வெள்ளி, 22 அக்டோபர், 2010

50th story. புரோகிதர் ஏமாந்தார்.


                                                                  புரோகிதர் ஏமாந்தார்.

   \ஒரு சமயம் தெனாலி ராமனுக்குக் காய்ச்சல் ஏற்பட்டது.வெகு நாட்களாகியும் காய்ச்சல் குறையவில்லை.ராமனால் கண் விழித்துப் பார்க்கக் கூட 

இயலவில்லை.  அவனது  நிலை கண்டு ராமனின் மனைவி மிகவும் பயந்து விட்டாள். தன் கணவனுக்கு ஏதோ தோஷம் பிடித்துள்ளது. அவனது 

ஜாதகத்தைப் பார்த்துப் பரிஹாரம் செய்ய வேண்டும் என எண்ணினாள். அதனால் ஒரு புரோகிதரை அழைத்துப் பரிகாரம் கேட்டாள். அந்தப் புரோகிதர் 

ஏற்கனவே ராமனால் சூடு போடப்பட்டவர். அவர் இந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டார்.

"இவன் புரோகிதர்களுக்குச் சூடு போட்டது பெரிய பாவம்.அதனால்தான் ராமன் காய்ச்சலால் கஷ்டப் படுகிறான். இதற்குப் பரிகாரம் செய்ய  

புரோகிதருக்கு நூறு பொன் காணிக்கை செலுத்தவேண்டும். பிறகுதான் குணமடைவான்." என்று கூறினார். 

             ராமனின் மனைவி மிகுந்த கவலைப் பட்டாள்.அவள் புரோகிதரிடம்," ஐயா புரோகிதரே, எங்களிடம் நூறு பொன் இல்லையே.தாங்கள் கேட்கும் 

தொகை எங்கள் சக்திக்கு மீறியதாக உள்ளதே.வேறு ஏதேனும் வழி சொல்லுங்கள்." என்று கூறினாள்..

புரோகிதர் சம்மதிக்கவில்லை."எப்படியாவது பொன் கொடுத்தால்தான் பரிகாரம் செய்வேன். அப்போதுதான் ராமன் எழுந்திருப்பான். விரைவில் 

பொன்னைக் கொடுக்க வழி பாருங்கள். பிறகு பரிகாரம் செய்கிறேன் " என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் . ராமனின் மனைவி யோசித்தாள்.

தங்களிடம் இருக்கும் குதிரை அவள் நினைவுக்கு வந்தது. புறப்பட்ட  புரோகிதரை மீண்டும் அமரச் சொன்னாள். புரோகிதர் புன்னகையுடன் 

அமர்ந்தார்.

"ஐயா! எங்களிடம் ஒரு குதிரை இருக்கிறது. அதை விற்றுத் தருகிறோம். தயவு செய்து என் கணவருக்குப் பரிகாரம் செய்து அவர் தோஷத்தை 

நிவர்த்தி செய்து விடுங்கள். அவர் எப்படியாவது எழுந்து பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்." என்று வேண்டிக்கொண்டாள்.

குதிரையை விற்றுப் பொன் தருவதாகச் சொன்னதும் புரோகிதருக்கு ஆசை அதிகமாகியது. அந்தக் குதிரை இருநூறு பொன்னுக்கு விலை 

போகும்.அந்தப் பொன் முழுவதையும் அடைய விரும்பிய புரோகிதர் "அப்படியானால் அந்தக் குதிரையை என்ன விலைக்கு விற்றாலும் அந்தத் 

தொகை முழுவதையும் அப்படியே கொடுத்து விட வேண்டும். அதற்கு உறுதியளித்தால் நான் நல்ல முறையில் பரிகாரம் செய்கிறேன்." என்றார்.

ராமனின் மனைவியும் அதற்குச் சம்மதித்தாள். 

அதன்பிறகு புரோகிதர் ஏதோ பரிகாரம் செய்தார். சில நாட்களில் ராமன் பூரண குணமடைந்தான். அதற்குள் புரோகிதர் குதிரையை விற்றுப் பொன் 

தரும்படி பலமுறை கேட்டுவிட்டார். அவரின் நச்சரிப்புத் தாளாமல் ராமன் குதிரையை விற்றுத் தரச் சம்மதித்தான். 

ஒருநாள் ராமன் தன் குதிரையுடன் ஒரு பூனையையும் கூட்டிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான். எங்கே ராமன் தன்னை ஏமாற்றிவிடுவானோ என 

எண்ணிய புரோகிதரும் அவனுடன் புறப்பட்டார்.

ராமன் வைத்திருந்த குதிரை நல்ல அரேபியக் குதிரை. நல்ல விலைக்குப் போகும். அந்தப் பணம் முழுவதையும் புரோகிதருக்குக் கொடுக்க அவன் 

விரும்பவில்லை. சந்தையில் ராமன் குதிரைக்குப் பக்கத்தில் பூனையை நிற்க வைத்தான்."பூனையின் விலை இருநூறு பொன். குதிரையின் விலை 

ஒரு காசு."என்று கூறினான்." பூனையை வாங்குபவருக்கே குதிரையைக் கொடுக்க முடியும்." என்ற நிபந்தனையையும் விதித்தான். 

குதிரையை வாங்க விரும்பியவர் பூனைக்கும் சேர்த்து இருநூறு பொன்னும் ஒரு காசும் கொடுத்தார். பூனையை விற்ற இருநூறு பொன்னைத் தான் 

வைத்துக் கொண்டு குதிரையை விற்ற ஒரு காசை புரோகிதரிடம் கொடுத்தான் ராமன்.

புரோகிதரால் ஒன்றும் பேசமுடியவில்லை. தன்னுடைய பேராசையினால் விளைந்த நஷ்டத்தை எண்ணி வருந்தினார். ராமனின் அறிவாற்றலை 

அவரால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com 

புதன், 29 செப்டம்பர், 2010

49th story.மாறிய மனம்.

                                                                      மாறிய மனம்.
பரமசிவம் அவன் பெற்றோருக்கு ஒரே பையன். மிகவும் செல்லமாக வளர்ந்து வந்தான்.அவன் அப்பா அவன் கேட்டதையெல்லாம் வாங்கித்தருவார். அவன் அம்மாவோ சாப்பிட அவன் விரும்பியதையெல்லாம் செய்து தருவார்.  அதனால் கஷ்டம் என்பதே என்னவென்றே அறியாமல் வாழ்ந்து வந்தான்.
அவன் அம்மா காய்ச்சலால் துன்பப்படும்போது கூட கவலைப்படாமல் தனக்கு வேண்டிய தின்பண்டத்தைச் செய்து தரச் சொல்லி ரகளை செய்வான்.
             அவன் மனம் எப்போதும் எதைப் பற்றியும் கவலைப் பட்டதே இல்லை.அவனும் யாரையாவது துன்பப்படுத்திப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைவான் .நாய் கல்லடிபட்டு நொண்டிச் செல்வதையும், ஓணான் கயிற்றில் கட்டப்பட்டுத் துடிப்பதையும் பார்த்து மகிழ்வான்.அந்த ஊரில் அழகு தரும் பொன்னியாறு ஓடிக்கொண்டிருந்தது.சிறுவர்கள் விடுமுறை நாட்களில் அந்த ஆற்றில் நீந்திக் குளிப்பது வழக்கம். வயிறு பசிக்கும்போதுதான் வீட்டு நினைவு வரும். அதுவரை நீந்திக் கொண்டிருப்பார்கள்.
             அன்று ஞாயிற்றுக்கிழமை. பரமசிவம் அவன் நண்பர்களுடன் ஆற்றங்கரைக்கு வந்தான். உச்சி வேளையாதலால் ஆற்றில் கூட்டமில்லை. ரவி என்ற பையன் "டேய், கூட்டமில்லாமல் இருக்கு. நல்லா நீந்தலாம்டா. வாடா குளிக்கலாம்." என்றபடியே ஆற்றில் இறங்கினான். ராமு "ஊஹூம், நான் மாட்டேன். எனக்கு நீந்தத் தெரியாது."என்றபடியே தள்ளி நின்றான். அந்த ஆண்டுதான் அவர்கள் அந்த ஊருக்கு வந்திருந்தார்கள். அவன் அப்பா ஒரு வங்கி அதிகாரி.  
ஆனால் பரமசிவம் அவன் கையைப் பற்றி இழுத்தான்."பயப்படாதே. நான் உனக்கு நீந்தக் கத்துக் குடுக்கறேன். வா"  ராமுவுக்கும் அவர்களைப்போல நீருக்குள் அமிழ்ந்து விளையாட ஆசையாக இருந்ததால் மெதுவாக ஆற்றில் இறங்கினான். பத்து நிமிடமாக அவனை இழுக்க முயற்சித்தவனுக்குத  திடீரென அவனைத் துன்புறுத்திப் பார்க்க ஆசை வந்துவிட்டது. முழங்கால் அளவு நீரில் நின்றவனை கையைப் பற்றி இழுத்து நீருக்குள் தள்ளிவிட்டான்.
பயந்து போன ராமு பதறியபடி எழ முயன்றான்."டேய், இப்படியெல்லாம் பண்ணாதே....." என்றபடியே பயத்துடன் கரையை நோக்கி நடந்தான் .அவனை பரமசிவம் மீண்டும் இழுத்து நீருள் தள்ளினான்."ஆ, ஆ, என வாயைப் பிளந்தபடியே நீருக்குள் தவிக்கும் ராமுவைப் பார்த்துச் சிரித்தான் பரமசிவம்.
அவனது தவிப்பைப் பார்த்து ரசித்தான். தன்னைக் காத்துக் கொள்ள ராமு படும் துன்பத்தைப் பார்த்துக் கை கொட்டிச் சிரித்தான். 
அப்போது ரவி பரமசிவத்தின் காதில் நீரை ஊற்றவே அவனிடம் சண்டைக்குப் போனான். அந்தசமயம் ராமு கரையேறி மணலில் படுத்துக் களைப்பைப் போக்கிக் கொண்டான்."சே, என்ன நண்பன் இவன், உயிருக்குப் போராட வைத்து விட்டானே. இனிமேல் இவனுடன் சேரவே கூடாது." என்று எண்ணியவன் தன் வீட்டை நோக்கி நடந்தான். அவன் பின்னால் பரமசிவம் "டேய், பயந்தாங்குளி ஓடுடா ஓடு..." என்று சிரிப்பதை ராமு பொருட்படுத்தவேயில்லை.
             ஐந்து  நாட்கள் கழிந்தன. அன்று சனிக்கிழமை. பள்ளி பிற்பகல் விடுமுறை.சாப்பிட்டுவிட்டு ஊரைச்  சுற்றி வந்தான் பரமசிவம். தெருக்கோடியில் ஒரு வீடு. அது ஒரு கிட்டங்கி.வீடு முழுவதும் வெல்ல மூட்டைகளை அடுக்கியிருப்பார்கள். வீட்டு வாயிலில் வெல்ல வாசனை கும்மென்று அடிக்கவே மெதுவாக உள்ளே நுழைந்தான். உள்ளே  வெல்லம். அச்சு வெல்லம் பனைவெல்லம், மண்டைவெல்லம், என வகை வகையாகப் பார்த்தவனுக்கு நாக்கில் நீர் ஊறியது வெல்ல கட்டிகளை எடுத்துத் தன் பாக்கெட்டில் நிரப்பிக் கொண்டான். வேண்டியமட்டும் தின்றான். திடீரென்று அவன் மீது ஏதோ விழுந்தது. பயந்து போனவனாய் "ஐயோ, அம்மா "என அலறினான். மேலும் இரண்டு எலிகள் மேலே விழவே துள்ளி ஓடினான். இரண்டு எலிகள் அவனைக் கீறிவிட்டு ஓடின. பயந்து போன பரமசிவம் அறையை விட்டு வெளியே வந்தான். வீடு ஒரே இருட்டாய் இருப்பதைப் பார்த்து மேலும் பயந்தான்."ஐயோ, இதென்ன இவ்வளவு இருட்டா இருக்கு. கொஞ்ச நேரம் முன்னே வெளிச்சம் இருந்துதே!. இப்போ வாசற்படியே தெரியலியே.ஐயோ, அம்மா,  அம்மா..."அலறினான் பரமசிவம். அவனையும் வெல்ல மூட்டை என எண்ணிய எலியும் பெருச்சாளியும் அவன் மேலே விழுந்து கீறின.உடம்பில் எரிச்சல். மனதில் பயம், காற்றில்லாததால் திணறினான். அவன் வரும்போது திறந்திருந்த கதவை அவன் உள்ளே இருக்கும் போது யாரோ மூடிவிட்டுச் சென்று விட்டார்கள். இதை உணர்ந்து கொண்ட பரமசிவன் அலறினான்."யாராவது என்னைக் காப்பாத்துங்க. பயமா யிருக்கு யாராவது வாங்க.ஐயோ, அம்மா..."வெகுநேரம் அலறியவாறு இருந்தான். வியர்வையில் அவன் சட்டை முழுவதும் நனைந்து விட்டது.
வெல்லம் சாப்பிட்டதால் மிகுந்த தாகமும் ஏற்பட்டது. இருட்டறையில்  தண்ணீர் எப்படிக் கிடைக்கும்? ஒரு நிமிடம் போவது கூடக் கடினமாக இருந்தது.அப்போதுதான் அவன் மனம் சிந்திக்கத் தொடங்கியது.
"காற்றுக்காக நான் இப்போது தவிக்கிறேனே இப்படித்தானே ராமுவும் அன்று தவித்திருப்பான். மீண்டும் மீண்டும் அவனை நீருக்குள் தள்ளி வேடிக்கை பார்த்தேனே. அவனின் துன்பம் கண்டு சிரித்தேனே....கடவுளே! நான் செஞ்சது தப்புதான். என்னை மன்னிச்சுடு. இனிமேல் யாரையும் துன்புறுத்த மாட்டேன். என்னைக் காப்பாத்து." மனமிரங்கி  அழுதான். கதவைத் தேடிப் பிடித்து படபடவெனத் தட்டினான்.
          திடீரெனக் கதவு திறந்தது. இரண்டு பேர் உள்ளே நுழைந்தனர். பாதி மயக்கத்தில் சரிந்து உட்கார்ந்திருந்த பரமசிவத்தைப் பார்த்து அவனைத் தூக்கி வெளியே அமர்த்தினர்."நீ ஏண்டா உள்ளே போனே? வெல்லம் திருடவா?"
"வேற எதுக்குப் போவான் படிக்கவா போவான்?"
"ஏலே, வெல்லம் திருடி! உங்கம்மா உன்னைக் காணோமின்னு ரொம்ப நேரமா தேடிக்கிட்டிருக்காங்க. நீ இங்க வந்து மாட்டிகிட்டிருக்கே பொறியிலே அகப்பட்ட எலி மாதிரி."
"நல்ல வேளை பூட்டு சரியாப்பூட்டியிருக்கான்னு பாக்க வந்தது நல்லதாப்போச்சு. இல்லையின்னா  நாளைக்கு ஞாயித்துக்கெழமை பூராவும் இவன் உள்ளாறவே இருந்துருக்கணும். ஏலே, பெருச்சாளி எலி கடிச்சுதாலே?"
"ஆமா."பரமசிவம் அழுதுகொண்டே சொன்னான்.வெளிக்காற்று உடம்பில் பட்டதும் புத்துணர்ச்சி பெற்றான்.
"அண்ணாச்சி.வெல்லம் தின்கிற ஆசையிலே உள்ளே போயிட்டேன்.மன்னிச்சுடுங்க இனிமே இப்படிச் செய்ய மாட்டேன்."சிவந்த கண்களைத் துடைத்தவாறே சொன்னான் பரமசிவம். 
"போடா, போய் உங்கம்மாவைப் பாரு. பாவம் எங்கெங்கயோ தேடிக்கிட்டு இருக்காங்க. இந்தா. இந்த வெல்லக்கட்டியை எடுத்துக்கிட்டுப் போ."
ஒரே ஓட்டமாக ஓடினான் வீட்டுக்கு. ஊரெங்கும் தேடி விட்டு பிள்ளையைக் காணோமென்று அழுதுகொண்டிருந்த அம்மாவின் மடியில் தலை வைத்துக கொண்டவனுக்கு தான் எவ்வளவு துன்பப் பட்டோம் என்பது புரிந்தது.
அம்மாவின் மடி அவனுக்கு சுவர்க்கமாக இருந்தது.
மற்றவர் துன்பத்தை நினைத்துப் பார்க்காததால்தான் துன்பப் படுத்திப் பார்ப்பதில் மகிழ்ச்சியைக் கண்டேன். இனி அனைவரையும் நேசிக்கக் கற்றுக் கொள்வேன்.யாரையும் கஷ்டப்படுத்தவே மாட்டேன்.என்று அம்மாவின் மடியில் தலைவைத்தவன் தனக்குள் உறுதி பூண்டான்.
பரமசிவனின் மனம் மாறியதை அறியாமலேயே அவன் கிடைத்து விட்டதற்காக மகிழ்ந்தார் அவன் அம்மா.
முற்பகல் செய்யின் பிற்பகல்  விளையும் என்பதைப் புரிந்து கொண்டான் பரமசிவம்.
யாருக்கும் துன்பம் விளைவிக்கக் கூடாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.அப்படி விளைவித்தால் நமக்கும் அத்துன்பம் வந்துசேரும் என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
                                             " பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா 
                                              பிற்பகல் தாமே வரும்."     என்ற வள்ளுவரின் திருக்குறளையும் மறக்கலாகாது.









                

Blog: http://chuttikadhai.blogspot.com

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

48th story.நின்னினும் நல்லன்


                                                           நின்னினும் நல்லன்.
முற்காலச் சோழ மன்னர்களுள் தலைசிறந்த மன்னனாக விளங்கியவன் கரிகாற்பெருவளத்தான். இவனது இயற்பெயர் திருமாவளவன் என்பதாகும்.
இளம் வயதில் தந்தையை இழந்த இவன் பகைவர்களுக்கு அஞ்சி தாயுடன் மறைந்து வாழ்ந்தான். இவனை வளர்த்தவர் இரும்பிடர்த்தலையார் என்பவராவார். இவர் திருமாவளவனின் தாய்மாமன் ஆவார். சிறந்த தமிழ்ப் புலமை மிக்க இவர் வளவனுக்கு ஆசானாகவும் இருந்தார். இவர் பாடிய பாடல் புறநானூறு என்னும் சங்க இலக்கியத்தில் இடம்  பெற்றுள்ளது.
மறைந்து வாழ்ந்த வளவனை அவன் பகைவர் கவர்ந்து சென்று ஒரு காட்டின் நடுவே உள்ள வீட்டில் அடைத்து வைத்தனர். சோழ மன்னனின் மகனான வளவனைக் கொன்று நாட்டை அபகரிக்கவே பகைவர் சூழ்ச்சி செய்தனர். அதனால் வளவனை அடைத்திருந்த வீட்டிற்குத் தீ வைத்தனர். இந்தத் தீயில் வளவன் உயிர் நீப்பான் இனி சோழநாடு நம் வசமாவது திண்ணம் என நம்பியிருந்தனர் பகைவர். தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது. உள்ளே அடைபட்டிருந்த வளவன் "மாமா, மாமா" என அலறினான். வெகு நேரமாக வளவனைக் காணாத இரும்பிடர்த்தலையார் அவனைத் தேடி அலைந்தார். காட்டுக்குள் தேடி வரும்போது வளவனின் அலறல் சத்தம் கேட்டது பதறியபடியே குரல் வந்த திசையில் ஓடினார். எரியும் ஒரு குடிசைக்குள் இருந்து வரும் ஒலி வளவனுடையது என்று அறிந்தார். மிகவும் போராடி வளவனை மீட்டார் இரும்பிடர் தலையார். அந்த நெருப்பில் வளவனின் கால் ஒன்று கருகிப் போனது. அன்று முதல் வளவன் கரிகால்வளவன்  ஆனான். பின்னர் இரும்பிடர்தலையாரின் பெருமுயற்சியால் கரிகால்வளவன் சோழநாட்டு அரியணை ஏறினான்.சிறந்த அறிவாளியான இரும்பிடர்தலையாரின் துணையுடன் சிறப்புடன் சோழநாட்டை ஆண்டான். மக்கள் விரும்பும்  நல்லாட்சி புரிந்தான். பிற்காலச் சோழர்களில் ராஜராஜன் சிறந்த மன்னன். அதுபோல முற்காலச் சோழ மன்னர்களுள் கரிகாலன் சிறந்த மன்னனாகத் திகழ்ந்தான்.
                    இளம் வயதிலேயே அரசு கட்டிலேறிய கரிகால்பெருவளத்தான் மக்களுக்குப் பெரும் நன்மைகளைச் செய்தான். காடு திருத்தி நாடாக்கினான். காவிரிக்குக் கரை எடுத்தான்.
நீர்ப்பாசன வசதிக்காகக் "கல்லணை" என்ற பெரிய அணையைக் கட்டுவித்தான். இவனது அரும்பெரும்  செயல்களைப் பாராட்டி "பட்டினப்பாலை" என்னும் நூலை கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்பவர் இயற்றியுள்ளார்.  இப்புலவருக்கு பதினாறு லட்சம் பொற்காசுகளைப் பரிசாகத் தந்து போற்றினான் கரிகாலமன்னன்..
கரிகாலன் இளம்வயதினன்தானே என்று எண்ணி சேரமான் பெருஞ்சேரலாதன் "வெண்ணி" என்ற இடத்தில் போருக்கு வந்தான். இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. போர்க்களத்தில் கரிகாலன் எறிந்த வேல் சேரலாதனின் மார்பில் பாய்ந்தது .மார்பைப் பிளந்து முதுகு வழியே வெளியே வந்தது. இது கரிகாலனின் உடல்  வலிமையைக் 
காட்டுவதாக அமைந்திருந்தது. இப்போரைப் பார்த்த "குயத்தியார்" என்ற பெண்பாற்புலவர் கரிகாலனின் வெற்றியைப் பாராட்டி வியந்தார். அத்துடன் சேரலாதனின் மானத்தையும் பாராட்டிப் பாடியுள்ளார்.
சேரலாதன் மேல் வேகமாகப் பாய்ந்த வேல் மார்பை ஊடுருவியதால் முதுகில் புண்பட்ட சேரலாதன் புறப்புண்ணுக்கு
நாணி வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான். வடக்கிருத்தல் என்பது ஆற்றின் நடுவே உள்ள கல்லின்மேல் தருப்பைப் புல்லைப் பரப்பி அதன்மேல் வடக்கு நோக்கி அமர்ந்து மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்புலன்களையும் அடக்கி உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல் ஆகும். புறப்புண் பட்டால் அது வீரத்திற்கு இழுக்கு 
என்று நாணிய சேரலாதன் வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான். இவனது மானத்தைக் கண்ட வெண்ணிக்குயத்தியார் பெருவியப்பெய்தி கரிகால் மன்னனை விடச சேரலாதன் சிறந்தவன் என்று பாடியுள்ளார்.
வெண்ணி என்னுமிடத்தில் நடந்த போரைப் பற்றிப் பாடியதால் இப்புலவர்  வெண்ணிக் குயத்தியார் என்று அழைக்கப்பட்டார்.
"கரிகால் வளவ! வெண்ணிப் போரில் பகைவரை எதிர்த்து வெற்றி கொண்ட வீரனே! நீ குறி பார்த்து எறிந்த வேலானது 
சேரனின் மார்பில் பாய்ந்து முதுகுப் புறமாக ஊடுருவிப் புண்ணாக்கியது. இதனால் சேரன் புறப்புண்ணுக்கு நாணி 
வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான். புறப்புண் பட்டது வீரத்திற்கு இழுக்கு என்று நாணங்கொண்ட சேரன் வடக்கிருத்தலால் உலகில் பெரும்புகழ் பெற்று விட்டான். நீ வீரத்துடன் போரிட்டதால் வெற்றிப் புகழ் பெற்றாய். ஆனால் உன்னால் ஏற்பட்ட புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருத்தலால் பெரும்புகழ் பெற்றுவிட்டான் சேரன். எனவே நின்னினும் நல்லனன்றே. எனப் பாடி சேரனது மானத்தைச் சிறப்பித்துள்ளார் புலவர்.
இப்பாடல் சங்க இலக்கியமான புறநானூற்றில் இடம் பெற்று இவ்வரலாற்று உண்மையை நமக்கு எடுத்து இயம்புகின்றது.
மானம் போனபின் வாழாமை முன்னினிதே என்ற கூற்றை நிரூபித்து உயிர்கொடுத்து மானம் காத்த சேரனது புகழ் என்றும் நிலைத்திருக்கும் அன்றோ.





செவ்வாய், 14 செப்டம்பர், 2010

47th story.பாரதியின் பக்தி

                                                பாரதியின் பக்தி.
மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் நமது நாட்டுக்குக் கிடைத்த பெரும் செல்வம் ஆவார். அந்த மஹாகவி சொல்வது போலவே வாழ்ந்து காட்டியவர்.
இவர் தன்னை அழகு படுத்திக் கொள்வதில் பெரும் விருப்பம் உடையவர். காசியில் வாழ்ந்து வந்தபோது வடநாட்டவர்போல் உடையையும் உருவத்தையும் மாற்றிக் கொண்டு கம்பீரமாகத் திகழ்ந்தார். "ஜாதி மதங்களைப் பாரோம்" என்று பாடியபடியே இவர் எல்லாஜாதியாருடனும் கை கோர்த்து நடப்பார். இவரது முறுக்கிய மீசையையும் முண்டாசுக் கட்டையும் இவரது அத்தையின் கணவர் கிருஷ்ணசிவன்  வெறுத்தார்.வைதீக ஆசாரத்தில் ஊறிய பலருக்கும் இது பிடிக்கவில்லை.ஆனாலும் அதை வெளியில் சொல்லாமல் இருந்தனர். பாரதியும் அதிகம் அவர் கண்ணில் படாமலே இருந்தார்.
 அந்தணர் பந்தியில் அமர்ந்து சாப்பிடுவதையும் அவரது அத்தையின் கணவர் விரும்பவில்லை.பாரதியிடம் கடுமையாகக கூறினார்."நீ என்றைக்கு உன் கிராப்பையும் மீசையையும்  எடுத்துவிட்டு குடுமி வைத்துக் கொண்டு வருகிறாயோ அன்றுதான் எங்களுடன் பந்தியில் அமர்ந்து சாப்பிடலாம்" என்று கூறிவிட்டார். 
இதைக் கேட்டு அத்தை மிகவும் வருத்தப் பட்டார். ஆனால் பாரதி சற்றும் வருந்தவில்லை.நாட்கள் ஓடின. அவ்வூரில் ஒரு சிவமடம் இருந்தது. அங்குள்ள கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரை உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப் படும். அதேபோல் அந்த ஆண்டும் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப் பட்டிருந்தது.அந்தக் கோயிலுக்கு பாரதியின் அத்தையின் கணவர் கிருஷ்ணசிவன்  தான் தலைவர். திருவாதிரைத திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தார்கள்.பூஜை எல்லாம் முடிந்தது. தீபாராதனை நேரம் வந்தது. மார்கழிமாதம் திருவாதிரை நாளன்று திருவெம்பாவை பாடாமல் தீபாராதனை எப்படிச் செய்வது. அன்று பார்த்து ஓதுவார் வரவில்லை . அவர் வேறு காரியமாகச் சென்று விட்டார். தலைவராக இருப்பதனால் பொறுப்பு அதிகம் அல்லவா. தீபாராதனை செய்ய இயலாமல் தவித்தார்.
யாருக்கும் மனப்  பாடமாக திருவெம்பாவை சொல்ல வராது. அனைவரும் கச முசவென்று பேசிக்கொண்டு நின்றிருந்தனர்.
அவ்விடத்தில் உற்சவத்தின்போது பெண்கள் வந்து பாடுவதும் முறையல்ல.எனவே பதை பதைத்து நின்றிருந்தார்.
அப்போது பாரதியின் அத்தை பாரதிக்குக் கிராப்புத்தலை மறைய முண்டாசு கட்டி நெற்றியில் விபூதிப் பட்டையிட்டு ருத்திராக்ஷ மாலை ஒன்றை கழுத்தில் அணிவித்து மெதுவாக அங்கே அவரை அழைத்து வந்தார். மறைவான இடத்தில் நின்றபடி மெதுவாக "நம்ம சுப்பையா இல்லையா. நன்னா ச்பஷ்டமாப பாடுவானே." என்றார். தலைவரான 
கிருஷ்ணசிவன் பாரதி பாடுவதற்கு வேறு வழியில்லாமல் சம்மதித்தார்.
திருவெம்பாவை பாடல் அனைத்தையும் மிகத் திருத்தமாகவும் இனிமையாகவும் பாரதி பாடி முடித்தார்.அதன்பின் முறைப்படி தீபாராதனை முடிந்தது.
திடீரென பாரதி மிகக் கம்பீரமான குரலில் பக்திப் பெருக்கோடு "பார்க்கப் பார்க்கத் திகட்டுமோ உந்தன் பாத தரிசனம் "
என்ற நந்தனார் சரித்திரக் கீர்த்தனை ஒன்றை உள்ளம் உருகப் பாடினார்.கேட்டிருந்த அத்துணை பெரும் உள்ளம் நெகிழ்ந்து பரவசமானார்கள்.
அங்கு கூடியிருந்த அந்தணர்கள் அனைவரும் பாரதியின் உள்ளார்ந்த பக்தியையும் ஞானத்தையும் அறிந்து கொண்டனர்.அவரது பக்திக்குத் தலைவணங்கினர். கிருஷ்ணசிவன் பாரதியைத் தழுவிக் கொண்டார். சிறுவயதிலேயே மிகுந்த ஞானத்துடன் விளங்கியபாரதியின் பக்தியையும் இப்போது உணர்ந்து கொண்டார்.
"பாரதி, குடுமியும் பூணூலும் எங்களைப் போன்ற சாதாரண மனிதருக்குத்தான் தேவை. நீ மகா ஞானி. உன்னைப் போன்ற மனம் படைத்தவருக்கு இந்த வேஷங்கள் தேவையில்லைஅப்பா." என்று உள்ளம் உருகிக் கூறினார் பாரதியைப் புரிந்து கொண்ட கிருஷ்ணசிவன். மீண்டும் பாரதி பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார் என்று சொல்லவும் வேண்டுமா? 
தெய்வத்தையும் தேசத்தையும் இரண்டு கண்களாகப் பார்த்தவர் பாரதி. தெய்வம் உண்டென்று தானறிதல் வேண்டும் 
என்றும், தெய்வம் நமக்குத் துணை என்றும்,பாடிய பாரதியின் பக்தியின் பெருமையை  அளவிட முடியாது.
செப்டம்பர் 11 ம் நாள் புகழுடம்பு எய்திய பாரதியாரை நம்மால் மறக்க இயலுமோ?






திங்கள், 6 செப்டம்பர், 2010

46th story. உயர்வுக்கு வழி

                                                         உயர்வுக்கு வழி. 
ஒரு கிராமத்தில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு நான்குமகன்களஇருந்தனர்.நால்வரும்சோம்பேறிகள்.ஒற்றுமையில்லாதவர்கள்.எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டும் அப்பாவின் உழைப்பில் உட்கார்ந்து உண்டு வாழ்ந்தும்  வந்தனர். முதியவர் கடும் உழைப்பாளி. தன் பிள்ளைகள் யாரும் தன்னைப்போல் உழைக்கவில்லை என்பதோடு தனக்கு யாரும் உதவவில்லையே எனவும் மிகவும் வருந்தினார்.ஒரு நாள் முதியவருக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. அவரால் எழுந்திருக்கவும் இயலவில்லை.
எனவே தன் பிள்ளைகளை அழைத்தார். அவர் முன்னே நால்வரும் வந்து நின்றனர்.முதியவர் அவர்களுக்கு அறிவுரை கூறினார்.
"என் மக்களே, எனக்கு வயதாகிவிட்டது. இன்னும் நெடுநாள் நான் வாழமாட்டேன்.என் காலம் முடிந்து விட்டால் நீங்கள் எப்படி வாழப் போகிறீர்கள் என்பதே எனக்குக் கவலையாக உள்ளது. தயவு செய்து ஒற்றுமையாக இருந்து நமது நிலத்தில் பயிரிட்டு வாழப் பழகுங்கள்."என்றார்.
நால்வரும் வெவ்வேறு பக்கம் திரும்பி நின்றிருந்தனர். அவர்கள் மனநிலையை அறிந்து கொண்டார்.
"பிள்ளைகளா,உங்களுக்கு நான்கு எருதுகளின்  கதை தெரியுமா? நான்கும் ஒற்றுமையாக மேய்ந்தபோது சிங்கத்தால் அவைகளைக் கொல்ல முடியவில்லை. நான்கும் சண்டையிட்டுக் கொண்டு தனித்தனியே நின்றபோது சிங்கம் ஒவ்வொன்றாகக் கொன்று தின்றது. இதைப் புரிந்து கொள்ளுங்கள்" என்றபடியே  தன் அருகே இருந்த மரக் குச்சிகள் இருந்த ஒரு கட்டினை எடுத்துக் கொடுத்தார்.
"இதை அப்படியே  ஒடிக்க முடியுமா பாருங்கள். யாராலாவது முடியுமா முயற்சித்துப் பாருங்கள்." என்றார். ஒவ்வொருவரும் அந்த குச்சிகள் நிறைந்த கட்டினை ஒடிக்க முயற்சித்துத்  தோற்றனர். அனைவரும் தங்களால் முடியவில்லை என ஒப்புக் கொண்டு தலை குனிந்து நின்றனர்.
முதியவர் இப்போது அந்தக் குச்சிகளை ஒவ்வொன்றாக பிரித்து ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு குச்சியைக் கொடுத்து ஒடிக்கச் சொன்னார். நால்வரும் குச்சிகளை விரைவில் ஒடித்துப் போட்டனர். 
"இதுதான் உங்களின் பலமாகும். நீங்கள் நால்வரும் ஒன்றாக இருந்தால் உங்களை யாராலும் அழிக்க முடியாது.சண்டையிட்டுக் கொண்டிருந்தால் விரைவில் மற்றவர் உங்களை அழித்து விடுவார்கள்.எனவே முதலில் ஒற்றுமையாக இருங்கள்"
தங்களின் தந்தையாரின் அறிவுரையைக் கேட்ட பிள்ளைகள் தங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்தி ஒற்றுமையாக இருக்கத் தொடங்கினர்.
சில மாதங்களுக்குப் பின் ஒருநாள் முதியவர் தன் பிள்ளைகளை அழைத்து தன் வயலில் புதையல் இருப்பதாகவும்  அதைக் கண்டுபிடித்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றும்  கூறிவிட்டு இறந்து விட்டார்.
பிள்ளைகள் நால்வரும் புதையலைத் தேடி வயலுக்குச் சென்றனர்.நால்வரும் சேர்ந்து நிலத்தை நன்கு கொத்தியும் உழுதும் தேடினர்.எந்தப் புதையலும் கிட்டவில்லை. சோர்ந்து போய் அமர்ந்திருந்தபோது பக்கத்து நிலத்துக்குச்  சொந்தக்காரர்  தன்னைப் போல் நிலத்தில் விதைக்கச் சொன்னார்..அவரது 
சொற்படியே நிலத்தில் விதைத்தனர். நான்கு மாதங்களில் நல்ல விளைச்சலைக் கொண்டுவந்து வீடு சேர்ந்தனர். அப்போதுதான் தங்கள் தந்தையார் கூறிய புதையல் அதுதான் எனப் புரிந்து கொண்டனர்.அத்துடன் நல்ல உழைப்பினால் உடலும் மனமும் உற்சாகமாக இருப்பதை எண்ணிப் பார்த்து இத்தனை நாள் வீணாகக் கழித்தோமே என வருந்தினர். ஒற்றுமையின் சிறப்பையும் உழைப்பின் பெருமையையும் அறிந்து கொண்டனர்.இனி அவர்கள் வாழ்வின் உயர்வைத் தவிர தாழ்வை அடையமாட்டார்கள். நாமும் ஒற்றுமையின்  பெருமையையும் உழைப்பின் சிறப்பையும் அறிந்து அதன்படியே நடப்போம் என உறுதி கொள்வோம்.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

45th story.பக்த பிரகல்லாதா.

    
                                             பக்த பிரகல்லாதா.
இறைவன் நம்மைக்காக்க ஓடிவரவேண்டுமெனில் நாம் அவனிடம் காட்டும் பக்தியே சிறந்த வழி. அத்தகு பக்தியை மிகச் சிறிய வயதிலேயே காட்டி இறைவனான நாராயணனை தனக்காக இறங்கி வரச் செய்தவன் பிரகல்லாதன்.  இவனது தந்தையே ஹிரண்யகசிபு என்ற அசுர குல மன்னன். இவன் சாகா வரம் வேண்டி பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மா இவன் முன் காட்சியளித்தார். ஹிரண்யகசிபு தான் சாகாதிருக்கும்படி வரம் கேட்டான்.ஆனால் பிரம்மா அவ்வாறு வரம் தர இயலாது நீ எப்படியெல்லாம் சாகக்கூடாது என விரும்புகிறாயோ அப்படியே வரம் தருவேன் என்றார். அதன்படி நீரிலும் நிலத்திலும் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் மனிதனாலும் மிருகத்தாலும் அசுரனாலும்  பகலிலும் இரவிலும் எந்தவகையான ஆயுதத்தாலும் நான் மரணமடையக் கூடாது என வரம் கேட்டான். பிரம்மாவும் அப்படியே தந்தேன் எனக் கூறி மறைந்தார்.மிக்க மகிழ்ச்சியுடன் அரண்மனை திரும்பினான் ஹிரண்யகசிபு.
அங்கே தன் மனைவி கயாது இந்திரனுக்குப் பயந்து ஆசிரமத்தில் மறைந்து வாழ்வதை அறிந்து கடுங்கோபம் கொண்டான். அத்துடன்  தனக்கு மகன் பிறந்திருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சியும் கொண்டான்.
மனைவி மகனுடன் அரண்மனை திரும்பி சிறப்பாக விழா கொண்டாடினான். அதைத் தொடர்ந்து தேவர்கள் அனைவரையும் சிறைபிடித்தான். நவகிரஹங்களையும் தனக்கு அடிமைகளாக்கினான்.
சாகாவரம் பெற்றதால் தானே இறைவன் எனக் கூறிக்கொண்டான்.இனி எல்லாக் கோயில்களிலும் தனது உருவச் சிலையே வைக்கப்பட்டு அதற்கே அபிஷேக ஆராதனைகள் செய்யப்படவேண்டுமென ஆணை பிறப்பித்தான். ஈரேழு  பதினான்கு உலகங்களுக்கும் தானே அதிபதி என்று மிகவும் கர்வத்துடன் இருந்தான்.
அவன் மகன் பிரகல்லாதன்  ஐந்து வயது பாலகனானான். கல்வி பயில்வதற்காக ஆசிரமத்திற்கு அனுப்ப முடிவு செய்தான் ஹிரண்யன்.
அசுரகுரு சுக்ராச்சாரியாரின் புதல்வர்கள் சண்டா அம்ர்கர் என்ற இருவரிடமும் தன புதல்வனை அனுப்பிவைத்தான். அவர்களிடம் கல்வி பயிலும் போது ஆசிரியர் " ஓம் நமோ ஹிரண்யாய நமஹா" என்று கற்பித்தார். ஆனால் ஹரியே இறைவன் என்று கூறிய பிரகல்லாதன் "ஓம் நமோ நாராயணாய நமஹா" என்றுஅனைவருக்கும்   
போதித்தான். ஆசிரியர் ஹிரண்யகசிபுவின் ஆணைக்கு அஞ்சினர்.எவ்வளவு சொல்லியும் பிரகல்லாதன் "ஹரியே இறைவன்" எனக் கூறி வந்தான்.
நாட்கள் கழிய தன மகனின் கல்வி பற்றி அறிய விரும்பினான் ஹிரண்யன். பிரஹல்லாதனை அரண்மனைக்கு வரவழைத்தான்.அன்புடன் மகனைத் தன் தொடை மீது அமர்த்திக் கொண்டான்.மகனைக் கொஞ்சிய ஹிரண்யன்" மகனே! உலகிற்கெல்லாம் தலைவன் யார்?" எனக்கேட்டான். தன் மகன் வாயால் "தாங்களே தலைவர்" எனக் கூறுவதைக்  கேட்க விரும்பினான் ஹிரண்யன்.
சற்றும் தயங்காத பிரகல்லாதன் "ஹரியே உலகிற்கு தெய்வம். அவரே சகலமும் ஆவார்." எனக்கூறக்கேட்ட ஹிரண்யன் மிகுந்த கோபம் கொண்டான்.பலவிதமாகக்  கேட்டும் அவன் மாறாமல் அதையே கூறினான்.ஹிரண்யகசிபுவின் கோபம் எல்லை மீறியது."இவனை யானைக் காலில் வைத்து அழித்து விடுங்கள் " என ஆணை இட்டான்.
அதன்படி . பிரகல்லாதனை தரையில் உட்காரவைத்து யானையை ஏவினர் காவலர். ஆனால் அந்த யானை வணங்கி அவனைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு அரண்மனை சென்றடைந்தது.
அனைவரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.ஹிரண்யன் மிகவும் கோபம் கொண்டான்."இவனை நடுக்கடலில் வீசிவிட்டு வாருங்கள்" என ஆணை பிறப்பித்தான்.
நடுக்கடலில் வீசப்பட்ட பிரகல்லாதனை மகாலட்சுமி பாதுகாப்பாகக் கரை சேர்த்தாள். மீண்டும் பிரகல்லாதன் அழுது கொண்டிருந்த தன் தாயிடம் வந்து சேர்ந்தான். கயாது மகனைக் கட்டி முத்தமிட்டாள்.
இதைக் கேள்வியுற்ற ஹிரண்யன் மனைவி மூலமாக மகனுக்கு உபதேசம் செய்யச் சொன்னான். இறைவன் நாமத்தைத் தவிர வேறு  பெயரை கூற மறுத்துவிட்டான் பிரகல்லாதன்.
சிலநாட்கள் கழிந்தன. இப்போதாவது மகன் மனம் மாறியிருப்பானா 
என ஆசையுடன் மகனை அழைத்தான் ஹிரண்யன். ஆனால் எப்போதும் போல் நாராயண நாமத்தையே உச்சரித்தான் பிரகல்லாதன்.
மிகவும் கோபம் கொண்ட ஹிரண்யன் அவனை  மலையுச்சியிலிருந்து வீசுமாறு உத்தரவிட்டான்.
காவலர் அதேபோல் மலையுச்சியிலிருந்து வீசினர். பிரகல்லாதன் கீழே விழுமுன் அவனை மகாலட்சுமி தாங்கிக் கொண்டாள். காவலர் அரண்மனை வந்து சேரும் முன்னே பிரகல்லாதன் அரண்மனை அடைந்தான்.
ஹிரண்யகசிபு திகைத்தான். இவனை ஒவ்வொரு முறையும் காப்பாற்றும் ஹரி எங்கே ஒளிந்திருப்பான் எனத் தேட முனைந்தான்.
கடைசி முறையாக தன் மகனுக்கு ஆலகால விஷத்தைக் கொடுக்குமாறு கயாதுவிடமே கொடுத்தான். தாயே மகனுக்கு விஷத்தைக் கொடுப்பதா எனத துடித்தாள் கயாது.
ஆனால் மன்னனின் ஆணையை மீறமுடியாமல் அழுதுகொண்டே விஷத்தைக் கொடுத்தாள் கயாது.
தன் மகன் கையில் விஷக் கிண்ணத்தைக் கொடுத்தவள் மயங்கி விழுந்தாள்.
புன்னகையுடன் நாராயணன் நாமத்தைக் கூறிக் கொண்டே ஆலகால விஷத்தைப் பருகினான் பிரகல்லாதன்.என்ன ஆச்சரியம் அந்த பயங்கரமான விஷம் அவனுக்கு அமுதம்போல ஆகியது. இதைக் கண்ட ஹிரண்யன் மிகவும் கோபத்துடன் "உன் ஹரி கோழை போல மறைந்து நின்று உன்னைக் காப்பாற்றுகிறானே,அவனை நேரில் வரும்படி சொல். அனைத்து உலகங்களுக்கும் அவன் தலைவனா நான் தலைவனா பார்க்கிறேன்" என்று கர்ஜித்தான். 
"எங்கேயடா உன் ஹரி? எங்கே மறைந்துள்ளான்?" 
"அவர் எங்கும் இருப்பார்.எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பார்."
ஹிரண்யன் ஒவ்வொரு இடமாகக் காட்டி இங்கே இருப்பானா என்றபடியே கேட்டுக் கொண்டே வந்தான். கடைசியில் ஒரு தூணைக் காட்டி இங்கே இருப்பானா என்று கேட்டான் ஹிரண்யன்.
"ஹரி தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்."
கைகளைக் குவித்தபடி கூறினான் பிரகல்லாதன். பெருஞ் சிரிப்புடன் அந்தத் தூணைத்  தன் கதாயுதத்தால் ஓங்கி அடித்தான் ஹிரண்யன்.பெருஞ்சத்தத்துடன் தூணைப் பிளந்து கொண்டு பயங்கர சிங்க முகத்துடன் நரசிங்க உருவத்தில் நாராயணன் குதித்தான்.
அந்த உருவத்தைப் பார்த்தவுடன் ஹிரண்யன் "பலே மகனே! நான் வெகு நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த ஹரியைக் காட்டிக் கொடுத்தாயடா"என்று கூறி தன் கதையைத் தூக்கி ஹரியை அடித்தான். மறுகணம் அந்த கதாயுதத்தை இரண்டாக ஒடித்து வீசினான் ஹரி. அப்போது மாலை நேரம். நரசிங்கம்ஹிரன்யனைத  தன் கரங்களில் தூக்கிக் கொண்டு வாயிற்படியில் அமர்ந்தான் அவனைத் தன் மடியில் வைத்துக் கொண்டு தன் இரு கரங்களிலும்  உள்ள கூறிய நகங்களால் ஹிரண்யனின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த குடலை அள்ளி மாலையாகப் போட்டுக் கொண்டான்.
ஹிரண்யகசிபு வதம் செய்யப் பட்டான்.
அவன் பிரம்மாவிடம் கேட்ட வரத்தின் படியே பகலும் இரவுமற்ற மாலை நேரத்தில் மனிதனும் மிருகமும் அல்லாத நரசிங்க உருவத்தில் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் இல்லாது வாயிற்படியில் நிலத்திலும் நீரிலும் இல்லாது மடியில் ஆயுதங்கள் ஏதுமின்றி கை நகங்களால் அவனை சம்ஹாரம் செய்தான் நாராயணன்.
.கோபத்தின் உச்சத்தில் இருந்த நரசிங்கத்தை தேவர்கள் மலர் மாறி பொழிந்தும் ஸ்தோத்திரங்கள் செய்தும் குளிர்வித்தனர். ஆயினும் சினம் தணியாத ஹரியை பிரகல்லாதன் அருகே சென்று பிரார்த்தனை செய்தான்.அவனை அருகே பார்த்தபின் சினம் தணிந்து அருள் பார்வை பார்த்தான் ஹரி. பிரகல்லாதனை மடியில் வைத்து ஆசி வழங்கினான்.
பல ஆண்டுகள் நாட்டை ஆண்டபின் வைகுண்டம் வருவாயாக என அருளி மறைந்தான். பிரகல்லாதன் இளம் சிறுவனாக  இருந்தாலும் இறைபக்தியில் சிறந்திருந்த காரணத்தால் இறைவன் வரிசையில் வைத்துப் போற்றப் படுகிறான். இவனே கலியுகத்தில் மகான் ஸ்ரீ ராகவேந்திரராகப் பிறவி எடுத்து பக்தியையும் தர்மத்தையும் உலகில் பரப்பியவன்.

சனி, 28 ஆகஸ்ட், 2010

44th story. jayavijayar.

                            ஜெயவிஜயர் .
இறைவனைக் காண நம்பிக்கையே சிறந்த வழி என்பதை பிரகல்லாதனின் வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது. ஒருமுறை மகாவிஷ்ணுவின் பாதங்களை வருடியபடி மகாலட்சுமி அமர்ந்திருந்தாள். அப்போது சனகாதி முனிவர்கள்  நாராயணனைக் காண வந்தனர்.அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள் வைகுண்டத்தின் காவலர்களான ஜெயனும் விஜயனும்.
அதனால் கோபமடைந்த சனகாதி முனிவர்கள் பூலோகத்தில் பிறவி எடுத்து உழல்வீர்களாக என்று சபித்தனர்.அதைக்கேட்டு வருந்திய ஜெயனும் விஜயனும் . நாராயணனிடம் தஞ்சமடைந்தனர். நாராயணரும் அவர்களுக்கு அபயம் அளித்தார். "பக்திமான்களாக இருந்து ஏழு பிறவிகளில் என்னை வந்து அடைவீர்களா? எனக்குப் பகைவர்களாக இருந்து மூன்றுபிறவிகளில் என்னை  வந்து அடைவீர்களா?" என்று கேட்டார், ஜெயா விஜயர்கள் பதை பதைத்தனர். ஏழு பிறவிகள் தங்களை விட்டுப் பிரிந்திருப்பதா? எங்களால் முடியாது. தங்களின் பகைவனாக இருந்தாலும் விரைவில் வைகுந்தம் வருவதையே விரும்புகிறோம் " என்றனர். நாராயணரும் அவ்வாறே வரமளித்தார்.
அதன் காரணமாகவே முதல் பிறவிஹிரண்யகசிபு,ஹிரன்யாக்ஷகன் எனவும், இரண்டாவது பிறவி இராவணன், கும்பகர்ணன், எனவும் மூன்றாவது பிறவி சிசுபாலன், தந்தவக்ரன் எனவும் பிறவிகள் எடுத்து இறைவனை பகைவனாக எண்ணி வாழ்ந்தனர்.அசுரவம்சத்தில் பிறந்து  தேவாதி தேவர்களை அடிமைப் படுத்தி ரிஷிகளைக்கொடுமைப் படுத்தினர். இவர்களில் முதல் பிறவியில் பிறந்த ஹிரன்யாக்ஷகன் மிகவும் கொடுமைவாய்ந்தவனாக இருந்தான்.
தேவர்களையும் ரிஷிகளையும் கொடுமைப் படுத்தியதோடு தானே இறைவன் எனவும் கூறிக் கொண்டான். மூன்று லோகங்களுக்கும்தானே அதிபதி என்று முடிவு செய்து அனைவரையும் ஆட்டிப் படைத்தான்.
கர்வம் மிகக் கொண்டு வைகுண்டத்திற்கு ஹரியைத்தேடிப்போனான். அங்கே ஹரியைக் காணாமல் எங்கே ஹரி என்று எங்கும்தேடினான்.பாபாத்மாவான ஹிரன்யாக்ஷகன் கண்களுக்கு ஹரி தெரிவானா? எங்கு தேடியும் ஹரியைக் காணாத கோபத்தில் பூமியை தூக்கி பாதளத்தில் அழுத்தினான்.பூமிதேவி வருந்தி  ஹரியை சரணடைந்தாள்.
 நாராயணன் வராக அவதாரம் எடுத்தான். பூமியைத் தன் மூக்கினால் தூக்கி அதன் இடத்தில் நிறுத்தினான். ஹிரன்யாக்ஷகன் கோபத்துடன் நாராயணன் மீது பாய்ந்தான். அவனுடன் போரிட்டு அவனைவதம்செய்தான் நாராயணன்.
ஹிரண்யகசிபு தன் தம்பி வருவான் எனக் காத்திருந்தான். அவன் வதம் செய்யப்பட்ட செய்தி கேட்டு வெகுண்டான். தன் தம்பியைக் கொன்ற ஹரியைத் தேடிச் சென்றான். எங்கும் ஹரியைக் காணாமல் திகைத்தான்.சாகாவரம் பெற்றாலே ஹரியுடன் போரிட்டு அவனை வெல்ல முடியும் என முடிவு செய்தான்.ஆகவே பிரம்மாவைக் குறித்து கடுந் தவம் மேற்கொண்டான். பலஆண்டுகள் தவமியற்றினான் ஹிரண்யகசிபு. அவன் மனைவி கயாது என்பவள் தேவர்கள் அரசனான இந்திரனுக்கு அஞ்சி நாரதரின் ஆசிரமத்தில் மறைந்து வாழ்ந்தாள். நாரதர் நாராயண. நாராயண, எனக் கூற அதைக் கேட்டுக் கொண்டிருந்த கயாது உறங்கி விட்டாள். உடனே அவள் வயிற்றிலிருந்த குழந்தை ம்...ம்...எனக் கேட்கத் தொடங்கியது. நாரதர் மனம் மகிழ்ந்தார். இக்குழந்தையால் உலகில்  பக்தி மணம் பரவும் என ஆசி கூறினார். அவனே பிரகல்லாதன் என்னும் அவதார புருஷன். விடாமுயற்சியும் நம்பிக்கையும் நினைத்ததை முடித்து வைக்கும் என்ற உண்மையை இவர்களின் வரலாற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
பிரஹல்லாதனின் வரலாற்றை அடுத்த கதையில் பார்ப்போம்.
 
 
 

 

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

43rd story. sitrerumbum uyir kaakkum.

                                       சிற்றெறும்பும் உயிர் காக்கும்.
ஒரு கோவில் மாடத்தில் புறா ஒன்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. தினமும் அந்தப் புறா இரை தேட அருகே இருக்கும் காட்டுப் பக்கம் போகும். அந்தக் காட்டில் ஒரு நதி ஓடிக்கொண்டிருந்தது.அதன் கரையில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அந்தப் பழ மரத்தைத் தேடி புறா செல்வது வழக்கம். இப்படி புறா தினமும் பறந்து செல்வதை ஒரு கழுகு கவனித்து வந்தது. அதன் நாவில் எச்சில் ஊறியது. இந்தக் கொழுத்த புறாவைச் சாப்பிட்டால் எத்தனை ருசியாக இருக்கும் என்று நினைத்தது அந்தக் கழுகு. ஒருநாள் புறா அந்தக் காட்டை நோக்கிச் செல்லும் போது கழுகு பார்த்து விட்டது. புறாவைக் கழுகு துரத்த ஆரம்பித்தது. உணவுக்காகத் துரத்தும் கழுகை விட உயிருக்காகப் பறக்கும் புறாவின் வேகம் அதிகமாயிருப்பதில் ஆச்சரியம் இல்லையல்லவா?
எனவே புறா கழுகிடமிருந்து தப்பி கோவில் மாடத்தில் புகுந்து ஒளிந்து கொண்டது. ஏமாந்து போன கழுகு இன்னொரு சமயத்திற்காகக் காத்திருந்தது.
பொழுதும் விடிந்தது.வழக்கம்போல புறா இரை தேட காட்டிற்குச் சென்றது. வழக்கமான ஆலமரத்திற்குச் சென்று கிளையில் அமர்ந்திருந்தது.
அப்போது தற்செயலாகக் கீழே பார்த்தது. ஒரு சிற்றெறும்பு  நதியில் விழுந்து தண்ணீரில் மூழ்கியபடியே தத்தளித்துக் கொண்டிருப்பதைப்  பார்த்தது.
புறாவிற்கு அந்த எறும்பைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உடனே மரத்தில் இருந்த இலைகளில் பெரிய இலையாகப் பறித்து நீரில் போட்டது. அந்தஎறும்பும்  புறாபோட்ட இலையின் மேல் ஏறிக் கரை சேர்ந்தது. ஓடிச் சென்று புற்றுக்குள் நுழைந்தது. புறாவும் மகிழ்ச்சியாகத் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது.
சிலநாட்கள் கழிந்தன.வழக்கம்போல புறா ஆலமரத்திற்குச் சென்றது. அங்குள்ள பழங்களின் கொட்டைகளைச் சாப்பிட்டது. இந்தப் புறாவைக் கவனித்த வேடன் ஒருவன் புறாவைக் கொல்ல வில்லில் அம்பைப் பூட்டினான்.புறா தப்பிப் பறக்க நினைத்தபோது மேலே கழுகு பறப்பதைப் பார்த்துவிட்டது.பறக்காவிட்டால் வேடன் அம்பை விட்டுக் கொன்று விடுவான். பறந்து சென்றால் கழுகு கொன்று விடும். இன்று நமக்குச் சாவு நிச்சயம் என்று புறா எண்ணியது. கடைசி முறையாகக் கடவுளை வேண்டிக் கொண்டது. திடீரென்று "ஆஆ..."என்று வேடன் அலறும் சத்தம் கேட்டது. புறா கண்களைத் திறந்து பார்த்தது. தன்னைக் குறி பார்த்த வேடன்தன் கால்களைப்  பிடித்தபடி உட்கார்ந்திருந்தான். அவன் விட்ட அம்பும் குறி தவறி புறாவைப் பிடிக்கப் பறந்து கொண்டிருந்த கழுகின்மேல் பட்டு அதைக் கொன்று விட்டது. சரியான சமயத்தில் வேடனின் காலை எறும்பு  கடித்ததால்தான் அவனது குறி தவறித் தன் உயிரும் காப்பாற்றப் பட்டது. அத்துடன் தன் உயிரைப் பறிக்கக் காத்திருந்த கழுகினால் வந்த  ஆபத்தும் நீங்கியது.
மனதுக்குள் எறும்புக்கு நன்றி சொல்லிக் கொண்டே சந்தோஷமாகப் பறந்து சென்றது அந்தப் புறா. சிறு எறும்புதானே என நினைக்கலாகாது. அதுகூட ஒரு உயிரைக் காக்கமுடியும் என்பதைத தெரிந்து கொள்ள வேண்டும். எனவே யாரையும் எளியர் என்று எண்ணலாகாது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் யாரையும் மதிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
Blog: http://chuttikadhai.blogspot.com

சனி, 7 ஆகஸ்ட், 2010

42nd story.myththunanai viduviththa kadhai.

                                               மைத்துனனை விடுவித்த கதை.
கிருஷ்ண தேவ ராயருக்கு பழங்கள் என்றால் மிகுந்த விருப்பம். ஒரு பெரிய பழத்தொட்டத்தையே பராமரித்து வந்தார். அந்தத் தோட்டத்துப் பழங்களை மிகவும் விரும்பிச் சாப்பிட்டு வந்தார். அந்தத் தோட்டத்தைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தார் .மாம்பழம், அன்னாசி, பப்பாளி,கொய்யா எனப் பலவகைப் பழ மரங்களை  அந்தத் தோட்டத்தில் வளர்த்து வந்தார் .எப்போதும் அத்தோட்டத்தில் பழங்கள் பழுத்துத் தொங்கிக்கொண்டே இருக்கும்.ஒரு நாள் தோட்டக்காரன் தோட்டத்தில் பழுத்த பழங்களைக் கொண்டு வந்து ராயர் முன் வைத்தான். அப்போது தெனாலிராமன் மன்னருடன்உரையாடிக்கொண்டு இருந்தான். எனவே அப்பழங்களில் சிலவற்றை மன்னர் ராமனுக்கும் கொடுத்தார். அவற்றை ராமன் தன் வீட்டுக்கு எடுத்து வந்து தன் மனைவியிடம் கொடுத்தான். அந்த சமயம் ராமனின் மைத்துனன் ஊரிலிருந்து வந்திருந்தான். அவனுக்கும் சில பழங்களை ராமன் சாப்பிடக் கொடுத்தான்.
ராமனின் மைத்துனன் பெயர் மல்லையா. அவன் ராமன் கொடுத்த பழங்களைச் சாப்பிட்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தான்.
ராமனிடம் அவன் "அத்தான், இதுபோன்ற ருசி மிகுந்த பழங்களை நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை. ஏது இந்தப் பழங்கள்?" என்று விசாரித்தான்.
"இது நமது அரசருக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்து பறித்த பழங்கள். மன்னர் இவற்றை மிகவும் கவனமாகப் பாதுகாக்கிறார்.  இன்று நீ செய்த அதிருஷ்டம் எனக்குக் கிடைத்த பழங்களை உண்ணும் பேறு பெற்றாய்."என்று பதிலளித்தான் ராமன்.
"அத்தான், ஊரில் அப்பா,அம்மா, இன்னும் மற்றவர்களுக்கும் இதைக் கொண்டு போய்க் கொடுத்தால் மிகவும் மகிழ்வார்கள். இன்று இரவு யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் பழங்களைப் பறித்துச் செல்கிறேன்." 
ராமன் பதறினான்."அடப்பாவி! கெடுத்தியே குடியை. அப்படியேதும் செய்து விடாதே. மாட்டிக்கொண்டால் மரண தண்டனை நிச்சயம். பிறகு உன்னை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. நல்லபடியாய் ஊர் போய்ச் சேர்." என்று எச்சரித்தான்.
ஆசை வெட்கமறியாது பயமும் அறியாது என்பதற்கிணங்க மல்லைய்யாவை ஆசை பிடித்துத் தள்ளியது.  இரவு நேரம். அனைவரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். மல்லையா மெதுவாக எழுந்தான். யாரும் அறியா வண்ணம் அரசரின் பழத் தோட்டத்திற்குள் நுழைந்தான். பழங்களைப் பறித்து மூட்டையாகக் கட்டி கொண்டு மெதுவாக நடந்தான். ஆனால் இலைகளின் ஓசையால் காவலர் விழித்துக் கொண்டு மல்லைய்யாவைப  பிடித்துக்  கொண்டு போய் மன்னர் முன் நிறுத்தினர். கையும்  களவுமாகப் பிடிபட்ட மல்லையாவுக்கு மன்னர் மரண தண்டனை விதித்தார். இதையறிந்த ராமனும் அவன் மனைவியும் ஓடிவந்தனர்.
இவர்களைப் பார்த்தவுடன் கிருஷ்ண தேவராயர் "ராமா! நீ உன் மைத்துனனைக் காப்பாற்ற வந்துள்ளாய். ஆனால் நீ சொன்னபடி நான் சத்தியமாகச் செய்யப் போவது இல்லை."என்றார்.
ஒரு நிமிடன் சிந்தித்த ராமன் "தங்கள் சத்தியத்தை கண்டிப்பாகக் காப்பாற்றுவீர்களா அரசே?" என்றான்.
"சத்தியமாக. உன் சொல்படி நான் செய்யவே மாட்டேன்."
"அப்படியானால் என் மைத்துனனை கொன்று விடுங்கள் அரசே!"
கிருஷ்ண தேவராயர் திகைத்தார். ராமன் சொல்வது போல் செய்வது இல்லை என வாக்களித்து  விட்டாரே!  எனவே மல்லைய்யாவை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை மன்னருக்கு. மல்லைய்யாவை விடுதலை செய்தார். தன் சொல்லையே தனக்கு சாதகமாகப பயன்படுத்திக் கொண்ட ராமனின் திறமையைப்  பாராட்டினார் மன்னர்.
ஒருநன்மை ஏற்படுமானால் எந்த ஒரு  சொல்லையோ செயலையோ நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதே உண்மையான அறிவு என்பதை இந்தக் கதையிலிருந்து அறியலாம்.




திங்கள், 2 ஆகஸ்ட், 2010

41st story.

                              அரங்கன் அழைத்த அன்பன்.
வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற தலைநகரம் உறையூர்.சோழ சாம்ராஜ்யத்தின் சிறப்புமிக்க நகரமாகத் திகழ்ந்தது இந்நகரம். இங்கு வாழும் மக்களின் முக்கிய தொழில் விவசாயமே. சோழநாடு சோறுடைத்து என்னும் வாக்கிற்கிணங்க நெல்லும் கரும்பும் ஏராளமாக விளையும் நாடு சோழநாடு. அந்நகரில் ஒருநாள் சூரியன் உதிக்கும் போதே மிகப் பிரகாசமாக உதித்தான். பறவைகள் எல்லாம் உற்சாகமாகப்  பாடின. நன்னிமித்தங்கள் தோன்றின.
அந்நகரில் வாழ்ந்த பாணர் குலத்தில் பிறந்த ஒரு பாணன் நெல் வயலின் பக்கமாக நடந்து சென்றான். திடீரென்று ஒரு குழந்தை அழுகுரல் கேட்டது. நெற்பயிரை விலக்கிப் பார்க்க அங்கே பயிரின் ஊடே ஒரு அழகிய ஆண்  குழந்தை கிடக்கக் கண்டு அதை எடுத்து உச்சி மோந்தான். பிள்ளையில்லாத தனக்கு ஆண்டவனே அளித்த பரிசு என மிக மகிழ்ந்தான். அவன் மனைவியும் தனக்கு அமுதமே கிடைத்தது போல மகிழ்ந்தாள். திருமால் அருளால்கிடைத்த குழந்தை என மிகவும் சீராட்டிப்   பாராட்டி வளர்த்தனர். இவரும் தாம் புகுந்த குலத்துக்கு ஏற்ற யாழ் பாடலில் சிறப்புற்று விளங்கினார். எனவே பாணர் குலத்தார் யாவரும் இவரை பாணர் குலத் தலைவர் என ஏற்றுக் கொண்டனர். இவரின் சிறப்புக் கருதி இவரை திருப்பாணர் என அழைத்தனர்.
திருப்பாணர் திருவரங்கத்துத் திருமாலான திருவரங்கன் மீது மாறாத அன்பு பூண்டிருந்தார். அவர் மீது பாக்கள் பாடவேண்டும் என்ற எண்ணத்தினால் திருவரங்கம் வந்து சேர்ந்தார். இவர் தன்னைத் தாழ்ந்த குலத்தினன் என்று எண்ணிய காரணத்தால் திருவரங்கத்திற்குள் அடியிடாமல் காவிரியாற்றின் தெற்குக் கரையிலேயே நின்று அரங்கனின் திருக்கோயிலின் கோபுரத்தை தரிசித்து வந்தார். 
சிலநாட்கள் கழிந்தன. தினமும் வைகறையில்காவிரிக் கரையில் நின்று "ரங்கா, ரங்கா," என்றழைத்ததோடு கேட்பவர் உள்ளம் குளிரவு ம் இறைவன் மனம் மகிழவும் பக்தியால் உள்ளம் பரவசமடையப் பாடினார். இவ்வாறு தினமும் இவரது சேவை தொடர்ந்து நடந்தது.
ஒருநாள் வைகறை நேரம் திருப்பாணர் கையில் யாழ்மீட்டிக்கொண்டு இறைவனைக் குறித்துப் பாடிக் கொண்டு இருந்தார். அப்போது உலோகசாரங்க முனிவர் காவிரியில் நீராடித் திருமண் அணிந்து துளசி மாலையும் தாமரைமணி மாலையும் அணிந்து கொண்டு கையில் பொற்குடத்தை ஏந்திக் கொண்டு அங்கு வந்தார். திருவரங்கன் திருவாராதனம் செய்யும் பொருட்டு காவிரியில் நீர் கொண்டு போக அவ்விடம் வந்தவர் திருப்பாணர் தன்னை மறந்து பாடிக்கொண்டு இருப்பதைப் பார்த்து அவரை "ஏய்! தூர விலகிப் போ" என்று கூக்குரலிட்டார். உலகையே மறந்து இறைவனைப் பற்றிப் பாடிக்கொண்டிருந்த திருப்பாணனின்  காதில் இவரது கூக்குரல் விழவில்லை. அதனால் இவரைத் தூர விலக்குவதற்காக உலோகசாரங்கர் ஒரு சிறு கல்லை எடுத்து இவர் மீது வீசினார். அது பாணரின் நெற்றியில் பட்டது. தெளிவு பெற்ற பாணர் தன் எதிரே முனிவர் நிற்பதைப் பார்த்து உடல் நடுங்க கரம் குவித்து அவ்விடம் விட்டகன்றார்.
பின்னர் முனிவர் பொற்குடத்தில் நீர் முகந்து கொண்டு கோவிலுக்கு வந்தார். அரங்கனுக்கு அந்நீரை அபிஷேகம் செய்யும் பொருட்டு அருகில் சென்றார். அருகே சென்றவர் திடுக்கிட்டார். அரங்கநாதனின் நெற்றியிலிருந்து ரத்தம் பெருகி வந்துகொண்டிருந்தது. இச்செய்தி மன்னருக்கும் தெரிவிக்கப் பட்டது. உடனே மன்னன் மந்திரி பிரபுக்கள் புடைசூழ அங்குவந்து  சேர்ந்தான். இறைவனின் நெற்றியிலிருந்து குருதி பெருகக் காரணம் அறியாது அதைப் போக்கவும் வழியறியாது அனைவரும் திகைத்தனர்.
மன்னனோ "இறைவா! அரங்கப் பெருமானே அடியேனோ என்நாட்டு மக்களோ அறியாது ஏதேனும் பிழை செய்திருந்தால் பொறுத்து அருளவேண்டுகிறேன்.இக்குறை தீர வழிஎதேனும் காட்டியருள வேண்டும்" என்று வேண்டிக் கொண்டான்..
அனைவரும் கவலையுடன் சென்றனர்.
இறைவன் திருப்பாணருக்கு அருள் செய்ய எண்ணம் கொண்டான் . அத்துடன் அவரது அன்பையும் பெருமையையும் உலகுக்கு உணர்த்த வும் முடிவு செய்தான். இறைவனின் திருவருள் பெற அன்பே முதன்மையானது என்பதை உலகத்தார் அறியச் செய்ய வேண்டும் என்று திருவுளம் கொண்டான்.
அன்று இரவு உலோகசாரங்க முனிவரின் கனவில் தோன்றிய இறைவன் "எனது அன்பனாகிய திருப்பாணனை அவன் இழிந்தவன் என எண்ணாமல் அவனை உன் தோள் மீது தூக்கி எம்முன் கொணர்க" எனக் கட்டளையிட்டான்.
இக்கனவை எண்ணி வியப்படைந்த உலோகசாரங்க முனிவர் இறைவன் கட்டளைப் படியே திருப்பாணனின் இருப்பிடம் சென்றார். பல அன்பர்கள் புடைசூழ முனிவர் வருவதைக் கண்டு திகைத்தான் பாணன். அவரை நெருங்கிய முனிவர் தன் தலைமேல் கரங்குவித்துஅவரை வணங்கி  இறைவனின் கட்டளையைக் கூறித் தன் தோள் மீது அமருமாறு வேண்டிக்கொண்டார்.ஆனால் பாணன் மறுத்தான். இழிந்த குலத்தவன் இறைவனின் கோயிலின் உள்ளே வருவது தகாது. அத்துடன் உம்மைத் தீண்டுவதும் தகாது. உம தோள் மீது ஏறுவதா! அபசாரம் என்று மறுத்தான்.ஆனால் முனிவர் அரங்கனின் கட்டளைக்குக் கீழ்ப் படிதலே அடியார்க்குக் கடன் என்பதை எடுத்துக் கூறி திருப்பாணனை சம்மதிக்கவைத்தார்.
உலோகசாரங்க முனிவர் பாணரைத் தன் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு இறைவன் முன் நிறுத்தினார். திருவரங்கன் சன்னதியில் நின்ற திருப் பாணன் அவனது அழகிய கோலத்தைப் பாடல்களாகப் புனைந்தான். மக்கள் அனைவரும் திருப்பாணாழ்வார் வாழ்க என்று வாழ்த்தினர்.
மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே இறைவனின் திருவடியை  வணங்கி அதிலேயே மறைந்து பேரின்ப நிலையை அடைந்தார்.
திருப்பாணாழ்வார்.
உலோகசாரங்க முனிவர் மனதுக்குள் அழுதார். வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கு சேவை செய்து வந்த தனக்கு நற்கதி கிட்டவில்லையே என ஏங்கினார்." உயர்ந்த குலத்தொன் என்ற எண்ணம் சிறிதும் இன்றிதிருப்பாணரைத தூக்கிக் கொண்டு வந்தமையால் உன் அன்பு உள்ளம் புரிகிறது. அதனால் உன்னையும் ஆட்கொண்டோம்" என்று அவருக்கும் பேரின்ப நிலையை அருளினார் இறைவன்.
இறைவன் அன்புருவானவன் அன்பு எங்கிருக்கிறதோ அங்கு இறைவன் இருப்பான். உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பது இறைவன் முன் கிடையாது.
அன்பே சிவம். அன்பே ஹரி. அன்பே சக்தி.என்ற உண்மையை வளரும் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.
திருப்பாணாழ்வார் வரலாற்றிலிருந்து இந்த உண்மை நமக்குப் புரிகிறதன்றோ!