழி காட்டம்மா."என்று கதறிய கோபன்னா மயக்கமானார்.
அப்போது வைகுண்டத்தில் சீதாதேவி "சுவாமி, கோபன்னா படும் துயரம் உங்கள் கண்களில் படவில்லையா?"என்று நினைவு படுத்தினாள்.

"சீதே! அவன் முன் பிறவியில் ஒரு கிளியைப் பிடித்துக் கூண்டில் அடைத்துத் துன்புறுத்தினான். பன்னிரண்டு நாட்கள் அடைத்து வைத்ததால் இந்தப் பிறவியில் பன்னிரண்டு ஆண்டுகள் இந்தச் சிறைவாசம். இன்றோடு அவனது தண்டனை முடிகிறது. இன்று இரவே தானேஷாவின் கடனைத் தீர்த்துவிட்டு வருவோம்."

"சுவாமி, ஆயுள் முழுவதும் உங்களையே பூஜித்த கோபன்னாவுக்குக் காட்சி தராமல் தானேஷாவிற்குக் காட்சியளிப்பது ஏன்?"
"அதுவும் முன்வினைப் பயனே. முன் பிறவியில் தானேஷா காசியில் ஒரு அந்தணனாக இருந்தான். இறைவனுக்கு ஆயிரம் குடங்கள் அபிஷேகம் செய்தால் இறைவன் தரிசனம் கிட்டும் என்று தொடங்கினான்.ஆனால் 999 குடங்கள் முடிந்தும் இறைவன் காட்சி தெரியவில்லையே என்று குடத்தைப் போட்டு
உடைத்து விட்டான்.அதன் பயனாகவே அவன் இவ்வாறு பிறக்க நேரிட்டது.அதுவும் அரசனாகப் பிறந்துள்ளான். அவனுக்கு சிவபெருமான் இப்பிறவியில் ராமதரிசனம் பெறுவாய் என்று வரமளித்துள்ளார்.ஆகவே அவனுக்குக் காட்சி தரவேண்டும்."
புன்னகையுடன் கூறிய ராமபிரான் இலக்குவன் பின்தொடர தானேஷாவின் அரண்மனைக்குப் புறப்பட்டார்.

நடுநிசி.தானேஷாவின் அந்தப்புரம். கனவு கண்டு கண் விழித்த தானேஷாவின் முன்னால் பேரழகுடன் சேவகன் வேடத்தில் ராம லக்ஷ்மணர் நின்றனர்.அவர்களின் பேரழகு தானேஷாவின் கண்களைக் கூசச் செய்தது."யார் நீங்கள்?எங்கிருந்து வருகிறீர்கள்?"
"நவாப்ஜி! நாங்கள் பத்ராஜலத்திலிருந்து வருகிறோம். நாங்கள் கோபன்னாவின் பணியாட்கள்.நான் ராம்ஜி இவன் லக்ஷ்மண்ஜி."
"நீங்கள் எத்தனை வருடங்களாக கோபன்னாவிடம் பணி புரிகிறீர்கள்?அவர் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்?"
"நாங்கள் பல தலைமுறைகளாக அவர்களுக்குப் பணிவிடை செய்கிறோம்.கோவில் பிரசாதத்துக்கு ஆசைப் பட்டுத்தான் நாங்கள் பணி செய்கிறோம்."
"சரி,இப்போது இங்கு வந்த காரணம் என்ன?"
"என் கடனைத் தீர்த்து வா என கோபன்னா கூறினார். பணத்தைக் கொண்டு வந்தோம்.என்று கூறி கை யிலிருந்த பையை அவிழ்த்துக் கொட்டினான். தங்க நாணயங்களின் ஒளியினால் அந்த அறையே மின்னியது.
"உமக்குச் சேரவேண்டிய ஆறு லக்ஷம் வராகன் இருக்கிறதா பார்த்து ரசீது கொடுங்கள்."

தானேஷா அந்த அழகு உருவங்களையே பார்த்து பிரமித்து நின்றிருந்தான்.
சீக்கிரம் கொடுங்கள். என்ற ராம்ஜியின் குரல் கேட்டு உடனே ரசீதைக் கொடுத்தான் நவாப். மறுகணம் அந்த சேவகர் இருவரும் மறைந்தனர்.
அடுத்த கணம் இருண்ட சிறை வாயிலில் நின்றனர்.கோபன்னாவின் அருகே அந்த ரசீதை வைத்தனர். சிறையின்
அவல நிலையைப் பார்த்த லக்ஷ்மணன் ராமனிடம் "அண்ணா! சுவை மிக்க உணவை நமக்குப் பிரசாதமாக்கிப் பின் ஊருக்கெல்லாம் வழங்கிய பக்தனுக்கு முன்பே கருணை காட்டியிருக்கலாமே?"என்றான்.
"லக்ஷ்மணா!ஊழ்வினை. வாயில்லாப் பட்சியைக் கூண்டிலே அடைத்து வைத்த பாவம்தான் இந்தச சிறைவாசம்."
இருவரும் கோபன்னாவிற்கு ஆசி வழங்கி விட்டு மறைந்தனர்.

கோபன்னாவின் சேவகர் கொடுத்தமுஹராக்களைக்கண்டுஅதிசயித்தார்தானேஷா.பத்ராஜலத்திலிருந்து வந்தவர் ராம லக்ஷ்மணர் தான் என அறிந்து கொண்டார்.உடனே ஓடினார் சிறைச் சாலைக்கு. அவரது அகக்கண் திறந்தது. கோபன்னாவை விடுவித்து அவர் கால்களில் பணிந்தார்.

"கோபன்னா! உமது பெருமையை அறிந்து கொண்டேன்.பக்தனுக்காக பகவானே வந்தார் என அறிந்து கொண்டேன்.உமது அந்த பணியாட்களைப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் போல உள்ளதே! உமது கருணையினால் அந்த ராம லக்ஷ்மணர் இருவரையும் தரிசிக்கும் பெரும் பேறு கிடைத்தது. கோபன்னா இனி நீர் கோபன்னா அல்ல. ராமதாசர்."என்று கோபன்னாவின் பாதங்களில் வீழ்ந்தான் நவாப்.

நடந்த நிகழ்ச்சிகளைக் கேட்டறிந்த கோபன்னா தானேஷாவை அணைத்துக் கொண்டார்.
"நீர் பாக்யசாலி. பல ஆண்டுகள் அவரின் பக்தனான எனக்குக் காட்சி கிட்டவில்லை. நீர் அந்தப் பேறு பெற்றீர்.
ராமா!எனக்கும் காட்சி தர மாட்டாயா?"என ஏங்கினார்.

ராமதாசர் தானேஷாவினால் பூஜிக்கப்பட்டார்.பெரும் பொருளோடு மிகுந்த மரியாதையுடன் அவரை பத்ராஜலத்திற்கே வழியனுப்பிவைத்தார் தானேஷா.
அதன்பின்ராமதாசர் நெடுநாள் ராமசேவை செய்து வந்தார். ராமன்மீது பலபாடல்களைப் பாடினார். ஒருநாள் ராமனைப் பாடியவாறு இருந்த இவரது முன்னால் ஒரு பொன்மயமான தேர் வந்து நின்றது.அந்தத் தேரின் மீது அமர்ந்த ராமதாசர் ராமநாம உபதேசம் செய்தவாறே வானவெளியில் பறந்து மறைந்தார்.
நாம் எந்த உயிருக்கும் தீங்கு இழைத்தல் ஆகாது என்பதை இவரது கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.


ஞாயிறு, 28 மார்ச், 2010

சோதிடனைக் கொன்ற கதை

ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும் அறிந்து கொண்டான்.இதை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டான்.
அதனால் ஒரு சூழ்ச்சி செய்தான்.அரசர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டான். ரகசியமாக அரண்மனை ஜோதிடரை சந்தித்தான் சுல்தான்.நிறைய பொன்னைக் கொடுத்து ராயரின் படையெடுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான்.
 
                                   பொன்னுக்கு ஆசைப்பட்ட அந்த வஞ்சக ஜோதிடன் நேராக விஜயநகர அரண்மனைக்கு வந்தான்.கிருஷ்ணதேவ ராயர் படையெடுக்கத் தயாராக உள்ளதை அறிந்துகொண்டான். அவன் உள்ளம் வேகமாக வேலை செய்தது. மன்னர் முன் சென்று நின்றான்.மிகவும் தயங்குவது போல் பாசாங்கு செய்தவன் "அரசே! தற்போது தாங்கள் படையெடுப்பது சரியல்ல.ஏனெனில் தங்களின் கிரகநிலை தற்போது சரியில்லை.எனவே படையெடுப்பில் தற்போது இறங்க வேண்டாம்." என்று கூறினான். மந்திரி பிரதானிகளும் அதையே கூறினர். அவர்களும் மன்னரின் உயிரைப் பெரிதென மதித்தனர்.அரசியரும் மன்னரையுத்தத்திற்குப்  போகவேண்டாம் எனத் தடுத்தனர். அரசரும் யோசித்தார்.தெனாலிராமன் இவற்றையெல்லாம் கவனித்தவண்ணம் இருந்தான்.அவனுக்கு ஜோதிடன் மேல் சந்தேகம் ஏற்பட்டது.எனவே மன்னனிடம்"அரசே! நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? சோதிடன் சொன்ன பலன்கள் எல்லாம் நடந்து விடுகின்றனவா என்ன?" என்று தைரியம் சொன்னான்.
 
ராயரும் அதை ஆமோதித்தார்."ராமா! நீ சொல்வதும் சரிதான். ஆனால் இதை எப்படி மற்றவர்களுக்கு நிரூபிப்பது?சோதிடம் பொய் என்று நிரூபிப்பவருக்குபத்தாயிரம்  பொன் பரிசு என்று அறிவியுங்கள்" என்றும் ஆணையிட்டார்.
 
தெனாலிராமனுக்கு மிக்க மகிழ்ச்சி.
"அரசே! நானே இதை நிரூபிக்கிறேன். ஆனால் அந்த சோதிடனுக்குத் தண்டனை தருகின்ற உரிமையையும் எனக்குத் தரவேண்டும் " என்று கேட்டுக்கொண்டான். மன்னரும் இதை ஒப்புக்கொண்டார். 
 
     மறுநாள் சபா மண்டபத்தில் சோதிடனும் தெனாலிராமனும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ராமன் சோதிடரைக் கூர்ந்து கவனித்தான்.அவர் மேல் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று.
அவன், "சோதிடரே! நீர் கூறும் சோதிடம் தவறாமல் பலிக்குமல்லவா?" என்றான் மெதுவாக.
 
 "அதிலென்ன சந்தேகம்? நான் சொன்னால் அது கண்டிப்பாக நடந்தேறும்."
தன் கரங்களைக் குவித்தபடியே "நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பலன்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்" என்றான் ராமன்  பணிவாக.
சோதிடனும் கர்வத்துடன் தலையை அசைத்துக் கொண்டான். 
"அப்படியானால் தங்களின் ஆயுள் காலத்தையும் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?"
 
"ஓ! நான் இன்னும் நாற்பது ஆண்டுகள் உயிர் வாழ்வேன். இது சத்தியம்." சோதிடன் பெருமையுடன் கூறினான்.
 "உமது வாக்கு இப்போதே பொய்த்து விட்டதே! " என்றவாறே அருகே நின்ற சேனாதிபதியின் வாளை உருவி அந்த வஞ்சக சோதிடனின் தலையை வெட்டினான் ராமன்.
 
அனைவரின் திகைப்பையும் நீக்கிய ராமன் அந்த சோதிடனின் சுவடிக்கட்டை பிரித்துக் காட்டினான். அதனுள் பிஜாபூர் சுல்தான் சோதிடனுக்கு அனுப்பிய கடிதங்கள் இருக்கக் கண்டான். அந்த சோதிடன் பீஜப்பூர் சுல்தானின் கைக்கூலி என்று அறிந்து அவனுக்குத் தண்டனை அளித்ததற்காக ராமனைப் பாராட்டினார்.தன் வாக்குப் படியே பத்தாயிரம் பொற்காசுகளையும் அளித்து மகிழ்ந்தார். அதன்பின் தன் எண்ணப்படியே பீஜபூரையும் குர்ப்பாகானையும் வெற்றி கொண்டார் கிருஷ்ணதேவராயர்.