வெள்ளி, 18 டிசம்பர், 2015

மந்த்ராலய மகான் --8

                           ஸ்ரீ ராகவேந்தரரின் பெயருக்கு மட்டுமல்ல அவரது கையிலிருந்து பெற்ற மிருத்திகைக்கும் மகிமை உண்டு என்பதை மற்றொரு சம்பவத்தால் அறியலாம்.ஸ்ரீமடத்தில் சேவை செய்து வந்த ஒரு சிஷ்யருக்கு வெகு நாட்களாகத் திருமணம் ஆகாமல் இருந்தது.காரணம் செல்வம் ஏதும் இல்லாமைதான்.ஒருநாள் ஸ்ரீ ராகவேந்திரர் காவிரியில் ஸ்நானம் செய்யும்போது அவருக்கு சேவை செய்யும் சிஷ்யன் அருகே நின்றிருந்தான்.அவனிடம் கேட்டார்
 "என்னப்பா, என்னிடம் ஏதோ கேட்கவேண்டுமென்று நினைக்கிறாய் இல்லையா?"
"ஆம் சுவாமி"
"கேளேன். தயக்கம் எதற்கு?" என்றபடியே காவிரியின் வண்டல் மண் எடுத்து உடலில் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தார்.
"ஸ்வாமீ , திருமணம் செய்து கொள்ளவேண்டுமென எண்ணியுள்ளேன்."
"அதற்கென்ன?பேஷாகச் செய்து கொள்"
"ஸ்வாமீ ,நான் பீஜாபூர் செல்லவேண்டும். மேலும்......."தயங்கியவனை இடைமறித்தார் ஸ்வாமிகள்.
"விவாகத்திற்குப் பொன்னும் பொருளும் வேண்டும்.அதுதானே ?"
சிஷ்யன் மகிழ்ச்சியுடன் "ஆம் ஸ்வாமி " என்று சொன்னவுடன் ஸ்ரீ ராகவேந்திரர் அவனிடம் "இந்தா இதைப் பிடி.
இதை வைத்து உன் விவாகத்தை முடித்துக் கொண்டு வா. என் ஆசிகள் உனக்கு." என்று கூறியபடியே காவிரியிலிருந்து ஒரு பிடி மண் எடுத்து அவனிடம் கொடுத்தார்.
'பொன்னைக் கேட்டால் மண்ணைக் கொடுக்கிறாரே ' என்று நினைக்காமல் அதை பயபக்தியுடன் பெற்றுக் கொண்டு ஒரு சம்புடத்தில் வைத்து இடுப்பில் வைத்துக் கொண்டான் சிஷ்யன் 
                     
                     ஸ்வாமிகளிடம்  ஆசிபெற்றவன் அன்றே சொந்த ஊரைப் பார்க்கப் புறப்பட்டான்.கால்நடையாகவே கும்பகோணத்தை விட்டுப் புறப்பட்டவன் இரவு வந்ததும் ஓய்வு எடுத்தபின் விடிந்ததும் செல்லலாமென எண்ணி ஒரு வீட்டின் திண்ணையில் படுத்துக் கொண்டான்.நடு இரவில் நல்ல உறக்கத்தில் இருந்தவனை யாரோ எழுப்பவே எழுந்து உட்கார்ந்தான்.அப்போது வீட்டின் உள்ளேயிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.
தன எதிரே  பெரிய பூதம் ஒன்று நிற்பதைப் பார்த்த  சிஷ்யன்  திடுக்கிட்டான்.
உடனே  ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் தியானித்துக் கொண்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டான்.
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ என்று ஒரு முறை சொல்லிக் கொண்டான்.பின் அந்த பூதத்தைப் பார்த்து 
"
"ஏய்  பூதமே, யார் நீ? என்னை ஏன் எழுப்பினாய்?" என்றான் 

"ஐயா, நான் ஒரு பிரம்மராக்ஷசன். உங்களை ஒன்றும் செய்யமாட்டேன்.எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும்.அப்படிச் செய்தால் நிறைய பொன் தருகிறேன்."

"நான் உனக்கு உதவி செய்வதா? ஒன்றும் புரியவில்லையே?"

"சொல்கிறேன் ஐயா. இந்த வீட்டின் சொந்தக்காரன் ஒரு படுபாவி.போன ஜென்மத்தில் இவன் என் குழந்தைகளையெல்லாம்  கொன்று விட்டான்.அதனால் இந்த ஜென்மத்தில் இவன் குழந்தைகளை நான் கொன்று வருகிறேன்.ஏழு குழந்தைகளைக் கொன்று விட்டேன். இப்போது பிறந்திருப்பது எட்டாவது குழந்தை.இதை நான் கொல்ல .வேண்டும். ஆனால் உள்ளே செல்லவிடாமல் உங்களிடமிருந்து வரும் ஜ்வாலை  தடுக்கிறது. தயவு செய்து நீங்கள் தள்ளிச் செல்லுங்கள். உங்களுக்கு நிறைய பொன் தருகிறேன்."

"குருகளவரின் ம்ருத்திகையல்லவா என்னிடம் இருப்பது! இதற்கு இத்தனை சக்தியா? என வியந்து மனதில் அவரை வணங்கிக் கொண்டிருந்தவன் முன் ஒரு குடம் நிறைய பொன்னைக் கொண்டு வந்து வைத்தது அந்த பிரம்மராக்ஷஸ்.அவர் நகரமாட்டாரா எனக் காத்துக் கொண்டு நின்றிருந்தது அது.

ம்ருத்திகை தடுக்கிறது என்றால் பிரம்மராக்ஷசம் உள்ளே போகக் கூடாது என்றுதானே பொருள். அத்துடன் எனக்கு இத்தனை பொன்னைக் கொடுத்து உதவிய இதற்கு நானும் ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என 
எண்ணியவனாய் ம்ருத்திகையைக் கையில் எடுத்து 'ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய' என்று ஜெபித்தான்.

"சுவாமி, இந்த பிரம்மராக்ஷசத்திற்கு சாப  விமோசனம் அளியுங்கள் " என்று மனதார வேண்டிக்கொண்டு ம்ருத்திகையை அந்த பிரம்மராக்ஷசத்தின் மீது வீசினார்.அவ்வளவுதான். சுடர் ஒன்று தோன்றி அதைச் சுட்டெரித்தது.ஜகஜ்ஜோதியான உருவம் பெற்று நற்கதி அடைந்து மறைந்தது பிரம்மராக்ஷசம். 

                              வீட்டிற்கு வெளியே வரப் பயந்துகொண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தவர்கள் பிரம்மாண்ட சத்தமும் வெளிச்சமும் வந்ததை அறிந்து ஓடிவந்தனர்.அக்கம்பக்கம் அனைவரும் கூடிவிட்டனர்.நடந்ததை அனைவரும் அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.மிருத்திகையின் பெருமையை எண்ணி வியந்தனர்.
அந்த வீட்டின் எஜமானன் தன குழந்தை பிழைத்ததை எண்ணி நன்றி தெரிவித்துக் கொண்டதுடன் தன சகோதரியின் மகளை  அவனுக்குத் திருமணமும் செய்து வைத்தார். அந்த சிஷ்யன் மனைவியுடன் கும்பகோணம் வந்து நடந்ததைக் கூறி சுவாமிஜியின் முன் வணங்கி நின்றான்.
ஸ்ரீ ராகவேந்திரரின் மிருத்திகைக்கு இன்றும் பெருமை உண்டு. என்றும் பெருமை உண்டு. 












.
 

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 16 டிசம்பர், 2015

மந்த்ராலய மகான் -7

               ஸ்ரீ ராகவேந்திரரின் புகழின் மீது அசூயை கொண்ட சிலர் இவரது புகழுக்குக் களங்கம் கற்பிக்க முடிவு செய்தனர்.அதன்படி ஒரு திட்டம் தீட்டினர்.ராகவேந்திரர் வரும் வழியில் ஒரு சிறுவனை இறந்தவன் போல் படுக்கச் சொல்லி போலியாக அழுது கொண்டே அவனைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.அவ்வழியே வந்த ராகவேந்திரர் அருகே வந்து "என்னப்பா, ஏன் அழுகிறீர்கள்?என்ன நடந்தது?" என்று கேட்க அவர்களில் ஒருவன்,
"ஐயா ,  சாமி எங்க புள்ள திடீர்னு செத்துப் போனானுங்க. நீங்கதான் அவனை எப்படியாச்சும் காப்பாத்திக் கொடுக்கணுமுங்க." என்று குறும்பாகப் பார்த்துக் கொண்டே கேட்டான்.மற்றவர்களும் ஆமாம்சாமி என்றபடியே நின்றனர்.

               உண்மையான சோகத்துடன் "அப்பா, இந்தச் சிறுவன் இறந்துவிட்டானே. இறந்தவனை நான் எப்படியப்பா  உயிர்ப்பிக்க முடியும்? மனதைத் தேற்றிக்கொள்."என்றார்.அந்த மூடர்கள் "நாங்க எழுப்பறோம். பாக்கறீங்களா?" என்றபடியே, "டேய் எழுந்திரிடா.எழுந்து வாடா."என்றனர். 
           "இத்தனை நாளா செத்தவனை உயிர்ப்பிக்கறதா இவரு நாடகமாடிக்கிட்டிருந்தாரு.இன்னிக்கி முடியாதுன்னு ஒத்துகிட்டாரு."என்று எள்ளி நகையாடினர்.ராகவேந்திரர் புன்னகையுடன் அங்கிருந்து நடக்கத் தொடங்கினார்.இறந்தவனை எழுந்திரு என்று சொல்லி வெகு நேரமாகியும் எழுந்திருக்காததைப் பார்த்தவர்கள் அச்சத்துடன் அவனை நெருங்கித் தொட்டுப் பார்த்தபோதுதான் அவன் உண்மையாகவே இறந்து விட்டதைக் கண்டார்கள்.ராகவேந்திரரைத் தொடர்ந்து ஓடினார்கள். அவர் காலில் விழுந்தார்கள்.
"சாமி, உங்களை சோதிக்க நினச்சது தப்புதாங்க. எங்கள மன்னிச்சுடுங்க சாமி. எங்க புள்ளைய காப்பாத்துங்க சாமி"
காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு மன்றாடினார்.
"அப்பா, அவன் விதி முடிந்து விட்டது.உண்மையிலேயே இறந்துவிட்டான்.மனதை சமாதானப் படுத்திக் கொள்ளுங்கள்."ஆறுதல் கூறியபடியே அங்கிருந்து அகன்றார் ராகவேந்திரர்.இவரது தெய்வாம்சத்தை
நம்பாதவர்களையும் நம்பும்படி செய்து  அவர்களுக்கும் அனுக்ரஹம் செய்தார்.
                  ஒருமுறை தஞ்சை நகரம் பஞ்சத்தால் பீடிக்கப் பட்டிருந்தது.அந்நாட்டில் மழை பொழியாது பயிர்களும் விளையாது மக்கள் அவதிப் பட்டனர். மன்னர் ரகுநாதபூபதி ராகவேந்திரரிடம் நாட்டில் மழை பொழியவேண்டும் என வேண்டிக் கொண்டார்.தாமே நேரில் சென்று ராகவேந்திரரைத் தன நாட்டிற்கு அழைத்து வந்தார்.
                      ராகவேந்திரர் தாம் பட்டமேற்ற அந்த நகரின் வீதிகளில் நடந்து சென்றார் அந்நாட்டில் நிலவியிருந்த பஞ்சத்தைக் கண்டு மனம் கனிந்தார். மன்னரின் தானியக் கிடங்கில் பீஜாக்ஷரத்தை எழுதிவைத்து  யாகங்கள் ஹோமங்கள் நடத்தி அந்நாட்டில் நிலவி வந்த பல ஆண்டுகால பஞ்சத்தைப் போக்கினார். மன்னன் ரகுநாத பூபதி மனம் மகிழ்ந்து நன்றியறிதலோடு ஒரு உயர்ந்த வைரமாலையை அளித்தான்.அதைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீ ராகவேந்திரர் அதை யாகத் தீயில் இட்டார்.அதைப் பார்த்த மன்னன் திடுக்கிட்டான்.
"எவ்வளவு விலையுயர்ந்த மாலை. இதைத் தீயில் இட்டுவிட்டாரே என்று கலங்கினான்.அவன் அகத்தின் அழகு முகத்தில் தெரிவதைக்  கண்டு புன்னகை புரிந்த ராகவேந்திரர் ,மன்னனை அருகே அழைத்தார்.
"ஹே  ராஜன்! கலங்காதே உன் மாலையை உனக்கு மீண்டும் வரவழைத்துக் கொடுக்கிறேன்"என்றவர் அக்னி பகவானிடம் வேண்ட அந்த ஹோமகுண்டத்திலிருந்து வைரமாலை பிரகாசத்துடன் வெளியே வந்தது.
அதை எடுத்து மன்னனிடம் கொடுத்தார். மன்னனோ அவரது கால்களில் விழுந்தான்."சுவாமி, நான் தானமாகக் கொடுத்ததைத் தாங்கள் என்ன செய்தாலும் அதைப் பற்றி நான் கவலைப் படக் கூடாது.மறந்துவிட வேண்டும்.ஆனால் நான் தவறாக எண்ணிவிட்டேன் என்னை மன்னியுங்கள் என்று அடிபணிந்து வேண்டி நின்றான். அத்துடன் இந்த வைர மாலையைத்  தாங்கள் ஸ்வீகரிக்கவேண்டும் எனவும் வேண்டிக் கொண்டான்.
புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்ட ராகவேந்திரர் இதை என் மூலராமனுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறியவாறு பெற்றுக் கொண்டார்.

                    இத்தகைய அதிசயங்களை நிகழ்த்தியவர் கல்வி அறிவே சிறிதும் இல்லாதவனுக்கு பெரும் பதவி 
கிட்டும்படி செய்த அதிசயமும் உண்டு.அதை அடுத்து காண்போம்.
                                                                              
                                                                                   (தொடரும்)










 






















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee

பாட்டி சொன்ன கதைகள்

அன்பு நேயர்களே,

சில வருடங்களுக்கு முன்பு இத்தளத்தில் “பாட்டி சொன்ன கதைகள்” (Grandma Tales Tamil) என்ற தலைப்பில் Apple iOS App Storeல் App பற்றி சொல்லி இருந்தேன். இது Haviga (http://www.haviga.com) என்ற நிருவனம் என்னுடைய சிறுவர் கதைகளை, என் குரலில், அழகான சித்திரங்களுடன் குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் வெளியிட்டு உள்ளது. இதை இப்பொழுது இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் முதல் கதையை இலவசமாக உங்கள் குழந்தைகளுடன் ரசிக்கலாம். மற்றும் 6 கதைகளை 2 பாகங்களாக சிறிய தொகை கொடுத்து ரசிக்கலாம். 

நீங்களும் இந்த படிக்கேற்றத்தை (App) பதிவிறக்கம் செய்து தங்களின் கருத்தை இங்கும், iOS App Storeல் விமர்சனத்தின் மூலமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

"பாட்டி சொன்ன கதைகள்" பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்: http://itunes.apple.com/us/app/grandma-tales-tamil/id556775899?mt=8

நன்றி,
ருக்மணி சேஷசாயி

செவ்வாய், 8 டிசம்பர், 2015

மந்த்ராலய மகான்--6

மனைவியின் நிலை; கணவர் சந்நியாசம் மேற்கொண்டார் என்ற செய்தி காதில் விழுந்ததும் துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்ந்தாள். இனி அவரைக் காண இயலாது  என்ற உண்மையை அறிந்த சரஸ்வதி பாய் துடித்தாள். அவர் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.அவரைப்பிரிந்து வாழும் நிலையை விரும்பாத சரஸ்வதிபாய் ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து  தன்வாழ்வை முடித்துக்  கொண்டாள்.அதனால் பிசாசு ஜென்மமாக ராகவேந்திரரையே சுற்றிச் சுற்றி வந்தாள் .அந்த பிசாசு உருவத்தின் மீது தன்  கமண்டல நீரைப் புரோக்ஷிக்க அவள் விமோசனம்  பெற்றாள். 
அவள் நினைவாக அந்த வம்சத்தார் தத்தம் இல்லங்களில் நடக்கும் எல்லாசுபகாரியங்களுக்கும் முன்னர் சரஸ்வதியின் நினைவாக சுமங்கலிகளுக்கு வஸ்திரதானம் அன்னதானம் செய்யவேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தினார்.
இப்போதும் அவர் வம்சத்தாரிடையே சுமங்கலிப் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதங்கள்;
நாளடைவில் ஸ்ரீ ராகவேந்திரர் மூலராமர் பூஜையை மிகுந்த ஈடுபாட்டோடும் பக்தியோடும் செய்வதையும் ஸ்ரீமடத்தின் காரியங்களைக் கவனிப்பதையும் பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்ப்பதையும் கண்டு உள்ளம் பூரித்தார் குரு சுதீந்திரர்.இனி ஸ்ரீமடத்தைப் பற்றி கவலையின்றி தேச சஞ்சாரம் செல்லத் திட்டமிட்டார்.அதன்படி கும்பகோணம் விட்டுப் புறப்பட்டார்.
                            குருவின் ஆக்ஞைப் படியே ஸ்ரீமடத்தைப் பராமரிப்பதும் சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்வதுமாய் மூலராமரைப் பூஜித்து வந்தார் ஸ்ரீ ராகவேந்திரர். இவர் வேங்கடநாதனாக இருந்தபோதே செய்த அற்புதங்கள் சில என்றால் ராகவேந்திரராக மாறியபின் நிகழ்த்திய அற்புதங்கள் அநேகம்.செல்லுமிடமெல்லாம் அற்புதங்களை நிகழ்த்திய வண்ணம் இருந்தார்.
 ஒருமுறை இவரது சிஷ்யர்களில் ஒருவன் திருமணத்திற்காக இவரிடம் ஆசீர்வாதம் பெற வந்து நமஸ்கரித்தான்  "சிரஞ்சீவியாக வாழ்வாயாக" என்று ஆசீர்வதித்துசிறிது செல்வமும் கொடுத்து  அனுப்பினார் .அந்தசிஷ்யன் திருமணம் முடிந்து மகிழ்ச்சியுடன் சென்றவன் வீட்டின் நிலைப் படியில் மோதி மயக்கமடைந்து கீழே விழுந்தவன் எழுந்திருக்கவே இல்லை.
                    அவன் இறந்துவிட்டான் என அனைவரும் அழுதனர்.இந்தச் செய்தி ஸ்ரீராகவேந்திரரின் செவிகளுக்குப் போயிற்று. அவர் சிஷ்யனை அழைத்துவரச் சொல்லி அனுப்பினார்.அந்தச் சீடனின் பெற்றோர் அழுத படியே மாப்பிள்ளையான அவனைக் கொணர்ந்து ராகவேந்திரர்முன் படுக்க வைத்தனர். ராகவேந்திரர் தன கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தை அவன்மீது ப்ரோக்ஷிக்க தூக்கத்திலிருந்து விழிப்பவன்போல் விழித்து குருவை வணங்கினான்.
                                     (தொடரும்)



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 2 டிசம்பர், 2015

மந்த்ராலய மகான் -5

பட்டாபிஷேகம்;  
                                    சில நாட்கள் கழிந்தன.ஒருநாள் தனிமையில் இருக்கும்போது சுதீந்திரர் வேங்கடநாதனை

அழைத்தார்.பணிவோடு வந்து நின்ற வேங்கடநாதனுக்கு உபதேசம் செய்தார்.

"வத்ஸ ! இந்த ஸ்ரீமடத்தையும் வைஷ்ணவ சம்பிரதாயத்தையும் கட்டிக்காக்கவே உன்னை அனுப்பியுள்ளாரஜகத்குருவான ஸ்ரீமன் நாராயணன்.  அவன் இச்சைப்படியே நீயே இந்த பொறுப்புகளை ஏற்று ஸ்ரீமூலராமனுக்குப் பூஜை செய்யும்  பேற்றையும் பெற்று இந்த ஜெகத்தினை உத்தாரணம் செய்ய வேண்டும் இது உன் விதி. இதுவே என் ஆசையும் கூட.'' என்றபோது வேங்கட நாதன் திடுக்கிட்டார்.

                   "சுவாமி நான் சந்நியாசி ஆகிவிட்டால் என்மனைவி மக்களின் கதி என்னவாகும்? அவர்களைத் தவிக்கவிட்டுவிட்டு இந்த பட்டம் எனக்கு வேண்டாம் ஸ்வாமி  என்னை மன்னியுங்கள்." என்று கூறியவர் சிந்தனையுடன் இல்லம் வந்து சேர்ந்தார்.தனிமையில் சிந்தனை வயப்பட்டவராய    இருந்தார். காரணம் தெரியாமல் தவித்தாள் சரஸ்வதி .              
                     
                 இரவு படுக்கையில் படுத்தபோதும் சிந்தனை வயப்பட்டவராகவே இருந்தார். திடீரென ஒரு வெளிச்சம் 
தூக்க நிலையா விழிப்பு நிலையா   எனத் தெரியாத ஒருவித மயக்க நிலையில் இருந்தார் வேங்கடநாதன்.அவர் முன்  தெரிந்த வெளிச்சத்தில் வெண்தாமரை மீது வீற்றிருந்தபடி கையில் வீணையை ஏந்தியபடி சரஸ்வதி பிரசன்னமானாள். கைகளைக்  குவித்தபடி  அவள் முன் நின்றிருந்தார் வேங்கட நாதன். அந்த தேவி  ஆசி கூறிப பின்வாய்   திறந்து பேசலுற்றாள் 

"வத்ஸ! நானே சரஸ்வதி வித்யாலட்சுமி.. மத்வர் வியாசராயர் விஜயேந்திரர் சுதீந்திரர்முதலான   யதிகள் தங்கள் கிரந்தங்களால் என்னை  அலங்கரித்தனர். இன்னும் இரண்டு வருடங்களே சுதீந்திரரின் வாசம் இருக்கும்.அதன்பின் உன்னையே நான் எதிர்பார்த்திருக்கிறேன். ஸ்ரீமூலராமருக்குப் பூஜை செய்யும் 
தகுதி உன்னிடமே உள்ளது.நீ சந்நியாசி ஆகி வைஷ்ணவ சம்பிரதாயத்தைக் காக்க வேண்டும்.நீ யதியாகியே தீர வேண்டும் நானும் உன்னிடமே வாசம் செய்யவேண்டும். இது உனக்கேற்பட்டுள்ள விதி.இதிலிருந்து நீ தப்ப முடியாது. போ.யதியாகி இந்தப் பூவுலகை  உத்தாரம் செய்." என்று கூறி அவர் தலையில் தன அபயஹஸ்தத்தை  வைத்து ஆசி கூறினாள்.பின்னர் அவர் நாவில் பீஜாக்ஷரம் எழுதி மறைந்தாள். 
 
                  விடிந்தது மூலராமரின் சுப்ரபாதம் கேட்டது.திடுக்கிட்டுக் கண்விழித்த வேங்கடநாதன் ஏதோ புதிய உலகிலிருந்து எழுந்து வந்தது போல் உணர்ந்தார்.மறுநாள் சுதீந்திரர் முன் சென்று பணிந்து  நின்றார்.யதியாக சம்மதம்  என்ற வேங்கடநாதனின் சொல் கேட்டு மிகவும் மகிழ்ந்தார் சுதீந்திரர். நிறைய திரவியம் கொடுத்து மகன் லக்ஷ்மி நாராயணனுக்கு  உபநயனம் செய்வித்து வரும்படி கூறி அனுப்பினார்..
குமாரன் லக்ஷ்மிநாராயண னுக்கு உபநயனம் செய்வித்து மனைவி மகன் இருவரையும் அண்ணன் குருராஜரின் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.
                    பின்னர் மடத்தையடைந்து குரு சுதீந்திரர் முன் யதியாக சம்மதம் என்று கூறி நின்றார். அவருக்கு சந்நியாசம் வழங்க சம்மதம் என்று கூறி அக்ஷதை கொடுத்து ஆசி வழங்கினார் சுதீந்திரர்.தனக்குப் பின்னால் யதியாக வரப் போகும் வேங்கடநாதனுக்குப் பட்டாபிஷேகம்  என்ற செய்தியை எல்லா இடங்களுக்கும் அனுப்பினார் தஞ்சை மன்னன் ராஜா ரகுநாத பூபதியின் முன் இந்த வைபவம் நடைபெற ஏற்பாடாகியது.
அரண்மனையில் நடக்கும் வைபவம் .கேட்கவேண்டுமா?ஊர்முழுவதும் தோரணங்கள் மலர் அலங்காரங்கள் வாசனை வீசிக் கொண்டிருந்தது.வாசனைத் திரவியங்களான  சந்தனம் ஜவ்வாது புனுகு போன்றவற்றால் மெழுகப்பட்டு ஊரெங்கும் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் யாகசாலையை மொய்த்தனர் 
                     அதோ அதோ பிரகாசமாய் ஸ்ரீ சுதீந்திரர் அவருக்குப் பின்னால் ஞானப் பிரகாசமாய் ஸ்ரீ வேங்கட நாதன்.
மக்கள் சொல்லிச் சொல்லிப் பரவசப்பட்டனர். ஒவ்வொரு சடங்காக நடந்து முடிந்தது.
சாலிவாகன சகம் 1623 ருத்ரோத்காரி வருடம் பால்குன சுத்த த்விதீயை  சுபயோக சுபதினம்.வேதகோஷங்கள் மங்கலவாத்யங்கள் முழங்க ஸ்ரீ சுதீந்திரர் வேங்கட நாதருக்கு காஷாய வஸ்திரத்தைக் கொடுத்தார்.மக்கள் கண்களில் கண்ணீர் வெள்ளம்.
                     காஷாய வஸ்திரம் தரித்துசந்நியாச கோலத்தில்  வேங்கடநாதன்  அக்னிஎன ஜொலித்தார்.
மக்கள் மெய் சிலிர்த்தார்.பல புண்ணிய தீர்த்தங்களால் அவருக்கு அபிஷேகம் செய்து அவருக்கு 
"ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் " என்ற நாமத்தை ஆசிரமப் பெயராக சூட்டினார் ஆயகலைகள் அனைத்தையும் போதித்த ஸ்ரீ சுதீந்திரர். சகலவித சாஸ்த்திர சுவடிகளையும் கொடுத்து ஸ்ரீ மூலராமர் ஸ்ரீ திக்விஜயராமர் ஸ்ரீ ஜெயராமர் ஸ்ரீ வ்யாஸ முஷ்டி போன்ற புராதனபுண்ய விக்ரகங்களையும்  சாளிக்ராமங்களையும் கொடுத்து ஸ்ரீமடத்தின் பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைத்து  நிம்மதியடைந்தார் சுதீந்திரர்.          
மக்கள் "ராஜாதி ராஜ குருசார்வ பௌம ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தருக்கு " ஜய்" என ஜெயகோஷமிட்டனர்.
மன்னரும் மக்களும் அவருக்குப் பாதகாணிக்கை செலுத்தி அவரது ஆசியைப் பெற்று மகிழ்ந்தனர்.
ஸ்ரீ ராகவேந்திரரின் பெருமையை கோபாலதாசர் தனது பாடல் வாயிலாகத் தெரிவிக்கிறார்.
              "ரா"என்று சொன்னால் ரட்சிப்பார். "கா" என்று சொன்னால் சர்வ பயமும் ஓடிவிடும். "வே" என்று சொன்னால் வியாதிகள் பறந்துவிடும். "இந்திரா" என்று சொன்னால் சகல செல்வங்களும் வந்து சேரும் என்று பெருமைபடக் கூறுகிறார்."

                                                                             (தொடரும்)





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

செவ்வாய், 24 நவம்பர், 2015

மந்த்ராலயமகான் -4.

திருமணம் ;

 
                                சகல சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்த வேங்கடநாதன் மீண்டும் புவனகிரிக்கு வந்தார். தம்பிக்கு தக்க பருவம் வந்ததென எண்ணிய அண்ணன் குருராஜர்  சரஸ்வதிபாய் என்ற மங்கை நல்லாளை இவருக்குத்  திருமணம் செய்து வைத்தார். வேங்கடநாதனும் சரஸ்வதிபாயும் மனமொத்த  தம்பதிகளாக இனிதே இல்லறம் நடத்தினர்.தக்க காலத்தில் புதல்வன் லக்ஷ்மி நாராயணன் பிறந்து இவர்கள் வாழ்வில் வசந்தமானான்.ஆனால் பூர்வ ஜன்ம பலன் யாரையும் விடுவதில்லை. அதனால் மிகுந்த வறுமையில் வாடினார் வேங்கடநாதன். வறுமையின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக பொருள் ஈட்டிவரப் புறப்பட்டார்.
                                 
                                                                            வழியில் ஒரு கிராமம். அங்கு தனவந்தர் ஒருவர் வீட்டில் சமாராதனை நடந்து  கொண்டிருந்தது.
அங்கு சென்றார் வேங்கடநாதன்.இவரைப் பார்த்ததும்  இவரிடம் ஏதேனும் வேலை வாங்கிக் கொண்டு சாப்பாடு போடவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே அங்கிருந்தவர்களில் ஒருவர் இவரிடம் சந்தனம் அரைக்கச் சொல்லி ஆணையிட்டார். வேங்கடநாதனும் தன்  பசித்துன்பம் நடந்துவந்த களைப்பு எதுவும் தெரியாதிருக்கும் பொருட்டு "அக்னி சூக்தம்" என்ற ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டே சந்தனத்தை அரைக்கத் தொடங்கினார்.அக்னிபகவான் அவர் அரைத்த சந்தனத்தில் ஆவிர்ப்பவித்தார்.அதனால் அக்னியின் நெருப்புச் சூடு அந்த சந்தனத்தில் நிறைந்தது.

                                                       சாப்பாடு முடிந்து அனைவரும் தாம்பூலம் தரித்து சந்தனம் பூசிக் கொண்டனர்.அடுத்த நொடி "ஆஹா எரிகிறதே..எரிகிறதே"  என அலறத் தொடங்கினர். சந்தனம் அரைத்த வேங்கடநாதனைப் பிடித்து என்ன செய்தாய் எனக் கேட்டனர்  அவர் அக்னிசுக்தம் சொல்லியபடி சந்தனம் அரைத்ததைக் கூறியவர்  மீண்டும் அந்த சந்தனத்தை வாங்கித் தன கையில் வைத்து வருண சூக்தம் சொல்ல அந்தசந்தனம் குளிர்ந்தது. அதைப் பூசிக்கொண்ட அனைவரும் எரிச்சலில் இருந்து விடுபட்டு பெருமூச்சு விட்டனர். வேங்கடநாதனை ஒரு மகாஞாநிஎன அறிந்து அவருக்குத் தக்க மரியாதை செய்தனர்.பொன்னையும் பொருளையும் தட்சிணையாகக் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இவரது புகழ் பல ஊர்களுக்கும் பரவலாயிற்று.

                                             கிடைத்த திரவியத்தைக் கொண்டு சில காலம் தான தருமங்கள் செய்து வாழ்ந்து வந்தார். மீண்டும் கும்பகோணம் சென்று குரு சுதீந்திரரைக் கண்டு மடத்திலேயே இருக்க விருப்பம் கொண்டார். மனைவி சரஸ்வதிபாயிடம்  இதுபற்றிக் கேட்க பாவம் நடக்கப்போவது இன்னதென்று அறியாமல் அவளும் மிக்க மகிழ்ச்சியுடன் புறப்பட்டாள். மூவரும் கும்பகோணம் ஸ்ரீமடம் வந்து சேர்ந்தனர்.வேங்கடநாதன் குரு சுதீந்திரரைப் பார்த்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து நின்றார். அவரைப் பார்த்த குரு மனம் மிக மகிழ்ந்தார்.வயதாகிவிட்டதனால் முன்போல் மடத்து விவகாரங்களையும் ஸ்ரீமூலராமரின் பூஜையையும் சரியாகக் கவனிக்க இயலாமல் தவித்தபடி இருந்தார். தமக்குப் பின் சரியானவர் இந்த பீடத்திற்கு யார் வருவார் என ஏங்கிக் காத்திருந்த  சுதீந்திரர் முன்  வேங்கடநாதன் வந்துநின்றது அவருக்குப் பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்தது.

                                                                (தொடரும்)








Rukmani Seshasayee











வெள்ளி, 20 நவம்பர், 2015

மந்த்ராலய மகான்

            பரிமளாச்சார் ;                                                                                            தொடர்ச்சி.
       மேலும் பயிலவேண்டும் என்னும் எண்ணத்திலிருந்த வேங்கடநாதன் கும்பகோணம் வந்து சேர்ந்தார்.அங்கு மடத்தில் ஸ்ரீ விஜயேந்திரருடன்  ஸ்ரீ சுதீந்திரரும் தங்கியிருந்தார். இவர்கள் முன் சென்று பணிந்து நின்றார் வேங்கடநாதன். இவர் சாதாரண பிறப்பல்ல என்பதை அறிந்து இருவரும்  பரவசப்பட்டனர். இவரது பிறவி மக்களின் நன்மைக்காகவும் அவர்களின் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதற்காகவும் ஏற்பட்டுள்ளது என்பதைப்  புரிந்துகொண்ட இருவரும் வேங்கடநாதனை ஆசீர்வதித்தனர்.
     
         மேலும் சாஸ்த்திர ஞானம் ஏற்படவேண்டும் என்னும் பேரவாவினால் சுதீந்திரரிடம் சிஷ்யனாக வேண்டும் என அவர்முன் நமஸ்கரித்து நின்றார் வேங்கடநாதன்.மிக்க மகிழ்ச்சியுடன் இவரைச் சீடனாக ஏற்றுக்கொண்டு பல சாஸ்திர விஷயங்களைக் கற்பித்து வந்தார்  சுதீந்திரர்.
           
        ஒருநாள்  குரு பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே இன்று பாடம் போதும் என்று சொல்லி எழுந்து விட்டார்.அனைவரும் படுக்கச் சென்று விட்டனர். ஆனால் வேங்கடநாதனோ தனிமையில் அமர்ந்து கொண்டு குரு சொன்னவற்றையே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அன்றைய பாடம்  ஸ்ரீமத்வரின் பிரம்மசூத்திர பாஷ்யத்திற்கு  ஸ்ரீ ஜெயதீர்த்தர் கொடுத்துள்ள உரைநூல்' நியாயசுதா' என்ற நூலுக்கு விளக்கத்தைக் கூறிக் கொண்டிருந்தார். திடீரென்று விளக்கம் சொல்ல இயலாமல்  பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.அதையே நினைத்துக் கொண்டிருந்த வேங்கடநாதன் அப்படியே பனியில்படுத்து  உறங்கிவிட்டார். 
      நடுஇரவு. குரு சுதீந்திரர் சிஷ்யர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வெளியில் வந்தபோது அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க அங்கு வேங்கடநாதனை மட்டும் காணாததால் தேடிக் கொண்டே சென்றார்.கொட்டும் பனியில் பல ஓலைச்சுவடிகளுக்கு நடுவே குளிரில் நடுங்கியவாறே உறங்கிக் கொண்டிருந்த வேங்கடநாதனைக் கண்டார். அவரருகே கிடந்த ஓலைச்சுவடிகளை எடுத்துப் பார்த்த சுதீந்திரர் திடுக்கிட்டார்.தான் சொல்ல இயலாமல் விட்ட நியாயசுதாவிற்கு எளிமையான உரையை எழுதியிருந்ததைக் கண்டு உள்ளம் உருகிய குரு சுதீந்திரர் தன மேல்  அங்கவஸ்த்திரத்தை அவருக்குப் போர்த்திவிட்டு வந்துவிட்டார்.
         அதிகாலை கண்விழித்த வேங்கடநாதன் பதறிப்போனான். குருவின் மேலாடை தன்மீது எப்படிவந்தது என அறியாமல் அதை மரியாதையுடன் கைகளில் ஏந்திக் கொண்டு குருவின் முன் நின்றார்.புன்னகையுடன் அவரை வரவேற்ற சுதீந்திரர் அன்புடன் பார்த்து,
"வேங்கடநாதா,அரிய நூலுக்கு மிகச் சிறப்பாக விளக்க உரை  எழுதியுள்ளாய். இந்த உரைநூலுக்கு "சுதா பரிமளா"என்று பெயர் சூட்டுகிறேன்.
அரியநூல் எழுதிய உனக்கு "பரிமளாச்சாரியார்" என்ற பட்டத்தைச் சூட்டுகிறேன்."என்று அகமகிழ்ந்து கூறி அவருக்கு மந்த்ராக்ஷதை கொடுத்து ஆசீர்வதித்தார் குரு சுதீந்திரர்.கூடியிருந்தவர்கள் பரிமளாச்சாரியார் வாழ்க என ஒலிஎழுப்ப குருவையும் பெரியோரையும் பணிந்து நின்றார் வேங்கடநாதனான பரிமளாச்சாரியார்.
                                                                              (தொடரும்)




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

சனி, 14 நவம்பர், 2015

மந்த்ராலய மகான்.

(பகுதி-2
                வேண்டுதல்;  வறுமையிலும் தனிமையிலும்  வாடிய தம்பதிகள்  ஸ்ரீனிவாசனை தரிசிக்க விரும்பி திருமலை நோக்கிச் சென்றனர்.திருப்பதி க்ஷேத்ரத்தில் அந்த ஸ்ரீனிவாசனைக் கண்டு தங்கள் துயர் நீக்க ஒரு சத்புத்திரன் வேண்டும் என்று மனமுருகி பிரார்த்தித்தனர்.
இவர்களின் வேண்டுதலுக்கு செவிசாய்த்தான் அந்த மலையப்பன்.  இரவில் கனவில் தோன்றி "கவலைப் படாதீர்கள் .உலகமே போற்றும் உத்தமனே உங்களின் மகனாகப் பிறப்பான்"என்று வரமருள , மகிழ்ச்சியுடன் புவனகிரிக்கே வந்து   சேர்ந்தனர் தம்பதிகள். 

பிறப்பு;  கோபிகாம்பாள் கர்ப்பவதியானாள்.தனக்குப் பிறக்கப்போகும் சத்புத்திரனுக்காகத் தவமிருந்தாள். கணவரிடம் தெய்வீகக் கதைகளைக் கேட்டாள் .தெய்வீக விஷயங்களிலேயே மனதைச் செலுத்திவந்தாள்.கி.பி.1595ஆம் ஆண்டு பால்குன சுத்த பஞ்சமி திதியில் சிறந்த குருவாரத்தில்பவித்த்ரமான மிருகசிரா நட்சத்திரத்தில் தேஜஸ்வியான ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார் கோபிகாம்பாள். வேங்கடவனின் அருளால் பிறந்த அந்தக் குழந்தைக்கு வேங்கடநாதன் எனப் பெயரிட்டு  மகிழ்ந்தனர் பெற்றோர்.குழந்தையின் முகப் பொலிவு கண்டு இது தெய்வீகக் குழந்தை எனவும் இப்படி ஒரு குழந்தையா என ஊர்மக்கள் பிரமிக்க பெற்றோர் மனம் மகிழ்ந்தனர்.இந்த புனிதரைப்பெற்ற புனித நகரமாக புவனகிரியும் புனிதமடைந்தது.

வித்யாப்யாசம்;  காலக்கிரமத்தில் குழந்தைக்கு அன்னப்பிராசனம் செய்துவைத்து மூன்று வயதில் அக்ஷராப்யாஸம் செய்துவைத்தார் திம்மண்ண  பட்டர்.பிரஹ்லாத அவதாரத்தில் தாயின் கருப்பைக்குள்ளி ருந்து நாரதரின் உபதேச மொழிகளைக் கேட்டதுபோல் தந்தையார் பாராயணம் செய்வதையும் தாயாரின் ஹரிகீர்த்தனைகளையும் கேட்டுக் கொண்டே வளர்ந்தான் வேங்கடநாதன். 
வறுமை வாட்டிய நிலையில் சுசீந்திரரின் கட்டளையின் பேரில் மீண்டும் கும்பகோணம் வந்து சேர்ந்தார்.திம்மண்ண பட்டர் ஸ்ரீமடத்தில் வித்வத்சபையில் கலந்துகொள்ளும்போது வேங்கடநாதனையும் உடன் அழைத்துச் செல்வார்.சிறுவனின் தேஜஸைக் கண்டு சுசீந்திரர் அவர் மீது  மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். திம்மண்ணரின் இறுதிக் காலத்தில் வேங்கடநாதன் தமையன் குருராஜனிடம் ஒப்படைக்கப் பட்டான்.
தந்தையாரின் மறைவுக்குப் பிறகு தமையன்  குருராஜன் தந்தையாரின் ஸ்தானத்தில் இருந்து இவருக்கு உபநயனம் செய்வித்து வித்யாப்யாசத்தின் பொருட்டு மதுரை லக்ஷமி நரசிம்மாச்சாரிடம் அனுப்பிவைத்தார்.அவரிடம் வேங்கடநாதன் வேதாந்த தர்க்க வியாகரணம் சாஹித்யம் மீமாம்சை முதலிய சாஸ்திரங்களைக் கற்றார். அத்துடன் வீணா கானத்திலும் சிறந்து விளங்கினார்.
பரிமளாச்சார்;

                                                                                                                                                           (தொடரும்)
                                                                      




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspo 
t.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வியாழன், 5 நவம்பர், 2015

மந்திராலய மகான்.

               


           "பூஜ்யாய  ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச  
            பஜதாம் கல்பவ்ருட்சாய நமதாம் காமதேனவே
            துர்வாதித்வாந்தரவே வைஷ்ணவே தீவரேந்தவே
            ஸ்ரீராகவேந்தர குருவே நமோ அத்யந்த தயாளவே  
           மூகோபியத் பிரசாதேனா முகுந்த சயனாயதே   
            ராஜராஜாயதே ரிக்தோ ராகவேந்தரம் தமாஸ்ரையே".
      
என்று அந்த ராகவேந்திர சுவாமிகளை வேண்டிக்கொண்டோமானால் கலியுக கல்பகவிருட்சமாகவும் காமதேனுவாகவும் விளங்கிவரும் அந்தமகான் நமக்கு ஓடோடி வந்து அருள் புரிவார்.அப்பேற்பட்ட மகான் நம் ராகவேந்திர ஸ்வாமிகள்.இவரது வரலாற்றையே நாம் இங்கு சுருக்கமாகக் காண்போம்.
            
            துஷ்ட நிக்ரஹம் செய்து சிஷ்ட பரிபாலனம் செய்யவும் தர்மத்தை நிலைநாட்டவும்  .பகவான் எடுத்த அவதாரங்கள் பலப்பல.அவற்றுள் ஒன்று    நரசிம்மாவதாரம்.இந்த அவதாரத்திற்குக் காரணமானவரும் இறைவனின் அருளுக்குப் பாத்திரமானவருமாகிய ஸ்ரீ பிரஹ்லாத ராஜரின் மறுபிறவியே ஸ்ரீ வ்யாசராஜர். அன்னாரின் மறுபிறவியே ஸ்ரீ ராகவேந்திரர். இந்த மகானின் ஜீவசமாதி இருக்கும் இடமான மந்த்ராலயம்  ஒரு புண்ய க்ஷேத்ரம்..இந்த மந்த்ராலயத்தில் ஜீவசமாதியில் இருக்கும் மந்த்ராலய மகான் என போற்றப்படும்   ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் வரலாற்றைக் கேட்டு நாமும் புனிதமடைவோம்.

       இவரது வம்சபரம்பரை.:     சீரும் சிறப்புமாக விளங்கிய விஜயநகர சாம்ராஜ்யத்தில் ஆஸ்தான வித்வானாக விளங்கியவர் கிருஷ்ண பட்டர்.வீணா வித்வானாகவும் சிறந்த கவிஞராகவும் விளங்கியவர்.கர்நாடக மாநிலத்து வைஷ்ணவர். மாத்வ பிராமணர். இவரது மகன் கனகாசலபட்டரும் 
தந்தையைப் போன்றே சங்கீதத்திலும் சாஸ்திர ஞானங்களிலும் சிறந்து விளங்கினார்.தந்தையாருக்குப் பிறகு இவரும் விஜயநகரத்து ஆஸ்தானவித்வானாக விளங்கி சுகபோகத்துடன் வாழ்ந்து  வந்தார்.

   கனகாசல பட்டர் தம்பதிகளுக்குப் பிற ந்தவரே  திம்மண்ண  பட்டர். கல்வி கேள்விகளிலும்  வீணை வாசிப்பதிலும் தன் மூதாதையரைப் போலவே சிறந்து விளங்கினார்.உரிய வயதில் கோபிகாம்பாள் என்ற பெண்ணை மணமுடித்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.கனகாசலபட்டார் மறைந்ததும் திம்மண்ண பட்டர் அரசவையில்  சிலகாலமே இருக்க முடிந்தது. 1565-ல் நிகழ்ந்த தலைக்கோட்டைப் போரினால் விஜயநகரம் கடும் துன்பத்துக் குள்ளாகியது. அந்த ராஜ்ஜியம் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருந்ததால் திம்மண்ண பட்டர் குடும்பத்துடன் நகரத்தை விட்டு வெளியேறினார்.
      நேராக கும்பகோணத்திலிருந்த ஸ்ரீமடத்திற்கு வந்து சேர்ந்தார்.  ஸ்ரீமடத்தை நடத்திவந்த ஸ்ரீ விஜயீந்தர தீர்த்தர் இவரைத் தம் மடத்தில் சேர்த்துக் கொண்டார்.  சிலகாலம் அங்கிருந்த திம்மண்ண பட்டர் தன் மகள் வேங்கடாம்பாளுக்குத் திருமணம் செய்ய எண்ணம் கொண்டு அங்கிருந்து புவனகிரிக்கு வந்து சேர்ந்தார்.                            

      அங்கு மதுரை லக்ஷ்மி நரசிம்மாச்சாரியாருக்கு மகளை மணம் செய்து கொடுத்து அவளை மதுரைக்குக் கணவனுடன் அனுப்பிவைத்தார். தன்   மகன் குருராஜனுக்கும் உபநயனம் முடித்து அவனையும் குருகுலவாசம் செய்ய அனுப்பினார். இப்போது  தம்பதிகள் இருவரும் தனிமையில் தவித்தனர்.

                                                                                                                   (தொடரும் )








--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வியாழன், 22 அக்டோபர், 2015

குறள் வழிக் கதைகள் 3. கற்றதனால் ஆய பயன். (தொடர்ச்சி) (தொடர்ச்சி)

         வாழ்த்து.
  அனைவருக்கும் எனது சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை தின வாழ்த்துக்கள். ஞானமும் நல்லறிவும் கல்வியும் சகல கலைகளும் நாமும் நம் இளைய சமுதாயமும்  பெற்றிட வாக்தேவியான கலைவாணி    நல்லாசியினை நமக்கு வழங்கட்டும்.         
அனைவருக்கும் வாழ்த்துகள்.
ருக்மணி சேஷசாயி.
-------------------------------------------------------------------------------------------------------------------------
              
              கற்றதனால் ஆய பயன் .....(தொடர்ச்சி)

 "ஆமாம் தம்பி"என்றவர் சரவணனின் தந்தையையும் அமரச் சொன்னார். இதற்குள் ரங்கசாமியைப் பார்க்க சிலர் வரவே அவர்களையும் அமரச் சொன்னார்.அவர்கள்  அமர்ந்தபின் நடந்த நிகழ்ச்சியை சொல்லத் தொடங்கினார்.,.
               
--              "பெரியவங்கல்லாம்  இருக்கீங்க நடந்ததைச் சொல்லிடறேனுங்க.ரெண்டு நாளைக்கு முன்னே ரயில் பாதை ஓரமா சுள்ளி ஓடிச்சுக் கொண்டாரப் போயிருந்தேனுங்க.அப்போ  பக்கத்துல சவுக்குத் தோப்புல மூணு பேரு ஒரு சாக்கு மூட்டிய கட்டி வச்சுகிட்டு நின்னிருந்தாங்க.அவங்கள்ள ஒருத்தன நானு அடையாளம் கண்டுகிட்டேனுங்க.அவன் யாருமில்லே. நாலு வருஷம் முன்னே ஊரைவிட்டு ஓடிப்போன எம்மவந்தானுங்க. நானு சந்தோசமா கிட்டப் போயி மவனேன்னு கூப்பிடலாமுன்னு நெனச்சப்போ அவுங்கள்ள ஒருத்தன்,
"ஏ கிழவா, இங்க வா"ன்னு கூப்பிட்டான்.எனக்குக் கோவம் வந்தாலும் அடக்கிக்கிட்டுப் பக்கத்துல  போனேன்.பயலுவ என் கையில ஒரு கடுதாசியக் குடுத்து "உங்க பண்ணையாரு சுப்பிரமணி கிட்ட குடுத்துடு"ன்னு சொன்னாங்க.

இன்னொருத்தன்,

                          "டே கிழவன் கிட்ட குடுக்கலாமா "ன்னான்.அதுக்கு என் மவன் அந்தவேலுப்பய "கிழவனுக்குப்படிக்கத்தெரியாதுடா.தைரியமாக் குடுத்தனுப்பு "ன்னு சொல்லிட்டு அந்த மூட்டயத் தூக்கிக்கிட்டு நடந்தான்.
                         மத்த பயலுகளும் "ரயில் வார நேரமாயிடுச்சுடா சீக்கிரமா வாங்கன்னு சொல்லிகிட்டே என் மவனுடனேயே வேகமா நடந்து போய்ட்டானுங்க.நானு அந்தக் கடுதாசியை மரத்துக்குப் பின்னாலே போயி மறஞ்சு  நின்னு எழுத்தக் கூட்டிக் கூட்டிப் படிச்சேன். பயபுள்ளக  
நம்ம கணேசுவைக் கடத்திக்கிட்டுப் போயி பண்ணையார் கிட்டப் பணம் கேட்டிருக்கானுவ. இதப்போயி அவருகிட்ட சொல்லுவானேன்?ரயில் பாதை ஓரமாவே வேகமா நடந்து பக்கத்துஊரு போலீஸ்
ஸ்டேஷனுக்குப் போயி வெவரத்தச் சொல்லி கடுதாசியையும் குடுத்தேன்.அவுக போலீஸ் வண்டியில என்னையும் ஏத்திகிட்டு அந்தப் பயலுக இருக்கற எடத்துக்குப் போனாங்க.என்கிட்டே ஒரு பொட்டியக் குடுத்து அவுக சொன்ன எடத்துல நிக்கச் சொன்னாங்க.அந்தப் பயலுக கிட்ட பண்ணையாரு குடுக்கச் சொன்னதா சொல்லச் சொன்னாங்க.
அப்படி நான் குடுக்கும்போது அந்த சோம்பேறிப் பசங்க மூணு பேரையும் மடக்கிப் புடிச்சிட்டாக.என் பிள்ளையப் பாத்து எனக்குத் துக்கம் வந்தாலும்," தூ பயலே நீ திருந்தவே மாட்டியா"ன்னு காரித்துப்பிட்டு வந்துட்டேன். கணேசும் கிடைச்சுட்டான். தம்பி நீ சொல்லிக்குடுத்த படிப்பு எனக்கு சமயத்துல உதவி செய்திருக்கு. அதுமட்டுமில்லே  சரவணா, பண்ணையாரு எனக்கு நெலம் எழுதிக் குடுத்திருக்காரு.இனிமே நான் சொந்த விவசாயம் செய்யப் போறேன்.
பிள்ளை குட்டி யாரும் இல்லாத எனக்கு இந்த சரவணன்தான் இனி பிள்ளை." என்றபடி சரவணனைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டார் ரங்கசாமி.
"படிப்போட அருமையையும் பெருமையையும் தெரிஞ்சுக்கிட்டீங்களா எல்லாரும்?"என்று எல்லோரையும் பார்த்துக் கேட்டான் சரவணன்.அவன் வார்த்தைகளைக் கேட்டபடியே அங்கே வந்த பண்ணையார் "நல்லாப் புரிஞ்சுகிட்டோம்பா.அதனாலதான் நம்ம ஊருல ஒரு முதியோர் பள்ளி கட்டவும் ஏற்பாடு பண்ணிட்டேன்."என்றவாறு சரவணனைப் புன்னகையோடு பார்த்தார்.கணேசுவும் தன கையிலிருந்த புதுச் சட்டையை சரவணனுக்குப் பரிசாகக்  கொடுத்துவிட்டு நட்போடும் அன்போடும் சிரித்தான்.
அதைப் பெற்றுக்கொண்டு நன்றி சொன்னவன் கணேசுவைப் பார்த்து "நம்ம தமிழய்யா நமக்குக் கற்றுக் கொடுத்த திருக்குறளிலே கூட வள்ளுவரு இதைத்தானே சொல்லியிருக்காரு."என்றபோது ரங்கசாமி 
"அது என்னன்னு சொல்லுப்பா "என்றார்.
  " எண்ணென்ப  ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
    கண்ணென்ப  வாழும் உயிர்க்கு." என்று சரவணன் சொன்னதும் பண்ணையார்,
"ஆமாமாம் ரொம்ப சரி அவ்வையார் கூட எண்ணும்  அழுத்தும் கண்ணெனத் தகும்"  அப்படின்னு சொல்லியிருக்காங்களே" 
அதனாலதான் நம்ம ஊரிலே இனி படிக்கத் தெரியாதவங்களே இருக்கக் கூடாதுன்னு முடிவு செஞ்சிட்டேன் சரவணா "
என்றபோது சரவணனுடன் ஊர் மக்களும் பண்ணையாருக்கு நன்றி கூறினர். அங்கு கூடியிருந்த மக்கள் ரங்கசாமியின் தியாகத்தையும் அறிவையும் சமயோசித புத்தியையும் சரவணனின் சேவையையும் தமக்குள்   பேசியவாறே கலைந்து சென்றனர்.
உண்மைதானே. படிக்கும் ஆற்றல் பெற்றதால்தானே ரங்கசாமியால் ஒரு சிறுவனை மீட்கவும் கயவர்களைப் பிடிக்கவும் முடிந்தது.
வள்ளுவர் வாய்மொழி உண்மைதானே.

                                 ___________________    ​​​ 





ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
 

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

குறள்வழிக் கதைகள் 3.கற்றதனால் ஆய பயன்...(தொடர்ச்சி)

. அப்படி அவன் நினைக்கவும் ஒரு
காரணம் இருந்தது.இரண்டு மூன்று முறை ரங்கசாமி பண்ணையார் மேல் கோபத்தைக்
காட்டி "அவன் மனுசனே இல்லை தம்பி. அவனுக்கு நானே சரியான தண்டனை குடுக்கப்
போறேன் பாரு." என்று சொல்வதை விளையாட்டாகவே நினைத்து சிரித்திருக்கிறான்
சரவணன்.இன்று?... ஒருவேளை கணேசனின் மறைவுக்கு இந்த தாத்தாவே காரணமாக
இருப்பாரோ.?இந்தச் செய்தியை யாரிடம் சொல்வது?ஒருவேளை இது தவறான செய்தியாக
இருந்துவிட்டால்நம்மை உண்மையுடன் நேசிக்கும் ரங்கசாமிதாத்தாவின் மனசு
என்ன பாடுபடும்?என்று எண்ணிக் கலங்கியபடியே இருந்தான் சரவணன்.

மூன்றாம்
நாள் காலை ஒரு போலீஸ் வண்டி ஊருக்குள் புகுந்தது.ஊரே திரண்டு வந்து
நின்று வேடிக்கை பார்த்தது.
முதலில் பண்ணையார் சுப்பிரமணி இறங்க அவருடன் அவர் மகன் கணேசு
இறங்கினான்.மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். கணேசுவின் தாய்
ஓடிவந்து மகனைக் கட்டிக் கொண்டு அழுதாள்.பின்னாலேயே ரங்கசாமி தாத்தா
இறங்கினார்.அவர்பின் இரண்டு போலீஸ்காரர்களும் ஊரார் சிலரும் இறங்கினர்.
போலீஸ் வண்டியிலிருந்து ரங்கசாமி இறங்கியதைப் பார்த்ததும் ஊர்மக்கள்
அவர்தான் கணேசுவை
எங்கேயோ மறைத்து வைத்திருப்பார். போலீஸ் அதைக் கண்டு பிடித்திருக்கும்
என்றுகசமுசா என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

சரவணனுக்குத் தலை சுற்றியது.ரங்கசாமியா இப்படி?.இது
எதையுமே கவனிக்காத ரங்கசாமி தலை குனிந்து வருத்தத்துடன்
நின்றிருந்தார்.அவரிடம் சென்ற பண்ணையார் அவர் தோள் மீது கை வைத்து
அன்போடு வீட்டினுள்ளே அழைத்துச் சென்றார்.இதைப் பார்த்து அனைவரும்
அதிசயித்து நின்றனர்.சரவணனும் திகைத்தான்.அவன் அறிவு ரங்கசாமி எந்த
குற்றமும் செய்திருக்கமாட்டார் என அறிவுறுத்தியது

மெல்ல மெல்ல செய்திகள் வெளிவரத் தொடங்கின.
ரங்கசாமி பெரும் தியாகத்தைச் செய்துள்ளார் என்பது வரை புரிந்துகொண்ட
சரவணன் பள்ளிக்கு நேரமாகிவிட்டதால் பள்ளி சென்று விட்டான். மாலை
நேரம்எப்போது வரும் என்று
காத்திருந்தவன்போல்பள்ளிவிட்டதும்பரபரப்புடன்வீடுநோக்கி
ஓடிவந்தான்.அவனுக்கு முன்னால் ரங்கசாமிதாத்தா வீட்டில்
அவனுக்காகக் காத்திருந்தார்.சரவணனைக் கண்டதும்

"தம்பி, வாவா, உனக்காகத்தான் காத்திருக்கேன்.பசியா இருப்பே இந்தா பழம்
சாப்பிடு."என்றவர் தட்டிலிருந்த பழத்தை எடுத்துக் கொடுத்தார்.அவர் அருகே
அமர்ந்து கொண்ட சரவணன் அவரைக் கூர்ந்து பார்த்தான்.

"தாத்தா உங்க முகத்துல சந்தோஷமும் தெரியுது வருத்தமும் தெரியுது.அதோட
கணேசுவோட நீங்க ஏன் போனீங்க,எங்க போனீங்க இந்த விவரமெல்லாம் கேக்கத்தான்
ரொம்ப ஆவலோட காத்திருக்கேன் தாத்தா."

"சொல்றேன் தம்பி உன்கிட்ட விவரம் சொல்லனும்னுதான் நானும் காத்துகிட்டே
இருக்கேன்.ஏன்னா இதுக்கெல்லாம் நீயும் ஒரு காரணமா இருந்திருக்கே."
என்றார் புன்னகையுடன்.

"என்ன?நானா?"திகைத்தான் சரவணன்.

(தொடரும் )
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com ::
http://rukmaniseshasayee.blogspot.com

சனி, 17 அக்டோபர், 2015

குறள் வழிக்கதைகள். 3.கற்றதனால் ஆய பயன்...

அவரது
சொற்களை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான் சரவணன். சிரித்தபடியே அவரைப்பார்த்தவன்,
"இன்னிக்கி ரெண்டு வார்த்தை படிக்கக் கத்துக் குடுக்கறேன் தாத்தா.நாளைக்கி இதேநேரம் வந்துடுங்க  வேற ரெண்டு வார்த்தை கத்துக்குடுக்கறேன்."என்றவன்முன் ரங்கராசு சரி, என வேகமாகத் தலையை அசைத்தபடி மகிழ்ச்சியுடன்அமர்ந்தார்.

இரண்டு மாதங்கள் கழிந்தன. அந்த ஊர் பண்ணையார் சுப்பிரமணி.
அவருக்கு ஒரே மகன் கணேசு.அவனும் சரவணனுடன் ஆறாம் வகுப்பில் படித்துவந்தான்.அன்றுபள்ளி சென்ற கணேசு வீடு திரும்பவில்லை.நாலாபக்கம் ஆட்கள்தேடி அலைந்தனர். ஆனால் கணேசு கிடைக்கவே இல்லை. கணேசின் தாயார் அழுதுபுலம்பினாள்.
"ஐயோ ஒரே பிள்ளையாச்சே! கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தேனே.என் மவனுக்குஎன்ன ஆச்சோ தெரியலையே!"என்று அழுது ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்.அவளைஅடக்கினார் பண்ணையார்.ஆனாலும் பெற்றமனம் கேட்கவில்லை. அழுதுகொண்டே உள்ளேசென்றாள் அந்த அம்மாள்.

இந்தச்செய்தி ஊர்முழுவதும் பரவி விட்டது.ஒவ்வொருவரும்
மற்றவரைப் பார்க்கும் போதெல்லாம்" என்ன, கணேசு கெடச்சிட்டானா?"
என்றே கேட்டுக்கொண்டார்கள்.ஆனால்கணேசுகிடைக்கவேஇல்லை.

                     ஒருநாள்முழுவதும் தேடுவதிலேயே கடந்தது.இரண்டாம்நாள் போலீசில் சொன்னால் அவர்கள்கண்டு பிடித்து விடுவார்கள் என்று சொல்லி போலீஸ் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டார்பண்ணையார் சுப்பிரமணி..அவருடன் இன்னும் நாலைந்து பேர் புறப்பட்டனர். ஊருக்குள்யாரும் எதையும் பேசவே பயந்தனர்.ஏனென்றால் போலீஸ் வரப்போகிறது என்ற எண்ணமே
அவர்களை வாய் மூடவைத்துவிட்டது.
சரவணனையும் இந்த அச்சம் ஆட்கொள்ளாமல் இல்லை. ஆனால்
மற்றவர் யாரையும் விட அவனுக்கு இன்னொரு அச்சமும் உள்ளத்தில்
குடிகொண்டது.அதனை யாரிடமும் சொல்ல முடியாமல் தனக்குள்ளே வைத்துப்புழுங்கிக் கொண்டிருந்தான். ஆம். இரண்டு நாட்களாக தாத்தா
படிக்க வராததுதான் அந்தக் காரணம்.அத்துடன் அவன் அப்பாவும் ஏன் இன்னிக்கிரங்கராசு வயலுக்கு வரல்லே.ஒருவேளை உடம்பு சொகமில்லையோ "என்று சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டபோது சரவணனின் மனதுக்குள் ஒரு பயம் தோன்றியது.


                                                       (தொடரும்)



















--
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com ::
http://rukmaniseshasayee.blogspot.com

புதன், 14 அக்டோபர், 2015

குறள் வழிக் கதைகள். 3.கற்றதனால் ஆய பயன் ...

                                  சரவணன் மிகவும் நல்லவன். ஏழைகளுக்கு உதவும் பண்புள்ளவன்.இரக்க குணமும் ஈகைக் குணமும் உடைய அவனை

எல்லோருக்கும் பிடிக்கும்.ஆறாம் வகுப்புப் படிக்கும் சரவணனின் அப்பா ஒரு விவசாயி.எளிமையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும்

சரவணன் தன்னால் இயன்ற உதவிகளை மக்களுக்குச் செய்யத் தயங்க மாட்டான்.அவன் தந்தையுடன் விவசாயத் தொழில் செய்யும் 

ரங்கசாமிக்கு சிறுவயதிலிருந்தே படிக்கவேண்டும் என்று  மிகவும் ஆசை. ஆனால் பள்ளி சென்று படிக்க இயலாத சூழ்நிலையால் அவர்

படிப்பறிவே இன்றி அறுபது வயதையும் கடந்து விட்டார்.


                                               ஒருநாள் மாலைநேரம்.கழனி வேலைகளை முடித்துவிட்டு சரவணன் அருகே வந்து அமர்ந்தார்.சரவணன் தன் 

நோட்டுப்புத்தகத்தில் வேகமாக எழுதிக் கொண்டிருந்தான்.அருகே அமர்ந்த ரங்கசாமியைப் புன்னகையுடன் பார்த்துவிட்டு மீண்டும்

எழுதத் தொடங்கினான். சிறிது நேரத்தில் எழுதி முடித்த சரவணன் புன்னகைத்தபடியே. " என்னதாத்தா,உங்களுக்குப்படிக்கத்தெரியுமா?"என்றான்.

"தெரியாது தம்பி."

"பின்னே இவ்வளவு நேரமா நோட்டுப்புத்தகத்திலே  எதைப் பார்த்துகிட்டு இருந்தீங்க?"

"நீ வேகமா எழுதறதப் பாத்துகிட்டு இருந்தேன்"

"அப்போ படிக்கத்தெரியாதா?"

"தெரியாதுப்பா. ஆமா என்ன எழுதுன இதுல ?"

"வரலாறு தாத்தா"

சரவணன் வரலாறு பற்றி  விளக்கிவிட்டு" உங்களுக்குப் படிக்கணு முன்னா நான் கத்துக் குடுக்கறேன் தாத்தா"என்றான்  உற்சாகத்தோடு.

"படிச்சா நிறைய விஷயம் தெரியும் இல்லையா தம்பி?"

"" .நாளையிலிருந்து நான் உங்களுக்குப் படிக்கக் கத்துக் குடுக்கறேன் தாத்தா.""

"தம்பி நான் கத்துக்கறது யாருக்கும் தெரிய வேணாம் தெரிஞ்சா சிரிப்பாங்க.




















































































--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 2 செப்டம்பர், 2015

thulasidhaasar

                                                                                        
                                                                                  
                                                                                             துளசிதாசர்.

  

                பாரதத்தின் வடக்கில் வால்மீகி ராமாயணமும் தெற்கில் கம்ப ராமாயணமும் மிகவும் பிரசித்தம்.அதேபோல் ஹிந்திமொழியில் ராமாயணத்தை எழுதி பிரபலப்படுத்தியவர் துளசிதாஸ் என்ற பக்தர். இவரது இந்த நூல் ஹிந்தி இலக்கியப் படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது 
இவரது  வினயபத்ரிகா என்ற நூலும் தோஹா என்ற ஈரடிப்பாடல்களும் தெய்வீகத் தன்மை வாய்ந்தவை. பாடல்கள் மக்களின் மனதில் நல்லொழுக்கங்களையும் பக்தி  பண்பாடு முதலியவற்றை வளர்ப்பதாகவும்  அமைந்துள்ளன.இறைவனுக்கும் நாட்டுக்கும் பணி  செய்த இப்பெரியாரின் வாழ்க்கைச் சரிதத்தினைக் காண்போம்.

                துளசிதாசர் மொகலாயமன்னர்களில் சிறந்த சக்ரவர்த்தியாக விளங்கிய அக்பரின் காலத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் 
ஆத்மாராம் என்பவர் அக்பரின் மந்திரிகளுள் ஒருவராக நன்மதிப்புடன் வாழ்ந்து வந்தார்.அவரது புதல்வனாகப் பிறந்தார் துளசிதாசர்.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர் அரசியல் அறிவும் மிகுந்திருப்பதற்கு தந்தையாரே காரணமாக விளங்கினார்.அரசியலில் நிபுணரான ஆத்மாராம் தன் மகனைத் தம்முடன் அரசவைக்கு அழைத்துச் சென்று அரசியல் அறிவையும் புகட்டினார். இவ்வாறு சிறந்து விளங்கிய துளசிதாஸ் தக்க வயதில் மமதா பாய்  என்னும் மங்கை நல்லாளை மணந்தார். மகனை இல்லறத்தில் இருத்தி ஆத்மாராம் தீர்த்த யாத்திரை சென்று விட்டார்.

               இல்லறத்தில் ஈடுபட்ட துளசிதாஸ் மனைவிமீது மிகுந்த பற்றும் பாசமும் ஆசையும் கொண்டவராக விளங்கினார். அக்பரின் அரசவையில் அங்கம் பெற்றிருந்தும் கடமைகளைச் சரிவர கவனியாது எப்போதும் மனைவியின் அருகிலேயே கழித்தார்.இதையறிந்த அக்பர் துளசிதாசரை  கட்டாயப்படுத்தி அவைக்கு வரவழைத்தார். இதேசமயம் அவரது தாயார் தன மருமகளை சிறிது காலம் அவள் தாய் வீட்டில் சென்று இருக்குமாறு அனுப்பிவைத்தார். மனைவியின் பிரிவைத் தாளாத துளசிதாசர்  நடுஇரவு என்றும் கொட்டும் மழை என்றும் பாராது உடனே மனைவி இருக்கும் ஊரை நாடிச் சென்றார்.
-            
                இறைவன்  சுந்தரரை தடுத்தாட்கொண்டதுபோல் இவரையும்  தடுத்தாட்கொள்ள முடிவு செய்து விட்டான் போலும்.ஊரின் அருகே செல்லும் போது குறுக்கே ஓடும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடச்செய்தான்.- ஆற்றின் அருகே திகைத்து நின்ற துளசிதாஸ் அங்கே மிதந்துவந்த ஒரு சடலத்தைப் பற்றி அதில் ஏறி அமர்ந்து கொண்டு கரை சேர்ந்தார்.வீட்டின் அருகே நின்று குரல் கொடுத்தார். மழையின் இரைச்சலும் காற்றின் சத்தமும்  அதிகமானதால்  அவர் குரல் யாருக்கும் கேட்கவில்லை. எனவே அருகே இருந்த ஒரு மரத்தின்மீது ஏறி அங்கே தொங்கிக் கொண்டிருந்த ஒரு கயிற்றைப் பிடித்துக் கொண்டு தன மனைவி இருந்த அறைக்குள் குதித்தார். திடுக்கிட்ட மமதாபாய் இவரைக்கண்டு மகிழ்ந்தாலும் சற்றே நாணத்துடன் வரவேற்றாள்.

அன்புடன் அவரை அமரவைத்து "சுவாமி, எப்படி இந்த மழையிலும் ஆற்றைக் கடந்து வந்தீர்கள்?"என்று கேட்டாள் .

தான் வந்தவிதத்தைக் கூறியவரை வியப்புடன் பார்த்தாள்  மமதா."என்ன, மரத்தின்மீது    கயிறா? வாருங்கள் பார்ப்போம்"என்றபடி விளக்குடன் சென்று பார்த்தபோது அங்கே ஒரு நாகப் பாம்பு மரத்தில் சுற்றிக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தது அதைத்தான் கயிறு என்று எண்ணி அதைப் பிடித்து மேலேறி வந்துள்ளார் என்பதை இருவரும் புரிந்து கொண்டனர்.

                      மமதா கண்ணீருடன் அவரைப் பார்த்தாள்." அழியும் இந்த அற்பப் பிறவியின் மீது நீங்கள் கொண்டுள்ள இந்த ஆசையில் ஆயிரத்தில் ஒரு பங்கை அந்த ராமபிரான் மீது வைத்தால் உங்கள் வாழ்க்கை பயனுடையதாக இருக்குமே. உங்கள் பிறவிப்பயனை அடைவீர்களே. அதைவிட்டு என்னை நாடிவர எத்தனை முயற்சி செய்தீர்கள் இந்த முயற்சியை இறைவன் பால் செலுத்தினால் அவன் உம்மை ஆட்கொள்வானே. உங்கள் குறிக்கோள் இறைவனின் திருவடியாக அல்லவா இருக்க வேண்டும் " துயரத்துடன் அவள் சொன்ன சொற்கள் துளசிதாசரின் ஞானக் கண்களைத் திறந்து விட்டன. இறைவன் எண்ணியதுபோலவே அவரைத் தடுத்தாட்கொண்டான்.

                     சித்தம் தெளிந்த துளசிதாசர் தன்மைனைவியைப் பார்த்து நீயே என் ஞானகுரு என்று கூறி வீட்டை விட்டு வெளியேறி நேரே 
காசிமாநகர் சென்றடைந்தார்.பல மகான்களைச் சந்தித்தார் .மகனைத் தேடிக் காசிக்கு வந்த அவரது தாயார் எவ்வளவு வேண்டியும் வீடு திரும்ப மறுத்துவிட்டார்.பக்தி பருக்கெடுத்தோட காசி வீதிகளில் இறைவன் நாமத்தைப் பாடியவாறே சுற்றித் திரிந்தார். மகனின் பக்திநிலையை அறிந்த ஆத்மாராம் மன நிறைவுடன் இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.அவருடன் மனைவியும்  உயிரை நீத்தாள்.
இவர்களின் ஈமக்கடன் முடித்தபின் துளசிதாசர்  பனிரெண்டு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார்.
 

                    அவர் தவத்தில் ஆழ்ந்திருந்த சமயம் ஒரு பூதம் அவர் முன் தோன்றி அவரது பாத தூளியால் தான் சாப விமோசனம் பெற்றதாகக் கூறி வணங்கிச் சென்றது. ராமநாமத்தை எப்போதும் சொல்லிவந்தவருக்கு அவரைக் காண வேண்டுமென்னும் பேரவா உண்டாகவே அனுமனைக் குறித்துத் தவம் மேற்கொண்டார். அப்போது பூதம் வந்து அருகே ஒரு வீட்டில் இராமாயண காலட்சேபம் நடக்கிறது. அங்கு கிழ வேதியர் உருவில் அனுமன் வருகிறார். அவரைப் பற்றிக் கொள்ளுங்கள். ஸ்ரீராம தரிசனம் விரைவில் கிட்டும் எனக் கூறிப் போயிற்று.உடனே அந்த வீட்டிற்குப் புறப்பட்டுப் போனார் துளசிதாசர். ராமாயணக் கதையை அனுபவித்துக் கேட்கும் மாருதியைக் கண்டார்.   உடனே அவர் பாதத்தில் விழுந்து பற்றிக் கொண்டார். ஆனால் மாருதி மறைந்து விட்டார். மறுநாள், மறுநாள் என இப்படிப் பலநாட்கள் தொடர்ந்து நடந்தது.
                       ஒருநாள்  மாருதியின் காலை இறுகப் பற்றிக் கொண்டார். மாருதி கல்லிலும் முள்ளிலும் அவரை இழுத்துக் கொண்டு ஓடினார்
அப்போதும் காலைவிடாது பற்றிக் கொண்ட துளசிதாசருக்குக் காட்சி கொடுத்த அனுமன் உன் தெருவிலேயே  ராமபிரானை தரிசிக்கும்படி   செய்கிறேன்..என்று கூறி மறைந்தார். ராமபிரான் துளசிதாசரை சோதிக்கும் எண்ணத்துடன் ஒரு கிழவனாராக வந்து நின்றிருந்தார்.அவர் இருப்பது தெரியாமல் அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தார் துளசிதாசர்.
   
                       ராமன் அங்கிருந்து மறைந்தபின் தியானத்தில் அமர்ந்திருந்த துளசிதாசர்   கண்விழித்தார். அங்கே ஆஞ்சநேயர் நிற்பதைக் கண்டு அவரிடம் ஓடிநின்று கண்கலங்க இறைவன் என்னை ஏமாற்றிவிட்டாரே.என்றார்.அனுமன் புன்னகையுடன் அவர் வந்ததை நீ அறியவில்லை. என்றபோது தன்னையே நொந்து கொண்டவராய் மீண்டும் தியானத்தில் அமர்ந்தார்.
                        இதோ மூன்று முறை ஏமாற்றிய ஸ்ரீராமர் இப்போது துளசிதாசரின் முன் தம்பியுடன் தம்பதி சமேதராக நின்று அருள் பாலித்தார்.துளசிதாசரின் உள்ளம் பூரித்தது புளகாங்கிதம் அடைந்தார்.பாதத்தில் பணிந்து 'அய்யனே தயை புரியுங்கள்.எனக்கு முக்தி அளியுங்கள்.' என்று மன்றாடினார்.

இறைவன் புன்னகைத்தான். "துளசி, நீ இப்பூவுலகில் சய்ய வேண்டிய செயல்கள் இன்னும் இருக்கின்றன.என் சரிதத்தை எழுதும் கடமை உனக்கு இருக்கிறது.மக்கள் மனதில் ஒழுக்கமும், பண்பும் வளரும்படியாகவும் பக்தி பெருகும்படியாகவும் பாடல்களைப் பாடவேண்டும்.
மக்கள் ஏற்பார்களா என்ற கவலை உனக்கு வேண்டாம்.அனுமனிடம் ஞானோபதேசம் பெற்று ராமசரிதமானசத்தை எழுது."என்று கூறி ஆசிவழங்கிச் சென்றான்.அன்றுமுதல் அவர் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுத்தது.

பாதுஷா அக்பர் தெய்வபக்தி மிக்கவர்.துளசிதாசரின் சிறப்பையும் ,அவருக்கு ராமதரிசனம் கிடைத்ததையும் அறிந்து மிகவும் மகிழ்ந்தார்.துளசிதாசரின் அருமையான பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தார்.அவரிடம் தத்வ விளக்கங்களைக் கற்றார்.துளசிதாசர் ராமாயணத் ததுவங்களைத் தம் பாடல்களின் மூலம்  சாமானியர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாகப்  பாடினார்.

ராமசரிதமானஸ் என்ற ராமகாதையே ஹிந்தி மொழியில் விளங்கும் துளசிராமாயணம் எனப் போற்றப் படுகிறது.பஜனைப் பாடல்களாகவும்  ஹரிகதை செய்யும் இடங்களிலும் இவரது இனிய கவிதையைக் கேட்கலாம்.ராமநாமமே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்.பாதுஷா அக்பரின் அன்பினாலும்     மக்களின் ஆதரவாலும் மடத்தை ஸ்தாபித்து தானங்கள் அன்னதானம் ஆகியன செய்து பலகாலம் வாழ்ந்து பின் ராமனின் திருவடி நிழலை அடைந்தார்.இன்றும் இவரது பாடல்கள் நாடு முழுவதும் பாடப்பட்டு வருகின்றன.

      சூர்தாசர், மீராபாய்,போன்ற பக்த சிரோன்மணிகளின் வரிசையில் வைத்துப் போற்றத் தகுந்தவர் துளசிதாசர் என்பதில் சற்றும் ஐயமில்லை.












 




ருக்மணி  சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

திங்கள், 27 ஜூலை, 2015

குறள்  வழிக் கதைகள்--2 தக்கதும் தகாததும்

                    கோபாலன் ஒரு விவசாயி. அவருக்குவிஜயன், ரகு என  இரண்டு மகன்கள் இருந்தனர்.இருவரும் பள்ளியில் படித்துக் கொண்டே தந்தைக்கும் உதவியாக இருந்தனர்.அவர்களின் தந்தையாரும் தன பிள்ளைகளுக்கு பல நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொண்டே வேலையில் ஈடுபடுவார். பிள்ளைகள் இரண்டு பெரும் அதைக்  கேட்டுக் கொண்டே அப்பா சொல்லும் வேலையைச் செய்வார்கள்.

                  அவர்கள் வேலை முடித்து வீடு திரும்பும் வழியில் ஒரு சிறு குளம் இருந்தது. அந்தக் குளத்தில் கோபாலன் குளித்து விட்டு வீடு திரும்புவார்.ஒருநாள்  கோபாலனும் அவரின் மகன்கள் விஜயனும் ரகுவும் அப்பாவுடன் குளிப்பதாகச் சொல்லி உடன் குளிக்கக் குளத்தில் இறங்கினர்.வேகமாக உள்ளே இறங்கியவர்கள் கோபாலனின் அங்கே போகாதீர்கள் இப்படி வாருங்கள் என்ற குரலைக் கவனிக்கவே இல்லை.நல்ல வேளையாக  ரகு நீரில் இறங்கவில்லை ஆனால் விஜய் அந்தக் குளத்தில் ஆழமான இடத்தில் மூழ்கினான்.கோபாலன் வேகமாக அவன் அருகே சென்று அவனைக் காப்பாற்றி கரைக்கு இழுத்து வந்தார்.
                 
                   பயத்தில் நடுங்கிக்கொண்டே அழுது கொண்டு நின்றான் விஜயன். நீரில் இறங்காமல் கரையில் நின்றிருந்த ரகு கைகொட்டிச் சிரித்தான்.பயத்தை விட அவமானப் பட்டதால் மிக்க கோபத்தை அடைந்தான் விஜய். "சும்மா இருடா ரகு அவனே பயந்து போயிருக்கிறான் நீயேன் கிண்டலடிக்கிறாய்."  என்று அதட்டினார் கோபாலன்.
விஜயின் உடம்பைத் துடைத்துவிட்ட தந்தை அவனை சமாதானப் படுத்தியவாறே வீட்டுக்கு வந்தார்.
சாப்பிட உட்கார்ந்தனர்  மூவரும் அப்போது கோபாலன் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறினார்.
"இதோ பாருங்கடா. நீச்சல் கத்துக்கறது ஒரு பாதுகாப்புக் கலை. நல்ல தேகப் பயிற்சி கூட.அதனால நாளையிலேருந்து ரெண்டு பெரும் நீச்சல் கத்துக்க ஆரம்பிக்கணும்.என்ன ரகு, கிண்டல் பண்ணாம நல்ல விஷயம் கத்துக்கப் பாரு." விஜய் 
சற்றே அச்சப்பட்டாலும் ரகு செய்த கேலியை மனதில் கொண்டு எப்படியாவது அவன் முன் நன்கு நீந்திக் காட்டவேண்டும் என முடிவு செய்து அப்பாவிடம் பலமாகத் தலையை ஆட்டினான்.கோபாலும் "நாளைக் காலையில் வயலுக்குப் போயிட்டு வரும்போதே நீச்சல் ஆரம்பிக்கலாம்."என்று கூறிவிட்டு கைகழுவ எழுந்தார்.

                 மறுநாள் காலையில் வழக்கம்போல கோபாலன் வயலுக்குக் கிளம்பினார். அதற்குமுன் தன மகன்களை அழைத்தார்."டே பசங்களா, பள்ளிக்கூடம் விட்டு சீக்கிரமா வயலுக்கு வந்திடுங்க.இன்னிக்கே நீச்சல் பழகத் தொடங்கலாம்." மகிழச்சியுடன்  விஜய் சரியப்பா எனக் குரல் கொடுத்தான். ரகுவோ முண முண த்தபடி பையைத் தோளில் மாட்டிக்  கொண்டு பள்ளிக்கு ஓடினான். 
 மாலை பள்ளி விட்டவுடன் தன தம்பி ரகுவுக்காக வெகுநேரம் காத்திருந்தான். ஆனால் அவனைக் காணாததால் விஜய் மட்டும் வயலுக்குச் சென்றான். அவன் மட்டும் அப்பாவிடம் சற்றுநேரம் நீச்சல் பழகிவிட்டு வீடு திரும்பினர். 

வீட்டில் அமர்ந்து வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்த ரகு சிரித்தபடி தன அண்ணனைப் பார்த்தாலும் அப்பாவைப் பார்த்து அச்சப் படவே செய்தான். ஆனால் கோபால் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை.

              இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன.விஜய் நன்றாக நீச்சல் பழகிவிட்டான். தினமும் குளத்தில் ஒருமணி நேரம் நீந்தி  நன்றாகப் பயிற்சி எடுத்தான். தினமும் அவனை வேடிக்கை பார்த்தான் ரகு.ஆனால் அருகே இருந்த மரத்தில் ஏறி ஏறி குதித்து விளையாடி மகிழ்ந்தான்.மரத்திலே ஏறாதேடா என்று எச்சரித்த "அப்பாஅப்பா,  ஒரே ஒரு தடவை ஏறிடுறேன் அப்பா"என்று சொன்னவாறே இரண்டு மூன்று முறை ஏறிக் குதித்தான்   
             
"டேய் செய்யினு சொன்னதை செய்யாதே. செய்யாதேன்னு சொல்றதைச்  செய்.உனக்கு எப்போ புத்தி வரப்போகுதோ."
 என்றவரின் கையைப் பிடித்துச் சிரித்து மயக்கிவிடுவான்.
மழைக்காலம் தொடங்கியது ஏறி குளம் எல்லாம் நீர் நிறைந்திருந்தது. வயல் வெளியெல்லாம் பசுமைப் போர்வை போர்த்தி ரம்யமாகக் காட்சியளித்தது.

         அன்று கோபாலன் வயலில் விதைக்க விதை நெல் வாங்க அருகே இருந்த நகரத்துக்குச் சென்று விட்டார்.அவர் வரும் வரை காத்திருக்க மனமில்லை விஜய் ரகுவுக்கு. அதனால் அம்மாவிடம் விளையாடப்போவதாகச்சொல்லி விட்டு வழக்கம்போல குளக்கரைக்கு வந்தனர். ரகு கரையில் இருந்த மரத்தின் மீது சர சரவென ஏறிக் கீழே குதித்து மகிழ்ந்தான்.
விஜய் போல இன்னும் சில சிறுவர்கள் குளத்தில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.அவர்கள் முன் தன்  வீர சாகசத்தைக் காட்ட எண்ணிய ரகு மரத்தின் உயரத்துக்கு ஏறினான்.
"டே, ரகு, வேணாண்டா, போகாதே.எறங்கிடு." என்று விஜய் கத்தி அழைத்ததைக் காதிக் போட்டுக் கொள்ளாமல் சிரித்தபடியே மேலே ஏறினான் ரகு.
மழையில் நனைந்த வலுவிழந்திருந்த கிளை மளமளவென ஒடிந்து சரிந்தது.உச்சியில் அமர்ந்திருந்த ரகுவும் ஐயோ அம்மா என்று அலறியபடியே நீரின் ஆழமான இடத்தில் வீழ்ந்தான்.விஜய் பதறினான். அவன் விழுந்த இடமோ மிக ஆழமான பகுதி.
அங்கு சென்று அவனை மீட்க சிறுவர்கள் யாரும் துணியவில்லை.அத்துடன் ரகுவும் கண்ணுக்கே தெரியவில்லை.
ஆனால் விஜய் சற்றும் யோசிக்கவில்லை.ஒடிந்து விழுந்த மரக்கிளையை நீருக்குள் தள்ளி அதைப் பிடித்துக் கொண்டே நீரின் ஆழமான பகுதிக்குச் சென்றான்.காலால் நீந்திக்கொண்டு ஒரு கையில் மரக்கிளையைப் பற்றிக்கொண்டு துழாவினான்.கையைக் காலை அடித்துக் கொண்டிருந்த ரகுவை அவன் சட்டையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மரக் கிளையின் உதவியுடன் கரைக்கு வந்து சேர்ந்தான்.
          சிறுவர்கள் அனைவரும் விஜயின் சமயோசித புத்தியையும் வீரத்தையும் புகழ்ந்துகொண்டே வீடு திரும்பினர்.ஈரம் சொட்ட வீடு திரும்பிய இருவரையும் பார்த்த கோபாலனும் அவர்மனைவியும் பதறினர்.செய்தியறிந்து அச்சத்துடன் நடுங்கிக் கொண்டிருந்த ரகுவை அணைத்துக் கொண்டார். எங்கே அப்பா திட்டுவாரோ அடிப்பாரோ என்று எண்ணிய ரகு அவரது அன்பைக் கண்டு கோவென அழுது விட்டான்.

       அவனது உடலைத் துவட்டி சூடான தேநீர் குடித்தபின் நிதானமாகப் பேசினார் கோபாலன்.
"ரகு நேத்து நீ ஒரு திருக்குறள் படிச்சியே நினைவிருக்கா? என்ன என்பது போல அவரைப் பார்த்தான் ரகு.
 "ஒ..நான் மனப்பாடமே செய்துட்டேன் அப்பா "என்று முந்திக் கொண்டான் விஜய்.
"எங்கே, சொல்லு பார்ப்போம்"

                "செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க 
                  செய்யாமையானும் கெடும்" 
சரிதானே அப்பா.

ரொம்பசரி. இப்போ நீ செய்யவேண்டிய காரியத்தை அதாவது நீச்சல் பயிற்சி  செய்யாததனாலே தண்ணீரில் தவித்தாய். இல்லையா.?"
ஆமாம் என்பதைப்போல தலையசைத்தான் ரகு.அதோட செய்யக்கூடாததைச் செய்ததனாலும் மரத்திலிருந்து விழுந்தாய்.
இல்லையா?அதைத்தான் இந்தக் குறள்   நமக்குச் சொல்லுது 

செய்யக்கூடாததைச் செய்தாலும்    செய்யவேண்டியதைச்  செய்யாமல் போனாலும் வாழ்க்கையில் நமக்குத் துன்பம்தான் வரும் 
அப்படிங்கறதைத்தான் இந்தக் குறள்  சொல்லுது.
அதோட உன் அண்ணன் நீச்சல் கத்துக்கிட்டதாலேதான் உன்னைக் காப்பாத்த முடிஞ்சுது. இல்லையா.அதாலே நல்ல விஷயத்தை நாம செய்யப் பழகணும்". என்ற அப்பாவின் அறிவுரையை இருவரும் மனதில் பதியவைத்துக் கொண்டதற்கு அடையாளமாக அப்பாவைப் பார்த்துப் புன்னகைத்தனர். ரகு நன்றியுடன் தன அண்ணனைப் பார்த்து அவன் அருகேநெருங்கி  நின்று கொண்டான் அவனைப் பாசத்துடன்அணை த்துக் கொண்டான் அந்த அருமை அண்ணன்.


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 31 மே, 2015

குறள் வழி கதைகள்.(தொடர்ச்சி) nanbanin panbu.

       
                                1.நண்பனின் பண்பு (தொடர்ச்சி)

 சற்றுநேரம் வேடிக்கை பார்த்தபடி நின்றவன் ரயில் ஊதும் சத்தம் கேட்கவே திடுக்கிட்டுத் திரும்பித் திரும்பிப் பார்த்தான்.
விளையாட்டுப் பிள்ளையல்லவா. அந்த சத்தத்தைக் கேட்க வேடிக்கையாக இருந்தது போலும்.தன்வலது காதை தண்டவாளத்தின் மீது வைத்துக் கேட்டான். அந்த அதிர்ச்சி அவனுக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது.இடது காதை வைத்துக் கேட்டான். இப்போது அதிர்ச்சி அதிகமாகத் தெரிந்தது.இப்போது ரயில் வரும் நேரம் இல்லையே.வேறு ஏதேனும் சத்தமாக இருக்குமோ என யோசித்தபடி நின்றான்.
அவன் அங்கேயே நிற்பதையும் அப்போது சரக்கு ரயில் ஒன்று வருவதையும் அறிந்த சங்கரன் அய்யாவு டன் பேசிக்கொண்டே இருந்தவர் ஓடி வந்தார். தம்பி கீழே இறங்கிடு என்று கத்தவே அப்போதுதான் நிலைமையைப் புரிந்து கொண்டார் அய்யாவு.
"டேய், அங்க ஏண்டா போனே, கீழ இறங்கு "என்று கத்தினார்.அதற்குள் ஒரு சரக்கு  ரயில் ஜிகு என்ற சத்தத்துடன் வருவது கண்ணுக்குத் தெரிந்தது.  

அதே சமயம் தண்டவாளத்தில் உட்கார்ந்த கந்தசாமி 
"அப்பா, கால் மாட்டிகிச்சு அப்பா...." என்று கத்திக் கொண்டே அழ ஆரம்பித்தான்.
ஐயோ, ரயில் வருதே என்று கத்தியவாறே மகனை நோக்கி ஓடி வந்தார்.
அதற்குள் நிலைமையைப் புரிந்துகொண்ட சங்கரன் வேகவேகமாக கந்தசாமி போட்டிருந்த சட்டையைக் கழற்றினார். அந்தச் சட்டையை வீசிக்காட்டியவாறே தண்டவாளத்தில் ரயிலுக்கு எதிரே ஓடத் தொடங்கினார். கந்தசாமியிடம் வந்த அய்யாவு அவனை சமாதானப் படுத்தி விட்டு   அவன் காலை விடுவிப்பதில் கவனம் செலுத்தினார்.

          அதற்குள் வேகமாக வந்த ரயில் சற்றே வேகம் குறைத்து சங்கரன் அருகில் வந்து நின்றது.
                                                                                                                                                                                                                                                                                                                                                                  
ரயில் ஓட்டுனர் கீழே இறங்கி என்ன என்று கேட்டு அறிந்து கொண்டார்.
சற்றுநேரத்தில் கந்தசாமியின்கால் தண்டவாளத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.
நல்ல வேளை . பண்டிகை நாளும் அதுவுமா ஏதும் தப்பா நடக்காம காப்பாத்திட்டீங்க அய்யா.ரொம்ப நன்றிங்க."என்று ஓட்டுனர் சங்கருக்கு நன்றி சொன்னார்
கந்தசாமியிடமும் "தம்பி ஆபத்தான இடத்துல எல்லாம் விளையாடக்கூடாது.ஏன்  இங்கெல்லாம் வரவே கூடாது.தெரியுமா?"என்று சொல்லிவிட்டு பத்திரமாகப் போங்க என்றபடியே வண்டியை ஓட்டிச் சென்றார்.

கந்தசாமி, அய்யாவு, சங்கரன் மூவரும்   ரயில்    தங்களைக் கடந்து செல்லும் வரை பார்த்துக்  கொண்டே நின்றிருந்தனர்.
சட்டென அய்யாவு சங்கரின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.கண்கள் கலங்கியிருந்தன.
"அண்ணே, உங்களால என்குடும்பம் இன்னிக்கி பிழைச்சிருக்கு. நீங்கமட்டும் எதையும் யோசிக்காம சமயோசிதமா காரியம் செய்யாட்டி என்னாகியிருக்கும். ஐயோ நினைக்கவே நெஞ்சு நடுங்குது  அண்ணே.உங்களுக்குக்  காலம் பூரா கடமைப்பட்டிருக்கேன் அண்ணே "   

"நண்பனுக்கு ஒரு துன்பம் வந்தா அதப் பார்த்துகிட்டு இருக்கலாமாப்பா.ஓடிப்போயி உதவுறதுதான்  உண்மையான நட்புன்னு சின்ன வயசில சொல்லிக் கொடுத்திருக்காங்கப்பா."

அப்போது கந்தசாமி "ஆமா தாத்தா  எங்க தமிழ் வாத்தியாரு கூட சொல்லிக் குடுத்திருக்காரு.திருக்குறள்  அப்படீன்னு பாட்டு 
அதுல " உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
                  இடுக்கண் களைவதாம் நட்பு"  அப்படீன்னு சொல்லியிருக்காரு.
"அப்படீன்னா"
"அப்படீன்னா ...கட்டியிருக்கும் துணி அவிழ்ந்து விழும்போல இருந்தா, உடனே யோசிக்காம கை அதைப் பிடிச்சுக்குது இல்லையா அப்படி நண்பனுக்குத் துன்பம் வரும்போது ஓடிப்போயி உதவுரதுதான் உண்மையான நட்பு அப்படீன்னு சொல்றாரு.
புரிஞ்சுதா தாத்தா?"
"

இவ்வளவு கெட்டிக்காரனாயிருக்கே , நீ போயி தண்டவாளத்துல நிக்கலாமா.?"

"தப்புதான்"
அதற்குள் வீடு வந்துவிடவே அய்யாவும் கந்தசாமியும்  நன்றியுடன் விடைபெற்றுக் கொண்டனர் .

சங்கரும் "பொங்கப் பண்டிகையை நல்லவிதமாகக் கொண்டாடுங்கள் "என்று ஆசி கூறிவிட்டுப் புறப்பட்டார். அவர் ஓர்  உண்மையான நண்பர் என்று நாமும் ஒப்புக்கொள்வோம்.
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 27 மே, 2015

குறள் வழி கதைகள் -1 nanbanin panbu.

       
                       1.     நண்பனின் பண்பு

அய்யாவு என்பவர் ஒரு தொழிலாளி.அவர் மனைவி ராமக்காவும் ஒரு தொழிலாளிதான்.அய்யாவு ரயில்பாதையை செப்பனிடும் பணியில் இருந்தார். ராமக்கா வீட்டு  வேலை செய்து பணம் சம்பாதித்தார்.
       இவர்களுக்கு ஒரேமகன்   கந்தசாமி.  ஆறாம் வகுப்பில் படித்து வந்தான்.தினமும் அதிகாலையிலேயே ராமக்கா சமையல்  செய்து   வைத்து விட்டு வேலைக்குச் சென்றுவிடுவார். பிறகு அப்பாவும் மகனும்   எழுந்து குளித்து உடைமாற்றிக் கொண்டு  சாப்பிடு வார்கள் அய்யாவு மதிய உணவு  கையிலும் கட்டிக் கொண்டு  புறப்படுவார். அதற்கு முன் கந்தசாமிக்குஎன்ன தேவை   என்பதைப் பார்த்துச் செய்து வைப்பார்.கதவைப் பூட்டிக் கொண்டு  அய்யாவு வேலைக்கும் கந்தசாமி பள்ளிக்கும் புறப்படுவார்கள். மாலையில் வீடு திரும்பியவுடன் அனைவரும் ஒன்றாகக் கூடி மகிழ்ச்சியாகப் பேசிக் களிப்பார்கள்.
        அந்த வருடம் பொங்கல் பண்டிகை வந்தது. வழக்கம்போல பண்டிகையைக் கொண்டாடுவது பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது கந்தசாமி அம்மாவின் மடியில் படுத்தவாறே "அம்மா, இந்த வருஷம் எனக்கு செகப்புச் சட்டைதான் வேணும் என்றான்.உடனே அவன் அப்பா அய்யாவு,"டே, போயும் போயும் செகப்புச் சட்டையா வேணும்.நல்ல கலரிலே ஒரு கட்டம் போட்டது பூப்போட்டது எல்லாம் கேக்க மாட்டியா" என்றார் மெதுவாக.
       
         "உனக்கு எந்த கலர் பிடிக்குதோ அதையே நீ வாங்கிக்க. நாளைக்கி ஒரு நாள் பொறுத்துக்க மறு நா  அல்லாருக்கும் லீவு. அன்னிக்கிப்போயி துணிமணி வாங்கலாம் என்ன? என் ராசா. போயி படி கண்ணு."என்று அவனை எழுப்பி அனுப்பினாள்  ராமக்கா.

        "நான்தான் செகப்பு முண்டாச கட்டிக்கிட்டு தண்டவாளத்துமேலே வேலை செய்யிறேன்னா இந்தப் பய செகப்புச் சட்டை கேக்கறானே.நீயும் வாங்கித்தாறேன்னு சொல்றே." சற்றே மனத் தாங்கலுடன் கூறினார் அய்யாவு.
         "சின்னப்பிள்ள ஆசைப்படுது அதுக்கு எது புடிக்குதோ அத வாங்கிக்குடுத்தா அப்பதான் அதுக்கும் சந்தோஷம் நமக்கும் சந்தோஷம்.வேணுமின்னா இன்னொரு சட்டை உங்களுக்குப் புடிச்சதா வாங்கிடுங்க."என்றாள் சிரித்தவாறே.
         இருட்டிவிடவே அய்யாவு தலையை அசைத்தவாறே படுக்கைக்குச் சென்றார்.
மூவரும் கடைக்குச் சென்று துணிமணி புதுப்பானை அரிசி தேங்காய் பழம் என்று பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தனர்.கந்தசாமிக்கு ஒரே சந்தோஷம். அவன் விரும்பியவாறே அழகான சிவப்புக் கலர் சட்டை கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.தன சட்டையை அவன் அருகிலேயே வைத்துக் கொண்டான் தூங்கும்போதும் தன தலையணைக் கரு.கிலேயே வைத்துக் கொண்டான். அவன் மகிழ்ச்சியைப் பார்த்து அய்யாவு.ராமக்கா இருவருக்கும் மனம் கொள்ளா மகிழ்ச்சி.   
          பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன.அன்று மாலை கந்தசாமி அவன் அப்பாவந்ததை அறிந்தவுடன் வீட்டுக்கு ஓடிவந்தான்.அவன் அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஆசையுடன் அருகே அமர்ந்து கொண்டான்.
ராமக்கா குடிக்கத் தண்ணீர் கொடுத்துவிட்டு "ஏங்க, பொங்கலுக்கு ரெண்டு நாள் லீவு போடக்கூடாதா?" என்றபடியே அருகே அமர்ந்தாள். 

           "நீ வேறே.ஆபீசுல இஞ்சினீயரு  லீவு நாளிலே கூட வேல செய்யணும்னு சொல்றாரு. அதுக்குதான் ரெட்டைச் சம்பளம் தராங்களே."
"அதனால?"என்று ராமக்கா நீட்டியவுடனே, கந்தசாமி குறுக்கிட்டு "கரெக்டுப்பா. எல்லாரும் வீட்டுல இருந்திட்டா முக்கியமான வேலையெல்லாம் எப்படி நடக்கும்? ரயில்பாதை சரியா இருக்குதான்னு பாத்தாதானப்பா ரயிலு பத்திரமாப் போக சவுகரியமாயிருக்கும்."என்றான்.
"என் ராசா, நீ அறிவாளிடா."என்றபடியே அவனை திருஷ்டி கழித்தாள் ராமக்கா.
"அப்படின்னா பொங்கலுக்கு நா வேலைக்கு போகட்டா?"
"அப்பா, பொங்கலன்னிக்கி அம்மா வடை பொங்கல் எல்லாம் செய்யட்டும் நானும் நீங்களும் ர்யில்பாதையைப் பாத்துக்கிடுவோம் 
"என்னாது நீ வாரியா".
"ஆமாம்பா.உங்ககூட இருக்கறதுதான் எனக்குப் பொங்கலு.ஜாலியா பேசிக்கிட்டே நடப்போம் அப்பா." என்ற தன மகனைக் கட்டிக்கொண்டார் அய்யாவு.
               அன்று போகிப்பண்டிகை.ஊரெல்லாம் ஒரே கூட்டம் கடைகளில் வியாபாரம் தெருவெங்கும் டமடமசத்தம் விற்போரும் வாங்குவோருமாக தெருவெங்கும் கூட்டம்.அய்யாவு வேலைக்குக் கிளம்பினார்.அன்று பள்ளி விடுமுறை அதனால் கந்தசாமியும் அப்பாவுடன் புறப்பட்டான். "டேய் , நீ விளையாடிக்கிட்டிரு கண்ணு. இப்போ ஒரு ரவுண்டு பாத்திட்டு வந்திடுறேன். நாளைக்கு நீ வருவியாம்." என்றார் கனிவோடு.
"அப்பா, அம்மாவும் வீட்டில இல்ல விளக்கு வைக்கும்போதுதான் வருவாங்க.நான் தனியா இருக்கணுமே அப்பா"
"சரி நீயும் கூட வா."
 அன்று  பண்டிகை ஆதலால் தனக்குப் பிடித்த சிவப்புக்கலர் சட்டையை மாட்டிக் கொண்டு அப்பாவுடன் நடந்தான் கந்தசாமி.
நடந்துகொண்டே அப்பாவிடம் கேட்டான் கந்தசாமி. "ஏம்பா நீ படிச்சிருந்தா ஆபீசுல வேலை செய்யலாமில்ல.ஏம்பா படிக்கல"
கண்ணு,எங்கப்பா குடிகாரர்.வீடே கவனிக்கமாட்டாரு.அதனால பள்ளிக்கூடம் போவமுடியாம ஆபீசரய்யா வீட்டுல வேலை செஞ்சேன். அவருதான் இந்த ரயில்ல தண்டவாளம் சீர் பாக்கற வேலையை வாங்கிக் குடுத்தாரு.அப்பா சீரா இருந்திருந்தா நானும் படிச்சு நல்ல வேலைக்குத்தான் வந்திருப்பேன். அதனாலதான் உன்னை நிறைய படிக்கவைக்கப் போகிறேன்.

நல்லாப் படிச்சு பெரிய இஞ்சினீயரா வருவியா ராசா?"
"கண்டிப்பா வருவேம்பா."சட்டென தொலைவில் "ஏ அய்யாவு" என அழைக்கும் குரல் கேட்டது.
தன்னுடன் பணிபுரியும் சங்கரன் நிற்பதைப் பார்த்தார் அய்யாவு.
டேய் கந்தா,   சங்கர் வந்திருக்காரு பேசிட்டு சீக்கிரம் வந்திடுறேன்  என்று  சொல்லிவிட்டு  சங்கரிடம் சென்றார். அவருடன் பேசிக்கொண்டே நின்றார்.கந்தசாமி இங்கும் அங்கும் நடந்தும் குதித்தும் விளையாடிக் கொண்டிருந்தான்.
சற்று நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கந்தசாமிக்கு  அதற்குமேல் பொறுமையில்லை எனவே   ரயில் 

பாதையிலேயே குதித்துக் குதித்து நின்றான் தூரத்தில் ரயில் வருவது தெரியாமல் ஏதேதோ வேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு நின்றான். சற்று தூரம் சென்றான். மீண்டும் திரும்பி வந்தான். சற்று நேரம்


















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

திங்கள், 4 மே, 2015

பெரிய தாசர்.

சோழநாட்டின் தலைநகர் தஞ்சையில் ஒரு சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் மன்னார் நாயுடு.கல்விகேள்விகளில் சிறந்திராவிட்டாலும் தெய்வபக்தி உடையவனாக இருந்தான்.அவ்வூரில் இருந்த அரசாங்க அதிகாரியின் மகன் பெரியசாமி.அவன் சிறந்த அறிவாளியாகவும் தெய்வபக்தி உள்ளவனாகவும் விளங்கினான்.

                         இவன்தந்தை இவனை அரசாங்க வேலையில் அமர்த்த எண்ணினார். ஆனால் பெரியசாமியோ சுதந்திரமாக தொழில் செய்யவே  விரும்பினான். அதனால் அவன் தந்தை தங்களின் குலத் தொழிலாகிய வளையல் வியாபாரத்தை ஆரம்பித்துக் கொடுத்தார்.ஏற்கனவே இறைபக்தியில் மூழ்கியிருந்த பெரியசாமி கடையில் அமர்ந்து கொண்டு தியானத்தில் ஈடுபடலானார்.அத்துடன் கடைக்கு வரும் பெண்களுக்கு அவர்களை ஈஸ்வர ஸ்வரூபமாக எண்ணி வளையல் குங்குமம் மஞ்சள் கண்ணாடி என அனைத்து மங்கலப் பொருள்களையும் இலவசமாகவே கொடுத்து அனுப்பினார்.
அதனால் விரைவில் கடையை மூடும்படி ஆயிற்று.உலக இச்சையை விடுத்து எப்போதும் கோயிலே கதியென்று இருக்கத் தொடங்கினார். மக்கள் அவரை பெரியதாசர் என்று அழைக்கத் தொடங்கினர்.
                   ஒருநாள் அவ்வூர் அரசனுக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்தது."இங்கிருந்து வைகுண்டம் எவ்வளவு தூரம் இருக்கும்?"
இந்த சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும்படி அரசவைக் கவிஞர்களைக் கேட்டார். அவர்கள் அளித்த பதில் அவருக்குத் திருப்தியாக இல்லை.எனவே கோவிலில் இருக்கும் பெரியதாசரை  அழைத்து வரச் செய்தான் .அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான் .
               பெரியதாசர் புன்னகையுடன் பதிலளித்தார்."அரசே ஆதிமூலமே என்று யானை அழைக்க அந்த நாரணன் வரவில்லையா?கோவிந்தா என திரௌபதி அழைக்க அந்தக் கண்ணனின் காதுகளில் அவள் குரல்  விழவில்லையா? அவன் புடவை கொடுத்து அருளவில்லையா. எனவே வைகுண்டம் நமக்குக் கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறது." 
இந்த பதில் அரசனுக்கு மிகவும் திருப்தியளித்தது.அவருக்குப் பொன்னும் பொருளும் தந்து சிவிகையில் ஏற்றி அனுப்பினான் .இதனால் அந்தப் புலவர்களுக்குப் பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அரசனைத் தூண்டிவிட்டு அவர்மீது பாடல் பாடும்படி கேட்கச் சொன்னார்கள்.மன்னனும் ஆசை காரணமாக பெரியதாசரிடம் தன்மீது பாடல் பாடும்படி கேட்டான் . ஆனால் "இறைவனையன்றி மனிதனைப் பாட இயலாது. நரசிங்கனைப் பாடும் வாயால் நரனைப் பாடமாட்டேன்" என்று மறுக்கவே அரசனுக்குக் கோபம் உண்டாயிற்று.
            பொறாமைக்காரர்களும் அவனுக்குத் தூபம் போட்டார்கள்.அவ்வளவுதான். பெரியதாசர் மீது அரசதண்டனை பாய்ந்தது.வீரர்களின் ஆயுதங்கள் அவர்மீது பாய்ந்தன.ஹிரண்யகசிபு பிரகலாதனுக்குச் செய்த கொடுமையைச் செய்தார்கள் சேவகர்கள். அவரோ ஒரு நிலைப்பட்ட மனதோடு நரசிம்மரையே தியானித்தபடி நின்றார்.ஆயுதங்கள் கூர்மழுங்கின.சூட்டுக்கோலால் சுட அதுவும் குளிர்ந்து போயிற்று. பிறகு நஞ்சினை இட்டார்கள்.நஞ்சே அமுதாகியது.யானையை இடறும்படி ஏவினார்.யானையின்முன் நரசிம்மமாகக் காட்சியளிக்கவே யானை சுருண்டு விழுந்து மாண்டது.
             இன்னும் அரசனது பிடிவாதம் அதிகரித்தது.என்மீது பாடல் பாட ஒப்புக் கொள்ளும்வரை விடாதீர்கள் என்று கூறி  பலவிதத்திலும் துன்புறுத்தக்  கட்டளையிட்டான். பெரியதாசரைக் கல்லிலே கட்டிக் கடலிலே இட்டார்கள். இத்தனைக்கும் இவன் தப்பிவருவது என்றால் இவன் பெரிய மந்திரவாதி.இவனால் உங்கள் ஆட்சிக்குக் கேடு வரும் இவனை அழிப்பதே நாட்டுக்கு நல்லது எனத் தூபம் போடவே கோபத்தின் உச்சியில் இருந்த அரசனுக்கும் அவரை  எப்படியாவது கொல்ல வேண்டும் என்னும் வெறி அதிகமாயிற்று. 
பொறாமைக்காரர்களின் துர்ப்போதனையால் பெரியதாசரைக் கழுவில் ஏற்றும்படி கட்டளையிட்டான் .அப்போதும் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இறைவனான நரசிங்கப்பெருமானையே சிந்தித்தபடி தெருவில் நடந்தார். அவரைச் சுற்றி சேவகர் சூழ்ந்து நின்று  கழுமரம் நோக்கி அவரை இழுத்துச்  சென்றனர்.ஊர்மக்கள் கண்ணீருடன் பார்த்து நின்றனர்.
          அரசன் பெரியதாசரைக் கொன்றுவிட்ட பெருமிதத்தோடு கொலு வீற்றிருந்தான்.அப்போது 'திசைதிறந்து அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்' என்று ஹிரண்யவதைப் படலத்தில் தோன்றியதுபோல் இடியோசை கேட்டது.மாபெரும் கர்ஜனையோடு அரசன்முன் தோன்றினார் நரசிம்ம மூர்த்தி.பயத்தில் நடுங்கிய அரசன் குப்புற விழுந்தான்.அவன் முதுகில் சுளீர், சுளீர் எனச் சாட்டையடிகள் விழுந்தன."ஐயோ, அப்பா,"  என அலறினான்  அரசன் ."பெரியதாசன் என்ன குற்றம் செய்தான்? சொல், சொல்."எனக் கேட்டு மேலும் மேலும் அடிகள் விழவே அரசன்  துடித்துப் போனான்.. தன தவறு புரிந்தது. 
"சுவாமி என்னை மன்னித்துவிடுங்கள். தெரியாமல் தவறு செய்துவிட்டேன்."
"ஓடு பெரியதாசரிடம் சென்று மன்னிப்புக்கேள்."என்று சாட்டையால் அடித்துவிட்டு மறைந்தார் நரசிம்மமூர்த்தி.
 அரசனின் உடல் நடுங்கியது. அடிபட்ட முதுகு எரிந்தது. ஓடினார் கழுமேட்டை நோக்கி.
அங்கே மக்கள் கண்ணீருடன் ஏதும் விளங்காதபடி நின்றிருந்தனர்.கழுமரம் பிரகாசமாக இருக்க அதன் அருகே பரம சாந்தமான முகத்துடன் 
நின்றிருந்தார் பெரியதாசர். அங்கு ஓடிவந்த அரசன் பெரியதாசரின் கால்களில் விழுந்தான்.தான் செய்த மாபெரும் குற்றங்களை மன்னிக்கும்படி வேண்டினான் தாசரின் பாதங்களைக் கண்ணீரால் கழுவினான். நரசிம்மம் தன்  முன் தோன்றி தன்  குற்றத்தை உணர்த்தியதோடு தண்டனையையும் அளித்ததைக் கூறிக் கதறினான்.
பெரியதாசர் அவனை வாரியெடுத்தார். "அரசே நீர் பாக்யசாலி.எனக்குக் காட்சி தராத நரசிம்ம மூர்த்தி உனக்குக் காட்ச் தந்தாரே. நீரே பாக்யவான் என அரசனைப் பணிந்தார். பின்னர் வெகு காலம் இறைப்பணியில் ஈடுபட்டு பின்னர் இறைவனடியில் சேர்ந்தார். இவரது உறுதியான தளராத பக்தி இறை அடியார்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாகவே திகழ்கிறது.






































ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com