சனி, 9 ஏப்ரல், 2016

குறள் வழிக்கதைகள்---தெய்வமே துணை.

 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
 நெறி நின்றார் நீடு வாழ்வார் 

                     ஒரு கிராமத்தில் மணிவண்ணன் என்று ஒருவர் இருந்தார்.அவர் எப்போதும் இறைவனைப் பற்றியே எண்ணிக் கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார்.எப்போதும் இறைவன் நாமத்தை உச்சரித்துக் கொண்டும் கோவில்களுக்குப்  போய்க் கொண்டுமஇருப்பார்.யாரிடமும் இறைவனைப் பற்றியே பேசிக்கொண்டும் இருப்பார். 
              இவரது பக்தியைக் கண்டு புகழ்பவர்களும் உண்டு. பரிகசிப்பவர்களும் உண்டு.சிலர் இவரை வேஷதாரி என்றும் சொல்வதுண்டு. .மணிவண்ணரோ இது எதையும் காதில் போட்டுக் கொள்ளாது தன்  கடன் பணி  செய்து  கிடப்பதே என்று வாழ்ந்து வந்தார். ஒருநாள்  மணிவண்ணர் வழக்கம்போல் ஊர் எல்லையில் இருந்த பிள்ளையார் கோவிலுக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்குப் முன்னால் கோவிந்தன் சென்று கொண்டிருந்தான்.  .மணிவண்ணரும் கோவிலுக்குப் போய்விட்டு இறைவன் நினைவாகவே வந்து கொண்டிருந்தார்.
 கோவிந்தனுக்கு மணிவண்ணர்  ஒரு வேஷதாரி என்று எண்ணம்.இவருக்கு ஏதேனும்   துன்பம் நேர்ந்தால் அப்போதும் ஆண்டவனை நினைக்கிறாரா பார்ப்போம் என எண்ணி அவரை எப்படி சோதிப்பது என்று யோசித்தான்.அவன் அதிர்ஷ்டம் ஒரு சிறுவன் வாழைப் பழம் சாப்பிட்டுக் கொண்டு நின்றிருந்தான் அவன் கையிலிருந்த வாழைப்பழத் தோலை  தம்பி அந்தத் தோலை  பசுவுக்குப் போடுகிறேன் கொடு என்று கேட்டு வாங்கிக் கொண்டான்.பின்னர் சற்றுத் தொலைவு சென்று மணிவண்ணர் வரும் வழியில் அதைப் போட்டுவிட்டு மறைந்து நின்று கொண்டான்.அதே வழியில் நடந்து வந்துகொண்டிருந்த மணிவண்ணர்  கண்களில்  வாழைப்பழத் தோல் பட்டுவிட்டது. கண்ணில் பட்ட அந்தத் தோலை த் தாண்டிச் செல்லாமல் அங்கேயே நின்று' யாராவது வழுக்கிவிழுந்துவிடப் போகிறார்களே முருகா' என்றவாறே எடுத்து கொண்டு நடந்தார்.சற்றுத் தொலைவு சென்றபின் பசுமாடுகள் மேய்ச்சலுக்குப் போய்விட்டு வந்து கொண்டிருந்தன.ஒரு பசுவின் வாயில் அந்தத் தோலை கொடுத்துவிட்டு அதை வணங்கிவிட்டு நடந்தார்.
இதைப் பார்த்தபோதும் கோவிந்தனுக்குப் பொறாமை அடங்கவில்லை. என்ன நல்ல பக்திமான் வேஷம் என்று எண்ணிக் கொண்டான். ம்ம்.. அடுத்தமுறை எப்படியும் மாட்டிவைக்கிறேன் என்றுசொல்லிக்கொண்டான்.
சில நாட்கள் சென்றன.அன்றும் வழக்கம்போல் கோவிலுக்குப் போய்விட்டு வந்துகொண்டிருந்தார் மணிவண்ணர். தன்னையொத்த இளைஞர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த கோவிந்தனுக்கு மணிவண்ணர வருவதைப் பார்த்ததும் மூளை சுறுசுறுப் படைந்தது நண்பர்களிடம் ஆலோசித்தான்.அவனைப் போன்ற சிலர் கோவிந்தனை ஆமோதித்தனர்.ஆனால் சிவகுரு மட்டும் இதைத் தவறு என்று வாதாடினான்.
அவனிடம் இதெல்லாம் ஒரு விளையாட்டுக்குத் தானே என்று சமாதானம் செய்தான் கோவிந்தன்.ஆனாலும் சிவகுரு இந்த விஷப் பரீட்சைக்கு ஒப்புக் கொள்ளாமல் சென்று விட்டான். மற்றவர்கள் அங்கேயே நின்று அடுத்த சோதனைக்குத் திட்டம் தீட்டினர்.அந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஒரு நாள் குறித்தனர்.
அந்த குறிப்பிட்ட நாளும் வந்தது.அன்று அமாவாசை தினம்.நல்ல இருட்டு.நடுஇரவு. ஒரு பயங்கரமான பேய் உருவம் மணிவண்ணரின் முன் வந்து நின்றது.அத்துடன் பயங்கர சத்தமும் கொடுத்தது.பெரும் பயங்கர சத்தம் கேட்டுக் கண் முழித்தவர் தன முன்னே பயங்கரப் பேய் நிற்பதைக் கண்டார்.ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டார்..முருகா முருகா எனக் கூவியவர் கந்த சஷ்டிக் கவசத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.சற்று நேரம் பேயாட்டமாடிக் கொண்டிருந்த பேயே களை,த்துவிட்டது. சற்றுநேரம் அமைதியாக நின்றது.
அப்போது இறைவன் அருளால் பயம் தெளிந்த மணிவண்ணர் பேயைப் பார்த்து "என்ன பாவத்தாலோ உனக்குப் பேயுருவம் வந்துவிட்டது போ போய் கோவிலின் முன்னே   நின்று வரும் பக்தர்களை தரிசித்துக் கொண்டிரு உனக்கு நல்ல மோட்சம் கிட்டும் போ. என்னிடம் வந்து என்ன பிரயோசனம்?"என்றார் கனிவோடு.
பேயுருக் கொண்ட கோவிந்தனுக்குத் தலை சுற்றியது. சற்று நேரத்தில் மணிவண்ணர் கோவிந்தா, கோவிந்தா என்று ஜபிக்கத் தொடங்கவே கோவிந்தன் அவரை ஒன்றும் செய்ய இயலாமல் அங்கிருந்து மறைந்தான்.வெளியே வந்து தன நண்பனிடம் ச்சே, இந்தமுறையும் இவரை  எதுவும் செய்ய முடியவில்லையே என்று வருந்தினான்.
அவர்கள் வேறு திட்டம் தீட்டியவாறே அங்கிருந்து அகன்றனர்.
மறுநாள் காலை கோவில் வாசலில் நண்பர்களுடன் நின்றிருந்த கோவிந்தனைக் கண்ட மணிவண்ணர் அருகே வந்தார். இவர் என் நம்மிடம் வருகிறார் எனப் புரியாமல் அவரைப் பார்த்தான் கோவிந்தன்.அருகே வந்தவர் புன்னகை புரிந்தவாறே "நான் சொன்னவாறே கோயில் முன்னின்று வரும் பக்தர்களைத் தரிசிக்கத் தொடங்கிவிட்டாயா ரொம்ப நல்லது."என்றதும் கோவிந்தனுடன் சேர்ந்து அவன் நண்பர்களும் திடுக்கிட்டனர். "கோவிந்தா, நேற்று இரவே நீதான் என்று கண்டு பிடித்துவிட்டேன்.அதனால்தான் முருகா முருகா என்று எப்போதும் கூப்பிடும் நான் கோவிந்தா கோவிந்தா என்று கூவினேன்." என்றபடி சிரித்தார்.
அவமானத்தில் தலை குனிந்தபடியே வேகமாக அங்கிருந்து அகன்றான் கோவிந்தன்.
ஆனாலும் அவன் மனதுள் மணிவண்ணரைப் பற்றிய எண்ணம் மாறவேயில்லை. எப்படியும் இவர் முகத்திரையைக் கிழித்தே தீருவேன் என மனதுக்குள் முடிவு செய்து கொண்டான்.

                                                                      (தொடரும்)







ருக்மணி சேஷசாயி
.Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

மந்த்ராலய மகான் --- 14

             எந்த எல்லையும் இல்லாதவரான ஸ்ரீ ராகவேந்திரர் புன்னகையோடு நவாபுக்கு பதிலளித்தார்.
"என் பிருந்தாவனத்தின் கர்ப்பகிரகத்தின் மேல் ஒரு சிறிய கோபுரம் அமைக்கச் சொல்லியிருக்கிறேன்.
அதிலும் நான் பிரசன்னமாகியிருப்பேன்.அதைத் தரிசித்தாலே என்னைத் தரிசித்தது போலத்தான்."என்ற போது 
நவாப் மகிழ்ச்சியுடன் நன்றி கூறி பிரசாதம் பெற்றுக் கொண்டு வணங்கிச் சென்றார்.
இப்போது அனைத்துப் பணிகளும் முடிவுற்று பிரவேசம் செய்ய வேண்டியது தான் பாக்கி.
                  ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசம் செய்யப் போகிறார் என்ற செய்தி காட்டுத் தீ போல எல்லா இடங்களுக்கும் பரவ பல பாகங்களிலிருந்தும் மக்கள் மாஞ்சால கிராமம் நோக்கி திரள் திரளாக வர ஆரம்பித்தனர்.
கி.பி.1671 விரோதிகிருது வருஷம் சிராவண மாதம் கிருஷ்ண பக்ஷம் துவிதீயை திதி வியாழக்கிழமை. அதிகாலை நேரம் அந்த அதிகாலை நேரத்தில் துங்கபத்திரையில் வெள்ளமா மக்கள் வெள்ளமா என திகைக்கும் அளவிற்கு மக்கள் நிறைந்திருந்தனர்.
          எல்லார் மனத்திலும் துக்கம்.யார் முகத்திலும் மகிழ்ச்சியில்லை.நம் கண்முன் நடமாடிக்கொண்டிருக்கும் கலியுகத் தெய்வம் காமதேனு கற்பகவிருட்சம் குணக்குன்று வைதீக சிரோன்மணி நம் கண்களை விட்டு மறையப் போகிறார்.நம்மை விட்டுப் பிரியப் போகிறார் என்ற செய்தி அனைவர் கண்களிலும் நீரை நிரப்பியிருந்தது.ஸ்ரீ ராகவேந்திரரையே மக்கள் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.திவ்யமான ஸ்ரீ மூலராமரின் பூஜையை முடித்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார் ராகவேந்திரர்.பின்னர் எழுந்து நடந்தார் பிருந்த மந்திரம் நோக்கி.மக்களெல்லாம் ராகவேந்திரா, குருவே எனக் கூவிய வண்ணம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
           சுவாமிகள் பிருந்தாவனத்தின் முன் அமர்ந்து கொண்டார்.அவர் எதிரே கமண்டலம் துளசிமாலை பிரம்மதண்டம் வைக்கப் பட்டிருந்தன.மக்களை நோக்கித் திரும்பி அனைவரையும் அன்புடன் பார்த்தார்.
"நான் 700 ஆண்டுகள் இந்த இருந்தாவனத்தில் ஜீவனோடு வாழப் போகிறேன்.என்னை நாடி வருவோருக்கு அவர்கள் துன்பத்தைப் போக்குவேன்.நீங்கள் அன்பும் பக்தியும் நல்ல பண்புகளும்  கொண்டு வாழ வேண்டும்.
 ஸ்ரீஹரி உங்களுக்கு நன்மையே செய்வார்.என்று கூறியவர் இறைவனைப் பார்த்து தன குற்றங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டிக்கொண்டார்.
பின்னர் மக்களிடம் யாரும் சோகமாக இருக்கக் கூடாது. தான் பிருந்தாவனப் பிரவேசமான இந்த நாளை சந்தோஷமாக சமாராதனை போல் வயிறார போஜனம் செய்து கொண்டாட வேண்டும் என்று கூறினார்.பின்னர் வெங்கண்ணா வை அழைத்து தனது பிரவேசம் முடிந்தபிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாகக் கூற கண்ணீரோடு அதைக் கேட்டுக் கொண்டார் வெங்கண்ணா.பின் அருகிருந்த சீடரைத் தம் வீணையைக் கொணருமாறு பணித்தார்.அந்த வாத்தியத்தை சுருதி மீட்டிப் பாடத் தொடங்கினார்.            

அவர் பாடிய ஒரே பாடல்
 "இந்து எனகே கோவிந்தா நின்ன பாதாரவிந்தவ தோரோமுகுந்தா "என்பதுதான்.இறைவனிடம் உன்பாத தரிசனத்தைக் கொடு.  நந்தகோபன் மகனே திருமகளின் மணாளனே கோவிந்தா கோகுலத்தின் ஆனந்தமாய்த் திகழ்ந்தவனே.
 
உலகப் பற்றுகளில்  மூழ்கி நல்வழி அறியாமல் இவ்வுலகில் வாழ்ந்துவிட்டேன்.பாலகன் இவன் என்று என் குற்றங்களை எண்ணாமல் என் தந்தையே என்னைக் காப்பாய் 
மூடனாக இருந்து அற்ப ஜீவனான நான்  ஆழ்ந்த பக்தி செய்யவில்லை உன்னைக் காண எங்கும் வரவில்லை.உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடவுமில்லை.அருள்புரியும் கண்ணா உன்னை வேண்டிக் கொள்கிறேன். காப்பாயாக.
இந்தத் தரணியில் பூவுலகிற்குப் பாரமாக வாழ்ந்ததோடு சரியில்லாத வழிகளில் நடந்தேன் யாரும் என்னைக் காப்பவரில்என்று பொருள் படும் கன்னடப் பாடலைப் லை.உன்னையே நம்பிச் சேர்ந்துவிட்டேன். அய்யனே வேணு கோபாலா கைகொடுத்துக் காப்பாய் ஸ்ரீ ஹரியே "என்னும் பொருள் பொதிந்த கன்னடத்தில் அமைந்த 
இந்தப் பாடலை மனமுருகப் பாட அனைவர் கண்களிலும் நீர். இறைவனிடம் நாம் எப்படி வேண்டிக் கொள்ளவேண்டும் என்பதையே பாடிக் காட்டிவிட்டார் சுவாமிகள்.அதே சமயம் பூஜையில் இருந்த சந்தான கோபாலன் நர்த்தனமாடியதை அனைவரும் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர்.
                       வேதபாராயணம் பிராம்மணோத்தமர்களால் நடைபெற்றுக் கொண்டிருக்க ஸ்ரீஸ்வாமிகள் ஸ்தோத்திரம் சொல்லியவாறே நடந்தார்.மேள  தாள வாத்தியங்கள் முழங்க பிருந்தாவனத்தின் அருகில் சென்று நின்றார். மக்களை அன்புடன் நோக்கி ஆசீர்வதித்தார்.
சிஷ்யர்களை பிருந்தாவனத்திற்கு பூஜை செய்யச் சொன்னார்.பின்னர் பிரம்மதண்டத்தையும்  துளசி மாலையையும் வலது கையிலும் கமண்டலத்தை இடது கையிலும் எடுத்துக் கொண்டு நடந்தார்.
ஓம் நமோ நாராயணாய என்று எங்கும் குரல்கள் ஒலித்தன.மீண்டும் மக்களை நோக்கி ஆசீர்வதித்துவிட்டு பிருந்தாவனத்தை நோக்கி நடந்தார். அருகே நின்ற யோகீந்திரரின் உதவியுடன் ப்ருந்தாவனத்துள் பிரவேசித்து யோகமுத்திரையுடன் பத்மாசனமிட்டு அமர்ந்தார்.அவரது வலது கையில் துளசி மாலை ஜபம் செய்தபடி உருட்டிக் கொண்டிருதார்.பக்தர்கள் அனைவரும் அந்தத் துளசிமாலையைப் பார்த்தபடி ஓம் நமோ நாராயணாயா  என்று உரத்த குரலில் கூறியபடியே கண்களில் நீர் சொரிய நின்றிருந்தனர்.

சற்று நேரத்தில் சுவாமிகள் கையிலிருந்த துளசிமாலை அசைவற்று நின்று விட்டது. அதைக் கண்ட வெங்கண்ணா சுறுசுறுப்பானார்.
ஸ்ரீராகவேந்திரர் கூறியிருந்தபடி 1200 சாலிக்ராம கற்களால் பிருந்தாவனம் நிரப்பப்பட்டு மாதாவரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட  விசேஷமான கல்லினால் பிருந்தாவனம் மூடப்பட்டது.வெங்கண்ணா   விக்கி விக்கி அழுதார்.சீடர்களும் அழுதார்கள்.ம்ரித்திகை என்று சொல்லப்படும் மண்ணை பிருந்தாவனத்தின் மேல் பரப்பினார்கள்.ஸ்ரீயோகீந்திரர் தீபாராதனை காட்டினார். அனைவரும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர்.

ஸ்ரீயோகீந்திரர்  ஸ்ரீகுருகளின் விருப்பப் படியே பிருந்தாவனத்துக்கு எதிரே ஆஞ்சநேயரைப் பிரதிஷ்டை செய்தார்.
ஸ்ரீராகவேந்திரரின் முக்கிய சீடர்களில் ஒருவர் அப்பண்ணாச்சார் இவரைப் பற்றிச் சொல்லாமல் ராகவேந்திர சரிதம் முற்றுப் பெறாது.ஏனெனில் இன்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் ராகவேந்திர ஸ்தோத்திரத்தை இயற்றியவரே இவர்தான்.
துங்கபத்திரா நதியின் மறுகரையில் இருக்கும் பிக்ஷாலையா என்னும் கிராமத்திற்கு மடத்து வேலையாக இவரை அனுப்பியிருந்தார் சுவாமிகள்.பிருந்தாவனப் பிரவேசத்திற்குள் வந்துவிடலாமென எண்ணியிருந்தார் அப்பண்ணா.ஆனால் வேலை முடிய சற்று காலதாமதமாகிவிட்டது. அன்று காலை வேகவேகமாக ஓடிவந்தார் மாஞ்சாலம்  நோக்கி.துங்கபத்திரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது அதைக் கடக்க இயலாமல் கலக்கத்துடன் நின்றார்."ஹே ராகவேந்திரா, கடைசியாக உம்மைக் கண்ணாரக் காணும் பாக்கியம் இந்த அடியேனுக்குக் கிடைக்காதா " என்று தேம்பித் தேம்பி அழுதபடி நின்றார்.பின்னர் துணிந்து ஆற்றில் இறங்கினார்.அவரின் வாய் ராகவேந்திரரின் மகிமையை "ஸ்ரீபூர்ண போத குருதீர்த்த "என்று பாடிக்கொண்டே இருக்க துங்கபத்திரையைக் கடந்து விட்டார்.இவரது பக்தியிலும் பாடல் சிறப்பிலும் கட்டுண்ட துங்கபத்திரையே இவருக்கு வழிவிட்டாள்  எனலாம் 

மாஞ்சாலத்தை அடைந்து ராகவேந்திரர் ஜீவசமாதியாகிவிட்ட பிருந்தாவனத்தின் முன் வீழ்ந்து கதறினார்.
அதனால் இவரது ராகவேந்திர  ஸ்தோத்திரத்தின் கடைசி அடிகள் முடிக்கப்படாமல் அப்படியே நின்றிருந்தது.
அதை பிருந்தாவனத்தின் உள்ளிருந்து "சாக்ஷி ஹயா ஸ்தோத்ரஹி" என்ற ஸ்ரீராகவேந்திரரின் குரல் முடித்து வைத்தது.
அப்பண்ணா ச்சாரியார் இயற்றிய ராகவேந்திர   ஸ் தோத்திரத்தின் 31வது ஸ்லோகத்தின் கடைசி வரிகள்  ராகவேந்திரரின் வாய்மொழியாக பிருந்தாவனத்தின் உள்ளிருந்து வந்தவையே.பின்னர் 
                               பூஜ்யாய ராகவேந்திராய சத்யா தர்ம ரதாயச    
                                பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே."
என்ற ஸ்லோகத்தையும் இயற்றினார் அப்பண்ணா. இவ்விரு வரிகளைக் கூறி ஸ்ரீராகவேந்திரரை எங்கிருந்து நினைத்தாலும் அருள் புரியும் கலியுக கற்பகவிருக்ஷம் நம் ராகவேந்திரர்.அவரை வணங்கி என்றும் நன்மைகளை அடைவோமாக.

                        "ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ."  



--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

சனி, 20 பிப்ரவரி, 2016

மந்த்ராலய மகான் --13

         சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசம் செய்யத் தக்க இடத்தில் ஒரு பள்ளம்  தோண்டிப் பார்க்கச் சொன்னதும் வெங்கண்ணா திகைத்து நின்றார்.அவரைப் புன்னகையுடன் பார்த்த சுவாமிகள் "வெங்கண்ணா இந்த இடத்தை நான் ஏன்  தேர்ந்தெடுத்தேன் என நினைக்கிறாயா?இதுதான் நான் சென்ற பிறவியில் பிரஹ்லாத ராஜராக இருந்த போது யாகம் செய்த இடம்.இங்குதான் எனக்கான பிருந்தாவனம் அமையவேண்டும்" என்றார். 

      சுவாமிகள் சொன்ன இடத்தைத் தோண்டியபோது ஆறடி ஆழத்தில் ஒரு பீடம் இருக்கக்கண்டார்.கண்டு திகைத்தார் "வெங்கண்ணா.இதேஇடத்தில் எனக்கு பிருந்தாவனம் தயாராக வேண்டும்" என கட்டளை பிறப்பித்தார் சுவாமிகள்.
"அருகே மாதாவரம் எனும் கிராமத்திலிருந்து நான் குறிப்பிட்டபடி இருக்கும் கல்லையே  பயன்படுத்த வேண்டும்"என்றபோது சற்றே சிந்தனை வடிவானார் வெங்கண்ணா.
"எந்தக் கல்லின்மீது அமர்ந்து ஸ்ரீராமன் விஸ்ராந்தி செய்து கொண்டானோ அந்தக் கல்லா"ல்தான் எனக்கு பிருந்தாவனம் அமையவேண்டும்"குருகளின் இந்த வார்த்தையைக் கேட்ட வெங்கண்ணா அவர் விருப்பப்படி குறிப்பிட்ட கல்லைக் கொண்டுவந்து சேர்த்தார். ஸ்ரீ ராகவேந்திரர்  கூறிய படியே எங்கெங்கு என்னென்ன உருவங்கள் இருக்கவேண்டும் என்பதைக்  கவனமாக கேட்டுக் கொண்டு அதேபோல் செய்தி முடித்தார் வெங்கண்ணா. 
 மாஞ்சாலம்மனின்  விருப்பத்திற்காக பிருந்தாவனத்துக்கு எதிரில் ஆட்டுத்தலை உருவங்களையும் ஆஞ்சநேயர் விக்ரகம் பிருந்தாவனத்துக்கு  எதிரிலும் இருக்கும்படி அமைத்தார். பின பிருந்தாவனத்தை நிரப்ப 1200 லக்ஷ்மி நாராயண சாலிக்ராமங்களையும்  கொண்டு வந்து சேர்த்தார்.
               அன்று பிருந்தாவன வேலைகளைப் பார்க்க திவான் வெங்கண்ணா வுடன்  நவாப் சித்தி மசூத்கானும் மாஞ்சால கிராமத்துக்கு வருகை தந்தார். துங்கபத்திரையின் அழகையும் அங்கு  நடைபெறும் கட்டிட வேலைகளையும் பார்த்தார். ஸ்ரீ ராகவேந்திரரைப் பார்த்து மண்டியிட்டு வணங்கினார்.அவரை அன்புடன் பார்த்த சுவாமிகள் நலம் விசாரித்தார்.
"நீயும் உன் நாட்டு மக்களும் நலமா?"
"நலமே சுவாமி. தாங்கள் இங்கு வந்தபின் என் நாடு மிகுந்த சுபிட்சமாக இருக்கிறது சுவாமி."
"எல்லாம் அந்த மூலராமரின் அருள்தான்"

"சுவாமி, தாங்கள் பிருந்தாவனப் பிரவேசம் செய்தபின் தங்களைப் பார்க்க இயலாதேஎன கலங்கி நிற்கிறேன்."
நாங்கள் எப்படி ஒரு ஹிந்து கோவிலுக்குள் வர இயலும் ?"மிகுந்த விசனத்தோடு கேட்டார் நவாப்.

"நவாப் என்னை எப்போது நினைத்தாலும் நான் அருள்புரிவேன்.அன்பும் பக்தியும் போதும்.நமக்குள் பேதமில்லை.எனக்கு இந்த கிராமத்தை ஒரு நவாபான நீகொடுத்துதுள்ளாய்.ஜகத்குரு என்ற பட்டத்தையும் அரச 

சின்னமான வெண்கொற்றக் குடையையும் அடில்ஷா தானே கொடுத்துள்ளார். மேலும் ஏராளமான நிலங்களையும் முகமதியர்கள் தானே எனக்குத் தானமாக வழங்கியுள்ளனர்.எனவே  நான் அனைவ்ருக்கும் பொதுவானவன. எந்த எல்லையும் எனக்கு இல்லை.








ருக்மணி சேஷசாயி 




Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

திங்கள், 8 பிப்ரவரி, 2016

மந்த்ராலய மகான் --12

                 வெங்கண்ணா கூறக்கேட்ட சுவாமிகள் ஒரு கணம் கண்களை மூடி ஸ்ரீ மூலராமரை மனதுக்குள் தியானித்தார்.
"ஹே மூலராமா, இதுவும் உன் விளையாட்டா? நான் பிருந்தாவனப் பிரவேசம் செய்யும் நாள் நெருங்கிக் கொண்டிருப்பதால் இப்படியெல்லாம் நிகழ்த்துகிறாயா?"

அருகே பணிவுடன் நின்றிருக்கும் திவானை சிந்தனையுடன்  பார்த்தார்.

"எனக்கு என்ன தானமாகக் கொடுப்பதாக எண்ணியுள்ளார் உங்கள் நவாப்?"

"சுவாமி, செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாக ஒருசில கிராமங்களைத் தரச் சித்தமாக உள்ளார். . அதைத் தாங்கள் ஏற்கவேண்டும்" 
"சரி எந்த கிராமத்தைத் தருவதாக இருக்கிறார் ?"
"சுவாமி, வளம் கொழிக்கும் எந்த கிராமமாக இருந்தாலும் தர  ஆணையிட்டிருக்கிறார்."
"நான் கேட்கும் கிராமத்தைத் தருவாயா?""
"அது என் பாக்கியம் சுவாமி."
"நல்லது. துங்கபத்திரா  நதிக் கரையிலுள்ள மாஞ்சால கிராமத்தையே நான் பெற
விரும்புகிறேன்."
"சுவாமி, அது பீடபூமிப் பிரதேசம்.வளமற்ற பூமி."
"எனக்கு அந்த மாஞ்சால கிராமம்தான் வேண்டும். சமயம் வரும்போது அதைப் பற்றிக் கூறுகிறேன்."
"சுவாமி, மாஞ்சால கிராமத்தையே  உங்களுக்கு  தானமாக வழங்குகிறேன்."
                            செய்தியைக் கேள்வியுற்ற நவாபும் மனம் மகிழ்ந்தார்.நவாப் உரிமைச் சாசனத்தை எடுத்துக் கொண்டு சுவாமிகளைப் பார்த்து வணங்கி நின்றார்.
"சுவாமி, என் மனம் இன்றுதான் சந்தோஷத்தையும் நிம்மதியையும் அடைந்தது." என்றுகூறி  கண்ணீருடன் உணர்ச்சி வயப்பட்டு நின்றார்.
"மிக்க நன்றி நவாப். தாங்களும் தங்கள் ராஜ்யமும் வளத்துடன் வாழ என் மூலராமன் அருள்புரிவான்."என்று கூறி மந்திராக்ஷதை கொடுத்து ஆசி வழங்கினார்.
இனி மந்த்ராலயத்தில் பிருந்தாவனப் பிரவேசத்திற்குத தயாராகவேண்டும் என்ற நினைவுடன் மாஞ்சால கிராமத்தில் அடியெடுத்து வைத்தார் ஸ்ரீராகவேந்திரர்.
                              அந்த கிராமத்தில் நுழைந்தவுடன் தன்  குலதெய்வமான வெங்கடாசலபதிக்கு ஒரு கோவில் 
அமைத்து பூஜைக்கு ஏற்பாடுகள் செய்தார்.பின்னர் அந்த கிராம தேவதையான மாஞ்சாலம்மனின் அனுமதி 
 பெற .எண்ணினார்.எனவே மாஞ்சாலம்மனை வேண்டினார். அம்பிகையின் அருள் பெற்று அவள் சன்னிதானத்திற்கு அருகிலேயே தன்  பிருந்தாவனம் அமையவேண்டும் என வேண்டிக் கொண்டார்.அத்துடன்  மாஞ்சாலம்மனை தரிசித்த பின்னரே தன்னை தரிசிக்கவேண்டும் என்னும் வழக்கத்தையும் ஏற்படுத்தினார்.
                       தான் பிருந்தாவனஸ்தராவதற்கு முன்னால்  தனது  பூர்வாசிரம அண்ணனான குருராஜாச்சார் என்பவரின் பேரனான வெங்கண்ணாச்சார் என்பவருக்கு அடுத்த பீடாதிபதியாக பட்டாபிஷேகம் செய்வித்து மடத்தின் அதிகாரத்தையும் அளித்தார். அவருக்கு 'யோகீந்திரர்' என்ற சந்நியாச நாமகரணம் செய்தார்.பின்னர் வெங்கண்ணா விடம் தாம் பிருந்தாவனப் பிரவேசம் செய்ய பிருந்தாவனம் ஸ்தாபிக்க  
ஒரு இடத்தைக் காட்டி அங்கு தோண்டச் சொன்னார் சுவாமிகள்.
அங்கு இருந்தது என்ன? அந்த இடத்தை ஏன் சுவாமிகள் தோண்டச் சொன்னார் என்ற விவரத்தை அடுத்த தொடரில் பார்ப்போம்.
             
                                                                 (தொடரும்)






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

மந்த்ராலய மகான் --11

                           ஸ்ரீ ராகவேந்திரர் ஆதோனிக்கு வரப்போகிறார் என்ற செய்தியைக் கேட்ட வெங்கண்ணா அவரை வரவேற்க சகல ஏற்பாடுகளையும் செய்தான் நகரம் விழாக்கோலம் பூண்டது.
ராகவேந்திரருக்குப் பூர்ணகும்ப மரியாதை செய்து அவரை வரவேற்றபின்  அவர் கால்களில் பணிந்து எழுந்தான் வெங்கண்ணா.அவன் கண்களில் நீர் நிறைய 
"தெய்வமே, எத்தனை காலமாயிற்று தங்களைக் காண.என்று அவர் பாதங்களைப் பற்றிக் கொண்டான்.
"திவான் எழுந்திருங்கள்." என்று சுவாமிகள் சொல்லக் கேட்ட வெங்கண்ணா பதறினான். 
"சுவாமி என்னை வெங்கண்ணா என்றே அழையுங்கள்.  மாடு மேய்க்கும் போதுநீங்கள்  பார்த்த அதே வெங்கண்ணா தான் நான்." என்றான் பணிவோடு.
 "வெங்கண்ணா, நீயும் உன் நாட்டுமக்களும் நலமா?"எனப் புன்னகையுடன் கேட்டவாறே அரண்மனைக்கு எழுந்தருளினார் ஸ்ரீ ராகவேந்திரர்."                    
"தங்களின் ஆசியால் அனைவரும் நலமே சுவாமி" எனப் பணிவுடன் பகர்ந்தான் வெங்கண்ணா 

                      ஸ்ரீமூலராமரின் பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.அன்றைய பூஜையில் நவாப் கலந்துகொள்வதாக இருந்ததால் அரண்மனை அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.சற்று நேரத்திற்கெல்லாம் பூஜையை ஆரம்பித்தார் சுவாமிகள்.பூஜை விசேஷமாக நடந்துகொண்டிருந்தது.அப்போது நவாப் அங்கு வந்து சேர்ந்தார். அவர் பின்னே  சிப்பாய்கள் வந்தனர். ஒரு சேவகன் கையில் பெரிய வெள்ளித் தட்டு ஒன்று இருந்தது.பட்டுத்துணி ஒன்று அந்த தட்டிலிருந்த பொருளை மூடியிருந்தது.ஸ்ரீராகவேந்திரருக்கு சலாமிட்ட நவாப் ஆசனத்தில் அமர்ந்தார்.சேவகன் வெள்ளித்தட்டை  ராகவேந்திரர்முன் வைத்தான்.
"சுவாமிகளே, எங்கள் அரசரின் காணிக்கை. இதைத் தங்கள் பூஜைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும்."என்றான் பணிவோடு.
"அப்படியே ஆகட்டும்" புன்னகையுடன் கூறினார் சுவாமிகள்.
                   
                      பூஜை முடிந்து காணிக்கைப் பொருட்களை ஸ்ரீமூலராமருக்கு நிவேதனமாக அர்ப்பணிக்கும் கட்டம் வந்தது.கையிலிருந்த கமண்டல நீரை அந்த காணிக்கைப் பொருட்களின் மீது தெளித்தார் ராகவேந்திரர்.

"நவாப்ஜி, உங்கள் காணிக்கையை என் மூலராமர் ஏற்றுக் கொண்டு விட்டார்."என்றதும் பதறிவிட்டார் நவாப் அவர்கொண்டுவந்தது மாமிசமல்லவா அதையா ஏற்றுக் கொண்டார்? அபசாரம் செய்துவிட்டோமே என்று மனதுக்குள் தவித்தார் நவாப்.வாய்திறந்து எதையும் சொல்லமுடியாமல் தவித்தபடி அமர்ந்திருந்தார்.அப்போது சிஷ்யர் ஒருவர்  காணிக்கைப் பொருளை  மூடியிருந்த பட்டுத்துணியை நீக்கினார்.

"சுவாமிஜி!"என நவாப் அலறிவிட்டார்.ஆம். அவர் கொண்டுவந்திருந்த மாமிசங்கள் எல்லாம் மலர்களாகவும் பழங்களாகவும் மாறியிருந்தன.நவாப் தன கண்களையே நம்ப முடியாமல் கசக்கிக் கொண்டு பார்த்தார்.
துக்கம் தொண்டையை அடைக்க எல்லோரையும் போலவே பிரசாதம் வாங்கிக் கொண்டு அவ்விடம் விட்டு அகன்றார்.

                     நாட்கள் செல்லச் செல்ல நவாப்பின் குற்ற உணர்வு அவரை நிம்மதியில்லாமல் செய்து விட்டது.
வெங்கண்ணா சொல்வது போல் அவர் தெய்வீகப் பிறவியே. நான் செய்த தவறு தெரிந்திருந்தும் அதை வெளியே தெரியாமல் மறைத்ததும் அல்லாமல் அவருக்குத் தக்காற்போல் அதை மாற்றியும் விட்டாரே.இந்தத் தவறுக்கு நான் ஏதேனும் பிராயச்சித்தம் செய்தே ஆகவேண்டும் என முடிவு செய்தார்.
நவாப் வேங்கண்ணாவை அழைத்தார்.
"உங்கள் குரு மிகப்பெரியவர்.மகாஞானி.தெய்வப்பிறவி .அவருக்கு நாம் ஏதேனும் தானம் தர விரும்புகிறோம்."
என்று கூறியபோது மிகவும் மகிழ்ந்தார் வெங்கண்ணா. ராகவேந்திரரை சந்தித்து "எங்கள் நவாப் உங்களை சந்திக்கத் தயங்குகிறார்.அன்றைய பூஜையில் அவர் தவர் செய்து விட்டதை எண்ணி வருந்துகிறார்."என்று சொல்லி வாய்புதைத்து நின்றார்.
"அவர் மதாசாரப்படி காணிக்கை கொடுத்தார் தனக்கு ஏற்றபடி என் மூலராமர் அதை மாற்றிக் கொண்டார்.அவ்வளவுதான் "
குருவின் பேச்சைக் கேட்ட திவான் எப்பேற்பட்ட மகான் என மனதுக்குள் வியந்து வணங்கினார்.பின்னர் நவாபின் விண்ணப்பம் என்று கூறி நின்றார்.
"என்ன?"
"செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக தங்களுக்கு தானம் அளிக்க விரும்புகிறார்.தாங்கள் அருள்கூர்ந்து அதனை ஏற்க வேண்டும் "
ஸ்ரீராகவேந்திரர் ஒருகணம் கண்களை மூடி ஸ்ரீ மூலராமரை தியானித்தார்.

நவாப் அளிக்க முன்வந்த தானம் என்ன அதை சுவாமிகள் ஏற்றுக் கொண்டாரா? என்ற செய்தியை அடுத்த தொடரில் பார்ப்போம்.
                                                                ( தொடரும் )









--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 22 ஜனவரி, 2016

மந்த்ராலய மகான் -10

             சென்ற   யாத்திரையின்போது ஆதோனி சமஸ்தானத்தின் ஒரு கிராமத்தின் அருகே  இவர் பயணித்துக் கொண்டிருக்கையில் மாடு மேய்க்கும் ஒரு சிறுவன் இவரைப் பணிந்து நின்றான்.வெங்கண்ணா என்ற சிறுவன் தாய் தந்தையற்றவன் தன தாய்மாமனால் மாடு மேய்த்துக் கொண்டிருப்பவன் எனவும் கூறி அழுதான்.பிராமணனாக இருந்தும் கல்வி அறிவற்றவனாக இருப்பதாகச் சொல்லி அப்படி இருப்பது தனக்கு மிகவும் துக்கமாக இருப்பதாகவும் சொன்னபோது ராகவேந்திரர் புன்முறுவலுடன் "கலங்காதே, உனக்குத் துன்பம் வரும்போது என்னை ஸ்மரித்துக் கொள் "என்று சொல்லி மந்த்ராக்ஷதை கொடுத்துச் சென்றார்.
              இப்போது அந்த வெங்கண்ணா வாலிபனாக வளர்ந்து தாய்மாமன் மறைவுக்குப் பின் நிலபுலன்களை வைத்து விவசாயம் செய்துவந்தான்.

             ஒருநாள் சுல்தான் பாதுஷாவின் சிற்றரசர்களில் ஒருவனான 'சித்தி மசூத்கான் 'வரிவசூல் செய்யும் பொருட்டு குதிரைமீது ஏறிக்  கொண்டு வெங்கண்ணாவின் கிராமத்துக்குள் வந்தான். வெங்கண்ணாவும் மற்றவர்களும் மரியாதை செலுத்தியபடி ஓரமாக நின்றனர்.அப்போது அவசரமாக நவாபிடம் இருந்து சேவகன் ஒருவன் ஒரு கடிதம் கொண்டு வந்து கொடுத்தான்.அதை யாரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வது என்று சுற்று முற்றும் பார்த்தான்.அவன் கண்களில் வெங்கண்ணா பளிச்செனத் தெரிந்தான்.அவனை  அருகே அழைத்தான். வெங்கண்ணா கைகளைக் குவித்தபடி அருகே வந்தான்.அவனிடம் கடிதத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னான் சித்தி மசூத்கான்.
              
             கடிதத்தைக் கையில் வாங்காமலேயே மறுத்தான் வெங்கண்ணா.
"'ஐயா  எனக்குப் படிக்கத்தெரியாது.நான் பள்ளிக்கே சென்றதில்லை."

"பொய் சொல்லாதே உன் தலையை இப்படியே துண்டாக்கி விடுவேன்."
"அரசே, என்னை நம்புங்கள்.நான் பிரம்மணன்தான்.ஆனாலும் படிபறிவற்றவன்"
"யாரை நம்பச் சொல்கிறாய். சுத்தப் பிராமணனாக இருந்துகொண்டு படிப்பறிவு இல்லையென்று பொய் வேறு சொல்கிறாயா?உன்னை......"என்று பற்களைக் கடித்தபடி  வாளை  உறுவினான். 
 
"ஐயா ,பொறுங்கள் என்ற வெங்கண்ணாவுக்கு ராகவேந்திரர் சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன.

"வெங்கண்ணா, உனக்குத் துன்பம் வரும்போது என்னை நினைத்துக் கொள்."
வெங்கண்ணா அந்தக் கடிதத்தைக் கையில் வாங்கி கைகளைக் குவித்துக் கொண்டு ஸ்ரீ ராகவேந்திரரை    
 ஸ்மரித்தான். .
"ஸ்ரீ ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா " என மனதிற்குள் ஜபித்தான்.
என்ன ஆச்சரியம். திடீரென அந்தக் கடிதத்திலுள்ள எழுத்துக்களெல்லாம் பரிச்சயமானவை போல் தோன்றின.செய்தியை மெதுவாகப் படித்து முடித்தான்.

"சித்தி மசூத்கானின் ராஜ்ஜியம் விரிவு படுத்தப் பட்டுள்ளது.மந்த்ராலயம் உள்ளிட்ட பல கிராமங்களை அத்துடன் இணைத்திருக்கிறோம். ஆதோனி சமஸ்தானத்திற்கு யாரையேனும் திவானாக நியமித்துக் கொள்ளலாம்" எனவும் வெங்கண்ணா படிக்கக் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தான் சித்தி மசூத்கான்.

அத்துடன் நில்லாமல்  அவன் "இந்த ஆதோனி சமஸ்தானத்துக்கு எனக்குப் பிடித்தமானவனான வெங்கண்ணா வையே திவானாக நியமிக்கிறேன் " என்று அறிவித்து வெங்கண்ணா வைத் தன்னுடன்அரண்மனைக்கு  அழைத்துச் சென்று அங்கு  ஆசனத்திலும் அமர்த்தினான்.

வெங்கண்ணா வினால் எதையும் நம்ப முடியவில்லை.குரு ஸ்ரீ ராகவேந்திரரின் நாமத்துக்கு இத்தனை சக்தியா என எண்ணி எண்ணி வியந்ததோடு இதை சித்தி மசூத்கானி டமும்  கூறினான்.
அவரது பெருமையை அறிந்த மசூத்கான் தாமும் அவரைத் தரிசிக்க விரும்புவதாகக் கூறினான்.ஆனால் மனதுக்குள் 'அவரை நான் பார்க்க நேர்ந்தால் நிச்சயம் அவரை பரீட்சை செய்து பார்த்து விடுவேன்'என்று முடிவு செய்து கொண்டான். 
இதிலும் ஒரு மகிமையை எடுத்துக் காட்டினார் ஸ்ரீ ராகவேந்திரர். அதையும் அடுத்து  பார்ப்போம்.


































--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

மந்த்ராலய மகான் -9

            ஸ்ரீ ராகவேந்திரரை  நினைத்த மாத்திரத்தில் அனுக்ரஹம் செய்யும் கருணையுள்ளம் கொண்டவர் அந்த மகான். அவர் தேச சஞ்சாரம்  செய்யத் தொடங்கி கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு  தேவநகரம்  கமலாலயம் 
தரிசித்தார். தெற்கு நோக்கிப் பயணித்து பல ஊர்களைக் கடந்து  உடுப்பி க்ஷேத்ரம் வந்தடைந்தார்.உடுப்பி கிருஷ்ணனின் அழகில்  மெய்மறந்தார். இங்கு தங்கி பல நூல்களுக்கு வியாக்யானங்களும் விரிவுரைகளும் பாஷ்ய உரைநூல்களும் இயற்றினார்.அத்துடன் நியாயமுக்தாவளி
'சந்திரிகா பிரகாசிகா ' என்ற நூல்களையும்  முன்பே எழுதிய 'சுதா பரிமளத்தையும் ' ஸ்ரீ உடுப்பி கிருஷ்ணனுக்குஅர்ப்பணம் செய்தார்.
உடுப்பியில் ஸ்ரீராகவேந்திரர் பொன்னால் ஒரு சந்தானகோபால விக்ரகம் செய்து பூஜை செய்துவந்தார்.
பின் அங்கிருந்து புறப்பட்டு  மைசூரில் சிலகாலம் தங்கியபின் கிரீடகிரி என்னும் ஊர் வந்து சேர்ந்தார்.அந்த ஊரில் வேங் கிடதேசாய் என்பவர் வாழ்ந்து வந்தார்.அன்று அவர் இல்லத்தில் மூலராமர் பூஜையும்  பிக்ஷையும் 
நடத்த ஏற்பாடுகள் நடந்தன.
               சிறப்பாக ப் பூஜை நடக்கும் இடத்தில் தேசாயும் அவர் மனைவியும் பக்தியுடன் அமர்ந்திருந்தனர்.சமையற்கட்டில் சமையல் ஏற்பாடாகிக் கொண்டிருந்தது.தேசாயின் மூன்று வயது மகன் விளையாடிக் கொண்டே சமையற்கட்டுக்குப் போனவன் தடுமாறி பெரிய அண்டாவில் விழுந்தான்.அதில்  மாம்பழ ரசம் நிறைந்திருந்தது. அதில் விழுந்த குழந்தை உயிரிழந்தது.சற்று நேரத்தில் அங்கு வந்த தேசாயின் மனைவி தன மகன் இறந்து மிதப்பது கண்டு பதறினாள் கதறினாள். அங்கு வந்த தேசாய் செய்தியறிந்து துடித்தார்.இருவரும் சேர்ந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தனர். 
.
          அப்போதுதான் மூலராமர் பூஜை முடிந்துள்ளது.அனைவருக்கும் சாப்பாடு போடவேண்டிய நேரம்.வெளியில் விஷயம் தெரிந்தால் யாரும் சாப்பிட மாட்டார்கள் என்ன செய்வது என கையைப் பிசைந்தவர்  ஒரு முடிவுக்கு வந்தவராய் தன மகனின் உடலைத் தூக்கினார் . அங்கிருந்த பெரிய இலைக் கட்டினுள் வைத்து மூடினார் அதை வேறு அறைக்குள் வைத்து மூடிவிட்டு பூஜையில் வந்து நின்று கொண்டனர் 
 
எல்லோருக்கும் தீர்த்தம் வழங்கிய ராகவேந்திரர் தேசாயிடம் உங்கள் மகனையும் அழைத்து வாருங்கள்.அவனுக்கும் தீர்த்தம் வழங்க வேண்டும்.என்றபோது துக்கம் பீறிட அழுது நின்றனர் தம்பதிகள்.
நடந்ததை அறிந்த ராகவேந்திரர் 'குழந்தையைத் தூக்கி வாருங்கள்' என்று சொல்லவே தேசாய் தன மகனைத் தூக்கிவந்து அவர்முன் கிடத்தினார்.
             புன்னகையுடன் தீர்த்தத்தை வேகமாக அச்சிறுவன்  மீது புரோக்ஷிக்க அவன் மெதுவாகக் கண் திறந்தான்.பெற்றோர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்.தேசாய் அந்த கிரீடகிரி கிராமத்தையே காணிக்கையாக்கினார்.அங்கு கூடியிருந்த மக்கள் அவரது பெருமையைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தனர்.
இன்னும் எத்தனை எத்தனையோ மகிமைகள் சொல்லச் சொல்ல வளரும்.
                                                                         (தொடரும் )







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 18 டிசம்பர், 2015

மந்த்ராலய மகான் --8

                           ஸ்ரீ ராகவேந்தரரின் பெயருக்கு மட்டுமல்ல அவரது கையிலிருந்து பெற்ற மிருத்திகைக்கும் மகிமை உண்டு என்பதை மற்றொரு சம்பவத்தால் அறியலாம்.ஸ்ரீமடத்தில் சேவை செய்து வந்த ஒரு சிஷ்யருக்கு வெகு நாட்களாகத் திருமணம் ஆகாமல் இருந்தது.காரணம் செல்வம் ஏதும் இல்லாமைதான்.ஒருநாள் ஸ்ரீ ராகவேந்திரர் காவிரியில் ஸ்நானம் செய்யும்போது அவருக்கு சேவை செய்யும் சிஷ்யன் அருகே நின்றிருந்தான்.அவனிடம் கேட்டார்
 "என்னப்பா, என்னிடம் ஏதோ கேட்கவேண்டுமென்று நினைக்கிறாய் இல்லையா?"
"ஆம் சுவாமி"
"கேளேன். தயக்கம் எதற்கு?" என்றபடியே காவிரியின் வண்டல் மண் எடுத்து உடலில் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தார்.
"ஸ்வாமீ , திருமணம் செய்து கொள்ளவேண்டுமென எண்ணியுள்ளேன்."
"அதற்கென்ன?பேஷாகச் செய்து கொள்"
"ஸ்வாமீ ,நான் பீஜாபூர் செல்லவேண்டும். மேலும்......."தயங்கியவனை இடைமறித்தார் ஸ்வாமிகள்.
"விவாகத்திற்குப் பொன்னும் பொருளும் வேண்டும்.அதுதானே ?"
சிஷ்யன் மகிழ்ச்சியுடன் "ஆம் ஸ்வாமி " என்று சொன்னவுடன் ஸ்ரீ ராகவேந்திரர் அவனிடம் "இந்தா இதைப் பிடி.
இதை வைத்து உன் விவாகத்தை முடித்துக் கொண்டு வா. என் ஆசிகள் உனக்கு." என்று கூறியபடியே காவிரியிலிருந்து ஒரு பிடி மண் எடுத்து அவனிடம் கொடுத்தார்.
'பொன்னைக் கேட்டால் மண்ணைக் கொடுக்கிறாரே ' என்று நினைக்காமல் அதை பயபக்தியுடன் பெற்றுக் கொண்டு ஒரு சம்புடத்தில் வைத்து இடுப்பில் வைத்துக் கொண்டான் சிஷ்யன் 
                     
                     ஸ்வாமிகளிடம்  ஆசிபெற்றவன் அன்றே சொந்த ஊரைப் பார்க்கப் புறப்பட்டான்.கால்நடையாகவே கும்பகோணத்தை விட்டுப் புறப்பட்டவன் இரவு வந்ததும் ஓய்வு எடுத்தபின் விடிந்ததும் செல்லலாமென எண்ணி ஒரு வீட்டின் திண்ணையில் படுத்துக் கொண்டான்.நடு இரவில் நல்ல உறக்கத்தில் இருந்தவனை யாரோ எழுப்பவே எழுந்து உட்கார்ந்தான்.அப்போது வீட்டின் உள்ளேயிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.
தன எதிரே  பெரிய பூதம் ஒன்று நிற்பதைப் பார்த்த  சிஷ்யன்  திடுக்கிட்டான்.
உடனே  ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் தியானித்துக் கொண்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டான்.
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ என்று ஒரு முறை சொல்லிக் கொண்டான்.பின் அந்த பூதத்தைப் பார்த்து 
"
"ஏய்  பூதமே, யார் நீ? என்னை ஏன் எழுப்பினாய்?" என்றான் 

"ஐயா, நான் ஒரு பிரம்மராக்ஷசன். உங்களை ஒன்றும் செய்யமாட்டேன்.எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும்.அப்படிச் செய்தால் நிறைய பொன் தருகிறேன்."

"நான் உனக்கு உதவி செய்வதா? ஒன்றும் புரியவில்லையே?"

"சொல்கிறேன் ஐயா. இந்த வீட்டின் சொந்தக்காரன் ஒரு படுபாவி.போன ஜென்மத்தில் இவன் என் குழந்தைகளையெல்லாம்  கொன்று விட்டான்.அதனால் இந்த ஜென்மத்தில் இவன் குழந்தைகளை நான் கொன்று வருகிறேன்.ஏழு குழந்தைகளைக் கொன்று விட்டேன். இப்போது பிறந்திருப்பது எட்டாவது குழந்தை.இதை நான் கொல்ல .வேண்டும். ஆனால் உள்ளே செல்லவிடாமல் உங்களிடமிருந்து வரும் ஜ்வாலை  தடுக்கிறது. தயவு செய்து நீங்கள் தள்ளிச் செல்லுங்கள். உங்களுக்கு நிறைய பொன் தருகிறேன்."

"குருகளவரின் ம்ருத்திகையல்லவா என்னிடம் இருப்பது! இதற்கு இத்தனை சக்தியா? என வியந்து மனதில் அவரை வணங்கிக் கொண்டிருந்தவன் முன் ஒரு குடம் நிறைய பொன்னைக் கொண்டு வந்து வைத்தது அந்த பிரம்மராக்ஷஸ்.அவர் நகரமாட்டாரா எனக் காத்துக் கொண்டு நின்றிருந்தது அது.

ம்ருத்திகை தடுக்கிறது என்றால் பிரம்மராக்ஷசம் உள்ளே போகக் கூடாது என்றுதானே பொருள். அத்துடன் எனக்கு இத்தனை பொன்னைக் கொடுத்து உதவிய இதற்கு நானும் ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என 
எண்ணியவனாய் ம்ருத்திகையைக் கையில் எடுத்து 'ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய' என்று ஜெபித்தான்.

"சுவாமி, இந்த பிரம்மராக்ஷசத்திற்கு சாப  விமோசனம் அளியுங்கள் " என்று மனதார வேண்டிக்கொண்டு ம்ருத்திகையை அந்த பிரம்மராக்ஷசத்தின் மீது வீசினார்.அவ்வளவுதான். சுடர் ஒன்று தோன்றி அதைச் சுட்டெரித்தது.ஜகஜ்ஜோதியான உருவம் பெற்று நற்கதி அடைந்து மறைந்தது பிரம்மராக்ஷசம். 

                              வீட்டிற்கு வெளியே வரப் பயந்துகொண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தவர்கள் பிரம்மாண்ட சத்தமும் வெளிச்சமும் வந்ததை அறிந்து ஓடிவந்தனர்.அக்கம்பக்கம் அனைவரும் கூடிவிட்டனர்.நடந்ததை அனைவரும் அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.மிருத்திகையின் பெருமையை எண்ணி வியந்தனர்.
அந்த வீட்டின் எஜமானன் தன குழந்தை பிழைத்ததை எண்ணி நன்றி தெரிவித்துக் கொண்டதுடன் தன சகோதரியின் மகளை  அவனுக்குத் திருமணமும் செய்து வைத்தார். அந்த சிஷ்யன் மனைவியுடன் கும்பகோணம் வந்து நடந்ததைக் கூறி சுவாமிஜியின் முன் வணங்கி நின்றான்.
ஸ்ரீ ராகவேந்திரரின் மிருத்திகைக்கு இன்றும் பெருமை உண்டு. என்றும் பெருமை உண்டு. 












.
 

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 16 டிசம்பர், 2015

மந்த்ராலய மகான் -7

               ஸ்ரீ ராகவேந்திரரின் புகழின் மீது அசூயை கொண்ட சிலர் இவரது புகழுக்குக் களங்கம் கற்பிக்க முடிவு செய்தனர்.அதன்படி ஒரு திட்டம் தீட்டினர்.ராகவேந்திரர் வரும் வழியில் ஒரு சிறுவனை இறந்தவன் போல் படுக்கச் சொல்லி போலியாக அழுது கொண்டே அவனைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.அவ்வழியே வந்த ராகவேந்திரர் அருகே வந்து "என்னப்பா, ஏன் அழுகிறீர்கள்?என்ன நடந்தது?" என்று கேட்க அவர்களில் ஒருவன்,
"ஐயா ,  சாமி எங்க புள்ள திடீர்னு செத்துப் போனானுங்க. நீங்கதான் அவனை எப்படியாச்சும் காப்பாத்திக் கொடுக்கணுமுங்க." என்று குறும்பாகப் பார்த்துக் கொண்டே கேட்டான்.மற்றவர்களும் ஆமாம்சாமி என்றபடியே நின்றனர்.

               உண்மையான சோகத்துடன் "அப்பா, இந்தச் சிறுவன் இறந்துவிட்டானே. இறந்தவனை நான் எப்படியப்பா  உயிர்ப்பிக்க முடியும்? மனதைத் தேற்றிக்கொள்."என்றார்.அந்த மூடர்கள் "நாங்க எழுப்பறோம். பாக்கறீங்களா?" என்றபடியே, "டேய் எழுந்திரிடா.எழுந்து வாடா."என்றனர். 
           "இத்தனை நாளா செத்தவனை உயிர்ப்பிக்கறதா இவரு நாடகமாடிக்கிட்டிருந்தாரு.இன்னிக்கி முடியாதுன்னு ஒத்துகிட்டாரு."என்று எள்ளி நகையாடினர்.ராகவேந்திரர் புன்னகையுடன் அங்கிருந்து நடக்கத் தொடங்கினார்.இறந்தவனை எழுந்திரு என்று சொல்லி வெகு நேரமாகியும் எழுந்திருக்காததைப் பார்த்தவர்கள் அச்சத்துடன் அவனை நெருங்கித் தொட்டுப் பார்த்தபோதுதான் அவன் உண்மையாகவே இறந்து விட்டதைக் கண்டார்கள்.ராகவேந்திரரைத் தொடர்ந்து ஓடினார்கள். அவர் காலில் விழுந்தார்கள்.
"சாமி, உங்களை சோதிக்க நினச்சது தப்புதாங்க. எங்கள மன்னிச்சுடுங்க சாமி. எங்க புள்ளைய காப்பாத்துங்க சாமி"
காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு மன்றாடினார்.
"அப்பா, அவன் விதி முடிந்து விட்டது.உண்மையிலேயே இறந்துவிட்டான்.மனதை சமாதானப் படுத்திக் கொள்ளுங்கள்."ஆறுதல் கூறியபடியே அங்கிருந்து அகன்றார் ராகவேந்திரர்.இவரது தெய்வாம்சத்தை
நம்பாதவர்களையும் நம்பும்படி செய்து  அவர்களுக்கும் அனுக்ரஹம் செய்தார்.
                  ஒருமுறை தஞ்சை நகரம் பஞ்சத்தால் பீடிக்கப் பட்டிருந்தது.அந்நாட்டில் மழை பொழியாது பயிர்களும் விளையாது மக்கள் அவதிப் பட்டனர். மன்னர் ரகுநாதபூபதி ராகவேந்திரரிடம் நாட்டில் மழை பொழியவேண்டும் என வேண்டிக் கொண்டார்.தாமே நேரில் சென்று ராகவேந்திரரைத் தன நாட்டிற்கு அழைத்து வந்தார்.
                      ராகவேந்திரர் தாம் பட்டமேற்ற அந்த நகரின் வீதிகளில் நடந்து சென்றார் அந்நாட்டில் நிலவியிருந்த பஞ்சத்தைக் கண்டு மனம் கனிந்தார். மன்னரின் தானியக் கிடங்கில் பீஜாக்ஷரத்தை எழுதிவைத்து  யாகங்கள் ஹோமங்கள் நடத்தி அந்நாட்டில் நிலவி வந்த பல ஆண்டுகால பஞ்சத்தைப் போக்கினார். மன்னன் ரகுநாத பூபதி மனம் மகிழ்ந்து நன்றியறிதலோடு ஒரு உயர்ந்த வைரமாலையை அளித்தான்.அதைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீ ராகவேந்திரர் அதை யாகத் தீயில் இட்டார்.அதைப் பார்த்த மன்னன் திடுக்கிட்டான்.
"எவ்வளவு விலையுயர்ந்த மாலை. இதைத் தீயில் இட்டுவிட்டாரே என்று கலங்கினான்.அவன் அகத்தின் அழகு முகத்தில் தெரிவதைக்  கண்டு புன்னகை புரிந்த ராகவேந்திரர் ,மன்னனை அருகே அழைத்தார்.
"ஹே  ராஜன்! கலங்காதே உன் மாலையை உனக்கு மீண்டும் வரவழைத்துக் கொடுக்கிறேன்"என்றவர் அக்னி பகவானிடம் வேண்ட அந்த ஹோமகுண்டத்திலிருந்து வைரமாலை பிரகாசத்துடன் வெளியே வந்தது.
அதை எடுத்து மன்னனிடம் கொடுத்தார். மன்னனோ அவரது கால்களில் விழுந்தான்."சுவாமி, நான் தானமாகக் கொடுத்ததைத் தாங்கள் என்ன செய்தாலும் அதைப் பற்றி நான் கவலைப் படக் கூடாது.மறந்துவிட வேண்டும்.ஆனால் நான் தவறாக எண்ணிவிட்டேன் என்னை மன்னியுங்கள் என்று அடிபணிந்து வேண்டி நின்றான். அத்துடன் இந்த வைர மாலையைத்  தாங்கள் ஸ்வீகரிக்கவேண்டும் எனவும் வேண்டிக் கொண்டான்.
புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்ட ராகவேந்திரர் இதை என் மூலராமனுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறியவாறு பெற்றுக் கொண்டார்.

                    இத்தகைய அதிசயங்களை நிகழ்த்தியவர் கல்வி அறிவே சிறிதும் இல்லாதவனுக்கு பெரும் பதவி 
கிட்டும்படி செய்த அதிசயமும் உண்டு.அதை அடுத்து காண்போம்.
                                                                              
                                                                                   (தொடரும்)










 






















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee

பாட்டி சொன்ன கதைகள்

அன்பு நேயர்களே,

சில வருடங்களுக்கு முன்பு இத்தளத்தில் “பாட்டி சொன்ன கதைகள்” (Grandma Tales Tamil) என்ற தலைப்பில் Apple iOS App Storeல் App பற்றி சொல்லி இருந்தேன். இது Haviga (http://www.haviga.com) என்ற நிருவனம் என்னுடைய சிறுவர் கதைகளை, என் குரலில், அழகான சித்திரங்களுடன் குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் வெளியிட்டு உள்ளது. இதை இப்பொழுது இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் முதல் கதையை இலவசமாக உங்கள் குழந்தைகளுடன் ரசிக்கலாம். மற்றும் 6 கதைகளை 2 பாகங்களாக சிறிய தொகை கொடுத்து ரசிக்கலாம். 

நீங்களும் இந்த படிக்கேற்றத்தை (App) பதிவிறக்கம் செய்து தங்களின் கருத்தை இங்கும், iOS App Storeல் விமர்சனத்தின் மூலமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

"பாட்டி சொன்ன கதைகள்" பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்: http://itunes.apple.com/us/app/grandma-tales-tamil/id556775899?mt=8

நன்றி,
ருக்மணி சேஷசாயி