வெள்ளி, 14 மார்ச், 2014

118.ஸ்ரீ சேனா நாவிதர்.

ஸ்ரீ சேனா நாவிதர்.
 
         இறை பக்தி செய்வதற்கு குலம் ஒரு தடையல்ல என்பதற்கு சேனா என்பவரது வாழ்க்கையே ஒரு எடுத்துக் காட்டு. தாழ்ந்த குலத்தில் பிறந்தவராக இருந்தபோதும் பாண்டுரங்கன் மீது கொண்ட மிகுந்த அன்பினால் உயர்ந்த நிலையை அடைந்த சேனாவின்  வரலாறு நமக்கெல்லாம் ஒரு பாடமாகவே அமைந்துள்ளது.
             வடநாட்டில் அவந்தி என்று ஒரு நகரம் இருந்தது.அந்த நகரத்தில் சேனா என்ற பெயருடைய நாவிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.இவர் தெய்வ பக்தியும் ஒழுக்கமும் நிறைந்தவர். குலத்தொழிலை நேர்மையாகச் செய்து வந்ததால் அரண்மனையில் பணிபுரியும் வாய்ப்பினைப்  பெற்றார்.
            ஒரு நாள் அதிகாலை நேரம் காலைக்கடன் முடித்த சேனா இறைவழிபாட்டில் தன்னை மறந்து லயித்திருந்தார்.தியானத்திலிருந்த சேனா இவ்வுலகையே மறந்து பாண்டுரங்கனோடு  இணைந்திருந்தார். அதேசமயம் அரண்மனையிலிருந்து  அவசரமாய் மன்னர் அழைப்பதாக காவலர் வந்து அழைத்தனர்.சேனாவை  எழுப்புவது கடினம் என அறிந்திருந்த அவர் மனைவி அவர் வீட்டிலில்லை வெளியே சென்றுள்ளார் எனத் தெரிவித்தாள்.
              ஆனால் அவர்மீது பொறாமை கொண்ட சிலர் அவன் வேண்டுமென்றே மன்னரை அலட்சியப் படுத்துகிறான். வீட்டில் இருந்துகொண்டே இல்லையென்று பொய் சொல்கிறான் என்று சொல்லவே மன்னர் கடுங்கோபம் கொண்டார்.
"அவன் வீட்டிலிருந்தால் அவன் கைகாலைக் கட்டிக் கடலிலே போடுங்கள்"
என்று உத்தரவிட்டான். அதே சமயம் சேனா தன்  கையில் அடைப்பையோடு வந்து நின்றான். அவனது பணிவையும் அமைதியான முகத்தையும் பார்த்த மன்னர் கோபம் குறைந்து தனக்கு முடிதிருத்தம்   செய்யுமாறு கட்டளையிட்டார்.
                 சேனாவும் அவர் முன் பணிவுடன் அமர்ந்து தன முன் வைக்கப்பட்ட தங்கக் கிண்ணத்திலிருந்த தைலத்தைத் தொட்டு மன்னரின் தலையில் தடவினான்.சேனாவின் கை தன்தலையில் பட்ட மாத்திரத்தில் ஏதோ சுகம் தன்னை மறந்த சுகானுபவம் ஏற்பட்டது மன்னனுக்கு.
 சேனாவின் முன்னே குனிந்து அமர்ந்திருந்த மன்னன் தன்  முன் வைக்கப் பட்டிருந்த பொற்கிண்ணத்தினுள் பார்த்தான். 
என்னே அதிசயம். ஆச்சரிய ஆனந்தம் உள்ளமெங்கும் பரவியது மன்னனுக்கு. பேச நா  எழவில்லை. தன்னை மறந்தான் தன்னிலையும் மறந்தான்.
கிண்ணத்திலிருந்த தைலத்தில்  அந்த பாண்டுரங்கன் திவ்யமங்கள ஸ்வரூபனாக சர்வாபரண  பூஷிதனாக  தரிசனம் தந்தான். தன்னிலை மறந்த 
மன்னன் மயக்கத்துடனேயே எழுந்து கைநிறைய பொற்காசுகளை அள்ளி சேனாவின் கையில் கொடுத்துவிட்டு உள்ளே சென்றான்.
"இங்கேயே இரு இதோ வருகிறேன் "என்று கூறிச் சென்ற மன்னன்ஸ்நானம் செய்தபின்  வந்து பார்த்தபோது அங்கே சேனாவைக் காணவில்லை.ஆனால்  மீண்டும் சேனாவைப் பார்க்கவேண்டும் தைலத்தில் பார்த்த உருவத்தைக் காணவேண்டும் என்னும் ஆவல் அதிகரித்தது.
சேவகரை அழைத்து "சேனாவை அழைத்து வாருங்கள்."என்று கட்டளையிட்டான்.என்றுமில்லாமல் இன்று ஒரு நாவிதனுக்காக மன்னன் தவிப்பது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. 
       போலிச் சேனா நாவிதராக வந்த பாண்டுரங்கன் பொற்காசுகளை சேனாவின் இல்லத்தில் போட்டுவிட்டு மறைந்தான்.               
மூன்றாம் முறையாக சேவகர் தன்னைத் தேடிவந்ததை அறிந்து சேனா மிகவும் அச்சத்துடன் தன அடைப்பையை எடுத்துக் கொண்டு அரண்மனையை அடைந்தான்.
அவரைக் கண்டவுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த மன்னன் ஓடிவந்து  
அவன் திருவடிகளில் விழுந்தான்."மகாப்பிரபுவே தங்களைக் கேவலம் நாவிதராக மதித்து  அபசாரம் செய்து விட்டேன்.தயவு செய்து இன்று காலை பொற்கிண்ணத்தில் எனக்கு  அளித்த காட்சியை மீண்டும் காட்டி அருள் செய்யுங்கள்."என்று வேண்டி நின்றான்.
விஷயம் என்னவென்று அறியாத சேனா தவித்தான். பின்னர் மன்னன் காலையில் நிகழ்ந்தவற்றைக் கூறவே சேனாவுக்கு விஷயம் விளங்கிவிட்டது.
துக்கத்தால் அவர் உள்ளம் துடித்தது."என்மேலுள்ள அன்பினால் நீயே அடைப்பத்தைத் தூக்கிவந்து முடிதிருத்தும் இழிதொழிலைச் செய்தாயா?பாண்டுரங்கா ,"எனக்கூறி மூர்ச்சித்து விழுந்தான்.அவனது புலம்பலைக் கேட்டு காலையில் வந்தவன் பாண்டுரங்கனே என்று அறிந்து மன்னன் புளகாங்கிதமடைந்தான்.
 சேனாவின் மூர்ச்சையைத் தெளிவித்து அவனை அமரவைத்து அவனிடம்,
"சுவாமி,தங்களின் கிருபா கடாக்ஷத்தினால்தான் பகவானுடைய திவ்யதரிசனம் இந்த எளியேனுக்குக் கிடைத்தது.அவர் திருக்கரங்களால் தீண்டப் பெரும் பாக்யமும் கிடைத்தது.இனி தாங்களே என் குரு."
என்று சேனாவை வணங்கினான் மன்னன்.
அதுவரை அரசனையும் சேனாவையும் ஏளனமாகப் பார்த்திருந்த மக்களும் மந்திரி பிரதானிகளும் சேனாவின் பெருமையை உணர்ந்தனர்.
மன்னரோடு மற்றையோரும்சேனாவின் சீடர்களாயினர்.அனைவரும்  இறைப்பணி செய்து இறைபக்தியில் மூழ்கினர்.
எளியேனாயினும் அன்புக்குக் கட்டுப் பட்டு இறைவனே இறங்கிவருமளவு சேனா இறைவனது பக்தியில் மூழ்கியுள்ளதை அறியும்போது இறைவனுக்கு அன்புதான் முக்கியமே தவிர உயர்ந்தவன்  தாழ்ந்தவன்  என்பது பக்திக்கு  இல்லை என்பதைப் புரிந்து கொள்வோம்.
இறைவன் என்ற சொல்லுக்கு  அன்பு பக்தி என்பதுதான் பொருள்.











திங்கள், 17 பிப்ரவரி, 2014

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.

117. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
                             
                                              மங்களபுரி மன்னன் சூரசேனன் நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு காட்டி நாட்டை சிறப்பாக ஆண்டு வந்தான்.மக்களும்  தங்கள் மன்னனை உயிருக்கும் மேலாக  எண்ணி வாழ்ந்து  வந்தனர். செண்பகபுரி மன்னன் சிவபாலன் சூரசேனன் மீது பொறாமை கொண்டு அவன்மீது படையெடுத்தான்.ஆனால் சூரசேனனை வெல்ல முடியாததால் தோற்று ஓடினான்.
அடிக்கடி படையெடுத்து தொல்லை கொடுத்துவந்த சிவபாலனை அடக்க எண்ணிய சூரசேனன் அவன் மீது படையெடுத்தான்.ஆனால்சரியான  பயிற்சியும்  படைபலமும் இல்லாததால் தோற்று நாட்டை விட்டு காட்டுக்குள் ஓடி மறைந்து வாழ்ந்தான்.ஆனாலும் அடிக்கடி வீரர்களைத் திரட்டி
செண்பகபுரியுடன் போரிட்டு வந்தான்.எப்படியாவது   தன தாய்நாட்டை மீட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் படைதிரட்டிவந்தான் சூரசேனன்.
ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியைத் தழுவி ஓடினான்.                                                   ஒருநாள்  களைப்புடன் காட்டுக்குள் நடந்து கொண்டிருந்தான் சூரசேனன்.தனக்குள் எண்ணிக் கொண்டே நடந்தான்.
" பல  முறை போராடியும் சிவபாலனை வெல்ல இயலவில்லையே.என் படையும் பெரிதாகத்தானே இருக்கிறது. என்ன காரணம் புரியவில்லையே."
               என்று    நடந்தபடி சிந்தித்தவனுக்கு  காட்டுக்குள் வெகு தொலைவு வந்தது கூடத் தெரியவில்லை. களைப்புடன் ஒரு பாறையில் அமர்ந்தான்.பசிவேறு வயிற்றைக் கிள்ளியது.சற்றுத் தொலைவில் ஒரு குடிசை வீடு தென்பட்டது.
                 ஆவலோடு அந்த வீட்டுக்கு சென்று சற்றுத் தொலைவில் நின்றபடி "அம்மா" என அழைத்தான்.அந்த வீட்டுக்குள்ளிருந்து  எழுபது வயதுள்ள ஒரு மாது வெளியே வந்தார்.அவரிடம்
"அம்மா.மிகுந்த களைப்பாக இருக்கிறேன். எனக்குப் பசிக்கிறது ஏதேனும் கொடுத்து உதவினால்  மிகுந்த நன்றியுள்ளவனாக இருப்பேன்."
என்று சொல்லி அங்கேயே ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டான்.
"ஐயோ பாவம்! இரப்பா வருகிறேன்.ஏழையின் வீட்டில் களிதான் இருக்கிறது.
அதையே தருகிறேன்.தின்று பசியாறு."என்றவள் உள்ளே சென்று ஒரு தட்டில்  சூடானகளியை வைத்து அதில் சூடான குழம்பையும் ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தாள்.
              நல்ல பசியோடிருந்த சூரசேனன் அதை வாங்கி தன ஐந்து விரல்களாலும் களி உருண்டையை அழுத்தினான். நல்ல சூடாக இருந்த களி  அவன் கையை நன்கு சுட்டு விட்டது "ஹா! ஹா!" வெனத் தன கையை உதறியபடி விரல்களை வாயிலும் வைத்துக் கொண்டான்.

              இதைப் பார்த்து அந்தப் பாட்டி சிரித்தாள். அத்துடன்
"ஏனப்பா நீ களி  தின்பது எங்கள் மன்னன் சூரசேனர் படையெடுப்பது போல் இருக்கிறது."
இதைக் கேட்டு சூரசேனன் ,"என்னம்மா சொல்கிறீர்கள்?நீங்கள் சொல்வது புரியவில்லையே." என்றான் ஆவலாக.
" பின்னே என்னப்பா, களியை அதைச் சுற்றிலும் ஓரமாகவே தின்று வந்தால் குறைந்து கொண்டே வரும் முழுவதும் ஆறிக்கொண்டே வரும்.சீக்கிரம் சாப்பிட்டு முடிக்கலாம்,அதைவிட்டு நடுவில் கைவைத்தால் சுடாதா?"
என்றாள்  சிரித்தவாறே.
               
"இதற்கும் மன்னரின் படையெடுப்பிற்கும் என்ன சம்பந்தம்?"
          
  "புரியவில்லையா, படையெடுத்து எல்லையில் இருக்கும் நாடுகளைப் பிடித்தபின்னரே தலைநகரில் நுழையவேண்டும் அப்போதுதான் பகைவரின் படைபலம் குறையும் நமக்கும் வெற்றி கிடைக்கும்." என்றாள்  புன்னகையுடன்.

             பாதி தின்றவுடன் களியை அப்படியே வைத்த சூரசேனன் உடனே புறப்பட்டான்.         
"தாயே, தங்கள் அறிவுரைக்கு நன்றி. இப்போதே செல்கிறேன் நீங்கள் சொல்லியபடியே போராடி வெற்றி வாகை சூடி உங்களை சந்திக்கிறேன்
.வருகிறேன்."
அவளை வணங்கி விடைபெற்றுப் புறப்பட்டான்.

ஒரு சிறு படையுடனேயே தலைநகரின் சுற்றியிருந்த கிராமங்களைப் பிடித்த சூரசேனன் விரைவில் சிவபாலனின் தலைநகரையும் கைப்பற்றினான்.தனக்குக் கப்பம் கட்டச் செய்து தன நாட்டில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தான்.
உடனே காட்டுக்குச் சென்று அந்த மாதரசியை அழைத்து வரச்சொல்லி ஆணையிட்டான்.அவளுக்குப் பொன்னும் பொருளும் தந்து தன மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டான்.

மூத்தோர் சொன்ன சொல் என்றும் பயன்படக்கூடியது என்பதை நாம் என்றும் மறவாதிருக்க வேண்டும்.


















 

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

மீண்டும் ஆரம்பம்.

அன்பு வாசகர்களுக்கு, வணக்கம்.இடமாற்றம், கண்களின் அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால் கடந்த ஒரு மாதமாக கணினியைப் பயன்படுத்த இயலவில்லை.இனி மீண்டும் ஆரம்பமாகிவிட்டது சுட்டிக்களுக்கான கதைகள்.தொடர்ந்து படித்து தங்களின் மேலான பின்னூட்டத்தை இட வேண்டுகிறேன்.தங்கள் இல்லத்திலுள்ள சுட்டிகளுக்கு இந்தக் கதைகளை நீங்கள்  சொல்ல வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayeerruk
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

116-திருக்குறள் கதைகள்.இன்னா செய்தாரை...

குமாரபுரி மன்னனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தனர்.மூத்தவன்குமாரசிம்மன்.இளையவன் அமரசிம்மன்.
இருவருமே வீரத்திலும் கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கினர்.அத்துடன் இருவருமே மிகவும் ஒற்றுமையுடனும் பாசத்துடனும் ஒருவருக்கொருவர் அன்புடனும்  வாழ்ந்து வந்தனர்.
இளவரசர்கள் இருவரும் காளையர்களாக வளர்ந்து நின்றனர்.மன்னனும் வயது முதிர்ச்சியால் தளர்ச்சியடைந்தான்.சீக்கிரமே தன மூத்த மகனுக்கு முடிசூட்டிவிட முடிவு செய்தான்.
அந்த நாட்டுமந்திரியின் மகன் மகேந்திரன் சகோதரர்கள் ஒற்றுமையாக இருப்பதை விரும்பாமல் எப்படியாவது இவர்களுக்குள் பகையை மூட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்தான்.
சொல்வார் பேச்சைக் கேட்கும் எண்ணம் அமரசிம்மனுக்கு இருக்கிறது எனத் தெரிந்து கொண்டு அவனிடம் பேச்சுக் கொடுத்தான்.
மூத்தவனுக்கு முடிசூட்டிவிட்டால் இளையவன் அடிமைதான் என்பது போன்ற அச்சத்தையும்உண்டாக்கி  அவனை ஒழிக்க குமாரசிம்மன் திட்டமிடுவதாகவும் பலப்பல சொல்லி மனத்தைக் கலைத்தான்.எடுப்பார் கைப் பிள்ளையாக இருந்தஅமரசிம்மன் இதை நம்பி  தன் அண்ணனை சந்தேகத்துடனேயே பார்க்க ஆரம்பித்தான்.
     மகேந்திரனின் இந்த சூழ்ச்சியை அறியாத குமாரசிம்மனும் தம்பியிடம் பாசத்துடனேயே பழகி வந்தான். நாட்கள் செல்லச் செல்ல மகேந்திரனின் சூழ்ச்சிக்கு முற்றிலுமாக அடிமையாகிவிட்டான் அமரசிம்மன்.தன்  அண்ணன் தன்னை எப்போது கொல்ல முயற்சிப்பானோ  என்று அச்சப்பட ஆரம்பித்தான். ஆனால் உள்ளத்தில் கள்ளமில்லாத குமாரசிம்மனோ  அவனிடம் அன்போடு பழகிவந்தான்.
                 மன்னரின் குலவழக்கப்படி சகோதரர் இருவரையும்  காட்டில் வாழும் கொடிய விலங்குகளை வேட்டையாடி வரும்படி மன்னன் ஆணை பிறப்பித்தான். 
அந்த ஆணையை ஏற்ற குமாரசிம்மனும் அமரசிம்மனும் காட்டுக்கு வேட்டையாட புறப்பட்டனர்.
                 அமரசிம்மன்  மகேந்திரனின் வஞ்சகச் சொற்களை எண்ணிக் கொண்டே வந்தான். அண்ணன் தன்னை எப்போது கொல்வானோ என்று சற்று கவனத்துடனேயே நடந்தான்.
மகேந்திரன் அந்த அளவுக்கு அவன் மனதில்வஞ்சகத்தை          ஆழமாக விதைத்திருந்தான்.
                                                                                                                இருவரும் மாலைவரை வேட்டையாடிக் களைத்தனர்.             பசியுடனும்  களைப்புடனும்   தங்கள்  கூடாரத்தை  நோக்கித் திரும்பினர்.

                   லேசாக இருள் கவியும் நேரமும் வந்தது அமரசிம்மன் எதுவும் பேசாமலேயே நடந்தான்.தம்பியை அன்புடன் திரும்பிப் பார்த்தவண்ணம் நடந்த குமாரசிம்மன் அருகே இருந்த நீரிருக்கும் புதைகுழியில் விழுந்தான்.சற்றே அதிர்ந்த அமரசிம்மன் அவனது அபயக் குரலைக் கவனியாதவன் போல தனது இருப்பிடத்தை நாடி வேகமாக நடந்தான் அமரசிம்மன்.அண்ணன்  இறந்திருப்பான் என முடிவு செய்தான்.அதே சமயம் காற்று பலமாக அடித்தது
வலுவற்ற மரங்கள்  முறிந்துவிழுந்தன.அதிர்ஷ்டவசமாக ஒரு மரம் முறிந்து புதைகுழியில் அகப்பட்டிருந்த குமாரசிம்மனின் அருகில் விழுந்தது. அதைப் பிடித்துக் கொண்டு கரையேறினான்.
                     அண்ணன் மூழ்கியிருப்பான் இனி வரமாட்டான் என முடிவு செய்துகொண்டு நடந்து கொண்டிருந்தான் அமரசிம்மன்.சட்டென அவன் உணர்வு பெற்று நின்று கவனித்தபோது தன முன் பசியோடு உறுமியபடி ஒரு புலி இவன் வருகையை எதிர்பார்த்து நிற்பதுபோல் நின்றிருந்தது. வேட்டையாடிக் களைத்திருந்த அமரசிம்மன் புலியுடன் சண்டை போட சக்தியற்றிருந்தான்.பயத்தால் நடுங்கியபடி நின்றிருந்தவன் தான் புலிக்கு இரையாவது உறுதி என முடிவு செய்தான்.அப்போதுதான் செய்துவிட்டு வந்த தவறு புரிந்தது. தான் செய்த பாவத்திற்கு இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.
பசியோடு உறுமியபடி பாய்ந்த புலியைப் பார்த்துக் கண்களை மூடிக்கொண்டான்.ஆனால் என்ன ஆச்சரியம்! புலி தன மீது இன்னும் பாயவில்லையே ஏன்?தன கண்களைத் திறந்து பார்த்த அமரசிம்மன் தன முன் நடந்த காட்சியைக் கண்டு வாயடைத்து நின்றான். உடல்முழுதும் சேறாகியிருந்த உடலோடு குமாரசிம்மன் புலியின் வாயைப் பிடித்துக் கொண்டு நின்றான். அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பின் புலியைத் தன குத்துவாளுக்கு இரையாக்கி விட்டு அருகே சோர்ந்து விழுந்தான்.
                       ஆனாலும் தம்பியைக் காப்பாற்றி விட்டோம் என்ற திருப்தி அவன் முகத்தில் புன்னகையாகத் தெரிந்தது.
அவன் கரங்களைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதான் அமரசிம்மன்.
"அண்ணா என்னை மன்னித்து விடுங்கள்.மகேந்திரனின் மதி கெட்ட சொற்களால் என் மதியை நான் இழந்து விட்டேன்.தங்களைத் தவறாக நினைத்துவிட்டேன்.என்னை மன்னித்துவிடுங்கள்."கதறி அழுத தம்பியை அணைத்துக் கொண்ட குமாரசிம்மன்
"தம்பி,   நீ    எனஉயிரினும்மேலானவன்.உன்னைஒருகாலும் தவறாக       எண்ண   மாட்டேன்." என்று சமாதானம் செய்தபோதும் அமரசிம்மன் ,"ஐயோ, அண்ணா, உன்னை இழந்திருந்தால் நான் எத்தகைய பாவியாகியிருப்பேன்.என் உயிரைக் காப்பாற்றவே இறைவன் உங்களை அனுப்பியிருக்கிறார். அண்ணா, இந்த உயிர் இனி உங்களுக்குச் சொந்தம் இனி என்னை உங்கள் அன்புப் பிடியிலிருந்து யாராலும் பிரிக்க இயலாது."கதறியபடியே கூறினான்.
 இன்னா செய்த தம்பிக்கு இனியதே செய்துவிட்ட அண்ணனின் அடியொற்றி அவனைத் தாங்கிப் பிடித்தவாறே நடந்தான் அமரசிம்மன். உயிர் போகும் நிலைவரை சென்று திரும்பிய அந்த இரண்டு சகோதரர்களையும் இனி எந்த தீய சக்தியாலும் பிரிக்க இயலாதல்லவா?
குமாரசிம்மனின் தீமை செய்தவனுக்கும் நன்மை செய்த பண்பு  நமக்கு வள்ளுவரின் 
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண 
 நன்னயம் செய்து விடல்" என்ற குறட்பாவை நினைவு படுத்துகிறதல்லவா?
 







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 








வியாழன், 2 ஜனவரி, 2014

115.நாய் வாலை ....

குமாரபுரம் என்று ஒரு சிறு கிராமம் இருந்தது.அது மிகவும் அழகான கிராமம்.அந்த ஊரின் புறத்தே அழகிய காடு ஒன்று இருந்தது. அழகு மிகுந்த அந்தக்  காடு குமாரபுரிக்கே ஒரு அரணாகவும் அழகு தருவதாகவும் இருந்தது.
                        ஆனால் அந்தக் காட்டுக்குச் செல்லவோ அதன் அழகை அனுபவிக்கவோ முடியாதபடி அந்தக் காட்டில் ஒரு  பிரம்ம ராக்ஷசன்இருந்து கொண்டு  தடுத்து வந்தான்.யாராவது தெரியாதவர்கள் அங்கு போய்விட்டால் அவர்களை விழுங்கிவிடுவான் அந்த அரக்கன். இதனால் மக்கள் மிகவும் பயத்துடனும் கவலையுடனும் வாழ்ந்து வந்தனர்.
                           அந்த அரக்கனை எப்படியாவது அழித்துவிடவேண்டும் என்று பலரும் முயற்சி செய்தும் பயனேதும் உண்டாகவில்லை.
"அப்படி ஒன்றும் அந்த அரக்கன் நியாயமில்லாமல் மனிதர்களைக் கொல்ல வில்லை அவன் என்ன கேட்கிறான், எனக்கு ஏதேனும் வேலை கொடுங்கள் வேலையில்லாமல் நான் இருக்கமாட்டேன் என்றுதானே கேட்கிறான். இதைச் செய்ய நமக்கு என்ன கஷ்டம்?"என்று கிராமத் தலைவரும் கூறி வந்தார்.
                       அழகிய இயற்கைச் சூழ்நிலை இருந்தாலும்  அங்கு சென்று அதை  அனுபவிக்க யாரும் துணியவில்லை. அதற்கு அந்த அரக்கன்தான் காரணம்.அவன் அந்தக் காட்டில் அட்டகாசம் செய்து கொண்டிருந்தான்.அவனை வென்று வருவதாகச் சொல்லிச் சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பவில்லை.அந்த அரக்கனுக்கு உணவாகிப் போனதுதான் மிச்சம்.இந்த நிலையில் அந்த ஊருக்கு ஒரு நாள் ஒரு ஏழை அந்தணன் பிழைப்பைத் தேடி வந்தான்.ராமசர்மா என்பது அவனது பெயர்.
வறுமையால் வாடிய அவனை  ஒருநாள் அந்த ஊர் தலைவர் அழைத்தார்."இதோபார் ராமசர்மா, உன் வறுமை நீங்க ஒரு வழி சொல்கிறேன்.ஊர் எல்லையில் உள்ள காட்டில் ஒரு அரக்கன் இருந்துகொண்டு இந்த ஊரை அச்சப் படுத்திக் கொண்டிருக்கிறான் 
அவனை நீ வென்றுவிட்டால் உனக்கு வேண்டிய பணம் கொடுப்போம்.' என்று ஆசை காட்டினார்.ராமசர்மாவும் உடனே சம்மதித்தான்.
ஒருநாள் கிராமமக்கள் வழியனுப்பிவைக்க ராமன் காட்டை நோக்கிப் புறப்பட்டான்.நடுக்காட்டை  அடைந்தான்.சற்று சிந்தித்தான். சற்று நேரம் அந்தக் காட்டின் அழகை ரசித்துக் கொண்டு நின்றான்.காட்டின் நடு நடுவே அழகிய மரங்கள் முறிந்தும் நசுங்கியும் இருப்பதைப் பார்த்தான்.அதெல்லாம் அந்த அரக்கனின் வேலை என்பதைப் புரிந்து கொண்டான்.
                திடீரென்று பெருங்குரல் கேட்டது. இடியிடிப்பது போன்ற குரல் கேட்டு ராமன் சற்று நடுங்கியபடி மரத்தின் மறைவில் சென்று மறைந்து நின்று கொண்டான்.பெரும் உறுமலுடன் சத்தத்துடன் அட்டகாசமாக அந்த அரக்கன் வந்து கொண்டிருந்தான்.
இங்குமங்கும் பார்த்தான். "யாரது என்னிருப்பிடம் வந்துள்ளது?"
என்று உறுமினான்.சற்று நேரத்தில் சற்றே நடுங்கிய உடலுடன் ராமசர்மா அவன் முன் நின்றான்.
"யார்நீ?எனக்கு வேலை கொடுக்க உன்னால் முடியுமா?சீக்கிரம் வேலை கொடு. இல்லையேல் உன்னை விழுங்கிவிடுவேன்"என்றபடியே ராமசர்மாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் அரக்கன்.
ராமசர்மாவின் அறிவு விழித்துக் கொண்டது.தன குரலைக் கனைத்துக் கொண்டான்."உடனே இங்கே ஒரு அழகிய அரண்மனை கட்டு" என்றான்.உடனே ஒரு எஜமானிடம் காட்டும் மரியாதையைக் காட்டி நின்ற அரக்கன் உடனே அங்கே ஒரு அழகிய அரண்மனையைக் கட்டிமுடித்தான்.அடுத்தநொடி எனக்கு அடுத்த வேலை கொடு என்று நின்றான்.
"இங்கு ஒரு அழகிய தோட்டம் அமைத்துக் கொடு" என்றான்.அதுவும் அடுத்த நொடியில் நடந்து முடிந்தது.செல்வமும் பணியாட்களும் நிறைந்தனர். அந்தக் காடே ஒரு நகரமாயிற்று.ஆனாலும் வேலையில் அரக்கன் சலிப்புக் காட்டவில்லை. ராமசர்மா சிந்தித்தான் இனியும் என்ன வேலை கொடுப்பது என்று தெரியவில்ல. திடீரென்று அவன் முன் ஒரு நாய் ஓடிற்று.அதைப் பார்த்ததும் ராமசர்மா, 
"ஏ அரக்கனே, இந்த நாயின் வால்  வளைந்துள்ளது அதை நிமிர்த்திவிட்டு வா."
என்று சொல்ல அந்த அரக்கனும் நாயின் பின்னே ஓடினான்.நாயின் வாலை  நிமிர்த்தவே முடியவில்லை.அரக்கன்  ஓடியே சென்று விட்டான். அந்த இடத்துக்குவந்த கிராம மக்கள் அவனை அந்த இடத்துக்கே  அரசனாக முடிசூட்டினர்.ராமசர்மா வெகுகாலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தான்.
எவ்வளவோ செயல்களைச் செய்து முடித்த அரக்கனாலேயே நாயின்வாலை நிமிர்த்த முடியாமல்போனது.இதுபோல சிலரை நம்மால் மாற்றவே முடியாது. இதைப் புரிந்து கொண்டு வாழவேண்டும்.









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

பழமொழிக்கதைகள் ---மின்னுவதெல்லாம் பொன்னல்ல


     பூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய்து வந்தார்.
       அவரை  கொடைவள்ளல் என்றும் தாராளப் பிரபு என்றும் வானளாவப் புகழ்ந்தனர்.எந்த உதவிஎன்றாலும் தனகொடியைக் கேட்டால்  கிடைக்கும் என்று நம்பியிருந்தனர்.
அந்த தனவந்தரிடம் முனியன் என்று ஒரு வேலைக்காரன் இருந்தான்.பல வருடங்களாக அவரிடம் வேலை செய்து வந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான்.தன மகன் வேலுவை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று முனியன் விரும்பினான்.வேலுவும் பள்ளியில் நன்றாகப் படித்து வந்தான்.
                          அவ்வூரின் தனவந்தர் தனகோடியின் மகனும் அதே வகுப்பில் படித்து வந்தான்.ஆண்டு முடிவில் தேர்வு முடிவுகள் வந்தபோது வேலு அதிக மதிப்பெண் எடுத்து பள்ளியிலேயே  முதலாவதாக வந்திருந்தான்.  
                             தனகொடியின் மனம் பொறாமையில்  தவித்தது.தன்னிடம் உதவி கேட்டு வந்த முனியனைக் கடுமையாகப் பேசினார்."முனியா, உன் மகனுக்கு என்னிடமே வேலை போட்டுத் தருகிறேன்.அவன் வருமானம் வந்தால் உனக்கு வசதியாக இருக்குமே. மேல்படிப்பெல்லாம் வேண்டாம். வீணாகச் செலவு செய்யாதே."என்று வேலுவின் மேல்படிப்புக்குப் பணஉதவி செய்ய முடியாது என்பதை ஜாடையாகத் தெரிவித்தார்.
              இதைக் கேட்டு முனியனும் வேலுவும் கவலையும் கூடவே கோபமும் கொண்டனர்.உனக்கு இஞ்சினீயர் சீட்டு கெடைச்சும் பணமில்லாததாலே படிக்க முடியலையே.முதலாளி உதவி செய்வாருன்னு நினைச்சிருந்தேனே.புள்ளைய படிக்க விடாமே செஞ்சிட்டாரே."என்று புலம்பினான்.
                ஆனால் வேலுவோ கலங்காமல் தன தந்தையைத தேற்றினான்."அப்பா, நான் வேலைசெய்து பணம் சேர்த்துப் படிப்பேன் அப்பா, நீங்க வருத்தப்படாதீங்க."என்று தேற்றினான்.
                  "தன பிள்ளைக்கு சீட்டுக் கிடைக்கலையின்னு பொறாமையிலே உன்னைப் படிக்க விடாம செஞ்சுட்டாரே.இவரோட பொறாமை பிடிச்ச மனசாலே இவுரு எவ்வளவு நல்ல காரியம் செஞ்சு நல்ல பேரு எடுத்து என்ன புண்ணியம்?"
    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முனியனும் வேலுவும் முதலாளி வீட்டு வாயிலில் நின்று வருந்திக் கொண்டிருந்தனர்.
"அப்பா, நம்ப முதலாளி உண்மையிலேயே ஜனங்களுக்கு நல்லது செய்ய நினைக்கலேப்பா. அவரை  நாலு பேரு புகழணும்னுதான் இப்படி செஞ்சிட்டு வராரு."
"இருக்கும். அவுக எப்படியானும் இருக்கட்டும் உனக்கு படிப்பு நிக்கிதே"
மன வருத்தத்துடன் நின்றான் வேலு.செய்வதறியாமல் சிந்தனையுடன் முனியனும் நின்றிருந்தான்.
அப்போது அந்தவீட்டு தோட்டக்கார முத்துராஜா அங்கே வந்தார்.அறுபது வயதைத் தாண்டினாலும் இளமையோடு காட்சியளிப்பவர். எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருப்பவர்.
"என்ன வேலு, காலேஜிலே சேரலியா.எப்போ சேரப்போறே?"
"அதுக்குத்தான் முதலாளிகிட்டே பணம் கேட்டேன் தாத்தா."  
"குடுத்தாரா?"
வேலுவும் முருகனும் பெருமூச்சுடன் நின்றனர்.
"விடு தம்பி.எவ்வளவு கட்டணும்னு சொல்லு நான் அந்தப் பணத்தை உனக்குக் குடுக்குறேன்.நம்ம ஏழை ஜாதியிலே ஒருத்தன் படிக்க நான் உதவினேன் அப்படீங்கர திருப்தியே எனக்குப் போதும்பா."
"தாத்தா"என்று ஆசையுடன் அழைத்தபடியே அவரை நன்றியோடு கட்டிக் கொண்டான் வேலு.
முனியனோ "ஐயா நீங்க ஆயிரக்கணக்கான பணத்தை எப்படிப் புரட்டுவீங்க"என்றான் சந்தேகத்தோடு.புன்னகை புரிந்த முத்துராஜா,
"எங்க பூர்வீக சொத்தை  வித்து வந்த பணம் அது."
"ஐயா,அதுஉங்கபொண்ணுகலியாணத்துக்குன்னுல்ல சொன்னீங்க "தடுமாற்றத்துடன் கேட்டான் முனியன்.
புன்னகையுடன்முத்துராஜா, "படிப்புக்கு அப்புரம்தாம்பா மத்ததெல்லாம் கலியாணத்துக்கு ஆண்டவன் வேற வழி காட்டுவாரு. நீ நாளைக்கே போயி காலேஜிலே சேர்ந்துடு என்ன. யோசிக்காதே வேலு! நீ நல்லாப் படிச்சு இந்த ஊருக்கு நல்லது செய்யணும்தம்பி "என்று சொன்னவர் வேலுவின் தலையில் கை வைத்து ஆசிகூறி நடந்தார்.தெய்வமே நடந்து போவது போல் உணர்ந்தனர் முனியனும் வேலுவும்.
வேலு தந்தையிடம் கண்களில் நீர் மல்க,"அப்பா, கடவுள்தான் தாத்தாவா வந்திருக்குராருப்பா.ஊருக்கெல்லாம் உதவுற பணக்காரருக்கு இல்லாத நல்ல மனசு இந்த தாத்தாவுக்கு இருக்குதேப்பா."
"நாமுமநம்ம முதலாளி  உதவி செய்வாருன்னு நம்பிட்டமேப்பா".
"இதைத்தாம்பா மின்னுவதெல்லாம் பொன்னல்ல அப்பிடீன்னு பழமொழியாச் சொல்லியிருக்காங்க.பணக்காரரும் உதவல்லே.அவரு பணமும் நமக்கு உதவல்லே." 
நீ சொல்றதும் சரிதான் என்றபடி நிம்மதியுடன் படுத்துக் கொண்டான் முனியன். வேலுவும் தாத்தா சென்ற திசை நோக்கி வணங்கி விட்டுத் தானும் பாயில் தந்தையின் அருகில் படுத்துக் கொண்டான். இனிமேல் முத்துராஜாதானே அவனுக்குத் தெய்வம்.




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 10 நவம்பர், 2013

113. பழமொழிக் கதைகள்.--ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

ஓர் ஊரில் ஒரு சிவன் கோவில் இருந்தது.கணபதிசர்மா என்று ஒரு அந்தணர் அந்தக் கோவிலில் பூஜை செய்து வந்தார். அவருக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. தினமும் இறைவனை மனமுருகப் பிரார்த்தித்து வந்தார்.அவர் மனைவியும் விரதங்கள் தானங்கள் என்று செய்து வந்தாள்.ஆனாலும் இவர்களுக்குப் பிள்ளையில்லை.
    வீட்டில்  இருக்கையில் ஒரு மாலைவேளையில் கணபதியின் மனைவி முன் ஒரு  சிறிய குட்டி கீரிப்பிள்ளை வீட்டுக்குப் போகத் தெரியாமல் நின்றது. அதைப் பார்த்த அந்தணர் மனைவி  அதற்குப் பாலும் சோறும் வைத்தாள் .பசியுடன் இருந்த அந்த கீரி பாலைப் பருகிப் பசியாறியதும் அங்கேயே படுத்துக் கொண்டது.
சிலநாட்களில் அந்தக் கீரிப் பிள்ளை அந்த வீட்டின் செல்லப் பிள்ளையானது.கணபதிசர்மாவும் அவர் மனைவியும் அந்தப்
பிள்ளையைத் தங்கள் சொந்தப் பிள்ளையாகவே நினைத்து வளர்த்து வந்தனர்.
சுமார் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன.இப்போது கணபதிசர்மாவுக்கு ஒரு அழகிய ஆண்குழந்தை பிறந்திருந்தது.
அந்தக் குழந்தையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தனர் கணவனும் மனைவியும்.கீரிப்பிள்ளையும் அக்குழந்தையுடன் சேர்ந்து வளர்ந்து வந்தது.
ஒருநாள் கணபதிசர்மா கோவிலில் பூஜைக்குப் போயிருந்தார்.வீட்டில் சமைப்பதற்குத் தண்ணீர் இல்லை என்று குடத்துடன் ஆற்றுக்குக் கிளம்பினாள்  அவர்மனைவி
             ஆற்றுக்குப் புறப்படுமுன் கீரியிடம் "குழந்தை தொட்டிலில் தூங்குகிறான்.பத்திரமாகப் பார்த்துக் கொள்.நான் சீக்கிரம் வந்துவிடுகிறேன்."என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தாள்.

              அவள் சென்ற சற்று நேரத்தில் கீரிப் பிள்ளையும் தொட்டிலின் கீழேயே அமர்ந்து கொண்டது.கணபதிசர்மாவும் பூஜையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.அதே நேரம் குடத்தில் நீர் மொண்டு கொண்டு அவர் மனைவியும் வீட்டின் முன் நின்றாள். இருவரும் வீட்டின் முன் நின்ற கீரிப்பிள்ளயைப் பார்த்துத் திடுக்கிட்டனர்.
                அவர்கள் செல்லமாக வளர்த்த கீரிப்பிள்ளை வாயில் ரத்தம் ஒழுக நின்றிருந்தது.மிகவும் பரபரப்பாக இங்குமங்கும் அலைந்து கொண்டு இருந்தது.இவர்களைப் பார்த்ததும் அதன் பரபரப்பு அதிகமானது.வாயில் ரத்தம் ஒழுக நின்ற கீரியைப் பார்த்து கணபதியின் மனைவி தன குழந்தையைக் கடித்துக் கொன்றுவிட்டது என்ற முடிவு செய்தாள்."ஐயோ என் குழந்தையைக் கொன்று விட்டதே" என்று அலறினாள்..
                  இந்த வார்த்தைகளைக் கேட்ட கணபதிசர்மா "என் குழந்தையைக் கொன்று விட்டாயா, நீயும் ஒழிந்து போ"என்ற படியே அருகே நின்றிருந்த மனைவியின் இடுப்பிலிருந்த குடத்தைப் பிடுங்கி கீரியின் மேல் போட்டார்.விசுக்கென்ற சத்தத்துடன் அது நசுங்கித் தன உயிரை விட்டது.

                கணவன் மனைவி இருவரும் வீட்டுக்குள் ஓடிப்பார்த்தனர்.குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது.அப்பாடா என்று இருவரும் மகிழ்ச்சிப் பெருமூச்சு விட்டனர்.உடனே கீரியின் நினைவு வந்தது.அதன்வாயில் எப்படி ரத்தம் வந்தது என்று சுற்றிப் பார்த்தபோது தொட்டிலின் மறுபக்கம் ஒரு பெரிய நாகப் பாம்பு இறந்து கிடந்தது.அது இரண்டு மூன்று துண்டாகக் கிடந்தது.

                இப்போதுதான் கணபதிசர்மாவிற்குப்  புரிந்தது.
"ஐயோ' என்ன காரியம் செய்துவிட்டேன்.என்குழந்தையைக் கடிக்கவந்த நாகத்தைக் கொன்று விட்டு அதைச் சொல்லத்தானே வாயிலில் வந்து நின்றது அந்தக் கீரிப்பிள்ளை.
ஆத்திரப்பட்டு என் செல்லப் பிள்ளையை நானே கொன்று விட்டேனே "என்று புலம்பி அழுதான்.
 "ஐயோ நான் தான் அவசரப்பட்டு குழந்தையைக் கொன்று விட்டாயே என்று அலறினேன்.அதனால்தானே நீங்கள் கீரியைக் கொன்றீர்கள் நான் தான் தவறு செய்தவள் "என்று அழுதாள் அவர் மனைவி.
ஆண்டாண்டு  காலம் அழுதாலும் மாண்டார் மீண்டு வருவாரோ.அவர்கள் அவசரப் பட்டதற்கு உரிய தண்டனை அடைந்துவிட்டனர்.
'ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு' என்ற பழமொழியை மெய்ப்பிப்பது போல் இவர்களின் இந்த செயல் அமைந்து விட்டது. எனவே இந்தக் கதை மூலம் எப்போதும் அவசரமோ ஆத்திரமோ படாமல் நிதானமாக ஒரு செயலைச் செய்யவேண்டும் என்னும் அறிவுரையை நாமும் கற்றுக் கொண்டோம் அல்லவா.




--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

112. பழமொழிக் கதைகள்.--கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.

வளமையான ஒரு சிற்றூர். அந்த ஊரில் சாந்தோபா என்ற ஒரு பெரியார் வாழ்ந்து வந்தார்.அவர் ஒரு முறை துக்காராம் மகாராஜ் அவர்களின் சரித்திரத்தைக் கேட்டார். அவரைப் போலவே தாமும் பற்றற்று வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார்.
    இந்த எண்ணம் நாளும் வளரலாயிற்று.எனவே தன செல்வம் அனைத்தையும் ஏழைகளுக்குத் தானம் செய்து விட்டுக் காட்டை நோக்கிச் சென்று தவம் செய்யத் தொடங்கினார்.இவரது தாயாரும் மனைவியும் எவ்வளவு தடுத்தும் இவர் கேட்கவில்லை.
      சிலநாட்கள் சென்றன.ஒருநாள் உறவினன் ஒருவன் சாந்தோபா காட்டில் இருக்கும் இடத்தைக் கண்டு வந்து சொன்னான்.உடனே சாந்தோபாவின் தாய் தன மருமகள் யசோதாவிடம்  கணவன் மனதை மாற்றி அழைத்து வருமாறு கூறினாள். யசோதாவும் கணவனைத் தேடிக் காட்டுக்கு வந்தாள்.
     நிஷ்டையில் இருக்கும் கணவர் முன் அமர்ந்து கொண்டு அவர் கண் திறக்கும் வரை காத்திருந்தாள் யசோதா.
கண் திறந்த சாந்தோபா தன மனைவியைப் பார்த்துத் திகைத்தார்.
 அவளிடம் நீ ஏன் இங்கு வந்தாய்?திரும்பிப் போ"என்றார்.
அவளோ  "ராமன்  இருக்குமிடமே அயோத்தி.நான் தங்களை விட்டுப் போகப் போவதில்லை "என்றாள்  பிடிவாதமாக.
அவளது சொற்களைக் கேட்டு மகிழ்ந்த சாந்தோபா "என்னைப் போலவே பற்றுகளை விட்டு என்னுடன் இருக்கவேண்டும்" என்றார். யசோதாவும் அவருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டு வாழ்ந்து வரலானாள்.   
                     தினமும் ஊருக்குள் சென்று பிக்ஷை  ஏற்றுக் கொண்டு வந்து தன கணவருக்குப் பணிவிடைகள் செய்து வரலானாள்.அந்த ஊரிலேயே சாந்தோபாவின் சகோதரி வாழ்ந்து வந்தாள்.அவள் இல்லத்திற்குப் பிக்ஷைக்குப் போனாள்  யசோதா. தன அண்ணன் மனைவியை உள்ளே அழைத்து நெய், சர்க்கரை சேர்த்துச் செய்த அடைகளைக் கொடுத்தாள் அவற்றை வாங்க யசோதா மறுத்த போதும் பிடிவாதமாக அவள் புடவையில் வைத்துக் கட்டி அனுப்பிவிட்டாள் 
     தங்கள் இருப்பிடம் வந்த யசோதா கணவரிடம் நடந்ததைக் கூறி அடைகளைக் காட்டினாள் .அவளிடம்," நீ உடனே இவைகளைத்  திருப்பிக் கொடுத்துவிட்டு வா" என்று கூறவே யசோதா அப்படியே தன்  நாத்தியிடம் அவைகளைக் கொடுத்துவிட்டுத் திரும்பினாள்.வரும் வழியில் மழையும் காற்றும் பலமாக வீசியது. நதியில் வெள்ளம் அதிகரிக்கவே அதைக் கடக்க இயலாமல் யசோதா திகைத்து நின்றாள்.அவள் மனம் இறைவனை வேண்டியது.
          அப்போது ஓர் ஓடக்காரன் அங்கு வந்தான். கவலையுடன் நிற்கும் யசோதையிடம் வந்தான். "அம்மா, அக்கரைக்குப் போகவேண்டுமா?நான் கொண்டுபோய் விடுகிறேன்.வாருங்கள்" என்று அழைத்தான்."பாண்டுரங்கா," என்று இறைவன் நாமத்தைச் சொல்லியவாறே அவனுடைய ஓடத்தில் ஏறினாள் யசோதா.அக்கரை  வந்து சேர்ந்தவுடன் கரை இறங்கிய யசோதா ஓடக்காரனைக் காணாது திகைத்தாள்.ஓடம் நின்ற இடத்தில் ஒரு மயிலிறகு கிடந்தது.அதை மிகுந்த பக்தியுடன் எடுத்துக் கண்களில் ஒத்திக் கொண்டாள்.வந்தவன் அந்தப் பாண்டுரங்கனே என்று புரிந்து கொண்டாள்.இந்த அற்புதத்தைக் கணவனிடம் சொன்ன போது சாந்தோபா கண்ணீர் விட்டான். தன மனைவி செய்த புண்ணியம் தான் செய்யவில்லையே.என்று மிகவும் வருந்தினான்.
  தனக்கும் அவன்  காட்சி தரும் வரை உணவு உண்பதில்லை என்று நோன்பிருக்கத் தீர்மானித்தான்.அதேபோல் கண்களை மூடி அமர்ந்துகொண்டான்.நாட்கள் கடந்தன. சாந்தோபாவின்  உடல் வாடியது.இளைத்துத் துரும்பாகிவிட்டான்.  ஒருநாள் பாண்டுரங்கன்  சங்கு சக்ர கதா தாரியாய் இவன் முன் தரிசனம் தந்து"அன்பனே நான் என்றும் உன்னுடனேயே இருக்கிறேன்.வருந்தாதே"என்று ஆசி கூறி மறைந்தார்.மனம் மகிழ்ந்த சாந்தோபா தன மனைவியுடன்  மீண்டும் பிக்ஷை எடுப்பதும் தவம் செய்வதும் இறைவன் நாமத்தைப் பாடுவதுமாக வாழ்ந்து வரலானார்.
               அத்துடன்  மக்களின் துயர் துடைப்பதும் அவர்களை நல்வழிப் படுத்துவதுமாகக் காலம் கழித்துப் பின்  பேரின்பப் பெருவீட்டை அடைந்தார். இத்தகைய பெரியவர்களின் வாழ்க்கைத் தத்துவம் நமக்கெல்லாம் கடவுளை நம்பினோர் ஒருக்காலும் கைவிடப்படார் என்ற உண்மையை விளக்குகிறது.





















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

சனி, 12 அக்டோபர், 2013

111 பழமொழிக் கதைகள்.--துணையோடல்லது நெடுவழி போகேல்.-

துணையோடல்லது நெடுவழி போகேல்.

              ராசம்மாவுக்கு இரண்டுபிள்ளைகள் இருந்தார்கள்.அவர்களை மிகவும் அன்புடனும் பாசத்துடனும் வளர்த்து வந்தாள்.
இரண்டு சகோதரர்களும் ஒற்றுமையாகவும் பிரியமாகவும் வளரவேண்டும் என்று ராசம்மா ஆசைப் பட்டாள்.அதனால் அவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாகச் செல்லவேண்டும் ஒன்றாகசாப்பிடவேண்டும் விளையாடவேண்டும் என  விரும்பி அப்படியே வளர்த்தாள்.
அண்ணன் விநாயகம்,தம்பி வேலனை  விட்டு விட்டு ஓடிவிடுவான். ஆனால் ராசம்மா அவனைத் தேடிவந்து தம்பியை அவனிடம் விட்டு வருவாள். அத்துடன் தனியாகப் போகாதே என்று அறிவுரை சொல்லி வருவாள்.
நாட்கள் செல்லச் செல்ல விநாயகத்துக்கு யார் துணையும் இன்றி எங்கும் தனியாகப் போவதுதான் பிடித்திருந்தது. அதனால் அவன் எங்கும் தனியாகச் சென்று வருவான்.
            ஒருமுறை அவன் அம்மாவுக்கு உடல் நலமில்லாமல் போகவே மருந்து வாங்கிவர வைத்தியர் வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது.தம்பி வேலனை  அம்மாவுக்கு உதவியாக வைத்துவிட்டு வைத்தியர் வீட்டுக்குப் புறப்பட்டான் 
அப்போது ராசம்மா "ஐயா விநாயகம் ,யாரையாச்சும் துணைக்கு அழைச்சுக்கிட்டுப் போப்பா,தனியாப் போகாதே" என்றாள் 
 ஆனால் விநாயகமோ"போம்மா, நான் இப்போ பெரியவனாயிட்டேன்.தனியாவே போறேன்.நீயேன் பயப்படுறே?" என்றான் கோபத்தோடு.
      அப்போது ராசம்மா, "அப்படியில்லேப்பா, தொலைவாப் போறதுன்னா, யாரோடாவதுசேர்ந்துபோப்பா.துணையில்லாமல்  நெடுவழி போகக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்கப்பா" என்று கவலையோடு சொல்லிப் பார்த்தாள் .
ஆனால் கேட்காத விநாயகம் இப்போ யாரைத் துணையா அழைத்துப் போறது?தனியாப் போனா ஒண்ணும் ஆயிடாது. நீ பயப்படாதே."என்றான் வீராப்போடு.
"என் ராசா. வழியில ஒரு பூனையோ  நாயோ கிடைச்சா அதையாவது கூட்டிப்போ. அதுவே உனக்குத் துணையாயிருக்கும்.என்று மீண்டும் சொல்லவே அம்மாவின் சொற்படியே எதையாவது எடுத்துச் செல்வதாகக் கூறினான் விநாயகம்.
"இருட்டும் முன் வந்துவிடப்பா" என்றவள் கண்களை மூடிப் படுத்து விட்டாள்.
                   வினாயகம்வேகமாக நடந்தான். வழியில் பெரிய குளம் ஒன்று இருந்தது.அதன் கரையில் சென்று நின்றான்.குளத்து நண்டு ஒன்று கரை ஓரமாக நடந்து கொண்டிருந்தது.அதைப் பிடித்துத் தன்னிடமிருந்த பையில் போட்டுக் கொண்டான். வைத்தியர் வீடு வெகு தொலைவில் இருந்தது.அவர் வரும்வரை காத்திருந்து மருந்து வாங்கிக் கொண்டு மீண்டும் தன வீடு நோக்கி நடந்தான் விநாயகம்.
சற்று நேரத்தில் நல்ல மழை பிடித்துக் கொண்டது.வழியில் தெரிந்த ஒரு பாழ் மண்டபத்தில் சென்று ஒதுங்கினான்.
                 சூரியன் மறையும் நேரம் வரவே வினாயகத்திற்கு பயம் பிடித்துக் கொண்டது.யாரேனும் வருகிறார்களா என சுற்றிலும் பார்த்தான்.தனியாக இருக்கப் பயமாக இருக்கவே தன பையில் இருந்த நண்டை வெளியே எடுத்து அதன் காலில் கீழே கிடந்த ஒரு கயிற்றால் கட்டினான்.அங்கேயே அமர்ந்து கொண்டான். அவன் கையிலிருந்த நண்டு அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவனுக்கு அது வேடிக்கையாக இருந்தது.சற்றுநேரம்தான்.மீண்டும் பயம் பிடிக்கவே எழுந்து நின்றான். அந்த நண்டு அவனது பின் பக்கமாகச் சென்றுஎதையொ பிடித்துக் கொண்டு போராடியது.திடுக்கிட்டுத் திரும்பியவன் "ஐயோ" என்று அலறிவிட்டான். 
                   அவன் பின்னால் ஒரு பாம்பின் கழுத்தைப் பிடித்துக் கொண்டிருந்தது அந்த நண்டு.இருட்டையும் மழையையும் லட்சியம் செய்யாமல் அந்த இடத்திலிருந்து வீட்டை நோக்கி ஓடினான் விநாயகம்.வீட்டை அடைந்தபின்னர்தான் அவன் ஓட்டம் நின்றது.
உள்ளே நுழைந்தவுடன் ராசம்மா வந்திட்டயாப்பா.என்றபோது அம்மாவிடம் மருந்தைக் கொடுத்துவிட்டு "அம்மா, நான் உன் சொல்படி ஒரு துணையோடுதான் போனேம்மா. இனியும் நான் எங்கே போனாலும் தம்பியோடு போவேனம்மா."என்றான்.
துணையில்லாமல் அவன் தனியாகச் சென்றிருந்தால் இப்போது உயிரோடு இருந்திருக்க முடியுமா. அம்மா பழமொழியாக துணையோடல்லது நெடுவழி போகேல் என்று சொன்னதன் பொருளை இப்போது புரிந்து கொண்டான் விநாயகம்.
ராசம்மாவும் மகனின் மாற்றத்தை அறிந்து மனம் மகிழ்ந்தாள்.




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

சனி, 28 செப்டம்பர், 2013

பழமொழிக் கதைகள் ---கிட்டாதாயின் வெட்டென மற

வீரன்பட்டி வீரன்பட்டி என்று ஒரு சிறு கிராமம்.அந்த கிராமத்தில் வீரையன் என்று ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான்.அவனுக்கு பாலன், கோபு என்று 

இரண்டு பிள்ளைகள் இருந்தனர்.வீரையனுக்கு இளம் வயதில் படிக்கவேண்டும் என்று நிறைய ஆசை இருந்தது. ஆனால் அவனால் படிக்க

முடியாத சூழ்நிலை.

அதனால் தனது இரண்டு பிள்ளைகளையும் நன்கு படிக்கவைக்க விரும்பினான். ஒருநல்ல நாளில் இருவரையும் அழைத்துக் கொண்டு அருகே 

நகரத்தில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்றான்.இருவரையும் பள்ளியில் சேர்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான்.

சில மாதங்கள் பிள்ளைகள் ஒழுங்காகப் பள்ளி சென்று வந்தனர்.

பள்ளியில் காலாண்டுத் தேர்வு வந்தது.கோபு பாலன் இருவரின்  ஆசிரியர் அவர்களுக்கு தரச் சான்றிதழ் எனப்படும் ப்ரோக்ரஸ் ரிபோர்ட் கொடுத்தார்.
இருவருமே சுமாரான மதிப்பெண்ணே பெற்றிருந்தனர்.இதைத் தந்தையிடம் கொடுப்பதற்கு மிகவும் பயந்தனர்.ஆனால் சிறியவன் கோபு தன தந்தையிடம் தன சான்றிதழைக் கொடுத்து அவர் முன் தயங்கியபடியே நின்றான்.அவன் எடுத்திருந்த மதிப்பெண்கள் எல்லாமே சராசரிக்கும் கீழேயே இருந்தன.வீரையனுக்கு ஒரே கோபம்.மூத்தவனாவது நல்ல மதிப்பெண் எடுத்திருப்பானோ என்று பாலனைக் கேட்டான்."ஏண்டா, தம்பி எல்லாத்திலையும் குறைச்ச மார்க்கு வாங்கியிருக்கிறானே, நீ எப்படி?"
தயங்கியபடியே தன ரிபோர்டைக் கொண்டுவந்து கொடுத்தான் பாலன்.அதைப் பார்த்த வீரையன்,"தம்பியைவிட பரவாயில்லை. ஆனாலும் நல்லாப் படிக்கோணும்டா" என்று சற்றுக் கடுமையாகக் கூறினான்.இருவரும் சரியெனத் தலையை ஆட்டினர்., 
நாட்கள் செல்லச் செல்ல கோபுவுக்குப் படிப்பின் மீது நாட்டமே இல்லாமல் போயிற்று.அவன் அண்ணன் பாலன்  அவனிடம் தந்தையின் ஆசை பற்றிச் சொல்லி அவனைப் பள்ளிக்கு இழுத்து வந்தான்.
அன்றும் பாலன் பள்ளிக்குப் புறப்பட்டு விட்டபோதும் கோபு கன்றுக் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.அவனிடம் வந்த பாலன் "டே,தம்பி என்னடா, பள்ளிக்கூடம் வரலையா?"என்று கடுகடுப்போடு கேட்டான். அதைக் கேட்ட கோபு "எனக்குதான் படிப்பே ஏறலியே நான் 
ஏன் பள்ளிக்கூடம் வரணும்? நீ வேணுமானா போ. நான் வரலை" என்றான்..
அதைக் கேட்டபடியே வந்த வீரையனுக்குக் கோபம் மூண்டது."ஏண்டா, உங்களை எப்படியாவது படிக்கவைக்க நான் படாத பாடு படுறேன் உனக்கு வெளையாட்டா இருக்காடா? மருவாதையா அண்ணன்கூடப் போற வேலையைப் பாரு. இல்லேயின்னா..."என்று பற்களைக் கடித்தான் வீரையன்.அவனது கோபத்தைப் பார்த்த கோபு உடனே தன புத்தகப் பையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு பள்ளியை நோக்கி வெளியே ஓடினான்.
அன்று மாலையே அழுதபடியே வீட்டுக்கு வந்த கோபு தன தந்தையிடம் வந்து நின்றான்."அப்பா, உங்களுக்குப் பிடிக்குதுன்னு என்னைப் பள்ளிக்கூடம் போகச் சொல்றீங்களே எனக்கு படிப்பு வருதான்னு பாக்க வேண்டாமா?இன்னிக்கு எங்க வாத்தியாரு என்ன சொன்னாரு தெரியுமா? எட்டாத பழத்துக்குக் கொட்டாவி விடாதேடா வராத படிப்பை நினைச்சு  ஏன் வீணா கஷ்டப் படுறே"அப்படின்னு சொல்லித் திட்டுறாங்கப்பா.நான் உங்க கூட வயலுக்கு வந்து விவசாயத்தைப் பாத்துக்குறேன்.அண்ணனுக்குப் புடிச்சா அவன் படிக்கட்டும்."
வீரையன் சற்று சிந்தித்தான்.அவன் மனம் பேனா பிடிக்க ஒரு கை போனால் ஏரைப் பிடிக்க ஒரு கை இருக்கட்டும் என்று எண்ணினான்.
"சரிகோபு, நீ என்கூட வயலுக்கு வா."என்றவுடன் மகிழ்ச்சியுடன் ஓடினான் கோபு.
                               வருடங்கள் ஓடின. இன்று பாலன் கல்லூரியில் படிக்கும் மாணவன்.ஆனால் கோபுவோ வயலில் பாடுபட்டு விளைச்சலைப் பெருக்கி வீட்டின் செல்வ நிலையையும் உயர்த்தியிருந்தான். முதுமையின் விளிம்பில் நிற்கும் வீரையன் தனக்கு பெரும் உதவியாக இருக்கும் கோபுவைப் பற்றிப் பெருமை கொண்டிருந்தான். பலவிஷயங்களைத் தெரிந்து கொண்டு இன்னும் சிறப்பான முறையில் தன நிலத்தைப் பாதுகாக்கவும் விளைச்சலைப் பெருக்கவும் முயன்றான். தினமும் நூல்நிலையம் சென்று விவசாயம் சம்பந்தமான நூல்களைப் படித்தான்.பொது அறிவையும் வளர்த்துக் கொண்டான். 
அடிக்கடி தந்தையின் சந்தேகங்களைப் போக்கவும் அவன் அறிவை எண்ணி வீரையன் ஆச்சரியப் பட்டான்.
                                 பாலன் கஷ்டப் பட்டு கல்லூரிப் படிப்பை  முடித்தான்.ஆனால்வேலைக்காக அலைவதே அவன் வேலையாக இருந்தது.
ஆனால் கோபுவோ நிற்க நேரமின்றி வயல் வேலை என்று ஓடிக்கொண்டிருந்தான். ஒருநாள் அந்த ஊருக்கு மாவட்டக் கலெக்டர் வருகை புரிந்தார்.அவ்வூர் அதிகாரிகள் கூடியிருக்கும் கூட்டத்தில் வீரையன் பெருமைப் படும் ஒரு காரியத்தைச் செய்தார்.ஊரே கூடியிருக்கும் அந்த இடத்தில் சிறந்த விளைச்சலைக் காட்டிய கோபுவுக்கு நமது குடியரசுத் தலைவர் பாராட்டும் பரிசும் அளிக்க இருக்கிறார் என்ற செய்திதான் அது.ஊர் பெரியவர் முதல் அனைத்து மக்களும் சிறந்த மகனைப் பெற்ற தந்தை என்று பாராட்டிப் புகழ்ந்தனர்.
அன்று இரவு வீரையன் தன பிள்ளைகள் இருவருடனும் அமர்ந்து கொண்டான்.
"கோபு, உன் அண்ணன் படிக்கப் போனபோது நீயும் போகலையேன்னு கோபப்பட்டேன். ஆனால் நீயோ வாத்தியாரு ஏதோ சொன்னாருன்னுட்டு படிப்பை நிறுத்திட்டே, நீ உருப்படுவியான்னு கவலைப் பட்டேன். ஆனா, அந்தக் கவலை இப்போ இல்லை."
"அப்பா, வாத்தியாரு ஏதோ சொல்லலைப்பா, வாழ்க்கைக்குத் தேவையான பழமொழியைத் தான் சொல்லியிருக்காரு.
கிட்டாதாயின் வெட்டென மற அப்படின்னு." அவரு சொன்னபடி எனக்கு வராத படிப்பை நினைச்சு நான் வருந்தாம அதை மறந்துட்டு நமக்கும் நாட்டுக்கும் எது தேவையோ அதைக் கத்துக்கிட்டேன்.அந்த விவசாயம் நம்மையும் உசத்தி நாட்டையும் உசத்திடுச்சில்லெப்பா?"
முகத்தில் புன்னகை மாறாமல் நின்ற பாலனும் "என்னோட கல்வி அறிவையும் பயன் படுத்தி தம்பிக்கு உதவியா நான் இருப்பேன் அப்பா."
என்றவுடன் அவனையும் சேர்த்து அனைத்துக் கொண்டு மகிழ்ந்தான் வீரையன்.
            அதனால் நம்மால் முடிந்ததை முயன்று கற்கவேண்டும் இயலவில்லையேல் அதைமறந்துவிட்டு இயன்றதைத் தெரிந்து கொண்டுஅதிலும் வெற்றி அடைவதே நம் குறிக்கோளாக இருக்கவேண்டும்.
















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com